Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆனந்த பூந்தோரணம்

Aanandha Poonthoranam 55 1

   ஆனந்தம் – 55

இருபது நாட்கள் கண் மூடித் திறப்பதற்குள் நகர்ந்திருந்தது.. என்னவோ இந்த இருபது நாட்களும் வேகமாய் செல்வது போல் லட்சுமிக்கும், நத்தை வேகத்தில் செல்வது போல் ஈசனுக்கும் தோன்றியது தான் அதிசயம்..

ரேவதியின் திருமணம் முடிந்து, தேனிலவும் முடிந்து ரேவதி டெல்லி சென்றுவிட்டாள்.. பாலாவும் அவன் நண்பர்களோடு குறும்படம் எடுக்க வந்தவன், சென்னை கிளம்பிட, அடுத்து லட்சுமியின் பரிட்சைகள் தொடங்கியது..

எப்போதடா தன் மனதில் இருப்பதை எல்லாம் லட்சுமியிடம் கொட்டுவோம் என்று நேரம் பார்த்துக்கொண்டு இருந்த ஈசனுக்கோ, காலம் அவன் தலையில் நறுக்கென்று கொட்டித்தான் இப்படி மெல்ல நகர்ந்தது..



Advertisement

இதில் அவனுக்கும் வேலைகள் சரியாய் இருக்கவே,.. எல்லாம் தாண்டி லட்சுமியோடு பேசவேண்டும் என்று வந்தாலோ அவளோ புஸ்தகமும் கையுமாய் காட்சி கொடுப்பாள்.

‘இதென்னடா உனக்கு வந்த சோதனை..’ என்று அவனுக்கு அவனே நொந்துகொள்ள தான் முடிந்தது..

மனதிற்குள் ஒருமாதிரி இருந்தது.. எல்லாமே சரியாகிவிடும் என்று நினைக்க, இங்கே என்னவோ மனம்விட்டு பேசக்கூட சரியாய் நேரம் அமையாமல் போக, எப்போதடா லட்சுமிக்கு பரிட்சை முடியும் என்று காத்திருந்தான்..

Advertisement

ஒவ்வொரு முறையும் லட்சுமியிடம் தன் மனதிலிருப்பதை சொல்லவேண்டும் என்று நெருங்க எண்ணம் கொள்ளும் போதெல்லாம் வரும் தடைகள் நிஜமாகவே அவன் பொறுமையை சோதிக்கத்தான் செய்தது..

Advertisement

ஆனாலே அதே சமயம் ‘இப்படித்தான அவளுக்கும் இருந்திருக்கும்… கல்யாணமாகி இத்தனை நாள் கழிச்சு எனக்கு மனசுல தோணுனதை சொல்ல இவ்வளோ அவசரம்.. ஆனா முன்னாடியிருந்தே லட்சுமி எனக்காக காத்திருக்கா.. அப்போ அவளுக்கு எப்படியிருக்கும்…’ என்றும் தோன்ற,

அவள் காத்திருப்பு… அவள் காதல்… அவள் பொறுமை… அவள் கண்ணீர்.. இதற்கெல்லாம் சேர்த்து வைத்து இன்னும் இன்னும் லட்சுமியின் மீது ஈசனுக்கு காதல் பெருகியது தான் உண்மை..  ஒருவழியாய்  அவன் எதிர்பார்த்த நாளும் வர, அவனே லட்சுமியை அழைக்கவென்று சென்றிருந்தான்..

லட்சுமியோ ஸ்நேகாவிடம் பேசிவிட்டு பஸ் ஏற வெளியே வர,  அங்கே ஈசனோ அவனது பொலீரோ மீது சாய்ந்து நின்றிருக்க, அவனை எதிர்பாராதவளுக்கு, ஈசனைக் கண்டதும் கண்களும் முகம் மலர்ந்து, மனதோ இனிய அதிர்ச்சியை உணர்ந்தது..

Advertisement

“ஈஸ் மாமா..” என்றபடி அவனருகே சென்றவள்,  “வர்றேன்னு சொல்லவேயில்ல..” என்றவளுக்கு இன்னும் புன்னகையில் முகம் மலர்ந்திருந்தது..

“ஏன் சொல்லிட்டுத் தான் வரணுமா..??” என்றபடி அவளுக்கு கார் கதவை திறந்துவிட, அவளும் ஏறி அமர, காரைக் கிளப்பினான்.

