Skip to content
Post Views: 538
பவித்ரா தனது வண்டியை ஸ்டார்ட் செய்ய பின்னால் ஏறினாள் மதுமித்ரா. போலாம்க்கா என்று கூறியவுடன் வண்டியை எடுத்தாள். இவர்கள் வீட்டிலிருந்து 10 நிமிட பயணத்தில் இருந்தது அவர்களின் அம்மாச்சி வீடு,
ஆம் அவர்கள் செல்வது துரை மாமா வீட்டிற்குத்தான். வீட்டின் வாசலில் வண்டியை நிறுத்திய பவித்ரா, நீ உள்ள போயி குடுத்துட்டு வா நான் இங்கையே வெயிட் பண்றேன் என்றாள்.
அக்கா இங்க வந்துட்டு உள்ள வரலேனா அம்மாச்சியும், அத்தையும் திட்டும், நீயும் உள்ள வாக்கா என அழைத்தாள். சிறிது யோசனைக்குப் பிறகு ம் சரி என்று, வண்டியை பூட்டிவிட்டு, தன் அம்மா கொடுத்த டப்பாவை எடுத்துக் கொண்டு இருவரும் உள்ளே சென்றனர்.
வாசல் திண்ணையில் அமர்ந்திருந்த பொன்னம்மாள் இவர்களைப் பார்த்துவிட்டு, அடடே தங்கங்களா! வாங்க வாங்க, என சந்தோஷமாக அழைத்தார். அம்மாச்சி நியாமகமே இல்லைல இந்தப் பக்கம் வந்து ஒரு வாரத்துக்கு மேல ஆகுது என கோபித்துக் கொண்டார்.
Advertisement
அச்சோ எங்க செல்லம்ல கோசிக்காத பொன்னு, எனக்கு படிக்கற வேலை இருந்துது, ஆமா அக்கா எப்டியும் வந்துடுமே அவளுமா வரல, ஏக்கா நீயுமா வரல அம்மாச்சி கேட்குதுபாரு எனத் திரும்பி பவித்ராவைப் பார்த்தாள், ஆனால் அவள் கவனமோ அங்கு வேல் படம் போட்டு நிறுத்தி வைக்கப்படிருந்த புல்லட்டின் மீதே நிலைத்திருந்தது.
எங்கோ பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவை அழைத்தாள் மது, அக்கா என்னாச்சு காலையில இருந்து ஏதோ யோசனையிலேயே இருக்க என்றாள். அது…… ஸ்டுடெண்சுக்கு என்ன அசைன்மெண்ட் கொடுக்கறதுனு திங்க் பண்ணிட்டு இருந்தேன் என்றாள்,
சரியா போச்சு போ கொடுக்கிற அசைன்மெண்டை எப்படி முடிக்கிறதுனு எங்களுக்கு இருக்கிற கவலையை விட உங்க கவலை பெருங் கவலையா இருக்கும் போலயே எனக் கூறிக் கொண்டே, பொன்னாத்தாவிடம், ஆமா அம்மாச்சி அத்தை, மாமா, அண்ணி, குமார் அத்தானெல்லாம் எங்க, வீடே அமைதியா இருக்குது என்றாள் மது,
Advertisement
உங்க மாமே தோட்டத்துக்கு போயிட்டு அப்டியே பிரெசிடெண்ட் ஆபிசுக்கு உங்க அப்பாவ பாக்கப் போறேனு சொல்லிட்டு போனான், உங்கத்த சமையகட்டுல கால சாப்பாடு தயார் செஞ்சிகிட்டு இருக்காப்ல, உங்க அண்ணி ரூமுக்குள்ள படுத்துகிட்டு இருக்கா என்றார். உங்க அத்தான் காலசுக்கு கிளம்பிட்டு இருக்காப்ல என வீட்டின் அன்றைய நிகழ்வுகளை பட்டியலிட்டுக் கொண்டிருந்தார்.
