Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆதவனின் அனிச்சமலரே

ஆதவனின் அனிச்சமலரே 5(1)

குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர் துளி

ஊதலான மார்கழி
நீளமான ராத்திரி

நீ வந்து ஆதரி..

மாலை நெருங்கும் வேளையில் மனதை வருடும் விதமாய் பண்பலையில் பாடல் ஒலித்து கொண்டிருக்க, பாடலுடன் சேர்ந்து முணுமுணுப்பாக பாடி கொண்டே உறை ஊற்றியது போக மிச்சமிருந்த தயிர் பாலாடை அதனுடன் சிறிது தக்காளி சாறு கலந்த கலவையை முகத்தில் தடவி கொண்டிருந்தாள் மீரா.



Advertisement

வெளியே மூர்த்தியின் பேச்சு குரல் கேட்டு மின்னலாய் தோன்றிய சிந்தனையில் வேகமாக சென்று கதவின் பின்னால் மறைந்து கொண்டாள்.

“இந்த முறை அப்பாவை எப்டியும் பயமுறுத்திறனும்” என்று உற்சாகமாய் சொல்லி கொண்டவள் மூர்த்தியின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்க,

காலணியை கழட்டும் ஓசை கேட்டு “மீரா ரெடி ஒன் டூ த்ரி” என்று ஓசை வராமல் சொல்லி கொண்டே மறைவில் இருந்து வெளிப்பட்டவள் “பே..” என்று கத்தினாள்.

Advertisement

உள்ளே நுழைந்தவன் அவளின் கத்தலில் பயந்து போய் ஒரு அடி பின்னால் நகன்று சென்று கோப பார்வையை வீச, எதிரில் நின்றவனை பார்த்து விக்கித்து நின்றாள் மீரா. சற்றும் எதிர்பார்க்கவில்லை அவன் வரவை ‘அய்யோ இவரா?’ என்று எண்ணியவளுக்கு கால்கள் பசையிட்டு ஒட்டியது போல நகர மறுத்து அழிச்சாட்டியம் செய்தது.

Advertisement

பேச வாய் திறக்க முயன்றவளுக்கு காற்று மட்டுமே வெளிவர, ‘அய்யோ இதுவேறயா? இவர பாத்தாலே ஆட்டோமெட்டிக்கா ஸ்டக்காகிடுறேன். பாடியில எந்த ஸ்பார்ட்டும் வேலை செய்ய மாட்டேங்கிது. காலையிலேயே டிவியில ஜோசியகாரன் சொன்னான் எதிர்பாராத விருந்தாளி வருவாங்கன்னு. கொஞ்சம் அலட்சியமா இருந்துட்டேனே’ என்று மனதோடு பாவமாக பேசி கொண்டவள், பொறியில் மாட்டிக்கொண்ட எலியை போல தப்பிக்கும் வழி தெரியாது திருதிருவென விழித்தாள்.

வியப்பும் பயமும் கலந்த பார்வையை மனதில் படம் பிடித்து கொண்டவன். முகத்தில் பூசியிருந்த கலவையும் அவளின் திருட்டு முழியும் அவனுள் சிரிப்பை வரவழைக்க, சிரிப்பை அதக்கி நொடியில் முகத்தில் கடுமையின் தோற்றத்தை கொண்டு வந்து முறைப்பை காட்டினான் விஷ்வா.

அவன் முறைப்பில் சர்வமும் அடங்கி போக, உதறல் எடுக்க தொடங்கிய கால்களை தரையில் அழுத்தி அடக்கியவள் அதற்குமேலும் அங்கேயே நின்று அவன் கோபத்தை அதிகபடுத்தி வாங்கி கட்டிக்கொள்ளாமல் கால்களுக்கு வேகம் கொடுத்து சமையல் அறைக்குள் சென்று மறைந்து கொண்டாள்.

Advertisement

விஷ்வாவை முன்னால் போக சொல்லிவிட்டு அமுதாவிடம் பேசிவிட்டு  வந்த மூர்த்தி உள்ளே செல்லாமல் வாசலில் நின்று கொண்டிருப்பவனை கண்டு”என்ன விஷ்வா இங்கயே நிக்கிற உள்ள போய் உக்கார வேண்டியது தானே?”.

