Skip to content
Post Views: 8,738
அத்தியாயம் 38:
திருச்செந்தூரில் இருந்து வந்து மறுநாள் புது மணமக்களை குலதெய்வ கோயிலுக்கு பூஜை செய்ய அழைத்து சென்றனர்.
அதே கோவில், பொங்கல், கறிவிருந்து வழக்கம் போல்தான். ஸ்னேகாவிற்கும் வழக்கம் போல் குடும்பமே சேர்ந்து பொங்கல் வைக்க உதவி செய்தனர்.
ஆனால் அன்னபூரணியின் ராகிங் சிநேகாவிற்கு இல்லாத காரணத்தால் எல்லாம் சுமூகமாக சென்றது. இன்றும் வந்திருந்தார் அன்னம். வழக்கம் போல் சந்தியாவை மட்டும் முறைத்து கொண்டிருந்தார்.
Advertisement
அவர் மகள் மல்லிகா திருமணம் முடிந்து சென்னையில் வசிக்கிறாள் அவள் கணவன் அங்கு வேலை செய்வதால். ஒரு மகனும் இருக்கிறான். ஆனால் அம்மா மகள் இருவரும் இப்பொழுதும் சந்தியாவை கண்டால் திருப்பி கொண்டுதான் செல்வர்.
அதேபோல் ஆதியின் அத்தை பரிமளவல்லியும் வந்திருந்தார். அவர் மகள் சுதாவிற்கு மனோரஞ்சனுடன் திருமணம் முடிந்து இரு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். அவரது இளைய மகள் சுகந்திக்கும் திருமணம் முடிந்துவிட்டது. அவரது கணவர் தில்லைநாயகத்திற்கு இன்னமும் ஆதியின் மேல் கோபம் தீரவில்லை. ஆனால் பரிமளா இனிமேலாவது தனக்கு அண்ணண் தம்பி உறவு வேண்டுமென்று வந்து அருணின் திருமணத்தில் கலந்து கொண்டார்.
இப்பொழுது சினேகா எல்லாருக்கும் பொங்கல் பரிமாறி கொண்டிருந்தாள். அவளுக்கும் பாதி பேருக்கு மேல் குனிந்து நிமிர்ந்து பரிமாற சிரமமாக இருந்ததால், அங்கு அமர்ந்திருந்த சந்தியாவை திரும்பி பார்த்து உதட்டை பிதுக்கினாள்.
Advertisement
சந்தியா ஆதி எங்கே என்று தேடினாள். அவனும் அப்பொழுது சரியாக சில பெருசுகளை சாப்பிட அழைத்து கொண்டு உள்ளே வந்தான்.
Advertisement
சந்தியாவை பார்த்தவன் என்ன என்றான் பார்வையால். சந்தியா சினேகாவை காட்டி உதட்டை பிதுக்கினாள். அவள் உதட்டை ஒரு நிமிடம் மெய் மறந்து பார்த்தவன், பின்பு அவள் முறைத்ததும் திரும்பி அருணை தேடினான்.
அருணும் வசந்தனும் அங்கு ஓரமாக அமர்ந்து பிரியாணியை டேஸ்ட் பார்த்து கொண்டிருந்தனர். அதை பார்த்து கடுப்பான ஆதி, அருணிடம் சென்று “டேய் அங்க உன் பொண்டாட்டி தனியா கஷ்ட பட்டுட்டு இருக்கா. அங்க போய் என்னன்னு பாரு” என்று விரட்டி விட்டவன் வசந்தனிடம்
“நீங்க என்ன மாப்பிள்ளை பண்றீங்க” என்றான் நக்கலாக.
Advertisement
அதற்கு வசந்தன் பதில் சொல்வதற்குள் அங்கு கையில் வாளியுடன் வந்த முரளி, “அண்ணா அத ஏண்ணா கேக்கறீங். இவர்ட்ட கேட்டா நா மாப்பிள்ளை. என்னையே வேலை செய்ய கூப்பிடறியாடான்னு கேக்கறாருங். அருண் அண்ணாட்ட கேட்டா நா புது மாப்பிள்ளை, என் விருந்துக்கு நானே வேலை செய்யனுமான்னு கேக்கறாருங்” என்றதும் வசந்தன் முரளியை
“டேய் நீ போடா. போய் பந்தியை கவனி. வந்துட்டான் போட்டு குடுக்கிறதுக்கு” என்று அவனை விரட்டினான். ஆதி கௌரி எங்கே என்று பார்த்து அவளை அழைத்தான்.
