Skip to content
Post Views: 10,630
அத்தியாயம் 10
நாளை காலை நிச்சயதார்த்தம். அதில் துளியும் மனம் ஒட்டவில்லை விஜயலக்ஷ்மிக்கு.
Advertisement
ப்ரணித்தா பேசி சென்றதில் இருந்து அவளைப் பற்றிய சிந்தனை மட்டும் தான் மனதை பாதித்து இருந்தது.
அனன்யாவிடம் சொல்லிவிடலாமா என்றால் நிச்சயம் ப்ரணித்தாவிற்கு சாதகமான பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.
Advertisement
Advertisement
தன்னை விரும்பும் உறவுகள் தன்னைப் பற்றி தானே நினைக்கும். ப்ரணித்தா கூறியதை போல அவளைப் பற்றி நினைக்கவோ கவலை கொள்ளவோ உறவுகள் இல்லையே! இப்படி தான் நினைத்தாள் விஜயலக்ஷ்மி.
இந்த திருமணம் நடக்காவிட்டால் கூட இவர்கள் அனைவரும் என்னுடன் தானே இருப்பர்? ஆனால் அர்ஜுன் ப்ரணித்தா திருமணம் நடந்தால் அவளுக்கு அனைவரும் கிடைப்பார்களே?
Advertisement
வேறு மாப்பிள்ளை பார்த்து அவளுக்கு திருமணமே செய்து வைத்தாலும் அவள் விரும்பும் ஒருவனை அவள் அடைவது தானே அவளின் தனிமையையும் மன அழுத்தத்தையும் போக்கும்?
இப்படி பல எண்ணங்களுக்கு நடுவே அர்ஜுனின் முகம் கண்களுக்குள். காரில் சாய்ந்து நின்று விழி அகலாது தன்னையே பார்த்து நின்றவனை நினைத்து மனம் கலங்கியது.
அந்த நினைவை எல்லாம் விரட்டிட தான் முயன்றாள். பெரியவர்கள் பார்த்து நடத்தும் திருமணம் தானே? பிடித்தம் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். தன் முடிவால் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வரும் என்றால் தான் அதை செய்வது தானே நல்லது? என்று நினைத்தவள் என்ன செய்துவிட என சிந்திக்க ஆரம்பித்தாள்.
நாளை வரை காத்திருந்து அனைவரையும் ஏமாற்ற வேண்டாம் இன்றே வீட்டில் பேசி விடலாம் என விஜயலக்ஷ்மி நினைக்கும் நேரம் அவள் அலைபேசி அழைத்தது.
புதிய எண்ணைக் கண்டதும் புருவம் சுருக்கியவள் யார் என சிந்தித்தபடி அழைப்பை ஏற்க,
“ஹெலோ விஜி? நான் ப்ரணித்தா!” என்றதும்,
“ஹான்! ப்ரணி! சொல்லுங்க!”
“இல்ல நீ எதுவும் தப்பா நினைச்சுக்கல தானே?” என்றாள் பாவம்போலவே!
“இல்ல ப்ரணி! ஆனா..” என்றவள் பேச்சில் அவள் குழப்பம் தெரிந்து சிரித்துக் கொண்டாள் ப்ரணித்தா.
“சாரி ப்ரணி! தேவை இல்லாம உங்க லைஃப்ல என்னால கஷ்டம்!”
“அதெல்லாம் நீ நினைக்க வேண்டாம். நாளைக்கு தானே எங்கேஜ்மென்ட். சந்தோசமா இரு.. நான் கண்டிப்பா வர்றேன்” ப்ரணித்தா சொல்ல,
“இல்ல ப்ரணி!” என்று அவள் அழுத்தமாய் சொல்ல, குரூர புன்னகை ப்ரணித்தாவிடம்.
“எனக்கென்ன? நீ சொன்ன மாதிரி நான் லக்கி ஒன்!” என்று விஜயலக்ஷ்மி கூறும் பொழுதே அர்ஜுன் புன்னகை அவள் மனக்கண்ணில் தோன்ற, சட்டென கண்ணீர் கண்களை நிறைக்கவும் செய்ய, நொடியில் சுதாரித்து எச்சிலை விழுங்கி தன்னை சமாளித்தாள் விஜயலக்ஷ்மி.
