Skip to content
Post Views: 6,955
பகுதி 17
அதன் பிறகு வந்த நாட்கள் படு வேகமாகவே நகர்ந்தது.. என்று தான் சொல்ல வேண்டும்.
Advertisement
முகுந்தை அடுத்து சில முறை பரிசோதித்த மருத்துவரோ இனி மெல்ல அவனை நடப்பதற்கு பழக்க சொல்ல,
தினமும் அவர்கள் வீட்டிற்குள்ளோ அல்லது அருகே இருக்கும் பார்க்கிலோ நடக்க வைப்பதை வழக்கமாக்கி இருந்தான்.
Advertisement
Advertisement
புதிதாக செய்வதால்.. ஆரம்பத்தில் சில எட்டுக்களில் முதுகில் எழும் வலியால் நடக்க தடுமாறிய பிள்ளை.. இப்போது எல்லாம் ஓரளவு சீராக எடுக்களை தனியாக எடுத்து வைக்க ஆரம்பித்திருக்கிறான்.
பள்ளியில் கேஜி வகுப்புக்கு சேர்க்கும் பருவம் தான் என்றாலும்.. ‘இன்னும் ஒரு வருடம் சென்றே சேர்க்கலாம்..’ என நினைத்து, நேரம் கிடைக்கும் போது ரியானே ஆசானாக இருந்து எழுத்துக்களை பழக்கி கொடுக்க,
Advertisement
இயல்பிலேயே புத்திசாலியான பிள்ளை.. அழகாய் அதை பழகி எழுத தொடங்கியிருந்தான்.
இப்போது அலுவலகத்தில் அவனுக்கென குட்டி டேபிளும்.. சேரும் போடப்பட்டிருக்க அவனோ ரியான் கொடுக்கும் பாடத்தை அழகாய் அமர்ந்து செய்து கொண்டிருப்பான் யாருக்கும் தொந்தரவு இன்றி.
மலரும் அடிக்கடி அவனை வந்து பார்த்து செல்ல இப்போது அவரிடமும் நன்றாகவே ஒட்டிக்கொண்டான் பிள்ளை.
வெண்பா இப்போது ப்ரிகேஜி செல்வதால்.. குட்டி வாண்டுக்கு அவ்வளவு குஷி.
யூனிஃபார்ம் போட்ட அன்று.. அவள் கொண்ட ஆனந்தமும், அவளின் குட்டி பேகை போட்டுக்கொண்டு தத்தி தத்தி அவள் நடந்த அழகும்.. அம்மா, சித்தி இருவரையும் மயக்க, தனம் திட்டி பேத்திக்கு சுற்றி போட்டது.. எல்லாம் தனி அத்தியாயம்.
வெங்கடேஷ் தலைமையில்.. அவர்கள் செய்த ப்ராஜெக்ட்டும், அந்த நிறுவனத்திற்கு திருப்தியாக இருந்ததால்,
அவர்கள் ஏற்கனவே சொன்னபடி மேலும்.. சில ப்ராஜெக்டுகளை இவர்களுக்கே வழங்கியிருந்தனர்.
மறுபக்கம்.. ரியான், சந்தீப் மிக தீவிரமாக தங்களின் கம்பெனியை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டி, வேறு சில கார்ப்ரேட் கம்பெனிகளிடம் ப்ராஜெக்ட் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அதுவும் நல்லவிதமாகவே செல்ல தொடர் வெற்றியை ரெஸ்டரண்டில் கொண்டாட.. பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டு முறையாக அனைவருக்கும் தகவலும் கொடுக்கப்பட்டது.
குடும்ப உறுப்பினர்களையும் உடன் அழைத்து வரலாம்.. என்றவுடன் சிலருக்கு சந்தோஷமும், ‘தனியாக சென்றால் ஜாலி..’ என நினைத்திருந்தவர்களுக்கு வருத்தமும் ஒருங்கே எழுந்தது.
வெங்கடேஷ்.. சம்யுக்தா இருவருக்கிடையே தொழில் சார்ந்த பழக்கம் தாண்டி நல்ல நட்பு ஒன்று உருவாவதற்கும்.. அந்த பார்ட்டியே காரணமாய் அமைந்தது.
