Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

வரம் 💘 21

அத்தியாயம் – 21

“இப்போ முடிவா என்னதான் சொல்றீங்க நீங்க ரெண்டு பேரும்???” என கைகளைக் கட்டிக்கொண்டு அழுத்தமாய் தன் முன் அமர்ந்திருந்த இருவரையும் பார்த்தபடி தீர்க்கமாய் கேட்டிருந்தார் அகிலா.



Advertisement

“என் முடிவை நான் என்னைக்கோ சொல்லியாச்சு மாம்!!” என இலகுவாக வினய் கூறுவது போல் இருந்தாலும், அவன் கண்களில் தெரிந்த தீவிரத்தில் அவன் தன் முடிவில் இருந்து ஒரு நாளும் மாறப்போவதில்லை என்பது அகிலாவிற்குப் புரிந்து போக, 

“வினய்!!! சாரி டூ சே திஸ்!! நீ பண்றதுக்கு பேர் லவ் கிடையாது!! முட்டாள்தனம்!!” என ஆதங்கத்துடன் கூறியவர், 

Advertisement

Advertisement

“அன்னைக்கு என் பேச்சை மீறி அந்த கோவிலுக்குப் போய் அவ்ளோ அசிங்கப்பட்டு வந்த பின்னாடியும் நீ திருந்தலை.. சரி அது கூடப் பரவாயில்லைன்னு விட்டுடலாம்.. பட் அந்தப்பொண்ணு இத்தனை நடந்தும் சைலண்டா இருக்கப்போவே உனக்குப் புரியலையா வினய்??? ஒரு ரிலேஷன்ஷிப்ல ரெண்டு பேரும் ஈக்வலா எஃபர்ட் போட்டா தான் அந்த ஷிப்ல ஸ்மூத்தா டிராவல் பண்ண முடியும்.. அந்த பொண்ணு இப்படியே பேசாமயே இருந்தா என்ன அர்த்தம் வினய்?? ஒன்னு அவங்க அப்பாவை பேசி சரி பண்ணனும்.. இல்லையா உன்னை வேண்டாம்னு உன்கிட்ட தெளிவா சொல்லவாச்சும் செய்யணும்.. இப்படியே அமைதியா இருந்தா நம்ம என்ன நினைக்க?? முழுசா ஏழு மாசம் ஆய்டுச்சு!! இன்னும் ஒரு சின்ன இம்ப்ரூவ்மென்ட் கூட உன் லவ்ல இல்லை.. இப்படியே இன்னும் எத்தனை மாசம், இல்லை வருஷம் காத்துட்டு இருக்க ஐடியால இருக்க வினய்???” என இத்தனை பேசியும் இவன் புரிந்து கொள்ள மறுக்கிறானே என இயலாமையுடன் அவர் கேட்க, 

அவர் அருகில் சென்று அகிலாவின் கரங்களை எடுத்து தன் கைகளுக்குள் பொத்திக் கொண்ட வினய், 

Advertisement

“மாம்!!! டென்ஷன் ஆகாதீங்க மாம்!! எது எது எப்போ நடக்கணுமோ அப்போ தன்னாலே நடக்கும்.. அண்ட் வதனா!! கூடிய சீக்கிரமே வருவா மாம்.. அவளோட வினய் கிட்ட ஓடி வந்துடுவா பாருங்களேன்!!” என இப்போதே அவள் வருவதை மனதில் எண்ணி கனவுடன் வினய் கூற, 

அகிலாவிற்கு மகனை எண்ணி கண்ணீர் தான் வந்தது.

“உன்னோட இந்த காதலுக்காகவாச்சும் அந்த பொண்ணு சீக்கிரம் உன்கிட்ட வந்து சேரட்டும் வினய்!!! நல்லா இரு” என அவன் தலையில் கைவைத்து கண்ணீருடன் வாழ்த்தியவர், அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் உள்ளே சென்று விட, 

“என்ன மாம்!!?” என உள்ளே செல்லப் போன வினய்யை தடுத்து விட்ட கணேசன், 

“லீவ் ஹெர் அலோன் வினய்!! கொஞ்ச நேரத்துல அவளே சரி ஆய்டுவா!!” என்றார் மனைவி சென்ற திசையைப் பார்த்துக் கொண்டே,

“பட் டாட்!! அவங்க அழுதுட்டு போறாங்க” என வினய் அன்னையை எண்ணி வருந்த, 

“அவ மனசு ஒரு நிலையில இல்லை வினய்!! அதான் இந்தக் கண்ணீர்!! உன்னோட விருப்பத்தையும் ஏத்துக்க முடியாம, தன்னோட விருப்பத்தையும் உன்மேல திணிக்கவும் முடியாம தனக்குள்ளேயே ரொம்ப போராடிட்டு இருக்கா.. அது உள்ளேயே இருக்கதுக்கு அழுகையா வெளிய வரது எவளோவோ மேல் இல்லையா?? கொஞ்ச நேரம் அவளைத் தனியா விடு!! அப்பறம் நான் பார்த்துக்கிறேன்” என்றார் மனைவியின் மனதறிந்த அந்த மனிதர்.

