Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

13-1 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

அத்தியாயம் 13

.

 



Advertisement

“கௌதமா உன் பொண்ணுக்கு வர கோவத்த பாரேன்” என வைஷாலி அழைக்கவும் திரும்பிப் பார்த்த கௌதமனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

பாட்டி கையில் இருந்த ஆப்பிள் துண்டை யாழி கேட்டும் அவர் கொடுக்காது போக காச் மூச் என தனக்கு வாயில் வந்த நாலைந்து எழுத்துகளைக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தவளின் முகத்தில் அப்பிளைப் பிடுங்குவதில் அத்தனை தீவிரம்.

எட்டு மாதங்கள் முடிந்திருந்த மகளை கையில் ஏந்தியவன் மகளின் கன்னத்தில் முத்தமிட, இருந்த கோபத்தில் வாயில் கிடைத்த மூக்கைக் கடித்து மட்டும் தான் துப்பவில்லை, கௌதமனின் செல்ல மகள். அது என்னவோ அனைவரோடு சண்டைக்கு போனாலும் அந்தப் பற்கள் பதிவது அப்பாவின் மீது மட்டுமே.

Advertisement

“என்ன கோவம் என் யாழி பேபிக்கு? பாட்டி ஆப்பிள் தரலியா என் செல்ல குட்டிக்கு? எங்க உங்க குட்டி வயிற பாப்போம்… காலியாவா இருக்கு?” என குட்டி தொப்பையில் முகம் கொண்டு குறுகுறுப்பூட்ட, ஆப்பிளாவது ஏதாவது… அப்பா இருந்தால் போதுமே. சின்ன சிட்டின் கோபம் போன திசை தெரியாது போனது.

Advertisement

தகப்பனின் முகத்தைக் குட்டி கைகளால் தள்ளி விட்டுக் கொண்டே கக்கபிக்க என அவள் சிரிக்க… மகளோடு சேர்ந்து கௌதமனும் சிரிக்க, அதை ஆசையோடு பார்த்து அமர்ந்திருந்தனர் கௌதமனை பெற்றவர்கள்.

தன் குட்டி குட்டி பிஞ்சு கரத்தினுள் ஆறடி ஆண்மகனை வாரிச் சுருட்டி வைத்திருக்கும் இந்தக் குட்டி உருவத்திற்கு எங்கிருந்த இந்தச் சக்தி கிடைத்தது?

மகனுக்காக மட்டுமே குழந்தையோடு ஒத்துப்போக முடிவெடுத்த வைஷாலியின் மனம் எந்தக் கணத்தில் மாறியது என அவரை கேட்டால், அவருக்குக் கண்டிப்பாகப் பதில் தெரியாது. கௌதமனுக்கு பிறக்கவில்லை என்பதை அவன் கூறிக் கேட்ட பின்னும் அவரால் குழந்தையை மகனிடம் இருந்து பிரிக்க முடியவில்லை. முடியவில்லை என்பதோடு சேர்த்து, மனமும் இல்லை என்றால் சரியாக இருக்குமோ?

Advertisement

மனமில்லாது போனதற்குச் சுயநலமும் காரணமாக இருக்கலாம். ஏகப்பட்ட அறுவை சிகிச்சைகள்… அதன் வலியைப் பொறுக்க மருந்து மாத்திரைகள்… அந்த மாத்திரையினால் எழுந்த இன்னல்கள் எனக் கௌதமனின் கடந்த காலம் ரணமானவை. மருந்துகளின் உபயத்தால் தூக்கமில்லா இரவுகளும், வாயில்… தொண்டையில்… வயிற்றில் ஏற்படும் புண்களும், கண்விழித்திருக்கும் போதே சிந்தையில் ஏற்படும் கொடூரக் காட்சிகளும், உடலாலும் மனதாலும் பாதிக்கபட்டதால் ஏற்பட்ட மன அழுத்தும் கௌதமனை மட்டுமா படுத்தி எடுத்தது? தங்களின் ஆசை மகனின் வாழ்க்கை இப்படியே வலியில் முடிந்து போகுமோ என அவனையே கண்ணீரோடும் கவலையோடும் பார்த்திருந்த பெற்றவர்களையும் படுத்தி எடுத்தது உண்மை தானே?

