Skip to content
Post Views: 7,630
அத்தியாயம் – 7
“ஹேய் மேன்!!!! கங்கிராட்ஸ்!!! தொடர்ந்து மூணாவது முறையா நேஷனல் அவார்ட்!! கலக்குறீங்க!!! இந்த வயசுலயே இப்படி அச்சீவ் பண்ணுறது ரொம்ப பெரிய விஷயம்!! கீப் கோயிங்” என்று வினய்யை கட்டியணைத்து ஆங்கிலத்தில் வாழ்த்தினார் இந்தியாவின் மூத்த ஒப்பனைக் கலைஞரான அம்ரித் ஜோஷி.
Advertisement
“தேங்க்ஸ் ஜி!!” என்றவன் அவரை பதிலுக்கு கட்டியணைத்து விடுவித்தான்.
இவர்களின் சம்பாஷனை முழுக்க ஹிந்தியில்.. உங்களுக்காக தமிழில்..
Advertisement
Advertisement
“சும்மாவே உன் டேட் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் இனி சுத்தம்… ஆமா அடுத்து யாரு படத்துல கமிட் ஆகியிருக்க?? விஷ்வஜித் கூட பண்ண போறண்ணு கேள்விப்பட்டேன்.. இஸ் தட் ட்ரூ?” என்றவர் தன்னுடைய சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவனையும் அமருமாறு பணித்தார்.
“எஸ் ஜி!! விஸ்வஜித் ஒரு ஹிஸ்டாரிக்கல் ஃபிலிம் ஹை பட்ஜெட்டில பண்ணுறாரு.. இன்னும் கேஸ்டிங் கம்ப்ளீட் ஆகலை.. பட் ஹி புக்ட் மீ அ மந்த் பிஃபோர்” என்று அலட்டிக் கொள்ளாமல் கூறினான் வினய்.
Advertisement
“ஹாஹா ஐ லைக் திஸ் ஆட்டிட்யூட் மேன்!! ஒன்னுமே இல்லாம வந்தப்போவும் இப்படித்தான் இருந்த.. இன்னைக்கு மோஸ்ட் வான்டட் ஆர்டிஸ்ட் ஆன பின்னாடியும் அப்படித் தான் இருக்க.. குட்!! அப்போ அடுத்து ஒரு நேஷனல் அவார்ட் கன்பார்ம் அப்படிதான??” என்று அவர் அவனைக் கண்டு பெருமைப்பட,
அதற்கு பதில் ஏதும் கூறாமல் அதைத் தன்னுடைய டிரேட்மார்க் புன்னகையால் சமாளித்து விட, அவனைப் பற்றி நன்கு தெரிந்த அம்ரித் ஜோஷியும் அதை விடுத்து வேறு பேச்சிற்கு தாவ, கடைசியாக அவனின் கல்யாணத்தில் வந்து நின்றார் அவர்.
“அப்பறம் எப்போ மேன் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்க?? ரொம்ப லேட் பண்ணிராத!! வைஃப் வில் மேக் லைஃப் பெட்டர்.. சோ சீக்கிரமே உன்னோட சோல்மேட்டை கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணிக்கோ மேன்.. கங்கனா வந்த பின்னாடி தான் எனக்கு எல்லாமே கிடைச்சது.. லிட்டரலி ஷி இஸ் மை லைஃப்.. கங்கனா இல்லாம அம்ரித் இல்லவே இல்லை” என அவர் தன்னுடைய வாழ்க்கையை உதாரணமாகக் கூறினார்.
அம்ரித் – கங்கனா தம்பதியரின் ஆத்மார்த்தமான காதலை கண்கூடாகவே கண்டு அதை ரசித்திருந்த வினய்க்கு, சொல்லாமலே வந்தனாவின் முகம் மனக்கண் முன் தோன்ற, “நாமளும் இவங்களைப் போல… ம்ஹும்!! இவங்களை விட இன்னும் இன்னும் அதிகமா காதலிச்சு அழகான ஒரு வாழ்க்கை வாழனும் ஏஞ்சல்!!!” என மனதோடு தன்னவளிடம் கூறிக்கொண்டான்.
