Skip to content
Post Views: 1,216
நயம் – 16 
Advertisement
அரவிந்த் தன் வேலையில் செய்த முக்கிய புரட்சி குழந்தைகளுக்கு டேகேர் சென்டர் அமைத்தது தான். தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு மட்டும் அங்கே அனுமதி. இலவசமாய் அனைத்தையும் இவனே ஏற்றுக் கொண்டான். காலையில், மாலையில் என இரு ஷிப்ட் முறைப்படி, பொறுமையாய் இருந்திடும் நடுத்தர வயதினரையே வேலைக்கு வைத்தான். தன்னை போல எந்த குழந்தையும் தனித்து இருந்து, பாசத்திற்கு ஏங்க கூடாது என்பதே அவன் நோக்கமாக இருந்தது. அவனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியரை குடும்பமாகவே பார்த்தான். அவர்கள் மத்தியில் அவன் மீதான மதிப்பு மேலும் உயர்ந்தது. பக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தையும் இணைத்தே அனைத்தும் செய்தான். பாசத்தில் தவிக்கும் குழந்தைகளோடு நேரம் செலவிடுவதில், பாசத்தில் ஏங்கும் முதியோரும் குழந்தைகளாக மாறிவிட்டனர். அன்பு தானே அனைத்திற்கும் மருந்தாய் அமைகின்றது. நம் தாத்தா காலத்தில் கைத்தடி கொண்டு துரத்திடும் வயதானோரை தாராளமாய் காணலாம். ஆனால் இன்றோ நாற்பதிலேயே முதுமை என முட்டு கொடுத்து முடங்கி விடுகின்றனர்.
பேரன் பேத்திகளோடு துள்ளி விளையாண்டு, குறும்பில் மகிழ்ந்து மனதில் நிம்மதியாய் அழுத்தம் ஏதுமின்றி சுற்றி திரிந்த காலம் இன்றோ கானல் நீராகவிட்டது. பெரியோர்கள் முதியோர் இல்லத்தில், சிறியோர்கள் டேகேர் சென்டரில், பின் எதற்கடா உங்களுக்கு தனியாய் ஓர் வீடு எனத் தான் கூச்சலிட வேண்டும் போல உள்ளது. என் செய்வது அன்பு ஒன்றுதான் அநாதை என் கூறுபவர்கள் அன்பினை அனாதையாய் தவிக்க விடுகின்றனரே. இந்த சிந்தனை தனித்து இருந்த ருக்மணி பாட்டியின் கண்ணீரில் உதயமான சிறுதுளி இன்று பொங்கி பெருகி, அவனது அன்பு இல்லத்தில் வந்து நிற்கின்றது.
Advertisement
Advertisement
கஷ்டப்பட்டு செய்யும் அனைத்து வேலைகளையும் இஷ்டப்பட்டு செய்ததால் கஷ்டம் தெரியவில்லை. அவனின் இஷ்டங்கள் தான் ஒவ்வொன்றாய் நிறைவேறியது. வேகமாக கழிந்த நாட்களில் அவனின் வேகமும், அபியின் விவேகமும் இணைந்து செயல்பட்டதால் எட்டாதென என்று எதுவும் இல்லா நிலையை அவர்களை எட்டினர்.
கம்பெனியின் முக்கிய மீட்டிங் ஒன்றில் நின்றிருந்தான். ஏனோ அவனின் மனம் துடித்துக் கொண்டே இருந்தது. காலையில் வேலைக்கு வந்த அபி மிக களைப்பாக உணர்ந்ததால் மதியமே கிளம்பி தனியே வீட்டுக்கு சென்று இருந்தாள். ஒன்றும் சொல்லாமல் கிளம்பிவிட்டாள் என குமுறி கொண்டு இருந்தான். எப்போதும் எதையும் அவனிடம் சொல்லிவிட்டு செய்பவள் இன்று தனித்து செல்வானேன் என கோவம் வந்தது. அந்த ஆதங்கத்திலேயே வீட்டிற்கு வந்தான்.
Advertisement
கோபத்தில் வந்தவன் கண்டது உறங்கி கொண்டு இருந்த தன் மாதரசியை தான். வேகமாக சென்று கன்னத்தில் கரம் வைத்துப் பார்த்தான். காய்ச்சலில்லை பின் ஏன் இப்படி உறக்கம் என அவன் யோசிக்கும் போதே அவள் எழுந்துவிட்டாள்.
க்ரிஷ், சாரி, என்னால முடியல, ரொம்ப அசதியா இருந்தது. நீங்க மீட்டிங்கில் இருந்ததால ஒன்னும் சொல்லாம வந்துட்டேன். டென்ஷன் ஆகிட்டிங்களா?
