Skip to content
Post Views: 3,476
நாம் வாழ்ந்த இசைமழை காலங்களில் நீ தெளித்த
மரத்தடி தூறல்களின் நினைவுகளுடன் நான்
மூன்று வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்தது எங்களது முதல் சந்திப்பு.
Advertisement
நான் படித்தது பொறியியல் பட்டப்படிப்பு. ஆனால் அதில் எனக்கு துளியிலும் துளிக்கூட நாட்டம் இருந்ததில்லை. சிறு வயது முதலே இசையே என்னை ஆக்கிரமித்து வைத்திருந்தது. அதனால் இசையும் கற்றுக்கொண்டேன். அதனுள் மூழ்கி மூழ்கி மகிழ்ந்தேன்.
என் இசையை, நான் பாடுவதை நிறையவே ரசிப்பாள் சித்தாரா. என்னை பாடச்சொல்லி அடிக்கடி தனது கைப்பேசியில் பதித்துக்கொள்வாள் அவள்.
எனக்கு கிடைத்த அந்த மென்பொருள் நிறுவன வேலையின் அழுத்தங்களுக்குள், என்னை என்னால் பொருத்திக்கொள்ளவே இயலவில்லை. வேலையை ராஜினாமா செய்தேன்.
Advertisement
அதே நேரத்தில் அப்பா உயிருடன் இல்லாத நிலையில் அம்மா ஏதோ ஒரு சின்ன தனியார் கம்பெனியில் சொற்ப சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நிலையில் நான் வேலை இல்லாமல் இருப்பது அந்த நேரத்தில் எனக்கு பெரிய மன உறுத்தல்.
Advertisement
நான் வேலையை விட்டதில் அம்மாவுக்கு என் மீது நிறையவே வருத்தம். எங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும். ஏதாவது ஒரு கல்லூரியில் ஆசிரியர் வேலை கிடைத்துவிடாதா என முயன்று கொண்டிருந்தேன் நான்.
மன அழுத்தம் வரும் வேளைகளில் என் வீணையை எடுத்து மீட்டுவேன். அதன் ராகங்களில் தொலைந்து போக முயல்வேன்.
“எப்போ பாரு என்னடி டொய்ங்.. டொய்ங்ன்னு? இது ஒண்ணு எனக்கு தலைவலி” வெடிப்பார் அம்மா. பதில் சொல்லாமல் வீணையை எடுத்து ஓரமாய் வைத்துவிடுவேன்.
Advertisement
அவரை சொல்லி குற்றமில்லை. அவர் நிலை அப்படி. இசை எனக்கு ஒரு கண் என்றால் அம்மா ஒரு கண்.
சித்தாரா மூலமாக எனக்கு ஷ்யாம் அறிமுகமா அல்லது ஷ்யாமின் குரல்தான் அவனை எனக்குள் செலுத்தியதா என்றால் முதல் அறிமுகம் குரல் மூலம்தான்.
‘அப்போதெல்லாம்… ம்ஹூம் அப்போதெல்லாம் என்று சொல்லக்கூடாது அப்போதிலிருந்தே என்று சொல்லவேண்டும். அப்போதிலிருந்தே ஹெட் போனில் எனது காதுகளுக்குள் ஒலிக்கும் அவனது குரல் மூலம் எனக்குள் இறங்கி என் உயிர் தொடுவான் ஷ்யாம்.
“என்ன ஒரு குரல் அது? எப்படி இப்படி இசைக்கிறான்” வியந்து உருகுவேன் நான்.
அவனது அத்தை, மாமா. சித்தாரா என அனைவருக்கும் அவன்தான் உயிர். “எங்க ஷ்யாம், எங்க ஷ்யாம்” என்பார்கள் எப்போதும்.
‘அவர்கள் என்ன? நானே என் மனதிற்குள் “என் ஷ்யாம். என் ஷ்யாம்” என்றுதான் மருகிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவன் முன்னால் இதை என்னால் தைரியமாக சொல்லிவிட முடியுமா?. அவனால்தான் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா?
அவனை சந்திக்கும் முன்பே சித்தாரா என்னிடம் அவனை பற்றி அடிக்கடி பேசுவாள். எனக்கு அந்த பேச்சில் எனக்கு எந்த வித ஈர்ப்பும் இல்லை என்பதை போன்றதொரு பாவத்தில் அதை கேட்டுக்கொண்டிருப்பேன் நான்.
