Skip to content
Post Views: 6,502
காதல் இன்று
கெட்டப் பையன்டா நீ ! தன்னையே கண்ணாடியில் பார்த்து சிரித்தபடி சொல்லிக் கொண்டான் வினய் அலைஸ் விநாயக மூர்த்தி.
அவனும் அருண் மற்றும் அன்புவிற்கு தூரத்து சொந்தம், ஒரே சமூகத்தை சேர்ந்தவன்தான்.
தொழில் வக்கீல் என்று சொல்லிக்கொண்டு செய்துக் கொண்டிருப்பது கட்டப்பஞ்சாயத்து மற்றும் கமிசன் வேலைகள்!
Advertisement
காரணம் ஸ்டப் இல்லை! அதற்கு காரணம் அவன் தன் சட்டஅறிவை வளர்த்துக் கொள்ளவோ, அல்லது வாதிடும் திறமையை வளர்த்துக் கொள்ளவோ செய்யாமல், குறுக்கு வழியைத் தேடியிருந்தான்.
அதற்கு அவன் மெனக்கிட்டது அவனது நெட்வொர்க்கை வளர்த்துக் கொண்டே போவது தான்.
எங்கு சுற்றினாலும் அவனுக்கு தெரிந்தவர்கள் இருப்பார்கள்!
Advertisement
சின்ன வேலையில் இருந்து பெரியவேலை வரை எல்லாம் பார்த்துக் கொடுப்பான் கமிஷனுக்கு!
Advertisement
சொத்தில் வில்லங்கம் உள்ளவர்கள், பட்டா சிட்டாவில் பெயர் குளறுபடி உள்ளவர்கள், பத்திரத்தில் குளறுபடியோடு இருப்பவர்கள், வீடுகளில் பொதுப்பாதை சண்டைகள், வாய்க்கால் வரப்பு தகராறுகள், சர்வே நம்பர் குளறுபடிகள் இப்படிப் பட்ட சிவில்கேஸ்கள் அவனிடம் வரும்.
அதை கோர்ட்டுக்கு போகாமல் கட்டப்பஞ்சாயத்து மூலம் தீர்த்து வைத்து கமிசன் பார்ப்பான்.
இல்லை கோர்ட்டுக்குதான் போவேன் என்பவர்களை நிஜமாகவே நன்றாக வாதிடக் கூடிய வக்கீல்களிடம் கூட்டி சென்று அறிமுகப்படுத்தி விட்டு அதற்கென ஒரு சார்ஜ் செய்து விடுவான்.
Advertisement
கூடவே ரியல் எஸ்டேட் பிசினெஸ் வேறு!
காசு நாலாப்பக்கமும் இருந்தும் வந்து கொண்டிருந்தது என்னமோ உண்மைதான்!
ஆனால் கல்யாணம்!
பெண்கள் விசயத்தில் இருக்கும் அவனது யோக்கியாம்சம் அவனுக்கு நல்லக் குடும்பத்திலிருந்து யாரும் பெண் தர முன்வர வில்லை!
குறிப்பாக வசந்தா! முடியவே முடியாது என்றும் பெண் கேட்டு வீட்டுப்பக்கம் வந்தால் மரியாதைக் கெட்டுவிடும் என்றேகூட சொல்லிவிட்டாள் ஒரு கட்டத்தில்!
அந்த கோபம் எப்போதும் அவனுள் இருந்து கொண்டே இருக்கும்!
அவனுக்கு பெண் தரவும் சிலர் இருந்தார்கள் தாம்! அப்படி முன் வந்தவர்களை அவனுக்குப் பிடிக்கவில்லை!
ஏனென்றால் அப்படி வந்தவர்களின் பெண்களும் இவனை மாதிரி கொஞ்சம் முன்னே பின்னே இருப்பவர்கள் அல்லது இருந்தவர்கள்!