சரியாக பார்ட்டி அன்று வெண்பாவுக்கு சளி தொந்தரவால் இரவு முழுவதும் தூங்காமல் படுத்த இனியாளும், தனமும்
“இன்னொரு டைம் வர்றோம்.. இப்ப பாப்பாவ கூட்டிட்டு போனா இன்னும் சிரமம்..” என்று விட வேறு வழியின்றி சம்யுக்தா மட்டுமே சென்றிருந்தாள்.
வெங்கடேஷின் அம்மாவிற்கு இது போன்ற இடங்களுக்கு வர எப்போதும் விருப்பம் இருந்தது இல்லை.. என்பதால் அவரும் வரவில்லை.
தனித்து சென்ற இருவரும் வேறு வழியின்றி.. சந்தீப், ரியானோடு இணைந்து கொள்ள அன்றைய கொண்டாட்டம் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது.
உணவு வேளை நெருங்க, சந்தீப் குடும்பம், ரியான்.. முகுந்த் அமர்ந்திருந்த இடத்திலேயே வெங்கடேஷூம், சம்யுக்தாவும் அமர்ந்து உண்ண..
மலரோடும் குழந்தைகளோடும் சம்யுக்தா பேசி கொண்டு இருக்க ஆண்கள் மூவரும் தொழில் தொடர்பான பேச்சுவார்த்தையில் இருந்தனர்.
பேச்சுக்கு நடுவே முகுந்த் வெங்கடேஷிடம் எதோ கேட்க, “வெங்கீ அங்கிள்..” என அழைத்திருக்க,
முகுந்திடம், “வெங்கீன்னு பேருக்கு பதிலா மங்கீ ன்னு தான் சொல்லனும். மூஞ்சிய பாரு.. ஆளும் கலரும்..” என கிண்டலாக சொல்லி சிரித்துவிட வெங்கடேஷின் முகம் அவமானத்தில் சுருங்கி போனது.
அதோடு அவன் அங்கிருந்து விலகி செல்ல ரியான் அவளை கண்டிப்போடு பார்த்தவன், சந்தீப்பை விட்டு வெங்கடேஷை பார்க்க சொல்லிவிட்டு தனியே வெளியே சம்யுக்தாவை அழைத்து கொண்டு வந்தான்.
“பேபி.. இது தப்பு. நா பேபின்னு சொன்னா நீ குழந்தையாகிட மாட்டே.
உன் வயசுக்குரிய பக்குவம் வேணாமா உனக்கு..?
அவனை பத்தி என்ன தெரியும் உனக்கு..?
அவன் வயசுக்கு இல்லைன்னாலும்.. அவனோட பதவிக்கு நீ மதிப்பு கொடுத்திருக்க வேணாமா..?
அதுவும் குழந்தைங்ககிட்ட இப்படி பேசறே..! நாளைக்கு அவங்களும் இப்படி பேசினா நல்லா இருக்குமா..?
அப்ப அப்ப.. உன் அதிகப்பிரசங்கித்தனம் வெளியே வந்துட்டு தான் இருக்கு.
அவன் நீ பேசினதுக்கு.. உன் டி.எல். லா உன்னை கண்டிச்சிருக்கலாம்.
ஏன்.. தண்டிச்சு கூட இருக்கலாம்.
நீ எனக்கு முக்கியமுன்னு அவனுக்கு தெரிஞ்சதால தான், அவன் அமைதியா போனான்.
அவனோட முகத்தோற்றத்தை பார்க்கற நீ.. ஏன் அவன் குணத்தை பார்க்கல..?
அப்போ.. நீ என்னை மதிக்கறதுக்கு காரணம் என்னோட ஸ்கின் வெள்ளையா இருக்கறதாலையா.? இல்ல தானே..! அப்போ அதை ஒரு அளவீடா நீ எப்படி எடுக்கலாம்..?
அவங்க வீட்டுல அப்பா இல்லை. இவனுக்கு அடுத்து ரெண்டு தங்கச்சி.
இவன் கஷ்டப்பட்டு படுச்சு, இப்போ அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி அம்மாவையும் நல்லபடியா பார்த்துக்கறான். ரொம்ப பொறுப்பான பையன்.
இந்த ஃபீல்டுல வொர்க் பண்ணறவங்க சோஷியல்.. சோஷியல்.. ன்னு சொல்லியே.. எல்லாமே கத்துக்கறாங்க.
