15 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:2,339
ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 15
.
‘சிறந்த கவிதை ஒன்றை எழுதேன்’ என என்னைக் கேட்டால், ‘என் மகள்’ என்பதைத் தவிர வேறு என்ன எழுதிடப் போகிறேன் நான்? – கௌதமன்.
Advertisement
தன் மார்பில் உறங்கிக் கொண்டிருந்த மகளோடு கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த கௌதமனின் கரம் மகளை அணைத்திருந்தது.
“குழந்தைய அவ ரூம்ல படுக்கப் பழக்கு கௌதமா” என அன்னை கூறியதைக் கௌதமன் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. தன் கட்டிலோடு சேர்த்து குழந்தையின் மூன்று பக்கத் தடுப்போடு கூடிய குட்டி கட்டில் இருந்தாலும், மகளின் மெத்தை என்னவோ தந்தையின் மார்பு தான். வேண்டும், தந்தையின் இதயத் துடிப்பு வேண்டும் யாழினியாள் அமைதியாகக் கண்ணயர.
நல்ல உறக்கத்திற்கிடையே கனவில் ஒரு சத்தம் கேட்டது. கனவில் தன் தலை, மார்பு, வயிறு என எங்கெல்லாமோ சுமை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. “ப்ப.. ப்ப” என்ற சத்தத்திற்கு, “ம்ம்ம்” என்றவன் கண்விழிக்காது சுகமாகத் தூக்கத்தைத் தொடர்ந்தான். அது கனவல்ல நிஜம் என்றது “ப்ப” என்ற அழைப்போடு முகத்தில் பட்டென விழுந்த அடி.
Advertisement
கண்களை அழுத்திக் கசக்கி… திறக்க, அந்த மங்கலான வெளிச்சத்தில் “பப்ப பப்பா” என மழலையில் மொழிந்து கொண்டே முளைத்துக் கொண்டிருக்கும் அரைக் குறைப் பால் பற்களைக் காட்டி சிரித்தாள் மகள்.
Advertisement
அவன் தூக்கம் கலையாது படுத்திருக்க, அந்த மங்கலான வெளிச்சத்திலும் அவன் அருகில் மகள் பிரகாசமாகத் தெரிந்தாள். மகளைப் பார்த்து செல்லமாக முறைத்துக் கொண்டே தூக்கி நெஞ்சின் மீது அமர்த்திக் கொண்டவன் நேரத்தைப் பார்க்க அது காலை மூன்று என்றது.
“உனக்கே இது அநியாயமா இல்லையா யாழி பேபி?” என்றான் குரல் கரகரக்க.
“அப்… அப்பா” என்றாள் மகள்.
Advertisement
கௌதமனின் மூளை சட்டென பிரகாசிக்க, “என்ன என்ன சொன்னீங்க யாழி பேபி? அப்பாவா? அப்பாவ பார்த்து அப்பான்னு தெளிவா கூப்பிட்டீங்களா யாழிமா?” எனப் படுத்த வாக்கிலேயே மகளை தூக்கி தன் இதழ் மீது வைத்துக் கொஞ்ச, அந்தக் குட்டிக்கு என்ன புரிந்ததோ ஒட்டுமொத்தப் பொக்கை வாயைக் காட்டி சிரித்தாள்.
அப்பா மகளின் குட்டி உலகத்தில் இப்படித் தான், கண்ட நேரத்தில் சூரியன் உதிக்கும் கண்ட நேரத்தில் நிலவு உதிக்கும். இருவரும் அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்வதில்லை.
“ஹேப்பி ஃப்ர்ஸ்ட் பர்த் டே பேபி” என்றான் மகளை அணைத்து.
“அப்பா ப்ப ப்பா” என மூச்சு விடாது அப்பாவை அழைத்தாள் செல்ல மகள். கௌதமன் காதுகளில் தேனாய் இனித்தது யாழியின் மழலை. மகள் இந்த உலகில் வந்து இன்றோடு ஒரு வருடம் முடிகிறது. மனம் நெகிழ்ந்தது. யாரோ முகம் தெரியாத ஒரு ஜீவன்… பிடித்தோ பிடிக்காமலோ ஒரு சிசுவை ஒன்பது மாதங்கள் ஏந்தி… வலிக்க வலிக்கப் பெற்றெடுத்திருக்கிறாள்.