“நான் எதிர்ப்பார்க்கவேயில்ல..” என்று லட்சுமி சொல்ல, மெல்ல சிரித்துக்கொண்டான்..

“என்ன மாமா சிரிப்பு…” என்று பார்த்தவளுக்கு, அப்போது தான் தெரிந்தது, ஆண்டிப்பட்டிக்கு போகும் வழியில் கார் செல்லாமல், மதுரையின் உள் பகுதிக்கு செல்வதை..

“எங்க போறோம்..??” என்று அடுத்த கேள்விக்கு போக, “யம்மா… நீ எனக்குதான் நாயகி.. ஆனா இப்படி கேள்வியின் நாயகியா இருக்காத..” என்று பதில் சொல்லாமல் ஈசன் அவளுக்கு போக்குக் காட்ட,

“யோவ் மாமா..” என்றாள் அவளும் அதட்டலாய்..

அவ்வளவு தான் காரை வேகமாய் சாலையின் ஓரத்தில் நிறுத்தியவன், “என்ன சொன்ன என்ன சொன்ன…” என்று திரும்ப,

‘ஐயோ ஈஸ் மாமா கோவிச்சுக்கிட்டாங்களா…’ என்று லேசாய் பயத்துடன் அவனைக் காண,

ஈசனோ, “என்ன சொன்ன சொல்லு..” என்று கேட்டவன் முகத்திலிருந்து எதையுமே அவளால் கண்டுகொள்ள முடியவில்லை.

‘போச்சு போச்சு… லட்சுமி மறுபடி சொதப்பிட்ட ..’ என்றெண்ணியவள், குழப்பமாய் ஈசனைக் காண, அவளையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்த ஈசனோ, சிரிக்க ஆரம்பித்துவிட்டான்..

“ஷ்…கொஞ்ச நேரத்துல பயந்துட்டேன்..” என்றபடி அவனை நன்றாய் நாலு அடி அடிக்க,

“எல்லாம் நேரம் டி.. யோவ்னு சொல்ற.. அடிக்கிற.. இதெல்லாம் எங்கம்மா பாக்கணும்..” என்றபடி அவள் கைகளை பிடித்து செல்லமாய் முறுக்க,

“ஹா வலிக்குது வலிக்குது.. நீங்க மட்டும் முறுக்குறீங்க…” என்று அதற்கொரு பஞ்சாயத்து ஆரம்பிக்க,

“நமக்கு இப்போ நேரமில்ல… நான் சொல்றத மட்டும் கேட்கணும்..” என, அவளுக்கு எதுவும் புரியவில்லை என்றாலும் தலையை சரியென்று ஆட்டினாள்.

“ஹ்ம்ம் குட்…” என்றவன், காரைக் கிளம்பினான்.

ஆனாலும் வெகு நேரம் லட்சுமியால் தன் மனதில் தோன்றும் கேள்விகளை அமிழ்த்தி வைக்க முடியவில்லை.

“மாமா..” என்று ஆரம்பிக்கும் போதே, ஒரு ஹோட்டலின் முன்  ஈசன் வண்டியை நிறுத்த, அடுத்து எதுவும் கேட்க முடியவில்லை.

“எப்படியும் மதியம் சரியா சாப்பிட்டிருக்க மாட்ட..” என்றபடி உள்ளே நடக்க, ஏற்கானவே பேமிலி ரூம் பூக் செய்திருந்தான் போல, லட்சுமிக்கோ நடப்பது எதுவும் புரியவில்லை.

“ப்ளான் பண்ணித் தான் வந்தீங்களா..” என்றபடி கையைக் கழுவி விட்டு வந்தமர,

“ப்ளான் பண்ணாம எதுவும் பண்ணக் கூடாதுன்னு உனக்கு தெரியாதா..” என்றான்..

“ஹ்ம்ம் என்னவோ நீங்க சரியே இல்ல..” என்றவள், மெனு கார்ட்டை பார்க்க, அவனோ ஹாயாக அமர்ந்திருந்தான்..

“மாமா.. என்ன ஹாயா இருக்கீங்க.. ஆர்டர் பண்ணுங்க..”

“அதெல்லாம் என் பொண்டாட்டி பார்த்துப்பா..” என்றான் கூலாக..