         எங்கிருந்தோ வந்த ஒரு குட்டி தேவதை அதன் குட்டி கரம் கொண்டு ஒருவனின் வலிகளைத் துடைத்து அவனுள் இருந்த அழுத்தத்தை எல்லாம் துடைத்து போட்டிருக்க, வைஷாலியால் எப்படி அந்த தேவதையைத் தள்ளி நிறுத்த முடியும்? இன்று, மாத்திரைகளின் உதவியின்றிக் கௌதமனின் நிம்மதியான உறக்கத்திற்கும், ஆரோக்கியத்திற்கும், சிரிப்புக்கும் ஒட்டுமொத்த சொந்தக்காரியை வைஷாலியால் தள்ளி நிறுத்த முடியவில்லை.

வைஷாலிக்கு மட்டும் தான் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? கௌதமனோடு வாசுதேவனையும் காலம் விட்டு வைக்கவில்லை என்பது தான் உண்மை. தனக்கென ஒரு பெயர்… புகழ்… சம்பாத்தியம்… வெற்றிகள்… சாதனைகள்… கனவு என தன் வாழ்விற்கு ஒரு குறிக்கோளை வைத்திருந்தவரை உடைத்துப் போட்டது கௌதமனின் உடைந்த உடல். மகன் மட்டுமே உலகம் என அவரை மாற்றி போட்டது, இறகை இழந்திருந்த கௌதமனின் நிலை.

“என்னை விட்டுடுங்க அப்பா… என்னால இதுக்கு மேல முடியாது” எனச் சக்கர நாற்காலியில் வலியில் துடித்த மகனை எப்படி விடுவார் தகப்பன்? இருந்த அவரின் அனைத்தையும் இழந்தாவது மகனை மீட்க வேண்டும் எனப் போராடின மனிதன், உண்மையிலுமே அனைத்தையும் இழந்து நிற்கிறார். உபயம், மனைவியின் அன்பு தமயன்.

மலைத் தேனை எடுப்பது என்பது உயிருக்கு ஆபத்தானது. தன் உயிரை ஒரு கயிற்றில் பிடித்து வைத்து… அதை ஒருவனிடம் கொடுக்க வேண்டும். கயிற்றை விட்டால் உயிர் போய்விடும். யாருக்கு அவன் உயிர் முக்கியம்? மச்சான்! தங்கையின் கணவன் உயிர் மச்சானுக்கு முக்கியம் என்பதால் அந்தக் கயிற்றின் ஒரு முனையை அவன் கையில் கொடுத்து, மற்றதைத் தன் இடையில் கட்டிக் கொண்டு மலை ஏறுவான் மாப்பிள்ளை. வாசுதேவனும் நம்பினார்… ஆனால், ஜெகநாதன் கூர்மையான துரோகம் என்ற ஆயுதம் கொண்டும் முதுகின் வழியே மனிதனைச் சாய்த்துவிட்டார். மலை ஏறி, தேனிகளின் முன் நின்ற வேளையில் கயிற்றை விட்டுவிட்டார் ஜெகநாதன்.

முன்னேறத் திறமையும் உழைப்பும் இருந்தால் மட்டும் போதுமா? கற்றிருக்க வேண்டும்… பச்சோந்திகளை இனம் கண்டிருக்க வேண்டும். மகனே கதி எனக் கிடந்த நாள்களில் “படத்துக்கான செலவு மாப்பிள்ள”, “ஹாஸ்பிட்டல் பில்லுக்கான பணத்துக்கு…” எனக் கேட்ட இடத்தில் எல்லாம் கை எழுத்து போட்டுக் கொடுத்ததால்… துரோகியை இனம் காணத் தவறியதால்… தன் ஒட்டு மொத்த உழைப்பையும் சேமிப்பையும் கொண்டு சென்னை நகரத்தில், தன் அன்பு மனைவிக்காக, மிகப் பெரிதாக உருவாகிக் கொண்டிருந்த வணிக வளாகத்தை இழந்து நிற்கிறார்.

