Skip to content
Post Views: 9,288
அத்தியாயம் 11
அன்னையை தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு அர்ஜுன் தன்னை கவனிக்காமல் தாண்டி செல்ல ப்ரணித்தா அவனைப் பார்த்துவிட்டு விஜயலக்ஷ்மியைப் பார்த்தாள்.
Advertisement
யாரும் நின்ற இடத்திலிருந்து அசையவே இல்லை. ஒரு வார்த்தை விஜயலக்ஷ்மியிடம் பேசவும் இல்லை.
கண்ணீர் தானாய் வழிந்தோட நின்று கொண்டிருந்தவளிடம் வந்த ப்ரணித்தா,
Advertisement
Advertisement
“நீ எனக்காக இவ்வளவு ரிஸ்க் எடுப்பன்னு நான் நினைக்கவே இல்ல விஜி! எனக்கு என்ன சொல்லனு தெரியல. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். நான் இன்னைக்கே இப்பவே போய் மாமாகிட்ட பேசுறேன்” என மெதுவாய் சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
அவள் பேசியது யாருக்கும் கேட்டிருக்காது. அதையும்விட அனைவரும் நடந்த நிகழ்வின் தாக்கத்தில் இருந்து மீளாமல் அல்லவா நின்றிருந்தனர்.
Advertisement
தன் குடும்பத்தினர் முன் நிற்க நிற்க அவர்களை அப்படி பார்க்க முடியவில்லை. பேசிடும் தைரியமும் இல்லை. தன் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டாள் விஜயலக்ஷ்மி.
ஆனால் தான் செய்தது தவறு என்று மட்டும் அவளுக்கு தோன்றவே இல்லை.
தங்களுக்குள் பேசிக் கொண்டும் ஆறுதல் போல சந்தானம் விவேக் கைகளை தட்டிக் கொடுத்தும் வந்தவர்கள் கலைய ஆரம்பித்தனர்.
அர்ஜுன் மருத்துவமனை வந்ததை அனன்யாவிடம் கூறவே இல்லை. அன்னையிடம் பேசவும் அனுமதிக்கவில்லை அவன்.
“இதை பேசிட்டே இருக்க வேண்டாம் அனு. விடு. அம்மாக்கு கொஞ்சம் கஷ்டம் தான். அவங்களா மீண்டு வரணும். நீ எதுவும் பேச வேண்டாம் இப்போ. மாமா எப்போ பிரீயோ அப்ப வந்து பார்த்துட்டு போ!” என்றான் சாதாரணமாய்.
“அர்ஜுன்! சாரி அர்ஜுன்!” என்று சொல்லி முடிக்கும் முன்பே அனன்யா கண்கள் பொங்கி வார்த்தைகள் அழுகையோடு வந்துவிட,
“விடு அனு! நான் எதுவும் கேட்கல. பார்த்துக்கோ!” என்று சொல்லிவிட்டவன் அன்று மாலை அன்னையை வீட்டிற்கு அழைத்து வரும் வரை மொத்தமாய் அடக்கி தான் வைத்திருந்தான்.
ப்ரணித்தா விஜயலக்ஷ்மி வீட்டில் இருந்து நேரே அர்ஜுன் வீட்டிற்கு வந்தவள் அங்கே யாரும் இல்லை என்றதும் அர்ஜுனுக்கு அழைத்தாள் அழைத்துக் கொண்டே இருந்தாள். அவள் மட்டுமல்லாமல் தொடர்ந்து வந்த எந்த அழைப்பினையும் ஏற்கவே இல்லை அர்ஜுன். அனன்யாவின் அழைப்பிற்கு மட்டும் பதில் கூறி வைத்திருந்தான்.
தீபக் மட்டுமே அவனுடன் இருந்தது. அவனுமே அர்ஜுனிடம் எதுவும் கேட்டு கஷ்டப்படுத்த விரும்பவில்லை. கூடவே இருந்தான் அர்ஜுனின் தைரியமாய்.
மாலை கிளம்பிட மருத்துவர் கூறிவிட அதையும் அன்னையைப் பார்த்தே முடிவு செய்தான் அர்ஜுன்.
“போலாம் அர்ஜுன்!” என்றார் அவர்.