“என்ன மேன் நான் பேசிட்டு இருக்கேன் நீ டிரீம்ஸ்க்கு போய்ட்ட.. அப்போ உன் தேவதையை கண்டுபிடிச்சிட்ட போலயே..” என அவர் குறும்புடன் வினவ,
“எஸ் ஜி!!!” என எந்தவித அலட்டலுமில்லாமல் ஒத்துக்கொண்டான் வினய்.
அதில் பலமாக சிரித்தவர், “யூ ஆர் சான்ஸ்லெஸ் மேன்!!! எனிவே கங்கராட்ஸ்!!!” என அவனை மனதார வாழ்த்தினார்.
அதன் பின் சிறிது நேரம் அவரோடு உரையாடிவிட்டு அங்கிருந்து கிளம்பி மும்பையில் இருக்கும் தன்னுடைய ஸ்டூடியோவை வந்தடைந்தான்.
அதற்குள் பல்வேறு அழைப்புகள் வந்துவிட்டன அவன் விருது பெற்றதற்கு வாழ்த்துவதற்கு.
அனைத்தையும் இன்முகத்தோடு ஏற்று நன்றி தெரிவித்தவனின் உள்ளம் தன்னவளின் ஒற்றை வாழ்த்துக்காக மிகவும் ஏங்கியது. அதேநேரம் ‘எதேய்!! ஆம்பளை மேக்கப் மேனா??’ என முதன்முதலில் வந்தனா தன்னைக்குறித்து அறிந்து கொண்ட போது ஆச்சரியப்பட்டது அவன் கண் முன் விரிய, “ம்க்கும் அவளுக்கு ஃபர்ஸ்ட் இந்த ஃபீல்ட்ல ஜென்ஸ் இருக்கதே தெரியலை.. இதுல நான் அவார்ட் வாங்கினது அவளுக்குத் தெரிஞ்சு அவ விஷ் பண்ணனும்னு ஆசைப்படுறியே வினய் உனக்கே இது ஓவரா தெரியலை” என தனக்குத் தானே கூறி சிரித்துக் கொண்டான்.
தன்னவளைப் பற்றி எண்ணியதுமே அவன் மனம் எடையே இல்லாத காற்றைப் போல் லேசாகிப் பறப்பதை அவனால் உணர முடிந்தது.
“இதோட உன்னைப் பார்த்து பத்து நாள் ஆச்சு வதனா!! என்னால முடியலை!! உன்னை இப்போவே தூக்கிட்டு வந்து என் கைக்குள்ள பொத்தி வச்சுகனும்ன்னு என்னோட ஒவ்வொரு செல்லும் என்னை கொல்லுது!! என்னைப் புரியுதா உனக்கு?? ஓ மை காட்!!! ஐ அம் கோயிங் கிரேசி ஏஞ்சல்!! சீக்கிரமே வரேன் உன்னைத் தேடி!!” என எப்போதும் போல் தன் உணர்வுகளை மானசீகமாக அவளுடன் பகிர்ந்து கொண்டவன் உண்மையில் இந்த பத்து நாட்களுக்குள்ளே அவள் மீது பித்தாய் மாறியிருந்தான்.
தன் காதலை அவளோடு பகிர்ந்து கொண்டவனுக்கு அந்த இன்பத்தை முழுதாக அனுபவிக்க முடியாத அளவிற்கு அடுத்தடுத்த வேலைகள் வரிசை கட்டி நின்றது
இந்த பத்து நாளுமே நிம்மதியாக இரண்டு மணி நேரம் தூக்கம் கூட அவனுக்கு கிடைக்காத அளவிற்கு வேலைகள் நெட்டித் தள்ளிய போதும், அவளைப் பற்றி எண்ணாத நாளில்லை!!
அவனின் நாள் தொடங்குவதும், அடங்குவதும் வந்தனாவின் நினைவில் தான்..
சென்னையில் அவளைக் கடைசியாக பார்த்து விட்டு மும்பை கிளம்பியவனக்கு சற்று நேரத்திலே வந்தனாவைப் பற்றி அனைத்து விவரங்கள் அடங்கிய கோப்பு அவன் கைகளை அடைந்து விட்டது.
அதில் அவளுடைய தந்தையின் குணத்தை பற்றியும் மேலோட்டமாக குறிப்பிட்டிருந்தாலும் அதை அவன் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.
அவனின் மனமெல்லாம் வந்தனாவை பற்றியே வலம் வந்தது.