பெற்றது தேவதையை என அவளுக்குத் தெரியாது போனதால், அவள் பெற்ற குழந்தை தன் கரத்தில் தவழுகிறாள் மகளாய். யாருக்கு… எதற்குக் கூறுகிறோம் என்றே தெரியாது, “தேங்க் யூ, தேங்க் யூ… தேங்க் யூ சோ மச்” என்றான் நெகிழ்ந்த குரலில். பின் தெளிந்தவனாக “தேங்க்ஸ் யஷோதரா” என்றான் கண்கள் மூடி.
மழலையில் கதைத்து, தகப்பன் தலை முடியை இழுத்து, கன்னத்தில் எச்சில் மழை பொழிந்து, மூக்கைக் கடித்துச் சப்பி என அட்டகாசம் செய்து கொண்டிருந்தாள் யாழி பேபி. மகளின் குட்டி தொப்பையில் குறுகுறுப்பூட்ட கௌதமனின் தலை முடியில் ஒரு கொத்து அவள் கைபிடியில் மாட்டிக் கதறியது.
“உனக்கு யாழி பேபின்னு பேரு வச்சதுக்கு பதிலா ரௌடி பேபின்னு பேரு வச்சிருக்கணும். அட்டகாசம் பண்ற இந்தக் குட்டி ரௌடி பேபிய என்ன பண்ணலாம்?” என்றவன் மகளின் குட்டி மூக்கை ஆட்டி, “லவ் பண்ணலாம்” என அந்தக் குட்டி மூக்கில் மூக்கை உரசி, “ஐ லவ் யூ பேபி” என்றான்.
சிகப்பு வாய்க்குள் இருக்கும் சிகப்பு நாக்கை உருட்டி, “அ லவுஊ” என்றாள் குட்டி யாழினியாள்.
தகப்பனுக்கு மனம் இனித்தது. உடல் சிலிர்த்து, “என்ன சொன்ன என்ன சொன்ன? ஐ லவ் யூ வா?” என்றவனை கையில் பிடிக்க முடியவில்லை. அவன் மகளின் வளர்ச்சி அபாரமாக பட்டது அவனுக்கு. நான்கு மாதங்கள் முடியும் முன்பே தலை நின்றுவிட்டது. ஆறு மாதங்கள் முன்பே வேகமாகத் தவழ ஆரம்பித்துவிட்டாள். ஏழு மாதங்களில், கூட கூட மழலையில் பதில் கொடுக்க ஆரம்பித்த கௌதமனின் செல்ல மகள், ஒரு வயதான அன்றே இப்படிக் கூறுவதைக் கூற முயற்சிக்கிறாள்.
“ஐ லவ் யூ”
“அ லவூஊஊ”
“அப்பா”
“பாப்பா”
“நான் உனக்கு பாப்பாவா? நீ தான் நீ தான் எனக்குப் பாப்பா… என்னோட யாழி பாப்பா” என மகளின் குட்டி தொப்பையில் மூக்கை உரசி கௌதமன் விளையாட யாழியின் சிரிப்பு கௌதமனையும் அறையையும் முழுவதுமாக நிறைத்தது.
மகளோடு பேசி… விளையாடி, செல்லம் கொஞ்சி… டையப்பர் மாற்றி, படுக்கையில் விட்ட பின்னும் யாழியின் விளையாட்டு அடங்கவில்லை. ‘நடுச் சாமத்தில் எழும் குழந்தையோடு விளையாடாது மீண்டும் உறங்க வை’ என எத்தனையோ முறை வைஷாலி கூறிவிட்டார். கௌதமன் காதுகளில் அது விழவே இல்லை. ‘குழந்தைய தனி படுக்கையில போடு’ என்றார், மகன் காதுகளில் அதுவும் விழவில்லை. அது என்னவோ அப்பா-மகள் என அவர்கள் உலகில் அவர்கள் மட்டுமே இருக்க, அதில் வைஷாலியால் கூட நுழைய முடியவில்லை.
“தூங்கு” என மகளைப் படுக்க வைத்தவன் கண்கள் மகளின் குட்டி குட்டி விரல்களில் பதிந்தது. நேற்று வேலையாள் விரலைப் பார்த்து… அவன் மகளுக்கு வேண்டும் எனக் கேட்டு, இவன் இம்சை தாங்காது வைஷாலி பேத்தியின் விரல்களில் அரைத்த மருதாணி இலைகளைத் தொப்பிகளாய் வைத்து விட்டார். மகள் உறங்கிக் கொண்டிருந்த ஒரு மணி நேரத்தில் ஆரஜ் நிறம் பிடித்திருந்தது அந்தக் குட்டி விரல்களில்.
