Skip to content
Post Views: 6,687
அத்தியாயம் – 17
“தனு!!! நேரமாச்சு!! இன்னுமா ரெடி ஆகுற?? ஒரு புடவை கட்ட எவ்ளோ நேரம்??” என பைகளில் பூஜைக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டே இளவரசி உள்ளே குரல் கொடுக்க,
Advertisement
“இரும்மா!! இந்த மடிப்பு நிக்கவே மாட்டேங்குது.. இதுக்குத் தான் சுடிதாரே போடுறேன்னு சொன்னேன்.. நீ தான் கேட்கலை” என வந்தனாவும் அந்தப் பட்டுப்புடவையுடன் போராடிக் கொண்டே பதிலுக்கு கத்த,
“இன்னும் ரெடியாகலையா?? மணி என்னாச்சு?? கார் வந்து நின்னு அரை மணி நேரம் ஆகுது.. அண்ணன் வீடு இந்நேரம் பிளைன்ல ஏறியிருப்பாக.. அவங்க நேரா கோவிலுக்கு வந்திருவாங்க.. நம்ம அதுக்கு முன்ன போய் அங்க எல்லாம் தயார் பண்ண வேண்டாமா?? ஆடி அசையாம சீக்கிரம் கிளம்புங்க” என நாட்டரசன் எப்போதும் போல் ஆரம்பித்திருந்தார்.
Advertisement
Advertisement
“இவரோட பெரிய இம்சை!!” என முணுமுணுத்துக் கொண்ட இளவரசி, முன்பே தயாராக எடுத்து வைத்திருந்த பொருட்களை எல்லாம் டிரைவரை அழைத்து வண்டியில் எடுத்து வைத்துவிட்டு, மகளைக் காண அறைக்குள் செல்ல,
அவள் அப்போது தான் ஒரு வழியாக அந்த சேலையைக் கட்டி முடித்து பெருமூச்சுடன் சற்று நேரம் ஆசுவாசமாக அமர்ந்திருந்தாள்.
Advertisement
“ஒரு சேலை கட்ட இந்தப்பாடா?? விளங்கும் டி!!” என அலுத்துக் கொண்ட இளவரசி, கையோடு கொண்டு வந்த மல்லிப்பூச்சரத்தை அழகாய் அவள் தலையில் வைத்துவிடவும்,
“ம்மா இவளோ பூ எதுக்கு மா??” என வந்தனா மறுக்க,
“ப்ச்!! பூவை மட்டும் வேண்டாம்னு சொல்லக்கூடாது எப்போவும்.. ரொம்பலாம் இல்லை சரியாத்தான் இருக்கு.. இப்போதான் அழகா இருக்கு” என சடுதியில் திருஷ்டி கழித்து கொஞ்சிக் கொண்டவர்,
“சரி வா!! அப்பறம் உங்கப்பா ஆட ஆரம்பிச்சாருன்னா அங்க போற வரைக்கும் நிறுத்த மாட்டாரு” என அவளை இழுத்துக் கொண்டு வீட்டைப் பூட்டி விட்டு அவர்கள் புறப்பட,
நாட்டரசன் முன்னால் அமர்ந்து கொள்ள, பெண்கள் இருவரும் பின்னால் ஏறியதும், அவர்களின் வாகனம் மருதூர் பாப்பாத்தி அம்மன் ஆலயத்தை நோக்கி புறப்பட்டது.
வயலூரிலிருந்து அரை மணி நேரப் பயணத்தில் அவர்கள் கோவிலை அடைந்திருக்க, முன்பே சொல்லி வைத்திருந்ததால் பூசாரியும் அவர்களுக்காக காத்திருந்தார்.
முதலில் போய் அம்மனை வணங்கி விட்டு வந்த பின் இளவரசியும் வந்தனாவும் பொங்கல் வைக்க தேவையானதை ஏற்பாடு செய்து கொண்டிருக்க, அறிவழகன் குடும்பம் வந்த காரும் கோவில் வளாகத்தினுள் நுழைந்தது.
மருமகன் வருவதால் இரண்டு காரில் வந்திருக்கிறார்கள் என நினைத்த நாட்டரசன் புன்னகையுடன் அவர்களை வரவேற்கக் கிளம்பினார்.