“ஹேய் ஏஞ்சல்!! கெமிஸ்ட்ரி படிக்கிறீங்களாமே!! அதை மட்டுமே படிக்காம நமக்குள்ளயும் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆக கொஞ்சம் என்னையும் கன்சிடர் பண்ணுடாமா..” என்று அவளைக் கொஞ்சிக் கொள்வான் மனதோடு.
அவனின் எண்ணங்கள் அனைத்திற்கும் வண்ணங்கள் தீட்டுவதாய் அமைந்ததிருந்தது அவன் வந்தனாவின் மீது கொண்ட காதல்.
குறுகிய காலத்தில் ஒருவர் மீது இந்த அளவிற்கு பித்தாகிப் போவோமா?? என சில நேரம் அவனுக்கே ஐயம் எழும் அளவிற்கு வந்தனாவின் எண்ணங்கள் அவனை சுழற்றி அடித்தது என்று சொன்னால் மிகையல்ல.
இதோடு அவன் மும்பை வந்து பத்து நாட்கள் நகர்ந்து விட, இதற்கு மேலும் அவளைக் காணாமல் இருக்க முடியாது என்றுணர்ந்து அன்றே திருச்சி செல்வதற்கான ஏற்பாட்டை மேற்கொண்டான்.
இதுவரை வேலைக்கு நடுவே எங்கேயும் செல்லாதவன் இப்போது விருது கிடைத்திருக்கும் சமயம் பெரிய பெரிய திரைத்துறை ஜாம்பவான்களை சந்திக்கும் வாய்ப்பை ஒத்திவைத்து விட்டு இப்படி திருச்சி செல்வதற்கு ஏற்பாடு செய்வது அவனின் உதவியாளரான ஸ்டல்லாவிற்கே ஆச்சரியமாக இருந்தது.
ஆனால் இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் தன்னவளைக் காணப் போகிறோம் எனும் நினைப்பே அவன் மனதில் உற்சாக ஊற்றெடுக்கச் செய்ய, வண்ண வண்ண கனவுகளோடு திருச்சி விமான நிலையத்தில் கால் பதித்தான்…
****
“அடியே கழுதை!! நேரம் என்னாகுது இன்னும் என்ன மோட்டுவலையை பாத்துட்டே உட்காந்துட்டு இருக்க? பொங்கல் வைக்க நேரம் ஆச்சு.. சீக்கிரம் போய் முகத்தை கழுவிட்டு வேற உடுப்பை போட்டுகிட்டு வந்து சேரு!! நான் போய் அபிஷேகத்துக்கு எல்லாம் எடுத்து வைக்கிறேன்” என்று வந்தனாவிடம் கூறிவிட்டு தன் வேலைகளை கவனிக்கச் சென்றார் இளவரசி.
அவர் கூறிவிட்டு சென்றது செவியில் நுழைந்தாலும் சிந்தையில் ஏற்றுக்கொள்ளாமல் ஏதோவொரு சிந்தனையில் தான் அமர்ந்திருந்தாள் வந்தனா.
இப்போது மட்டுமல்ல சென்னையில் இருந்து என்று கிளம்பி வந்தாளோ அப்போதிருந்தே இது போல் தனிமையில் தன்னை தொலைத்தவள் போல் இலக்கில்லா பார்வையுடன் அமர்ந்திருப்பாள்.
திருவிழாவின் வேலைகள் இளவரசியை நெட்டி முறிப்பதால் வந்தனாவின் மாற்றங்கள் கண்ணில் பட்டாலும் கருத்தில் பதியவில்லை. நாட்டரசனோ கோவில் வேலைகளோடு வயலில் அறுவடை நேரமும் சேர்ந்து கொண்டதால் வீடு தங்குவதே அரிதாகிப் போக, அவர்களின் செல்லப் புதல்வியின் மனப் போராட்டம் அவளின் பெற்றோரை எட்டாமலே போனது.
வினய்யின் காதலை அவன் வாய் வார்த்தையாக அறிந்து கொண்ட நொடி அவன் மேல் தனக்கு ஈர்ப்பையும் தாண்டி ஏதோ உள்ளது என வந்தனா உணர்ந்து கொண்டு அவன் காதலில் முகிழ்ந்து முத்துக் குளித்ததெல்லாம் சற்று நேரம் மட்டுமே, அதன் பின்பே நிதர்சனம் அவள் நெற்றிப் பொட்டில் அரைவதைப் போல் இளவரசியின் அழைப்பு வந்து, அவளை அடுத்த நொடியே மீளாத் துயரில் தள்ளியது.