“மச்சான் மச்சான். என்னத்துக்கு இப்ப அவளை கூப்பிடற நீயி” என்று அவன் பதறி கொண்டிருக்கும் போதே, அவள் மகன் ப்ரணவை சந்தியாவிடம் கொடுத்துவிட்டு சேலை முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகி கொண்டே அங்கே வந்த கௌரி “என்னங்ண்ணா” என்றாள் தன் கணவனை பார்த்துக்கொண்டே.
“அதுடா கௌரி. உன்ர புருஷன் நம்ம வீட்டு மாப்பிள்ளையாம். அதுனால எந்த வேலையும் செய்ய மாட்டாராம்” என்று சொல்லிவிட்டு நக்கலாக வசந்தனை பார்த்து சிரித்து கொண்டே சந்தியாவிடம் சென்று, பிரணவை கையில் தூக்கி கொண்டு “பொம்மு. சின்ன குட்டி எங்கடி” என்றான்.
“அவ அத்தைட்ட பிரியாணி ஊட்டிக்கு போய்ட்டா மாமா” என்று கையை காட்டினாள் சந்தியா. அங்கு சிவகாமி, பத்மா, சித்ரா, வள்ளி என்று எல்லோரும் உமையாளுக்கு உணவை கொடுத்து கொண்டிருந்தனர்.
“சரி வாடி பொம்மு. நீ வந்து வெளில உக்காரு. இங்க உனக்கு வேர்க்குது பாரு” என்று அவளை அழைத்து கொண்டு கையில் பிரணவுடன் சென்றான்.
அங்கு கௌரி வசந்தனிடம் “ஓஹோ அவ்வளவு பெரிய ஆளாயிட்டீங்ளா மச்சான் நீங். அதும் கவர்ன்மெண்டு மாப்பிள்ளை வேற இல்ல. அதான் உங்களுக்கு கொம்பு மொளச்சிட்டுது தலையில. ஆனா நா விரும்புனது விவசாயம் பாத்துக்கிட்டிருந்த அந்த மச்சானதான்” என்று பேசி கொண்டிருந்தவளிடம்
“மயிலு. உன்ர அண்ணன் பேச்ச கேட்டு, நீ இந்த மச்சான தப்பா நினைக்கலாமாடா. ஆசையா இருந்ததேன்னு ஒரு வாய் பிரியாணி சாப்பிட்டேன்டா மயிலு. அதுக்கு போய் நீயும் உன்ர அண்ணனும் என்னை இப்படி பேசறீங்களே” என்று புலம்பியபடி இருந்தவன் பக்கத்தில் வந்தனர் சந்தியாவும் ஆதியும்.
சந்தியா வசந்தனிடம் “என்னண்ணா. ஏன் இப்படி புலம்புறீங்க. ஏண்டி கௌ. எதுக்குடி எங்க அண்ணனை அழ வைக்கிற” என்றதும் வசந்தன் “கண்ணு. எல்லாம் உன்ர புருஷன் பண்ற வேலைதான். அவன்தேன் எனக்கும் என்ர மயிலுக்கும் இடைல கோல் மூட்டி விடறான் கண்ணு” என்றதும், திரும்பி ஆதியை முறைத்த சந்தியா
“என்ன பண்ணீங்க மாமா. எங்கண்ணனக்கு கேக்கிறதுக்கு யாரும் இல்லன்னு நினைச்சீங்களா அண்ணனும் தங்கச்சியும். நான் இருக்கேனாக்கும். சொந்தத்துல தொக்கா மாப்பிள்ளை கிடைச்சா என்ன வேணா பேசுவீங்களா. அவர் நம்ம வீட்டு மாப்பிள்ளை தெரியுமில்ல. அண்ணா நீங்க வாங்க முதல்ல சாப்புடுங்க. நா உங்களுக்கு சாப்பாடு போடறேன்” என்று புடவை முந்தியை எடுத்து இடுப்பில் சொருகியபடி இலை எடுக்க போன சந்தியாவை தடுத்த வசந்தன், ஆதியையும் கௌரியையும் மிதப்பாக பார்த்தபடி
“விடு சாமி. நம்ம வீட்டு விருந்துள நாமளே முத ஆளா சாப்பிட முடியுமா. அண்ணன் முதல்ல விருந்தாளியை கவனிச்சுட்டு பிறகு சாப்பிட்டுக்கிறேன். கேட்டுக்கிட்டீங்களா ரெண்டு பேரும். என்ர தங்கச்சிதான் உங்க வீட்டு மூத்த மருமக தெரியுமில்ல. அதனால பார்த்து சூதானாமா நடந்துக்குங்க”என்றுவிட்டு சென்றவனை பார்த்து சிரித்து கொண்டிருந்தனர் ஆதியும் கௌரியும்.