“ம்மா! அழ மாட்டிங்க தான? மனசுலயும் எதையும் வச்சுக்காதீங்க ம்மா! உங்களுக்கு எதுவும்னா….” என்றவன் அன்னைக் கைகளைப் பிடித்துக் கொண்டு தொண்டைக்குழி ஏறி இறங்கப் பார்த்தவன் கண்கள் ஒரு நொடி கலங்கிவிட்டது மொத்தமாய்.
மகனை அறியாத தாயா? காலையில் அவனின் ஒளிரும் முகம் கண்டு தன் மனதை நிறைத்துக் கொண்டவருக்கு தெரியாதா அவன் மனம் படும் பாடு.
தானும் இல்லை என்றால் அவன் என்னாவான்? என்ற எண்ணமே அவரை தெளிவாய் எழுந்து அமர வைத்தது.
கொஞ்சமும் முகத்தில் வருத்தத்தை காட்டிடவில்லை என்றால் மனம் நிம்மதியாய் இருக்கிறது என்று அர்த்தமா என்ன? தனக்குள் வைத்து அழுத்தி புழுங்கிக் கொண்டு மறைக்கும் உள்ளத்தை அன்னையை அன்றி யாரும் அறிந்திட முடியாதே!
“போலாம் அர்ஜுன்! உனக்கு நான் இருக்கணுமே! எது வந்தாலும் எனக்கு நீ இருந்தா போதும். அம்மா தாங்கிப்பேன். கஷ்டம் தான். ரொம்ப நினச்சுட்டேன். என்னலாமோ நினச்சு வச்சுட்டேன்!” என்றவர் தன் நெஞ்சை நீவிக் கொண்டார்.
மகன் திருமணமே முடிந்து விஜயலக்ஷ்மியுடன் சந்தோஷமாய் வாழும் நாட்கள் வரை அவர் தன் மனக்கண்ணில் நிறைத்து வைத்திருக்க, நினைக்கும் பொழுதே நெஞ்சம் வலிப்பது போல ஒரு உணர்வு.
“ம்ம்ம்ஹும்ம் எனக்கு எதுவும் இல்ல. நானும் இல்லைனா உன்னை யார் பார்த்துப்பா? அம்மா சரி ஆகிட்டேன். போவோம் டா!” என்றவரை அணைத்துக் கொண்டவன் நெஞ்சம் விம்மிக் கொண்டு மேலேழுந்து வர, தன்னை அடக்க அவன் பட்ட சிரமங்கள் ஏராளம்.
ஏற்கனவே மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர் தான் சில அறிவுரைகளையும் வழங்கி அனுப்பி வைத்தார் மருத்துவர்.
வீட்டிற்கு வந்தும் அர்ஜுன் எங்கும் நகரவில்லை அன்னையை விட்டு. தீபக் அடுத்தநாள் வரை அவர்களுடனேயே தான் இருந்தான்.
மதியம் அன்னையை உண்ண வைத்திருந்தவன் தீபக் எவ்வளவு சொல்லியும் உணவை தொட முடியவில்லை.
இரவும் தீபக் தான் எளிதாய் உண்ண இட்லிகளை மட்டும் வாங்கி வந்திருக்க, அர்ஜுன் அவருக்கு தட்டில் எடுத்து வைத்துக் கொடுத்து அருகில் அமர்ந்தான்.
“தீபக்! நீ சாப்பிடு!” கயல்விழி சொல்ல,
“நான் அர்ஜுன் கூட சாப்பிடுறேன் ம்மா!” என்றான் தீபக். இரவும் அவன் சாப்பிடுவான் என தோன்றவில்லை. கொஞ்சமேனும் உண்ண வைக்க வேண்டும் என தீபக் நினைக்க,
“அவனும் தான் சாப்பிட போறான். இதோ!” என அர்ஜுனுக்கு ஊட்டிட நீட்டிய கயல்விழி,
“நீ எடுத்து வைக்குறியா! இல்லைனா உனக்கும் ஊட்டணுமா?” என்று தீபக்கிடம் கேட்க,
“அவனுக்கு குடுங்க ம்மா!” என்று புன்னகைத்த தீபக் தானே எடுத்து வைத்துக் கொண்டு அவர்கள் அருகில் அமர்ந்தான்.