“உங்க ரெண்டு பேரையும் ரொம்ப கஷ்டப்படுத்துறேனோ டாட்!??” என வினய் கவலையுடன் கேட்க, 

“பிடிக்காத வாழ்க்கையில உன்னை ஃபோர்ஸ் பண்ணி தள்ளி, காலம் பூராம் நீ கஷ்டப்படுறதை பார்த்து நாங்களும் வேதனைப் படுறதுக்கு.. உனக்குப் பிடிச்ச வாழ்க்கைக்காக இந்த கொஞ்ச காலம் மட்டும் சிந்துற கண்ணீர்கள் ரொம்பவே பரவாயில்லைல வினய்??” என சிரிப்புடன் கேட்ட கணேசன், 

“எல்லாத்தையும் நினைச்சு ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத வினய்!! நம்ம யாருக்கும் எந்த கெடுதலும் பண்ணினது இல்லை.. சோ நமக்கு நல்லதே நடக்கும்!! அதுவும் கூடிய சீக்கிரமே நடக்கும்.. சியர் அப் மை பாய்!!” என மகனின் தோளில் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தியவர், 

“உனக்கு எப்போ ஃப்ளைட்??” என விசாரிக்க, 

“டைம் இருக்கு டாட்!! இன்னும் ஒரு ஹாஃப் அன் ஹவர்ல கிளம்புனா சரியா இருக்கும்” என அவன் எழுந்து கொள்ள, 

“அப்போ ஓகே!! நீ கனவுல உன் லவ்வர் கூட பேசிட்டு இரு.. நான் போய் என் அகியை பார்க்குறேன்.. இல்லைனா அதுக்கும் சேர்த்து அழுதுட்டு இருப்பா அவ!!” என கணேசன் உள்ளே செல்லவும், 

தன் தாய் தந்தையரின் அன்பை, மென்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த வினய்க்கு, அவனும் வந்தனாவும் இவர்களைப் போல ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டும் எனும் ஆசை அளவுக்கதிகமாய் அந்த நிமிடம் தோன்றியது.

“சீக்கிரம் வந்துடு வதனா!! முடியலை டா!!” என தவிப்புடன் அவளிடம் கூறிக்கொண்டவன், 

“இன்னும் டூ மந்த்ஸ்!! அதுக்கப்பறம் நான் எதுக்கும் வெய்ட் பண்ண மாட்டேன்!! நேரா வந்து உன்னைத் தூக்கிட்டு வந்துடுவேன் டா” என கூறிக் கொண்டவன், அப்படி மட்டும் நடந்தால் நாட்டரசனின் முகம் எவ்வாறு போகும் என கற்பனையில் எண்ணி சத்தமாக சிரித்து விட்டான்.

இவனின் சிரிப்பு சப்தம் கேட்டு வெளியே வந்த அகிலாவிற்கும், கணேசனுக்கும் மகனின் இந்த சிரிப்பே அவர்களின் வலிகளுக்கு மருந்தாய் அமைய, 

“எப்போதும் இப்படியே சிரிச்சிட்டே இருக்கணும் இவன்” என கடவுளிடம் கோரிக்கை வைத்துவிட்டு ஆசையாய் அவனைப் பார்த்திருந்தனர்.

அதன் பின் கணேசனின் சமாதனாத்தில் அகிலாவும் ஓரளவு தெளிந்திருக்க, வினய்யும் வேலை சம்பந்தமாக பெங்களூர் செல்ல தயாராகி வந்தான்.

“ஓகே பாய் டாட்!! சீ யூ மாம்!!” என இருவரையும் கட்டிப்பிடித்து வினய் விடைபெற, 

“ஸ்டெல்லா வரலையாப்பா??” என்றார் கணேசன்.

“நோ டாட்!! அவ நேரா ஏர்போர்ட் வந்துடுவா!! நான் மட்டும் தான் போறேன்.. டிரைவர்க்கு கொஞ்சம் முடியலையாம்.. நாளைக்கு வந்தா ஸ்பேர் கீ கொடுத்து விடுங்க.. அவர் ஏர்போர்ட்ல இருந்து கார் எடுத்துட்டு வந்திடுவாரு” என்ற வினய், 

“ஓகே ரெண்டு பேரும் ஜாலியா இருங்க.. சீக்கிரமே நானும் வந்துடுவேன்.. எனக்காக வதனாவும் வந்துடுவா!! நாங்களும் அப்பறம் ஜாலியா இருப்போம்” என உற்சாகத்துடன் அவன் சொன்ன நேரம், வானத்து தேவர்கள் ‘ததாஸ்து’ என வாழ்த்த, விரைவிலேயே அவனின் கூற்று பலிக்கப்போவது தெரியாமல் புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பி விமான நிலையம் நோக்கி தன் மகிழுந்தை மகிழ்ச்சியான மனநிலையில் மெதுவாய் இயக்கினான்.

