மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை – 1
வருடம் – 2010
வாசல் தெளித்து கோலமிடுவதை தவிர பெரிதாகப் பரபரப்பு இல்லாத பழஞ்சநல்லூர் கிராமத்தின் அழகான அதிகாலை, என்ன கோலம் போடலாம் என்ற சிந்தையோடு கோலப்பொடியை கையிலெடுத்தவரின் கவனத்தை கலைத்தது “ராக்காயிக்கா” என்ற குரல்.
Advertisement
Advertisement
திரும்பிப் பார்த்த ராக்காயின் முகத்தில் சிந்தனை கோடுகள், அந்த அதிகாலை வேளையிலே மிகுந்த பதட்டத்தோடும் வியர்த்த உடலோடும் நின்றிருந்தார் மூலை வீட்டு ராணி.
Advertisement
Advertisement
“என்ன ராணி விடிஞ்சும் விடியாம வந்து நிக்குற” என்றார் ராக்காயி.
தயக்கத்தோடு அவரை நெருங்கிய ராணி “அக்கா… புள்ள தலைபிரசவத்துக்கு வந்திருந்தாள்ல சுகப்பிரசவம் ஆயிடும்னு நாங்களும் நினைச்சோம் டாக்டரும் அப்படித்தான் சொன்னாங்க, பத்து நாள் முன்னாடி பாத்தப்போ கூட ஒன்னும் சொல்லல… விடியக்காலைல என்னமோ முடியலன்னு சொன்னா நம்ம கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்குதான் கொண்டுபோனோம்”.
“புள்ள கழுத்துல கொடி சுத்தியிருக்காம் பெரியாஸ்பத்திரி கொண்டு போகச் சொல்றாங்க கையில அம்புட்டு காசில்லை இதை வெச்சுகிட்டு காசு குடுங்கக்கா ரெண்டு உசிரை காப்பாத்தணும்” என்றார் நடுங்கும் கரங்களால் சேலை முந்தியில் முடிந்து வைத்திருந்த சின்ன நெக்லஸை ராக்காயின் முன்னில் நீட்டிக்கொண்டே.
எவ்வளவோ கஷ்டங்கள் வந்தபோதும் அதில் மட்டும் அவர் கைவைத்ததில்லை ராணியின் மாமியாரின் நகை அது தன்னுடைய மருமகளுக்கு அதைக் கொடுக்க வேண்டும் என்று பாதுகாத்து வைத்திருந்தார் இன்று அனைத்தையும்விட மகளின் உயிர் முக்கியமல்லவா.
“வா” என்ற ராக்காயி வீட்டின் உள்ளே செல்ல ராணி வெளித்திண்ணையில் அமர்ந்துகொண்டார், தன் கண்முன்னே ஒரு உயிர் துடித்தால்கூட தனக்கு லாபமில்லை என்றால் ஒரு டம்பளர் தண்ணீரை கூட நீட்டிவிட மாட்டார் ராக்காயி ஆகையாலே கையேடு நகையைக் கொண்டுவந்தார் ராணி.
தங்கத்தை உரசிப்பார்க்க உரை கல்லையும் எடை சரிபார்க்க எடைக்கருவியும் எடுத்துவந்தவர் ராணியின் அருகில் அமர்ந்து அனைத்தையும் சரிபார்த்தார் இரண்டரை பவன் இருந்தது.
“இங்கப்பாரு ராணி பவுனுக்கு இப்போ பதினெட்டாயிரம்னாலும் நான் பதினாறு வெச்சுதான் தருவேன், ரெண்டரைக்கு நாப்பதாயிரம்… அஞ்சு மாச வட்டியை புடிச்சிகிட்டுதான் தருவேன்” என்க.
“ஏன்க்கா!” என்றார் ராணி.
“அப்பறம்… நீ பிரசவம் முடிஞ்சு பொண்ணையும் பிள்ளையையும் கொண்டுவந்துடுவ பேறுகால கவனிப்புன்னு உன் கைல காசு தாங்காது இன்னைக்கு தரேன் நாளைக்கு தரேன்னு இழுத்தடிப்ப எனக்குதான் நஷ்டம் அதனால அஞ்சு மாசத்துக்கு எடுத்துட்டு தரேன், அப்புறம் இன்னொரு விஷயம் ஆறாவது மாசம் சரியா இந்தத் தேதிக்கு வட்டி வந்திடனும்”.
