Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

வரம் 💘 6(1)

அத்தியாயம் – 6

“ஹேய் எருமை!!!” என செவிக்கு மிக அருகில் கேட்ட குரலில் வந்தனாவின் இதயம் ஒருமுறை நின்று துடித்தது.

அதுவரை அவளைச் சூழ்ந்திருந்த ஒரு மாய வலை அறுந்து போக, நிஜ உலகிற்கு திரும்பியவள் என்ன நடந்ததென தெரியாமல் பச்சிளம் குழந்தை போல் முழித்துக் கொண்டு நின்றாள்.

“என்ன டி பாப்பா மாதிரி முழிக்குற?? என்னாச்சு உனக்கு?? ஒவ்வொரு டைம் வெளியே போய்ட்டு வரும்போதும் இப்படி தான் பித்துப் பிடிச்ச மாதிரி வர.. நானும் எவ்ளோ நேரமா கூப்பிட்டுட்டே இருக்கேன் நீ என்னடான்னா எங்கேயோ வெறிச்சு வெறிச்சு பார்க்குற, தனியா எதையோ நினைச்சு சிரிக்குற.. உன் நடவடிக்கை ஒன்னுமே சரியில்லை.. மரியாதையா உண்மையை சொல்லு.. என்ன டி ஆச்சு?” என சங்கீதா அவளை ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டே வினவ,



Advertisement

அதில் மாட்டிக் கொண்ட பாவனையில் திருதிருவென அவள் விழிக்க, சரியாக அதே நேரம் வந்தனாவிற்கு இளவரசியிடமிருந்து அழைப்பு வந்து அவளைக் காப்பாற்றியது.

“அம்மா கூப்பிடுறாங்க” என்று சங்கீதாவிடம் கூறியவள், பின்னவள் தடுக்கும் முன் அறைக்குள் சென்று அடைந்திருந்தாள்.

“போடி போ!! வெளிய வராமையா போய்டுவ? அப்போ வச்சுக்கிறேன் உன்னை!!” என்று கதவிற்கு வெளியே இருந்து கத்திய சங்கீதாவும் தன் அன்னையைத் தேடி சென்றுவிட்டாள்.

Advertisement

அவள் கூறியதைக் கேட்ட வந்தனாவோ தன் தலையில் மானசீகமாக கொட்டிக் கொண்டு, “அடி பக்கி!! இப்படியா சுத்தி என்ன நடக்குதுனு தெரியாம டிரீம்ஸ்ல இருப்ப.. போச்சு இந்த சங்கி மங்கி என்னென்ன பண்ணப் போறாளோ??” என நொந்து கொண்டவளின் மனது தான் இப்படி ஆனதற்கு காரணமானவனை மனதில் நிந்தித்துக் கொண்டது.

Advertisement

மீண்டும் மாலையில் இருந்து நடந்தது அவள் மனதில் காட்சிப் படமாக விரிய, அந்நாளில் நூறாவது முறையாக மீண்டும் நடந்ததை நினைத்துப் பார்த்தாள்.

“ஹேய் நான் வரலை டி பிளீஸ்.. எனக்கு தலை வலிக்குது” என வீட்டை விட்டு கிளம்பும் பொழுது கூட அங்கு வரவில்லையென சங்கீதாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் வந்தனா.

வைஜெயந்தி கூட, “அவ தான் வரலைன்னு சொல்றால.. உன் ஃப்ரெண்ட்ஸை கூட்டிட்டு தான் போயேண்டி” என்று சொல்லிப் பார்த்தும் கூட சங்கீதா தன் பிடியில் உறுதியாய் இருந்து அந்த ஐந்து நட்சத்திர விடுதிக்கு வந்தனாவை அழைத்துக் கொண்டு வந்துவிட்டாள்.

Advertisement

“மூஞ்சியை ஏண்டி இப்படி இஞ்சி தின்ன மங்கி மாதிரி வச்சிருக்க.. கொஞ்சம் சிரிச்ச மாதிரி தான் வாயேன்” என சங்கீதா கேட்கும் அளவிற்கு முகத்தை தூக்கி வைத்திருந்த வந்தனாவோ,

“நானே செம்ம கடுப்புல இருக்கேன்.. என்னை கொலைகாரி ஆக்காம பேசாம வா!! அதான் உனக்கு நல்லது” என திட்டியவள் கடுப்புடன் சங்கீதாவை தாண்டி முன்னே நடக்க யாரின் மீதோ மோதிக் கொண்டாள். 

