Skip to content
Post Views: 6,824
அத்தியாயம் – 22
“பெண்ணென்ற ஜாதியிலே
ஆயிரத்தில் அவள் ஒருத்தி
பொன் வைரம் கொடுத்தாலும்
போதாது சீர் செனத்தி..”
என்ற வரிகளைக் கேட்டதும் வினய்யின் மனம் தன்னாலே அதை வந்தனாவுடன் ஒப்பிட்டுப் பார்க்க,
“ஏஞ்சல்!!! உனக்காகவே இந்த வரிகளை வாலி சார் எழுதி வச்சிட்டு போய்டுக்காரு போல!! உனக்கு எவ்ளோ ஆப்டா இருக்கு இந்த லிரிக்ஸ்!!!” என எண்ணி சிலாகித்துக் கொண்டவன்,
Advertisement
பாட்டின் இதத்திலும், தன்னவளின் நினைவிலும் ஒரு மோன நிலையில் வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான்.
அந்த ஏகாந்த நிலையைக் கலைப்பதைப் போல் அவனுக்கு ஒரு அழைப்பு வர,
சாலையில் கவனத்தை வைத்துக்கொண்டே அழைப்பை ஏற்றவன்,
Advertisement
“சொல்லு டா நல்லவனே!!!” எனத் தொடங்க,
Advertisement
“எங்க இருக்க??” என மறு பக்கத்தில் இருந்து சதீஷ் கேட்க,
“வேற எங்க?? மும்பைல தான்!! பெங்களூர்ல இருந்து நேரா இங்கேயே வந்துட்டேன்.. இன்னைக்கு ஷூட் இல்லை.. சோ சும்மா தான் குட்டியா ஒரு ஷாப்பிங் பண்ணாலாம்னு வந்தேன்” என்றான் வினய்.
“நீ இப்போ ஷாப்பிங் பண்ணி ஒன்னத்தையும் கிழிக்க வேண்டாம்!! உடனே இங்க கிளம்பி வா!!! உங்க அம்மா சங்கீக்கு கால் பண்ணி வந்தனா வீட்டு அட்ரஸை கேட்டாங்களாம் இப்போ!! பொறுத்து பொறுத்து பார்த்து, முடியாம இப்போ அவங்களே நேர்ல போய் அவர்கிட்ட பேசப்போறேன்னு சொல்லிருப்பாங்க போல.. நமக்கு தான் நாட்டு மாம்ஸை பத்தித் தெரியுமே!! அவர் பாட்டுக்கு அவங்களையும் ஏதாவது பேசி வச்சு, அப்பறம் அது பெரிய பிரச்சனை ஆகிடப் போகுது!!” என அப்படி ஏதும் நடந்துவிடக்கூடாதே என அவன் பதற,
Advertisement
வினய்க்கும் லேசாய் பதற்றம் தொற்றிக் கொண்டது, ஏனெனில் கணேசனும் வேலை விஷயமாக ஹைதராபாத் சென்றிருப்பதை கணக்கிட்டே அகிலா அங்கே கிளம்ப முடிவு செய்திருப்பதாக அவனுக்குத் தோன்ற, உடனடியாக அவனின் அழைப்பை கட் செய்துவிட்டு அன்னைக்கு அழைத்தான்.
தொடர்ந்து முயற்சி செய்தும் அவர் எடுக்கவில்லை என்றதுமே, அவனுக்குப் புரிந்தது போனது, அவர் வேண்டுமென்றே தன் அழைப்பைத் தவிர்க்கிறார் என.
எனவே உடனடியாக கணேசனுக்கு அழைக்க,
“சொல்லு வினய்!!!” என்றார் உற்சாகமாக அவர்,
“டாட் எங்க இருக்கீங்க???” என அவன் பதட்டமாக கேட்கவும்,
அவரும் ஏதோ முக்கியமான விஷயம் போல என சட்டென பரபரப்பானவர்,
“ஹைதராபாத்ல தான் வினய்!!! ஈவ்னிங் தான் சென்னை பிளைட்.. அதான் அகிக்கு இந்த ஊரு ஸ்வீட்ஸ் பிடிக்குமேன்னு வாங்க வந்தேன்.. எனி பிராப்ளம் மை பாய்??” என அவர் கேட்கவும்,
“யெஸ் டாட்!!! மாம் வதனா வீட்டுக்கு போய் பேசப்போறதா சங்கீதா கிட்ட சொல்லி அவ அட்ரஸ் வாங்கிருக்காங்க!! நான் கால் பண்ணா அவாய்ட் பண்றாங்க.. அவங்களை எப்படியாச்சும் ஸ்டாப் பண்ணனும் டாட்!! அவருக்கும் கோவம் வரும், அம்மாக்கும் கோவம் வரும்.. ரெண்டு பேரும் யோசிக்காம வார்த்தையை விட்டுட்டா இது ரொம்ப மோசமாயிடும் டாட்!!!” என எங்கே அனைத்தும் தவறாகிப் போய் விடுமோ என அவன் கவலையுடன் கூறவும்,
கணேசனுக்கும் அதே கவலை லேசாகத் தோன்றினாலும், மனைவி மீது நம்பிக்கை கொண்டவர்,
“ரிலாக்ஸ் வினய்!! அகி ரொம்பவே உன்னை நினைச்சு டிஸ்டர்ப்டா இருந்தா கொஞ்ச நாளா!!! இப்படியே உன் லைஃப் போய்டுமோன்னு ரொம்ப பயப்படுறா!! அதான் இப்படி பேசாமையே இருக்கதுக்கு அவர்கிட்ட நேருல போய் பேசித்தான் பார்ப்போமேன்னு நினைச்சிருப்பா!! நம்மகிட்ட தான் அவ கோவமெல்லாம் வினய்!! மத்தவங்ககிட்ட எப்போ எப்படி பேசணும்னு அவளுக்கு நல்லாவே தெரியும்.. சோ டோண்ட் வொர்ரி!! நான் அவளுக்கு ட்ரை பண்றேன்!! எடுக்கலைனா, நான் இங்க இருந்து டைரக்டா திருச்சி பிளைட் பிடிச்சு அங்க போய்டுறேன்.. ஒன்னும் ஆகாது மை பாய்!! நாரதர் கலகம் நன்மையில் தான் முடியும்னு சொல்லுவாங்கதான!! அதே மாதிரி என் அகியோட கலகம் அழகான முடிவைத் தேடித் தரும்.. ” என இலகுவாக பேசி அவனுக்கு நம்பிக்கை அளித்தார் கணேசன்.