முதல் காரில் அறிவழகன், வைஜெயந்தியோடு கணேசனும் இறங்க, மாப்பிள்ளை வீட்டு சொந்தம் என்று அவரை இன்முகத்துடன் வரவேற்ற நாட்டரசன், அடுத்த காரைப் பார்க்க, சந்தோஷ் இறங்கியதும், அடுத்து வெளிவந்த ஜீன்ஸ் பேன்ட் அணிந்த கால்களைக் கண்டு, அது சதீஷ் தான் என்று நினைத்து,
“வாங்க மாப்பிள்ளை!!!” என ஆர்ப்பாட்டமாக வணக்கம் வைத்து அழைத்த நாட்டரசனின் முகம், அங்கே சிரித்த முகத்துடன் இறங்கிய வினய்யைக் கண்டதும் விளக்கெண்ணையைக் குடித்ததைப் போல் ஆனது.
முதலில் இவனையா மாப்பிள்ளை என்றோம் என அதிர்ந்து, பின் இவன் எங்கே இங்கே என அவர் கோபம் கொண்டு ஏதோ திட்டப் போக,
அதை உணர்ந்ததைப் போல், “தம்பி நம்ம மாப்பிள்ளைக்கு சொந்தம் பா.. என் கூட வந்தாரே அவர் தான் தம்பியோட அப்பா.. அவங்க அம்மாக்கு இதான் குலதெய்வமாம் .. அதான் அவங்க ஏதோ வேண்டுதல் இருக்குன்னு மாப்பிள்ளை கூட வந்திருக்காங்க” என அறிவழகன் நாட்டரசன் காதில் கூற,
அதில் என் மாப்பிள்ளையின் சொந்தம் இவர்கள், கொஞ்சம் அடக்கி வாசி எனும் மறைமுக செய்தி இருப்பதை உணர்ந்து கொண்ட நாட்டரசனும், வேறு வழியின்றி எதுவும் பேசாமல் வினய்யை முடிந்த மட்டும் முறைத்து விட்டு உள்ளே சென்று விட்டார்.
“என்ன சகலை!! பலமான வரவேற்பு போல.. வந்தவுடனே மாமனாரை உனக்கு கும்புடு போட வச்சுட்ட.. பலே கில்லாடி தான் நீ!!” என சதீஷ் அவனின் காதைக் கடிக்கவும்,
“சும்மா இருங்க!! சித்தப்பா இங்க தான் பார்க்குறாங்க” என தூரத்தில் இருந்து இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த நாட்டரசனைக் கண்டு சங்கீதா கூறியபடி அவனுடன் இணைந்து நடந்தாள்.
“உங்க சித்தப்பா என்ன சின்ன சைஸ் பீரங்கியா?? சும்மா பார்வையாலே சகலை மேல குண்டு போட்டுட்டு இருக்காரு” என சிரிக்காமல் சதீஷ் கிண்டல் செய்ய,
“இப்போ உங்க மண்டையில நான் ஒன்னு போடப்போறேன்.. கொஞ்சம் வாயை மூடிட்டு வாங்க” என அவனை இழுத்துக் கொண்டு அவள் முன்னே நடக்க,
சதீஷ் வினய்யின் கையைப் பற்றி அவனையும் இழுத்துக் கொண்டு போனான்.
இருவரின் இந்த அதீத ஒற்றுமையைக் கண்ட நாட்டரசனின் கண்கள் சந்தேகமாக மாற,
“நிச்சயத்தப்போ இவனைப் பார்த்த மாதிரியே நியாபகம் இல்லை.. சொந்தம்ன்னு சொல்றாங்க.. ஒன்னும் சரியாபடலையே!!” என அவர் யோசித்துக் கொண்டிருக்க,
அவரை அதிகம் யோசிக்கவிடாமல் கணேசன் சென்று அவருடன் பேச,
இவனுடைய தந்தை என்று தெரிந்த பின்னால் அவருடன் பேச நாட்டரசன் தயக்கம் காட்ட, கணேசனோ அதைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பொதுவாய் பேசிக்கொண்டே, பேச்சோடு பேச்சாய் அவர்களைப் பற்றியும் தெரிவித்திருந்தார்.