“ஓஹ் சாரி சாரி!!” என வந்தனா சட்டென தன்னை நிதானப்படுத்திக் கொண்டு தான் மோதிய நபரிடம் மன்னிப்பு கோர,

“என்ன வந்தனா மேடம் எதுக்கு இவ்வளவு வேகம்?? உங்க அக்கா எதுவும் உன்னை கடிக்க வந்துட்டாளோ??” என புன்னகை முகமாக அவள் எதிரே நின்றிருந்தான் சங்கீதாவின் வருங்காலக் கணவன் சதீஷ்.

“அட மாமா நீங்க தானா?? நான் கூட வேற யார் மேலயோ மோதிட்டோம் திட்ட போறாங்கன்னு நினைச்சு பயந்துட்டேன்” என ஆசுவாசமாகக் கூறிய வந்தனா தொடர்ந்து,

“ஏன் மாமா உங்களுக்கு சங்கியை பார்க்க இது ஒரு சாக்கா?? மேக்கப்க்கு எதுக்கு ட்ரையல்? இதெல்லாம் அவசியம் தானா? எள்ளு தான் எண்ணெய்க்கு காயுது.. எலி புழுக்கை எதுக்கு காயுது? எங்கப்பாக்கு மட்டும் டெய்லி நான் இப்படி ஊர் சுத்துறது தெரிஞ்சது என் காலை உடைச்சு கரி அடுப்புல போட்டிடுவாரு தெரியுமா” என தன் விருப்பமின்மையை அவனிடமும் வெளிப்படுத்திவிட்டாள்.

“உங்ககிட்டயும் ஆரம்பிச்சுட்டாளா??” என கேட்டுக்கொண்டே அவர்களை நெருங்கிய சங்கீதா,

“அவ இப்படித்தான் உளறிக்கிட்டு இருப்பா கண்டுக்காதிங்க.. அது சரி வினய் சார் வந்துட்டாரா?” என சதீஷிடம் கேட்க,

“வீட்டுக்குள்ளேயே இருக்கவா வந்தனா சென்னை வந்த? கமான் இட்ஸ் யுவர் லைஃப்.. அப்பாக்கு பயந்து சின்ன சின்ன சந்தோஷத்தை கூட இழந்துறாத.. ஓகே வா??” என வந்தனாவிற்கு சமாதானம் கூறியவன் சங்கீதாவின் கேள்விக்கு பதிலாய்,

 “ஓஹ் எஸ்!! அவர் அப்போவே வந்துட்டார்.. வாங்க போகலாம்” என அவர்களை கூட்டிச் சென்றான்.

‘கடன்காரன் வந்துட்டானா?? இன்னைக்கு மட்டும் அந்தக் கொள்ளிக்கண்ணை வச்சு என்னை பார்க்கட்டும் கண்ணை நோண்டி எடுத்துறேன் ‘ என மனதில் அவனை வசைபாடிக்கொண்டே அவர்களைத் தொடர்ந்த வந்தனாவிற்குத் தெரியவில்லை அந்தக் கண்களில் தான் தலைகுப்புற கவிழப் போகிறோம் என்று.

இவள் மனதோடு பேசிக்கொண்டே வந்ததில் அவர்கள் வரவேண்டிய அறையும் வந்துவிட, அறையின் காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருந்தான் சதீஷ்.

உள்ளே,

பரீட்சையில், தான் படித்த கேள்விகள் வினாத்தாளில் இடம்பெற்றிருக்குமா? என படபடக்கும் நெஞ்சத்துடன் பரீட்சை அறையில் அமர்ந்திருக்கும் மாணவனின் மனநிலையை ஒத்திருந்தது வினய்யின் மனநிலை.

என்னதான் தன்னவளைக் காண வேண்டி இப்படி ஒரு திட்டத்தை வகுத்தாலும், சங்கீதாவுடன் தன்னவள் வருவாளா என்பது கேள்விக்குறி தான்? 

அவள் உண்மையில் சங்கீதாவின் உடன் பிறந்த தங்கையா? இல்லை சொந்தமா? சொந்தம் என்றால் நிச்சயம் முடிந்ததும் அவள் இல்லம் சென்றிருந்தால்? இல்லை இன்று சங்கீதாவுடன் வேறு யாரும் துணைக்கு வந்தால்? இப்படிப் பலவாறான கேள்விகள் அவன் மண்டைக்குள் ஓடி அவனை இம்சித்துக் கொண்டிருந்தது.

“காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம் நரக சுகமல்லவா”

என்ற வரிகளை எவ்வளவு அனுபவித்து எழுதியிருக்க வேண்டும் என அவன் அப்போது நினைத்து சிரித்தும் கொண்டான்.

‘கண்டிப்பா என் ஏஞ்சல் வருவா.. என்னைத்தேடி வருவா..’ எனத் தன் காதலின் மீது கொண்ட அதீத நம்பிக்கையில் அவள் வரவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தான்.

‘வந்தா அவ பேரை முதல்ல கண்டுபிடிக்கனும்’ என நினைத்துக் கொண்டவனுக்கு அன்று நிச்சய விழாவில் சங்கீதா அழைத்த தன்னவளின் பெயரை என்ன முயன்றும் நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை.

‘நான் இன்னைக்கு நல்லா இருக்கேனா?? என்னைப் பார்த்ததும் அவளுக்கு பிடிக்கும் தான?? இந்த நேவி ப்ளூ ஷர்ட்க்கு இந்த பேண்ட் ஓகே தான?? இந்த ஹேர் ஸ்டைல் கொஞ்சம் நல்லா இல்லையோ?’ என ஆயிரமாவது முறையாக கண்ணாடியை பார்த்து இல்லாத பைத்தியக்காரத்தனத்தை எல்லாம் செய்து வைத்தான்.

‘இப்போது அவள் வந்தால் என்ன பேசுவது? தன் மனதில் உள்ள காதலை இன்றே வெளிப்படுத்தி விடலாமா?’ இவ்வாறாக பல்வேறு சிந்தனைகளில் அவன் உழன்று கொண்டிருந்த சமயம் அழைப்பு மணி அடித்து அவன் இதயத் துடிப்பை எகிற வைத்தது.

“ஓகே ரிலாக்ஸ்!!! ” என ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை சமன்படுத்திக் கொண்டவன் தன் ஆவலை மறைத்துக் கொண்டு கதவைத் திறந்தான்.

அங்கே அவன் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அவன் தேவதை அவனுக்கு காட்சியளிக்க, மனமெங்கும் பொங்கிப் பிரவாகமெடுத்த உற்சாகத்தை முயன்று முகத்தில் காட்டாமல் மறைத்தவன்,

“ஹாய் கைய்ஸ்!! ப்ளீஸ் கெட் இன்” என புன்னகையுடன் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்தான்.

அவன் குரல் கேட்டாலும் அவன் பார்வையை சந்திக்கக் கூடாது என உறுதியுடன் இருந்த வந்தனாவோ மறந்தும் நிமிர்ந்து அவனைப் பார்க்கவில்லை.

“கங்கிராட்ஸ் கைய்ஸ்!!! சாரி அன்னைக்கு ஃபங்ஷன் ஃபுல்லா என்னால இருக்க முடியலை” என சதீஷ் – சங்கீதா தம்பதியரை பொதுவாக வாழ்த்தியவன் தொடர்ந்து,

“ஹோப் யூ ஆர் சாட்டிஸ்ஃபைட் வித் தட் லுக்” என்றான் சங்கீதாவிடம்.

“எல்லாருமே அன்னைக்கு மேக்கப் நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்க வினய் சார். ஐ லவ்ட் தட் லுக் வெரி மச்” என அதற்கு உள்ளார்ந்த திருப்தியுடன் பதிலளித்தாள் சங்கீதா.

ஒரு கலைஞனாய் தன் திறமைக்கு கிடைத்த பாராட்டை எப்போதும் போல் ஒரு புன்னகையுடன் அவன் ஏற்றுக் கொண்டாலும் தன் தேவதையின் கடைக்கண் பார்வையாவது தன் மீது விழாதா என மனதிற்குள் தவித்துக் கொண்டிருந்ததை அவனைத் தவிர வேறு யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அவன் மனதில் நினைத்தது வந்தனாவை அடைந்ததோ, தனக்குத் தானே விதித்துக் கொண்ட கட்டுப்பாட்டை மீறி சட்டென அவனை ஏறிட்டுப் பார்க்க, கண்கள் நான்கும் சந்தித்துக் கொண்டது.

அவள் தன்னை நிமிர்ந்து பார்த்ததும் உடலில் ஓர் அதிர்வலை ஏற்படுவதை உணர்ந்த வினய், சுற்றத்தை மறந்து தன் ஒட்டு மொத்த காதலையும் விழிகளில் தேக்கி அவளை நோக்கினான்.