“என்னோட வாழ்க்கை அடுத்தடுத்து மூவ்ஆன் ஆகிடும். ஆனா உனக்கு ஒரு நல்ல லைஃப் கிடைக்கணுமே!” என்று விஜயலக்ஷ்மி சொல்லவும்,
“இனிமேல் என்ன இருக்கு என் லைஃப்ல?” என்று ப்ரணித்தா.
“இனி தான் இருக்கு உனக்கான நல்ல லைஃப்! நான் இப்பவே அர்ஜுன்கிட்ட பேசுறேன்” விஜயலக்ஷ்மி சொல்ல பதறிய ப்ரணித்தா,
“நோ நோ நோ! நோ விஜி!” என்றாள் வேகமாய்.
“இல்ல ப்ரணி! நாளைக்கு நிச்சயதார்த்தம். நாளைக்கு நான் சொன்னா நிச்சயமா வீட்டுல எல்லாருக்கும் கஷ்டமாகிடும். இன்னைக்கே பேசி முடிக்குறது தான் சரி. இப்பவே லேட். ரெண்டு நாளா நான் ரொம்ப யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். யூ டிஸர்வ்டு டு அர்ஜுன்” என்றால் விஜயலக்ஷ்மியும்.
‘ஐ க்நொவ்! ஐ டிஸர்வ் ஹிம்!’ தனக்குள் சொல்லிக் கொண்ட ப்ரணித்தா,
“ஹ்ம்! நீ சொல்லிட்டா மட்டும்?” என்று விரக்தியாய் புன்னகைப்பதை போல காட்ட,
“அப்டி சொல்லாத ப்ரணி! நான் சொன்னா அர்ஜுன் புரிஞ்சிக்க வாய்ப்பிருக்கு இல்ல?” என்றாள் விஜயலக்ஷ்மி.
“இல்ல! அர்ஜுன் மாமாக்கு குடும்பம் ரொம்ப முக்கியம். உனக்காக இல்லைனாலும் உன் அண்ணி அனன்யாக்காக தான் யோசிப்பாங்க. அந்த வீட்டுல பொண்ணு குடுத்துட்டு அவங்க எப்படி மறுக்க முடியும்?” என்ற ப்ரணித்தா,
“மாமாக்கும் என்னை பிடிக்கும்.. நான் சொன்னா கண்டிப்பா ஏத்துப்பாங்க தான். அந்த நம்பிக்கைல தான் நானும் இருந்தேன். அவங்க அம்மாவோட இப்போ உன் வீட்டுல உன் அண்ணா பேச்சையும் மீற முடியாம தான் அவங்க உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிருப்பாங்க!” ப்ரணித்தா கூறவும் விஜயலக்ஷ்மிக்கு அந்த நிமிடம் அர்ஜுனின் கேள்வி தான் நியாபகம் வந்தது.
‘உன் விருப்பம் ரொம்ப முக்கியம்!’ அன்று வேறு அர்த்தம் கொடுக்க, இன்று அவன் மறுக்க முடியாமல் தன்னை மறுக்க சொல்லி கூறி இருப்பானோ என்றும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
“பேமிலின்னு வந்துட்டா மாமாக்கு வேற எதுவும் முக்கியம் இல்ல. எனக்கு மாமாவை நல்லா தெரியும்!” என இன்னுமாய் கூறினாள் ப்ரணித்தா.
“இப்போ நான் என்ன பண்றது?” குழம்பிக் கேட்டவள் கேள்வியில் தான் ப்ரணித்தா கூறினாள் தன் வழியை.
“இன்னைக்கு நீ யார்கிட்ட என்ன சொன்னாலும் இந்த நிச்சயம் நடக்கும் விஜி!” என்றாள் ப்ரணித்தா.
“வேண்டாம் ப்ரணி! எனக்கு அதுல இஷ்டம் இல்ல. நீ சந்தோசமா இருக்கனும். உனக்கான பேமிலியா அர்ஜுன், கயல் அத்தை எப்பவும் இருப்பாங்க. அவங்களை மாதிரி யாராலயும் உன்னை பார்த்துக்க முடியாது. அவ்வளவு நல்ல மனுஷங்க!” என்றாள் மனம் கனக்க.