அன்னை நீட்டியதை மறுக்காமல் வாங்கிக் கொண்டவனுக்கு தொண்டைக்குள் இறங்கவில்லை உணவு. தண்ணீரை குடித்து குடித்து உள்ளே தள்ளிக் கொண்டான்.
தூங்கும் நேரமும் அவர் அருகேயே அர்ஜுன் இருக்க,
“டேய்! போய் ட்ரெஸ் மாத்திட்டாவது வா டா!” என்றான் தீபக் அவனை பார்க்க பார்க்க அத்தனை கவலை கொண்டு.
அப்பொழுது தான் தன்னையே கவனித்தான் அர்ஜுன்.
“நீ போய் உன் ரூம்ல கொஞ்சம் ரெஸ்ட் எடு அர்ஜுன். நான் தூங்க தான் போறேன். மாத்திரை கூட போட்டுட்டேன் இல்ல? நீ போ!” என்ற அன்னையிடம் அவன் மறுக்க,
“நான் பாத்துக்கறேன் டா அம்மாவை. இங்க தான இருக்கேன். பார்த்துக்க மாட்டேனா?” என்று தீபக்குமே கூறினான்.
“சரி தீபக் இருக்கட்டும். நீ போ டா!” என்றார் கயல்விழி. தன் உணர்வுகளையும் எவ்வளவு தான் மறைத்து அழுத்திக் கொண்டு நிற்பான் அவன்? அவனுக்கும் தனிமை தேவை தான். ஆனால் அன்னையை விட்டு செல்ல அவன் யோசிக்க, தீபக் அனுப்பி வைத்தான் மீண்டும் மீண்டும் சொல்லியே.
அறைக்குள் வந்தவன் சட்டை பட்டனை கழற்ற கைவைத்து கண்ணாடி முன் நின்ற போது காலையில் தான் இதே சட்டையோடு கண்ணாடியில் தன்னைப் பார்த்து சிரித்துக் கொண்ட நியாபகம்.
மனதை இறுக்கமாய் பிடித்து எதுவோ இழுப்பது போன்று உணர்ந்தான்.
எதற்காக இந்த வேதனை? பார்த்து பேசி பழகி காதலித்து வந்த ஏமாற்றமா என்ன?
இல்லை தான் ஆனால் காதல் என்பது ஒரு உணர்வு தானே? அதற்கு பார்த்து பேசினால் என்ன நினைத்து வாழ்ந்தால் தான் என்ன?
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிடித்தம் மட்டும் இருந்த போதும் சுகமாய் ஏற்றுக் கொண்டு தான் வாழ்ந்து வந்தான். தான் சொல்லாமலே தன் காதல் கைகூடிய மகிழ்வில் வாழ்வே தனக்கு வசமான அதிகபட்ச மகிழ்ச்சியில் இருந்தது தான் அவனின் தவறோ! அந்த எதிர்பார்ப்பு தான் இப்பொழுது இவனின் இந்த அதிகபட்ச ஏமாற்றத்தை தாங்க முடியாமல் கதறித் துடிக்க சொல்லி நெஞ்சை அடைத்தது.
எதற்காக இன்று வரை காத்திருந்து இத்தனை பேரின் முன் தன்னை மறுக்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை அவனிடம்.
அவளின் வார்த்தைகள் மட்டும் தான் காதினில். என்கிட்ட கேட்டீங்களா என்ன? கேட்டாளே அவள் பெற்றோரிடம்!
அவர்கள் கேட்காமல் இருக்கலாம். ஆனால் நான் கேட்டேனே? எனக்கு என்ன பதில் சொல்வாள்? அன்று அவ்வளவு தெளிவாய் பதில் கூறிவிட்டு இப்படி காத்திருந்து தன்னை நிராகரித்தவள் மேல் என்ன உணர்வுகள் வரும்?
மனமெங்கும் விட்டுப் போனது தான். ஆனாலும் காதலித்தவன் அல்லவா? அந்த தருணங்கள் நெஞ்சை முள்ளாய் குத்திக் கிழித்தது.
காதல் மறுக்கப்படவில்லை அதற்கு முதலில் சொல்லப்பட வேண்டுமே!
இந்த காதல் என்ற ஒன்று மட்டும் அவள்மேல் எழாமல் இருந்திருந்தால் இந்த நாளை தூசியாய் நினைத்து கடந்து வந்திருப்பான் நிச்சயம்.