அவரிடம் பேசியபின் வினய்யும் பதற்றம் தணிந்து சற்று இலகுவாக, “ரியல்லி யூ ஆர் கிரேட் டாட்!!! எவ்ளோ டென்ஷனா இருந்தேன்.. சட்டுனு கூல் ஆக்கிட்டீங்க!! உங்ககிட்ட இருந்து இன்னும் நிறையா கத்துக்கணும் நான்” என்றான் சிரிப்புடன் வினய்.
“ஓகே டாட்!! நீங்க திருச்சியே போங்க!! நானும் இங்க இருந்து பிளைட் கிடைக்குதா பார்க்குறேன்.. எனக்குமே வதனாவை பார்க்கணும் போல இருக்கு!!” என தன்னவளை எண்ணி தவிப்புடன் அவன் கூறவும்,
மறுபுறம் கணேசன் அதைக்கேட்டு வெடித்துச் சிரித்தவர்,
“எப்படியோ இன்னைக்கே எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சரி!! ஓகே வினய்!! நான் இன்னும் அகிக்கு கொஞ்சம் திங்க்ஸ் வாங்க வேண்டி இருக்கு!! பாரத்துட்டு நான் கிளம்புறேன்.. பாய்” என அவர் அழைப்பைத் துண்டித்து விட,
வினய்யும் சதீஷிடம் வயலூர் வரப்போவதை தெரிவித்துவிட்டு, கனெக்டிங் பிளைட் மூலம் சென்னை வந்து திருச்சி வருவதற்கான பயணச்சீட்டை முன்பதிவு செய்தவன், இருக்கும் சொற்ப நேரத்தில், அங்கே வந்தனாவிற்காக ஒரு பரிசுப்பொருள் ஒன்றையும் காதலுடன் வாங்கிக் கொண்டு தன்னவளைக் காண காதலுடன் கிளம்பினான்.
***
இத்தனை மாதங்களில் சங்கீதாவும், வைஜெய்ந்தியும் அகிலாவுடன் நன்றாகவே பேசி உறவை வளர்த்திருந்தனர்.
எப்போதாவது அகிலா சங்கீதாவை அழைத்துப் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்க,
இன்றும் அது போல தான் அழைத்திருக்கிறார் என்று நினைத்து அழைப்பை ஏற்ற சங்கீதா,
“சொல்லுங்க ஆன்ட்டி!! எப்படி இருக்கீங்க?? அங்கிள் நல்லா இருக்காரா?? சென்னையில தான் இருக்கீங்க.. வீட்டுக்கு வாங்கன்னு எத்தனை டைம் நானும் அம்மாவும் கூப்பிடுறோம்!! வரவே மாட்டேங்குறீங்க” என அவள் குறைபட்டுக் கொள்ள,
“கூடிய சீக்கிரம் வரேன் மா!!” என எதையோ நினைத்து அகிலாவும் கூற,
சற்று நேரம் பொதுவாய் சில விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர்.
“சங்கீதா!! எனக்கு ஒரு உதவி பண்ணனுமே நீ!!” என அவர் விஷயத்திற்கு வர,
“அட என்ன ஆன்ட்டி!! உதவி அது இதுன்னு.. என்னன்னு சொல்லுங்க!! செஞ்சுடலாம்” என சங்கீதா கூறவும்,
“எனக்கு உன் தங்கச்சியோட வீட்டு அட்ரஸ் வேண்டும்.. திருச்சி பக்கம்னு தெரியும்.. பட் கரெக்ட் அட்ரஸ் வேண்டும்..” என கொடுத்தே ஆகவேண்டும் என ஒரு பிடிவாதம் அவர் குரலில் இருந்ததை உணர்ந்த சங்கீதாவிற்கு, ‘இதென்னடா புது குழப்பம்’ என்றிருந்தது.