அவன் கண்களின் வழியாக கடத்திய காதல் சரியாக அவள் இதயத்திரையை கிழித்துக் கொண்டு மனதில் போய் புகுந்தது.

அன்று அவன் பார்வைக்கான அர்த்தம் இப்போது பாவைக்குப் புரிவதாய் இருக்க, முதலில் ‘எவ்வளவு தைரியம் இருந்தா எல்லார் முன்னாடியும் இவன் இப்படிப் பார்ப்பான்?’ என நினைத்து அவன் மேல் கோபம் கொண்டவள், பின் அவனின் பார்வைக்கான அர்த்தம் உண்மையில் அது தானா? இல்லை தன் கற்பனையா??’ என அடுத்து சந்தேகம் தோன்ற, ‘ஒருவேளை இது உண்மையாக இருப்பின் அதில் தன்னுடைய நிலைப்பாடு என்ன?’ அடுத்த மிகப்பெரிய வினா அவள் முன் தோன்றி அச்சுறுத்திய அடுத்த நொடி ‘நிச்சயம் தனக்கு காதல் எல்லாம் ஒரு போதும் வராது..’ என உறுதியாக மனம் மறுத்துவிட்டது. காதல் என்ற சொல்லை நினைத்ததும் தன்னாலே நாட்டரசனின் முகம் அவள் மனக்கண் முன் தோன்றி பீதியைக் கிளப்பினாலும் அந்த பயத்தையும் மீறி வினய்யின் பார்வை அவள் ஆழ் மனதில் குளுமை வீசச் செய்வதை என்ன முயன்றும் அவளால் தடுக்க முடியவில்லை. 

அரை நொடிக்கும் குறைவாக நிகழ்ந்த இந்த பார்வை சந்திப்பில் பெண்ணவளின் நெஞ்சம் தான் எத்தனை எத்தனை உணர்வுகளை காண்பித்து விட்டது.

மேலும் இது தொடரும் முன், இருவரின் மோன நிலையையும் கலைப்பதைப் போல், “ஸ்டார்ட் பண்ணலாமா ஸார்?” என்றாள் சங்கீதா.

அதில் தன்னை சுதாரித்துக் கொண்ட வினய் அவளிடமிருந்து பார்வையை சட்டென விலக்கியவன், “ஓஹ் எஸ்!!” என்று பதிலளித்து, அவர்களின் கல்யாண விபரங்களைக் கேட்டறிந்தவன், அவர்களின் எதிர்பார்ப்பையும் அறிந்து கொண்டான்.

“சோ பீச் வெட்டிங்க் இல்லையா??? ஃபைன்!! சேரி கூட பேஸ்டல் ஷேட்ஸ் தான?? வொய் டோன்ட் வீ கோ ஃபார் சட்டில் லுக்??? உங்களுக்கு அது நல்லா சூட் ஆகும்” என நொடியில் கணக்கிட்டு கூறியவன், 

அவர்களுக்கு உதாரணத்திற்காக சில மாடல்களின் படங்களையும் காண்பித்து, அதில் அவர்களுக்கு ஏற்றவாறு சிற்சில மாற்றங்களையும் சேர்த்துக் கொண்டான்.

“ஓகே க்விக்கா ஒரு ட்ரையல் பார்த்துரலாம்.. உங்களுக்கும் இன்னும் கொஞ்சம் கிளாரிஃபிகேஷன் கிடைக்கும்” என்றவன் அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டான்.

அவன் விளக்கியதிலே சங்கீதா – சதீஷ் தம்பதிக்கு முழு திருப்தி தான் என்றாலும் வினய் சொன்னதற்கினங்க ஒரு முறை ஒத்திகை பார்த்து விடலாம் என்று நினைத்தனர்.

அதற்குள் சதீஷிற்கு அவன் தந்தையிடமிருந்து அழைப்பு வரவே, “சரி நீங்க பாருங்க!! ஒரு டென் மினிட்ஸ் வந்துடறேன்” என்று கூறி புறப்பட்டுவிட்டான்.

அனைத்தையும் தயார் படுத்தி வைத்த வினய், “சங்கீதா!! நல்லா கம்ஃபர்டபிளா உட்கார்ந்துக்கோங்க” என்றவன் பின், “சாரி இன்னைக்கு என் அசிஸ்டென்ட் ஸ்டெல்லாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை.. இஃப் யூ டோன்ட் மைன்ட் இவங்களை கொஞ்சம் எனக்கு ஹெல்ப் பண்ண சொல்றீங்களா?? இவங்க உங்க சிஸ்டர் தான??” என சந்தேகத்துடன் அவன் இழுக்க,

“ஓஹ் ஸ்யூர்.. ஆமா சார் இவ வந்தனா!! மை சிஸ்டர்” என வினய்க்கு பதிலளித்த சங்கீதா, வந்தனாவின் புறம் திரும்பி, “ஹேய் தனு!! ஸார்க்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு” என்று அவளை பணித்தாள்.

