Skip to content
Post Views: 6,895
அத்தியாயம் – 11
“அவ்ளோ பெரிய மனுஷி ஆய்ட்டியா நீ?? என் கல்யாணத்துக்கு வர மாட்டேன்னு சொன்னியாமே?? உனக்கு எவ்ளோ கொழுப்பு இருக்கணும்??” என கோபத்துடன் வந்தனாவிடம் சண்டை கட்டிக் கொண்டிருந்தாள் சங்கீதா.
Advertisement
விடிந்தால் திருமணம் என்றிருக்க, முதல்நாள் காலை தான் ஊரிலிருந்து வந்திறங்கி இருந்தனர் நாட்டரசன் குடும்பத்தினர்.
இளவரசியையும், வந்தனாவையும் ஒரு வாரம் முன்பே வருமாறு இங்கு அறிவழகன் வீட்டார் எவ்வளவோ அழைத்தும் கூட, வந்தனா வர மறுத்து விட, அவளைக்கொண்டு இளவரசியும் வயலூரிலே தேங்கி விட்டார்.
அன்று நடந்த கலவரத்தின் பின், இளவரசிக்கும் நாட்டரசனுக்குமான பேச்சுவார்த்தை சுத்தமாக நின்று விட, தேவைக்கு அளவான பேச்சுக்கள் மட்டும் வந்தனாவின் மூலம் நிகழ்ந்து கொண்டிருந்தது.
Advertisement
அந்த சம்பவத்திற்குப் பின் வந்தனா முற்றிலும் மாறிப் போக, அமைதி ஒன்றே அவளின் பாஷையாகிப் போனது. வாழ்க்கையே வெறுத்துவிட்டதைப் போல் அப்படி ஒரு ஓய்ந்து போன தோற்றம் பெண்ணவளிடம். எப்படி இருந்த பெண், இன்று இப்படி தனக்குள் ஓடுங்கிப் போய் மிகவும் மெலிந்து போய் விட்டாளே என அவளைக் காணக் காண இளவரசிக்கு தாளவில்லை. எனவே நாட்டரசன் முன்பு நடமாடுவதைக் கூட தவிர்த்து அவரை மொத்தமாய் ஒதுக்கி விட்டார்.
Advertisement
மகளின் முகம் காண்கையில் சில சமயம் நாட்டரசனுக்கே, அவளை மிகவும் வருத்துகிறோமோ எனத் தோன்றினாலும், ‘எல்லாம் அவ நல்லதுக்குத் தான்’ என மனதை தேற்றிக் கொள்வார்.
கணவன் பேசியதற்காகத் தான் மகள் இப்படி இருக்கிறாள் என நினைத்துக் கொண்டிருந்த இளவரசிக்குத் தெரியவில்லை, அவரின் மகள் காதலின் சுகத்தை சுவாசிக்கும் முன்பே காதலின் வேதனையில் வெந்து தனக்குள்ளே கொஞ்சம் கொஞ்சமாக மரித்துக் கொண்டிருக்கிறாள் என.
இளவரசி எவ்வளவு முயன்றும் அவளை இயல்புக்கு கொண்டு வர முடியாததால், சங்கீதாவின் திருமணம் முடிந்த பின் நாட்டரசனிடம் இதைப்பற்றி பேசி இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என தீர்மானித்த பின்பே சென்னை கிளம்பியிருந்தார்.
Advertisement
இதற்கிடையில் மலர் அவளின் தமையன் மூலம் வினய்யை பற்றி முழுதாக விசாரித்து அறிந்திருந்தாள். அவனைப் பற்றி அறிந்த பின், நிச்சயம் வினயையும் வந்தனாவையும் சேர்த்து வைத்து, தன் தோழியின் வாழ்வில் வினய்யின் மூலம் வெளிச்சத்தைக் கொண்டு வர வேண்டும் என அவள் உறுதியாக இருக்க, அவளும் அவர்களோடு சென்னை கிளம்பியிருந்தாள்.
உறவு எனும் முறையில் மலரின் வீட்டிற்கும் அறிவழகன் பத்திரிக்கை வைத்திருக்க, அவளின் பெற்றோர்களும் வந்தனாவுடன் சென்று வரட்டும் என மலரை அனுப்பி வைத்திருந்தனர்.