“இப்போ எதுக்கு ஆன்ட்டி அது??” என அவள் தயங்க,
“எனக்கு உங்க அளவுக்கு பொறுமை இல்லை மா சங்கீதா.. என் பையன் வாழ்க்கை இப்படியே காத்துட்டு இருந்தே போய்டுமோன்னு பயமா இருக்கு!!! என் மனசு உங்க யாருக்குமே புரியலை!! நானும் லவ் மேரேஜ் தான் சங்கீதா!! என் பையன் சொல்லலைனாலும் என்னால அவன் கஷ்டத்தை புரிஞ்சுக்க முடியும்.. வெளியே சிரிச்சு பேசினாலும், உள்ள அந்தப்பொண்ணை நினைச்சு அவன் எவ்ளோ தவிக்குறான்னு உங்களுக்கெல்லாம் புரியாது மா!!! அதான் இதுக்கு மேலயும் பொறுமையா இருக்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்.. உன் சித்தப்பா என்ன கொலையா பண்ணிருவாரு?? பார்ப்போம்!! இன்னைக்கு அவரா நானான்னு?? இன்னைக்கு ஒரு முடிவு இதுக்கு கிடைக்காம நான் வர மாட்டேன் அங்க இருந்து” என அகிலா தன் மனக்குமுறலை கொட்டிவிட,
சங்கீதாவிற்கு அவரை நினைத்தும் பாவமாகத் தான் இருந்தது.
இருந்தும் அகிலாவும் நாட்டரசனும் ஏதும் கோபமாகப் பேசி, மேலும் இந்த உறவு சிக்கலாகிவிடப் போகிறது என அஞ்சியே அவள், அகிலாவை சமாளிக்க முயற்சிக்க,
ம்ஹும்!! அகிலா எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.
வெற்றிகரமாக வந்தனாவின் முகவரியை வாங்கிய பின்பு தான் அழைப்பையே துண்டித்தார்.
சங்கீதாவும் உடனடியாக, சதீஷின் மூலம் வினய்க்கு விஷயத்தைப் பகிர்ந்தவள்,
அடுத்தபடியாக மலருக்கு அழைத்து தகவல் கொடுத்தாள்.
“மலர்!! வினயோட அம்மா அங்க கிளம்பி வரப் போறாங்க!! நீ முன்னாடியே போய் தனுக்கும், சித்திக்கும் இன்ஃபார்ம் பண்ணி அலர்ட் பண்ணிடு!! முடிஞ்சளவு சித்தப்பாவை எங்கயாச்சும் வெளிய அனுப்பி வைக்க சொல்லு சித்திகிட்ட.. ரெண்டு பேரும் கோபக்காரங்க.. ஏதாவது ஏடாகூடமா பேசி, இருக்க நிலமை இன்னும் மோசமாகிடப் போகுது!!” என அவள் பரபரப்பாகக் கூற,
“அய்யோ!! அக்கா நான் அண்ணனுக்கு டிரஸ் எடுக்க திருச்சி வரைக்கும் வந்துட்டேனே” என மலர் பதற,
“அவங்க சென்னையில இருந்து திருச்சி பிளைட் வழியா வந்தாலே ஈவ்னிங் ஆய்டும் இனி… சோ ஒன்னும் அவசரம் இல்லை.. நீ உன் வேலையை முடிச்சிட்டு பொறுமையாவே போய் தனுகிட்ட சொல்லு!! அவ போனையும் சித்தி போனையும் சித்தப்பா வாங்கி வச்சுட்டரே!! இல்லைனா நானே அவங்ககிட்ட சொல்லிருப்பேன்” என சங்கீதா இறுதியில் நாட்டரசனின் செயல் குறித்தான ஆதங்கத்தில் வருந்த,
“நீங்க ஒன்னும் வெசனப்படாதீங்க!! நான் இதோ கிளம்புறேன்” என மலரும் உடனடியாக திருச்சியில் இருந்து கிளம்பினாள்.
அனைவரும் அகிலா சென்னையில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்க, அவரோ திருச்சி வந்து இறங்கிய பின்பு தான் வந்தனாவின் முகவரியையே சங்கீதாவிடம் வாங்கியிருந்தார். அது தெரியாமல் அனைவரும், நாட்டரசன் மற்றும் அகிலாவின் சந்திப்பை தவிர்க்க தன்னாலான முயற்சிகளை செய்து கொண்டிருக்க, அகிலாவோ ஒரு முடிவோடு வயலூரை நோக்கிக் கிளம்பினார்.
ஊருக்கு வந்ததும் மலர், எப்போதும் செல்வது போல் பின் வாசல் வழியாக வந்தனாவின் வீட்டிற்குள் நுழைய,
அங்கே அப்போது தான் வந்தனா, நாட்டரசனை தன் கேள்விகளால் ஒரு வழி ஆக்கிக் கொண்டிருந்தாள்.
மலரோ வந்தனாவின் இந்த புதிய அவதாரத்தில் ஆச்சரியம் கொண்டு, வந்த வேலையை மறந்துவிட்டு அங்கே நடப்பதை சுவாரசியமாக வேடிக்கை பார்க்கத் தொடங்கி விட, நேரம் போனதே தெரியவில்லை.