“நீ இவ்வளவு சொல்றதால நான் வேணா ஒன்னு சொல்றேன்!” ப்ரணித்தா கூற,
“சொல்லு ப்ரணி!” என்றாள் விஜயலக்ஷ்மி.
“நீ நாளைக்கு எல்லார் முன்னாடியும் சொல்றது தான் பெட்டர்!” என்றதும் விஜயலக்ஷ்மி அதிர,
“அதுவும் எனக்காக பேசினா எல்லாம் யாரும் கேட்கமாட்டாங்க. உனக்காக நீ பேசினதா இருக்கனும்!” என்றாள்.
“ப்ரணி!” என்றவளுக்கு இது பிடிக்கவில்லை.
“நோ வே! அது எப்படி? அம்மா அப்பா அண்ணா எல்லாரும் பாவம். அவங்க கஷ்டப்படுவாங்க!”
“அப்போ நான் கஷ்டப்பட்டு தான் ஆகணும் விஜி! விடு! எனக்கென்ன? நான் இப்படியே இருந்துப்பேன்!” ப்ரணித்தா சொல்ல, அதையும் தாங்க முடியவில்லை விஜயலக்ஷ்மிக்கு.
அர்ஜுன் ப்ரணித்தாவிடம் சொல்லிய அந்த வார்த்தை தான் ப்ரணித்தா பற்றிக் கொண்டது. விஜயலக்ஷ்மியிடம் சம்மதம் கேட்கவில்லை தானே அவள் வீட்டில். அவர்கள் விருப்பத்தில் நடக்கிறது தானே? அதைக் கொண்டு தான் இவள் நாடகத்தை அரங்கேற்ற காத்திருந்தாள்.
பயம் என்றதை விட தன் குடும்பத்தினரோடு அர்ஜுன் குடும்பத்தினர் இதை எப்படி தாங்குவார்கள் என கவலையும் வருத்தமும் இருந்தாலும் காலப்போக்கில் அனைத்தும் மாறிவிடுமே எனும் எண்ணமும் தோன்ற, தன்னை தெளிவாக்கிக் கொள்ள முயன்றாள்.
யாருமில்லா ஒரு பெண்ணின் கனவையும் வாழ்க்கையையும் அழித்து தான் ஒரு இன்பமான வாழ்க்கைக்குள் செல்வதை அவள் விரும்பவே இல்லை.
ப்ரணித்தா தான் சொல்ல வந்ததை கூறிவிட்டு வைத்துவிட, மனம் அதை ஒப்பவில்லை என்றதும் மீண்டுமாய் அனன்யா அல்லது அர்ஜுன் என யாரிடமாவது பேசி விடலாமா என அத்தனை யோசித்தாள்.
ஆனால் ஒரு வார்த்தை பேசினாலும் அதை அவர்கள் புரிந்து கொள்ள வாய்ப்பில்லை என்றால் இந்த நிச்சயத்தை நடத்தியே தீருவார்கள் தானே என்று தோன்ற மருகிப் போனால் அன்றைய நாள் முழுதும்.
“என்ன விஜி? ரெண்டு நாளா நீ சரியே இல்ல! என்னாச்சு?” விவேக் கேட்க,
“வேறென்ன? நாளைக்கு நிச்சயம். அடுத்து கல்யாணம். இப்படி சீராட்ட அண்ணன் வீட்டுல இருக்க முடியாதே! வேற வீட்டுக்கு போணுமேன்னு தான் கவலை. இல்ல விஜி?” என்று அதை கிண்டலாய் மாற்றிவிட்டாள் அனன்யா.
“ஹப்பாடா! நாளைலேர்ந்து இது என் வீடு! நான் மட்டும் தான். ஜாலி ஜாலி!” என அனன்யா கூற,
“ஹே வாலு!” என மனைவி தலையில் கொட்டி இருந்தான் விவேக்.
“அம்மா வீட்டுல இருந்து போணுமேன்னு எல்லாப் பொண்ணுங்களுக்கும் இருக்குற கஷ்டம் தான் விஜி உனக்கும். நானெல்லாம் எங்கம்மாவை கட்டிக்கிட்டு உன் அண்ணன் கூட வரவே மாட்டேன்னு அழுதேன். ஆனா இழுத்து கூட்டிட்டு வந்துட்டாரு உன் அண்ணே. இப்போ பழகிடுச்சு. இது எல்லாருக்கும் நடக்குறது தான்!” என தானாய் விளக்கம் கொடுத்தாள் அனன்யா.