பல தயாரிப்பாளர்களைத் தெருவுக்கு அவர்கள் தொழிலே இழுத்துவிட்டிருக்க, வாசுதேவனும் அப்படியான ஒரு சூழலில் இருந்து எழுந்து நின்றவர். மனைவியின் தயவால் மட்டுமே முன்னேற்றம் என்ற பாதையில் எளிதில் நுழைந்தார். அந்தப் பணம் அனைத்தும் மாமனார் தன் மனைவிக்குக் கொடுத்தது. அதை முதலீட்டாகக் கொண்டு தன் உழைப்பால் ஈட்டிய அனைத்தும் ஜெகநாதன் தனக்கானது என எப்படி நினைக்கிறார்? இத்தனை வருடங்கள் வஞ்சம் வைத்துக் காத்திருந்தாரா அதை அபகரிக்க? தேனாக இனித்த அந்த நட்பு எல்லாம் பொய். ஆறக்கூடிய ரணமா இது?

அரை லட்சம் சதுர அடியில், பல பல அங்காடிகளைக் கொண்டு மிகப் பிரமாண்டமாக எழும்பிக் கொண்டிருந்த வணிக வளாகத்தை உத்திரவாத பத்திரமாக வைத்து மிக மிகத் தந்திரமாகச் சொத்தை அபகரிக்க நினைக்கிறார் ஜெகநாதன். மருத்துவச் செலவு, படச் செலவு, வணிக வளாகத்தின் கட்டுமான செலவு என அனைத்திலும் பண மோசடி செய்ய எப்படி ஜெகநாதனுக்கு மனம் வந்தது? வாசுதேவனால் நம்ப முடியவில்லை என்றாலும்… பத்திரங்கள் ஏந்தியிருக்கும் கையொப்பம் எல்லாம் வாசுதேவன் போட்டதே. செலவான பணத்தைக் கொடுத்தால், சொத்தை மீட்கலாம் என்கிறது சட்டம். ஆனால் அவ்வளவு கோடிகளுக்கு எங்குப் போவது?

மகனின் அறுவை சிகிச்சைக்காகப் பல பல பெரிய மருத்துவர்… மருத்துவம் என அது ஒரு பக்கம் பணத்தைக் கரைத்திருக்க, ஒன்றரை வருடங்களில் வெளி வர வேண்டிய படமும் இன்னும் வெளிவரவில்லை. பிரமாண்ட செட், விஷுவல் கிராபிக்ஸ், வெளி நாட்டில் படப்பிடிப்பு என 350 கோடி பட்ஜெட்டில் ஆரம்பித்து, 450 கோடிகளை விழுங்கிய பின்னும் படத்தை வெளியிட முடியவில்லை.

கதை திருட்டு, உணர்வுகளைக் காயப்படுத்தும் திரைப்பட வரிகள், திரைப்படப் பெயர் சர்ச்சைக்கு உரியது எனப் புதிது புதிதாக முளைக்கும் உப்புக்கும் புளிப்புக்கும் ஆகாத காரணங்கள் ஒருபக்கம் என்றால், ஜெகநாதன் ஒரு பக்கம் அழுத்தம் கொடுக்கிறார். கொடுத்தது போக மீதிப் பணத்தைக் கொடுத்தபின்பே படத்தை வெளியீடு பண்ணலாம் என ஜெகநாதன், கையொப்பம் இட்டிருக்கும் பத்திரத்தோடு நிற்கிறார்.