“என்ன ரெண்டு பேருக்கும் சிரிப்பு பலமா இருக்கு. எங்கண்ணன பாத்தா கிண்டலா இருக்கா உங்களுக்கு” என்றவளிடம் கௌரி “சரிடி அண்ணி. போதும் உங்கண்ணனுக்கு சப்போர்ட்டு. என் பையன குடு” என்று மகனுக்கு பாலூட்ட சென்றாள்.
ஆதியும் சந்தியாவும் வெளியே வந்தவர்கள், அதே வாய்க்கால் மேட்டில் அமர்ந்தனர்.
“பொம்மு. கஷ்டமா இருக்காடி. தொடந்து கல்யாணம், ட்ராவல் வேற” என்றான் ஆதி.
“அதெல்லாம் இல்ல மாமா. ரொம்ப சந்தோசமாதான் இருக்கேன். ஆனா அம்மாதான் ரொம்ப வருத்தப்படறாங்க. அங்க வந்து தங்கறதே இல்லன்னு. அதான் ஒரு பத்து நாள் அம்மா வீட்ல போய் இருக்கலாம்ன்னு இருக்கேன்”
“என்ன பத்து நாளா . கிண்டல் பண்றியாடி பொம்மு”
“அதெல்லாம் இல்ல. இந்த டைம் போய் தங்கத்தான் போறேன்”
“ஏண்டி உனக்கே நல்லாருக்கா இது. கன்ஸீவாகி நாலு மாசம் என்ன தொடவே விடல. அப்புறம் உன் கொழுந்தன் கல்யாணம்ன்னு ரூம் பக்கமே வரல நீ. இப்பதான் வேலையெல்லாம் முடிச்சிட்டு, இனிமேயாவது என்ன கவனிப்பன்னு பாத்தா இப்பதான் அம்மா வீட்டுக்கு போறாளாம். என் நினைப்பாவது உனக்கு இருக்காடி” என்று மூஞ்சை தூக்கியவனை பார்த்து
“அதெல்லாம் நீங்க என்ன சொன்னாலும் இந்த டைம் நா கேக்க மாட்டேன். அம்மா வீட்ல தங்கிட்டுதான் வருவேன்”
“என் பொண்ணு என்ன விட்டுட்டு இருக்க மாட்டா டி”
“உங்க பொண்ண நா கூட்டிட்டு போக போறதே இல்ல. எங்க அம்மா அப்பாவோட பொண்ணு நா மட்டும்தான் போறேன். புகுந்த வீடு புகுந்த வீடுன்னு பாத்து, சுத்தமா எங்க அம்மா அப்பாவையே மறந்துட்டேன். அவங்களையும் பாக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு மாமா”
“நீ முடிவாத்தான் சொல்றியா டி பொம்மு” என்று எழுந்து நின்று முறைத்தவனை பார்த்து, சந்தியாவும் முறைத்து கொண்டே “ஆமா மாமா” என்றாள்.