இப்படியாக அவர்கள் இங்கே வந்து நுழைந்ததுமே சங்கீதா, தன் தங்கையைப் பிடித்து வைத்து கேள்விகளால் துளைக்க, அவளிடம் அசாத்திய மௌனம் மட்டுமே பதிலாய்.
அவளின் இந்த மாற்றம், தமக்கையாய் சங்கீதாவை துணுக்குறச் செய்ய, “தனு!!! என்னடா??? சித்தப்பா பத்தி தெரிஞ்சது தான?? இதுக்கு ஏன் இவளோ டவுன் ஆய்ட்ட?? பார்த்துக்கலாம் டா.. உனக்கு பிடிக்காத எதுவும் நடக்காது.. நாங்களாம் இருக்கோம்தான?? அப்படி ஈசியா விட்டிடுவோமா உன்னை???” என ஆதரவாய் வந்தனாவின் தோள் பற்ற,
‘எனக்கு பிடிச்சதும் நடக்கவே நடக்காது சங்கி’ என தனக்குள் விரக்தியாய் கூறிக் கொண்டவளுக்கு, மறக்க நினைக்க நினைக்கத் தான் இன்னுமின்னும் ஆழமாய் அவளுள் வேரூன்றி நின்று கொண்டிருந்தான் வினய்.
தன் சோகம் மற்றவர்களையும் பாதிக்கிறது என முயன்று தன் முகத்தை இயல்பாக்கிக் கொண்டு சோபையாய் புன்னகைத்தவள், “நான் ஓகே தான் சங்கீ!! நீ என்னைபத்தி ஃபீல் பண்ணாம ஹேப்பியா ரெடி ஆகு” என்றாள்.
அதற்குள் அங்கே வந்த மலர், “என்ன சங்கி அக்கோவ்!! பெங்களூருல போய் இருந்து சும்மா பெங்களூரு தக்காளி மாதிரி செவ செவன்னு ஆகிப்புட்டீங்களே!! அசத்துறீங்க போங்க” என சங்கீதாவைக் கண்டு சிலாகிக்க,
“வா மலர்!!! இன்னும் நீ மாறவே இல்லை பாரேன்.. வாய் கொஞ்சமும் குறையலை” என புன்னகையுடன் அவளை வரவேற்றாள் சங்கீதா.
“வருசா வருசம் ஒரு மனுசனுக்கு வாயெல்லாமா மாறும்?? பாரேன் இதை யாரும் எனக்குச் சொல்லவே இல்லை” என போலியாய் அவள் வியக்க,
“சேட்டை!!!” என அவளின் கன்னம் கிள்ளினாள் சங்கீதா.
“சரி உங்களுக்கு ஏதோ ஆம்பளை மேக்கப் போட்டாங்களாமே??? அப்படியா???” என ஆச்சரியமாய் கேட்பது போல் அவள் தனக்கான விஷயத்திற்கு தாவ,
அவதுவரை இவர்களின் சம்பாஷனையில் கலந்து கொள்ளாத வந்தனாவிற்கு, தோழியின் கேள்வி எதனால் என்று புரிந்ததால், “இப்போ இது வேற ஏன்?? வேண்டாம்” என்பது போல் அவள் மலரைப் பார்க்க,
மலர் அவள் பக்கம் திரும்பவே இல்லை.
“உன்கிட்டயும் சொல்லிட்டாளா தனு??” என சிரித்துக் கொண்டே கேட்ட சங்கி, சற்று நேரம் வினய்யின் பெருமைகளை மலருக்கு எடுத்துரைக்க,
அவளும் ஒன்றும் தெரியாதது போல் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
“அப்போ இன்னைக்கும் அவுக தான் வாராகளா???” என்று தனக்கு வேண்டிய விஷயத்திற்கு தாவ,
வந்தனாவின் இதயம் படபடவென அடித்துக் கொள்ளத் துவங்கியது.
நிச்சயம் நாளை காலை திருமணத்திற்கு அவன் தான் வருவான் என முன்னமே தெரிந்தது தான். ஆனால் கோடியில் ஒரு வாய்ப்பாய் அவன் வந்துவிடக்கூடாது என ஒரு மனமும், இறுதியாக ஒரு முறை அவனைப் பார்த்துவிட மாட்டோமா என இன்னொரு மனமாய் பிரிந்து அவளே தனக்குள் போராடிக் கொண்டிருக்க, இப்போது மலரின் கேள்வி அவளினுள் பெரும் பிரலயத்தையே உண்டு பண்ணி இருந்தது.