நம்பி மோசம் போனதை வாசுதேவனால் தாங்க முடியவில்லை என்றாலும் அது அவரின் உடலைப் பாதிக்கவில்லை என்பது அவருக்கே ஆச்சரியம் தான். இந்த மாற்றம் எப்படி வந்தது என அவருக்குத் தெரியாதா? வலித்தாலும் ஜெகனிடம், “இத விடப் பெரிய வலிய எல்லாம் தாண்டியாச்சு… நீ என்னடா? பணம் தானே… வச்சுக்கோ. ஆனா வாழ்க்கைங்கிறது வெறும் பணமும் புகழும் இல்லன்னு நீயும் ஒரு நாள் தெரிஞ்சுப்ப. நான் இன்னும் அன்பான மனைவி, ஆரோக்கியமான மகன், தங்கமான பேத்தின்னு சந்தோஷமா தான் இருக்கேன். இருப்பேன். ஆனா… இனி மேல் உன்னால நிம்மதியா ஒரு வாய் சாப்பிட முடியுமா? தூங்க முடியுமான்னு யோசிச்சுக்கோ” என்றிருந்தார். எங்குப் போகப் போகிறான்? பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தாரா… இல்லை எல்லாம் மூழ்கியபின் சாண் என்ன முழம் என்ன என விட்டுவிட்டாரா? தெரியவில்லை.

இதே வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் இல்லாது வாழும் அளவிற்குச் சிற்சில சொத்துகளைத் தவிர எல்லாம் போன நிலையில் நிற்கும் வாசுதேவனுக்கு மகனும் யாழியும் மட்டுமே அவரின் ஒரே ‘ஸ்ட்ரெஸ் பஸ்டர்’.

“ஆப்பிள் வேணுமா என் பேபிக்கு?” எனக் கேட்டு உருண்டு புரளும் மகனைக் காணக் காண வாசுதேவன் மனம் நிறைந்து போயிருக்க, அதன் காரணகர்த்தாவின் மீது பேரன்பு பொங்கியது.

“பணம் என்ன டா பணம்? தலைக்கு மேலக் கூரைக்கும், மூணு வேள சோருக்கும் உழைக்க என் உடம்புல தெம்பிருக்கு” என உழைப்பை மட்டுமே நம்பும் வாசுதேவன், இழந்து கொண்டிருக்கும் பணத்தை நினைத்து வருந்துவதை விடுத்து சாவில் இருந்து மீண்ட மகனைப் பார்த்து நிம்மதி அடைகிறார்.

“பேபி எனக்கு பிறக்கல பா. ஆனா, அம்மா யசோதரா, அப்பா கௌதமன்னு யாழினியாளுக்கு பர்த் சர்டிஃபிகேட் வேணும் பா” என மகன் வந்து நின்ற போது வாசுதேவனால் தன் காதில் விழுந்ததை நம்ப முடியவில்லை. “பிறப்பு சான்றிதழா?” எனத் திகைத்து நின்றார் வாசுதேவன்.

தப்பு… தவறு… சரியில்லை… எனப் பல வார்த்தைகள் கொண்டு மகனுக்கு எடுத்துக் கூறினார். கடைசியாக, “விஷயம் வெளில தெரிஞ்சா… கம்பி எண்ணனும்” என மிரட்டியும் பார்த்தார். மகன் விடுவதாக இல்லை.

கௌதமனின் பிடிவாத குணம் தெரிந்தும், “ரொம்ப தப்பு கௌதமா… குழந்தையோட லீகல் பேரன்ஸ்ச தேடி பிடிக்கணுமா சொல்லு. தேடி பிடிக்க முயற்சி செய்யலாம்.” என ஆரம்பித்து தன்னால் ஆனமட்டும் மகனின் மனதை மாற்ற முயன்று தோற்றார்.

“தேட அவசியம் எல்லாம் இல்ல பா. அவ தான், குழந்த வேண்டாம்ன்னு அனாத இல்லத்துல போட வந்தா. என்னைப் பார்த்ததும் மரத்தடியில போட்டுட்டு போயிட்டா. எப்போ… வேண்டாம்ன்னு போட்டுட்டு போயிட்டாளோ அதுக்கு மேல அவளுக்கு யாழி மேல எந்த உரிமையும் இல்ல பா. என் பொண்ண பெத்தனால மட்டுமே பர்த் சர்ட்டிபிகேட்ல அவ பேரு இருந்துட்டு போகட்டும்.” என கசப்போடு கூறினான் கௌதமன்.