“இன்னொன்னு சரியா ஒருவர்ஷம் முடிஞ்சதும் நகையை மீட்டிடனும் அதுக்கு அப்புறம் அஞ்சு நாள் தான் டைம் தருவேன் அதுக்குள்ள திருப்பலனா நகை எனக்குப் புரிஞ்சுதா அப்பறமா வந்து என்கிட்டே பிரச்சனை பண்ண கூடாது, என்னயப்பத்தி தெரியும்ல” என்றவர் உள்ளே சென்று பணத்தை எடுத்துவந்து கொடுத்தார்.
ராணியின் கண்கள் முழுதும் அந்த நகை மீதே அது மீண்டும் தன் கைச்சேரும் என்ற நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லை அவருக்குப் பணத்தை எண்ணி பார்த்துக்கொண்டவர் பையில் பத்திரப்படுத்துக்கொண்டு அந்த வீட்டைக் கடந்து தெருவில் இறங்கி நடக்க அவர் எதிரில் வந்துகொண்டிருந்தான் ராக்காயின் இளைய புத்திரன்.
“என்ன ராணியக்கா ஏன் ஒருமாதிரி இருக்கீங்க” என்றவன் விழிகள் அவர் கையில் இருந்த மஞ்சள் பையைத் தீண்டியது, இந்தக் காலை வேளையில் தன்னுடைய வீட்டிற்கு வந்து செல்கிறார் அவர் முகமே சொல்லியது ஏதோ பிரச்சனை என்று.
“பிள்ளையைப் பிரசவத்துக்கு ஆஸ்பித்திரில சேத்திருக்கு ராசா” என்றவர் குரல் கம்மி விழிநீர் கன்னம் தாண்ட, தன் சட்டை பையிலிருந்து இரண்டாயிரம் ரூபாயை எடுத்து அவர் கையில் வைத்து அழுத்தினான்.
“வேண்டாம் சாமி” என்றவர் மறுக்க “உங்க புள்ள மாதிரி நினைச்சுக்கோங்க சீக்கிரம் போங்க நான் அப்புறம் வந்து பாக்குறேன்” என்றான் அவன்.
“நல்லா இருப்ப சாமி” என்று வீடுநோக்கி விரைந்தார் ராணி.
**********************************************************************************************************
பழஞ்சநல்லூரை போலவே ஆர்ப்பாட்டம் இல்லாமல் விடிந்திருந்ததது காட்டுமன்னார்குடி கிராமத்தின் காலை வேளையும், பின்கட்டை கூட்டி பெருக்கி சுத்தம் செய்துகொண்டிருந்தாள் செவ்வந்தி.
தொழுவத்தை சுத்தம் செய்து முடித்துச் செல்விக்கு குடிக்க கழனி தண்ணியை அதன் அருகில் வைத்தாள், அவர்கள் வீட்டின் ஒரு அங்கமான செல்வி நிறை மாதமாக இருக்கிறது இன்றோ நாளையோ என்று தெரியாமல் அவர்களும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறார்கள்.
இப்பொழுது சில மாதமாக அந்தக் கிராமத்தின் ஆஸ்த்தான பால்காரன் தங்கராசுவிடம்தான் இவர்களும் பால் வாங்குவது.
புத்தம் புது
காலைப் பொன்னிற
வேளை என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
பூவில் தோன்றும்
வாசம் அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில்
தோன்றும் அதுதான்
தாளமோ மனதின்
ஆசைகள் மலரின்
கோலங்கள் குயிலோசையின்
பரிபாஷைகள் அதிகாலையின்
வரவேற்புகள்
என்று மெல்லிய ஒலியில் பாடிக்கொண்டிருந்தது சின்ன ரேடியோ பெட்டி ஒன்று, அது அந்த வீட்டின் குடும்பத்தலைவர் பழனிச்சாமியின் பொக்கிஷம் அவரின் பதினாறு வயதில் முதன்முதலாகச் சென்னை பட்டினம் சென்றபோது வாங்கிவந்தது இப்பொழுது அது கனகாம்பரத்தின் கைகளில் குடிக்கொண்டிருக்கிறது.
முன் வாசலைக் கூட்டி தண்ணீர் தெளித்து அழகான சிக்கு கோலம் ஒன்றையும் அவள் போட்டு முடிக்க “பால்” என்ற அழைப்போடு வந்துவிட்டான் தங்கராசு.