மகன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த இருவரும், “விரைவில் இவன் வாழ்க்கையில் ஒரு நல்லது நடக்கவேண்டும்” என வேண்டுதலுடன் உள்ளே தங்கள் வேலைகளைப் பார்க்கச் சென்றுவிட்டனர்.

****

“என்ன பேசுறீங்கன்னு தெரிஞ்சு தான் பேசுறீங்களா??” என இளவரசி கத்தாத குறையாக கேட்டுக் கொண்டிருக்க, 

இவரின் குரலில் பின்கட்டில் துவைத்துக் கொண்டிருந்த வந்தனா கூட உள்ளே வந்துவிட்டாள்.

அவளைக் கண்டதும் நாட்டரசன், “இங்க வா!!” என பல நாட்கள் கழித்து அவளிடம் பேச, 

அவளும் குழப்பத்துடன் உள்ளே வந்தாள்.

மிகுந்த யோசனையுடன் அமர்ந்திருந்த நாட்டரசன், மனைவி மற்றும் மகளின் முகத்தை ஆழ்ந்து பார்த்துவிட்டு, 

“அந்தப்பையனை வந்து வீட்டுல பேசச்சொல்லு” என எங்கோ பார்த்துக் கொண்டு சொல்ல, 

முதலில் அவர் கூற்றை நம்ப முடியாமல் அதிர்ச்சியில் கண்கள் விரிய அவரைப் பார்த்திருந்த வந்தனா, அதன் பின்பே தாயின் முகத்தைக் காண, அவரோ கணவரைத் தான் முறைத்திருந்தார்.

‘ஆக இதில் ஏதோ விஷயம் இருக்கிறது’ என யூகித்த வந்தனாவோ,

“என்கிட்ட அவங்க நம்பர் இல்லை” என மெதுவாய் சொல்லவும், 

விலுக்கென மகளைத் திரும்பி நம்பாமல் பார்த்த நாட்டரசன், 

“பொய் சொல்லாத!!” என கண்டிப்புடன் கேட்க, 

முன்பைப் போல் பயம் கொள்ளாமல், “இதுல பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை” என நிமிர்வாய் அவர் கண்களைப் பார்த்தே கூறியிருந்தாள் அவள்.

முதன்முதலாக அவரை பயமில்லாமல் எதிர்நோக்கும் வந்தனா அவருக்கு மட்டுமல்ல இளவரசிக்குமே புதிதாய்த் தெரிய, மகளைத் தான் ஆச்சரியமாக பார்த்திருந்தார்.

மகளின் தைரியம் நாட்டரசனுக்கு கோபத்தை லேசாய் தூண்டிவிட, 

“இத்தனை நாளும் என் முன்னாடி கூட வர பயப்படுற கழுதை!! இன்னைக்கு பாரு தைரியமா என்னையே எதுத்து பேசுது!! எல்லாம் அவன் கொடுக்குற தைரியம்” என திட்டிக் கொண்டவர், 

“ஏதோ பெத்த புள்ளையா போயிட்டியே போனா போகுதேன்னு அவனுக்கே கட்டிக் கொடுக்கலாம்ன்னு நினைச்சேன்.. ஆனா இப்போ அது சரிவராது போலயே!!” என தாடையைத் தடவி யோசித்தவர், 

“உனக்கு அவன் தான் வேணுமுன்னா அவனோட வேலையை விட்டுட்டு நம்ம வீட்டு வாசப்படியை மிதிச்சி பொண்ணு கேட்கச் சொல்லு!! என்னால இப்படியொரு கேவலமான தொழில் செய்யுறவனுக்கு எல்லாம் பொண்ணைக்கட்டித் தர முடியாது” என அவர் இளவரசியிடம் சற்று முன்பு கூறியதை மகளிடம் கூற, 

எங்கிருந்து தான் வந்தனாவிற்கு அவ்வளவு தைரியம் வந்ததோ என அனைவரும் வியக்கும் வகையில், இத்தனை நாளுக்கும் சேர்த்து வைத்து ஆடித் தீர்த்திருந்தாள்.

தந்தையின் இந்த கேவலமான நிபந்தனையை எண்ணி கொதித்துப்போன வந்தனா, 

“உங்க புத்தியை விட, அவங்க பண்ற வேலை கேவலமானது இல்லை” என யாருமே எதிர்பாராத வகையில் அவள் கோபத்துடன் நாட்டரசனுக்கு திருப்பிக் கொடுத்திருக்க, 

நாட்டரசன் அதிர்ச்சியில் எழுந்தே நின்று விட்டார்.