வசந்தாவின் வீட்டில், ஒவ்வொரு பெண்ணாக அவள் வீட்டில் இருந்து கல்யாணம் முடிந்து போகும் போது அவனுக்கு எரிச்சலாக இருந்தாலும் மூன்றிலும் பெஸ்டான வெண்ணிலாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பதே அவனுக்கு கொஞ்சம் ஆறுதல்!
ஆனால் இந்த அன்பு!
போயும் போயும் அவனுக்கு வெண்ணிலவா?
வினய்க்கு கோபம் கோபமாக வந்தது!
இருப்பினும் என்ன செய்ய? அந்த அன்புதான் மிஸ்டர் கிளீன் ஆக இருக்கானே!
அவன் அப்படி இருக்க கூடாதே! என்று பலவகையில் முயன்றும் அவனுக்கு தோல்வியே!
அருணைக் கூட எப்பவாவது தண்ணீ பார்ட்டிக்கு அழைத்துப் போய்விட முடியும் வசந்தாவிற்கு தெரியாமல்! ஆனால் அன்பு! நோவே!
கெட்ட பழக்கங்களோ அல்லது வம்புதும்பு வில்லங்கங்களோ அவனிடத்தில் எதுவுமேயில்லை!
ஆனால் அதற்கும் தானாகவே ஒருவழி பிறந்தது!
அன்பு, அரசு தரும் விவசாயிகளுக்கான சில சலுகைகளைப் பெற சிறு குறு விவசாயி சான்றிதழ் தேவைப்பட்டது!
அதற்கு நிலத்தின் பட்டா அவன் பெயரில் இருக்க வேண்டும்!
அன்புவுக்கு சொத்தில் வில்லங்கம் இல்லை என்றாலும், இருந்த அவனது நிலம் எல்லாம் அவன் பங்காளிகளுடன் கூட்டுப் பட்டாவில் இருந்தது!
அதை தனி பட்டாவாக அவன் பெயரில் பட்டா வாங்கினால் தான் அந்த சான்றிதழ் பெற முடியும் என்ற சூழ்நிலையில் அவன் தனிப்பட்டாவுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தான்.
அப்படியே செய்தாலும் கூட நிலம் சர்வே செய்யப்பட்டு பின் தான் அது கிடைக்கும்!
இந்த விசயம் கேள்விப்பட்டு, அப்படி சர்வே செய்ய வந்தவர்களைக் கொஞ்சம் குழப்பி விட்டும், கொஞ்சம் கவனித்தும் அன்புவின் நிலத்திற்கு அருகில் உள்ள நிலத்திலிருந்து கொஞ்சம் அன்புவின் பட்டா நில எல்லையோடு சேர்த்து பட்டா வரும்படி செய்து, அன்புவுக்கு ஒரு வில்லங்கத்தை ஏற்படுத்தி விட்டுவிட்டான்.
பின் நேராக சென்று அந்த பக்கத்து நிலத்துக்காரனிடமும் போய், இந்த மாதிரி அன்பு உன் நிலத்தையும் சேர்த்துக் கொண்டு பட்டா வாங்கி விட்டான் என்றும் போட்டும் விட்டான்!
ஆனால் அன்பைப் பற்றி அறிந்திருந்த அந்த பக்கத்து நிலத்துக்காரன், “நான் அன்புகிட்ட பேசிக்கிறேன், வேணும்னு அவன் அப்படி பண்ணியிருக்க மாட்டான், ஏதோ தப்பு நடந்து இருக்கு”, என்றே சொல்லிவிட,
இது ஏதுடா , இவன் நம் காரியத்தைக் கெடுத்து விடுவான் போல என்று எண்ணிக் கொண்டு, அவன் சென்றது “மேலிடத்தை” பார்க்க!
அதாவது அவனின் மனைவியை!
அவளுக்கு நன்றாக மூளைசலவை செய்து, அன்பு நில ஆக்கிரமிப்பு செய்து விட்டான் என்று கேஸ் போடும்படி செய்து விட்டான்!