தானாய் தான் அத்தனையும் நிகழ்ந்து முடிந்திருந்தது. இதில் அன்னையினை நினைத்து தான் அதீத வருத்தம்.
விஜயலக்ஷ்மி மேல் அத்தனை மதிப்பும் பாசமும் வைத்திருந்தாரே! நிச்சயம் அவரால் இந்த நாளை மறக்க முடியாது.
எந்த இடத்தில் தவறினோம்! கொஞ்சம் முன் தெரிந்திருந்தால் கூட அன்னையை அங்கே கூட்டி சென்றிருக்க மாட்டேனே என எண்ணம் முழுதும் அன்னையிடம் வந்துவிட்டது.
இனி வேறெந்த நினைவுகளுக்கும் இடமில்லை எனும் அளவுக்கு மனம் சுத்தமாய் விட்டு போனது மற்றய நினைவுகளை விட்டு. அன்னை மட்டும் இதிலிருந்து மீண்டு வந்து விட்டாள் போதும். அது அத்தனை சீக்கிரம் நிகழ்ந்து விடுமா என்ன?
பெண் கொடுத்த வீட்டில் பெண் எடுக்க சென்று நின்று, வெறும் கையோடு அதுவும் நிச்சயம் செய்ய வந்த பெண்ணே தன் மகனைப் பிடிக்கவில்லை என்பதை போன்ற பிம்பத்தை உருவாக்கி அத்தனை பேரின் முன் தலைகுனிந்து வந்தது ஒன்றும் சாதாரண விஷயமில்லையே!
முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு சட்டையை கழற்றி முகம் கழுவி வந்தவன் சில நிமிடங்களில் மீண்டும் அன்னையைப் பார்க்க செல்ல, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் அவர்.
முந்தைய நாள் எத்தனை மகிழ்ச்சி உற்சாகம் மனம் நிறைந்த உணர்வில் தூக்கமின்றி தவித்தானோ இன்றைய இரவும் தவிப்பு தான். ஆனால் உணர்வுகள் மட்டும் எதிர்மறையாய்.
எதற்காக அவளிடம் அந்த வார்த்தைகள் வர வேண்டும் என மீண்டும் மீண்டும் தோன்றி சுத்தமாய் நிம்மதியிழந்து போனான்.
அன்று சம்மதித்தாள் தானே? இன்று என்ன வந்தது? என்று தோன்றிய நொடி அத்தனை கோபம் அவள்மேல்.
தான் கேட்ட போதே ‘முடியாது வேண்டாம்.. என்னால் சொல்ல முடியவில்லை. நீயே சொன்னதாய் சொல்லி விடு. எனக்கு நீ வேண்டாம்!’ என்று முகத்திற்கு நேராய் சொல்லி இருந்தால் தன்னோடு போயிருக்குமே என்று ஒரு எண்ணம்.
இன்னும் ஒரு அரை மணி நேரம் தாமதமாகி இருந்தால் இன்னும் எத்தனை பேர் பார்வைக்கு தானும் தாயும் நிற்க வேண்டியதாகி இருக்கும் என்றொரு எண்ணம் என இரவெல்லாம் உறக்கத்தை தொலைத்து கண்கள் தானாய் சோர்வில் மூடினாலும் இத்தகைய நினைவுகள் உறங்க விடாமல் செய்து அந்த இரவெல்லாம் இதற்கு முன் அனுபவித்திராத கொடுமை அவனுக்கு.
காலையே விவேக் அனன்யா இருவரும் கயல்விழியைப் பார்க்க என வந்துவிட்டனர்.
வந்ததும் அன்னை அறைக்கு அனன்யா ஓடிவிட வாசலிலேயே நின்றுவிட்டான் விவேக்.
இருவரின் முகத்தை தான் எந்த முகம் கொண்டு பார்ப்பது என தடுமாறி அவன் நிற்க, “மாமா!” என அவனைக் கண்டுவிட்ட அர்ஜுன் வந்துவிட்டான்.
“உள்ள வாங்க மாமா! என்ன அங்கேயே நின்னுட்டு?” என்று கைகளைப் பிடிக்க, அதை இறுக்கமாய் பற்றிக் கொண்டான் விவேக்.