அன்று மட்டும் அவ்வளவு செல்லமாய் தன்னைப் பார்த்து பார்த்து பூரித்து மகிழ்ச்சி கொண்டனர் கலையரசியும் சந்தானமும்.
கூடவே கயல்விழி, அர்ஜுன் என அனைவரும் அவள் மண்டைக்குள் வலம் வர, தலையை உலுக்கிக் கொண்டவள் கண்களுக்குள் இறுதியாய் வந்து நின்றது என்னவோ கண்களில் ஜீவனின்றி தனியே நிற்கும் உருவமாய் ப்ரணித்தா தான்.
உறக்கமே இன்றி விடிந்திருந்த அடுத்தநாளை உற்சாகத்தோடு வரவேற்று மாப்பிள்ளையாய் அந்த நாளை துவங்கி இருந்தான் அர்ஜுன்.
இன்று அவளைப் பார்த்ததுமே நிச்சய தினத்திலேயே தன் மனதை அவளிடம் கூறிவிட வேண்டும். அவள் கண்கள் விரிந்து தன்னை ஆச்சர்யமாய் பார்த்து விழித்து மகிழ்வதைக் காண வேண்டும் என நெஞ்சில் பலபல எண்ணங்கள் எழ, நினைக்கும் பொழுதே கொள்ளையாய் புன்னகை அர்ஜுனிடம்.
மனதில் நினைத்தது தானாய் கைகூடி வருவதில் தான் மனம் நிறைந்து அத்தனை குதூகலம் அர்ஜுனிற்கு.
அதற்காக தன் காதலை மறைக்கும் எண்ணம் எல்லாம் இல்லை. முதலில் தன்னவளுக்கு கூறிவிட ஒரு ஆசை. அடுத்ததாய் தன் அன்னையிடம்.
அடுத்து திருமணம் வரை தன்னவளோடு சில காதல் காலங்கள். அது பேச்சோடு மட்டும் நிற்குமா? நினைக்கும் பொழுதே முகம் சிவக்கும் அளவுக்கு ஒரு வெட்கம் ஆண் அவனுக்கு.
“கிளம்பிட்டியா அர்ஜுன்? தீபக் வந்துட்டான்!” அன்னை குரல் கொடுக்க, கண்ணாடி முன் நின்றவன் தலை கோதி சிரித்தபடி அவர்களிடம் வந்தான்.
“ம்மா!” என்று அன்னை காலில் விழுந்து எழ, அவன் முகம் பார்த்தே தன் மனதை நிறைத்துக் கொண்டார் கயல்விழி.
“ம்மா! நிஜமா பொண்ணு பார்த்து பேசினது நீங்களும் அனு அக்காவும் மட்டும் தானா?” இன்னும் சந்தேகமாய் தீபக் கேட்க,
“டேய்!” என்று அவன் முதுகில் ஒன்று வைத்தான் அர்ஜுன்.
“உன்னை நம்பவே மாட்டேன் டா. இவன் தனி ட்ராக் ஓட்டிருக்கான் ம்மா! நான் அடிச்சு சொல்றேன்!” தீபக் சொல்ல,
“வாயை மூடிட்டு வா டா!” என இழுத்து தன்னோடு அழைத்துக் கொண்டான் அர்ஜுன்.
“அம்மா வர்ல?” அர்ஜுன் தீபக்கிடம் கேட்க,
“கல்யாணத்துக்கு வருவாங்க டா. தப்பா நினைச்சுக்காத. அவங்க ஹெல்த் கண்டிஷன் உனக்கு தெரியுமே!” என்றான் தீபக்.
“பரவால்ல டா. மேரேஜ்க்கே வரட்டும்” என்றுவிட்டான் அர்ஜுனும்.
ஒரு மணி நேரத்துக்கு முன்பே சொந்தங்களோடு விஜயலக்ஷ்மியின் வீடு வந்து சேர்ந்தான் அர்ஜுன் துணை மாப்பிள்ளையாய் தீபக்குடன்.