“நீங்களே போடுங்க எங்க சார்பா” என்று அவள் கேட்டதுக்கு,
“அய்யோ, நான் அவன் சொந்தக்காரன்ம்மா, அப்படி செய்யமுடியாது, சொல்ல போனா, நான் தான் உங்களுக்கு எதிரா அவனுக்காக வந்தாலும் வருவேன், அப்படி வந்தாலும் இந்த அண்ணனைத் தப்பா நினைச்சுடாதே” என்றும் சொல்லிவிட்டே வந்தான்.
இப்படியாக கிரிமினல் வேலை செய்து அன்புவை சிக்க வைத்து, அதன் மூலம் அன்புவோடு காண்டாக்டில், ரேப்போவில் இருந்தான் வினய்!
ஒரு வாரம் முன்பு.
அந்த ஊரில் இருக்கும் வாழை விவசாயிகளை சந்திக்க விரும்பினான் ஜீவா!
அவர்களிடம் இருந்து சில நேரிடையான தகவல்கள் அவன் ப்ராஜெக்ட்டிற்கு தேவைப்பட்டன!
அவனுக்கு உதவ என்று அவனுடன் காரில் சென்று கொண்டிருந்தாள் வெண்ணிலா!
அவள் அப்படி அந்த ஆடி காரில், ஜீவாவோடு முன் சீட்டில் அமர்ந்து போகும் போது பார்ப்பவர்களுக்கு அப்படியே அவர்கள் பொருத்தமான ஜோடி என்றே ஒரு கணமாவது தோன்றவே செய்யும்!
அப்படிதான் தோன்றியது இவர்களைக் கண்ட வினய்க்கும்!
இவன் யாருடா புதுசா, நம் ரூட்டில் க்ராஸ் பண்ணுவது!
பார்க்க வேறு நல்லா படிச்சவனா, கலரா ஸ்மார்டா, ஸ்டைலா இருக்கான்! ஆடிகாரில் வேற வந்திருக்கான்! எங்கேர்ந்துடா வருவீங்க நீங்கல்லாம்? இதுல நல்லா இங்கிலிஷ் வேற பேசுறான்! அவனுக்கு கடுப்பாக வந்தது!
காரில் சென்று கொண்டிருந்த வெண்ணிலவுக்கோ வேறு எண்ணங்கள்!
இந்த ஜீவா சார், நல்ல ஹெல்பிங் டெண்டன்சியோட இருக்காரு, பெரிய கம்பெனி வச்சு நடத்துறார், இப்ப பண்ணிட்டு இருக்கிற சென்ரல் கவர்மென்ட் ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனா வேறே லெவலாம்!
நம்ம ஊரில் இருக்கும் நம்மள மாதிரி படிச்சுட்டு நல்ல வாய்ப்பு இல்லாம இருக்கிற நிறைய பேரை இவருக்கு எப்படியாவது அறிமுகம் செய்து வச்சுடணும்!
கூடவே நம்ம ஊரில் குடத்துக்குள்ள இருக்கிற விளக்கு மாதிரி ஷைன் ஆகாம இருக்கிற ஸ்போர்ட்ஸ் பசங்களுக்கு அத்தலெட் பசங்களுக்கெல்லாம் இவர் மூலமா, இவர் நெட்வொர்க் மூலமா எதாச்சும் ஹெல்ப் வாங்கமுடியுமான்னு பார்க்கணும்!
அதே மாதிரி நல்லாபடிக்கிற பசங்களுக்கும் ஹெல்ப் வாங்கி தரணும்!
அவளுள் இந்த மாதிரி எண்ணங்கள்!
ஜீவாவோ, இப்போது எல்லாம் அவளை ரசிக்கத் தொடங்கி விட்டிருந்தான் அவனையும் அறியாமலே!
அவளின் ஒவ்வொரு செயலுமே ஒவ்வொரு நாளும் அவனுள் மேலும் மேலும் “அட!” என்ற ஆச்சர்யத்தை கொடுக்க ஆரம்பித்து, இப்போது அணு அணுவாய் ரசிக்க வைத்துக் கொண்டிருந்தது!