இப்ப கூட பாரு.. எத்தனை பேர் டிரிங்க்ஸ் சைட் நிக்கறாங்கன்னு.
இவன் அப்படி எதுவுமே பண்ணறது இல்லை.
அவனை எனக்கு காலேஜ் படிக்கும் போதிருந்து தெரியும்.
இங்கே அவன் வாங்கற சம்பளத்தை விட.. கூடவே இதுக்கு முன்னாடி அவன் வாங்கிட்டு இருந்தான்.
ஆனா எனக்காக அதை விட்டுட்டு இங்கே வந்திருக்கான்.
இப்படிப்பட்ட குணத்தை கொண்டவனை.. நீ எப்படி ஹர்ட் பண்ணிட்டு வந்திருக்க தெரியுதா..?
யாரையும் பார்த்ததும் ஜர்ஜ் பண்ணக்கூடாது.
அதுலையும் பாடி ஷேமிங் ரொம்ப தப்பு..” என்றான் கண்டிப்பை காட்டும் கோபக்குரலில்.
ஏற்கனவே வெங்கடேஷ் சட்டென எழுந்து சென்றதிலேயே, தன் மீதே கோபத்தில் இருந்தவளுக்கு.. ரியானின் கண்டிப்பு கலந்த கோபம்..
வெங்கடேஷை காயப்படுத்தியது மிகவும் தவறாகப்பட,
“சாரி பாஸ்.. இனி இப்படி பண்ண மாட்டேன்..” என்றாள் கண்களில் கண்ணீர் வழிய வருத்தமாக.
“என்கிட்ட கேட்டு என்ன பிரயோஜனம்..?
யாரை காயப்படுத்தறோமோ.. அவங்ககிட்ட தான் மன்னிப்பையும் கேட்கனும்..” என்றான் கண்டிப்பான தந்தை போல.
“ம்ம்..” என தலையசைத்தவளை கண்ணீரை துடைக்க சொல்லி அழைத்துக்கொண்டு அவர்கள் உண்டு கொண்டிருந்த இடத்திற்கு நடந்து வரும் வழியில்,
“அப்படியே டிட்டோ எங்க அக்கா மாதிரியே பேசறீங்க.. பாஸ்.
அவளும் உங்கள பார்த்துட்டு போய்.. அன்னைக்கு உங்க முன்னாடி பேசினதை சொன்னப்போ இப்படி தான் சொன்னா தெரியுமா..?” என்றிட,
“உங்க அக்காக்கும், எனக்கும் நிறைய விசயம் ஒத்துப்போகுதே..” என்றான் ஆச்சர்யமாக.
“ம்ம். உங்க ரெண்டு பேருக்கும் இன்னும் கூட ஒரு ஒற்றுமை இருக்கு..” எனச்சொல்லும் போதே அவளின் குரலில் லேசாக கரகரப்பு எழுந்தது.
அதில் யோசனையோடு அவள் புறம் பார்த்த ரியானை பார்க்காமல் குனிந்தபடியே,
“ரெண்டு பேரும் சிங்கிள் பேரண்ட்..” என்றாள் வருத்தமாக.
தனக்கு பிரியமான இருவரும் வாழ்க்கையில் தனித்திருப்பது.. அவளுக்கு இனிமையை தருமா என்ன..? அதன் விளைவே அந்த வருத்தம்.
சம்யுக்தாவின் வார்த்தையை கிரகிக்கவே ரியானுக்கு சில நொடி தேவைப்பட்டது.
அதன் பிறகே அதன் பொருள் விளங்க, “அப்போ வெண்பாக்கு அப்பா இல்லையா..?” என்றான் கவலையாக.
இத்தனை நாள் பழக்கத்தில் சம்யுக்தா பேச்சில் அடிக்கடி வரும் அந்த வாண்டை பற்றி சிலது தெரியும் அவனுக்கு என்பதால் அப்படி கேட்டிருந்தான்.
“ஊகூம்.. அவளுக்கு இனியாக்கா, நா, என் அம்மா மட்டும் தான்..” என்றிட,
“ஓ.. அப்..” என பேச ஆரம்பிக்கும் போதே ரியானின் போன் அழைக்க,
எடுத்ததும் முகுந்த் அவனை தேடுவதாக சந்தீப் சொல்ல.. அத்தோடு அந்த பேச்சு முற்று பெற்றிருந்தது.