அப்பொழுது சரியாக சாப்பாடு முடிந்து பெருசுகள் வெளியில் வந்தது. இவர்களிடம் வந்தவர்கள்
“என்ன சாமி. மாசமா இருக்க புள்ளைட்ட ஓரியாட்டம் பண்ணிக்கிட்டு இருக்க”
அதுங்க அப்புச்சி. அவ கொழுந்தன் கல்யாணம் முடிச்சதுல டயர்டா ஆயிட்டாளாம். அதேன் ரெஸ்ட் எடுக்க அவங்க அப்பாரூட்டுக்கு போறாளாம். அதும் பத்து நாளு . இதுல நானும் கூடவே போய் தங்கோணுமாம். இவளுக்கு எவ்வளவு எகத்தாளம் இருக்கோணும்” என்றதும்
“அது சரிப்பு. அந்த புள்ளையும் அவங்க அப்பனாத்தாவ பாக்கணுமில்ல. அதும் கல்யாணம் ஆன நாள் முடிச்சி உனக்கு பயந்துகிட்டே அங்க போய் பெருசா தங்கினது இல்ல”
“அது சரி பெரியப்பா, அதுக்காக நம்மளும் மரியாதைய விட்டுப்போட்டு அங்க போய் பத்து நாளு தங்க முடியுமா” என்று ஆதி சொல்லி கொண்டிருக்கும்போது அங்கு வந்த ஈஸ்வரன் “கண்ணு நீ போய் ஒரு மாசம் வேணாலும் உன்ர அப்பா வீட்ல இரு. உன்ர புருஷனும் உன் கூடவே வருவாரு. தேவைன்னா நம்ம எல்லாருமே நம்ம குடும்பத்தோட உன் அப்பா வீட்டுக்கு போயிடுவோம்” என்று பஞ்சாயத்தை முடித்துவிட்டு சென்றார்.
அதை கேட்டு கூட்டத்தை களைத்த பெருசுகள் “ஆயிரந்தேன் சொல்லு. ஆதி மாதிரி ஒரு பையன பாக்க முடியாது. எல்லாத்திலையும் சிங்கம்தான்.பொண்டாட்டிய அடக்குறதிலையும் அப்படியே நம்ம வம்சந்தேன்” என்று மீசையை முறுக்கியவர்கள் எதிரில் வந்த வசந்தன், அருண் , முரளியை பார்த்து
“கத்துக்கோங்கடா ஆதிய பாத்து. புதுசா கல்யாணம் ஆனோன்ன படார்ன்னு கால்ல விழுந்து போடாதீங்க” என்றுவிட்டு சென்றன.
அதற்கு வசந்தன் “ஏண்டா இன்னுமாடா இந்த பெருசுங்க உன்ர அண்ணன நம்புது” என்றான் அருணை பார்த்து.
அதற்கு முரளி “எல்லாம் அதுங்க விதிங்ண்ணோவ்” என்றான். முரளியும் அக்ரி முடித்துவிட்டு யுபிஎஸ்சி எக்ஸாம் எழுதி கொண்டிருக்கிறான்.
இப்பொழுது அருண் “அண்ணா உண்மையிலேயே நம்ம ஆதி அண்ணனை பாத்துதான் கத்துக்கணும்ங்ண்ணா” என்றான்.
இதையெல்லாம் பார்த்த சினேகாதான் கௌரியிடம் “என்ன அண்ணி. பெரிய மாமா சந்தியா அக்காட்ட இப்படி கோவப்படறாங்க” என்று கேட்டதும் பக்கத்திலிருந்த சித்ரா “அட ஏன் மருமகளே, நீ வேற காமெடி பண்ற. அவன் நாடகம் போட்டுக்கிட்டு இருக்கான். இவளும் போய் அவ புருசனுக்கு வசதி படாதுன்னு எங்க அண்ணன் வீட்ல தங்கமாட்டா. இவனும் அவளை பிரிஞ்சி ஓர் நாள் இருக்க மாட்டான். ரெண்டும் சரியான ஜாடிக்கேத்த கேடிங்க” என்றார்.