வெண்ணிலாவுக்குள்ளும், அவள் மனதிலும் கூட அவ்வபோது அவன் வர பார்க்க, அவளோ “நோ வெண்ணிலா, இவர் உன்னோட மென்டர்(Mentor), குரு, வழிக்காட்டி! இதைத் தவிர வேற எண்ணம் உன் மனசுல வரக் கூடவே கூடாது! ரொம்ப தப்பாகிவிடும்! அதுவும் அவனின் நேசத்துக்குரிய மயூ இருக்கும் போது! இது தேவையில்லாத எண்ணங்கள்!”
இருந்தாலும் ஜீவா, போனில் “சொல்லு மயூ டார்லிங்” என்று சொல்லிக் கொண்டு இவள் முன்னே போன் அட்டென்ட் செய்தால், வெண்ணிலாவின் முகம் ஒரு கணம் மாறி பின் தான் சரியாகும்!
இப்போது அவளுக்கு தேவை ஒரு நல்ல ஐடி வேலை! அதன் மூலம் நல்ல சம்பளம்! அம்மாவுக்கு ஒரு கார், நல்ல லைப் ஸ்டைல்! இனியாவது அவள் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்!
இப்படியான உள் எண்ண ஓட்டங்களுக்கிடையில் அவள் ஜீவாவுக்கு விவசாயிகளை அறிமுகம் செய்தததோடு, “இதோ இந்த பொண்ணு அத்தலெட், அந்த பையன் கபடி பிளேயர், அவன் நல்லா வாலிபால் ஆடுவான்! இந்த அக்கா எம்எஸ்ஸி பாட்னி, அந்த அக்கா தமிழ் ஸ்காலர்”, என்று ரொம்ப சாதாரணமாக ஆடு மேய்த்துக் கொண்டோ, வைக்கோல் புல்லுக் கட்டு சுமந்து கொண்டோ, போகும் பெண்களை, பையன்களையோ காட்டி காட்டி ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருந்தாள் ஜீவாவை!
அவன் பார்க்க வேண்டியவர்களை எல்லாம் பார்த்து விட்டு அவளை இறக்கிவிட்டு விடைபெற்று சென்ற பிறகு, அவளிடம் வந்தான் வினய்!
“என்ன வெண்ணிலா, டவுன் ஆளுங்க கூப்பிட்டா உடனே காரில் ஏறிப் போறே, உள்ளூர்க்காரன், சொந்தக்காரன் நான் கூப்பிட்டா மட்டும் என் வண்டியில ஏற மாட்டேங்கிற? என்ன நான் அவன் மாதிரி கலரா இல்லேன்னா?”
அதற்கு வெண்ணிலா பதிலேதும் சொல்லாமல், முகத்தில் ஒரு வித வெறுப்பும் அருவருப்பும் கலந்த ஒரு முகபாவனையை மட்டும் காண்பித்து விட்டு சட்டென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து வேகமாக வீடு நோக்கி சென்று விட்டாள்!
அவள் அவனைப் “போடா பொறுக்கி” என்று திட்டியிருந்தால் கூட அவனுக்கு அப்படி ஒரு அவமானமாக தோன்றியிருக்காது!
ஆனால் அவளின் அந்த அருவருப்பான பார்வை! அது அவனை ரொம்பவும் இன்சல்ட் பண்ணியதாக அவன் நினைத்தான்.
“நான் ஒரு லாயர்(?!), ஊருக்குள் செல்வாக்குள்ள ஆட்களில் ஒருத்தன், எல்லாவற்றிற்கும் மேலாக சொந்தக்காரன் வேறு!
இப்படி எந்த நினைப்பும் இல்லாமல் , இவ என்ன இப்படி நடந்துக்குறா?
அன்னிக்கு அவ ஸ்கூல் ஆனுவல் டேக்கு கூட அவனையும் உள்ளூர் பிரமுகர் என்றே சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக அவனையும் அழைத்து இருந்தார்கள் ஸ்கூல் மேனேஜ்மென்ட் ஆட்கள்!