விவேக் கூறியது தான் அதுவும். நிச்சயத்துக்கு ஒரு மணி நேரம் முன்பே வந்துவிட சொல்லி இருந்தான். எதற்கு என அர்ஜுன் கயல்விழி யாரும் கேட்டுக் கொள்ளவில்லை.
விஜயலக்ஷ்மி அர்ஜுன் இருவருக்கும் அன்றே தனி போட்டோஷூட் ஏற்பாடு செய்திருந்தான் விவேக். அனைவரும் இருக்கும் நேரம் என்றால் சரியாய் இராதே! அதனால் தான் முன்பே அதை முடித்துவிடலாம் என அவன் நினைத்தது.
இன்டோர் போட்டோ ஷூட் இன்று. அவுட்டோர் அவர்களுடைய விருப்பம் என ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்திருந்தான் விவேக்.
கேட்டை தாண்டி கார் உள்ளே வந்து நிற்க, அவ்வளவாய் ஆட்கள் இல்லை என்றாலும் குறைந்தது இருபது பேராவது சொந்தங்கள் என இருந்தனர் அங்கே.
“என்ன டா சைலண்டா இருக்கு?” என்று தீபக் கேட்க, அர்ஜுனும் கேள்வியாய் பார்த்தபடி தான் காரில் இருந்து இறங்கி இருந்தான் அவன் உறவுகளுடன்.
தோட்டத்தில் ஆங்காங்கே ஆட்கள் நிற்க, சுற்றிலும் பார்க்கும் பொழுது தான் அர்ஜுன் கவனித்தது. கலையரசி, சந்தானம், அனன்யா, விவேக் அனைவருமே கிளம்பித் தயாராய் நின்றிருந்தாலும் முகத்தினில் ஏதோ கலவரம். கூடவே அவர்கள் அருகே எந்த வித அலங்காரமும் இன்றி விஜயலக்ஷ்மி.
பெரியவர்கள் முகம் கசங்கி இருக்க, தாள முடியாத வேதனையை வெளிப்படுத்தியது அனன்யாவின் கண்கள்.
அனைத்தையும் சமாளிக்கும் விதமாய் விவேக் ஓடி வந்து அர்ஜுன் முன் நின்றவன்,
“வா அர்ஜுன்! ம்மா! ஆரத்தி எடுத்துட்டு வர்ல? என்னம்மா நீங்க?” என்றவன்,
“சரி டைம் இருக்கே! நீ வா அங்க ரூம்ல இருக்கலாம்!” என்று சொல்லிக் கொண்டு இருக்க,
“ண்ணா!” என்ற விஜயலக்ஷ்மி சத்தத்தில் திரும்பிப் பார்த்த விவேக் பார்வையில் அவள் மனம் அத்தனை துடித்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை அவள்.
“எதாவது ப்ரோப்லேமா மாமா?” அர்ஜுன் கேட்க,
“அனு ஏன் அப்படி நிக்குறா?” என மகளை கவனித்து கேட்டார் கயல்விழி.
“நீங்க உள்ள வாங்க!” என்ற விவேக்,
“அனு!” என்று அழைத்து கண்ணைக் காட்ட, அத்தை மாமாவை அழைத்தவள் விஜயலக்ஷ்மி புறம் திரும்பாமலேயே உள்ளே சென்றாள் அவர்களோடு.
மனம் துவண்டு போனாலும் இனிதானே தான் பேசியாக வேண்டும். இவ்வளவு தூரம் வந்தபின் பேசாமல் இருந்து விட முடியாதே என அவர்களோடே சென்றாள் விஜயலக்ஷ்மி.
ஒரு மணி நேரம் முன்பு “விஜி! ட்ரெஸ் மாத்திக்கோ! செக் பண்ணிட்டு ஹேர்ஸ்டைல் பண்ண இப்ப வந்திடுவாங்க. மேக்ஓவர் சீக்கிரம் முடிக்கணும். உன் அண்ணா அர்ஜுனை சீக்கிரமே வர சொல்லிருக்காங்க!” என்ற அனன்யா,
“ஒரு சீக்ரெட் சொல்லவா? எங்கேஜ்மென்ட் முன்னாடியே சின்னதா போட்டோஷூட் இருக்கு உங்க ரெண்டு பேருக்கும். யாருக்கும் தெரியாது. நான் சொன்னேன்னு உன் அண்ணாகிட்ட சொல்லிடாத!” என அனன்யா சொல்லி செல்ல அப்படியே அமர்ந்துவிட்டாள் விஜயலக்ஷ்மி.