‘இன்றே அவனை சந்திக்க வேண்டி வருமோ??? அவனை நேரில் கண்டால் என் முடிவில் என்னால் உறுதியாக இருந்து விட முடியுமா??? அதுவும் அந்தக் கண்கள்!!! அதைக் கண்ட பின்பும் என்னால் இனியொருமுறை அவனை மறுத்துவிட்டு விலகிவிடத்தான் முடியுமா??? கூடாது!! அவனை சந்திக்கவே கூடாது!! என் பெற்றோரை என்னால் ஏமாற்ற முடியாது’ என நொடி நேரத்தில் அவளுக்குள் இத்தனை போராட்டங்கள் நடந்து கொண்டிருக்க,
இங்கே சங்கீதாவோ, “இல்லை மலர்!!! அவர் ரொம்ப பிஸி.. அவர் இப்போ சினி ஃபீல்ட்ல ரொம்பவே ஃபேமஸ் ஆய்ட்டாரு.. சோ இந்த மாதிரி ஃபங்ஷனுக்கு பண்றதெல்லாம் ரொம்ப ரேர்.. மாமா மினிஸ்டர் அப்படின்றதுனால தான் நம்மளுக்கே ஒத்துக்கிட்டாங்க.. இன்னைக்கு சும்மா ரிலேட்டிவ்ஸ்க்கு மட்டும் தான ரிசப்ஷன்.. அதுனால அவங்க வரலை.. நாளைக்கு வெடிங்க்கும் சண்டே முக்கியமான பொலிட்டிஷியன் அப்பறம் செலிபிரிட்டிஸ்க்கு எல்லாம் ஒரு ரிசப்ஷன் அரேஞ்ச் பண்ணிருக்காங்க.. அது ரெண்டுக்கும் அவர் வருவாரு” என்றாள் விளாவாரியாக.
அதை மனதில் குறித்துக் கொண்ட மலர், நிச்சயம் நாளை வினய்யுடன் பேசி விட வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டாள்.
இங்கு வந்தனாவிற்கோ, இன்று அவன் வரப்போவதில்லை என்பது ஆசுவாசமாகவும் அதே சமயம் சிறு ஏமாற்றமாகவும் இருந்தது.
அதன்பின் அவர்களுக்கு பேசிக்கொள்ளக் கூட நேரமில்லாமல், உறவினர்களும் நண்பர்களும் வந்து கொண்டு இருக்க, மாலை அந்த பிரம்மாண்டமான பீச் ரிசார்ட்டில் சதீஷ் – சங்கீதாவின் வரவேற்பு, நிறைவாய் நிகழ்தேறியது.
மறுநாள் அதிகாலையிலே கிளம்பி இருந்த அகிலா மகனின் கதவைத் தட்ட,
“என்ன மாம்?? அதுக்குள்ள கிளம்பிட்டிங்க?? உங்களை நான் முகூர்த்த டைம்க்கு வந்தா போதும்னு சொன்னேன் தான?? உங்களுக்கு தூக்கம் ரொம்ப அவசியம் இப்போ.. ஃபர்ஸ்ட் ஹெல்த்தை பாருங்க நீங்க!!” என கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த வினய் கண்டிப்புடன் கூற,
கணேசனும் அங்கு வந்துவிட்டார்.
“என்னப்பா நீங்களும் தூங்கலையா?? டைம் இப்போதான் 4 ஆகுது.. அப்போ எத்தனை மணிக்கு எழுந்தீங்க ரெண்டு பேரும்” என இடுப்பில் இரு கைகளையும் வைத்து அவன் கேட்க,
அவரோ மகனை பாதாதி கேசம் வரை ஆராய்ந்து பெரிதாய் புன்னகைக்க,
அவரின் பார்வையில் வினய்க்கு லேசாய் வெட்கம் வேறு வந்து தொலைக்க, நெற்றியை நீவியவாறு இதழ் குவித்து ஊதி அதை அவன் மறைக்க முயல, முன்பே அழகன் தான் என்றாலும் அந்நொடி பேரழனகாய் மிளிர்ந்த மகனைக் காண கண்கோடி போதவில்லை பெற்றவருக்கு.