இளவரசிக்கும் அதிர்ச்சி தான் என்றாலும், மகளின் இந்த புது அவதாரத்தை ரசித்தே பார்த்திருந்தார்.

“என்ன சொன்ன??? என்ன சொன்ன நீ?? என் புத்தி கேவலமானதா???” என அவர் அடிப்பது போல் முன்னே செல்ல, 

வந்தனாவின் நிலையில் சிறிதும் மாற்றமில்லை.

அடிப்பியா?? அடித்துக்கொள் என்பதைப் போல் கைகளைக் கட்டிக்கொண்டு அவள் பார்த்திருக்க, மகளின் இந்த நிமிர்வை புதிதாய் பார்த்திருந்தார் நாட்டரசன்.

“இத்தனை நாளும் என் முகத்தைப் பார்க்கிறதுக்கு கூட அப்படி பயப்படுவ.. இன்னைக்கு என்னையே எதிர்த்து பேசுறன்னா எல்லாம் அவன் கொடுக்குற தைரியம் தான?? அவன் கீ கொடுக்கக் கொடுக்க நீ இங்க ஆடுற.. போனா போகுதே!! பெத்த கடமைக்கு உனக்கு பிடிச்சவனோடயே கழுதையை கல்யாணம் பண்ணி வச்சுடலாம்னு நினைச்சேன்.. ஆனா அது தப்புன்னு இப்போ புரியுது!! இனி நீ எவ்வளவு கெஞ்சுனாலும் சரி, அழுது பொரண்டா கூட உனக்கு அவனோட கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்.. நான் பார்த்த மாப்பிள்ளையோட தான் உனக்குக் கல்யாணம் நடக்கும்.. நடக்கணும்”என இத்தனை நாளும் தன் கைக்குள் அடங்கி இருந்த மகள், இன்று தன்னையே எதிர்த்து நிற்பது அவரின் அகங்காரத்திற்கு பலத்த அடியாக அமைய, அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் கோபத்தில் கொந்தளித்தார்.

அவரின் கோபத்தை அமைதியுடன் அவள் பார்த்திருக்க, 

இளவரசிக்கு மட்டும் புயலுக்கு முன் வரும் அமைதியாகவே அது தோன்றியது.

“இவ்வளவு பேசுறேன் எப்படி நிக்குறா பாரு!!!” என ஆத்திரத்தில் அவர் மீண்டும் கத்த, 

“வேற என்ன பண்ணனும்னு எதிர்பார்க்குறீங்க?? இத்தனை வருஷமும் உங்களுக்கு பயந்திட்டு அடிமை மாதிரி வாழ்ந்துட்டு இருந்தேனே?? அப்படியே இருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களா??” என அவள் அழுத்தமாய் அவரைப் பார்த்தபடி கேட்டிருக்க, 

இது அவருக்கு அடுத்த அதிர்ச்சி!!!

அடிமையாமே??? என யோசித்தவருக்கு, உண்மையில் அவர் இத்தனை காலமும் அவளை அப்படித்தான் வைத்திருந்தார் என புரியவே இல்லை.

புள்ளையை கட்டுப்பாடா வளர்த்து நம்ம கைக்குள்ள வச்சிருந்தா இவ எப்படி பேசுறா என எண்ணி வெகுண்டவர், 

“வாய் ரொம்ப நீளுது!! பார்த்து பேசணும்!! அப்பறம் புள்ளைன்னு பார்க்க மாட்டேன்” என அவர் அடிப்பதைப் போல் வரவும், எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை அவரின் மகள்.

பின்னே அவரின் ரத்தமும் அவளுள் கலந்திருக்கிறதல்லவா?? அவரின் வீம்பும் பிடிவாதமும் அவளிடமும் இருக்கும் தானே?? 

“என்ன பண்ணுவீங்க?? அடிப்பீங்களா?? அடிங்க!!! அது மட்டும் தான உங்களால முடியும்” என அவள் வெறுப்புடன் கூற, 

‘என்ன இப்படி பேசுகிறாள்??’ என்பதைப் போல் அவர் பார்த்திருக்க, 

இளவரசிக்கு அவளின் தைரியம் மகிழ்ச்சி அளித்தாலும், இந்த நேரத்தில் இப்படி பேசி அவரின் கோபத்தை இன்னும் தூண்டி விட வேண்டாம் என நினைத்தவர், 

“தனு!! பேசாம இரு!!” என மகளை அடக்கப் பார்க்க, பதிலுக்கு அவள் திரும்பி இளவரசியை பார்த்தாலே ஒரு பார்வை!!! 

