Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதல் ரட்சகா

காதல் ரட்சகா 2

மாயாவின் வார்த்தையில் இருந்த கோபத்தை பார்க்கும்போது அடுத்த பொங்கல் உங்களுக்குதான் என்பது போலவே இருந்தது.

“எங்க ஃபேமிலி உங்களை எதிரியா நினைக்கல..” என்றான்.



Advertisement

மாயா சிரித்தாள். கலகலப்பான சிரிப்பு. இவனுக்கு அவளின் சிரிப்பும் பிடித்திருந்தது.

ரதிக்கு நேர் மாறாக இருந்தாள்.

Advertisement

Advertisement

ரதியை தாய்க்கு நிகராகவும் தேவதைக்கு நிகராகவும் ரசித்தவனுக்கு இவளை ரசிக்கும் போது இதயத்தில் புல்லரித்தது.

“உங்க ஃபேமிலி எங்களை எதிரியாவே நினைச்சி இருக்கலாம். ஒரு எதிரி கூட நாம நல்லா இருக்கும் போதுதான் கஷ்டப்படுத்துவான். ஆனா உங்க ஃபேமிலி எங்க கஷ்ட காலத்துல வந்து கத்தியை இறக்குறாங்க. இது எவ்வளவு கேவலம் தெரியுமா?”

Advertisement

அவளது வெறுப்பு இவனுக்கும் சிறு சோகத்தை தந்தது.

“எங்கப்பா அவ்வளவு வரதட்சணை தந்தாரே! எங்க அக்காவை உங்க வீட்டுக்கு மருமகளா நீங்க கூட்டி போன பிறகு உங்க நிறுவனத்துக்கு எங்களால் எத்தனை மடங்கு லாபம் கிடைச்சது? ஆனா அத்தனையும் மறந்துட்டு இப்ப கடனை திரும்ப கேட்கிறிங்க..” என்றாள்.

அவளின் விழிகளை பார்த்து தன்னை மறந்து விட்டிருந்தான் இவன்‌.

அவன் பதில் சொல்லாமல் போகவும் நிமிர்ந்து பார்த்தவள் தன் விரலை சொடுக்கிட்டாள்.

அவன் விழிகளை சிமிட்டினான்.

“எதுக்கு என் மூஞ்சை இப்படி பார்க்கிறிங்க?” எனக் கேட்டாள்.

“ஐயோ இல்ல. அங்கே பின்னாடி..” என்று கை காட்டினான்.

திரும்பி பார்த்தாள். வெளியே சாலைக்கு அந்த புறம் குழந்தை ஒன்று பலூனோடு விளையாடிக் கொண்டிருந்தது.

அதைதான் இவன் பார்த்திருக்கிறான் என்று தவறாக புரிந்துக் கொண்டாள்.

“கடனை எங்கம்மா மட்டும்தான் திருப்பிக் கேட்கிறாங்க..” என்று அவன் சொல்ல, சட்டென அவன் முகம் பார்த்து முறைத்தாள்.

கண்கள் இரண்டும் குத்தீட்டி போல இவனின் நெஞ்சை குத்தியது.

“நிஜமா அவங்க மட்டும்தான் நாங்க யாரும் கேட்கல..”

“இப்ப என்ன சொல்ல வரிங்க நீங்க?” அவள் குரல் சட்டென உயர்ந்தது போலிருந்தது.

“கோபப்படாதிங்க ப்ளீஸ்..” அவசரமாக சொன்னான்.

“எதுக்கு என்னை தேடி வந்திங்க?” இவள் முறைப்பாக கேட்டாள்.

“நீங்க இங்கே வேலை பார்க்க வேணாம்ன்னுதான் சொல்ல வந்தேன். அம்மா அண்ணியை பிரஷர் பண்றாங்க. அண்ணியை பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..”