அனைத்தும் முடிந்து வந்தனா இளவரசியைக் கட்டிக்கொண்டு கண்ணீர் விடவும் தான் மலருக்கு தான் வந்ததன் நோக்கமே நினைவு வர,
“ஹேய் புள்ளை!! எங்க இருக்க???” என கேட்டுக்கொண்டே அப்போது தான் வீட்டிற்குள் நுழைவதைப் போல் மலர் உள்ளே வர,
அனைவரும் தத்தம் நிலையில் இருந்து சட்டென மாறி, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இயல்பாக இருக்க,
நாட்டரசனோ முகத்தில் இருந்த இளக்கத்தை மறைத்து, மீண்டும் எப்பொழுதும் போல் இறுக்கமாகவே வைத்துக் கொண்டு நிமிர்ந்து அமர,
அவரைக் கண்ட மலருக்கு சிரிப்பாக வந்தது.
இத்தனை நேரமும் அவர் முகம் காட்டிய ஒவ்வொரு உணர்ச்சிகளையும் கண்டிருந்தவளுக்கு, இப்போது, ‘ நானும் ரவுடி தான் ‘ என்பதைப் போல் அவர் அமர்ந்திருந்த தோற்றத்தைக் கண்டு வந்த சிரிப்பை கட்டுப்படுத்துவது பெரும்பாடாகிப் போனது.
“கீழ விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலைன்னு கெத்தா உட்காந்திருக்கதை பாரேன்!!” என மெதுவாய் முணுமுணுத்துக் கொண்ட மலர்,
“என்ன மாமா இன்னும் வயலுக்குக் கிளம்பலையா நீங்க?? இந்த நேரம் இங்க இருக்கீங்க??” என பொதுவாய் அவள் விசாரிக்க,
“ஹும்!! போகணும்.. இந்தா கெளம்பிட்டேன்” என அங்கேயே இருக்கப் பிடிக்காமல் அவர் துண்டை உதறி தோளில் போட்டு எழுந்து உள்ளே செல்ல,
“அப்பாடி போய்ட்டாரா!!” என அவர் உள்ளே சென்று விட்டதை உறுதிபடுத்திக்கொண்ட மலர், சங்கீதா தன்னை அழைத்துக் கூறிய விஷயத்தை இருவரிடமும் மெல்லிய குரலில் பகிர்ந்து கொண்டாள்.
அதைக்கேட்ட வந்தனாவிற்கு, இத்தனை நேரமும் இருந்த தைரியம் எங்கோ காற்றில் கரைந்து போக, ‘இதென்ன டா புதுக் குழப்பம்’ என அதிர்ந்து போய் அப்படியே தொப்பென சோஃபாவில் அமர்ந்து விட்டார்.
“அய்யோ!! இப்போ தான் இந்த மனுஷன் கொஞ்சம் மலையிறங்கியிருக்காரு.. அதுக்குள்ள இவங்க வேற வந்து ஏதாவது மறுபடியும் இந்த மனுஷன் பேசி காரியத்தை கெடுத்துறப் போறாரே!!” என இளவரசி புலம்ப,
“இப்போ என்ன டி பண்றது???” என அவர்கள் யோசிப்பதற்கு கூட அவகாசம் அளிக்காமல்,
“உள்ளே வரலாமா???” என குரல் கொடுத்து அவர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியிருந்தார் அகிலா.
அவர் அதற்குள் வந்துவிட்டதைக் கண்டு யாருக்கு அதிக அதிர்ச்சி என அறிய முடியாமல், மூன்று பெண்களுமே அவரை வரவேற்க கூட மறந்து அதிர்ந்து போய் நின்றிருக்க,
“எக்ஸ்க்யூஸ் மீ!!!” என மீண்டும் அழைத்து அவர்களை நிகழ்வுக்கு கொண்டு வந்தார் அகிலா.
“வாங்க வாங்க!!!” என சுதாரித்து இளவரசி அவரை வரவேற்றிருக்க,
அளவான புன்னகையுடன் வந்தனாவையே பார்வையால் துளைத்தவாறு உள்ளே வந்த அகிலாவைக் கண்டு, வந்தனாவிற்கு தொண்டையில் நீர் வற்றி விட்ட உணர்வு.
“வாங்க அம்மா” என மலரும் அவரை அழைத்து, அவரின் கவனத்தை தன் பக்கம் திருப்ப முயல,
ம்ஹும், அவரின் பார்வை வந்தனாவை விட்டு துளியும் நகரவில்லை.
“அப்படி என்ன அழகி நீன்னு அவங்க மகன் உன்கிட்ட இப்படி விழுந்து கெடக்குறாருன்னு ஆராய்ச்சி பண்ணுதோ டி இந்தம்மா!!!” என மலர் வந்தனாவின் காதில் கிசுகிசுக்க,
“ப்ச்!! வாயை மூடுடி!! அவங்க இங்க தான் பார்க்குறாங்க!!” என அடிக்குரலில் தோழியை மிரட்டிய வந்தனா,
“வா.. வாங்க” என தயக்கமாய் அவரை அழைக்க,
“அத்தைன்னு சொல்லு தனு!! அது என்ன மொட்டையா வாங்க??” என இளவரசி இடைபுகுந்து, மறைமுகமாக தன் சம்மதத்தை அகிலாவிற்குத் தெரியப்படுத்த,
ஒற்றைப் புருவம் உயர்த்தி அவரை மெச்சும் பார்வை பார்த்துக் கொண்ட அகிலா,
“நல்லா இருக்கியா வந்தனா?? வந்தனா தான உன் பேர்??” என அமர்த்தலாகக் கேட்க,
அவள் பதிலுக்கு தலையை நாலாபக்கமும் ஆட்ட,
அகிலாவிடம் மென்னகை ஒன்று மலர்ந்தது.