“அவ பேரு உனக்கு எப்படி தெரியும்?” என்ற கேள்வியைக் கேட்ட போதும், குழந்தையின் தாயை இவன் பார்த்துத் பேசியிருப்பான் என்றே நம்பினார்.

“அது டையப்பர் பேக்ல ஒரு பேப்பர் வச்சிருந்தா… ஹாஸ்பிட்டல் சார்ட் பேப்பர். ஆனா ஹாஸ்பிட்டல் டீட்டயில்ஸ் ஒண்ணும் இல்ல. ‘யசோதராஸ் பேபி கேர்ள்’ன்னு போட்டு, குழந்தையோட பிறந்த நாள், அவ வெயிட், ஹயிட் இருக்கு. மத்தபடி பேப்பர் மேல கீழன்னு வேற எல்லாமே கிழிச்சு எடுத்திருக்கா. கூடவே குழந்த கையில் பிறந்த போது போட்டு விட்டிருப்பாங்க போல… சின்ன டேக், அதுலயும் ‘யஷோதராஸ் பேபி’ன்னு போட்டு பிறந்த நாள் போட்டிருக்கு” என மகன் விம் போட்டு விளக்கினான்.

‘கீழக் கிடந்த புதையல தூக்கிட்டு வந்திருக்கான் என் மகன்!’ என்பதை தவிர வேறு என்ன நினைக்கவேண்டும் என்று வாசுதேவனுக்கு புரியவில்லை. குழந்தை வந்த இரு தினங்களில் அவருக்கு இருந்த பிரச்சனைகளில் நடுவே ‘இது என்ன?’ என்று மட்டும் தான் நினைக்க முடிந்தது மனிதனால்.

“இந்த நேரத்துல இந்த பிரச்சன தேவையா கௌதமா? தீடீர்ன்னு ஒரு கைக் குழந்தையோட வந்து நின்னா, நம்ம ஆட்கள் என்ன பேசுவாங்க உன்ன பத்தி? பொண்ணுக்கு மட்டும் இல்ல டா… ஆம்பளைங்க வாழ்க்கையும் இதுனால கேள்வி குறியாகும். வேண்டாம் கௌதமா… நீயே இப்போ தான் செத்து பிழைச்சு வந்திருக்க. உடம்ப கவனிப்போம். நம்ம இல்லத்துல கொடுத்தா அழகா வளர்த்திட போறாங்க.” என தகப்பன், மகன் மனதை மாற்ற நினைக்க, மாறியது என்னவோ அவர் மனம் தான்.

“வாழ பிடிக்காம, எங்க போறோம்… எதுக்கு போறோம்ன்னு ஒரு இலக்கே இல்லாம போன போது என் கையில் கிடைச்ச பொக்கிஷம் பா என் பேபி. நீங்க என்னவோ நான் இந்த குழந்தைக்கு வாழ்க்கை கொடுக்க துடிக்கிறதா நினைக்கறீங்க. இல்ல பா… மாசு படிஞ்ச என் பிரபஞ்சத்துல நான் மூச்சு விட துடிக்கிறேன் பா. எனக்கான ஆக்சிஜன் இந்த யாழி பேபின்னு சொன்னா உங்களுக்கு புரியுமா?” என அன்று அவன் கூறியதைச் சில நாட்களிலேயே பெற்றவர் புரிந்து கொண்டார்.

“இனி மேல் யாழினிக்கு நாம மட்டும் தான். பர்த் சர்டிபிகேட்டுக்கு நீங்க ஏற்பாடு பண்ணுங்க… இல்ல முடியாதுனா நான் பார்த்துக்கிறேன்.” என தகப்பன் வாயை மூடினான் கௌதமன்.

வைஷாலி சண்டை பிடித்தார். மௌனமாகப் போராடினார். உண்ணா விரதம் மேற்கொண்டார். கணவனைப் போல், தன் எல்லா முயற்சியிலும் வைஷாலி தோற்றார். தோற்றதால், தங்கள் வாரிசில்லாத யாழினியாள், அவர்களின் பேத்தியாகி இருந்தாள்.