மாயா கொஞ்சம் கூட இறங்கி வரவில்லை. “உங்க வீட்டு பிரச்சனை எனக்கு எதுக்கு சார்?” எனக் கேட்டாள்.

“அண்ணி சூஸைட் பண்ற முடிவுக்கு போயிட்டாங்க. விஷத்தை கையில் எடுத்துட்டாங்க..” தன் பாக்கெட்டில் இருந்த விஷ பாட்டிலை காட்டினான்.

அதை பிடுங்கி நுகர்ந்தாள். விஷம்தான். சந்தேகம் இல்லை.

கசந்த சிரிப்பு இதழோரம் வழிய விஷத்தை அவனிடமே திருப்பி தந்தாள்.

“நல்லவேளையா நான் பார்த்துட்டேன். இல்லன்னா அண்ணி இறந்திருப்பாங்க..” என்றான்.

“இதை அவகிட்ட கொண்டு போய் கொடுத்துடுங்க. அவ சாகட்டும். ரொம்ப நல்லது..” என்றாள்.

விக்னேஷ் அதிர்ச்சியாக பார்த்தான்.

“அவளால் ஒரு பிரயோஜன ஹேரும் இல்ல. அவளை உங்க பேமிலிக்கு கட்டி வைக்கலன்னா நாங்க இன்னைக்கு நடுத்தெருவுக்கு வந்திருக்க மாட்டோம். நியாயமா அவ இந்த பிரச்சனையை புரிஞ்சிக்கிட்டு எங்களுக்காக உங்க வீட்டுல சண்டை போட்டிருக்கணும். எங்கப்பா கடனை திருப்பி தர மாட்டாரு, மீறி நீங்க தொல்லை பண்ணா நீங்க வரதட்சணை வாங்கியதை பத்தி நான் போலிஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுவேன்னு சொல்லி இருக்கணும். அதை விட்டுட்டு எங்கப்பாவுக்கு போன் பண்ணி அப்பா அப்பான்னு ஒப்பாரி வைக்கிறா..” என்று எரிச்சலாக சொன்னாள்.

மாயாவின் கோபம் புரிந்தது. ஆனால் அதே சமயம் இவள் ரதியை இன்னும் கொஞ்சம் புரிந்துக் கொள்ள முயற்சிக்கலாமோ என்றும் தோன்றியது.

“அவளுக்கு சாகணும்ன்னா சாகட்டும். அது வாழ்வது தண்டம்தான்..” என்றவள் கதவை திறந்தாள்.

“இதைதான் நீங்க சொல்ல வந்திங்கன்னா நான் இப்ப கிளம்பலாமா?” எனக் கேட்டாள்.

இவன் பதறினான். “ஐயோ போகாதிங்க. இன்னும் பேசி முடிக்கல நான்..”

கதவை சாத்தியவள் “இன்னும் என்ன சொல்லணும்? அக்கா பாவம்ன்னு என் மனசை மாத்த போறிங்களா? எனக்கும் கஷ்டமாதான் இருக்கு. இரண்டு தெரு தள்ளி போனா என் பிரெண்ட்டோ மெடிக்கல் ஷாப் இருக்கு. இருபது தூக்க மாத்திரை வாங்கிக் கொண்டு போய் கொடுங்க. கசக்காது. நெஞ்சு எரியாது. நிம்மதியா வலிக்காம சாகட்டும். நம்மால் இவ்வளவுதான் உதவி பண்ண முடியும்..” என்றாள்.

அவளிடம் கோபம் இல்லை. எந்த சோகமும் இல்லை. கிண்டல் கூட இல்லை. வெறுத்து போன வாழ்க்கையில் உணர்வுகளை கூட அடித்து விரட்டி விட்டு பேசிக் கொண்டிருந்தாள்.

 “ஏங்க இப்படி இருக்கிங்க? டிப்ரஷன் டேப்லெட் வேணுமா?” எனக் கேட்டு காருக்குள் தேடினான்.