எப்பொழுதும் இதுபோல் வேலைகளுக்கு செல்லும் பொழுது மிகவும் காஸ்யூவலாகவே உடை அணிந்து செல்பவன், இன்று தன்னவளைக் காணப் போகும் ஆவலில், மிகுந்து கவனமெடுத்து கிளம்பியிருந்தது பார்த்தவர்களுக்கு அப்பட்டமாய் தெரிந்தது.
மகனின் மாற்றம் கணேசனுக்கு மிகவும் உவகை அளிப்பதாக அமைய, ‘என்றும் என் மகன் இதே சந்தோஷத்துடன் அவனுக்கு பிடித்த பெண்ணுடன் வாழ வேண்டும்’ என அவசரமாய் இறைவனுக்கு ஒரு வேண்டுதலை வைத்தவர்,
“ரொம்ப சந்தோஷமா இருக்கு வினய்!!! என்னைக்கும் இப்படியே சிரிச்சிட்டே இருக்கணும் நீ!!” என அவனின் தலையில் கைவைத்து மனம் நிறைந்து அவர் வாழ்த்த,
அகிலாவிற்கும் அந்த நொடி, வினய்யின் மகிழ்ச்சியே முதன்மையாகப் பட, முகம் தெரியா அப்பெண்ணுடன் தன் மகனின் வாழ்வு சிறக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார்.
“சரி வினய்!! லேட்டாச்சு!! ஸ்டெல்லா வெய்ட் பண்றா வெளிய.. நீ அம்மா கூட கிளம்பு.. அவ இங்க இருந்தாலும் தூங்காம அந்தப்பொண்ணு எப்படி இருப்பான்னு யோசிச்சுட்டே தான் இருப்பா.. அதுக்கு உன் கூடவாச்சும் வரட்டும்” என கணேசன் அவர்களைக் கிளப்ப,
“நீங்க வரலையாப்பா??” என்றான் வினய்,
“இல்லப்பா.. எல்லாரும் போனா பார்க்குறவங்களுக்கு வீணா சந்தேகம் தான் வரும்.. நீங்க போய்ட்டு வாங்க” என கணேசன் கூறிவிட,
“ஓகே டாட்!!! அப்போ நாங்க கிளம்புறோம்” என தந்தையை அணைத்த வினய்,
“உண்மையை சொல்லணும்னா லைட்டா டென்ஷனா இருக்கு டாட்!!! மாம்க்கு பிடிக்கும் தான அவளை??” என மிக மெல்லிய குரலில் அவன் மெலிதாய் எட்டிப்பார்த்த பதட்டக்குரலில் கூறவும்,
அவனின் முதுகை ஆதரவாய் தட்டிக் குடுத்து புன்னகைத்த கணேசன், “அந்தப்பொண்ணுக்கு உன்னை பிடிச்சா போதும் வினய்!!! மித்ததை அப்பா பார்த்துக்கிறேன்… யூ டோண்ட் வொர்ரி.. ஃபீல் ஃப்ரீ” என்று புன்னகையுடன் அவனை வழியனுப்பி வைத்தவர்,
அகிலாவை தனியாக அழைத்து, “இப்போ நீ பார்க்கப் போற பொண்ணு உன் மருமகள்ன்னு மனசுல பதிய வச்சிட்டு அப்பறம் போய் பாரு.. சும்மா அந்தப்பொண்ணுகிட்ட அது சரியா இல்லை இது சரியா இல்லைன்னு ஆராய்ச்சி பண்ற வேலை வேண்டாம்.. நமக்கு வினய் சந்தோஷம் தான் முக்கியம்” என அவர் எச்சரித்து அனுப்ப,
அகிலாவும் முயன்ற அளவிற்கு எதிர்மறை எண்ணங்களை மனதில் சூழ விடாமல், வந்தனாவைப் பார்க்க ஆவலுடன்(?) கிளம்பினார்.
ஸ்டெல்லா கூட அதிசயமாக இவர்களுடன் வரும் அகிலாவைக் கண்டு புருவம் உயர்த்தினாலும் அவர்களிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
காலை பத்தரை மணிக்கு மேல் தான் முகூர்த்தம் என்பதால், இவர்கள் ஐந்தரை போல் மண்டபத்தை அடைந்திருந்தனர்.