பாலை அளந்துகொண்டிருந்தாலும் பார்வை என்னமோ அங்கு நின்றிருந்தவளின் மீதுதான், பாத்திரத்தோடு வெளியில் வந்த செல்லியம்மா அவனைக் கவனித்துக்கொண்டே அருகில் சென்றார்.
“என்ன அத்த…நேத்து கூட யாரோ செவந்தியை பாக்க வந்துட்டு வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டாங்களாம், ரொம்ப இழுத்தடிக்காம ஏதாவது ஒன்னை பேசி முடிங்க அப்போதானே அடுத்ததை பாக்க முடியும்” என்றான் தங்கராசு.
நாக்கில் நின்று நர்த்தனமாடிய வார்த்தைகளை அப்படியே கடித்து மென்று விழுங்கிக்கொண்ட கனகாம்பரம் வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
“பொட்டப்புள்ளையை காலகாலத்துல கட்டிக்குடுக்க வேண்டியதுதான் ராசு அதுக்காக என் வீட்டு படியேறி வந்து என் புள்ளையை குறைசொல்ற கண்ட கண்ட கழுதைக்கெல்லாம் கட்டிக்குடுக்க முடியாது பாரு” என்றவர் அவனை அழுத்தமாகப் பார்த்துக்கொண்டே திரும்பி நடந்தார்.
இந்தப் பேச்சுக்களை கேட்கமுடியாமல்தான் செவ்வந்தி வெளிவாசலை கூட்டவோ கோலமிடவோ வருவதில்லை இத்தனை காலம் மற்றவர்களின் கிண்டலையும் கேலிகளையும் சகித்துக்கொண்டிருந்தாள் அத்தோடு இப்பொழுது கேள்விகளும் சேர்ந்துகொண்டது.
“மாப்பிள்ளை வீட்டில பிடிக்கல சொல்லிட்டாங்களாம்…. இந்த வருஷமாவது கல்யாணம் நடக்குமா…. ஏதாவது ரெண்டாம் தாரமா பாக்கலாம்ல” போன்ற கேள்விகளுக்கு அவளிடம் பதிலில்லை பதில் சொல்லவும் அவளுக்குத் தெரியாது ஆகையாலே மற்றவர்களிடமிருந்து தன்னை தனிமை படுத்திக்கொள்வாள் செவ்வந்தி.
செல்லியம்மாவின் மனம் முழுதும் தங்கராசு கேட்டுச் சென்ற கேள்வியே நிறைந்து நின்றது ‘என் பிள்ளைக்கு ஏன் ஒரு நல்ல வழியைக் காட்ட மாட்ற’ என்று பூஜையறையை பார்த்து விழிநீரோடு நின்றிருந்தார்.
தாயின் நிலை புரிந்ததாலேயே அவரைக் கடந்து சென்று அடுப்படி கதவில் சாய்ந்தமர்ந்த கனகாம்பரம் “அம்மா காப்பி தண்ணிய சீக்கிரம் போடு அதைக் குடிச்சாத்தான் அடுத்த வேலைக்கு ஒடம்பு வளையும்” என்க.
“ஆமாம்மா இவளுக்கு உடம்புல ரத்தத்துக்கு பதிலா காப்பி தானே ஓடுது” என்று சொல்லிக்கொண்டே தங்கைக்கு முன்பிலிருந்த படியில் அமர்ந்தாள் செவ்வந்தி.
“ஏதோ ஒன்னு ஓடுனா சரிதான்” என்றவள் அமர்ந்திருந்த இடத்திலிருந்தே “லே மகேசு” என்று குரல் கொடுக்க “எழுந்திட்டேன்க்கா” என்றபடி புத்தகத்தோடு வெளிவாசலில் சென்று அமர்ந்தான் அந்த வீட்டின் கடைக்குட்டி மகேஷ்.
காப்பியை போட்டுப் பெண் பிள்ளைகளுக்குக் கொடுத்தவர் ஒன்றை எடுத்துச்சென்று மகனுக்கும் கொடுத்துவிட்டு வரப் பழனிச்சாமி பின்கட்டிலிருந்து முகம் கழுவிட்டு வந்தார்.
அவருக்குப் பால் சேர்க்காத கடுக்காப்பித்தான் அதை அவரிடம் கொடுக்க வாங்கிக்கொண்டவர் “செல்லி… மருதுகிட்ட சொல்லியிருக்கேன் இன்னைக்கு மீன் கொண்டுவர சொல்லி ஆயிரமீன் கொழம்பு வெச்சு பாறையைப் பிள்ளைகளுக்கு வறுத்து குடு நீயும் சாப்பிடு என்ன புரியுதா” என்க.