“ஹஹஹா..” என சிரித்தவள் “எனக்கு பாவம் பாருங்கன்னு நான் சொல்லல. சட்டுன்னு நீங்க பேச வந்ததை பேசி முடிங்க..” என்றாள்.

ஐயோ இதை மறந்து விட்டோமே என நினைத்தவன் “இன்னும் ஒன்னு இரண்டு நாள்ல அண்ணியை எங்கம்மா வீட்டை விட்டு துரத்த போவதா சொல்லி இருக்காங்க..” என்றான்.

இவள் நெற்றியை தேய்த்தாள். விசயத்தின் தீவிரம் இப்போதாவது இவளுக்கு புரிந்திருக்கும் என்று நினைத்தான்.

“துரத்தட்டுமே! நாங்க கடனை திருப்பி தர வேணாம். எதிர் காலத்துல அவளுக்கு எவ்வளவு சீர் செய்யணுமோன்னு கவலைப்பட வேணாம். பணத்துக்காகவோ இல்லன்னா உங்க பாஷையில்.. அவளோட தங்கச்சி நான் வேலை பார்க்கும் இடம் உங்க ஈகோவை காயப்படுத்தியதால அவளுக்கு தண்டனை தந்து அனுப்பி வைக்கிறிங்கன்னு வைங்க. இதை பத்தி இனி நாங்க கவலைப்பட வேணாம். இப்படியொரு கேவலமான புகுந்த வீட்டாரை பத்தி அவ இனியாவது புரிஞ்சிக்கட்டும். துணைக்கு நிற்காத புருசனை விட பிறந்த வீட்டுல வாழாவெட்டியாவோ இல்லன்னா மறுமணம் செஞ்சிப்பதோ நல்லதுன்னு அவளுக்கு புரியட்டும்..” என்றாள்.

இவள் பேசும் அனைத்தும் சரியே. ஆனால் இவனால் தன் அண்ணியை சொர்க்கலோகம் அனுப்ப முடியாதே!

“ப்ளீஸ்ங்க. ஒரு கொஞ்ச மாசம்.. அந்த கைலாஷ் எங்களுக்கும்தான் எதிரி. நான் அவனை பார்த்துக்கிறேன். என்னை நம்புங்க. இப்போதைக்கு இந்த வேலையை விட்டு வந்துடுங்க. அவனுக்கு நாங்க எதிரி, அவனை பழி வாங்கதான் நீங்க அவன் ஆபிஸ்குள்ளேயே நுழைஞ்சிருக்கிங்கன்னு தெரிஞ்சா அவன் உங்களை சும்மா விடுவானா? அண்ணிக்காக வேணாம். உங்களுக்காக யோசிங்களேன்..”

“அந்த கைலாஷ் அவ்வளவு பெரிய வீரனா இருந்திருந்தா உங்களை பழி வாங்கி இருக்கணும். நடுவுல இருக்கும் எங்களை பழி வாங்கிட்டான். அவன் என்னை பொறுத்தவரை கேடு கெட்ட பிறவி. அவன் என்னை என்ன பண்ணிடுவான்னு நான் பார்த்துக்கிறேன். நீங்க கிளம்புங்க. என் அக்கா இறந்துட்டா மறக்காம ஒரு போன் பண்ணி சொல்லுங்க..” என்று சொல்லிவிட்டு காரிலிருந்து இறங்கி போனாள்.

இவனால் அவளை தடுக்க முடியவில்லை.

அண்ணிக்கு மிகவும் பிடித்த ரசகுல்லாவை வாங்கிக் கொண்டு வீடு வந்தான். அண்ணியின் மனதை மாற்ற அவன் தரும் லஞ்சம்தான் இந்த ரசகுல்லாதான்.

அவன் வீட்டுக்குள் வந்தபோது “இந்த சனியன் வீட்டை அழிக்கிறது போதாதுன்னு இவ தங்கச்சி கூட சுத்திட்டு இருக்கியா நீ?” என்று கேட்டாள் அம்மா.