அப்போதும் கூட இந்த வெண்ணிலா மற்ற ஆசிரியைகள் சிரித்து வரவேற்ற போது கூட அவள் பெரிதாக அவனைக் கண்டு கொள்ளவே இல்லை! ரொம்ப திமிர் பிடிச்சவ!
இத்தனைக்கும் ஆயிரத்துக்கும் ஐநூறுக்கும் கூட சமயத்தில் அல்லாடிக் கொண்டிருக்கும் குடும்பம்!
ஆனால் இவ்வளவு திமிர்!
அவள் அப்பனும் ஆத்தாவுமே அப்படி தான்! அவங்களுக்கும் காசு பணம் இல்லாதப்பவே திமிர்!
அவள் ஆத்தா என்னவென்றால் பொண்ணு கேட்டு என் வீட்டுப் பக்கம் வந்துடாதே என்று நேராகவே சொல்லிட்டா!
அவள் அப்பனுக்கு தான் ரொம்ப யோக்கியவான் என்ற திமிர்!
அதைக் கெடுக்க தான் அவ்வபோது அவனை எப்படியாவது தண்ணீ போட அழைச்சுட்டுப் போறதே!
ஆனா எவ்வளவு போதைன்னாலும் அவங்க பொண்ணுங்க விசயத்தில் மட்டும் அந்த ஆள் கல்லூளிமங்கன்! வாயைத் திறந்து ஒரு வார்த்தை விட்டுட மாட்டான்!
இருங்கடி எல்லோரும்! எங்க போய்டுவீங்க இந்த வினய்கிட்ட இருந்து? ஒரு நாள் எதிலயாச்சும் மாட்டாமலா போய்டுவீங்க!” மனதுள் சூளுரைத்தான்!
அவனுக்கான நேரம் என்பது இத்தனை சீக்கிரம் அமையும் என்று அவனே கூட நினைத்து இருக்கவில்லை தான்!
ஆனால் அன்புவின் கெட்ட நேரமோ அல்லது வசந்தா குடும்பத்தின் கெட்ட நேரமோ அமைந்து தான் போய் விட்டது.
அடுத்து இரண்டு நாட்களில் வெண்ணிலா அன்புவிடம் தனக்கு ஒரு இன்டர்வியூ சென்னையில் இருப்பதாகவும் அவன் தான் எப்படியாவது அவளுக்கு அவள் அப்பாவிடம் பர்மிசன் வாங்கி தர வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ள, அவனும் அதற்கு சம்மதித்து, முதலில் பல்லவனில் அவளுக்கு டிக்கெட் ரிசர்வ் செய்கிறேன் என்று சொல்லி அவர்கள் வேலைப் பார்க்கும் பக்கத்து பெரிய கிராமத்தில் இருக்கும் அவனுக்கு தெரிந்த பிரவுசிங் செண்டருக்குப் போனான்.
அந்த பிரவுசிங் சென்டர் வைத்திருக்கும் மாரிக்கண்ணு, அவனைப் பார்த்ததும் போனில் பேசிக் கொண்டிருந்தவள், “அண்ணா ஒரு நிமிஷம்” என்று போனில் பேசிக் கொண்டிருந்தவனிடம் சொல்லிவிட்டு அன்பை வரவேற்றாள்.
“வாங்கண்ணா, உக்காருங்க, என்ன அடங்கல் ஏதும் அப்ளை பண்ணுமா?’ என்று கேட்டாள்.
“இல்லம்மா, ட்ரைன் டிக்கெட் புக் செய்யணும்” என்றான் அன்பு.
“எந்த ஊருக்கு அண்ணா”, என்று ரயில்வே டிக்கெட் புக்கிங் வெப்சைட்டை ஓப்பன் பண்ணியவள், பொதுவாக அந்த வெப்சைட்டை பற்றியும், வேகமாக டிக்கெட் ரிசர்வ் ஆகி விடுவது பற்றியும் பேசத் துவங்கியவள் பேச்சு சுவராசியத்தில் ஒருத்தனை போனில் காக்க வைத்ததை மறந்தே போனாள்!