‘எங்க வீட்டுக்கு பக்கத்து வீடுதான் ஷ்யாம் வீடு. தினமும் எவ்வளவு லேட் ஆனாலும் நான் ஹாஸ்பிடல்லேர்ந்து நேரே அவன் வீட்டுக்குத்தான் போவேன் அவன் வீட்டுக்குள்ளே எப்பவும் ஏதாவது ஒரு மெல்லிசை கேட்டுட்டே இருக்கும். அது கேக்கும் போது மனசு அப்படியே ரிலாக்ஸ் ஆகிடும்.’ என்பாள் அவள்.
“அவனுக்கு மியூசிக்கு அடுத்தது பிடிச்சது செஸ். டைம் இருக்கும் போதெல்லாம் தனியா உட்கார்ந்து அவனே ரெண்டு பக்கமும் செஸ் விளையாடிட்டே இருப்பான். அதுதான் அவனுக்கு பாட்டு கம்போஸ் பண்ண கான்சன்ட்ரேஷன் கொடுக்குதுன்னு சொல்வான். செமையா விளையாடுவான் தெரியுமா?”
“ஆரம்பிச்சிட்டியா உன் மாமா மகன் புராணத்தை. யப்பா முடியல்லைப்பா என்னாலே”.
உதடுகள் மட்டும்தான் இப்படிச்சொல்லும். உள்ளம் ஒவ்வொரு நொடியும் அவன் இசையையும், குரலையும், ஏன் அவனை பற்றிய விவரங்களை, தினசரி செய்திகளை எல்லாம் கூட கேட்டுவிட துடித்துக்கொண்டேதான் இருக்கும்.
“ஷ்யாம் நல்லா பாடுறார், இசையமைக்கிறார் நான் ஒத்துக்கறேன். ஆனா அவரோட அந்த கோபம் இருக்கே அது ஒண்ணுதான் எனக்கு அவர்கிட்டே பிடிக்காத விஷயம். அதுவும் கண் மண் தெரியாத கோவம். யோசிக்காம கை ஓங்குறது. அவருக்கு நிஜமா சிரிக்க எல்லாம் தெரியுமா?” கேட்டிருக்கிறேன் அவளிடம்.
“கோபமா?” கேட்டவளிடம் ஒரு பெருமூச்சு எழுந்தது. “அது எப்பவுமே உண்டு, இப்போவெல்லாம் இன்னும் அதிகமாவே வருது.
“முன்னாடியெல்லாம் நான் அவன் வீட்டுக்கு போனா எதிர்லே வந்து நின்னு ஹாய் சித்து .இன்னைக்கு எத்தனை பேரை கொலை பண்ணே? அப்படின்னு ஒரு ஸ்மைலோட கேட்பான் பாரேன். அப்படியே அவன் சிரிப்பை பார்ததும் அத்தனை டென்ஷனும் காணாம போயிடும். அவனுக்கு எப்பவும் என்னோட வம்பு பண்ணணும். கிண்டல் பண்ணணும். இல்லேன்னா அவனுக்கு தூக்கமே வராது”
அவனை பற்றி பேச ஆரம்பித்தால் சித்தாராவால் நிறுத்தவே முடியாது.
“முன்னாடியெல்லாம் அவன் வீட்டுக்கு யார் வந்தாலும் அவங்களுக்கு அவன் கையாலேயே சூடா ஸ்ட்ராங்கா காபி போட்டுக்கொடுப்பான். அதிலே கிடைக்குற ஒரு ரிலாக்ஸ்சேஷன் வேறே எதிலேயும் இருக்காது”
“நான் எம்.பி.பி.எஸ் முடிச்சிட்டு. பி.ஜிக்கு அப்ளை பண்ணியிருந்த நேரம் அது. அப்போ ஒரு தடவை சந்தியா, தலைவர் மாடி சுவத்திலே உட்கார்ந்து கிட்டார் வாசிச்சிட்டே இருக்கார். திடீர்னு அப்படியே சாஞ்சிட்டார். மேலிருந்து கீழே விழுந்து ரெண்டு காலிலேயும் மல்டிபிள் ஃப்ராக்சர். உச்சக்கட்ட வலி அவனுக்கு. அது எனக்கு நல்லா தெரியுது. ஆனா எதையுமே வெளியிலே காமிச்சுக்கலை அவன்.”