“இல்ல மாமா வீட்டுல யாருமில்ல அதான்..” என்றவனின் பார்வை சமையல் அறை வாசலில் நிலைத்து நின்றது.

“பாப்பா இருப்பாளே ப்பா” என்று அவனை உள்ளே அழைத்து வந்து அமர சொன்னவர் “மீராம்மா” என்று குரல் கொடுக்க,

“ப்பா இங்க இருக்கேன்” என்று பதில் குரல் கொடுத்தாள்.

சமையல் அறையில் இருந்து வந்த குரல் கேட்டு அங்கே விரைந்தவர் “மீராம்மா தம்பிக்கு தண்ணி கொண்டு வாடா அப்டியே பால் இருந்தா காஃபி போட்டு கொண்டா’ என்று கூறிவிட்டு சென்றுவிட,

“நானா!” என்று அதிர்ச்சி விழைய நின்றவள் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிட்டு தண்ணீர் எடுத்து சென்று டேபிள் மீது வைத்துவிட்டு விறுவிறுவென சென்றுவிட்டாள்.

அவனை கண்டாலே மீராவிடத்தில் அன்னிச்சையாய் ஒரு வித பயம் கலந்த உணர்வு தொற்றி கொள்ளும்.பார்வை மூர்த்தியிடம் இருந்தாலும் கவனமெல்லாம் அவளிடமே.

பயத்தில் விரியும் இமைகள் திகிலடையும் பார்வை அலைபாயும் கருவிழிகள் நடுங்கும் இதழ்கள் நடுக்கத்தை கட்டுப்படுத்த உதட்டை மடிக்கும் பாவனை என அவனுக்குள் சுவாரஸ்யத்தை உண்டு பண்ண,தண்ணீரை குடித்துவிட்டு எழுந்து கொண்டான் விஷ்வா.

“சரி மாமா நா கிளம்புறேன்”.

“அட இருப்பா காஃபி குடிச்சிட்டு போலாம் வரும் போதே என்ன சொல்லி கூட்டிட்டு வந்தேன் மறந்து போச்சா. மீரா அருமையா காஃபி போடுவா நீ குடிச்சதில்லையே” என்று பெருமை அடித்தவர்,

“அம்மா மீரா சீக்கிரம் காஃபி போட்டு கொண்டா டா” என்று குரல் கொடுக்க,

“இதோ வறேன் ப்பா” என்றவள் “அவரு தான் போறேன்னு சொல்றாரே விட வேண்டியது தானே எதுக்கு வம்படிய பிடிச்சு உக்கார வைக்கணும்” என்று புலம்பி கொண்டே பாலை காய்ச்ச தொடங்கினாள் மீரா.

பாலை நன்றாக கொதிக்கவிட்டு, டிக்காஷன் நாட்டு சர்க்கரை கலந்த குளம்பியை சிறிது வாயில் ஊற்றி சுவை பார்த்தவள் ‘ஃபர்பெக்ட்’ என்று உள்ளூர மெச்சி கொண்டு,

‘கீழ போட்டுற கூடாது’ என்று மனதில் சொல்லி கொண்டே காஃபி டிரேயை எடுத்து வர, அவனை கண்டதும் கால்கள் பின்னலிட தொடங்கியது. பயத்தை காட்டாது அவன் முன் நீட்டி “எடுத்துக்கோங்க” என்றாள் மெல்லிய குரலில்.

டம்ளரை எடுத்து கொண்டவன் “ஏன் மாமா உள்ள வரும் போது யாரோ முகத்துல பேய் மாதிரி எதையோ பூசி இருந்தாங்க அது யாரு?” என்று மீராவை பார்த்து கொண்டே கேட்க,

வாய்விட்டு சிரித்தவர் “மீராவ கடைசியா ஸ்கூல் படிக்கும் போது பாத்தது அதுக்கப்பறம் இப்போ தானே பாக்குற முகம் மறந்து போயிருக்கும். அதுவுமில்லாமா முகத்துல எதையோ பூசிட்டு இருந்துருப்பா சட்டுன்னு அடையாளம் தெரிஞ்சிருக்காது இவ தான் அவ அவ தான் இவ”என்று தெளிவாய் விளக்கிய மூர்த்தி காஃபியை எடுத்து கொண்டதும், ஆமை ஓட்டுக்குள் சென்று மறைந்து கொள்வது போல சமையலறைகுள் மறைந்து கொண்டவள் அடக்கி வைத்த மூச்சை ஆசுவாசப்படுத்தினாள்.