‘வந்தனா!!! வதனா!!!! எஸ் ஷி இஸ் மை வதனா!!!! மை ஏஞ்சல்!!’ என மனதிற்குள் அவள் பெயரை சொல்லி சிலிர்த்துக் கொண்டான் வினய்.

வினய் கேட்டதில் கடுப்பான வந்தனாவோ, “மூஞ்சிக்கு பெயின்ட் அடிக்க ஹெல்ப் வேற வேண்டுமாக்கும்” என்று அவன் காதில் விழும்படியே முணுமுணுத்தவள் வேண்டா வெறுப்பாய் எழுந்து வந்தாள்.

அவள் சொன்னதில் சிரிப்பு வரப் பார்த்தாலும் அதை அடக்கிக் கொண்டவன் அடுத்த நொடி முழு ஒப்பனைக் கலைஞனாக மட்டுமே மாறியிருந்தான்.

எப்போதும் தன் வேலையை உற்சாகத்துடனே செய்பவன் தான் என்றாலும், இன்று அவனவளின் அருகாமை அவனுக்கு மேலும் உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுக்க சிறப்பாகவே தன் பணியை செய்து கொண்டிருந்தான்.

முதலில் அவனை மனதில் திட்டிக்கொண்டே அவன் கேட்டதற்கிணங்க ஒவ்வொரு பொருளாக எடுத்துக் கொடுப்பதும், உதவுவதுமாக இருந்தவள், போகப் போக அவனின் தொழிலில் அவன் காட்டிய ஈடுபாடும் நேர்த்தியும் அவளைக் கவர்ந்தது.

அவன் கைவண்ணத்தை மட்டுமே ரசிக்கத் தொடங்கியவள் எப்போது அந்த வண்ணத்தை தீட்டிய கலைஞனையும் ரசிக்கத் தொடங்கினாள் என்பது அவளே அறியாதது.

வேலை செய்யும் போது அந்த காந்தக் கண்களில் தெரிந்த தீட்சண்யமா? இல்லை லாவகமாக ஒவ்வொன்றையும் செய்யும் அவனின் முறுக்கேறிய கைகளா? இல்லை இடையிடையில் சங்கீதாவிற்கு தான் செய்வதை தெரிவிக்கையில் மின்னல் போல் ஒளிர்ந்து மறையும் அந்தக் கீற்றுப் புன்னகையா?? எதுவென்று கண்டறியமுடியாமல் அவனை மொத்தமாக தன்னையுமறியாமலே ரசித்துக் கொண்டிருந்தாள் தையலவள்.

“வாவ்!!!!!!” என வாசலில் கேட்ட சதீஷின் சப்தத்தில் தான் தன்னிலை அடைந்த வந்தனா, தான் செய்து கொண்டிருந்த செயலை நினைத்து திகைத்தாள்.

‘நான் எப்படி?? வந்தனா என்ன இது?? காதலும் வேண்டாம் கத்திரிக்காயும் வேண்டாம்னு சொல்லிட்டு யாரோ ஒருத்தனை இப்படி ரசிச்சு பார்த்துட்டு இருந்திருக்க?? இவ்ளோ வீக்கா நீ??’ என தன்னைக்குறித்தே அவளுக்கு அவமானமாகப் போக அவள் முகம் கன்றி நின்றிருந்தாள்.

தன் வேலையில் கவனம் இருந்தாலும் வந்தனாவின் பார்வையை அறிந்தே இருந்த வினய்யின் மனம் உள்ளுக்குள் மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த நிலையில், தற்போதைய அவளின் நிலையை அவனால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

‘இவ்ளோ நேரம் நல்லா தான டா இருந்த?? திடீர்னு என்னாச்சு?? வாட் இஸ் ஈட்டிங்க் யூ வதனா?? ‘ என எண்ணி குழம்பிப் போய் நின்றான் வினய்.