“ப்ச்! என்ன நீங்க? அனு எதாவது புலம்பினாளா?” என்றவன் அன்னை அறையில் சத்தம் கேட்கவும் விவேக்கோடு அங்கே சென்றான்.
“அனு!” என்ற அர்ஜுனின் பார்வையில் அத்தனை கண்டிப்பு அழாதே எனும் விதமாய்.
மாத்திரை கொடுத்து உறங்க வைத்த போதும் காலையில் எழும் பொழுதே காய்ச்சலோடு தான் எழுந்து கொண்டார் கயல்விழி.
அமைதியாய் நால்வரும் இருக்க, “தீபக் எங்க?” என்றாள் அனன்யா.
“இப்ப தான் அனுப்பி வச்சேன். அவன் ஆபீஸ் போக வேண்டாமா?” என்றான் அர்ஜுன்.
“விஜி எப்படி இருக்கா அனு?” கயல்விழி கேட்க, அனன்யா வாயே திறக்கவில்லை.
“நீ பேசலையா அவகிட்ட?” என்றார் மீண்டும்.
“என்ன பேச? குழந்தையா? விளக்கம் கேட்க?” அனன்யா கோபமாய் சொல்ல,
“நான் விளக்கம் கேட்க சொல்லல அனு. அவ எதாவது நினைச்சு கலங்கி போய் இருப்பா. உன் அத்தை மாமாவும் கோவமா இருப்பாங்க அவ மேல. நீ கூட இருக்கனும்ல அவளுக்கு?” என்று அன்னை சொல்ல, சிறு மென்னகை அர்ஜுனுக்கு. தெரியுமே தன் அன்னையை எனும் விதமாய்.
“ம்மா!” என்ற அனன்யா தாள முடியாமல் பார்க்க, அங்கே அவர்முன் நிற்கவே முடியாமல் வெளிவந்துவிட்டான் விவேக்.
அர்ஜுன் விவேக் பின்னே வெளியே வந்துவிட,
“நடக்கணும் இருந்துருக்கு. விடு. அவகிட்ட பேசு. காரணம் இல்லாம யாரும் எதுவும் பண்றது இல்ல. அவ மனசுல என்ன இருக்குன்னு கேட்டு பாருங்க!” கயல்விழி சொல்ல,
“நீங்க இவ்வளவு நல்லவங்களா இல்லாம இருந்திருக்கலாம் ம்மா!” என்ற அனன்யா அன்னையை அணைக்க வர,
“காய்ச்சல் ஒட்டிக்க போது அனு!” என தடுத்தார்.
“பரவால்ல!” என அணைத்துக் கொண்டாள்.
“படிக்கணுமாம். நாளைக்கு அவ நினைச்ச படிப்பை படிக்க கிளம்ப போறாளாம்!” அனன்யா சொல்ல,
“ஓஹ்!” என்றவர் வேறெதுவும் கேட்கவில்லை.
“முன்னாடியே சொன்ன இல்ல? நாம தான் அவசரப்பட்டுட்டோம். அர்ஜுனை தான் ஏமாத்திட்டோமோன்னு மனசு அடிச்சுக்குது அனு. வாயை திறந்து சொல்லுவானா? ஒண்ணுமே இல்ல வேற பொண்ணு பாருங்க கட்டிக்குறேன்னு சொல்றான்!”
“அப்போ பார்ப்போமா ம்மா? எனக்கென்னவோ அது தான் சரின்னு தோணுது. இல்லைனா நீங்களும் இதையே தானே நினைச்சுட்டு இருப்பிங்க? விவேக் பாவம் ம்மா! உங்களை ஃபேஸ் பண்ணவே முடியல அவங்களுக்கு!” என்றாள் கலங்கிய கண்களுடன்.
“அர்ஜுன் கல்யாணம் ஆகிட்டா அவரும் கொஞ்சம் நிம்மதியாவாரு!” அனன்யா சொல்ல,
“இப்போ தான் டி அவனை நெருப்புல நிக்க வச்சு கூட்டிட்டு வந்துருக்கோம். உடனே அது அவனே சொல்லிட்டான்னாலும் பண்ணிட முடியுமா? அவன் எனக்காக சொன்னான். நானும் அவனுக்காக பாக்கணுமே?” என்று சொல்ல புரிந்து கொண்டாள் அனன்யாவும்.