“என்னைப் பார்த்தா பயப்படுத்துற மாதிரியா இருக்கு?? இவளோ நெர்வஸா இருக்க நீ?? ரிலாக்ஸ்” என அவர் கேட்கவும்,
“இல்லை.. அப்படியெல்லாம் இல்லை அ.. அத்.தை” என தயக்கத்துடன் அவள் முறை சொல்லி அழைக்க,
“உட்காருங்க மதினி… எப்போ வந்தீங்க மதினி? என்ன சாப்பிடுறீங்க??” என இளவரசி அவரை உபசரிக்க,
அப்போது தான் மலருக்கும், வந்தனாவிற்குமே அந்த சந்தேகம் உதயமானது.
சென்னையில் இருந்து இவ்வளவு விரைவில் நிச்சயம் இங்கே வந்திருக்க முடியாது என இருவருக்கும் தெரிய, அப்போது முன்பே இவர்கள் இங்கே வந்துவிட்டார்களோ?? என எண்ணிய வந்தனாவின் முகம் கலவரமடைந்தது.
“அப்போ நம்ம பேசுனதை எல்லாம் கேட்டிருப்பாங்களோ???” என எண்ணி அஞ்சிய வந்தனாவிற்கு, வருங்கால மாமியாராகவே இருந்தாலும், அவர் முன்பு தன் பெற்றோர்களை தான் நிற்க வைத்து கேள்வி கேட்டது தெரிவிக்க விருப்பமில்லை. அது தன் பெற்றோரை தாமே விட்டுக்கொடுப்பது போல் ஆகிவிடும் என எண்ணி வருந்திய வந்தனா,
“கடவுளே அவங்க எதுவும் கேட்டிருக்கக் கூடாது!!!” என உடனடியாக ஒரு வேண்டுதல் வைத்தாள் கடவுளிடம்.
ஆனால் உண்மையில், வந்தனா நாட்டரசனை பேசத் தொடங்கிய போதே அங்கே வந்துவிட்ட அகிலா, அவர்களின் சண்டையில் தலையிட்டு அவர்களை சங்கடப்படுத்த விரும்பாமல் வெளியே காத்திருந்தார்.
அதிலும் வந்தனாவின் உணர்வுகளை அவள் வாய்மொழியாக கேட்டபின், இத்தனை நாட்களாக இவள் அமைதியாகவே இருக்கிறாளே என அவளின் மீது கொண்ட கோபம் கூட பரிதாபமாக மாறியிருந்தது.
இப்போதும் அவளின் மனநிலையை சரியாக கணித்தவர், “நான் திருச்சிக்கு முன்னாடியே வந்துட்டேன்.. அங்க இருந்து உங்க வீட்டைக் கண்டுபிடிச்சு வர லேட் ஆய்டுச்சு!! இப்போ தான் வரேன்” என சமாளித்து வந்தனாவின் மனதில் பாலை வார்த்தார்.
அதைக்கேட்ட பின்பே அவள் இழுத்து வைத்த மூச்சை ஆசுவாசமாக வெளியிட, அதற்கு ஆயுள் குறைவு என்பதைப் போல் வயலுக்குக் கிளம்பி அங்கே வந்த நாட்டரசன்,
“வாங்கம்மா!!!” என அங்கே உட்கார்ந்திருந்த அகிலாவை குழப்பமாக பார்த்துக் கொண்டே,
“யார் இது??” என இளவரசியிடம் மெதுவாய் கேட்டிருந்தார்.
அவர் என்னதான் குரலைத் தழைத்து கொண்டு பேசினாலும், அது அங்கிருந்த அனைவருக்கும் கேட்கத்தான் செய்தது.
“நான் அகிலா!! வினய்யோட அம்மா!!” இளவரசியை முந்திக்கொண்டு, அகிலாவே நாட்டரசனை நேருக்கு நேர் பார்த்து தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள,
அடுத்த நொடி நாட்டரசனின் முகம் தன்னாலே இறுகிப் போக,
‘இவங்க எதுக்கு இப்போ இங்க வந்திருக்காங்க?’ எனும் சிந்தனையுடன் அகிலாவைப் பார்த்திருக்க, பதிலுக்கு அகிலாவும் சளைக்காமல் அவரைத் தான் எதிர்பார்வை பார்த்திருந்தார்.
“இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கு அப்போ!!!” என மலர் அவர்களின் பார்வையைக் கண்டு மெதுவாய் கூற,
வந்தனாவும், இளவரசியும் அவளை ஒருசேர முறைத்திருந்தனர்.
“நான் எதுக்கு வந்தேன்னு உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம்.. ரொம்ப யோசிக்க வேண்டாம்.. நானே சொல்லிடுறேன்” என தொடங்கியவர்,
“உங்களுக்கு என்னைப் பத்தி தெரிஞ்சுருக்காது!!! என் பேர் அகிலா.. *** காலேஜ்ல புரஃபஸரா இருக்கேன்.. என் ஹஸ்பன்ட் கணேசன்.. அவரை நீங்க மீட் பண்ணிருப்பீங்க.. அவர் ஆடிட்டரா இருக்காரு.. எங்களுக்கு ஒரே பையன்.. வினய் சக்கரவர்த்தி!!! இந்தியாவில உள்ள டாப் மோஸ்ட் லீடிங் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்ல அவனும் ஒருத்தன்!!” என மகனைப் பற்றி கூறுகையில் அவரிடம் தென்பட்ட பெருமிதத்தை அங்கிருந்தவர்களால் உணர முடிந்தது.