“வொண்டர்ஃபுல் வொர்க் சார்!! எனக்கே சங்கி புதுசா தெரியுறா… உங்க கையில நிச்சயம் ஏதோ மேஜிக் தான் இருக்கு சார்” என சங்கீதாவின் ஒப்பனையை சிலாகித்து சதீஷ் பேசிக் கொண்டிருக்க,

சங்கீதாவும் தன் பங்கிற்கு வினய்யைப் புகழ்ந்தாள்.

அனைத்தையும் எப்பொழுதும் போல் ஒரு புன்சிரிப்பில் ஏற்றுக் கொண்ட வினய்யின் மனம் தன்னவளின் ஒரு மெச்சுதல் பார்வைக்காக ஏங்கித் தவித்தது.

அவனின் தவிப்பை உணர்ந்து கொள்ளாத வந்தனாவோ, ‘ தன் தந்தையை ஏமாற்றுகிறோமோ, அவனை ரசித்து பெரிய தவறிழைத்து விட்டோமோ??’ என குற்ற உணர்வில் தவித்துக் கொண்டிருந்தாள்.

சதிஷ் – சங்கீதா இருவரும் இந்த ஒப்பனையையே ஃபைனல் பண்ணியவர்கள், ரிசப்ஷனுக்கும் எப்படி வேண்டும் என்று வினய்யுடன் கலந்தாலோசித்து முடிவெடுத்திருந்தனர்.

“அப்போ சரி சார்!! உங்க பிஸி ஸ்கெடியூல்ல எங்களுக்கு டைம் கொடுத்து எல்லாம் ரெடி பண்ணினதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.. நாங்க கிளம்புறோம் சார்” என்ற சதீஷ் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு முன்னே நடக்க,

சங்கீதாவும் வினயிடம் சொல்லிக் கொண்டு அவனை பின் தொடர்ந்தாள்.

வந்தனா ஏதாவது பேசிவிட மாட்டாளா? இல்லை தன்னை நிமிர்ந்து ஒரு பார்வையாவது பார்க்க மாட்டாளா என தவமிருந்த வினய்க்கு கிடைத்ததோ பலத்த ஏமாற்றம் தான்.

அவள் அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் சங்கீதாவின் கையைப் பற்றிக் கொண்டு விட்டால் போதும் என அங்கிருந்து ஓடிவிட்டாள்.

அவள் சென்றதும் அவனின் உயிரின் பாதி அவனை விட்டு விலகிச் செல்வதைப் போலோரு தோற்றத்தை உணர்ந்தான் வினய்.

“வது பேபி!!! போகாத!!! என் கூடவே இருந்துடு உன்னை என் நெஞ்சுக்குள்ள பத்திரமா பொத்தி வச்சு பார்த்துப்பேன்” என்று மனதோடு பேசிக்கொண்டவன் அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

அங்கிருந்து கிளம்பிய வந்தனா இருவேறு மனநிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.

தன் இயல்பை மீறி அவனை ரசித்ததற்காக தன்னைக்குறித்தே வெட்கிப்போனாள்.

“இவ்வளவு மோசமா நான்?? ஒருத்தன் உன்னை கொஞ்சம் ஆர்வமா பார்த்தா நீயும் இப்படித்தான் எங்க இருக்கோம் என்ன பண்ணிட்டு இருக்கோம்னு தெரியாம அவனை வாயை பொலந்துட்டு பார்த்துட்டு இருப்பியா? ஏன் இதுவரைக்கும் லவ்வுன்னு எத்தனை பேர் சுத்துனாங்க.. அப்போயெல்லாம் அதை ஒரு தூசா கூட மதிக்காமத் தான இருந்த?? அப்பறம் இப்போ மட்டும் என்ன?? ஏன் தனு இப்படி பண்ண?? அப்பாக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியும் தானே??” என ஒரு மனம் அவளை வசைபாடிக் கொண்டே வர,

“அதெல்லாம் இல்லை.. இதுவரைக்கும் லவ்வுன்னு பின்னாடி சுத்துன யார் கண்ணுலயும் இல்லாத ஒண்ணு அவன் கண்ணுல தெரிஞ்சது.. என்னை ஏதோ பொக்கிஷத்தை பார்க்குற மாதிரி பார்த்தான்.. இட்ஸ் சம்திங் டிஃபரண்ட்.. அந்தக் கண்ணு என்னை ஏதோ வெளியவே வர முடியாத சுழலுக்குள்ள இழுத்துட்டு போச்சு.. அதான் என் கண்ட்ரோல்ல இருந்து கொஞ்சம் பிசகிட்டேன்” என அவளின் மனமே இரண்டாய் பிரிந்து தான் செய்ததை நியாயப் படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!