“சரிங்க” என்றார் செல்லியம்மா.
மெல்ல எழுந்தவர் வெளிவாசலில் சென்று அமர்ந்துகொண்டார் கொஞ்சம் நேரமே இப்படி அமர முடியும் ஏழுமணிக்கெல்லாம் அவரின் ஓட்டம் தொடங்கிவிடும்.
நேரம் ஐந்தரையை கடந்திருக்க பெண்கள் இருவரும் ஆளுக்கு ஒரு வேலையைப் பார்க்க எழுந்துகொண்டனர், பின்கட்டின் விறகடுப்பில் உலைக்கு வைத்த கனகம் அடுத்த அடுப்பில் தந்தைக்கு குளிக்க வெந்நீர் வைத்தாள், அதோடு உள்ளே வந்தவள் வெங்காய சட்னிக்கு தயார் செய்ய.
அரிசி மாவில் தேங்காயை துருவிக் கொட்டி குழைத்து இரும்பு சட்டியில் அடையாகத் தட்டிக்கொண்டிருந்தாள் செவ்வந்தி, அப்படியே மகேசுக்கு பள்ளிக்குக் கொடுத்தனுப்ப தக்காளி சாதத்திற்கும் தயார் செய்துகொண்டிருந்தவள் “கனகா நீ போப்புள்ள நான் பாத்துக்குறேன்” என்று தங்கையை அனுப்பிவைத்தாள்.
கனகம் முதலில் குளித்துவிட்டு தந்தைக்கு குளிக்க வெந்நீரை குளியலறையில் விளாவி வைத்தாள், பழனிச்சாமி குளித்து வருவதற்குள் மகேசும் குளித்துப் பள்ளி சீருடையோடு வந்துவிட அவனுக்கு அடையை கொடுத்து மதிய உணவு மற்றும் தண்ணீர் அனைத்தையும் தயாராக எடுத்துவைத்தாள் செவ்வந்தி.
அதற்குள் கனகம் தனக்கும் தந்தைக்கும் காலைஉணவை பாத்திரத்தில் அடைத்துத் தண்ணீரையும் பாட்டிலில் நிரப்பி வைத்து, பின்கட்டில் தண்ணீர் தொட்டியின் மேலே இரண்டு கட்டாகக் கட்டி வாடாமல் இருக்க வாழையிலையில் சுற்றி வைத்த மல்லி சரத்தை எடுத்தாள்.
ஒரு கட்டில் இருப்பது வீட்டின் சாமியறைக்கும் கடைக்கும் மற்றோன்றிலிருந்து அம்மாவிற்கும் அக்காவிற்கும் தனியாக வைத்துவிட்டு தானும் கொஞ்சம் சூடிக்கொண்டாள், குளித்துத் தயாராகிவந்த பழனிச்சாமி பூச்சரத்தை கடவுள் படங்களுக்குச் சார்த்தி சூடம் காண்பித்து மகனுக்கும் மகளுக்கும் திருநீர் பூசிவிட்டார்.
மற்ற இருவருக்கும் வீட்டில் வேலை இருக்கும் ஆகையால் அவர்கள் வேலைகளை முடித்த பிறகே குளிப்பது என்பதால் இதுவே அந்த வீட்டின் வழக்கம், மகேசு தன்னுடைய சைக்கிளில் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றான் இந்த வருடம் ஒன்பதாம் வகுப்புத் தேர்வு வேறு நெருங்குகிறதே ஆகையால் பள்ளியிலே டியூஷனும் உண்டு.
அவனுக்குப் பின்னோடே பழனிசாமியும் கனகாம்பரமும் கிளம்பிவிட்டார்கள், டி. வி. எஸ் பிப்டியை அவள் ஓட்ட மகளின் பின்னில் அமர்ந்துகொண்டார் தந்தை, ஏழுமணிக்கெல்லாம் கடையைத் திறந்துவிடுவார்கள்.
காட்டுமன்னார்குடியிலிருந்து மீன்சுருட்டி, பழஞ்சநல்லூர், மன்னார்குடி என்று பிரிந்து செல்லும் கூட்ரோடில் அமைந்திருக்கிறது அவர்களின் மளிகைக்கடை கடை, அந்தக் கிராமத்தின் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் என்றுகூட சொல்லலாம்.