ஒன்றரை வருடங்களாகப் பிணவறை போல் குளிர்ந்திருந்த வீட்டில், சூரியப் கதிராக வெம்மையைக் கொடுத்த குட்டி யாழி கௌதமனின் மகளாகவே மாறினாள்.

“தப்பு டா இது” என தகப்பன் பேசியதை எல்லாம் புரியாத பாஷை எனக் கடந்துவிட்டவன், இன்று மகளின் மழலைச் சொற்களுக்கு அர்த்தம் புரிந்து மகளையே சுற்றி வருகிறான்.

உண்ட மயக்கத்தில் தூக்கம் வர அப்பாவின் கழுத்து கன்னம் எனத் தன் தலையை தேய்துக் கொண்டிருந்தாள் யாழி. “தூக்கம் வந்துடுச்சா என் பேபிக்கு” என மென்மையாக முதுகை வருடிவிட்டுக் கொண்டிருந்தான் கௌதமன். அன்னையாக மாறி நிற்கும் மகனை வாஞ்சையோடு பார்த்து அமர்ந்திருந்தார் வைஷாலி.

எப்படி இருந்த கௌதமன்… நினைத்தவர் முகத்தில் புன்னகை அரும்பியது. வீட்டில் அடங்காத கௌதமன் இன்று இந்தக் குட்டி உருவத்தை மட்டுமே சுற்றி வருகிறான். தொண்டை கிழிய வைஷாலி கூப்பிட்டாலும் திரும்பிப் பார்க்காத கௌதமன், இன்று இந்தக் குட்டியின் சின்ன சிணுங்கலுக்கு ஓடி வருகிறான். சிரிப்பு வராது என்ன வரும் வைஷாலிக்கு?

கௌதமனின் புஜத்தை அந்தக் குட்டி விரல்கள் பிடித்திருந்தன. முன்பு அதில் இருந்த ‘ஐ லவ் மாம்’ காணவில்லை என்றாலும் அதே இடத்தில் வைஷாலியின் கண்கள் நிலைத்தன. அதைப் பச்சை குத்தி வந்த அன்று காலையில் மகனுக்கும் தாய்க்கும் அவ்வளவு சண்டை. முன் இரவு ‘பப்’ என அழைக்கப் பெறும் நவீன மதுக்கூடத்திற்கு சென்று வீட்டிற்கு வராது நண்பன் வீட்டில் மட்டையாகி இருந்ததால் வைஷாலி கொதித்துப் போயிருந்தார்.

“ஸ்கூல் முடிச்சாசுன்னு ஃப்ரெண்சுக்கு பார்ட்டி கொடுத்தேன் மாம். பார்ட்டி கொடுத்த நானே என்ஜாய் பண்ணாட்டா எப்படி… அது தான் இப்படி ஆகிடுச்சு.  இனி மேல் பார்ட்டினாலும் கொஞ்சமே கொஞ்சமா தான் குடிப்பேன்” என அவரை சமாதானம் செய்தும் அவர் மலை இறங்காததினால், அன்று இரவு கையில் பச்சைகுத்திக் கொண்டு வந்தவன், “யூ ஆர் தி பெஸ். லவ் யூ மா. ஐ வில் பி எ குட் பாய்” என அவரை கரைத்திருந்தான்.

அவனை நினைத்துப் பெற்றவர்கள் வருந்தாத நாளில்லை. கல்லூரிக்குள் நுழைந்த பின் அவனை அடக்கவும் முடியவில்லை. அடக்கவும் தெரியவில்லை. 19 வயதில், பெண் சகவாசங்கள் இருப்பதாகப் பத்திரிக்கைகள் கூறின.

“அவளா? லேக்மி மாடல் மா அவ. என் டைப் கிடையாது. ஜஸ்ட் லைக் தேட் சுத்தினோம். நத்திங் சீரியஸ்… சில் மாம்” என்றான். மாடல், நடிகை எனப் பெண்களோடு மகனின் பெயர் அடிபட வாசுதேவன் அவனை அலுவலகம் பக்கம் வரவிடவில்லை. அவன் மூலமாக வரும் ஒருவருக்கும் சலுகை அளிக்கவில்லை தந்தை. ஆனால்… அது அவனைச் சுற்றும் பெண்களின் எண்ணிக்கையைக் குறைக்கவில்லை என்பதே உண்மை.