பேசி கொண்டே மிடறு மிடறாக பருக்கியவனின் புருவங்கள் மெச்சுதலாய் மேலெழும்பின “நல்லா இருக்கு மாமா இன்னோரு முறை கிடைக்குமா?” என்று  கேட்டவன் காலியான டம்ளரை டேபிளில் வைக்க,

சிறு சிரிப்புடன் பார்த்தவர் “இதோ கொண்டு வர சொல்றேன்” என்றுவிட்டு “மீராம்மா” என்று அழைக்கும் முன்பே டம்ளருடன் வெளிப்பட்டாள் அவள்.

“இந்தாங்க” என்று நீட்டியவள் நிமிர்ந்து பாராது காலி டம்பளரை எடுத்து கொண்டு சென்று விட,

“நீ குடிச்சிட்டு இரு விஷ்வா இதோ வந்துடுறேன்” என்று மூர்த்தி எழுந்து அறைக்குள் சென்றுவிட்டார்.

“அய்யோ எப்ப எந்திரிச்சு போவாருன்னு தெரியலை. இந்த அப்பா முன்னாடியே சொல்ல வேண்டியது தானே? இவருன்னு தெரியாம இப்டி பண்ணிட்டேனே.கொஞ்சம் கூட உனக்கு அறிவே இல்ல மீரா யாரு வர்றாங்கன்னு கூட தெரியாம, கடவுளே பயமுறுத்துனதுக்கு என்ன பண்ண போறாரோ தெரியலையே” என்று தனக்கு தானே அவஸ்தையாக பேசி புலம்பி கொண்டிருக்க,

“காஃபி நல்லா இருந்தது” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பி பார்க்க, விஷ்வா நின்று கொண்டிருந்தான்.

சுவரோடு சுவராக ஒட்டி கொண்டவளுக்கு அவனை பார்த்ததும் உள்ளங்கையில் வியர்க்க தொடங்கியது.

“எவ்ளோ தைரியம் இருந்தா என்னையவே பயமுறுத்துவ பயம் விட்டு போச்சா” என்று முறைப்பு காட்டி உருமியவனை கண்டு கணநொடியில் கண்களில் நீர் அரும்பிட,

“சாரி நா வேணும்னு பண்ணலை நீங்கன்னு தெரியாது அப்பான்னு நினைச்சு” என்று தலை குனிந்து விசும்ப தொடங்கினாள் மீரா.

அவளிடத்தில் அமைதியான பார்வை செலுத்தியவன் குறுஞ்சிரிப்புடன் “தெரிஞ்சிருந்தா ரூமை விட்டு வெளிய வந்துருக்க மாட்ட அப்டி தானே ரோஸ்பட்?” என்றான் தணிவான குரலில்.

முதல் முறை அவனிடமிருந்து வந்த தணிவான வார்த்தையில் கண்களை கசக்கியவள் நிமிர்ந்து பார்த்தாள்.அவனின் வேறுபாடுகள் நிறைந்த பார்வையும் இதழில் உறைந்த அர்த்தம் விளங்காத புன்னகையும் அவளை வியப்பிற்குள்ளாக்கியது.

“இந்த வரவேற்பு கூட நல்லா தான் இருக்கு. அடுத்த முறை வரும் போதும் இதே வரவேற்பு கிடைச்சா நல்லா இருக்கும் விஷ்வாவும் ஹாப்பியா ஃபீல் பண்ணுவான்” என்று கடைக்கண் பார்வையில் உரைத்திட்டவன் காலி டம்ளரை திண்டில் வைத்து விட்டு சென்றுவிட,

வியப்பில் இருந்து விடுபாடாது மலங்க மலங்க விழித்தபடி நின்றிருந்தாள் பெண்ணவள்.