யப்பா!! வாழ்நாள் மொத்தமும் அவரால் அந்தப் பார்வையை மறக்கவே முடியாது. அப்படி ஒரு வலியும், அடக்கி வைக்கப்பட்ட கோபமும் கலந்திருந்தது அவளின் பார்வையில்.

“நான் பேச வந்தப்போ நீங்க கேட்கக் கூடத் தயாரா இல்லை தானே?? பேசப் பிடிக்காம திருப்பிட்டு போனீங்க தான?? அப்படியே இருங்க இன்னும் கொஞ்ச நேரம்” என இளவரசிக்கு திருப்பிக் கொடுத்தவள், 

மீண்டும் நாட்டரசனிடம் திரும்பி,

“உண்மையை சொன்னா கோபம் வருதா உங்களுக்கு??? தெரியாமத்தான் கேக்குறேன் நான் உங்க புள்ளைன்னு இதுக்கு முன்னாடி மட்டும் உங்களுக்கு நினைப்பு இருந்ததா?? இத்தனை வருஷமும் அதைப் பண்ணாத!! இதைப் பண்ணாத!! அவங்ககிட்ட பேசாத!! அப்படி பார்க்காத!! சத்தமா சிரிக்காத!! இப்படி நடக்காதன்னு எவ்ளோ அடக்கி வச்சுருந்தீங்க என்னை!!! ஒரு அப்பா மாதிரி ஒரு நாள்!! ஒரே ஒரு நாள் நடந்துருப்பீங்களா என்கிட்ட??? பாசமா.. இல்லை பாசமாக்கூட வேண்டாம் இந்த 21 வருஷத்துல ஒரு நாளாச்சும் என்கிட்ட சும்மா இயல்பா நீங்க ஒரு வார்த்தை பேசியிருக்கீங்களா???” என அவள் இத்தனை வருடமும் மனதில் அழுத்திக் கொண்டிருந்த விஷயங்கள் யாவும் வெடித்துச் சிதற, நாட்டரசன் அவளின் கேள்விகளில் ஆடித்தான் போனார்.

“என் கூட படிக்கிற பிள்ளைங்க, பக்கத்து வீட்டு பிள்ளைங்க ஏன் நம்ம சங்கீ எல்லாரையும் பார்க்குறப்போ எனக்கு எவ்ளோ ஏக்கமா இருக்கும் தெரியுமா??? எல்லாரும் அவங்க அப்பா கூட ஏதோ ஃப்ரெண்ட் மாதிரி அவ்ளோ ஜாலியா பேசிட்டு சந்தோஷமா இருக்கப்போ, நம்ம அப்பா மட்டும் ஏன் இப்படியில்லைன்னு எத்தனை நாள் அழுதுருப்பேன்னு உங்களுக்குத் தெரியுமா??? நம்ம அப்பா நம்மளை ஸ்கூல்க்கு பைக்ல கூட்டிட்டு போக மாட்டாரா?? தினமும் நைட்டு நம்ம கூட உட்கார்ந்து அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு விசாரிக்க மாட்டாரா?? சாப்பிடுறப்போ ஒரு வாய் நமக்கு ஊட்டி விட மாட்டாரா?? இவளோ ஏன் நம்ம அப்பா நம்மளைப் பார்த்து சிரிக்க மாட்டரான்னு என்னை எவ்ளோ ஏங்க வச்சிருக்கீங்க தெரியுமா நீங்க??? ” என இத்தனை ஏக்கங்களை மனதில் புதைத்து வைத்து, அதில் ஒன்று கூட நிறைவேறவில்லையே என வலியுடன் அவள் கேட்க, 

மனிதருக்கு பேச்சே வரவில்லை.

“நான் சொல்லுற எல்லா விஷயமும் மத்தவங்களுக்கு சில்லியா இருக்கலாம்.. இதெல்லாம் ஒரு விஷயமான்னு.. ஆனா அனுபவிச்ச எனக்குத்தான் ஏமாற்றத்தோட வலி தெரியும்.. பிள்ளைங்க பெத்தவங்களை பார்த்து பயந்தா தான் அவங்க ஒழுக்கமா இருப்பாங்கன்னு நீங்களா தப்பா நினைச்சிட்டு உங்களோட அடக்குமுறையை வீட்டுல காட்டிட்டு இருக்கீங்க.. பட் உண்மை அது இல்லை.. பெத்தவங்க மேல பிள்ளைகளுக்கு மரியாதை தான் இருக்கணும்.. பயம் இல்லை.. பெத்தவங்ககிட்ட எந்த ஒரு பிள்ளைக்கு தைரியமா மனசுவிட்டு எல்லாமே பேச சுதந்திரம் கிடைக்குதோ, நிச்சயம் சொல்றேன் அந்தக் குழந்தை தப்பான வழிக்கு போகவே போகாது. ஆனா உங்களை மாதிரி ஒரு அப்பா இருந்தாங்கனா நிச்சயம் அப்பாக்கு தெரிஞ்சா திட்டுவாரு, அடிப்பாருன்னு வெளியில நடக்குற எதையும் வீட்டுல சொல்ல பயந்துட்டு, அந்தக்குழந்தை ஒரு நாள் தப்பான பாதையை தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் ரொம்பவே அதிகம்” என அவரின் தவறை அவள் சுட்டிக்காட்ட, அதை எதிர்த்து வாதிட வேண்டும் என்று கூட அவருக்கு அந்த நொடி தோன்றவில்லை.