ஒரு மணி நேரம் சென்றும் அப்படி அமர்ந்தவளுக்கு நேரம்ஆக ஆக இதயம் வெடிக்கும் அளவுக்கு அழுத்தம் கூடியது.
அர்ஜுன் வந்துவிட்டால்? சட்டென்று படபடப்பு. அதன்பின் பேசிவிட முடியுமா என பயம் வரவும் இப்பொழுதே சொல்லி விடலாம் என அப்படியே எழுந்து வெளியே வர, அனைவரும் தோட்டத்தில் இருப்பதைக் கண்டவள் அங்கே சென்றாள்.
“விஜி! இவ்வளவு நேரம் என்ன பண்ணின? அனு! என்ன இது? உன்னை என்ன சொன்னேன்?” என்றார் கலையரசி மருமகள் பக்கம் திரும்பி.
“அய்யோ அத்தை! நான் சொல்லிட்டு தான் வந்தேன்!” என்ற அனன்யா,
“ஏன் விஜி! சிம்பிள் சாரீ தானே? மாத்திக்க முடிலயா? நான் ஹெல்ப் பண்ணவா?” என அவளருகே வர,
“அண்ணி!” என்றவளுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வர அனன்யா பயந்துவிட்டாள். சுற்றி சில நெருங்கிய உறவுகள் வேறு!
“எனக்கு இது எதுவும்…. வேண்டாமே!” என்று சொல்லி முடிக்கவும் அர்ஜுன் உள்ளே வரவும் சரியாய் இருந்தது.
குடும்பத்தினர் மட்டுமாய் உள்ளே செல்ல, வெளியே சலசலப்போடு அமர்ந்திருந்தனர் மற்றவர்கள்.
“அனு! அவளை கூட்டிட்டு போய் ரெடி பண்ணு!” என்று விவேக் கூற, அனன்யா விஜயலக்ஷ்மி புறம் திரும்பவே இல்லை.
விஜயலக்ஷ்மியின் அந்த ஒற்றை வார்த்தையில் அனன்யா அவ்வளவு உடைந்து போயிருந்தாள். முடிவெடுத்து தானே வெளியே அவள் கூறி இருப்பாள் என்ற எண்ணத்தில் அனன்யா அசையாமல் இருக்க,
“அனு!” என கோபமாய் கத்தினான் விவேக்.
அர்ஜுன் கயல்விழி தீபக் என வந்தவர்களில் இவர்கள் மட்டும் தான் உள்ளே வந்தது. அதுவும் கயல்விழி எதுவோ பிரச்சனை என மட்டும் நினைத்து மற்றவர்களை அங்கே அமர சொல்லி தான் உள்ளே வந்தார்.
அவர்கள் வீட்டிற்குள் என்னவோ பிரச்சனை என்று மட்டுமே கயல்விழி தீபக் நினைத்திருக்க, விஜயலக்ஷ்மி முகம் பார்த்து எதுவோ பெரிதாய் வர இருப்பதை புரிந்து கொண்டான் அர்ஜுன்.
“நான் வெளில இருக்கேன் ம்மா!” என தீபக் கயல்விழியிடம் சொல்லி வெளியே செல்ல போக,
“நீ அர்ஜுனை உள்ள கூட்டிட்டு போ தீபக்!” என்றான் விவேக்.
“ண்ணா! நான் சொன்னேனே!” என அர்ஜுன் பார்வையை தவிர்த்து அண்ணனிடம் மன்றாடலாய் கூறினாள் விஜயலக்ஷ்மி.
“என் பொண்ணா போய்ட்டியேன்னு பாக்க மாட்டேன் விஜி! மரியாதையா உள்ள போய் ரெடியாகு!” சிறிய குரலில் என்றாலும் அவர் விஜயலக்ஷ்மியை மிரட்டுவது மற்றவர்களுக்கும் புரிய தான் செய்தது.