முகம் கொள்ளா வியப்புடன் அன்றைய தினத்தை எப்போதும் விவரிப்பாள் அவள். அவள் ஷ்யாமை பற்றி பேசும் தருணங்களில் எத்தனை கட்டுப்படுத்தினாலும் என்னையும் அறியாமல் என் முகத்திலும் வியப்பு ரேகைகள் ஓடும்.
“ஆம்புலன்ஸ்லே போறோம். காதிலே ஹெட் போன் மாட்டிட்டு எதுவுமே நடக்கலை அப்படிங்கிற மாதிரி கண்ணை மூடிட்டு அப்படியே படுத்திருக்கான். அதுக்கு அப்புறம் ரெண்டு சர்ஜரி, பிஸியோதெரபி எல்லாத்தையும் இப்படியேதான் ரொம்ப அமைதியா கடந்து வந்தான்.”
“எப்படி இப்படி இருக்கே ஷ்யாம்? ன்னு நான் ரொம்ப ஆச்சர்யமா கேட்டேன். அதுதான் மியூசிக் இருக்கே. அது என்கூட இருக்கிற வரைக்கும் எந்த வலியும் எனக்கு தெரியாது” அப்படின்னான்.
அவன் எப்பவும் தன்னோட வருத்தங்களை, வலிகளை மனசை, வெளியிலே காமிச்சுக்கிட்டதே இல்லை.
“இப்போ, அவன் வாழ்க்கையிலே வாங்கின அந்த பெரிய அடிக்கு பிறகும் பாட்டுதான் அவனுக்கு மருந்து.” சொல்வாள் அவள்.
“இப்பவும் செஸ் விளையாடுறான். பாடறான் இருந்தாலும் அவன்கிட்டே ஒரு இறுக்கம் இருந்திட்டே இருக்கு. ஒரு கூட்டுக்குள்ளே ஒடுங்கிட்டான். எந்த படத்துக்கும் மியூசிக் பண்ண மாட்டேங்கறான்”
“அவன் சந்திச்ச விஷயங்கள் அப்படி. அதை பத்தியெல்லாம் உனக்கு தெரியும்தானே?” எனக் கேட்டவள் அவன் சந்தித்த அந்த வலிகளை, ஊரே அறிந்த அந்த விஷயத்தை எனக்கு மறுபடியும் விளக்குவாள். அதை கேட்கக் கேட்க எனக்குள்ளும் பாரம் ஏறும்.
“இப்பவும் பாட்டுதான் அவனுக்கு மருந்துன்னு சொன்னேன்னே அந்த மருந்திலே உனக்கும் பங்கிருக்கு தெரியுமா?” ஒரு முறை சொல்லி இருக்கிறாள்.
“புரியலை. எனக்கென்ன பங்கு”? நான் அவளை கேள்வியாக நோக்க
“சஸ்பென்ஸ் ஒரு நாள் உன்னை அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். அப்போ உனக்கே புரியும்” என்றாள் அவள்
ஷ்யாம் சம்மந்தப்பட்ட இது போன்ற பல நிகழ்வுகளை. அப்போதெல்லாம் பல முறை சொல்லியிருக்கிறாள் இப்படி போய்க்கொண்டிருந்த ஒரு காலத்தில்தான் ஷ்யாமை சந்திக்கும் வாய்ப்பு வந்தது எனக்கு.
சித்தாராவை என் அம்மாவுக்கும் தெரியும் என்பதால் அப்போதெல்லாம் அவள் வீட்டுக்கு நான் அடிக்கடி வந்து செல்வது வழக்கம்தான். அதற்கு அம்மா எப்போதும் தடை சொன்னது இல்லை. அப்படி அவள் வீட்டுக்கு சென்ற ஒரு நாளில்தான் அவனை சந்திக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது எனக்கு.
அம்மாவுடனான ஒரு பெரிய வாக்கு வாதத்திற்கு பிறகு மனதில் உள்ளதை எல்லாம் கொட்டித்தீர்க்க அந்த மாலை வேளையில் சித்தாராவின் வீட்டுக்கு சென்றிருந்தேன் நான். நடந்தவைகளை அவளிடம் சொல்லிக் கொண்டேயிருந்த என் கண்களில் நீரருவி.
“எங்கேயாவது ஒரு கிணத்திலே போய் குதிச்சிடலாம் போலே இருக்கு” என்றேன் நான்.