இப்பொழுது இன்னும் சிவந்திருந்த மகளில் குட்டி விரல்களில் முத்தம் பதித்தான். குட்டி கால்களும், பாதங்களும் அடர் ஆரஞ்சு நிற வட்டத்தைக் கொண்டிருந்தது.
“படுத்திரு வரேன்” எனச் சென்றவன், மகளின் பிறந்த நாள் பரிசாக வாங்கி வைத்திருந்த கொலுசை அணிவித்தான். கொழு மொழு வெண்பாதங்களில் ஆரஞ்சு வட்டங்கள் ஓர் அழகென்றால், அழகிற்கு இன்னும் அழகைச் சேர்த்தது அந்த முத்துகள் நிறைந்த கொலுசு.
“ஹேப்பி பர்த் டே பேபி. நீ பிறந்து, உன் அப்பாக்கு உயிர் கொடுத்திருக்க பேபி” எனப் பாதங்கள் இரண்டிலும் முத்தம் வைக்க, மீசையின் குறுகுறுப்பில் மகள் கால்களை ஆட்டிச் சிரித்தாள் கௌதமனின் மகள்.
“ரொம்ப நேரம் ஆச்சு, தூங்கு டா என் தங்கமே” என்றவன், பால் கலக்கிக் கொடுத்து, மார்போடு போட்டு நடக்கவும் மெல்லக் கண்ணயர்ந்தாள் யாழி.
மகளோடு மெத்தையில் விழவும் கடிகார முள்ளில் ஒன்று நாலிலும், ஒன்று ஆறையும் நெருங்கிக் கொண்டிருந்தது. மகள் உறங்கியிருக்க, கண் மூடியவனையும் தூக்கம் அன்போடு ஆட்கொண்டது.
பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவது என வைஷாலி கேட்டிருக்க, கூட்டத்தைக் கூட்டி மகளை வருத்தக் கௌதமனுக்கு மனம் இல்லை. கூட்டம் வேண்டாம் என்றுவிட்டான். இனிப்பு வகைகளை மகளுக்குப் பழக்கப்படுத்தவில்லை என்பதால் “கேக் வேண்டாம், அது குழந்தைக்கு நல்லது இல்ல” என்றான்.
“ஊர்லயே இவனுக்கு மட்டும் தான் பொண்ணு இருக்க மாதிரி” என அன்னை நொடித்துக் கொண்டார்.
“யாழிக்கு எது பிடிக்குமோ அதச் செய்வோம் மா… அது தான் அவளுக்கு ஸ்பெஷல்” என மகளை மட்டுமே முதன்மை படுத்துபவனிடம் என்ன சொல்ல முடியும்? “சரி” என்றுவிட்டிருந்தவர், இன்று காலையில் கீழே வந்த கௌதமனிடம், “கண்டிப்பா கோவிலுக்கு போகணும் கௌதமா… அப்பறம் உன் இஷ்டம் என்னவோ அதச் செய்” என்றார் கட்டளையாக.
செல்ல மனம் இல்லையென்றாலும், “சரி மா” என்றான்.
வீட்டில் வேலை செய்யும் அனைவருக்கும் மகளின் சார்பாக ஒரு டப்பா இனிப்போடு, ஒரு மாதச் சம்பளமும், புதுத் துணியும் கொடுத்தான். அவர்கள் வாழ்த்த வேண்டும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லை. தோன்றியது… கொடுத்தான், அவ்வளவே. இது என்ன புது பழக்கம் என வாசுதேவன் பார்த்தாலும், நல்லதைச் செய்யும் மகனை வியந்து பார்த்ததோடு சரி.
காலை உணவிற்கு தாக்ஷாயினியை அழைத்திருந்தான் கௌதமன். “எதுக்கு கௌதம்? எனக்கு எப்படியோ இருக்கு கௌதம்” எனத் தயங்கினாலும், அவன் வற்புறுத்தலோடு ‘பிறந்த நாள் விழா தானே’ என்ற எண்ணமும் தோன்ற வர சம்மதித்திருந்தாள். வந்தவளை வாசலில் சென்று அழைத்து வந்தான் கௌதமன்.
“ஹேப்பி பர்த் டே யாழிமா” என சின்னவளின் கன்னத்தில் இதழ் பதிக்கச் சென்றவளிடம், “ஆச்” எனக் குழந்தை தாவினாள்.