புதிதாய் முளை விடத் தொடங்கிய நேசம், வளர்ந்து வாசம் வீசும் முன்னே எரிந்து கருகிப் போய் விட்டது வந்தனாவின் வாழ்வில்.
வினய்யின் காதல் அவள் மனதில் மகிழ்ச்சி மத்தாப்புக்களை பூக்கச் செய்தாலும், நாட்டரசன் மேல் கொண்ட பாசத்தையும் தாண்டிய பயம் அவளை அந்த காதலையும் அது தந்த சந்தோஷத்தையும் மனதிற்குள்ளேயே போட்டு புதைக்க வைத்தது.
என்னதான் அந்த காதல் தனக்கு வேண்டாம் இது சரிவராது என மூளை சொன்னாலும், மனம் அதன் பேச்சைக் கேட்காமல் வினய்யை பற்றி மட்டுமே எண்ணி எண்ணி மேலும் தன்னை வருத்திக் கொண்டது.
அவன் காதலை உரைத்த நொடி அவன் கண்களில் வந்து போன பாவனை இப்போதும் அவள் மனதில் பனியில் நனைந்த ஆயிரம் கோடி மலர்களைத் தூவியதைப் போல் அவ்வளவு இதம் தந்தது.
அவன் கண்களில் பொய் இல்லை.. அவன் காதலிலும் பொய் இல்லை.. ஆனால் அவனின் அந்தக் காதலை அனுபவிக்கும் பாக்கியம் தனக்கு இல்லவே இல்லை என்று நினைத்தே தன்னை மேலும் மேலும் வருத்திக் கொண்டாள் வந்தனா.
அவன் வேண்டாம் என்று அவள் மனம் உறுதியாக முடிவெடுத்து விட்டாலும், அவனைப் பற்றி எண்ணுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை.
முதன்முறை அவனை சந்தித்த பொழுது, ‘ஆம்பளை மேக்கப் மேனா? ‘ என அவனைப் பற்றி எதுவும் தெரியாது ஆச்சரியப்பட்ட வந்தனாவிற்கு இப்போது இணையத்தின் உதவியால் வினய்யின் பூர்விகம் முதல் அடுத்து அவன் யார் படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறான் என்பது வரை அத்துப்பிடி.
தன்னுடைய பொழுதுகள் மொத்தமும் அவனைப் பற்றி தேடி தெரிந்து கொள்வதிலும், இணையத்தில் கொட்டிக் கிடக்கும் அவனுடைய புகைப்படத்தை பார்த்து ரசிப்பத்திலுமே கழித்தாள்.
இதோ இன்று கூட அவனுக்கு தேசிய விருது கிடைத்த செய்தியைக் கண்டதும் அவள் மனம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது.
அவனின் திறமையும் வேலையில் அவன் காட்டும் தீர்க்கமும் தீவிரமும் வந்தனா அருகில் இருந்தே பார்த்தபடியால் அவனின் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைத்த சந்தோஷத்தில் இருந்தாள்.
மேலும் இந்த விருது வினய்க்கு கிடைத்ததில் அவன் எவ்வளவு மகிழ்வான் என நினைத்து அவன் மகிழ்ச்சியில் அவள் அகமகிழ்ந்து போனாள்.
ஆனால் அடுத்த நொடியே இப்படி ஒரு தருணத்தில் அவனுக்கு ஒரு வாழ்த்து கூட சொல்ல முடியாத இடத்தில் நிற்கும் தன் நிலையை எண்ணி மீண்டும் நத்தையாய் அவள் மனம் சுருண்டு கொண்டது.
இப்படியாக அவள் எண்ணங்கள் முழுவதும் அவள் அறியாமலே வினய் என்ற ஒருவன் மட்டுமே ஆக்கிரமித்திருந்தான்.
அவன் வேண்டாம் அவன் தந்த காதல் மட்டும் போதும் என்று நினைத்து நிஜத்தில் அவனை மறக்க எண்ணியவள், நினைவில் அவனுடன் மட்டுமே தன் பொழுதுகள் கழித்தாள்.