அதை கேட்டு சிரித்த ஸ்னேகா “அது என்னத்தை. ஜாடிக்கேத்த மூடின்னுதான் கேள்விபட்டருக்கேன். நீங்க இப்படி சொல்றீங்க” என்றதும்
“அது அப்படிதாம்மா. ரெண்டும் கல்யாணத்துக்கு முன்னாடியே லவ் பண்ணிருக்குங்க. கடைசில நாங்க என்னமோ இதுங்களுக்கு கஷ்ட்டப்பட்டு நாமதேன் கல்யாணம் பண்ணி வச்சோம்ன்னு நினைச்சிக்கிட்ருந்தோம். எங்களுக்கே இப்பதான் இதுங்க லவ் பண்ணது தெரியும்ன்னா பாத்துக்க. ரெண்டும் பிளான் பண்றதுல கேடிங்க” என்று புலம்பியதை கேட்டு சிவகாமி, பத்மா, கௌரி,வள்ளி, ஸ்னேகா அனைவரும் சிரித்தனர்.
ஒரு விடியற் காலை நேரம். கையில் சத்துமாவு கஞ்சியை வைத்து குடித்துக்கொண்டே ஆதித்யன் கிழக்கில் உதயமாகும் காட்சியை அவள் அம்மா வீட்டு பால்கனியில் நின்று ரசித்து கொண்டிருந்தாள் சந்தியா.
அதே நேரம் திரும்பி உள்ளே உறங்கும் தன் ஆதித்யனையும் ரசித்து பார்த்தாள். உமையாள் இப்பொழுதுதான் எழுந்து தன் பாட்டியை பார்க்க கீழே சென்றாள். கடந்த இரண்டு நாட்களாக சந்தியாவும் உமையாளும் இங்கிருப்பதால் ஆதி இரவில் இங்கேயே வந்துவிடுகிறான்.
அவன் மட்டுமில்லாமல் சந்தியாவின் புகுந்த வீட்டினர், பேத்தியைப் பார்க்க, மருமகளுக்கு பலகாரம் கொடுக்க என்று, ஏதாவது ஒரு காரணம் சொல்லி இங்கு வந்து சென்று கொண்டுதான் இருக்கின்றனர்.
இன்று அருணுக்கும் ஸ்னேகாவிற்கும் இங்கு விருந்து. அதனால் இன்றும் அனைவரும் குடும்பத்தோடு வந்துவிடுவார்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த வீட்டை செல்வமே சொந்தமாக வாங்கிக்கொண்டார்.
சந்தியா திரும்பி வெளியே பார்த்தபடி நின்றுகொண்டு இந்த ஊருக்கு வந்தது முதல் நடந்த விஷயங்களை யோசித்து கொண்டிருந்தாள்.
முதன் முதலில் அவளின் ஆதியானவனை பார்த்தது, அவனிடம் வம்பிழுத்தது, காதல், திருமணம் என்று. வாழ்க்கை மிகவும் அழகானது என்று தோன்றியது சந்தியாவிற்கு.
அப்பொழுது பின்னாலிருந்து இரு கைகள் அவளின் மேடிட்ட வயிற்றின் மேல் மெதுவாக வைத்து இழுத்து அணைத்து கொண்டது. சந்தியாவின் உதட்டில் புன்முறுவல். அவளின் புன்னகைக்கு சொந்தமானவன் அவளின் பின்கழுத்து வளைவில் முகத்தை புதைத்து கொண்டான்.
“என்ன பொம்மு. சீக்கிரம் எழுந்துட்ட”
“ம். சூரியன் உதயமாகறத பார்க்கலாம்ன்னு எழுந்துட்டேன் மாமா”
“ம். இப்படி ஒரு விடிகாலைலதான் உன்ன முதல்ல பாத்தேன் டி பொம்மு. வாழ்க்கை ரொம்ப வெறுமையா போய்ட்டிருந்த நேரம். ஆனா இப்ப வாழ்க்கை ரொம்ப அழகானதுன்னு தோணுது டி பொம்மு. அதுக்கு காரணம் நீ என் வாழ்க்கைல வந்ததுதாண்டி. என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ சந்தோசமா இருக்கியாடி”
அவனின் கைகளுக்குள் திரும்பிய சந்தியா அவனின் கண்களுக்குள் பார்த்து “இப்ப என்னை பாத்தா உங்களுக்கு எப்படி தோணுது மாமா” என்றதும், அவளை விட்டு சற்று தள்ளி நின்று கைகளை கட்டி கொண்டு பார்த்தான்.