‘இவர் என்ன இம்புட்டு இலகுவா வந்து பேசிட்டே இருக்காரு.. அன்னைக்கு நடந்ததை இந்தப்பய வீட்டுல சொல்லலையோ??’ என அவரின் பார்வை இப்போது வினய்யின் மீது ஆராய்ச்சியாகப் பதிந்தது.
அவரை மேலும் யோசிக்கவிடாமல், தன் பேச்சுத் திறமையால் கணேசன் நாட்டரசனை சற்று இயல்பாக்கி இருக்க, அவரும் சற்று தயக்கத்துடனே கணேசனுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்.
இங்கே வந்தனாவைத் தேடி வினய்யின் கண்கள் அலைபாய்வதை கண்டுகொண்ட சங்கீதா,
“கோவிலுக்கு பின்னாடி பொங்கல் வைக்க விறகு எடுக்கப் போய்ருக்காங்க சித்தியும் தனுவும் .. ரொம்பத் தேடி நீங்க தொலைஞ்சு போய்டாதீங்க.. வந்திடுவா!!” என அவனுக்குத் தேவையான தகவல்களை தந்துவிட்டுப் போக,
“தேங்க் யூ சங்கீதா!!” என்றான் லேசாய் வெட்கம் கலந்த புன்னகையுடன்.
அதற்குள் அம்மனை போய் தரிசித்து வந்து விடலாம் என அனைவரும் கோவிலுக்குள் செல்ல, சந்தோஷுடன் பேசிக்கொண்டே இறுதியாய் உள்ளே நுழைய போனவனின் கண்களில் விழுந்தாள் அவள்!!!!
அந்த நொடி, அவளைத் தவிர மற்ற அனைத்தும், அனைவரும் அவனுக்கு மறந்து போக, இடம், பொருள் மறந்து தன்னை மறந்து அவளை ரசித்திருந்தான் வினய்.
முதன்முறையாக அவளைப் புடவையில் காண்கிறான். இத்தனை நாளும் சிறு பெண் போல் அனைவரின் கண்களுக்கும் தெரிந்தவள், இன்று ஒரு வளர்ந்த குமரியாய் அதுவும் பேரழகு பதுமையாய் அவன் கண்களுக்குத் தெரிய,
‘ஊஃப்!! என்ன பொண்ணு டா சாமி!!’ என அவன் பெருமூச்சு விட்டு தன்னை நிதானப்படுத்திக் கொள்ள முனைய,
இவனின் பார்வையைக் கண்டு தலையில் அடித்துக் கொண்ட சந்தோஷ், “இதை மட்டும் சித்தப்பா பார்த்தாரு.. கூண்டோட கைலாசம் தான்டி!! யோவ் மாப்பி!! என் தங்கச்சியை மட்டும் பார்க்காம சுத்திப்பாருய்யா!! சித்தப்பா மட்டும் உன்னோட இந்த ரொமாண்டிக் லுக்கைப் பார்த்தாரு!! மவனே காலம் பூராம் நீ சிங்கிளா தான் இருக்கணும்” என அவனுக்கு எச்சரிக்கை விடுக்க,
அதெல்லாம் அவன் செவியில் நுழைந்தாலும், அவளின் இந்த அதீத அழகு அவன் மூளையை யோசிக்க விடாமல் செய்ய, “சித்தப்பாவாவது செத்தப்பாவாவது!! நான் இன்னைக்கே இங்கேயே தாலி கட்டி கூட்டிட்டு போய்டலாம்னு இருக்கேன்.. போடா அங்கிட்டு!!!” என சந்தோஷை அடக்கிய வினய் தன் வேலையை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்க,
“யோவ் பெரிய மாப்பி!! இந்த காதல் கிறுக்கனை வந்து என்னன்னு கேளுயா!! நம்மளை இங்கேயே கொன்னு புதைக்க இவன் பிளான் பண்ணிட்டு இருக்கான் ” என சதீஷிற்கு குறுந்தகவல் அனுப்பி உள்ளே சென்றுவிட்டவனை துணைக்கு அழைத்தான் சந்தோஷ்.