மண்டபத்தின் உள்ளே வந்ததும் வினய்யின் கண்கள் நாலாபக்கமும் அவனின் தேவதையைத் தேடி அலைபாய, அந்தோ பாவம் அவனுக்கு கிட்டியது ஏமாற்றமே.
வந்தனா தான், இவன் கண்ணில் மட்டும் அகப்பட்டுவிடவே கூடாது என சங்கீதாவின் அறைப்பக்கமே தலைவைத்துப் படுக்காமல், தலைவலி என வேறொரு அறையில் தஞ்சம் புகுந்திருந்தாளே, பின்பு எங்கு இவனுக்கு அவனின் தேவதையின் தரிசனம் கிடைக்கப் போகிறது??
இங்கே நேரம் கரையக் கரைய வந்தனாவின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் அல்லாடியது.
‘இந்நேரம் அவன் வந்திருப்பானோ?? என்னைத் தேடியிருப்பான் தானே?? என்னைக் காணவில்லை என்றால் எப்போதும் சிரித்தபடி இருக்கும் அவனின் புன்னகை முகம் வாடிவிடுமோ??’ என ஏதேதோ எண்ணங்கள் வந்து அலைமோத, படுக்கையில் இருந்து எழக்கூடத் தோன்றாமல் அவள் அப்படியே படுத்திருக்க,
மலருக்கு தோழியை எண்ணி ஆத்திரமாய் வந்தது.
“இந்தா புள்ளை!! உனக்கு என்ன தனியா சுப்ரபாதம் பாடோணுமா?? நடக்கப் போறது உங்கக்கா கல்யாணம்.. அதாவது உனக்கு நெனப்புல இருக்கா??? யாருக்கு பயந்துட்டு இப்படி தலைவலின்னு தலைமறைவா சுத்திட்டு இருக்க நீன்னு எனக்குத் தெரியாதாக்கும்?? எழுந்திரு புள்ள நீ மொதல்ல” என அவளின் முதுகில் சுளீரென்று ஒரு அடி வைத்தாள் மலர்.
அதில் பட்டென எழுந்து அமர்ந்த வந்தனா, “என்ன தான் உன் பிரச்சனை மலர்??” என இயலாமையுடன் கேட்டு வைத்தாள்.
“நீ தான் பிரச்சனை!!!” என சூடாக வந்து விழுந்தது பதில் மலரிடமிருந்து.
அதற்கு பதிலேதும் பேசாமல் வந்தனா அப்படியே திரும்பிக்கொள்ள,
அதில் கடுப்பாகி அவள் முகத்தைப் பற்றி தன்புறம் திருப்பிய மலர், “இந்தா இப்படி இழவு விழுந்த மாதிரி மூஞ்சியை வச்ச அப்படியே இழுத்து வச்சு அரைஞ்சுபுடுவேன் சொல்லிட்டேன்.. என்ன இப்போ குடியா முழுகிப் போச்சு??? உங்க அப்பா உனக்கு மாப்பிள்ளை பார்க்குறாரு அவ்ளோதான?? அதான் இளவரசி ஆத்தா உனக்கு பிடிக்காத எதையும் பண்ணவிடமாட்டேன்னு உறுதியா உன் பக்கம் தான நிக்குது.. அப்பறம் எதுக்கு நீ இப்படி சுத்திட்டு இருக்க?? இது உன்னோட சங்கீ அக்கா கல்யாணம்.. இதுல நீ கூட இருக்கோணும்னு அவுக ஆசைப்பட மாட்டாகளா??? உன்னோட கவலை உன்னோட காதல் தான் பெரிசுன்னு நீ பாட்டுக்கு இப்படி வந்து தனியா சோககீதம் வாசிச்சிட்டு இருக்க?? இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை சொல்லிட்டேன்.. முதல்ல எழுந்து கெளம்பு நீ!!” என மூச்சே விடாமல் தோழியை திட்டிக்கொண்டிருக்க,
வந்தனாவிற்கும் மலரின் கூற்றில் இருந்த நியாயம் எல்லாம் புரியத்தான் செய்தது. இருந்தும், வெளியே சென்றால் நிச்சயம் அவனைச் சந்திக்கக் கூடும், அவன் நிச்சயம் தன்னிடம் பேச முயல்வான், நாட்டரசன் இருக்கும் இடத்தில் இது தேவையில்லாத பிரச்சனையை உண்டாக்கும் என அவளின் மனம் பலவாறாக யோசித்து குழம்பித் தவிக்க,