“அப்பாவோட அன்புக்கும் அரவணைப்புக்கும் நான் இவ்வளவு ஏங்கிப் போய் இருந்தேன்னு, சத்தியமா வினய் என் வாழ்க்கையில வர வரைக்கும் நான் உணரவே இல்லை. அவர் என் வாழ்க்கையில வந்த வரம் ப்பா!!! உங்களுக்கு அது புரியாது.. மிஞ்சிப் போனா அவரை ஒரு நாலு தடவை பார்த்திருப்பேன்.. பார்த்த அந்த கொஞ்ச நேரத்துல ஒருத்தரால இவ்வளவு காதலை காமிக்க முடியுமான்னு எனக்கு இன்னுமே பிரம்மிப்பா இருக்கு.. அவர் இவ்வளவு உருகுற அளவுக்கு நான் என்ன பண்ணிட்டேன்னு எனக்குப் புரியலை… நான் இத்தனை வருசமா ஏங்கிட்டு இருந்த அன்பை அவரோட பார்வையில நான் உணர்ந்தேன் ப்பா!!! வினய் இடத்தில யாரு இருந்தாலும், நீங்க பண்ணி வச்ச காரியத்துக்கு, நீங்களும் வேண்டாம் உங்க பொண்ணும் வேண்டாம்னு என்னை எப்போவோ தூக்கி போட்டுட்டு போய்ருப்பாங்க.. ஆனா வினய்!!! அவர் நான் பார்த்த ஆண்கள்லயே ரொம்பவே வித்தியாசமானவர்!!! உண்மையை சொல்லனும்னா அவர் ஒரு ஆண் தேவதை!!!!” என அவனை எண்ணுகையில் வந்தனாவின் அகமும், முகமும் தன்னாலே மென்மையாக மாறியது.

“இந்த சுயநலமான உலகத்துல எதிர்ப்பார்ப்பில்லாத அன்பு கிடைக்குறதெல்லாம் ரொம்பவே ரேர்!!! எனக்கு அந்த வரம் கிடச்சும்.. உங்க ரெண்டு பேரையும் மனசுல வச்சு.. உங்க நம்பிக்கையை கெடுத்துற கூடாதுன்னு ஒரே காரணத்துக்காக என் மனசை இரும்பாக்கிட்டு அப்படிப்பட்டவரையே வேண்டாம்னு சொல்லிட்டு வந்தேன் நான்.. ஆனா அது ரொம்பவே தப்பான முடிவுன்னு எனக்கு நீங்க ரெண்டு பேரும் நல்லாவே புரிய வச்சுட்டீங்க.. அதுவும் ம்மா!! அவர் கூட பரவாயில்லை.. நான் பிறந்ததுல இருந்து இப்போ வரைக்கும் என்கிட்ட இருந்து தள்ளி தான் இருந்தாரு.. ஆனா நீங்க!!! நீங்க என்னைப் புரிஞ்சிப்பீங்கன்னு ரொம்பவே நம்பிட்டேன் ம்மா.. ஆனா நீங்களும் இவர் மாதிரி தான்னு என்னை ஒதுக்கி வச்சு அன்னைக்கு எனக்கு புரிய வச்சுட்டீங்க.. அதுக்கு உங்க ரெண்டு பேருக்கும் ரொம்பவே தேங்க்ஸ்” என இருவரையும் தீர்க்கமாக பார்த்துக் கொண்டே அவள் கூறவும், 

இளவரசிக்கு தன்னுடைய ஒதுக்கம் அவள் மனதில் ஆழமான காயத்தை உண்டுபண்ணியிருக்கிறது என இப்போது நன்றாகவே உணர,

“தனு!!!” என தழுதழுப்புடன் அவர் அழைப்பதைக் கூட உணர்வுகளின் பிடியில் முழுதாய் மூழ்கியிருந்த வந்தனாவால் அப்போது உணரமுடியவில்லை.