இவன் உறைந்து நின்று விட்டான். அம்மா இருக்கும் திசை பார்த்தான். வீட்டில் நடு நாயகமாக அமர்ந்திருந்தாள். கால் மீது கால் போட்டிருந்தாள்.

“பார்க்க வில்லி மாதிரி இருக்கிங்க..” என்றபடி அம்மாவிடம் வந்தான்.

“ரசகுல்லா சாப்பிடுங்க..” என்று நீட்டினான்.

அது தனக்கானது இல்லை என அவளுக்கு தெரியும்.

“நான் ஒன்னும் சப்ஸ்டியூட் கிடையாது. எதுக்கு உனக்கு அந்த மாயாவோடு பேச்சு?” எனக் கேட்டாள் கனகவதி.

ரதியை அங்கே காணவில்லை. அம்மா மட்டும் ஹாலில் தனியாக அமர்ந்திருந்தாள். டிவியில் அம்மாவை போல ஒரு வில்லி நடித்துக் கொண்டிருந்த ஒரு சீரியல் ஓடிக் கொண்டிருந்தது.

“ஒரு பிரெண்டா பேச போனேன்..” என்றான்.

“இதெல்லாம் இனி இருக்க கூடாது..” என்றாள் கனகவதி.

இவன் அந்த பக்கமாக சென்ற சர்வன்டிடம் “இதுல ரசகுல்லா இருக்கு. அண்ணிக்கு கொண்டு போய் கொடுங்க..” என்றான்.

அந்த மனிதரும் அதை வாங்கிக் கொண்டு கிச்சனுக்கு சென்றார்.

அம்மாவிடம் திரும்பிய விக்னேஷ் “என்னை கன்ட்ரோல் பண்ண உங்களால் முடியாது. இது என் லைப். நான் குழந்தையும் கிடையாது..” என்றான்.

அம்மா எழுந்து இவன் பக்கத்தில் வந்தாள். “உனக்கு என் கோபத்தை பத்தி தெரியாது. ஏற்கனவே உன் அண்ணியோட குடும்பமும் உன் அண்ணியும் என்கிட்ட வெறுப்பை சம்பாதிச்சிட்டாங்க. நீயும் அதை செய்யாத..” என்றாள்.

“இதுல வெறுக்க என்னம்மா இருக்கு? நீங்க செய்வது ரொம்ப ஓவரா இருக்கு..” என்றவனின் கன்னத்தில் பொளீரென்று ஒரு அறையை கொடுத்தாள். “என்னையே எதிர்த்து பேசுறியா?” எனக் கேட்டாள்.

சர்வன்ட் ரசகுல்லாவை ப்ளேட்டை எடுத்துக் கொண்டு இவர்களை தாண்டி போனார். ரதியை தேடி கிளம்பியவர் அடி வாங்கியவனை சிறு பரிதாபத்தோடு பார்த்து விட்டு சென்றார்.

அடி வாங்கியவனுக்கு லைட்டாக வலித்தது. அம்மாவுக்கு பதில் இந்த இடத்தில் யார் இருந்திருந்தாலும் பதில் அடி தந்திருப்பான்.

“உங்களுக்கு பண பைத்தியம் பிடிச்சிருக்கு. அண்ணியோட குடும்பம் கொஞ்சம் தாழ்ந்துட்டாங்கன்னு அவ்வளவு இளக்காரம். ஆனா அவங்க அப்படி ஆக காரணமே நம்ம குடும்பம்தான்..” என்றவன் மீதியை சொல்லும் முன்பு “ஐயோ தம்பி..” என்று மாடியிலிருந்து சர்வன்டின் குரல் கேட்டது.