“எனக்கு மட்டும் என்ன ஆசையா இப்படி இருக்க??? உனக்குக் கூட என்னைப் புரியலையா மலர்??? என்னால முடியலைடி!!!! நிச்சயம் நான் ஆசைப்பட்டது நடக்காதுன்னு எனக்குத் தெரியும்.. அதுனால தான் என்னை நானே ஏமாத்திகிட்டு அவர் வேண்டாம்னு சொல்லிட்டு வந்தேன்.. ஆனா எனக்கு அந்த ரணம் மறையிறதுக்கு சின்னதா ஒரு அவகாசம் கூட கொடுக்காம அப்பா இப்படி பண்ணது என்னால தாங்கவே முடியலை மலர்!! இங்க ரொம்ப வலிக்குது டி” என தன் இதயத்தை தொட்டுக்காட்டி அவள் கண்ணீருடன் கூற,
மலருக்கு தோழியை இந்த நிலையில் காண முடியாமல் அவளை தன் நெஞ்சோடு அணைத்தவள்,
“இந்தா புள்ளை!! நான் முன்னாடியே சொன்னது தான்.. பெத்தவங்க எப்பயும் காதலுக்கு முட்டுக்கட்டை தான் போடுவாக.. நாமதான் நமக்கு பிடிச்சதுக்காக போராடணும்.. ஈசியா ஒன்னு நமக்கு கிடைச்சுட்டா அதோட மதிப்பு நமக்குத் தெரியாது புள்ளை.. போராடி ஜெய்க்குறதுல தான் ருசியே இருக்கு.. நீ கண்டதையும் யோசிச்சுக் கலங்காம இன்னைக்கு அந்த அண்ணனைப் பார்த்து தெளிவா எல்லாம் பேசிப்புடு.. எதுனாலும் பார்த்துக்கலாம்.. நான் இருக்கேன் உன்கூட” என அவளும் இத்தனை நாட்களாக சொல்வதை மீண்டும் பேச,
எப்போதும் போல் வந்தனாவின் தலை மறுப்பாக அசைந்தது.
“இல்லை மலர்!!! இது நடக்காது.. என்னால என் அப்பா அம்மாக்கு துரோகம் பண்ண முடியாது… அவங்க என்னை ரொம்ப நம்புறாங்க.. என்னால அவங்களை ஏமாத்த முடியாது மலர்… முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும்.. திரும்பத் திரும்ப அவங்க முன்னாடி போய் நின்னு அவங்க மனசுல வீணா ஆசையை வளர்க்க வேண்டாம்.. அவங்களாவது நிம்மதியா இருக்கட்டுமே” என விரக்தியாகக் கூறிவிட்டு வந்தனா வேறு புறம் திரும்பிக் கொள்ள,
இத்தனை வருடமாக நாட்டரசனின் கண்டிப்பையும் போதனைகளையும் கேட்டுக்கேட்டு வளர்ந்த வந்தனாவிடம் இதைத்தவிற வேறென்ன எதிர்பார்த்து விடமுடியும் என்று நினைத்த மலர், நிச்சயம் வினய் இவர்களின் காதலுக்காக காதலியிடமே மிகவும் போராடி வேண்டி இருக்கும் அதற்கு அவருக்கு மனோதிடத்தை கொடு என கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.
“சரி!! நீ ஒன்னும் அவரைப் பார்க்க வேண்டாம்.. இப்படி ரூமிலேயே அடைஞ்சு கிடக்காம வா அந்த பீச்சுப் பக்கம் காலாற நடந்துட்டு வருவோம்.. மனசு கொஞ்சம் லேசாகும்” என்று அவளை எழுப்ப,
அவளிடமிருந்து கைகளை உருவிக் கொண்ட வந்தனா, “இல்லை நான் வரலை!!” எங்கே வினய்யைப் பார்த்துவிடுவோமோ என அஞ்சி வர மறுக்க,
மலரா விடுவாள்?? அவளை கெஞ்சி, கொஞ்சி, உருட்டி மிரட்டி ஒரு வழியாக அவளைக் கிளப்பி கடற்கரைக்கு அழைத்து வந்திருந்தாள்.