“யாழி குட்டி… பர்த் டேவா இன்னைக்கு?” என அன்போடு ஏந்திக் கொண்டாள் தாக்ஷாயினி. சின்னவளின் மழலை புரியவில்லை என்றாலும் இவளும் கூட கூட ஏதேதோ பேசினாள்.
“சினிமா பாப்ப இல்ல… வலது கால எடுத்து வச்சு, உள்ள வா” எனக் கைப்பிடித்து வீட்டினுள் அழைத்துவந்தான் கௌதமன். தாக்ஷாவின் உள்ளுக்குள் பரவசம். தன் வருங்காலம் இங்கு தானே… மனம் சிறகில்லாது பறந்து.
வீடு மிக மிக அழகாக இருந்தாலும், யாழியும், செயற்கை அருவியும் மட்டுமே சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது.
“பார்ட்டின்னு நினைனைச்சேன். எங்க யாரையுமே காணம்?” என விழித்தவளைப் புன்னகையோடு நீள்விருக்கைக்கு அழைத்துச் சென்றான்.
“முதல்ல உக்காரு… அம்மா அப்பாவ இன்ட்ரோ குடுத்துட்டு, வீட்ட சுத்தி காட்டுறேன்” என்றான் முகம் முழுவதும் புன்னகையைப் பூசிக் கொண்டு. தாக்ஷாவை பார்த்ததில் அவனுக்குள்ளும் இனம் காணமுடியாத ஒரு மகிழ்ச்சி. அவளுக்குத் தான் படபடப்பாகவும் தவிப்பாகவும் இருந்தது. கௌதமனை பெற்றவர்களுக்குத் தன்னை பிடிக்க வேண்டுமே என உள்ளுக்குள் சுனாமி அடித்துக் கொண்டிருந்தது.
“யாரு வந்திருக்கா கௌதமா?” என வந்த அன்னையிடம், “அம்மா தாக்ஷாயினி… சொன்னேனே, மை லவ்” என அறிமுகப்படுத்த, அவள் திணறி போனாள். தோழி எனச் சமாளிப்பான் என நினைத்தவளுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒன்று சேர்ந்து தாக்கியது.
குழந்தை கையில் இருக்கவும், தலையை மட்டும் அசைத்து, “வணக்கம் ஆன்ட்டி” என்றாள்.
“வா மா… உக்காரு. என்ன சாப்பிடுற?” என வைஷாலி இன்முகமாகவே வரவேற்றார்.
தாக்ஷாவிற்கு நன்கு பழக்கப்பட்டிருந்த குழந்தையும், “ஆச் ஆச்” என அவளோடு பேச, அவளும் “என்னடா மா?” என பதில் பேச… பார்த்திருந்த வைஷாலியிடம் நிம்மதிப் பெருமூச்சு.
மகனின் உடல்நிலை தேறிவிட்டது என்றாலும், திருமணம் என வரும் போது எத்தனை கேள்விகள் வரும் என அறியாதவரா வைஷாலி. போதாத குறைக்கு கையில் ஒரு குழந்தையும் இருக்க… மகனுக்குக் குடும்ப வாழ்வு எப்படியோ என எண்ணிய தாய்க்கு உள்ளுக்குள் நிம்மதி பரவியது மறுக்க முடியாத உண்மை. அதுவும் பெண் பார்ப்பதற்கு அளவெடுத்து செதுக்கிய விக்டோரியா சீக்ரெட் மாடல் போல் அல்லவா இருக்கிறாள்? இருவரின் ஜோடி பொருத்தம் கண்களை நிரப்ப, வைஷாலியின் முகத்தில் புன்னகை மட்டுமே.
ஒரு கோப்பையில் கேரட் சாற்றைக் கொடுத்தவர், “அன்னைக்கு ஏர்போர்ட்ல… நீ தானே மா?” என ஆரம்பித்து, அவரின் வருங்கால மருமகளோடு அமர்ந்து கொண்டார் வைஷாலி. தங்களின் வேர் எனத் தெரிந்ததும், இந்த உறவு… அந்த உறவு என அலசபட, ‘இவரோட … அவரோட… அந்த உறவுக்கார பொண்ண கட்டினது உங்க மாமாவா? அப்போ நீயும் எங்கச் சொந்தம் தான்’ எனத் தாக்ஷா, கௌதமனுக்கு ஏதோ ஒரு முறையில் சொந்தமானாள்.