அவனது இந்த பதிலில் வாய் பிளந்தவள், “ஏன் உங்க பொண்டாட்டிக்கு சேர்த்து நீங்களே ஆர்டர் பண்றது…” என்று சொல்லும் போதே பேரர் வந்திட,

“எனக்கும் சேர்த்து நீயே ஆர்டர் பண்ணு..” என்று ஈசன் சொல்லிட, பேரர் முன்னே அவளால் எதுவும் பேச முடியவில்லை..

இருவருக்கும் பிடித்த பொதுவான உணவை லட்சுமி சொல்ல, “ஒரு டென் மினிட்ஸ் ஆகும் மேம்..” என்று பேரர் சொன்னதும்..

“ஹால்ப் அன் ஹவர் ஆனாலும் பரவாயில்லை..” என்று பதில் ஈசனிடம் இருந்து வந்தது..

பெரிய ஹோட்டல்.. பேமிலி ரூம்.. ஏசி ஓடிக்கொண்டிருக்க, ஆட்கள் அத்தனை யாருமில்லாததால் சில்லிப்பு சற்று ஜாஸ்தியாகவே தெரிந்தது.. என்னவோ இப்படி அவளும் அவனும் தனியே அமர்ந்திருப்பது புதிதாய் இருக்க, லட்சுமிக்கோ ஈசனின் பேச்சுக்கள் எல்லாம் மனதில் சில்லென்று ஒரு சாரலை வீச  மௌனமாய் அமர்ந்திருந்தாள்..

“என்ன லஷ்மி அமைதியா இருக்க..??” என்றவன் பார்வை அவளை விட்டு வேறெங்கிலும் நகரவில்லை..

“ஹ்ம்ம்.. ஒண்ணுமில்ல..”

“பொய்..”

“நிஜமா…”

“நம்பிட்டேன்…”

“சந்தோசம்…” என்று இருவரும் ஒவ்வொரு வார்த்தைகளால் பேசிக்கொண்டிருக்க, அதை உணர்ந்த இருவருக்குமே ஒரு நிலையில் சிரிப்பு வந்திட,

“என்ன மாமா திடீர்னு இப்படியொரு சர்ப்ரைஸ்…” என்றாள் லட்சுமி..

“இது சர்ப்ரைஸா…??” என்றான் ஈசன்..

“எனக்கு சர்ப்ரைஸ் தான் மாமா..” என்று லட்சுமி சொல்லும்போதே

‘இப்படியெல்லாம் என்னோடு நீ இருக்கமாட்டாயா என்றுதானே ஏங்கினேன்..’ என்று சொல்வது போல் அவள் கண்கள் பாவனைக் காட்ட,

அவள் கண்களையே பார்த்திருந்த ஈசனோ, “அப்போ அடிக்கடி சர்ப்ரைஸ்க்கு காத்திரு லஷ்மி..” என்று சொல்ல, “இன்னுமா???” என்று கண்களை அகல விரித்தாள்..

“ஹா ஹா இது பிள்ளையார் சுழி…”

“நீங்க மாறிட்டீங்க மாமா…” என்று தலையை ஆட்டியபடி சொல்ல,

“மாத்தினதே நீ தான்..” என்றான் அவனும் அவளைப் போலவே தலையை ஆட்டி..

“நானா???” என்று அதற்கும் கண்களை விரிக்க,

“ஏய் போதும்டி.. சும்மா சும்மா இப்படி கண்ண விரிக்காத.. நீ ஒரு ரியாக்சனும் இல்லாம பார்க்கிறதுக்கே அர்த்தம் புரிய இத்தனை வருஷமாச்சு.. இதுல அடுத்த லிஸ்ட் வேற சேக்காத…” என, லட்சுமிக்கு சிரிப்பு அடக்கவே முடியவில்லை..

அவள் சிரிக்கும் போதே, அவர்கள் ஆர்டர் செய்திருந்த உணவுகள் வந்திட, அடுத்த இருபது நிமிடம் கொஞ்சம் கொஞ்சம் பேச்சும், ருசியான உணவுமாய் பொழுது கழிந்தது.. ஹோட்டலை விட்டு வெளியே வந்ததும், “அடுத்து வீட்டுக்குத் தானே மாமா…” என்று லட்சுமி கேட்க,

“யார் சொன்னா.. நான் உன்ன கடத்திட்டு போக வந்திருக்கேன்..” என்றபடி ஈசன் காரில் ஏற,

“ஹா ஹா இப்படித்தான் கடத்துவாங்களா??” என்று கேட்டபடி அவளும் ஏற, மீண்டும் கார் வேகமெடுத்தது..