“கொஞ்ச நாள் போகட்டும். எல்லாரும் சரியாகிட்டு யோசிப்போம்!” என்றார்.
ப்ரணித்தாவும் அன்று வந்திருந்தாள். ஆனால் அங்கிருந்த அசாதாரண சூழ்நிலை அவள் எதிர்பார்த்ததற்கும் மேலாக இருந்தது.
அவளால் சாதாரணமாய் அர்ஜுனை நெருங்கிட முடியவில்லை அந்த சமயத்தில். பேச்சினை கூட குறைத்திருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
“விஜி…” என்று ப்ரணித்தா பேச வரும் முன்பே,
“ப்ரணி ப்ளீஸ்! நான் கொஞ்சம் நார்மல் ஆகணும்!” என தடுத்துவிட்டவனை அவ்வளவு நெருங்கவே முடியாமல் இருந்தது.
நாட்கள் நகர தான் செய்தது. மூன்றாம் நாளே விஜயலக்ஷ்மி தன் நாட்டில் இருந்து கிளம்பி இருந்தாள். செய்தியாய் அதை கேட்டுக் கொண்டான் அர்ஜுன்.
அடுத்த இரண்டு மாதங்கள் தாண்டி விவேக் வீட்டிற்கு என அர்ஜுன் கயல்விழி செல்லவே இல்லை. ஓரளவு தெளிந்து வந்தது போல இருந்தாலும் எதுவும் சரியாகி இருக்கவில்லை.
விவேக் முன்பு போல அர்ஜுனிடம் பேச முடியாமல் குற்ற உணர்வில் தவிக்க, அர்ஜுன் தானே சென்று பேசிக் கொள்வான் அலுவலகம் கம்பெனியில் எல்லாம்.
வெளிப்பார்வைக்கு ஓரளவு சரியானது என்று தெரிந்தாலும் மனதுள் அனைவரும் நிகழ்வின் தாக்கத்தில் தான் இருந்து வந்தனர். கயல்விழி மகனுக்காக மறந்துவிட நினைத்தாலும் மறைக்கும்படி தான் இருந்தது அவரின் உடல்நிலை.
பாதி உணவிற்கு மேல் இறங்குவதே இல்லை. அதுவும் அர்ஜுன் கூடவே இருந்து பார்த்துக் கொண்டால் மட்டுமே!
அனன்யாவும் தினமுமாய் அன்னையை பார்க்க வர தான் செய்தாள். மூன்றாம் மாதத்தில் சந்தானம் வீட்டினுள் வழுக்கி கீழே தவறி விழுந்ததில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யும் நிலை.
மருத்துவமனை சென்று பார்த்து விட்டு வந்தாலும் சந்தானம் வீட்டிற்கு வந்த பின் மகளும் அங்கிருந்த வேலையினில் பத்து நாட்களாய் வரவில்லை என்றதும் அந்த நேரத்தில் தான் அர்ஜுன் கயல்விழி மீண்டுமாய் அந்த வீட்டினுள் சென்றது.
அர்ஜுன் முகத்தில் எதுவும் இல்லை என்றாலும் கயல்விழிக்கு அந்த இடத்தைப் பார்க்க பார்க்க இன்று தான் நடந்ததை போல மனதில் அழுத்தம்.
வேறு ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு தெருவில் யாரென்றே தெரியாத பெண்ணை பெண் பார்க்க சென்று அந்த பெண் மறுத்திருந்தால் கூட இவ்வளவு வலியும் வேதனையும் யாரிடமும் இருந்திருக்காதோ?
“அதெல்லாம் ஒரு பொண்ணா? அவளுக்கு நீ என்ன குறைஞ்சு போய்ட்ட? அந்த பொண்ணு முழியே சரி இல்ல. உன் உயரத்துக்கு அவ எடுப்பா இல்லை. உனக்கு மேட்சா இல்ல. உன்னை விட அழகுல கம்மி தான் அவ. இவ என்ன அவ்வளவு அழகா? உனக்கு நான் பாக்குறேன் பாரு தேவதை மாதிரி!’ என எத்தனை எத்தனையோ வசனங்கள் பேசி தங்கள் மனக்குமுறல்களை எல்லாம் இந்த தாய்மார்கள் வெளிப்படுத்தி இருப்பார்கள் தானே?