கணவன் வரவும், “ஏங்க நம்ம கன்னியப்பன் இல்ல… அவரோட ரெண்டு விட்ட அக்கா சுமதி வீட்டுகாராரோட பங்காளியோட பொண்ணு பிரியதர்ஷனி…” என்ற வைஷாலியின் கூற்றில் கணவன் முழிக்க, “அதுதாங்க கோயம்பத்தூர் வேலுசாமியோட பொண்ணு பிரியதர்ஷனி” எனவும்,
நினைவு வந்தவராக, “நம்ம புவனேஷ் தர்ஷன்… அவர் சம்சாரம் தான?” எனத் தலை அசைத்தவரிடம், “அவங்க பொண்ணு தாக்ஷாயினி…” என அவரிடமும், “கௌதமன் அப்பா மா…” என இருவரையும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகப்படுத்தினார் வைஷாலி.
“அப்பா எப்படி மா இருக்காங்க?” “தாத்தா நல்லா இருக்கங்களா?” “உனக்கு ஒரு அண்ணன் இருக்கான் இல்ல… என்ன பண்றான்?” சொந்த பந்தங்கள்… அவர்களின் நலன் எனப் பேச்சு சென்றது. காலை உணவு முடியும் முன்னமே தாக்ஷா, கௌதமனின் குடும்பத்தோடு நன்கு பொருந்திக் கொண்டாள்.
நடப்பதைப் பார்த்து அமர்ந்திருந்த கௌதமன் முகத்தில் புன்னகை நிரந்தர குடியுரிமை வாங்கியிருந்தது. தாக்ஷாவின் ஒவ்வொரு அசைவையும் தனக்குள் வாங்கிக் கொண்டிருந்தான் கௌதமன். தன்னை அவ்வப்போது தவிப்பாய்… காதாலாய்… கேள்வியாய், பார்க்கும் தாக்ஷாவை ரசிக்க தோன்றிய மனதை அடக்கும் எண்ணமே இல்லாது கண்களில் ரசனையோடு அமர்ந்திருந்தான்.
இது என்னவிதமான உணர்வு என அவனுக்குப் புரியவில்லை. தானா… இப்படிக் காதல் மயக்கத்தில் விழுந்து கிடப்பது? எனக் கௌதமனால் நம்ப முடியவில்லை. ஆனாலும்… நேசம் தரும் கனவுகளும், காதல் தரும் தித்திப்பும் இன்னும் வேண்டும் என்றே கூறுகிறது இந்த மனது… அவனும் என்னதான் செய்வான்?
மகனின் மலர்ந்த முகத்தைப் பார்த்த வைஷாலியும், “நீயும் கோவிலுக்கு வரியா மா?” என தாக்ஷாவை அழைக்க, “அவ வருவா” என அவளுக்காகக் கௌதமன் பதில் உரைத்தான்.
“லன்ச் அண்ட் டின்னர் என்னோடையது. எங்க ரெஸ்டாரன்ட்ல… நீங்களும் மாமாவும் வரணும் ஆன்டி,” என அழைத்தவளிடம், “ஈவ்னிங் ஒரு மேரேஜ் ரிஷப்ஷன் போகணும்மா… நீங்க மூணு பேரும் போயிட்டு வாங்க” எனத் தன்மையாக மறுத்தார் வைஷாலி.
அப்படியாக யாழினியாளின் பிறந்த நாளுக்காக, காலையில் வடபழனி கோவிலுக்குச் செல்வதாகவும், அங்கிருந்து அப்படியே தாக்ஷாயினியின் பொறுப்பில் இயங்க ஆரம்பித்திருந்த அவர்களின் நட்சத்திர ஹோட்டலில் விருந்தென்றும் முடிவானது.
மதிய விருந்திற்குப் பின் குழந்தைகளுக்கான நீச்சல் குளத்தில் விளையாட்டு, குழந்தை உறங்கவென அறை, மாலையின் அங்கிருக்கும் விளையாட்டு கூடத்தில் விளையாட்டு என அனைத்தையும் யாழினியாளுக்காக ஏற்பாடு செய்திருந்தாள் தாக்ஷா.
“எதுக்கு இவ்வளவு?” எனக் கேட்டவனிடம், “எங்க பாண்டிங்க் டைம்” என முடித்துவிட்டாள். இருவரும் ஒத்துப்போவது அவனுக்கு மிக மிக முக்கியம் என்பதால் கௌதமன் ஒன்றும் கூறவில்லை.