நாட்டரசனுக்குத் தான் அவனின் தொழிலைப் பற்றி கூறுகையில் முகம் மாறாமல் காப்பது பெரும் அவஸ்தையாக இருந்தது.
என்னதான் மகளுக்காக அவளின் காதலை ஏற்க அவர் தயாராக இருந்தாலும், இன்னமும் அவனின் தொழிலை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு அவர் மனம் விரிவடையவில்லை என்பதை விட, இத்தனை வருட அவரின் வாழ்க்கைமுறை அதற்கு அனுமதிக்கவில்லை.
அதை உணர்ந்ததைப் போல் நாட்டரசனை பார்த்திருந்த அகிலா, “உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்!! என் பையன் உங்க பொண்ணை விரும்புறது!! அதைப்பத்தி பேசத்தான் நான் வந்தேன்!! யாருமே பேசாமையே இருந்தா, ஒரு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது இல்லையா??? சோ பேசிடலாம் இன்னைக்கு!! சொல்லுங்க சார்!!! உங்களுக்கு என்ன பிரச்சனை?? எதுக்கு என் பையனை வேண்டாம்னு சொல்றீங்க??” என நேரடியாகவே அகிலா கேட்க,
நாட்டரசனுக்கு முதன்முறையாக பேசத் தடுமாற்றமாக இருந்தது.
அகிலா இடத்தில் ஒரு ஆண் இருந்திருந்தால் கூட இலகுவாக பேசியிருப்பாரோ என்னவோ?? ஒரு பெண்மணியிடம் என்னவென்று தன் மனதில் நினைப்பதை பேச எனத் தயங்கியவர்,
“க்கும்!!” என தொண்டையைச் செருமிக் கொண்டவர்,
“இதோ பாருங்கம்மா!! நாங்க ரொம்பவே கட்டுக்கோப்பான குடும்பம்.. இந்த ஊருல எங்க குடும்பத்துக்குன்னு தனி மரியாதையே இருக்கு.. இந்த காதல், கத்திரிக்காய் எல்லாம் உங்க ஊருல எப்படியோ, இங்க ரொம்பவே கேவலமான இரு செயலாத் தான் பார்ப்பாங்க.. அதுவும்” என தன் தரப்பு நியாயங்களை பேசிக்கொண்டு வந்தவர், அடுத்து சொல்லப்போகும் விஷயத்தை அகிலா எப்படி எடுத்துக் கொள்வார் என ஒரு நொடி தயங்கியவர்,
“அதுவுமில்லாம நீங்க வேற ஆளுங்க.. நாங்க வேற ஆளுங்க!! இதெல்லாம் யோசிச்சு தான் நான் வேண்டாம்னு சொன்னேன்” என அவர் சொல்லியே விட,
அகிலாவின் நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
அவர் அப்படித்தான் என முன்பே அனைத்திற்கும் தயாராகி வந்தது போல் இருந்தது அவரின் தோரணை!!
“உங்க அப்பாக்கு இவ்வளவு பொறுமையா எல்லாம் பேசத் தெரியுமா டி தனு!!?” என மலர் வந்தனாவின் காதைக் கடிக்க,
அவளும் அதைத்தான் நினைத்தபடி தன் தகப்பனைப் பார்த்திருந்தாள்.
“அவ்ளோதானா?? இல்லை வேற ஏதாவது காரணம் இருக்கா சார்??” என அகிலா கேட்பது, ஏதோ பரிகாசம் செய்வதைப் போலவே நாட்டரசனுக்குத் தோன்ற,
“உங்க பையன் வேலையைப் பத்தி உங்ககிட்டையே தப்பா பேசக்கூடாது!! ஆனாலும் வேற வழியில்லை!!! எனக்கு மேல சொன்ன மத்த காரணங்களைக் கூட போனாப்போகுதுன்னு என் பொண்ணுக்காக விட்டிடுவேன்.. ஆனா!! உங்க பையனோட வேலை!! என்னால ஒருபோதும் அதை ஏத்துக்க முடியாதுங்கம்மா” என நாட்டரசன் வெளிப்படையாய் கூறியே விட,
தான் இத்தனை கூறிய பின்பும், இந்த மனிதன் மாறவே இல்லையே என அயர்ச்சியாய் அவரை பார்த்த வந்தனா, அவஸ்தையுடன் அகிலாவைப் பார்க்க,
அவளின் தவிப்பை உணர்ந்ததைப் போல், கண்களை மூடித் திறந்து தான் பார்த்துக் கொள்வதாக அவளிடம் கூறியவர்,
இப்போது நன்றாக நிமிர்ந்து அமர்ந்து நாட்டரசனை எதிர்நோக்கினார்.
“சோ!! என் பையன் அவனோட தொழிலை விட்டுட்டா உங்களுக்கு இவங்க கல்யாணத்துல வேற எந்த பிரச்சனையும் இல்லை.. ரைட்??” என அகிலா கேட்கவும்,
நாட்டரசனும் அகிலாவின் எண்ணவோட்டத்தை கணிக்க முடியாமல், தலையை ஒரு மையமாக ஆட்டி வைக்க,
“ஓகே ஃபைன்!! என் பையனை அவனோட வேலையை விட சொல்லிடுறேன்” என மின்னாமல் முழங்காமல் ஒரு இடியை அவர் சாதரணமாக இறக்க,
அவரைத் தான் நம்பமாட்டாமல் அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போய் பார்த்திருந்தனர்.