அப்படி கூட எதுவும் சொல்லிவிட முடியாதபடி இரு குடும்பத்தின் உறவுகளும் உணர்வுகளும் இங்கே ஒன்றாய் சங்கமித்து பேசிட தடையாய் இருக்க, அது தான் இங்கே தவறாகிப் போனது.
கலையரசி மீண்டுமாய் ஒருமுறை மன்னிப்பை வேண்டி அதே தினத்தை மீண்டுமாய் கிளறி விட்டு இதோ அர்ஜுனோடு தன் வீடு வந்து சேர்ந்த அரை மணி நேரத்தில் மயங்கி விழுந்திருந்தார் கயல்விழி.
“ம்மா! ஒண்ணுமில்ல தானே? ம்மா! ம்மா!” என பதறி துடித்து மருத்துவமனை அழைத்து சென்ற அர்ஜுன் செய்வதறியாது திகைத்து நின்ற நிலையில் விவேக்கிற்கு அழைக்க, அடுத்த அரை மணி நேரத்தில் எல்லாம் வந்து சேர்ந்த விவேக்கை எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு கட்டிக் கொண்ட அர்ஜுன் கண்களில் அத்தனை கண்ணீர்.
“டேய் ஒன்னும் ஆகாது அர்ஜுன்!” என்று சமாதானம் செய்த விவேக்குமே பயந்து தான் போனான் அவன் அழுகைக் கண்ணீரில். மனைவியிடம் சொல்ல கூட இல்லை விவேக். தாங்க மாட்டாளே என்ற பயம் தான்.
இருவருமே குழந்தைகள் இல்லையே! கயல்விழியின் உடல்நிலை தெரிந்தவர்கள்.
“அதிக அழுத்தம். அதுவும் அவங்க ஹெல்த் கன்டிஷனுக்கு…” என்ற மருத்துவர் தலையசைப்பில் அர்ஜுன் எச்சிலை விழுங்கினான் பயத்தில்.
“மைல்ட் அட்டாக்னே சொல்லலாம்! ரொம்ப ரொம்ப கேர் வேணும் அவங்களுக்கு. அமைதி வேணும்!” இன்னும் என்னவெல்லாம் கூறினாரோ அர்ஜுன் உடைந்தே விட்டான் அங்கே.
மண்டியிட்டு விழுந்த அர்ஜுனின் தோற்றம் இன்றளவும் விவேக் கண்களில் இருந்து மறையாதே!
அடுத்து மூன்று மாதங்களுக்கும் படுக்கை வாசத்தில் இருந்த அன்னையை குழந்தையாய் அல்லவா அவன் பார்த்துக் கொண்டான்.
“நான் கல்யாணம் பண்ணிக்கவா? நீங்க எழுந்து வந்துடுவீங்களா?” அர்ஜுன் அன்னையிடம் கேட்ட அந்த நேரம் அருகே அனன்யாவும் விவேக்கும் தான் உடன் இருந்தார்கள். நரகமான நாட்கள்.
மகனுக்காக என இழுத்து பிடிக்க நினைத்த உயிரை மூன்று மாதங்கள் முடிவில், இறைவன் பட்ட துன்பங்கள் போதும் என்பதைப் போல தனக்குள் எடுத்துக் கொண்டார்.
விஜயலக்ஷ்மி நாட்டை விட்டு சென்று ஆறு மாத முடிவில் இந்த உலகத்தை விட்டு சென்ற கயல்விழியோடு அர்ஜுனின் உலகமும் நின்றுவிட்டது.
ப்ரணித்தாவும் இதையெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை. திருமணத்தை நிறுத்தி விட்டால் தனக்கு எளிதான வழி கிடைத்துவிடும் என்ற நினைப்பிற்கு மாறாய் அர்ஜுன் கொஞ்சமும் அவளுக்கு நேரத்தை கொடுக்கவில்லை அப்பொழுது. கொடுக்கும் சூழ்நிலையும் இல்லை.
கயல்விழி இறப்பும் ப்ரணித்தா எதிர்பாராதது தான். நெஞ்சம் குறுகுறுத்தாலும் இது என்னால் வந்ததில்லை தானே என நினைத்துக் கொண்டாள்.