மீண்டும் அவள் நாட்டரசனிடம் திரும்பி, “வினய் மாதிரி ஒரு மனுஷனை புரிஞ்சுக்க கூடிய மனப்பான்மை சுத்தமா உங்ககிட்ட இல்லை ப்பா!!! நான் இத்தனை நாளும் பொறுமையா இருந்தது, உங்களோட சம்மதத்துக்காக நிச்சயம் இல்லை!!! இவ்வளவு நல்லவரான வினய்க்கு நான் பொருத்தமானவளான்னு எனக்கே ஒரு சந்தேகம்.. ஏன்னா உங்க இரத்தம் தான என் உடம்புலயும் ஓடுது.. நாளைப்பின்ன எப்பவாச்சும் உங்க புத்தி எனக்கும் வந்து அவரை கஷ்டப்படுத்திருவனோன்னு எனக்குள்ளேயே ஒரு போராட்டம்.. ஆனா இப்போ நான் தெளிவா இருக்கேன்!! உங்களோட புத்தி எனக்குள்ள வந்தாலுமே, எங்க காதல் அதையெல்லாம் தாண்டி ஜெய்ச்சு வந்துரும்னு எனக்கு நம்பிக்கை வந்திருச்சு ப்பா!!” என அவரை நேருக்கு நேர் பார்த்து நிமிர்வாக பேசிய வந்தனா அனைவருக்குமே புதிது.

காதலும் காயமும் ஒரு மனிதனின் சுயத்தையே அடியோடு மாற்றிவிடும் என்பதற்கு சான்றாய் உருமாறினாள் வந்தனா.

“நீங்க ரொம்பவே தப்பு பண்ணிட்டீங்க ப்பா!! உங்க பொண்ணா இதை சொல்றது எனக்கு கஷ்டமா தான் இருக்கு.. ஆனா உண்மையை சொல்லி தானே ஆகணும்.. நிச்சயம் ஒருநாள் உங்க தப்பு எல்லாத்தையும் நீங்க உணருவீங்க.. ஆனா அப்போ உங்களைச் சுற்றி யாருமே இருக்க மாட்டாங்க.. நாம கலங்கி தடுமாறுறப்போ, ஒன்னும் இல்லைன்னு சொல்லி ஆறுதலுக்காக தோள் கொடுக்க, உண்மையா ஒருத்தரையாச்சும் சம்பாருச்சு வச்சிருக்கணும் வாழ்க்கையில.. அது தானே ப்பா வாழ்க்கை??? நீங்க நிஜம்ன்னு நம்பிட்டு இருக்க மரியாதை, கௌரவம், அகங்காரம் எல்லாமே வெறும் மாயை தான் ப்பா.. நிஜம் இல்லை.. அதை இப்போவாச்சும் தயவு செஞ்சு உணருங்க” என இறுதியாய் அவள் அனைத்து பாரங்களையும் இறக்கி வைத்துவிட்ட நிம்மதியில் கலங்கிப் போய் அங்கேயே அமர்ந்து விட, 

புயலடித்து ஓய்ந்ததைப் போல் அப்படி ஒரு அசாத்திய அமைதி அங்கே!!! 

‘சிறுபெண் என நினைத்திருந்தவள் என்னவெல்லாம் பேசிவிட்டாள்??’ என இருவரும் தங்களின் மகளையே கண்ணெடுக்காமல் பார்த்திருக்க, 

நாட்டரசனின் மனமோ, ‘இவள் தன்னிடம் பாசத்தை எதிர்பார்த்தாளா?? இத்தனை ஏக்கங்களை உள்ளுக்குள் போட்டு புதைத்துக் கொண்டு இத்தனை ஆண்டுகளாய் நடமாடிக் கொண்டிருக்கிறாளே!! பெற்ற மகளிடம் கூட நெருங்கிப் பழகாமல் எது தன்னை தள்ளி நிறுத்தியது???’ என சுயஅலசலில் ஈடுபட்டவருக்கு, 

அந்த நொடி அவள் வினய்யுடன் இணைய இவரின் சம்மதத்தை அவள் எதிர்பார்க்கவில்லை என்று கூறியது எல்லாம் கருத்தில் பதியவே இல்லை.

‘ஒரு தந்தையாய் வாழ்க்கையில் தோற்றுவிட்டேன்!!!’ என்பது வந்தனாவின் பேச்சில் அவருக்கு நன்றாக உரைக்க, முதன்முறையாக அவருக்கு அது வலித்தது.

அவருக்கும் உள்ளே இதயம் தான் இருக்கிறது என அவரே உணர்ந்த தருணமது.

இளவரசி பேசாத போது கவலை இருந்தது தான், நிச்சயம் அது அவரை பாதித்தது தான்.. உடன் பிறந்த அண்ணனின் உறவை தூக்கி எறிந்த போது கோபத்தை மீறிய வேதனை சற்று இருந்தது தான்.. ஆனால் இன்று!!! மகளதிகாரம் என்று வருகையில், மகளின் ஒவ்வொரு வார்த்தைகளும் அந்த மனிதருள் மிகப்பெரும் வலி ஒன்றை ஊடுருவச் செய்தது. 