கருஞ்சிவப்பு காட்டன் புடவையில் இடுப்புவரை இருந்த, தூக்கத்தில் களைந்த முடியை முன்னால் விட்டுக்கொண்டு, உடல் முழுவதும் தாய்மை மிளிர முகம் முழுவதும் நிறைவு மின்ன நின்றவளை பார்த்து மூச்சடைத்தது ஆதிக்கு.
“ம் நீ மட்டும் எப்படிடி பொம்மு நாளுக்கு நாள் அழகாயிட்டே இருக்க” என்றவன் ஒரு பெருமூச்சை விட்டான்.
“அதுக்கு நா சந்தோசமா நிறைவா உங்களோட வாழறதுதான் காரணம் மாமா” என்றவள் தொடர்ந்து “என்ன மாமா. பெருமூச்செல்லாம் பலமா இருக்கு” என்றாள்.
“பின்ன என்னடி. இவ்ளோ அழகா இருந்து என்ன யூஸ் சொல்லு. மாமா நியாபகம்தான் உனக்கு வரமாட்டேங்குது. அங்க இருந்தவரை கல்யாணம் விருந்துன்னு இருந்த. இங்க வந்ததில இருந்து இந்த உமை குட்டி உன்ன கட்டிபிடிச்சிட்டு தூங்குது. என்னை உன் பக்கத்திலேயே வர விட மாட்டேங்குது” என்று புலம்பியவனை பார்த்து சிரிப்பாக வந்தது சந்தியாவிற்கு.
அங்கு ஆதி வீட்டில் பெரும்பாலும் சிவகாமியின் அறையில்தான் உறங்குவாள் உமையாள். இங்கு இரண்டு நாட்களாக அம்மா அப்பாவுடன்தான் தூங்குவேன் என்று பத்மா கூப்பிட்டும் செல்லாமல் இங்குதான் உறங்குகிறாள்.
அங்கு சிவகாமி கதை சொல்லி பழக்கியிருப்பதால், இங்கும் கதை கேட்டு இவர்கள் அவளுக்கேற்ற கதையை சொல்லி முடித்ததும் பதினோரு மணிக்குத்தான் தூங்குகிறாள். அதற்கு பிறகு மாசமாயிருக்கும் மனைவியை தொந்திரவு செய்வதில்லை ஆதி. அதனால்தான் இவ்வாறு புலம்பினான்.
அதற்கு சிரித்த சந்தியாவை பார்த்து “என்னடி சிரிக்கிற. என் பொழப்ப பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்கா” என்றான்.
அதற்கு இன்னும் அதிகமாக சிரித்த சந்தியா “உங்களுக்கு ரொம்ப வயசாயிடுச்சி மாமா. அதான் முன்ன மாதிரி உங்களுக்கு மூளை கூட வேலை செய்ய மாட்டேங்குது. பாருங்க இப்பக்கூட உமையாள் ரூம்ல இல்ல. நீங்க சும்மா பேசி டைம வேஸ்ட் பண்ணிக்கிட்ருக்கீங்க” என்றதும் ரோசம் கொண்ட ஆதி
“என்னடி சொன்ன பொம்மு. யாருக்குடி வயசாயிடுச்சி” என்றபடி வேஷ்டியை மடித்து கட்டி கைகாப்பை மேலே ஏற்றிவிட்டு அருகில் வந்தான். அவனை மெய்மறந்து பார்த்து நின்றாள் சந்தியா.
அவளின் பார்வையை பார்த்து இன்னும் சூடானவன், அவசரமாக அவளை கைகளில் அள்ளிக்கொண்டு உள்ளே சென்றான்.
அவர்களை உள்ளே எட்டி பார்க்க வெட்கம் கொண்டு, சந்தியாவின் வாழ்க்கையில் இதே போல் ஆதித்யன் என்றும் கலந்து மகிழ்ந்து இருக்க வேண்டும் என்று வாழ்த்தி உலகை வலம் வர கிளம்பி சென்றான் உலகத்தின் ஆதியானவன்.
முற்றும்
error: Content is protected !!