அடுத்தடுத்த நாட்களில் அர்ஜுனின் நிலை கண்டு அனன்யா சகோதரனுக்காக கண்ணீரில் கரைந்தால் என்றால் விவேக் தான் நினைத்திருந்தால் மொத்தமும் மாறி இருக்குமோ என வெதும்பிப் போன நாட்கள் அவை.
அடுத்த ஒரு மாதத்தில் தான் வாடகை கொடுத்து தங்கி இருந்த அறையை விட்டு அர்ஜுனிற்காக அவன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் தீபக் தன் நண்பனுக்காக.
தாயின் இழப்பிற்கு பின் வேறேதும் வேறெந்த சூழ்நிலையும் அவ்வளவு மோசமாய் தெரியவில்லை அர்ஜுனிற்கு.
அர்ஜுன் தீபக் மூலம் கொஞ்சம் தேறி வந்து கொண்டிருந்த நாட்களில் ப்ரணித்தாவும் அவனோடு இணையப் பார்க்க, இவர்கள் அனைவரின் ஆறுதலை ஏற்று கொஞ்சம் கொஞ்சமாய் வெளிவந்து கொண்டிருந்தான் அர்ஜுன். அதெல்லாம் வெளிப்பார்வைக்கு. தன் உணர்வுகளை யார் முன்பும் காட்டிக் கொள்ள தயாரில்லை அவன்.
ஆனாலும் முன்பு போல அவனில்லை என்று புரிந்தாலும் கைவிடாமல் அவனை இப்பொழுது வரை எழுப்பிக் கொண்டு தான் இருக்கின்றனர் சுற்றி நிற்கும் உறவுகள்.
தீபக் அறிவான் தன் நீண்ட கால நண்பனை.
“நீ அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சதால தான அம்மா சொன்னதும் நிச்சயத்துக்கு சம்மதம் சொன்ன? என்னையும் ஏமாத்த பாக்காத அர்ஜுன்” தீபக் ஒருமுறை கேட்க, அதற்கு பதில் கூறவில்லை அர்ஜுன்.
தீபக்கிற்கும் பதில் தேவை இல்லையே! அவன் இல்லை என்று சொல்லாததே பதில் ஆமாம் என்பதை உணர்த்தி இருந்தது.
“டேய்! இந்த பொண்ணு போட்டோ பாரேன்! அம்மா அனுப்பியிருக்காங்க!” என ஒரு நாள் தீபக் ஒரு புகைப்படத்தைக் காட்ட,
“உனக்கா டா?” என்ற அர்ஜுன்
“ஹ்ம் நல்லா தான் இருக்காங்க!” என்று சொல்ல,
“என்ன நல்லா தான் இருக்காங்க? அந்த குள்ளச்சியை விட ரொம்ப நல்லா இருக்கு பொண்ணு. அதுவும் எனக்கில்ல உனக்கு!” என்று சொல்லி முடிக்கும் முன்,
“ப்ச்!” என்று அர்ஜுன் அசட்டையாய் திரும்ப, தீபக்கை முறைத்துக் கொண்டு அவர்களுக்கு பின் நின்றிருந்தான் விவேக்.
காரணம் புரியாமல் விழித்த அர்ஜுன் பின் தான் தீபக் வார்த்தைகள் கொடுத்த நியாபகத்தில் சிறிய மென்னகை கொடுக்க,
“டேய்!” என்று திரும்பிய தீபக்கும் விவேக்கைப் பார்த்துவிட்டான்.
“ஹாய் சார்!” தீபக் திருதிருவென விழித்து அழைக்க,
“ஏன் டா! என் தங்கச்சி உனக்கு குள்ளச்சியா?” என முழுக்கை சட்டையை மடித்துவிட்டு அடிக்க ஏதாவது கிடைக்குமா என விவேக் தேட, அவன் கேட்டுவிட்டான் என்பதில் அதிர்ந்த தீபக், விவேக் கிரிக்கெட் மட்டையை எடுத்ததும் வீட்டை சுற்றி ஓடினான் அவனிடம் இருந்து தப்பிக்க.
நீண்ட நாட்களுக்கு பின் அப்படி சிரித்திருந்தான் அர்ஜுன் அன்று தான். இன்று வரையுமே நேரில் பார்க்கும் சமயம் எல்லாம் தீபக் விவேக்கிடம் வாங்காத அடிகள் இல்லை.
தொடரும்..
error: Content is protected !!