எல்லாரும் இருக்கும் இடத்தில் மீண்டும் வெங்கடேஷ் இருந்தாலும், அவன் முகத்தில் இருந்த ஏதோ ஒன்று சம்யுக்தாவை மேலும் வருந்தவே செய்தது.
அதை கண்டு அவனிடம் மன்னிப்பை யாசிக்க முயன்றதை எல்லாம் அவன் தவிர்க்க.. இப்போது அவள் நிலை தான் கவலைக்கிடமாய் இருந்தது.
ஆனாலும், ‘நான் பண்ணதுக்கு இந்த அளவு கூட அவங்க ரியாக்ட் பண்ணலன்னா தான் ஆச்சரியம்..’ என மனதை தேற்றிக்கொண்டவள்,
‘என்ன ஆனாலும்.. இவனிடம் மன்னிப்பை யாசிக்காமல் இங்கிருந்து போகப்போவது இல்லை..’ என்ற முடிவோடு..
எல்லோரிடமும் விடை பெற்று வெளியே வந்தவள் பார்க்கிங்கில் காத்திருந்தாள் வெங்கடேஷூக்காக.
சமீபத்தில் அவள் வாங்கிய ஸ்கூட்டியில் அவள் வந்திருக்க, வெங்கடேஷூம் அவனின் டூவிலரை அங்கு பார்க் செய்ததை பார்த்ததால் அங்கேயே அவனுக்காக காத்திருந்தாள்.
இதை அறியாத ரியானும், சந்தீப்பும் கார் பார்க்கிங் தனிவழி.. என்பதால் அவ்வழியில் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.
கடைசியாக அங்கு செட்டில் செய்ய வேண்டிய அனைத்தையும் முடித்துவிட்டு பார்க்கிங் வந்த வெங்கடேஷூக்கு திக்கென ஆனது அங்கிருந்தவளை கண்டு.
“அறிவிருக்கா..! நேரம் என்ன ஆச்சு..?
இன்னும் இங்கே தனியா என்ன பண்ணறே..?” என வேகமாய் அவளை நெருங்கி கேட்க,
“ரியல்லி சாரி.. வெங்கீ. நா.. ச்சும்மா விளையாட்டா பேசிட்டேன்.
நிஜமா என் மனசுல இருந்து வந்ததில்ல.
உங்களை அது எவ்வளவு ஹர்ட் பண்ணியிருக்குமுன்னு.. நீங்க அங்கிருந்து எழுந்ததுமே புரிஞ்சிடுச்சு.
ப்ளீஸ் சாரி..” என லேசாக விழிகள் கலங்க திக்கி திணறி அவள் சொல்ல,
“லூசா நீ..! அதுக்காகவா இவ்வளவு நேரம் இங்கே இருந்தே..?
சுத்தி பாரு. நம்ம கூட வந்த எல்லாரும் போயாச்சு. நீ என்னன்னா..” என்றவனுக்கு,
‘இவனும் காரில் வந்திருந்து.. இவளை கவனிக்காமல் போயிருந்தாள்..’ என்ற பயம் நெஞ்சத்தை ஒரு நொடி நடுங்கச்செய்தது.
“அது.. நீங்க.. உங்ககிட்ட சாரி கேட்காம போனா.. என்னால நிம்மதியா தூங்க கூட முடியாது.. அதான்..” என தலைகுனிந்தபடி குரல் கரகரக்க சொன்னவளை கண்டு அவனுக்கு பாவமாய் போக,
“ஓகே.. சாரி அக்சப்ட்டேட். வா கிளம்பலாம்..” என அவன் வண்டி அருகே செல்ல திரும்ப,
சட்டென அவனின் ஒரு கரத்தை பற்றியவளை கேள்வியாக அவன் திரும்பி பார்க்க,
“இனி நம்ம ப்ரண்ட்ஸ்.. சரியா..?” எனக் கெஞ்சும் கண்களுடன் இமை சுருங்க மறுகரம் நீட்டி நின்ற பெண்ணை மறுக்க தான் தோன்றுமா அவனுக்கு..?
அவனும் சிறு புன்னகையுடன் கை நீட்ட அன்று முதல் இருவரும் அழகான நட்பில் கைகோர்த்து இருந்தனர்.
error: Content is protected !!