இம்மெனும் முன் கோபம் கொள்பவன் எதுவும் சொல்லாமல் செல்வது தற்சமயம் சற்று பயத்தை தணித்திருந்தாலும் முழுவதும் மறையவில்லை. பூங்கோதை மகனை பற்றி சொன்னது நினைவில் வர,

‘ஒருவேளை அத்தை சொன்னது உண்மை தானோ?’என்றெண்ணியவள்’அதான் நாளைக்கு வீட்டுக்கு போக போறாயே அங்க போய் பாத்துக்கோ சொன்னது உண்மையா இல்லையான்னு?’ என்ற எண்ணம் எழும்ப, அதை ஒதுக்கிவிட்டு தான் தயாரித்த காஃபியை மீண்டும் சூடேற்றி பருக தொடங்கினாள்.

“என்ன விஷ்வா கிளம்பலாமா?”என்று அறையிலிருந்து மூர்த்தி வெளிப்பட,

“ம் கிளம்பலாம் மாமா” என்றவனின் காலடி சத்தம் தேய்ந்து மறையும் வரை மீரா வெளியே வரவில்லை, இடையில் பண்பலை நின்று போனதையும் கவனத்தில் கொள்ளவில்லை.

மழைக்காலம் என்பதால் பொழுது சாயும் முன்பே இருட்ட தொடங்கியிருந்தது வானம். அதுவும் மலைபகுதி என்பதால் எப்போது மழை வரும் என்று கணக்கீட முடியாது. மழை பொழிவதை மண்வாசனை உணர்த்த, சற்று பலமாக வீச தொடங்கியது காற்று.

மழை வலுக்கும் முன்பே பவித்ராவை வீட்டில் கொண்டு சேர்ப்பித்திட வேண்டும் என்று இருசக்கர வாகனத்தின் வேகத்தை அதிகப்படுத்தியிருந்தான் பாலமுரளிதரன்.

எப்போதும் எதையாவது வளவளத்து கொண்டு வருபவன் இன்று அமைதியாக வருவது பவித்ராவிற்கு நெருடலை ஏற்படுத்த,

“என்ன பாலா எதுவுமே பேசாம வர இது உன்னோட நேச்சர் இல்லயே எப்பவும் எதையாவது உளறிட்டே வருவ இன்னைக்கு என்ன பேரமைதி?” என்று கேலியாக கேட்க,

“சும்மா தான் பவி பேச தோணலை மனசு ஒரு மாதிரி இருக்கு அதான்” என்றான் பாலமுரளிதரன்.

“ம் என்னவோ ப்பா நீ அமைதியா வர்றது எனக்கு ஒரு மாதிரி மனசு திக்கு திக்குன்னு என்னவோ ஏதோன்னு அடிச்சுக்கிது. அதுவும் நா உன்கிட்ட பேசுன பிறகு உன்னோட முகமே சரியில்ல. என்னாச்சு கல்யாண பேச்சை எடுத்ததும் யாரோ மாதிரி பேசிட்டு போயிட்ட, ஏன் நா கல்யாணம் பண்ணிக்க கூடாதா இல்ல உனக்கு அதுல விருப்பம் இல்லையா?”.

“என்ன பவி இப்டி கேட்டுட்ட அந்த நேரத்துல சம் மூட்டவுட் அதனால சரியா பதில் சொல்ல தோணலை நீ சந்தோஷமா இருந்தா அதுல எனக்கென்ன வருத்தம்?. நீ தாரளமா யாரை வேணாலும் கல்யாணம் பண்ணிக்கோம்மா” என்று கூறியவனின் முகத்தை பார்த்திருந்தால் நிச்சயம் உணர்ந்திருப்பாள் தன் பால் அவன் கொண்ட காதலின் அளவை.

பாலாவின் விழிகளில் அணைகட்டி நின்ற கண்ணீர் எதிர்காற்றில் சிதற. அவளறியாமல் கண்ணீரை துடைத்து கொண்டான்.

 

suganya mahesh

House wife

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!