“ம்மா! ப்ளீஸ்! என்னை பேச விடுங்க! நான் சொல்றேனே!” என்றவள் பார்வை மெதுவாய் கயல்விழியிடம் செல்ல,
“இது… இது வேண்டாம் ம்மா!” என்றாள்விஜயலக்ஷ்மி அவரைப் பார்த்தபடியே. அதிர்ந்து விழித்த கயல்விழி அர்ஜுனைப் பற்றிக் கொள்ள, கேள்வியாய் விஜயலக்ஷ்மியைப் பார்த்திருந்த அர்ஜுனின் பார்வையும் அவளிடமே நின்று போனது அவள் வார்த்தைகளில்.
சில நொடிகள் தான். அன்னையின் உடல்நிலை சட்டென அவர் அழுத்தமான பிடியில் நியாபகம் வர, தோளோடு அணைத்துக் கொண்டான்.
தலையில் அடித்துக் கொண்ட விவேக், “விஜி! என் பொறுமையை ரொம்ப சோதிக்குற!” என்று இழுத்து பிடித்த பொறுமையோடு பற்களைக் கடித்து அவளிடம் செல்ல,
“ப்ளீஸ் ண்ணா! புரிஞ்சிக்கோங்களேன்!” என்றாள் இன்னும் கெஞ்சி. மொத்தமாய் மரத்து போனான் அர்ஜுன். நொடியில் அவன் உலகம் நின்ற உணர்வு.
“விஜி! என்ன டா? ஏன் இப்படி சொல்ற அதுவும் இப்போ வந்து? எதாவது கனவுல பயந்துட்டியா?” என அப்போதுமே செல்லம் கொஞ்சத் தான் செய்தார் சந்தானம்.
“வேண்டாம்ங்க! எதாவது சொல்லிற போறேன்! இவ்வளவு நாளும் அமைதியா இருந்துட்டு இப்போ கழுத்தறுத்துட்டு இருக்கா. கெஞ்சுதீங்க அவகிட்ட” என்ற கலையரசி,
“இப்போ உள்ள போறியா இல்லையா நீ?” என்று கேட்க,
“என்கிட்ட யார் கேட்டீங்க இவ்வளவு நாளும்? உங்க விருப்பம் தானே இதெல்லாம்?” விஜயலக்ஷ்மியும் சத்தமாய் கேட்க, வெறித்த பார்வை மட்டுமே அர்ஜுனிடம்.
தந்தை கெஞ்சலாய் தன்னிடம் கேட்ட போது மனம் உருகிப் போனது என்னவோ உண்மை தான் விஜயலக்ஷ்மிக்கு. அதே நேரம் வாசலில் ப்ரணித்தாவைப் பார்த்தபின் வேறெதுவும் நினைக்க தயாராய் இல்லை அவள். பேசிவிட்டாள். வார்த்தைகளை விட்டுவிட்டாள்.
“நான் கேட்டேனே விஜி உன்கிட்ட? என் தம்பிக்காக நான் பேசினேனே? என்கிட்ட நீ சொல்லிருக்கலாம் தானே?” தாங்க முடியா ஆதங்கத்தில் கேட்டாள் அனன்யா.
“ம்மா! போலாமா?” இவர்கள் பேச்சை அதற்குமேல் கேட்க விருப்பமின்றி அர்ஜுன் அன்னையிடம் சாதாரணம் போல காட்டிக் கொண்டு கேட்க, மூச்சைடைத்து வந்தது கயல்விழிக்கு.
என்னவென்று அவர்களைத் தடுக்கவோ அவர்களிடம் சென்று முகம் காட்டாவோ முடியும்? விவேக் முகம் கறுத்து நிற்க, அங்கேயே மடங்கி அமர்ந்து அழ ஆரம்பித்துவிட்டார் கலையரசி.
“ம்மா ப்ளீஸ்! வாங்க! நான் இருக்கேன்!” தன் மேல் அன்னை சாயும் பாரம் உணர்ந்து அவரைத் தேற்றி அழைத்து செல்ல தான் முனைந்தான் அர்ஜுன்.
ஒரு நொடி அந்த ஒரு நொடி தான் அர்ஜுனை விஜயலக்ஷ்மி கண்டதும். இந்த நிமிடத்தை கடந்து அனைவரும் வந்துவிட வேண்டும் கடவுளே என்ற வேண்டுதல் தான் பலமாய் அவளிடம்.