Advertisement
சரி அம்மாச்சி நான் போயி சுபா அண்னி பாத்துட்டு வரேன் என அவர்களின் அறை நோக்கிச் சென்றாள் பவித்ரா, எனக்கு ரொம்ப பசிக்குது நான் அத்தை செஞ்ச டிபன ஒரு புடி புடிக்கிறேன் என்று கிச்சனை நோக்கிச் சென்றாள் மது.
பவித்ரா சென்று மாடிப்படிக்கு அருகிலுள்ள அறையைத் தட்டினாள். கதவைத் திறந்தது குமார் என்கிற நந்தகுமார். துரைப்பாண்டி, சுகுணா தம்பதியரின் சீமந்த புத்திரன் தான் நந்தகுமார். நந்தகுமார் பொறியியலில் தனது முதுகலைப் பட்டத்தை முடித்துவிட்டு மதுமித்ரா படிக்கும் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணிபுரிகிறான்.
இவனது மனைவிதான் சுபா, சுபா தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிகிறாள்.. தஞ்சாவூரில் உள்ள ஒரு புகழ் பெற்ற தனியார் பள்ளியில் தான் நந்தகுமார் படித்தது.
Advertisement
நந்தகுமார் மட்டுமல்லாது அவ்வூரில் உள்ள பல பெரிய வீட்டுப் பிள்ளைகளும் சரி, தாம் தான் படிக்கவில்லை, தமது குழந்தைகளையாவது ஆங்கில வழியில் படிக்கவைப்போம் என்று நினைக்கும் பெற்றோரின் குழந்தைகளும் படிக்கும் கொஞ்சம் தரம் உயர்ந்த பள்ளி.
அத்தகைய பள்ளியில் தான் நந்தகுமார் முதல் மதுமித்ரா வரை படித்தனர் தற்போது ரூபனும் அப்பள்ளியில் தான் படிக்கிறான். அப்பள்ளியில் நந்தகுமார் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சுபா, பவித்ராவின் மூலம் அறிமுகமானாள்.
அப்போது பவித்ரா ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். இருவரும் டியூசன் நண்பர்கள். பவித்ராவையும், மதுவையும் டியூசனிலிருந்து அழைத்து வரும் பொறுப்பு நந்தகுமாருடையது.
அவர்களை அழைத்து வரும்போது பழக்கமானவள் தான் சுபா, அவளுடன் சாதாரணமாக ஏற்பட்ட நட்பானது சில வருடங்களில் காதலாக மாறியது. பின் பொறியியலில் முனவர் பட்டம் (Phd) பெற்று தற்போது வேலை பார்க்கும் கல்லூரியில் பணியில் அமர்ந்தான். வீட்டில் திருமணத்திற்குப் பெண் பார்க்கும்போது தனது காதலை வீட்டில் சொல்லாமல் சிலபல தில்லாங்கடி வேலைகளைச் செய்து சுபாவுடன் தனது திருமணத்தை முடித்துக் கொண்டான்.
(இவனும், சுபாவும் லவ் பண்றது நம்ம பவித்ராவுக்குத் தெரியும், லெட்டர் விடு தூது பவித்ரா மூலமாதான் நடக்கும்.) தனது தோழிக்கு வரன் பார்க்கிறார்கள், மிகவும் நல்ல பெண், நம்ம நந்து அத்தானுக்கு பார்க்கலாமா என்று தனது அப்பாவிடம் பவித்ராவை பேச வைத்தான்.
யார் என விசாரித்தனர் துரையும் சுந்தரமும். அனைத்து விதத்திலும் பொருத்தமான வரனாகப்பட காதல் திருமணமாக இல்லாமல் பெரியவர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணமாக ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் நடந்தது. தற்போது சுபா இரண்டு மாத கர்ப்பிணி.