உடம்பு முடியலன்னு சொல்லமாட்டியா , என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன். வா ஹாஸ்பிடல் போகலாம் என்றவன் கைபிடித்து அமர வைத்தான்.
இல்லை, இன்னிக்கு வேண்டாம், நாளைக்கு போகலாம். தூங்கினா சரி ஆகுதான்னு பார்க்குறேன்.
ஏன் டாக்டர்ட்ட போய் காட்டலாம்னா வரமாட்டேன்ற . கல்யாணம் ஆகி நீ ஒருநாள் கூட இப்படி படுத்தது இல்லை. கிளம்பு என விடாப்பிடியாய் இருந்தான்.
அப்போதுதான் அவளுக்கே நினைவு வந்தது. தனக்கு என்ன ஆகியிருக்கும் என தெரிந்துவிட்டது. உடனே வேகமாக எழுந்தவள். மெடிக்கல் ஷாப்பில் போய் நான் சொல்றது மட்டும் வாங்கி வாங்க என மெதுவாய் கூறினாள்.
ஏய் . இப்போ எதுக்கு அதை கேட்குற என்றபடியே அவளை பார்த்தவன் புரிந்துக் கொண்டவனாய் வேகமாய் ஓடி வாங்கி வந்தான்.
குளியலறை சென்றவள் சிறிது நேரத்தில் வந்து வேகமாய் அவனை அனைத்துக் கொண்டாள்.
என்னடா ஆச்சு. இல்லையா ? என்றான் அவனும் பயந்து கொண்டே.
மெதுவாய் தன் கரத்தினை காண்பித்தாள். அவர்களின் உயிர், உயிர் பெற்றதை அந்த இரு கோடுகள் உணர்த்தியது. மிகவும் சந்தோசமாய் உணர்ந்தனர். அடுத்தடுத்த இவர்களின் ஓட்டத்தில் இந்த வாட்டத்தை பற்றி அவளே மறந்து போனாள். எப்போது , எத்தனை நாட்கள் கரு தங்கி என ஒன்றும் புரியவில்லை.
இருவரும் உடனே தாய் வீட்டிற்கு ஓடினர். அத்தை என்றபடியே ஓடியவன் அவரின் முகம் கண்டவுடன் என்ன சொல்வதென்று புரியாமல் நின்றான். மெதுவாய் வந்தவளும் தயக்கமும், புன்னகையுமாய் நின்றாள்.
என்னடா அபி ஆபிசுல இருந்து வேகமா போயிட்ட, இங்க வந்திருக்கியான்னு தம்பி கேட்டாங்க. ஏன் ஒன்னும் சொல்லாம வந்த ? என கேட்டவுடன்.
இல்லைம்மா…, ரொம்ப டயர்டா இருந்தது. உட்காரவே முடியலை. அடிச்சு போட்ட மாதிரி தூக்கமா வருது. அதான் வீட்டுக்கு போய் படுத்திட்டேன். இப்பதான் டவுட்டு இருந்ததுன்னு பவிக்கு பண்ண மாதிரி பிரகனன்சி கிட் வச்சி செக் பண்ணிப் பார்த்தேன்…, பேபி கண்பார்ம்ன்னு தெரிஞ்சிக்கிட்டோம். அதான் உன்னையும் கூப்பிட்டு ஹாஸ்பிட்டல் போகலாம்னு வந்தோம் என்றாள் தயக்கத்தை விடுத்து சந்தோசமாய்.
ரொம்ப சந்தோசம்டா.., என்றபடி வேகமாய் வீட்டில் இருந்த ஸ்வீட்டை கொண்டு வந்து இருவருக்கும் கொடுத்தார்.
மருத்துவமனை சென்று சோதனை செய்ததில் கரு வளர்ச்சி தெரிய உடனே ஸ்கேன் செய்து விடுவோம் என்றனர். ஏனெனில் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. அதனால இப்பவே பார்த்து விடுவோம். தன் குழந்தையை காண போகும் ஆவல் அனைவரின் கண்களிலும்.
அபியை சோதித்து, குழந்தைகளின் இரட்டை இதய துடிப்பை கேட்க வைத்தனர். அரவிந்த் கண்ணீல் நீரோடு, அபியின் கையை இறுக பற்றிக் கொண்டான். அவளின் கண்களும் கலங்கி தான் இருந்தது.
அவர்களின் வேகத்திற்கு கடவுள் இரட்டை குழந்தைகளை அல்லவா கொடுத்துவிட்டான்.