அவ்வப்போது குட்டு குட்டி பொறாமைகளும் பிடிவாதங்களும் வரும். அதைக் கண்டும் காணாது கடக்கக் கௌதமன் பழகி இருந்தான்.
“என் மனசு பெருசு தாக்ஷா. அதுல உனக்குன்னு தனி இடம் கொடுக்க முடியாதுன்னு நினைச்சா நான் உங்கிட்ட வந்து என் காதல சொல்லி இருக்கவே மாட்டேன். இப்போ நீ அனுமதிக்கிற சின்ன சின்ன கோபமும் பொறாமையும் நம்ம வருங்காலத்து நிம்மதியை சிதைச்சிடும்.
நல்லா யோசி… நமக்குப் பிறக்கிறதும் இதயே தான் செய்யும். அப்பவும் இதயே பண்ணுவியா? அப்போ அந்த உரிமைப் போராட்டம் உன் கண்ணுக்கு ரசனையா… அழகா தானே தெரியும்? வளர வளர அவ உலகம் நான் மட்டுமா இருக்க மாட்டேன்… அப்போ இப்படி என் பின்னாடியே என் மக சுத்த மாட்டா. புரியுதா?
யாழி என் குழந்தை. அவளுக்கு அம்மாவா அப்பாவா நான் இருக்கேன். அவள அம்மாவா நேசிச்சு தான் ஆகணும்ன்னு ஒரு கடமைய உன் மேல நான் சுமத்த மாட்டேன். ஆனா என்னோட வாழ நீ முடிவெடுத்தா, என் சந்தோஷத்த உன்னாலயும் நேசிக்க முடியும்ன்னு நான் நம்பலாமா?” என கௌதமன் பேசியிருக்க, தாக்ஷாவால் எப்படி முடியாது எனக் கூற முடியும்.
“நீன்னா… அது நீயும் உன் பொண்ணும்ன்னு எனக்குத் தெரியும் கௌதம்” எனக் கூறிய பின், நிதர்சனத்தை ஏற்க முயன்று வெற்றியும் காண்கிறாள் தாக்ஷாயினி. இதோ தாக்ஷாவின் கரத்தில் குட்டி யாழினியாள் கோவிலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.
“நெத்தி சூட்டி, ஜிமிக்கி, எது வேணும்? பிரேஸ்லெட்டா வளையலா?” குழந்தையை மேசையில் அமர்த்தி நகைகளைப் போட்டுக் கொண்டிருந்தாள் மகளின் வருங்கால அன்னை.
“மேச்சிங் மேச்சிங்! மூணு பேருக்கும் பாட்டில் கிரீன் கலர்” எனக் தூக்கி வந்து கௌதமனிடம் குழந்தையை நீட்டினாள் தாக்ஷா.
அப்பாவின் கால்களின் மேல் இரு பாதங்கள் இருக்க, இருகரங்களும் அப்பாவின் பிடியில் இருக்க, அப்பாவும் மகளுமாக நடுக்கூடத்திற்கு நடந்து வந்தனர். வேட்டி சட்டையில் அப்பாவும், பட்டுப் பாவாடை சட்டையில் மகளும் என அவர்கள் நடந்து வரும் அழகைக் கௌதமனின் கைப்பேசியில் பதிந்து கொண்டிருந்தாள் தாக்ஷா. சிரிப்பும் கொலுசொலியும் கூடத்தை நிரப்பியது.
பார்க்கவே முடியாது என்ற காட்சி கண்கள் முன் அரங்கேர, வைஷாலிக்குள்ளும் வாசுதேவனுக்குள்ளும் அத்தனை நிறைவு. மகன், மருமகள், பேத்தி என நிறைவாக குடும்பம். போதும்… இது போதும் என பெற்றவர்கள் உள்ளம் அதன் அமைதியை அடைந்து.
“வந்ததும் சுத்தி போடணும் வைஷூ. ஊர் கண் எல்லாம் என் பேத்தி மேல தான் இருக்க போகுது” என்றார் வாசுதேவன்.
பெற்றவள் கண்கள் தான் பிள்ளைகளின் மேல் அதிகம் படுமாமே. அப்படியா? அப்படி என்றால்… ஊர் கண்களோடு பெற்றவளின் கண்களிலும் விழுவாளா யஷோதராவின் மகள்?