மசக்கையின் காரணமாக ஓய்வில் படுத்துக் கொண்டிருந்தாள். கதவைத் தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தான் நந்தகுமார். பவித்ராவை பார்த்தவுடன், ஹாய் பவிக்குட்டி காலேஜுக்குப் போகலையா எனக் கேட்டான் அம்மா, அண்ணிக்கு கருப்பட்டி பனியாரம் செஞ்சு கொடுத்தாங்க வேலைக்கு போற வழியில அண்ணிய பார்த்துட்டு கொடுத்துடு போலாம்னு நானும் மதுவும் தான் வந்தோம் என்றாள்,
ஓ ரெண்டு வானரமும் சேர்ந்து தான் வந்தீங்களா, ஆமா அவ எங்க. வந்தவுடனே அடுப்பங்கறைக்குள்ள நுழஞ்சிருக்குமே எனக் கூறி சிரித்தான். இரு அவ வந்தவுடன, நீ பேசினத போட்டுக் கொடுக்கறேன். உன்னோட மண்ட இன்னைக்கு காலி என பதில் பேசிக் கொண்டே, படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த சுபாவிடம் சென்று அவளுடைய தலையைத் தடவிக் கொடுத்தாள்.
அந்த ஸ்பரிசத்தில் கண்விழித்தாள். அண்ணி என்னாச்சு ரொம்ப டையர்டா இருக்கா எனக் கேட்டாள். காலையில ஆசையா இருந்துதேனு அத்தை இவருக்குக் கொடுத்த காபிய சாப்பிட்டேனா, வாமிட் செஞ்சுட்டேன், அதோட மயக்கமா வருது என்றாள்.
நான் அத்தைக்கிட்ட கேட்டு லெமன் ஜூஸ் வாங்கிட்டு வரேன் குடிச்சா கொஞ்சம் பெட்டரா இருக்கும் என எழப்போனாள். அம்மா அப்பவே கொடுத்துட்டு போயிட்டாங்க, அத குடிக்கத்தான் எழுப்பிட்டு இருந்தேன், நீ வந்து கதவ தட்டின என்றான் குமார்.
டேபிள்மேல் இருந்த ஜூஸை எடுத்து சுபாவிடம் குடிப்பதற்குக் கொடுத்தாள் பவித்ரா. கொஞ்சமாக குடித்துவிட்டுப் போதுமென்றாள். வெறும் வயிறா இருந்தா இப்படிதான் இருக்கும், இன்னும் கொஞ்சம் குடிங்க எனக் கொடுத்தாள். இன்னும் கொஞ்ச நாளைக்கு காலையில காபி டீனு எதும் குடிக்காதிங்க, லெமன் ஜூஸ், மாதுளைச் சாறுனு குடிங்க என அறிவுரைக் கூறினாள்.
எவ்வளவு விஷயம் தெரியுது பாரு நம்ம பவிக்குட்டிக்கு எனக் கிண்டல் செய்தான் நந்தா, அதைக் கேட்டு மெலிதாக சிரித்தாள் சுபா. சும்மாருங்கத்தான். என் ஃப்ரெண்டு வித்யா இருக்காள, அவளும் கன்சிவ்வா இருக்காளாம், அவ டாக்டர்கிட்ட செக்கப் போனப்ப இதெல்லாம் சொன்னாங்கனு சொன்னா, அதனால தெரிஞ்சது.
ஆமா நீங்க செக்கப் போனப்ப டாக்டர் இதெல்லாம் சொல்லலையா எனக் கேட்டாள். டாக்டரும் சொன்னாங்க அத்தயும், சொன்னாங்கடா, ஆனா எனக்குத்தான் இன்னைக்கு காபி குடிக்கனும்போல் இருந்துச்சா, அதான் இவருக்குக் கொடுத்த காபிய குடிச்சேன்,……. வச்சி செய்யுது, முடியல, இனிமே குழந்த பிறக்கற வரைக்கும் காபியே தொடமாட்டேண்டா சாமி எனக் கூறினாள். சரி வாங்க எதாவது சாப்புடுங்க எனக் கூறி வெளியே அழைத்தாள் பவி.
நீங்க போங்க நான் ரெடியாகிட்டு வரேன் என இருவரையும் அனுப்பி வைத்தான். இருவரும் வெளியே வருவதைப் பார்த்த பொன்னாத்தாள் ஏங்கண்ணு இப்ப எப்படி இருக்குது எனக் கேட்டார், இப்ப பரவால அப்பத்தா என்றாள்.