என் பொண்ணுங்க அத்தை என்றான் சந்தோசமாய். அவன் கூறியதைக் கேட்டு டாக்டரே முகம் பார்த்தார். இன்னும் கொஞ்ச நாள் ஆன உடனே தான் என்ன பேபினு தெரியும். அதுக்குள்ள அவசரமா, அதுசரி எல்லாரும் பையனானு தானே கேப்பாங்க. நீங்க மட்டும் பொண்ணுங்களான்னு கேக்குறீங்க என்றார் சிரித்துக்கொண்டே.
இல்லை டாக்டர், எனக்கு பொண்ணுங்க தான் ரொம்ப பிடிக்கும். அதனால அவங்க தான் கிடைப்பாங்க.
சப்போஸ் ரெண்டும் பையனா இருந்தா என்ன பண்ணுவிங்க?
அடுத்து பொண்ணு பிறக்கிறவரை காத்துட்டு இருப்பேன். கண்டிப்பா வேணும்.
நல்ல மருமகன் உங்களுக்கு கிடைச்சுருக்கார் பிரியா , சந்தோசமா இருக்கு.
வீட்டினர் அனைவரும் அபியின் தாய்மையைக் கேட்டு சந்தோஷமடைந்தனர். கணேஷ், அச்சுதனுக்கு தகவல் சொல்ல சென்றதை வேண்டாமென தடுத்து தானே சொல்லிவிடுவதாய் கூறியவன் தானே அழைப்பு விடுத்தான்.
அப்பா, உங்க பையனை கூட இருந்து வளர்க்க முடியலைனனு கவலைப்பட்டீங்கள்ள, அதனால என் பொண்ணுங்களை வளர்க்க ரெடியாகிட்டு இங்கேயே நிரந்தரமா இருக்க வந்துருங்க. டிக்கெட், எல்லாம் போட்டுட்டேன். இன்னும் ஒரு வாரத்துல வந்துருங்க என்றான்.
சொன்னப்படி மகன் செய்துவிட்டதை எண்ணி சந்தோஷம் கொண்டவர். அதற்குபின் தான், அவன் கூறியதை யோசித்து, என்ன சொன்ன, உன் பொண்ணுங்கள வளர்க்கவா, எனக்கு சரியாய் தானே கேட்டது என்றார் சந்தோசமாய்.
ஆமாம்பா, அபி கன்சீவ் ஆனதை கன்பார்ம் பண்ணி, ஸ்கேன் செஞ்சதுல ட்வின்ஸ்னு சொல்லிட்டாங்க. எனக்கு பொண்ணுங்க தான் பிறக்கும். அதான் அவங்களை பார்த்துக்க ரெடியாகிக்கோங்கன்னு சொன்னேன் என்றான் விளக்கமாய்.
ரொம்ப சந்தோசமா இருக்குடா. இப்பவே பேக் பண்ணி கிளம்பிர்றேன். உங்க அம்மாட்ட சொன்னா குதிக்க ஆரம்பிச்சுருவா. அவளுக்கும் இப்போ இங்கே இருக்கவே பிடிக்கலை. எப்படா போலாம்ன்னு தான் புலம்பிட்டு இருக்கா. இதை சொன்னா பத்து வயது கம்மியான மாதிரி உடனே கிளம்பிருவா. ஆமாம் நம்ம இப்ப இருக்கிற வீட்டை என்ன பண்ண போறே?
நாளைக்கு ஈவினிங் அங்கே வர்றேன். கிரவுண்ட் ப்ளோர் மட்டும் நம்ம வச்சிட்டு, மேல ரெண்டு ப்ளோரும் வாடகைக்கு விட்ருவோம். அதுக்கும் ஏற்பாடு பண்ணிட்டேன். நம்ம ஜான் அங்கிள் தெரிஞ்ச பாமிலிக்கு வேணும்னு சொல்லி இருக்காரு. நம்ம திங்க்ஸ் எல்லாம் சேஞ்ச் பண்ணி வச்சிட்டு, மத்த வேலை எல்லாம் முடிச்சிட்டு இங்கே வந்திருவோம். அங்க பிசினெஸ்யும் நிறைய மாத்தி இருக்கேன். நீங்க இனிமே பிசினெஸ் பாக்காம ரெஸ்ட் மட்டும் எடுங்க. பணத்தை விட மனத்திருப்தி தான் பெருசு. இனிமே அதை மட்டும் பாருங்க. போதும் நீங்க சொத்து சேர்த்தது என்றவுடன் மனநிறைவாய் , கண்கலங்க மகன் சொன்னதை கேட்டுக் கொண்டார்.