இங்கே விறகுகளை அள்ளிக் கொண்டு வந்த வந்தனாவிற்கு, யாரின் பார்வையோ ஊசியாய் தன்னைத் துளைப்பதாய்த் தோன்ற, சுற்றி முற்றி கண்களில் சுழற்றியவளின் பார்வை வட்டத்தில் விழுந்தான் வினய்!!
‘அவனேதானா???’ என ஆனந்த அதிர்ச்சியில் அவளின் நடை தன்னாலே நின்று விட,
‘இவன் எப்படி இங்கே?? இது எப்படி சாத்தியம்?? தான் காண்பது கனவோ???’ என அவள் ஐயம் கொண்டு கண்களைக் கசக்கி விட்டு மீண்டும் பார்க்க,
அவளின் செய்கையில் அவன் முகத்தில் பெரிதாய் புன்னகை ஒன்று மலர,
வந்தனாவின் மனம் அதில் விரும்பியே இடறி விழுந்தது.
இறுதியாக அவனின் உணர்ச்சி துடைத்த முகத்தைப் பார்த்துவிட்டு வந்தவளுக்கு, அதுவே மனதில் நின்று பெரும் வலியைக் கொடுத்துக் கொண்டிருக்க,
இன்று மீண்டும் அவனின் புன்னகை, அந்த வலிக்கு மருந்தாய் மாறி, அவள் மனதை இதமாக்கியது.
அண்ணலும் நோக்கினான்!! அவளும் நோக்கினாள்!! என்பதைப் போல் இருவரும் பார்த்தது பார்த்தபடி இருக்க,
இவர்களைக் கலைக்கவென்றே அங்கே தண்ணீர் குடத்தை தூக்கிக் கொண்டு வந்தார் இளவரசி.
மகள் உள்ளே செல்லாமல் நிற்பதைக் கண்டு, “இந்தா டி!! இதைக்கூட தூக்க முடியலையா?? அப்படியே இங்கேயே வச்சுட்டு நிக்கிற??” என குரல் கொடுத்துக் கொண்டே வந்தவர், அப்போது தான் அங்கே நிற்கும் வினய்யைப் பார்க்க,
அவரின் கணீர் குரலில், இருவருமே தங்களின் மோன நிலையில் இருந்து பட்டென வெளிவந்திருந்தனர்
“நன்றி தெய்வமே!! நல்லவேளை நீங்க வந்து காப்பாத்துனீங்க!!” என்பதைப் போல் சந்தோஷ் அவரைப் பார்த்திருந்தான்.
“அடடே தம்பி!!! வாங்க வாங்க!!” என புன்னகையுடன் வினய்யை நெருங்கிய இளவரசி,
“எப்படி இருக்கீங்க??” என நலம் விசாரிக்க,
“நல்லா இருக்கேன் ஆன்ட்டி” என வினய்யும் பதிலுக்கு புன்னகைத்தான்.
“அப்பறம் அன்னைக்கு நடந்ததுக்கு மன்னிச்சிடுங்க!! மன்னிக்க முடியாத தப்பு தான் அது.. ஆனா அதைத்தவிர வேறென்ன கேக்கன்னு எனக்குத் தெரியலை” என சங்கடத்துடன் அவர் கூறவுமே,
“அட என்னங்க நீங்க!!! என்கிட்ட போய் பெரியவங்க நீங்க மன்னிப்பு எல்லாம் கேட்டுட்டு.. விடுங்க ஆண்ட்டி!!” என்றான் தன்மையாய் வினய்.
‘இவ்வளவிற்குப் பிறகும் இன்னும் இல்யல்பாய் இன்முகத்துடன் பேசுகிறானே இந்தப் பையன்!!’ என நினைத்து வியந்த இளவரசியின் மனதில் வினய்யின் மேல் இருந்த மதிப்பு கூடிக் கொண்டு போனது.