உங்கத்தை இட்டிலி அவிச்சு வெச்சிருக்காப்ல,, நா காரச்சட்டினிய அம்மில அரைச்சி வெச்சிட்டு வந்துருக்கேன், கொஞ்சம் நல்லெண்ணெ விட்டு சூடா இருக்கும் போதே சாப்பிடு போ எனக் கூறி அனுப்பி வைத்தார், அங்கே சமையலறையின் மேடை மேல் அமர்ந்து தனது அத்தை ஊற்றித் தரும் தோசையை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் மதுமித்ரா.
எப்ப கிச்சனுக்கு வந்த, இன்னும் உன் தோசைக்கடை முடியலையா எனக் கேட்டுக் கொண்டே சமையலறைக்குள் வந்தனர் சுபாவும், பவியும். வாடா பவி,
சுபா எப்படி இருக்கும்மா இப்போ எனக் கேட்டார் சுகுணா. இப்போ பரவால அத்த என்றாள். நீ சுபாட்ட பேசிட்டு இருக்கேனு மது சொன்னா, உனக்கும் டைம் ஆகிருக்குமே தோசை ஊத்தட்டுமா எனக் கேட்டார்.
ம்.. ஊத்துங்கத்தை என்றாள். தோசை மாவைக் கல்லில் ஊற்றிவிட்டு ஒரு தட்டில் இட்லியையும், காரச் சட்னியையும் வைத்து சுபாவிடம் சூடா இருக்கும்போதே சாப்பிடு எனக் கொடுத்தார், மற்றொரு தட்டில் தோசையை வைத்து பவித்ராவிடம் நீட்டினார். தட்டை வாங்கி கொண்டே பவித்ரா, மதுவிடம் கைய கழுவிட்டு பனியார டப்பாவை எடுத்து அண்ணிட்ட கொடு என்றாள்.
நான் அத வந்தவுடனே அத்தைகிட்ட கொடுத்துட்டேன், அத்த அத ஹாட் பாக்ஸ்ல போட்டு வச்சிட்டாங்க என்று கூறிக் கொண்டே கை கழுவச் சென்றாள் பனியாரத்தை சுவைத்த சுபா ரொம்ப நல்லாருக்கு எனக் கூறி மேலும் இரண்டு சாப்பிட்டாள். பின் நந்தகுமாரும் சாப்பிட்டவுடன் நால்வரும் வெளியே வந்தனர்.
சுபா இன்று விடுப்பு எடுத்துக்கொண்டதால், நீ ரெஸ்ட் எடு நான் கிளம்பறேன் என்றாள் அவளும் சரி எனக் கூறி அறைக்குச் சென்றாள். ரொம்ப லேட்டாயிடுச்சு, உன்ன காலேஜில விட்டுட்டு போனா பவித்ராக்கு லேட் ஆகிடும், நீ எங்கூட வந்துடு என்றான்.
மது தன் அக்காவைப் பார்த்தாள், அவளும் சரி நீ நந்து அத்தானோடையே கிளம்பு என்றாள். என்ன மேடம், அக்கா பர்மிஷன் கொடுத்தாச்சு கிளம்பலாமா எனக் கேட்டான் நந்து, பின்ன நா….பாட்டுக்கு கிளம்பி உங்க கூட வந்துட்டா, ஈவ்னிங் யாரு அவகிட்ட வந்து மொத்து வாங்கறது எனப் பயந்தது போல் கூறினாள். அக்கா மேல ரொம்ப பயமோ,
இல்லையா பின்ன, ரெண்டு அடி கூட வாங்கிடலாம், ஆனா அரை மணி நேரம் உக்கார வச்சி அட்வைஸ் செஞ்சி காதுல ரத்தம் வர வெச்சிடுவா என்று கூறிச் சிரித்தாள் மதுமித்ரா, அடிப்பாவி என அடிக்க வந்தாள். பவித்ரா. அய்யோ அக்கா சும்மா சும்மா எனக் கூறி சாரி கேட்பது போல் காதைப் பிடித்தாள்.