போனில் காத்துக் கொண்டிருந்தவன் வினய்!
ஏதோ கேஸ் விசயமாக டைப் பண்ணக் கொடுத்திருந்தவன் அதில் கரெக்சன் சொல்லிக் கொண்டிருக்கும் போது தான் அன்பு அங்கு வந்தது!
வந்தது அன்பு என்று தெரிந்த பின், வேண்டுமென்று தான் வினய் போனைக் கட் பண்ணாமல் இருந்தான்!
இந்த அன்பு எதற்கு அங்கு போய் இருக்கான் என்று அறிந்து கொள்ள!
இப்படி ஒருத்தன் பேசுவதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருப்பது தெரியாமல்
அன்புவும், “வெண்ணிலாவுக்கு ஒரு நல்ல வேலைக்கான இண்டர்வ்யூ இருக்கு, அதுக்கு தான் டிக்கெட் புக் பண்றேன். வெண்ணிலா தான் உன் கிட்ட சொல்லி பண்ண சொல்லுச்சு!”
“எப்படிண்ணே அவங்கப்பா வெளியூர்க்கெல்லாம் அனுப்ப மாட்டாரே?” என்றாள் மாரி!
“ஆமாம் , இன்னும் அத்தை மாமாவுக்கு தெரியாது, ட்ரைன் ஏத்தி விட்டுட்டு வந்து தான் சொல்லப் போறேன்! இல்லைனா மாமா லேசில் சம்மதிக்க மாட்டார்!
நீ பாட்டுக்கு யார்கிட்டயும் சொல்லிப்புடாதே!”
“ச்சேச்சே நான் ஏன் சொல்லப் போறேன்! எனக்கும் வெண்ணிலா பிரன்ட் தானே, அவ படுற கஷ்டமெல்லாம் இனியாவது தீரட்டும்! அவ அறிவுக்கு அவ இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை!” என்றாள் மாரியும் மனப்பூர்வமாகவே!
என்ன நினைத்து என்ன பயன்? மண்டை மேல் இருக்கும் கொண்டையை மறந்தது போல, அங்கே வினய் என்னும் “வினையை” போனில் வைத்துக் கொண்டல்லவா இவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்!
போனில் சகலத்தையும் கேட்டுக் கொண்ட வினய், இதை யூஸ் பண்ணி எப்படியாவது அந்த வெண்ணிலாவை சிக்கலில் மாட்டி விட வேண்டும்! என்று எண்ணிக் கொண்டவன் நேரே போய் நின்றது தனத்திடம்!
அன்புவின் அம்மா அவனுக்கு சின்னம்மா முறை வேண்டும்!
அவர்கள் வீட்டுக்கு கேசுவலாக போவது போல, அன்பு இல்லாத நேரம் போய், அவரின் மண்டையைக் கழுவி, சரியாக வெண்ணிலாவின் சென்னை செல்லும் நாள் பார்த்து, அருணிடம் சொந்தக்காரர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு போய் வெண்ணிலாவை கல்யாணம் பேசி முடிவெடுக்க போகுமாறு பேசி அவரை தயார் ஆக்கினான்.
இவன் சூழ்ச்சியை அறியாத அந்த அம்மாளும், மாமா மச்சான், பங்காளி முறை உள்ளிட்டவர்களை போனில் அழைத்து வெண்ணிலாவை பரிசம் போட வருமாறு அழைத்தும் விட்டார்.
அருண் வீட்டிலும் சொல்லி விட, வசந்தா தன் இரு மகள்களிடமும் சொல்லி வர சொல்லி விட்டார்.
இந்த செய்தியை தான் வெண்ணிலா காதில் இயர்பேட் போட்டுக் கொண்டு படித்துக் கொண்டிருந்த போது சொல்லி விட்டுப் போனார்.