கந்தன் மளிகைக்கடை என்ற நாமத்தோடு கம்பீரமாக வீற்றிருக்கும் அந்தக் கடையைக் காலை எப்பொழுது திறப்பார்கள் என்று காத்துக்கிடப்பவர்கள் ஏராளம் அங்கே.
காலை ஏழுமணிக்கே உணவை டப்பாவில் அடைத்துப் பிள்ளையை வேனில் அடைத்துத் தாங்களும் ஏதேனும் ஒரு வாகனத்தில் அடைந்துக்கொண்டு பரபரப்பராக ஓடும் நகரத்தின் நாகரிகம் பெரிதாகத் தலையெடுக்காத காரணத்தால் இவர்கள் கடை திறந்த பிறகே பலரும் பொருள் வாங்க வருவார்கள்.
“அண்ணே நூறு புளி குடுங்க ரசம் வெக்கணும், ஒரு தேங்காய் குடுங்க சட்டினி அரைக்கணும்” என்று வந்து நிற்பார்கள் ஆகையாலே அந்த நேரத்திற்க்கெல்லாம் திறந்துவிடுவது.
கனகாம்பரம் வேகமாகத் துடைப்பத்தை எடுத்துக் கூட்டிப்பெருக்கி வெளியிலும் கூட்டி தண்ணீர் தெளித்து கோலமிட்டாள், பழனிச்சாமி சாமி படங்களுக்கு மாலை சூடி கற்பூரம் காண்பிக்க “ஏத்தா கனகம் நூறு நல்லெண்ணெய் குடு சட்னிக்கு அரைச்சுவெச்சிட்டு பாத்தா தாளிக்க எண்ணெய் இல்ல” என்று வந்துவிடடார் முதல் வாடிக்கையாளர்.
பழனிச்சாமி கல்லாப்பெட்டியில் அமர்ந்துவிட அந்த நொடியிலிருந்து பம்பரமாகச் சுழல தொடங்கிவிட்டாள் கனகாம்பரம், எட்டுமணி வரை அவள் அப்படி சுழன்றாக வேண்டும் சரியாக எட்டுமணிக்கு கடையில் வேலை பார்க்கும் பிள்ளைகள் இருவர் வந்துவிடுவார்.
பள்ளி செல்லும் பிள்ளைகள் கல்லூரி செல்லும் வாலிபர்கள் வேலைக்குச் செல்பவர்கள் என்று பலரும் பொருட்கள் வாங்க அங்கு வந்து செல்வர் கடை பிள்ளைகள் வந்ததும் முதலில் தந்தையை சாப்பிட அனுப்பிவிடுவாள் கனகம் அதன் பிறகு அவள் சென்று உணவருந்துவாள்.
கடையின் கடைசியில் கொஞ்சம் இடம் உண்டு பொட்டலம் போடக் கொஞ்சம் நேரம் ஓய்வு எடுக்க என்று அங்கே அமர்ந்து சாப்பிட்டு கொள்வார்கள், சரியாகப் பத்து மணிக்குக் கிளம்பிவிட்டாள் கனகம் மொத்தமாகச் சரக்கெடுக்க ஜெயம்கொண்டம் செல்ல வேண்டும்.
இப்பொழுது நான்கு வருடமாக மாதம் ஒருமுறை அவள் தான் சென்றுவருகிறாள் மீன்சுருட்டி வரை அவளுடைய வண்டியிலே சென்று அங்கு வண்டியை விட்டுவிட்டு பஸ்ஸில் ஜெயம்கொண்டம் சென்றுவிடுவாள்.
மொத்தமாக வாங்கவேண்டிய பொருட்களை வாங்கி குட்டியானையில் ஏற்றி அனுப்பிவிட்டு மீன்சுருட்டி வந்து வண்டியை எடுத்துக்கொண்டு வந்துவிடுவாள், நல்ல அலைச்சல் தான் கஷ்டம்தான் அதையெல்லாம் பார்த்தால் முடியுமா தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவளே முன்வந்து பொறுப்பை எடுத்துக்கொண்டாள்.
பழனிச்சாமி செல்லியம்மா தம்பதிகளுக்குக் காட்டுமன்னார்குடிதான் சொந்த ஊர் பல தலைமுறையாக அவர்கள் அங்குதான் வாசம் செய்கிறார்கள், மூன்று முத்தான பிள்ளைகள் அவர்களுக்கு மூத்தவள் செவ்வந்தி கொஞ்சம் மாறுகண் ஒடிசலான உடலமைப்பு.