“லூசா நீ” வெடித்தாள் அவள். “எங்க அப்பா அம்மா திட்டினதுக்கு எல்லாம் நான் கிணத்திலே குதிச்சா கால் மணி நேரத்துக்கு ஒரு தடவை குதிக்கணும். உங்க அம்மா மனசை கொஞ்சமாவது நினைச்சு பார்த்தியா நீ? அவங்களுக்கும் உன்னை விட்டா யார் இருக்காங்க?”
அவள் சொல்வதும் சரிதான் என தோன்றியது எனக்கு.
“நீ சொல்றதும் கரெக்ட்தான். அம்மாவுக்கு என்னை விட்டா யார் இருக்காங்க. அவங்களும் அழுதிட்டுதான் இருக்காங்க. பாவம். அவங்களை இனிமே நான் அழவைக்க கூடாது” என்றேன் தளர்ந்த குரலில்.
என் கரத்தை ஆதராவாக பிடித்துக்கொண்டு “ஸ்கூல்லே வாட்டர் கன்னை கையிலே வெச்சுகிட்டு என் வைட் யூனிஃபார்ம் மேலே ஹோலிக்கு கலர் தண்ணி அடிக்க என்னை ஓட ஓட துரத்தின சந்தியா இல்லை நீ. ரொம்ப சோகமா ஆகிட்டே பொண்ணே” என்றாள் அவள் “சரி இப்போ உனக்கு என்னதான் வேணும்”
‘ஏதாவது ஒரு வேலை வேணும். டென்ஷன் இல்லாத வேலை” நான் சொல்லி முடிக்க கலகலவென சிரித்தாள் அவள்
“டென்ஷன் இல்லாத வேலைன்னு இந்த உலகத்திலே ஒரு வேலை இல்லவே இல்லை. நீ செய்யற வேலையை நீ காதலிச்சா எந்த டென்ஷனும் வராது.”
“நான் காதலிக்கறது மியூசிக் மட்டும்தான். அது சம்மந்தமா ஏதாவது வேலை கிடைச்சா நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன் சித்து” என்றேன் நான்.
என்ன தோன்றியதோ? சில நொடிகள் என்னை இமைக்காமல் பார்த்தாள் அவள். இப்போது ஒரு தீர்கமான புன்னகை அவள் முகத்தில்.
“சரி வா உன்னை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன்” என்றாள் சித்தாரா
“எங்கே சித்து?” நான் அவளை கேள்வியாய் பார்க்க
“பக்கத்து வீட்டுக்கு” என்றாள் அவள் புன்னகை மாறாமல்.
சற்றே பரபரத்துப்போய் எழுந்து நின்றேன் நான். “பக்கத்து வீட்டில் யார் இருக்காங்க?” தெரியாதது போல் கேட்டு வைத்தேன். இதயத்தின் வேகம் மணிக்கு நூறு கிலோமீட்டர்.
“ஆமாம் உனக்கு தெரியவே தெரியாது பாரு. எல்லாம் ஷ்யாம் வீட்டுக்குத்தான் வா. வா” சோபாவை விட்டு எழுந்தாள் என் தோழி.
“அங்கே எதுக்கு சித்து?” புரியாமலேதான் கேட்டேன் நான்.
“ஆங்? அங்கே அவன் வீட்டிலே மாவாட்டுற வேலை காலியா இருக்காம். உன்னோட பழகின பாவத்துக்கு உனக்கு அந்த வேலையை வாங்கித் தரேன். நீ அப்படியே அவன் பாடுறதை கேட்டுட்டே டென்ஷன் இல்லாம மாவாட்டலாம் வா வா” என்றாள் அவள் கொஞ்சம் கூட சிரிக்காமல்.
சொல்லிவிட்டு அவள் நகர நான் என் உடையை ஒருமுறை பார்த்துக்கொண்டேன் நான்.
எலுமிச்சை நிறத்தில் அங்கங்கே சின்ன சின்ன பச்சை பூக்கள் வரையப்பட்ட சாதரண சல்வார். காதில் ஒற்றை வெள்ளைக்கல் பதித்த தோடு, நெற்றியில் சின்னதாய் ஒரு வட்ட வடிவ போட்டு கழுத்தை ஒட்டிய சின்ன தங்கச்சங்கிலி பின்னி முடிக்கப்பட்ட நீள் கூந்தல். இதுவே எனது அன்றைய அலங்காரமாக இருந்தது.