ரசகுல்லா கொண்டு சென்றவர் திடீரென்று அலறவும் இவன் பயந்து படிகளில் ஏறி ஓடினான். அம்மாவும் பின்னால் ஓடி வந்தாள்.

ரதி அவளின் படுக்கையறையில் கட்டிலில் மயங்கி இருந்தாள். அவளின் கை மட்டும் கட்டிலுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. அந்த கையை அவள் அறுத்து வைத்திருந்தால் இரத்தம் தரையில் சிந்திக் கொண்டிருந்தது.

விக்னேஷூக்கு அண்ணியை கண்டதும் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.

“செத்துட்டாளான்னு பாரு..” என்று வேலைக்காரனிடம் சொன்னாள் கனகவதி.

ஆனால் அந்த மனிதர் கட்டிலை நெருங்க பயந்து தூரமாகவே நின்றார்.

விக்னேஷ் சுதாரித்துக் கொண்டு அண்ணியிடம் ஓடினான். அவசரமாக தன் கர்ச்சிப்பை எடுத்து ரதியின் மணிக்கட்டை சுற்றி கட்டு போட்டான்.

“டிரைவரை கார் எடுக்க சொல்லுங்க..” என்று சொல்லி விட்டு அண்ணியை தூக்கினான்.

உயிரோடு இருக்கிறாளா என்று சோதிக்க இவனுக்கு விருப்பமில்லை. அண்ணி உயிரோடுதான் இருக்க வேண்டும் என்று விரும்பினான்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவனுக்கு பயத்தில் உடம்பு படபடத்தது.

மருமகளின் பிறந்த வீட்டில் பணம் இல்லை என்று மருமகளை கேவலமாக நடத்தும் அம்மா நாளை நம்மிடம் பணம் இல்லை என்றாலும் அப்படிதான் நடத்துவாரோ என்று இவனுக்கு சந்தேகம் வந்தது.

மருத்துவமனையில் ரதிக்கு சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.

இரவு நேரம்.

ஊர் முன் நல்ல பெயர் வாங்குவதற்காக மருத்துவமனையில் வந்து காத்திருந்தாள் கனகவதி.

தருண் ஒருபுறம் தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தான். வாய் திறந்து திட்டுகிறவனாக இருந்திருந்தால் அம்மாவை வார்த்தைகளால் பதிலடி தந்திருப்பான்.

‘மௌனமாய் இருப்பது நம் தவறுதான், நம்மால்தான் நம் மனைவி உயிரை விட முடிவெடுத்தாள்!’ என்று இவன் நினைத்து வருத்தப்பட்ட நேரத்தில் அவனின் மாமனார் குடும்பம் மருத்துவமனைக்கு வந்தது.

ரதியின் அம்மாவும் அப்பாவும் ரதியை பற்றி விசாரிக்க மருத்துவரிடம் செல்ல, மாயா நேராக வந்து கனகவதியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விட்டாள்.

அறை விழுந்த சத்தம் சுவர்களில் எதிரொலித்தது. கனகவதிக்கு ஒரு அறைக்கே தலை சுற்றியது. ஆனால் அடுத்த நொடியே மாயா அவளின் கழுத்தை பற்றினாள்.

“உனக்கு எதிரி நான்தானே. என்கிட்ட வந்து மோத வேண்டியதுதானே?” என்று கேட்டாள்.

கனகவதி அவளின் மணிக்கட்டை தன் இரண்டு கைகளாலும் பற்றினாள். ஆனால் மாயாவின் கையை இவளால் கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை.

“அக்கா செத்தா பரவால்லன்னு சொன்னது நீங்களும்தான் மேடம்..” பின்னால் இருந்து குரல் கேட்டது.

கனகவதியின் கழுத்தை இறுக்கியபடியே திரும்பிப் பார்த்தாள் மாயா.

விக்னேஷ் இவளை பார்த்தபடி நின்றிருந்தான்.

 

தொடரும் – வெள்ளி நிலா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!