“நீங்க என்ன தம்பி இந்தப்பக்கம்??” என அவர் விசாரிக்க,
வினய்யை முந்திக்கொண்டு, “நம்ம சதீஷ் மாப்பிள்ளைக்கு இவங்க தூரத்து சொந்தம் சித்தி.. அதுவுமில்லாம இவங்க அம்மாவுக்கு இதான் குலசாமியாம்.. அதான் வேண்டுதல் ஒன்னு வச்சிட்டு போகலாம்னு வந்திருக்காங்க” என சந்தோஷ் பதிலளிக்க,
அப்போது தான் நினைவு வந்தவராக, அடடே மாப்பிள்ளை, பொண்ணு எல்லாம் வந்தாச்சுல.. தம்பியை பார்த்த சந்தோஷத்துல அப்படியே நின்னுட்டேன்.. வாங்க உள்ளே போவோம்.. நேரமாச்சு.. அப்பறம் இதுக்கும் உங்க சித்தப்பா தையத் தக்கா வெண்டக்கான்னு குதிச்சிட்டு இருப்பாரு” என்ற இளவரசி,
“தம்பி!! நல்ல சக்திவாய்ந்த அம்மன்!! என்ன வேண்டுதல் வச்சாலும் நிச்சயம் நிறைவேத்திக் கொடுக்கும்.. அதுனால கவலைப்படாம உங்க வேண்டுதலை வச்சு சாமி கும்பிட்டு வாங்க.. உள்ள போவோம் வாங்க!!” என அவனை அழைத்துவிட்டு,
“நீ என்ன டி வாசல்ல இருக்க சிலை மாதிரி இங்கேயே நின்னுட்ட!! போ போய் விறகை அங்க இறக்கி வச்சிட்டு உள்ளே வா..” என வந்தனாவையும் விரட்டிவிட்டு அவர் உள்ளே செல்ல,
எங்கே வினய் காதல் மயக்கத்தில் அவளின் பின்னே சென்றுவிடுவானோ என பயந்த சந்தோஷ் அவனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டான்.
செல்லும் முன், வந்தனாவை திரும்பிப் பார்த்து அவன் வசீகரப் புன்னகையுடன் கண்ணடித்து விட்டுச் செல்ல, பெண்ணவளுக்கு திக்கென்று இருந்தது.
‘யாரும் பார்த்திருப்பார்களோ??’ என அஞ்சினாலும், உண்மையில் அவனின் பார்வையும், கண் சிமிட்டலும் உள்ளுக்குள் குறுகுறுப்பைத் தோற்றுவித்து, ஒரு வித இன்பமான அவஸ்தையை உண்டாக்கியது.
“நிச்சயம் இவன் வேண்டுதல் வைக்க மட்டும் வரவில்லை!! தனக்காகத் தான் வந்துள்ளான்” என்பது அவளுக்குத் திண்ணம்.
ஆனால் திடீரென்று இவன் எப்படி சதீஷிற்கு உறவாகி, இவர்களுடன் ஒன்று சேர்ந்தான் என்பது அவளுக்கு குழப்பமாகவே இருக்க,
“சரி ஏதுவாக இருந்தால் என்ன!!! இந்தக் காலத்தில் திருமணமான தம்பதிகளே, மாமனார் வீட்டில் ஏதாவது ஒரு குறை இருந்தால் அதை பெரிதாக்கி எவ்வளவு பிரச்சனை செய்கிறார்கள்?? ஆனால் இவன்!!! அவ்வளவு பெரிய அவமானத்தையே தனக்காக தூக்கி எறிந்து விட்டு, இத்தனைக்குப் பின்னும் தன்னைத் தேடி வந்திருப்பதே எவ்வளவு பெரிய விஷயம்??” என அவனின் காதலின் அளவை எண்ணி பிரமித்துப் போனவள்,
முதன்முறையாக தன் பயத்தை ஓரம் கட்டி வைத்துவிட்டு, “அவனுடன் வாழ முடிந்தளவு போராடித் தான் பார்ப்போமே!!! இத்தனை காதலை தன் மீது பொழிபவனுக்கு, நானும் என் பயத்தில் இருந்து வெளிவந்து என் காதலை திருப்பிக் கொடுப்பது தானே சரியாகும்” என சரியான பாதையில் அவளின் சிந்தனை ஓடியது.
அவனின் காதல் கொடுத்த தைரியம், அவள் முகத்தில் அழகான புன்னகையாக வீற்றிருந்தது.
“என்ன வந்தனா??? இப்போவே டிரீம்ஸா???” என கேட்டுக்கொண்டே வந்து அவளின் சிந்தனையைக் கலைத்தான் சதீஷ்.