“நாளன்னிக்கி உன்னை நிச்சயம் பண்ண தனம் அண்ணி வராங்க, நீ ரெடியா இரு” என்று!
பாவம் வெண்ணிலா அதை காதில் வாங்காமல் படித்துக் கொண்டிருந்து விட, அங்கே அன்புவும் இத்தனை பெரிய ஏற்பாட்டினை அவள் அம்மா அந்த வினய்யோடு சேர்ந்து செய்து இருப்பது பற்றி தெரியாமல் இருந்தான்!
அவனிடம் மொட்டையாக அன்று “வெண்ணிலாவை பேசி முடிக்க போறோம்” என்று மட்டுமே சொல்லியிருந்தார் தனம்!
அப்படி தான் சொல்ல சொல்லியிருந்தான் வினய்!
விலாவாரியாக சொல்லி, அவர்கள் இருவரும் பேசி தெளிந்து விட்டால் காரியம் கெட்டு போய் விடும்! என்று நினைத்தே இதையும் செய்து இருந்தான் அவன்!
விதியின் சதியும் வினயின் சதியும் கலந்து கட்டி அடிக்கப் போகின்றன!
அன்பு, சாதாரணமாக தான் அம்மா மாமாவிடம் அடுத்து நடக்க வேண்டியவைப் பற்றி பேசி முடிவு எடுக்கப் போகிறார்கள் என்றே நினைத்துக் கொண்டிருந்தான்.
தனம் இப்படி ஊரைக் கூட்டிக்கொண்டு வந்து பேசப் போகிறாள் என்று அவனுக்கும் தெரியவில்லை!
தெரிந்து இருந்தால் தடுத்து இருப்பான்!
மொத்தத்தில் இந்த கல்யாண நிச்சயம் என்பது கல்யாணப் பெண்ணான வெண்ணிலாவுக்கும் தெரியவில்லை, பையனான அன்புவுக்கும் தெரியவில்லை!
ஏதும் தெரியாமல் அவன் வெண்ணிலாவை சமயபுரம் கோவிலுக்குக் கூட்டிப் போகிறேன் என்று சொல்லி விட்டு அதி காலையில் ட்ரைன் ஏற்றி விட்டு வந்திருந்தான்!
வெண்ணிலா ட்ரெயினில் உட்கார்ந்து கொண்டு வருங்காலத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்!
அவள் ஏற்கனவே ஜீவாவோடு பேசியிருந்தாள்.
மேலும் ஜீவாவிற்கு இந்த ஊரில் தேவையான டீடைல்ஸ் எல்லாம் கிடைத்து விட்டது!
எனவே அவன் அந்த எஞ்சினியரின் வீட்டை காலி செய்து விட்டு அடுத்த வேலைக்காக தேனி சென்று விட்டான்!
அவன் அவளை தாம்பரம் அருகே இருக்கும் ஒரு ஐடி மக்கள் அதிகம் வசிக்கும் ஒரு ஏரியாவில் இருக்கும் அவனது அப்பார்ட்மெண்ட் வீட்டில் வந்து தங்கி இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி சொல்லியிருந்தான்.
“மயூவுக்கு கொஞ்சம் ஹெல்த் இஸ்யூ, ஏதோ பீரியர்ட்ஸ் ப்ராப்ளம்! அப்ப வெல்லாம் ரொம்ப கஷ்டப்படுவா, அதான் நான் அவ கூட கட்டாயம் ஹாஸ்பிட்டலுக்கு துணைக்கு போகணும்.
அதனால நான் பக்கத்துல செங்கல்பட்டு தாண்டி இருக்கிற ஒரு கிராமத்துக்கு போறேன்.
அங்க தான் அவ கார்மெண்ட்ஸ் பேக்டரி இருக்கு! அதனால தான் அவ சிட்டிக்கு வர முடியல!
ப்ளீஸ் நீ எதுவும் நினைக்காம போய் என் வீட்டில் தங்கி இரு.