“ம்மா!” என்ற அனன்யா அன்னைக்கும் அத்தைக்கும் நடுவில் நொடிந்து போய் நின்றாள்.
யாரும் யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. தீபக்கிற்கு அர்ஜுன் தலையசைக்கவும் அவன் சென்று காரை இயக்க, அன்னை நிலை அறிந்து அவரை முதலில் மருத்துவமனை தான் கூட்டி சென்றான்.
அன்னை இதய நோயாளி வேறு. இதை கடக்க அவருக்கு சக்தி வேண்டுமே! எதையும் வெளிக்காட்ட தயாராய் இல்லை அவன்.
“அதிகமான ஷாக் டாக்டர். சட்டுன்னு.. அதை அங்க ஸ்டாப் பண்ண முடியல. இன்னும் அம்மா பேசல. ஸ்ட்ரெஸ் எடுத்துப்பாங்க. அதான் கூட்டிட்டு வந்தேன்!” முன் ஜாக்கிரதையாய் அவன் அழைத்து வந்து சொல்ல, அவரும் பரிசோதிக்க,
“ம்மா! என்ன இப்ப? ஏதோ சிட்டுவேஷன்! எல்லாருக்கும் எல்லாரையும் பிடிக்கணுமா என்ன? நீங்க தான் எனக்கு முக்கியம். எனக்கு புரியுது நீங்க ரொம்ப கஷ்டத்தை உங்களுக்குள்ள வைக்குறிங்கன்னு” அமைதியாய் இருந்தவரிடம் பேசினான் அர்ஜுன்.
“எனக்கு ஒண்ணுமே இல்ல ம்மா. இங்க பாருங்க. அப்படியே தானே இருக்கேன்? எனக்கு நீங்க எப்பவும் வேணும். வேற யாரும் அந்தளவுக்கு எனக்கு முக்கியம் இல்லவே இல்ல. நீங்க இல்லைனா நான் இல்ல” சிவக்க இருந்த கண்களை அடக்க பெரும்பாடாய் ஆன போதும் அன்னையிடம் துளி வருத்தத்தைக் காட்டிடும் எண்ணமில்லை. இதற்கே துடித்து போயிருப்பார் நிச்சயம்.
“ம்மா ப்ளீஸ்! அடக்கி வைக்காதிங்க. உங்க ஹெல்த்துக்கு ஆகாது. ப்ளீஸ் ப்ளீஸ் ம்மா!” என தனக்குள் அடக்கிக் கொண்டு அவன் பேச பேச தான் அவர் கண்களில் இருந்து கண்ணீர் வந்ததே.
“அழுதுடுங்க. ஆனா பேசிடனும்.. டம்ப் பண்ணாதீங்க ம்மா!” என்றவன் அவர் அழ ஆரம்பிக்கவுமே,
“எதுக்கு அழணும்? கல்யாணம் தானே? சரி ஓகே! பொண்ணு பாருங்க ம்மா! இப்ப இந்த நிமிஷம் கூட நான் ரெடி! கல்யாணம் பண்ணிக்குறேன். யாரா இருந்தாலும் ஓகே. நீங்க சொல்றது தான். உங்களுக்காக தான் நான் சம்மதம் சொன்னதே! வேற பொண்ணே இல்லையா என்ன?” என அத்தனை பேசினான்.
வாய்விட்டு அழுது அவனைக் கட்டிக் கொண்டவர் கொஞ்சம் மயக்கத்திற்கு செல்ல, அது மருத்துவத்தின் உதவியால் மட்டும் தான்.
அன்று மாலை வரை மருத்துவமனையில் தான் இருவரும் இருந்தனர். கூடவே இருந்த தீபக்கிற்கு கூட அத்தனை கோபம் விஜயலக்ஷ்மி மேல். கயல்விழியைக் கண்டு அவனுமே கண்ணீர் வடித்திருந்தான்.
அனன்யா அழைத்த போது கூட, “இங்க நானும் அம்மாவும் ஓகே தான் அனு. நீ அங்க பார்த்துக்கோ!” என மற்றவர்களை தேற்றி தனக்குள் நொறுங்கி நிலைகுலைந்து போயிருந்தவனை யாரும் அறிய வாய்ப்பில்லை.
தொடரும்..
error: Content is protected !!