சதீஷ் மற்றும் சங்கீதாவின் திருமணம் அவர்கள் விருப்பப்படி, கடற்கரை ஓரம் மிகவும் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்களைக் கொண்டு மிகவும் எளிமையாக அதே சமயம் அழகாக ஏற்பாடாகி இருந்தது.
இன்னும் சற்று நேரத்தில் திருமண வைபவங்கள் துவங்கி விடும் என்பதால், மக்களின் நடமாட்டம் அங்கங்கே இருந்து கொண்டுதான் இருந்தது.
பார்ப்போரிடம் பேசிக்கொண்டே வந்தனாவை கூட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து வந்திருந்தாள் மலர்.
இன்னும் இருள் முழுதாக விலகாத அந்த அதிகாலை வேளையில், கடலலைகள் காலை நனைக்க, தென்றல் காற்று முகத்தை மோத அமைதியாய் கடலை வெறித்திருந்தாள் வந்தனா..
ஆம்.. ரசிக்கவில்லை .. வெறித்திருந்தாள்.. அவளின் மனதும் அவளின் முன்னிருந்த கடலைப் போல் எண்ணப் பேரலைகளால் அலைமோதிக் கொண்டிருந்தது. மனதின் கலக்கத்தை முகத்தில் காட்டாமல், நிர்மலமான வைத்தபடி கைகளைக் கட்டிக்கொண்டு அவள் கடலையே பார்த்திருக்க, அவள் செவியைத் தீண்டியது அந்தக் குரல், அவள் வாழ்நாள் முழுவதும் கேட்க விரும்பிய அதே குரல், இனியொரு முறை கேட்டே விடக்கூடாது என அஞ்சிய அதே குரல், இப்போது அவள் செவிக்கு மிக அருகில் கேட்க, அவளின் புலன்கள் அனைத்தும் பரபரப்பாக, சட்டென விழிகள் அவளின் இடப்புறம் நோக்க,
அங்கே கைகளைக் கட்டியவாறு, தன் காதல் மொத்தத்தையும் விழியில் தேக்கி அவளின் உயிரை ஊடுருவும்படி ஆழமாய் பார்த்திருந்தான் வினய்.. வினய் சக்கரவர்த்தி.
இவ்வளவு நெருக்கத்தில், அதுவும் இப்படி ஒரு பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவள் மூச்சிற்குத் தவிக்க, விழிகளோ பயத்தையும், சந்தோஷத்தையும் சரிவிகிதத்தில் வெளிப்படுத்தி அவளின் மனதை அவனிற்கு உணர்த்தியும் விட்டிருந்தது.
“ஹேய் ரிலாக்ஸ் வதனா!!! நான் தான?? என்கிட்ட என்ன பயமாம் வதனாக்கு??” என மென்மையாய் அவன் கேட்க,
அவனின் குரல், அவள் உள்ளத்தின் வலிகளுக்கு மருந்தாகிப் போன மாயம் தான் பெண்ணவளுக்கு விளங்கவே இல்லை.
“ஓகே தான வதனா???” என அவன் நாக்கை மடக்கி புன்னகையுடன் புருவம் உயர்த்திக் கேட்க,
அதன் அழகில் சொக்கிப் போன மனதை சொல்பேச்சு கேட்க வைப்பதற்குள் வந்தனாவின் பாடு திண்டாட்டமாகிப் போனது.
“உன்னைத்தான் வதனா!! உனக்கு ஓகே தானா???” என அவன் சற்று அழுத்தி கள்ளச் சிரிப்புடன் கேட்டபின் தான் வந்தனாவிற்கு அவன் கேட்டதே விளங்க,
“ஹான்!!? என்ன??” என சற்று அதிர்ந்து போய் அவள் கேட்கவும்,
அவளின் விரிந்த கண்கள் இவனை மொத்தமாய் அதற்குள் இழுத்துக் கொள்ளப் பார்க்க, ‘கொல்ற வதனா!!’ என தவிப்புடன் முணுமுணுத்தவன்,
“இல்லை இப்போ நீ ஓகே வான்னு கேட்டேன்” என சமாளித்தான்.