“மேடம் பெரிய ஆள் ஆகிட்டாங்க!! நம்மகிட்டலாம் பேசுவாங்களா?? நீங்க எதுக்கு தேவையில்லாம டைம் வேஸ்ட் பண்றீங்க??” என சங்கீதா, வந்தனாவை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே இப்படிக் கூற,
“ஓய்!! சங்கி மங்கி!! என்ன வாய் ரொம்ப ஓவரா நீளுது!! மாமா கூட இருக்க தைரியமா??” என பழைய வந்தனாவாக மாறி அவள் மிரட்டவும்,
“நான் யாருப்பா உங்களை மிரட்ட?? நீங்க தான் என் கல்யாணத்துக்கு கூட பக்கத்துல இருக்க முடியாத அளவுக்கு பெரிய மனுஷி ஆகிட்டிங்க.. உங்ககிட்ட பேச முடியுமா??” என்ற சங்கீதாவின் குரலில், இன்னுமே தங்கையின் செயல் குறித்தான ஆதங்கம் அப்பட்டமாகத் தெரிய,
வந்தனாவிற்குமே, ‘தான் ஏன் அவ்வாறு இருந்து அனைவரையும் கஷ்டப்படுத்தினோம்??’ என தன்னைக்குறித்தே கோபமாக வந்தது.
“சாரி சங்கி மங்கி!! நான் பண்ணினது தப்பு தான்.. பிளீஸ் உன்னோட தனுவை மன்னிச்சிடேன்” என தமக்கையின் தாடையைப் பற்றி அவள் செல்லம் கொஞ்ச,
சங்கீதாவிற்குமே அவளின் அப்போதைய மனநிலையை உணர முடிந்ததால், கோபத்தை இழுத்துப் பிடிக்காமல் சிரித்து விட,
“அப்பாடி சிரிச்சுட்டியா??” என பட்டென அவளின் முகத்தில் முத்தம் ஒன்றை வைத்து வந்தனா கட்டிக்கொள்ள,
அதைக்கண்ட இருவருக்கு பொறாமையில் காதில் புகை வராத குறை தான்.
“ஒன்னு கூடிட்டாய்ங்க சகலை!! இனி நம்ம பாடு திண்டாட்டம் தான்” என சதீஷ் அங்கு வந்த வினய்யிடம் புலம்ப,
அவனும் அதை ஆமோதிப்பதாய் தலையசைத்து புன்னகைத்தாலும், பார்வை என்னமோ இன்னும் அவனின் வதனாவைத் தான் ஏக்கம் கலந்த ரசனையுடன் தழுவியிருந்தது.
அப்போது சங்கீதாவின் அணைப்பில் இருந்து கொண்டே இவனைப் பார்த்து முதன்முறையாக காதலாய் ஒரு புன்னகை வீசியது அவனின் பூங்காற்று!!!
அவளின் பார்வையை நம்பமாட்டாமல், சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போன வினய், “கொன்னுட்ட வதனா!!!” என நெஞ்சத் தட்டி, மென்சிரிப்புடன் தலை கோதிக் கொள்ள,
அதில் மேலும் வந்தனாவின் புன்னகை விரிவடைந்தது.
இங்கே காதல் புறாக்கள் இருவரும் சுற்றம் மறந்த தங்களின் உலகில், சந்தோஷச் சிறகு விரித்து பறந்து கொண்டிருக்க, பாவம் நாட்டரசனின் பார்வை இங்கு சந்தேகமாய் படிந்ததை கவனிக்கத் தான் அங்கு யாருமில்லை.
காதலுக்காக எதையும் மோதிப் பார்த்து விடலாம் எனும் அசாத்திய துணிச்சலில் அவனும், தன் மேல் இத்தனை காதல் கொண்டவனுக்காக, நம் பயத்தை விட்டொழித்து நம்பிக்கையாக இதை போராடி தான் பார்ப்போமே என சிறிதாய் துளிர் விட்ட நம்பிக்கையுடன் அவளும், அவ்வளவு எளிதாக உங்களை ஒன்று சேர விட்டுவிடுவேனா என விதியும் காத்திருக்க, நாமும் அடுத்து என்ன நடக்கும் என காத்திருந்து பார்க்கலாம்.
error: Content is protected !!