கடைசி வருடம், கல்லூரி தோழியின் திருமணத்திற்காக வெளியூர் சென்றவன் ஹோட்டல் அறையில் தனியே தங்கவில்லை என்ற செய்தி வந்ததும் வைஷாலிக்கு பயம் பிடித்தது.

“அது அவனோட கேள் ஃப்ரெண்ட் ஆன்ட்டி” என்றான் கௌதமனின் கல்லூரி தோழன். “சின்ன சார் அந்த பொண்ணோட தான் நாலஞ்சு மாசமா சுத்துதுங்கமா” என்றான் செந்தில்.

மகன் பாதை மாறிவிட்டதை அறிந்த அன்னை, “இருபது வயசு தான் கௌதமா ஆகுது உனக்கு. இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கியா? அந்த பொண்ணு யாரு? அவ வீட்டுல பேசவா?” என கேட்டதற்கு, “ம்மா… தாக்ஷா இஸ் நாட் மை கேள் ஃப்ரெண்ட். ஜஸ்ட் அ ஃபிளிங் மா. அவ மேல படிக்க ஃபாரின் போறா. நான் அப்பா பிசினஸ் பார்த்துட்டு இங்க தான் இருப்பேன். லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப் எல்லாம் வேலைக்கு ஆகாது. காலேஜ் முடியவும் பிரிஞ்சிடுவோம். கிளீன் கட்! டொன்ட் ஸ்வெட் இட் மா.” என அசால்டாக கூறிச் சென்றுவிட்டான். அவருக்கு அவன் பேசியது புரியவே ஆங்கில அகராதியைப் பார்க்க வேண்டி இருந்தது.

தூக்கம் விழி வரை வந்த பின்னும், “ட ட டா செ த டே” என மகள் தகப்பனிடம் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

“தூக்கம் வந்தா தூங்கு பேபி” என நெஞ்சோடு மகளை அணைத்துப் பிடித்தவன், “ம்மா… நானும் இப்படி தான் என் பொண்ணு மாதிரி ரொம்ப ஸ்வீட்டா?” என அன்னை மடியில் தலை சாய்த்து மகளோடு நீள்விருக்கையில் படுத்துக் கொண்டான்.  

“நீ கொஞ்சம் அமைதி. நாலு வயசுல தான் பேச ஆரம்பிச்ச. என்ன வாய் டா உன் பொண்ணுக்கு. ரெண்டு வயசுல நல்லா பேச ஆரம்பிச்சிடுவா பாரேன்” என்றார் வைஷாலி.

பேத்தியைக் கொண்டு ஆரம்பித்த பேச்சு, கௌதமன் பக்கம் சென்றது.

“கௌதமா அடுத்து என்ன பண்றதா யோசிச்சு இருக்க?” என வாசுதேவன் கேட்கவும், “அவன் ரெஸ்ட் எடுக்கட்டுமே. இப்போ என்ன அவசரம் அவன் அடுத்து என்னன்னு யோசிக்க” என வைஷாலி இடையிட்டார்.

மனைவியை ஒரு பார்வை பார்த்தவர், “அவனுக்கும் வெளி உலகம் தெரிய வேண்டாமா? அவனுக்குன்னு ஃப்ரெஸ்ட்ஸ், வெல் விஷ்ஷர்ஸ்சுன்னு ஒரு சர்கிள் வேணும். நீ சொல்லு கௌதமா… என்ன முடிவு பண்ணி இருக்க?” என்ற வாசுதேவன் மகனை வெளி உலகிற்குள் அனுப்ப தயாரானார்.

கௌதமனுக்கு புரிகிறது. இப்படியே வாழ்ந்திட முடியாதே. தயங்கினாலும், யோசனையோடே, “ஏதாவது செய்யணும் தான்… சொல்றேனே பா” என முடித்துவிட்டான்.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!