அதுவும் நாட்டரசனின் பார்வை சந்தேகமாய் அகிலாவின் மீது படிய, அதை கண்டுகொண்ட அகிலாவின் உதட்டோரம் ஒரு அமர்த்தலான புன்னகை வந்து குடியேறியது.
“நிஜமாவே தான் சொல்றீங்களா??” என நாட்டரசன் கேட்க,
“உண்மையா தான் சார்!!” என்ற அகிலா,
“அப்போ என்ன கல்யாணத்துக்கு தேதி குறிச்சுடலாமா??” என அகிலா கேட்கவும்,
“அதற்குள்ளாகவா???” என அனைவரும் வாயைப் பிழக்க,
“இவளோ நாள் லேட் பண்ணியாச்சு.. இனியும் எதுக்கு டைம் வேஸ்ட் பண்ண?? அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணத்தை வச்சுக்கலாம்” என ஆணானப்பட்ட நாட்டரசனையே திணற வைத்தார்.
“இல்லை மா!! முறைன்னு ஒன்னு இருக்கு!! பெரியவங்களை கலந்துட்டு தான் எல்லாம் முடிவு செய்யணும்!! எடுத்தோம் கவுத்தோம்ன்னு செய்ய இது விளையாட்டு காரியம் இல்லை” என அவர் பின்வாங்க,
“என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க?? பெத்தவங்களுக்கு சம்மதம்.. பிள்ளைகளுக்கு சம்மதம்.. இது போதாதா?? ” என போலியாக வியந்தவர்,
“ஆமா சார்!! இப்போ உங்க சைட் பெரியவங்களை எல்லாம் கூட்டி பேசுனா, என் பையன் வேலை இல்லாதவன்னு தெரிஞ்சு, அப்போ அவங்க உங்களை கேவலமா பார்க்க மாட்டாங்களா?? ஒரு வேலை இல்லாதவனுக்கு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தா உங்க கௌரவம் அப்போ என்னாகுறது???” என முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு அவர் சந்தேகம் கேட்க,
நாட்டரசன் அவரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ஒரு நொடி திணறித்தான் போனார்.
“வேலையை விட்டா வீட்டுலயேவா இருப்பாங்க.. உத்தியோகம் தான புருச லட்சணம்.. வேற நல்ல வேலைக்குப் போகச் சொல்லுங்க மா.. அப்பறம் பேசலாம் இதைப்பத்தி” என்றவரின் பேச்சில் இருந்த அபத்தம் அவருக்கே புரிந்ததோ என்னவோ, இதைக்கூறும் போது அவரின் குரல் பலவீனமாகவே வெளிவந்தது.
“எது எது நல்ல வேலைன்னு நீங்க சொன்னா அதுக்கேத்த மாதிரி ஏற்பாடு பண்ணிடலாம் சார்” என குரலை சாதரணமாக வைத்துக் கொண்டு அவர் நக்கல் செய்ய,
மலருக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது, நாட்டரசனின் நிலை கண்டு.
“என்ன மா கிண்டல் பண்றீங்களா??” என நாட்டரசன் கொதிக்க,
“அட சீரியஸா கேக்குறேன் சார்!! நாளைக்கு என் மகன் இத்தனை வருஷம் போராடி இவ்வளவு முன்னேறிய இந்த தொழிலை விட சொன்ன மாதிரி, இன்னும் புதுசா ஒரு வேலைக்கு சேர்ந்து அங்க அடிச்சுப் பிடிச்சு முன்னுக்க வந்த பின்னாடி அதுவும் கேவலமான வேலைன்னு நீங்க பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டா நாங்க என்ன பண்றது சார்??” எனக் கேட்ட அகிலாவின் குரலில் அடக்கிவைக்கப்பட்ட கோபம் தெரிந்தது.
இதற்கென்ன பதில் சொல்ல எனத் தெரியாமல் நாட்டரசன் மௌனம் காக்க,
“உங்களுக்கு அவ்ளோ ஈசியா போச்சுல்ல சார்?? இந்த இன்டஸ்ட்ரிக்குள்ள ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க என் பையன் எவ்ளோ போராடினான் தெரியுமா?? அதுவும் இந்த சின்ன வயசுல இத்தனை அவார்ட் வாங்கிருக்கான்னா அதுக்கு அவன் எவ்ளோ கஷ்டப்பட்டுருப்பான்.. அதெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காம ஈசியா தூக்கிப் போட சொல்றீங்க??” என ஆதங்கத்துடன் கேட்டவர்,
“உங்களுக்கு எப்படி விவசாயம் உயிர்மூச்சோ, அதுபோல ஒவ்வொருத்தருக்குமே அவங்களோட வேலை ரொம்பவே பெருசு தான் சார்.. என் பையன் என்ன அடுத்தவங்க பொழைப்பைக் கெடுத்து, மக்களோட பாவத்தை சம்பாதிக்கிற ஏதோ கேடுகெட்ட வேலையா பார்க்குறான்?? உண்மையை சொன்னா எல்லாரையும் அவனோட திறமையால அழகாக்குறான்!! மனசு அழுக்கா இருக்கவங்களைக் கூட அழகா காட்டுற திறமை என் பையனுக்கு இருக்கு!! இதுல என்ன சார் குறையை நீங்க கண்டீங்க??? மத்தவங்களை எண்ணி பெத்த பிள்ளைங்க வாழ்க்கையை நாசம் பண்ணிடாதீங்க சார்!!” என சரமாரியாக அவரைப் போட்டுத் தாக்கினார் அகிலா.