“ட்ரெஸ் சரியா இருக்கா சித்து?” அவசரமாக அவளிடம் வினவினேன் நான்.
“ஹலோ அவன் என்ன உன்னை பொண்ணு பார்க்கவா போறான். மாவாட்டுற வேலைக்கு இது போதும் வா” என்றபடியே நடந்தாள் என் தோழி. பொங்கிய சிரிப்பை உதடுகளுக்குள் மறைத்துக்கொண்டாள் என்று கூட தோன்றியது எனக்கு.
ஷ்யாமின் புகைப்படங்களை நான் பாரத்ததுண்டுதான், அவனது பேட்டிகளை, இசை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பாரத்ததுண்டுதான், என்றாலும் என் உள்ளம் வருடும் குரலுக்கு சொந்தமானவனை நேரில் பார்க்கக் போகிறேன் எனும் எண்ணமே எனக்குள் சந்தோஷ படபடப்பை விதைத்திருந்தது. கால்கள் ஒரு வித ஆனந்த நடுக்கத்துடன் நகர சித்தாராவுடன் அவன் வீடு நோக்கி நடந்தேன் நான்.
அவன் பாடிய பாடல்கள் எனது காதில் ஒலிப்பதை போன்றதொரு ஆனந்த உணர்வு. அவன் வீட்டை அடைய தேவைப்பட்ட அந்த இரண்டே நிமிடங்களுக்குள் அவனை பார்த்ததும் என்ன பேசவேண்டும் என்பதற்கான இருபது ஒத்திகைகளை முடித்து விட்டிருந்தேன்.
“உங்களோட வாய்ஸ் ரொம்ப டிவைன் வாய்ஸ். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. அது கேட்கும் போது அது எனக்குள்ளே அப்படியே வருடிக்கொடுக்கும்” சொல்லிச் சொல்லி பார்த்துக்கொண்டேன் எனக்குள்ளே.
அவனது வாசலில் இருந்த அந்த சற்றே பெரிய தோட்டத்தின் இரு புறத்திலும் பூத்து நின்ற அழகு பூக்களை பார்த்தபடியே நடந்தேன். ஆங்காங்கே சில பூக்கள் தரையில் உதிர்ந்து விழுந்து கிடந்தன.
“உன் ஹீரோ பூவெல்லாம் பறிக்கவே மாட்டரா?” கொக்கி போட்டேன் அவளிடம்
“அவன் பூ பறிக்க மாட்டான் சந்தியா” என்றாள் அவள். “செடியிலே இருக்கிற பூவை பறிக்கிறது காதலன்கிட்டேர்ந்து காதலியை பிரிக்கிற மாதிரின்னு முன்னாடியெல்லாம் சொல்வான்.” புன்னகைத்தாள்
சில அடிகள் நாங்கள் நடக்க எங்களை தேடி வந்து வருடி அணைத்துக்கொண்டது அது. அந்த பியானோ இசை. வாசிப்பது அவன்தான் என்பதை யாரும் எனக்கு சொல்ல வேண்டிய தேவை இருக்கவே இல்லை.
விழுந்தடித்துக்கொண்டு உள்ளே ஓடிச்சென்று அவனையும் அவன் வாசிப்பதையும் கண்டு விட பிடிவாதம் பிடித்தது உள்ளம். ஒரு வித ரசிப்பான ரகசிய சிரிப்புடன் என்னையே பார்த்துக்கொண்டிருந்த சித்தாராவின் பார்வை என்னை கட்டுப்படுத்தியது.
அவள் ஓரக்கண்ணால் என் முகம் பார்த்துக்கொண்டே என்னுடன் நடக்க மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு அவளுடன் நடந்தேன். மெல்ல மெல்ல நடந்து உள்ளே நுழைந்த வேளையில் அவனது இசை இன்னமுமாக அருகே அருகே வந்து உயிருடன் கலந்தது.
கூடத்துக்கு வந்து நின்றுவிட்டேன் நான். அங்கே சற்றே தூரத்தில் அமர்ந்துதான் அவன் வாசித்துக்கொண்டிருக்கிறான் என்பது நன்றாக தெரிகிறது. நான் விழிகளை கொஞ்சமாக நிமிர்த்த பளிச்சென்று அந்த பளிங்கு தரை கூடம் கண்ணில் விழுந்தது.