“நீங்க ஒரு முடிவோட தான் வந்திருக்கீங்க மாமா…”

“முடிவெல்லாம் எதுவுமே இல்ல லஷ்மி.. நீயும் எக்ஸாம் டென்சன்ல இருந்த அதான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு..”

“ஹ்ம்ம்..” என்றவள் இதழில் மீண்டும் புன்னகை வந்து ஒட்டிக்கொள்ள, “என்ன சிரிக்கிற??” என்றான் இம்முறை ஈசன்..

“சொல்ல மாட்டேன் போங்க..” என்று அவள் பிகு காட்ட,

“சொல்லாட்டி போ..” என்று அவன் பந்தா காட்ட, “போயா…” என்றாள் சிரிப்பினூடே..

“அதானே பார்த்தேன்.. என்னடா இன்னும் சொல்லலையேன்னு..” என்றான் சிரித்தபடி

அடுத்து வந்த நேரமெல்லாம் இருவருக்கும் சிரிப்பும் பேச்சும்.. பேச்சும் சிரிப்பும் தான்.. என்ன பேசினார்கள், எதற்கு சிரித்தார்கள் இதெல்லாம் எதுவுமே நியாபகம் இல்லை.. ஆனால் இருவரின் மனமும் சரி, முகம் சரி அத்தனை பிரகாசமாய் இருந்தது..

லட்சுமிக்காக என்று தன்னை மாற்றிக்கொள்ள நினைத்தவனுக்கு, அந்த மாற்றம் தந்த உணர்வே பிடித்துப்போக, அவனுள் இருந்த ஒரு புதிய மனிதன் வெளிப்பட்டான்.. ஈசனுக்கு இந்த சிரிப்பும், உணர்வும் காலம் முழுவதும் வேண்டும் போலிருக்க, அதற்கு காரணமான லட்சுமியோ அவனோடு கடைசிவரைக்கும் வேண்டும்போல் தோன்றியது..

மதுரையின் கடை வீதிகளை எல்லாம் ஒரு அலசு அலசி.. வீடு வந்து சேர்ந்திடவே இரவு ஒன்பதாகிவிட, மரகதம் சாப்பிடச் சொல்ல,

“அத்தை.. எனக்கு வயித்துல இடமில்ல..” என்று லட்சுமி சொல்லிட, ஈசன் முறைத்த முறைப்பில் “பால் மட்டும் போதும்…” என்றாள்.

“நீ சொன்னாதான் கேக்குறா..” என்ற மரகதம், அவளுக்கு பால் கலக்கிக்கொண்டு வர,

கஜேந்திரன் அங்கே வந்தவர்,  “சாயங்காலம், வயலுக்கு போய்ட்டு வர்றபோ நம்ம வெங்கடாசலத்த பார்த்தேன்.. அதான் நீங்க படிச்சீங்களே ஸ்கூல்.. அங்க வாத்தியாரா இருந்தாரே..” என்று சொல்ல,

“ஆமாங்கய்யா.. வெங்கடாச்சலம் சார்..” என்று ஈசன் சொல்ல, லட்சுமிக்கும் அவரை நன்றாக நினைவில் இருந்தது..

“நாளைக்கு வீட்டுக்கு வந்து பேசணும்னு கேட்டார் ஈசா.. வர சொல்லிருக்கேன்….” எனவும்,

ஈசனுக்கு யோசனையில் நெற்றி சுருங்க, லட்சுமிக்கோ ‘இந்த சித்தப்பா அவர்கிட்டையும் பணம் வாங்கிருப்பாரோ..’ என்று பயமாய் போனது..

அவள் முகம் சட்டென்று மாறிவிட்டதை கண்ட கஜேந்திரன், “லட்சுமி நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவுமில்ல.. நானே விசாரிச்சுட்டேன்..” என்றவர்,

“அவர் எதோ ஸ்கூல் கட்ட ஏற்பாடு பண்றார் ஈசா.. ஆனா பாதியில நிக்குது வேலை.. ஒருவேளை அதைபத்தி கூட பேசலாமா இருக்கும் எதுவாயிருந்தாலும் அவர் வர்றபோ நீயும் இருக்கணும் வீட்ல.. அதை சொல்லத்தான் வந்தேன்..” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!