ரொம்ப சேப் ஆன இடம் அது தான்! நான் எப்படியும் ஈவனிங் வந்துடுவேன்” என்று சொல்லி அவன் வீட்டு அட்ரெஸ் கொடுத்து போக சொல்லியிருந்தான்!
வெண்ணிலாவுக்கு கொஞ்சம் உள்ளூர பயம் தான்!
இப்போது தானே முதல் முறையாக தனியாக சென்னை வருகிறாள்!
முன்பு ஒருமுறை குடும்பமாக அண்ணா சமாதி பீச் என்று போய் இருக்கிறாள், இப்படி போவது இதுவே முதல் முறை!
ஜீவா சொன்னதை மட்டுமே நம்பி போய்க் கொண்டிருக்கிறாள் அவள்!
ஊரைக் கூட்டிக் கொண்டு தனம் பெண் கேட்டு வந்திருக்க, அங்கே வசந்தாவோ கையைப் பிசைந்துக் கொண்டு நின்றிருந்தார் கோவிலுக்கு போன வெண்ணிலாவை இன்னமும் காணாது!
வந்த சொந்தகார கூட்டத்தில் புல்லுருவிகளாக வினயின் ஆட்களும்!
சொந்தக்கார பெரியவர், “பெண்ணை அழைச்சுட்டு வாம்மா” என்று சொல்ல,
“பொண்ணு சமயபுரம் கோவிலுக்கு போனா இன்னும் வரல” என்று சங்கடத்துடன் வசந்தா சொல்ல,
“இல்ல பெரியப்பா, அவ வர மாட்டா, நான் தான் அவளை வேலைக்கு இன்டர்வியூ அட்டென்ட் பண்ண ட்ரைன் ஏத்தி விட்டுட்டு வந்தேன்!
வீட்டுல சொன்னா ஒத்துக்க மாட்டாங்கன்னு அனுப்பி விட்டு சொல்லலாம்னு இருந்தேன்.
நீ ஏன்மா இப்படி எல்லாத்தையும் கூட்டிட்டு வந்துருக்க பேசறதுக்கு? நம்ம மாமா தானே நீ நான் மட்டும் பத்தாதா?”
“என்ன சொல்ற நீ ட்ரைன் ஏத்தி விட்டியா? இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு!” என்றான் கூட்டத்தில் ஒருவன்!
“என்ன சொல்ற? தேவையில்லாம பேசாத!” என்று வினய் அப்படி சொன்னவனை போலியாக கண்டித்து விட்டு, “நீ சொல்றத பார்த்தா வெண்ணிலா என்னமோ இந்த அன்புவோட கல்யாணம் பண்ண பிடிக்காம, யாரோடயோ ஓடிப்போயிட்டான்னு சொல்லுவ போலிருக்கு?”
“யாரோடவோ என்ன? எல்லாம் அந்த டவுன்காரனோட தான்! அவன் கூட தானே காரில் ஜோடிப் போட்டுக் கொண்டு ஊரை சுத்துனுச்சு!”
“டேய் தப்பா பேசாத” அன்பு அவனோடு எகிற,
“பின்ன என்ன, உன் மாதிரி பொம்பளை குரல்ல பேசுறவனோட எப்படி வாழ்றதுன்னு நினைச்சுருக்கும் அது தான் ஓடி போய்டுச்சு!” என்றான் வினய் செட்டப் ஆள்!
வசந்தாவும் அருணும் அப்படியே அதிர்ச்சியில் அவமானத்தில் தள்ளாடி நின்றனர்!
அன்புவோ அவமானத்தின் உச்சக் கட்டத்தில்!
ஒரு நடு சபையில் வைத்து ஒரு ஆண் மகனுக்கு ஏற்படக் கூடாத அவமானம்!
அப்போது வந்தாள் சுதா!
தன் மானம் போனாலும் பரவாயில்லை, அவன் அவமானப்பட்டு நிற்கக் கூடாது என்று நிறைந்த சபையில் துணிந்து ஒரு பொய்யை சொன்னாள்!
error: Content is protected !!