அதில் அவனை நம்பாத பார்வை பார்த்தவள், “ம்ம்!!” என மௌனமாய் தலையாட்ட,
அவளின் மௌனம் கூட அவனுக்கு அழகான இசையாய் மாறி இதமாய் தாலாட்டியது.
“ஏதாவது சொல்லணுமா வதனா???” என அவன் புன்சிரிப்புடன் கேட்க,
முதலில் இல்லை என்று மறுத்தவள், அடுத்த நொடியே எதையோ யோசித்து ஆமாம் என்பதாய் தலையாட்ட,
“அச்சோ!! கியூட்!!” என அள்ளிக் கொள்ள பரபரத்த கைகளை அடக்க பெரும்பாடகிப் போனது வினய்க்கு.
“சரி சொல்லு!!!” என அவன் ஊக்கவும்,
“நான் அன்னைக்கே என் பின்னாடி வராதீங்க இதெல்லாம் செட் ஆகாதுன்னு சொன்னேன் தான?? அப்பறம் ஏன் இப்படி??? ” என முழுதாய் வாக்கியத்தை முடிக்கக் கூட முடியாமல் அவள் தடுமாற,
அதையும் ரசித்துத் தொலைந்தது அவனின் பாழாய் போன மனது.
“நான் இங்க உங்க அக்காக்கு மேக்கப் போட வந்தேன்.. தெரியும் தான??” என அவன் புன்னகையாய் கேட்கவும்,
தெரியும் என்பதாய் அவள் தலையசைக்க,
“உங்க அக்காக்கு ஏதோ ரிட்சுவல்(சம்பிரதாயம்) நடந்துட்டு இருக்கு.. சோ அது வரைக்கும் ஃப்ரீயா இருக்கலாமேன்னு பீச்க்கு வந்தேன்.. உன்னை டிஸ்டர்ப் பண்ண வரலை பிராமிஸா” என அவன் பொறுமையாய் அவளுக்கு விளக்க,
அவளுக்குத் தான் அவனின் இந்த அணுகுமுறையில் தீயில் நிற்பதைப் போல் அவஸ்தையாக இருந்தது.
‘ஏண்டா இவளோ சாஃப்டா இருக்க?? முடியலை என்னால.. இவளோ மென்மையா இருக்க உன்னைப் பார்த்து என்னால பொய்யாக் கூட கோபப்பட முடியலையே.. ஹய்யோ ஆண்டவா!!’ என அவள் நொந்து கொள்ள,
அவளின் மனதைப் படித்ததைப் போல், “ஏதாவது சொல்லணுமா வதனா??” எனக் கேட்டிருந்தான்.
அவன் பார்வையில் தெரிந்த காதலா?? இல்லை அந்தக் குரலின் மென்மையா?? எதுவோ ஒன்று.. அவள் மனம் இத்தனை நாட்களாக எதிர்பார்த்திருந்த ஆறுதலை அவளுக்கு இதமாய் வழங்க, காயம் கொண்ட இதயம் அவளையறியாமலே மெதுமெதுவாக சமன்பட்டது.
அனைத்தையும் அவனிடம் கூறிவிட்டு அவனிடமே சரணடைந்து விட என உள்ளுக்குள் ஒரு குரல் கேட்டுக் கொண்டே இருக்க, அவளும் மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் சுற்றம் மறந்து சுயம் தொலைத்து, அவன் ஒருவனை மட்டுமே கண்ணில் நிறைத்து உறைந்து போய் நின்றிருக்க,
அவள் முகத்தில் நிதர்சனத்தை அடித்துரைப்பதைப் போல் வந்து விழுந்த வினய்யின் கேள்வியில் அவளைச் சுற்றியிருந்த மாயவலை அறுந்து விழ, அடுத்த நொடி அங்கிருந்து கிளம்பச் சொல்லி அவளின் மூளை எச்சரிக்கை செய்ய,
அதன் சொல்கேட்டு அவள் கால்களை எட்டிப்போட்ட சமயம், அங்கே இவர்களை நோக்கி கோபத்துடன் வந்து கொண்டிருந்தார் நாட்டரசன்.
அவரைக் கண்டதும், வந்தனாவின் மூளை மரத்துப் போக, அதிர்ச்சியையும் மீறிய பயத்தில் அந்த இடத்திலே ஆணியடித்ததைப் போல் நின்றுவிட்டாள் அவள்
error: Content is protected !!