“அப்பாக்கு உன்மேல பாசம் எல்லாம் இருக்கு மா!! ஆனா அதை வெளிக்காட்டத் தான் இந்த பாழாப்போன மனசுக்குத் தெரியலையே!!” என இப்போதும் அவருக்குள்ளே தான் இவ்வாறு கதறிக் கொண்டிருக்க, வெளிப்படையாய் கோபத்தைக் காட்டத் தெரிந்த மனிதருக்கு, இன்று பாசத்தை வெளிக்காட்ட வார்த்தைகளும் வரவில்லை, அவரின் இயல்பும் அதற்கு அனுமதிக்கவில்லை.

இருந்தும் கங்கிவிட்ட கண்களுடன், மகளைத் தான் பார்வையால் தழுவிக் கொண்டிருந்தார்.

இருபத்தி ஒரு வருடங்களுக்கு முன், பஞ்சுப்பொதியாய் பூந்துவாலைக்குள் சுற்றி கொடுக்கப்பட்ட மகளை, வாங்க பயந்து நடுங்கிய கரங்கள், இன்று ஒரே ஒரு முறை அவளைத் தொட்டுப் பார்க்க ஏங்கியது. 

இத்தனை வருடங்களில் என்றாவது ஒரு நாள், மகளின் ஸ்பரிசத்தை உணர்ந்திருக்கிறோமா?? என்று யோசித்துப் பார்த்தவருக்கு, அந்த நொடி என்ன வாழ்க்கை வாழ்ந்தோம்?? என தன்னைக்குறித்தே அவமானமாக இருந்தது.

இளவரசிக்கு மகளின் கோபம் வருத்தமளித்தாலும், எப்படியோ மனதில் போட்டு அடைத்து வைக்காமல் அனைத்தையும் கொட்டி விட்டாளே!! இனியாவது நிம்மதியாக இருக்கட்டும் என அவளை ஆதுரமாக பார்த்திருக்க, 

இப்படியே அவள் ஒதுங்கிப் போனாலும், நாம் தான் இறுக்கிப் பிடிக்க வேண்டும். தப்பு செய்தாயிற்று!! அதையே நினைத்து கலங்கினால் அனைத்தும் சரியாகிவிடுமா?? என பழைய இளவரசியாக மாறி, அவர் வந்தனாவை நெருங்கி தன் வயிற்றோடு அணைத்துக் கொள்ள, 

முதலில் அவரின் பிடியில் இருந்து விலக அவள் போராட, இளவரசி அதை இலகுவாக தடுத்துவிட்டு அவளைத் தன்னுள் இன்னும் நன்றாய் புதைத்துக் கொண்டார்.

“அம்மாவை மன்னிச்சிடு தனு!!!” என மந்திரம் போல் இளவரசி அதையே கூறிக் கொண்டிருக்க, 

ஒருகட்டத்தில் மொத்தமாய் உடைந்து, இளவரசியை கட்டிக்கொண்டு, இத்தனை நாள் கொண்ட வலிகளும் வேதனைகளும் கண்ணீரிலே கரைப்பதைப் போல், அழுது தீர்த்துவிட்டாள் பெண்ணவள்!!

அவளின் முதுகை ஆதரவாக தடவிக் கொடுத்த இளவரசியின் கண்களிலும் கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருக்க, 

அதிசயித்திலும் அதிசயமாக, அவர்களைக் கண்ட நாட்டரசனின் கண்களிலும் இரண்டு சொட்டு நீர் உருண்டு வந்து அவர் கைகளில் பட்டுத் தெறித்தது.

எத்தனை கோபம் வந்தாலும், இந்தப் பெண்கள் மட்டும் அனைத்தையும் எளிதில் மறந்து, இவ்வளவு விரைவில் இயல்பாகிப் போய் விடும் வித்தையை எங்கு பயின்றார்கள் என இருவரையும் எண்ணி ஆச்சரியப் பட்ட மனிதருக்கு, தன்னால் இப்படி இவர்களைப் போல் இயல்பாக மாறவும் முடியவில்லை, அவர்களுடன் ஒன்றவும் முடியவில்லையே என எண்ணி அவர் பெருமூச்சு விட்டார்.

அந்த சூழ்நிலையே மிகவும் கனமாக இருக்க, அதை மேலும் கனமாக்குவதைப் போல் ஒரு செய்தியை மலர் கொண்டு வர, 

அதைக்கேட்ட வந்தனா மூச்சு விடவும் மறந்து அதிர்ச்சியில் சிலையாய் சமைந்தாள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!