அலங்கார பொருட்கள் என்று அங்கே பெரிதாக எதுவுமில்லை. பொதுவாகவே அவன் வீட்டில் அலங்கார பொருட்கள் எதுவுமே எப்போதுமே இருந்ததில்லை. இசையும், இசையுடன் சம்மந்தப்பட்ட பொருட்களுமே அவன் வீட்டை எப்போதும் அலங்கரிக்கும்.
“ப” வடிவத்தில் போடப்பட்டிருந்த சோபாக்களும், கண்ணாடி வைத்த அந்த வட்ட வடிவ காபி டேபிளையும், அதன் வைக்கப்பட்டிருந்த அந்த சதுரங்க அட்டையையும் தாண்டி நான் விழிகளை நகர்த்த அங்கே நடுநாயகமாக இருந்த அந்த மெரூன் நிற பியானோவில் ஒரு சிறு குழந்தையை தொட்டு தொட்டு விளையாடும் மென்மையுடன் விரல்களால் விளையாடிக்கொண்டிருந்தான் அவன்.
எல்லாவற்றையும் கடந்து விட்ட உணர்வில்லா பாவம் அவன் முகத்தில். அவன் இசையமைத்த பாடல்களில் நான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடல் அது.
கண்களை மூடிக்கொண்டு மெய் மறந்து அவன் இசைத்துக்கொண்டே இருந்தான். நான் அசைய மறந்து அங்கேயே நின்றிருந்தேன். சித்தாராதான் என்னை லேசாக இடித்து கலைத்தாள்.
“வா உட்காரலாம்” சைகையில் சோபாவை காட்டிச்சொன்னாள் அவள்.
விசையுறு பந்தினைப்போல் அவன் இசையில் கட்டுண்டு நடந்தேன் நான். அவன் நாங்கள் வந்ததை கவனிக்கவேயில்லை.
‘அவன் இறைவனுக்கு மிக பிரியமான குழந்தை போலும். அதனால்தான் அவன் மனமுவந்து ஷ்யாமுக்கு இசையெனும் வரத்தை அள்ளிக்கொடுத்துவிட்டான்’ என்று தோன்றியது.
பிரமிப்பில் ஊறிப்போய் நான் அவனையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். அப்போதுதான் நிகழ்ந்தது அது. சத்தியமாய் அப்படி ஒரு நிகழ்வை நான் இந்த ஜென்மத்தில் எதிர்ப்பார்த்திருக்கவில்லை.
திடீரென நின்றது பியானோ இசை. அது அவனது கைப்பேசி ஒலித்த காரணத்தினால் என்பது சில நொடிகள் கழித்துதான் புரிந்தது எனக்கு. அவன் இசை நின்றதும் சட்டென எதையோ இழந்து விட்டதைப்போன்ற உணர்வில் நான் நிமிர அங்கே அவனது கைப்பேசி ஒலித்துக்கொண்டிருந்தது.
“மலர்கள் பேசுமா? பேசினால் ஓயுமா அன்பே?” அந்த கைப்பேசியின் அழைப்பு ஒலியில் ஒரு பெண் குரல் அந்த பாடலை இசைத்துக்கொண்டிருந்தது. ஒரு சில நொடிகள் அந்த குரலையும் பாடலையும் கூட நான் ரசித்தேன்தான். அதன் பிறகுதான் எனது சர்வமும் குலுங்கியது.
“அவனது கைப்பேசியில் ஒலித்துக்கொண்டிருப்பது. என் குரலா. என் குரல்தானா?” அதிர்ந்து ஆடிப்போனேன் நான்.
ஏதேதோ பழைய நினைவுகளுடன் விமான நிலையத்தில் நடந்தவள் அவன் காரை கண்டு கொண்டதும் தரையிறங்கினேன்.. காருக்கு வெளியே அவனது டிரைவர் சிவராமன் நின்றிருந்தார்.
“மெதுவா நட. தயவுசெய்து எப்பவும் மெதுவா நட” சொல்லிச் சொல்லி அனுப்பிய சித்தாராவின் குரல் காதில் கேட்டுக்கொண்டிருக்க, பெட்டியை இழுத்துக்கொண்டு மெதுவாக நடந்து காருக்கு அருகில் வந்திருந்தேன் நான்.
error: Content is protected !!