இப்படியாக அவள் எப்பொழுதும் போல் அவள் சிந்தனையில் மூழ்கியிருந்த நேரம் அவள் முதுகில் சுரீரென்று ஓர் அடி விழுந்தது.
“அம்மாஆஆ!!!” என வலியில் கத்தியவள் முதுகை தேய்த்துக் கொண்டே திரும்பிப் பார்க்க, அங்கே கனல் கக்கும் விழிகளோடு இளவரசி தான் மகளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தார்.
“எதுக்கு மா அடிச்ச இப்போ என்னை?” என்ற வந்தனா சற்று சலிப்புடன் தன் அன்னையிடம் கேட்க,
“உன்னை கிளம்ப சொல்லி அரை மணி நேரம் ஆகப்போகுது.. பொங்கல் வைக்க அழைக்க மேளம் செவ்வந்தி அக்கா வீட்டுக்கிட்ட வந்திருச்சு.. இன்னும் விட்டத்தை பார்த்துட்டே உட்காந்திருந்தா உன்னை அடிக்காம கொஞ்சுவாங்களா?? சென்னையில இருந்து வந்ததுல இருந்தே நீ சரியில்லை.. உன்னை வந்து பேசிக்கிறேன் இப்போ நேரம் இல்லை.. இன்னுமும் விட்டத்தை வெறிக்காம மரியாதையா கிளம்பி சீக்கிரம் கோவிலுக்கு வா.. இல்லை உங்க அப்பாருகிட்ட சொல்லிருவேன் பார்த்துக்க” என மிரட்டியவர் அதற்குள் மேளச்சத்தம் அருகில் கேட்கவே அங்கிருந்து கிளம்பியிருந்தார்.
இப்படி அனைவருக்கும் தன் மாற்றம் தெரியும்படியாகவா நடந்து கொள்வோம் என தன்னை நினைத்தே நொந்து கொண்ட வந்தனா இனிமேலாவது தன் கவலையும் கை சேரா காதலையும் முடிந்தவரை வெளியில் தெரியாதவாறு மறைத்துக்கொண்டு எப்போதும் போல் இயல்பாக நடக்க வேண்டும் என்ற முடிவுடன் கோவிலுக்கு கிளம்பத் தயாரானாள்.
வருடத்தில் ஒரு முறை வருகின்ற திருவிழா இது. உற்றார் உறவினர் அனைவரும் வருடம் தவறாமல் முத்தாலம்மனை தரிசிக்க இந்த திருவிழாவின் போது ஒன்று கூடிவிடுவர். அதுவும் இந்த திருவிழாவிற்கு சந்தோஷ், சங்கீதா இருவருமே ஒரு வாரம் முன்பே எப்போதும் இங்கு வந்து விட, அச்சமயத்தில் வந்தனாவை கைகளில் பிடிக்க முடியாது. நாட்டரசனும் கோவில் வேலைகளில் வீட்டிற்க்கு வருவதே அறிதென்பதால் மூவரும் சேர்ந்து ஒரு கலக்கு கலக்கிவிடுவர்.
எப்போதும் அவள் ஆவலோடு எதிர்பார்க்கும் திருவிழா கூட இப்போது வந்தனாவின் மனநிலையை கொஞ்சமும் மாற்றவில்லை. சந்தோஷ் சங்கீதாவும் திருமணத்திற்கு காலம் குறைவாக இருப்பதால் வேலை மும்முரத்தில் ஒரு நாள் மட்டும் வந்து பத்திரிக்கை வைத்து அம்மனை தரிசித்துவிட்டு கிளம்பிவிட்டனர்.
வந்தனா பச்சை வண்ண ஜரிகையிட்ட பட்டு சுடிதாரில் கிளம்பி கோவிலுக்கு வந்த சமயம் இளவரசி பொங்கல் வைக்க தயார் செய்து கொண்டிருந்தார். அவர் அழைக்கும் முன்னே அவளாக சென்று அவருக்கு உதவ ஆரம்பிக்க, சற்று நேரத்தில் பொங்கலும் அழகாக கிழக்கு திசையில் பொங்கி வழிய, இளவரசிக்கு மனம் நிம்மதி அடைந்தது.