நாட்டரசன் அவர் கூற்றை மறுத்து ஏதோ சொல்ல வர, அவரை பேசவே விடாமல், அகிலா அவர் மனதை மாற்ற தான் எடுத்த முயற்சியில் இருந்து பின்வாங்காமல் மேலும் மேலும் பேசிக்கொண்டே போக,
“இதென்னாடா இந்தம்மா இப்படி பேசுது!!” என ஆயாசமாக இருந்தது நாட்டரசனுக்கு..
முன்பே மகளுக்காக ஓரளவு அனைத்தையும் ஏற்கத் தயாராகிவிட்ட மனநிலையில் இருந்த மனிதருக்கு, அகிலாவின் பேச்சும் சேர்ந்துகொள்ள, அவரும் கொஞ்சம் கொஞ்சமாய் கௌரவம், மரியாதை எனும் முகமூடியை கழட்டி விட்டு, மகளுக்காக கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினார்.
அவரின் தடுமாற்றத்தை உணர்ந்து கொண்ட அகிலா, அப்படியே விட்டுவிடாமல் மேலும் பேசிப் பேசியே அவரை கரைத்தார்.
“என் பையன் கோவக்காரான், குடிகாரன், கெட்டவன் இப்படி ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி நீங்க வேண்டாம்னு சொல்லிருந்தா நானே இங்க இருந்து பேசாம எழுந்து போயிருப்பேன்.. ஆனா நீங்க ஒன்னுக்கும் உதவாத ஒரு காரணத்தை பிடிச்சுத் தொங்கி, எல்லாரையும் உங்க வறட்டுப் பிடிவாதத்தால கஷ்டப் படுத்திட்டு இருக்கீங்க சார்” என்றவர்,
“இப்போ உங்களுக்கே ஒரு தங்கச்சி இருந்து, அவங்க பையன் இந்த தொழில்ல இருந்தாக் கூட இப்படித்தான் பண்ணுவீங்களா?? பண்ண மாட்டிங்க தான?? தங்கச்சி பையன்னு பாசம் இருக்கும் தான??” என அவருக்கு யோசிக்கவே அவகாசம் கொடுக்காமல் அகிலா பேசிக் கொண்டே போக,
“நானும் உங்களுக்குத் தங்கச்சி மாதிரி தான்.. அப்போ என்னோட பையனுக்கு உங்க பொண்ணை தரமாட்டேன்னு சொல்லிடுவீங்களா நீங்க???” என அவர் ஒரு போடு போட,
நாட்டரசன் உண்மையில் அகிலாவின் வாய் ஜாலத்தில் அதிசயித்துப் போனார்.
எத்தனை அழகாய் காய் நகர்த்தி, எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் என அகிலாவை எண்ணி வியந்தவர்,
இப்போது என்ன முடிவெடுப்பது என தடுமாற, அவரின் கண்கள் எதிர்பார்ப்புடன் அவரையே பார்த்திருந்த வந்தனாவை ஒரு நொடி ஏறிட்டது.
அவள் கண்களில் தெரிந்த ஆசையும், எதிர்பார்ப்பும் அவருக்கு மனதை ஏதோ செய்ய, காலையில் இருந்தே உணர்ச்சிகளின் பிடியில் சிக்கித் தவித்ததால், தெளிவான முடிவெடுக்க முடியாமல் திணறியவர், ஒரு பெருமூச்சுடன் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு,
“சரி மா!! உங்க வீட்டுல வர சொல்லுங்க!! மேற்கொண்டு ஆகவேண்டியதை பேசுவோம்!!” என தன் மகளுக்காக மனமிறங்கி மறைமுகமாக தன் சம்மதத்தை அவர் தெரிவித்திருக்க,
“அப்பா!!!!!” என தழுதழுப்புடன் உணர்ச்சி மிகுதியில் அவர் கைகளைப் பற்றியிருந்தாள் வந்தனா.
மகளின் முதல் ஸ்பரிசம், அந்த மனிதருக்குள் எதுவோ உடைய, உடலெல்லாம் புதுவித சிலிர்ப்பு ஒன்று தோன்றி மறைய, கால்கள் பலவீனமடைந்ததைப் போல் லேசாய் தள்ளாடியவர்,
இதற்குமேல் இங்கே இருந்தால் கலங்கிவிடுவோமோ என்று அஞ்சி, நடுங்கும் கரங்களுடன் வந்தனாவின் தலையில் மெதுவாய் கைவைத்து அழுத்தியவர், அதன் பின் யாரையும் ஏறெடுத்தும் பார்க்காமல் அங்கிருந்து வெளியேறி இருந்தார்.
இறுக்கம் தளர்ந்து இரும்பும் இளகியதோ இதயமானவர்களின் இன்பத்திற்காக????
error: Content is protected !!