நேரில் வந்து பார்த்த மாப்பிள்ளை வீட்டினர் யாருக்கும் பிடிக்கவில்லை இருபத்தைந்து வயது கடந்தும் கலியாணம் ஆகாமல் வீட்டோடு நிற்கிறாள், அந்த ஊரைப் பொறுத்தவரை முத்திப்போய் விலை போகாமல் நிற்பவள்.
அடுத்தவள் கனகாம்பரம் அளவான உயரம் மாநிறம், ஓடி ஓடி உழைப்பதின் வனப்பு தெரியும் அவளிடம், கடைக்குட்டி மகேஷ் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான்.
நான்கு வருடங்களுக்கு முன்பு அவள் பனிரெண்டாம் வகுப்பு பரிட்சை எழுதிமுடித்திருந்த சமயம் சரக்கெடுக்க ஜெயம்கொண்டாம் போயிருந்த பழனிச்சாமி மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வந்தது அவரைக் காப்பாற்றி வீட்டிற்கு கொண்டுவரும்வரை அவர்கள் யாருக்கும் ஜீவன் இல்லை குடும்பத்தின் ஆணிவேர் அவரல்லவா.
வெளியுலகமே தெரியாத செல்லியம்மா வெளியில் வரவே விருப்பப்படாத செவ்வந்தி, பத்து வயதான மகேஷ் இவர்களுக்கிடையில் கொஞ்சேமெனும் விவரம் புரிந்தவள் கனகாம்பரம் மட்டுமே.
நலம் விசாரிக்க மருத்துவமனை வந்த உறவுக்கூட்டம் ஆளாளுக்கு ஒன்று சொல்லி முடிவுகள் எடுக்க என்ன செய்ய என்று தெரியாமல் தடுமாறி நின்றனர் வீட்டினர், இறுதியில் கனகாம்பரம் தைரியமாக முன்வந்து பேசிவிட்டாள்.
“இங்க யாரையும் தங்கக்கூடாதுனு சொல்லிட்டாங்க கூட ஒரு ஆள் தான் தங்கணும் அதுக்கு கார்டு குடுத்திருக்காங்க அதுல என் பேர்தான் போட்டுருக்கு அதனால நான் மட்டும்தான் இருக்கணும் நீங்க அம்மாவையும் அக்காவையும் கூட்டிட்டு போங்க” என்று நயமாகப் பேசி அனுப்பிவிட்டாள்.
அப்பா மீண்டு வருவாரா மாட்டாரா என்ற பயம் ஒருபுறம் அடுத்து என்ன என்ற பதட்டம் மறுபுறம், அதற்கிடையில் கடையைப் பூட்டி போட வேண்டாம் என்று செல்லியம்மாவின் தமயன் யாரோ ஒரு உறவினனை அழைத்துவந்து கடையில் அமர்த்திவிட்டார், வரவு என்ன செலவு என்ன ஒன்றுமே இவர்களிடம் வந்து சேரவில்லை.
கடை கணக்கு அனைத்தையும் அதுவரை பழனிச்சாமியே பார்த்துக்கொள்வது ஆகையால் வீட்டினருக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியவுமில்லை.
உடல்நிலை தேறி பழனிச்சாமி திரும்பிக் கடைக்குச் செல்கையில் அவருக்கு மீண்டும் மாரைடப்பு வரமால் போனது செல்லியம்மாவின் தாலி பாக்கியமே.
கணிசமான சேமிப்பும் கையிருப்பும் உள்ளவர் பழனிச்சாமி ஆகையால் பெரிதான நஷ்டம் இல்லாமல் பிழைத்துக்கொண்டார்.
செவ்வந்தி ஒன்பதாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக்கொண்டாள் பிள்ளைகளின் கேலியை சகிக்க முடியாமல், கனகாம்பரத்திற்கு காலேஜிற்கு சென்று படிக்க மிகவும் ஆசை நன்றாகவும் படிப்பாள் தந்தையின் உடல்நிலை அவள் ஆசையைத் தூக்கி தூரப்போட வைத்துவிட்டது.
பழனிச்சாமி எவ்வளவோ சொல்லியும் முடியாது என்று மறுத்துவிட்டாள் “நீங்கக் கல்லாப்பெட்டில ஒக்காந்து வேலை சொல்லுங்க நான் பாத்துக்குறேன்” என்று முடிவாக நின்றுவிட்டாள், அவள் பிடிவாதம் ஜெயித்தது அன்றிலிருந்து அனைத்தையும் அவள்தான் பார்த்துக்கொள்கிறாள்.