அதன் பின் ஊர் மக்கள் அனைவரின் பொங்கலையும் அம்மனுக்கு படைத்து ஒவ்வொருத்தருக்காக அபிஷேகம் செய்து முடிக்கவே நேரம் மதியத்தை தொட்டுவிட்டது.
கடவுளை வணங்கிவிட்டு பரிபூரண மனதுடன் வீட்டிற்கு வந்த இளவரசி, “பொங்கல் நல்லா பொங்கிருச்சுல தனு.. பயந்துட்டே இருந்தேன் வீட்டுல ஒரு நல்ல காரியம் நடக்கப்போவுது அந்த முத்தாலம்மன் நல்லபடியா கல்யாணத்தை முடிச்சுக் கொடுக்கனுமேன்னு.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. சங்கீ கல்யாணம் நல்லபடியா நடந்து அவ சந்தோஷமா இருப்பா பாரேன்” என்றார் உள்ளார்ந்த பூரிப்புடன்.
“மனசுக்கு பிடிச்சவங்களை கல்யாணம் பண்ண போறா அவ கண்டிப்பா சந்தோஷமாத் தான் இருப்பா” என கூறிய வந்தனாவின் குரலில் என்ன முயன்றும் ஏக்கத்தை மறைக்க முடியவில்லை.
அதை உணராத இளவரசியோ, “ஆமா ஆமா.. நான் கூட அமைச்சர் பையன் எப்படி இருப்பானோன்னு பயந்துட்டே இருந்தேன் டி.. ஆனா அது தங்கமான புள்ளையா இருக்குது .. சங்கீ விருப்பத்துக்கு மறுபேச்சு பேச மாட்டேங்குறாரே.. கடவுள் புண்ணியத்துல உனக்கும் அப்படி ஒரு மாப்பிள்ளை அமைஞ்சுட்டா அது போதும் எனக்கு..” என்றவர் அப்போது மகள் முகம் ஒரு நொடி வேதனையில் கசங்கி பின் இயல்பானதை கவனியாமல் தொடர்ந்து, “சரி நீ ஏதோ பிராஜெக்ட் விஷயமா காலேஜுக்கு போனும்னு சொன்னியே நேத்து.. நான் அப்போவே எல்லாம் செஞ்சுட்டேன்.. சாதம் மட்டும் சூடா வடிச்சுத் தரேன்.. சாப்பிட்டுக் கிளம்பு” என்றவர் சமையலறைக்குள் நுழைந்தார்.
சற்று நேரத்திலே சமையலும் தயாராகி விட, வந்தனாவும் உண்டுவிட்டு கல்லூரிக்கு கிளம்பத் தயாரானாள்.
“சுடிதார் தான டி போட்டிருக்க.. அதை எதுக்கு மாத்த போற?? இதையே போட்டுட்டு போய்ட்டு வா” என இளவரசி கூற,
வந்தனாவும் முகத்தை மட்டும் கழுவி சிகப்பு வர்ண வட்ட பொட்டு மட்டும் வைத்து வேறெந்த ஒப்பணைகளும் இல்லாமல் கிளம்பி வர, இளவரசி அவள் தலையில் சூடியிருந்த சற்றே வாடியிருந்த முல்லைப் பூவை எடுத்து விட்டு நெருக்கமாக தொடுத்திருந்த மல்லிச்சரத்தை வைத்து விட்டவர் அவளுக்கு திருஷ்டி கழித்தார்.
“இப்போதான் அழகா இருக்கு.. சரி அப்பாகிட்ட நான் சொல்லிட்டேன்.. வேலை முடிச்சிட்டு கால் பண்ணு.. அப்பா முடிஞ்சா கூட்டிட்டு வரேன்னு சொன்னாரு.. பார்த்து பத்திரமா போய்ட்டு வா.. பஸ்க்கு நேரம் ஆச்சு” என்று அவளை வழியனுப்பி வைத்து விட்டு வந்தார்.
வெளியே சென்று விட்டு வந்தாலாவது மனம் சற்று சமன்படும் என்று நினைத்த வந்தனாவும் பக்கத்து தெருவில் இருக்கும் தன்னுடைய கல்லூரித் தோழியான மலருடன் தி
ருச்சியில் அமைந்திருக்கும் தன் கல்லூரிக்குக் கிளம்பினாள் அங்கு தனக்காக காத்திருக்கும் அதிர்ச்சியை அறியாமல்.
error: Content is protected !!