நந்துவுக்கா தெரியாது மதுவும் சரி ரூபனும் சரி அக்காவைக் கேட்காமல் எதுவும் செய்ய மாட்டார்கள். அவ்வளவு அன்பும், மரியாதையும் வைத்துள்ளார்கள் தனது அக்காவின் மீது. அவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பவித்ராவின் மீது தனி பிரியம் உண்டு.
நீண்ட வருடங்கள் கழித்து அவர்கள் குடும்பத்திற்கு வந்த முதல் பெண் குழந்தை. மகாலஷ்மி பிறந்து விட்டாள் என அனைவுரும் கொண்டாடினர். சுந்தரம், விஜயா தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து நான்கு வருடங்கள் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை.
பல வேண்டுதலுக்குப் பின் பிறந்தவள் தான் பவித்ரா, அதன் பின் நான்கு ஆண்டுகள் கழித்துப் பிறந்தவள் மது, அவளுக்கு இரு வருடங்கள் கழித்துப் பிறந்தவன் தான் ரூபன்.
ரூபன் வயிற்றில் உண்டான போது, சரியாக அந்நேரம் பவித்ரா பூப்பெய்து விட்டாள். சங்கடமான விஜயா, நம்ம பொண்ணே பெரியமனிஷி ஆய்ட்டா, இப்போ போயி இன்னொரு குழந்தையானு யாராவது கேட்பாங்களோனு இருக்கு என்றாள். அதுக்கு எனக் கோபமாகக் கேட்டார் சுந்தரம்.
அது…. அதுவந்து இந்த குழந்தைய எனச் சொல்லும் போதோ வேணா, சொல்லாத….., குழந்தை இல்லைனு எத்தனை கோயில, எத்தனை. பூஜை பரிகாரம் செஞ்சிருப்போம்.. ஆனா இப்போ இந்த குழந்தை உனக்கு சுமையா போயிடுச்சா, யார் என்ன பேசினாலும் என்னோட குழந்தை நான் எப்ப வேணும்னாலும் பெத்துக்குவேன் உங்களுக்கு என்னனு நீ கேட்க வேண்டாமா எனக் கோபம் கொண்டார். அதன் பிறகே விஜயா தெளிந்தார். குழந்தையின் வரவை மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார். சிலர் ஆசி வழங்கினர், பலர் ஏளனம் செய்தனர், அதனை தனது கணவரின் அறிவுரைப்படி புறந்தள்ளினார்.
நந்தகுமார் வண்டியை ஸ்டார்ட் செய்து புறப்படத் தயாரானான். அப்போது வேகமாக வெளியே வந்தார் சுகுணா, தம்பி, மதிய சாப்பாட்ட சின்னவங்கிட்ட கொடுத்து வுடறேன், நீ பாட்டுக்கு கேண்டினுல வாங்கிடாத என்றார்..
சரிம்மா, ஒரு 12 மணி போல கொடுத்து விட்டுடுங்க என்று கூறிக்கொண்டே மதுவை அழைத்துக் கொண்டு புறப்பட்டான் நந்தகுமார். நீயும் பார்த்து போயிட்டுவாக்கண்ணு என பவித்ராவிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்றார் சுகுணா.
சின்னவன் எனக் கேட்டதிலிருந்து ஆணி அடித்தது போல் அசையாமல் நின்றவள், வெளியே கேட்ட சத்தத்தில் தனது தலையை உலுக்கிக் கொண்டு கிளம்புவதற்கு வண்டியின் அருகே சென்றாள்.
என்ன கனவுல இருந்து வெளிய வந்தாச்சா என்ற சத்தத்தில், திடுக்கிடலுடன் குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தாள். வெளியே உள்ள மாடிச்சுவரில் கையைக் கட்டிக்கொண்டு ஒரு காலை சுவற்றின் பின்பக்கம் வைத்து சாய்ந்து நின்ற வாக்கில் புன்னகை செய்தான் அறிவிச்செல்வன். (அப்பாடியோ ஒரு வழியா ஹீரோ சார புடிச்சி கூட்டிட்டு வந்தாச்சு)
error: Content is protected !!