இரவின் தனிமையில் எப்போதும் போல அவன் நெஞ்சில் சாய்ந்து இருந்தவள், அது என்ன எப்போ பாரு என் பொண்ணுங்க தான்னு சொல்றிங்க. டாக்டரே சிரிக்கிறார். உங்களுக்கு தான் எந்த பொன்னையும் பார்த்து பேச கூட பிடிக்காதே. லவ் சொன்ன பொண்ணுட்ட கூட வேணாம்னு சொல்லிட்டு வந்து ரெண்டு நாள் காய்ச்சல்ல படுத்தீங்களாம். அப்புறம் இப்போ ஏன் தான் ஆசை?.
அவ லவ் சொன்னான்னு காய்ச்சல் வரல, அவ சொன்னவுடனே நீ தான் மனசுல காதலா வந்து நின்ன. அப்பதான் உன் நினைவு இன்னும் ஆழமா என் மனசுல பதிஞ்சது. என்னை விழ வச்சது நீ தான், அந்த பொண்ணு இல்லை.
அப்புறம் என் லவர் , பொண்ணுங்க தான் அப்பா மேல உயிரா இருப்பாங்களாம், அவளுக்கு அடுத்து அவங்க தான் என்னை அவளை மாதிரியே பார்த்துப்பாங்கன்னு எழுதி வச்சி இருந்தா. அது உண்மை தான். ஆனால் ஒன்னு மட்டும் அவளுக்கு புரியல.
அதெல்லாம் எப்போ படிச்சி பார்த்தீங்க? என்ன புரியல?.
மேகமலை போக முடிவு பண்ண உடனே ஒவ்வொண்ணா எடுத்து படிக்க ஆரம்பிச்சேன். லாஸ்ட் இயர் டைரில இந்த கதை எல்லாம் எழுதி வச்சிருந்த. என்ன புரியலன்னா அவள் இல்லைனா நானும் இருக்க மாட்டேன். அப்புறம் எப்படி என்னை அவங்க பார்த்துப்பாங்க என்றான் அவளின் இமைகளை பார்த்து கொண்டே.
அவன் கூறியதை கேட்டதும் என்ன சொல்ல முடியும் அவளால், கண்ணீர் வழிய உனக்கு ஒன்னும் ஆகாது, எப்பவும் நல்லா இருக்கனும் என்றாள்
நீ இருந்தா நானும் இருப்பேன், இல்லைனா இல்லை தான். முடிவு எப்பவும் உன் கையில் மட்டும் தான் என்றவனிடம், வார்த்தை இல்லா மௌனங்கள் மட்டுமே மொழியாகி, நாணங்கள் தான் உயிர் பெற்றது .
அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினான். ருக்மணி பாட்டியையும் வீட்டிற்கு கூட்டி வந்துவிட்டான். பிரியா, பிரமிளா, பாட்டி, பவி என அவளை தாங்கும் உறவுகள், எங்கிருந்தாலும் நேரத்திற்கு போன் செய்து சாப்பிட அட்டவணை கூறும் கணவன் என அவள் மகிழ்விற்கு அளவில்லை.
வாந்தி, மயக்கம் என பாடாய்ப்படுத்தினாலும் அவை அனைத்தும் சுகமான சுமைகளை சுமக்கும்போது கிஞ்சித்தும் மனதை வருத்த செய்யாதே. சாப்பிட்ட அனைத்தையும் வாந்தி எடுத்தாள். எடுத்தாலும் குடித்தே தீர வேண்டுமென அடம் பிடித்து கொடுத்தான். மசக்கை அவளிருந்தாள், கூடவே அவனும் இருந்தான். ஐந்தாம் மாதத்தில் தான் சற்று மட்டுப்பட்டது அனைத்தும்.
ஐந்து மாதத்திலே வயிறு நன்கு தெரிய ஆரம்பிக்க, சற்று நடை தளர்ந்து மெதுவாய் நடந்திட்டாள். அவளை போலவே நடந்து காண்பித்தனர் பொடியன் சிவாவும், விஷ்ணுவும். இதில் தனக்கு ரெண்டு தங்கச்சி வரப்போவதை குறித்து அத்தனை பெருமை. ஒன்றாய் விளையாட போவதை பற்றி ஏராளமாய் எதிர்கால திட்டங்கள். அவள் வயிற்றில் கை வைத்து பேசி கொண்டே இருப்பான். சிறு வயதில் அரவிந்த் இப்படித்தான் அபி வயிற்றில் இருக்கும் போது செய்ததை சொல்லி பெரியவர்கள் சிரிப்பார்கள்.
அன்று மட்டுமா செய்தான். கரு உறுதியான நாளில் இருந்து தினமும் குழந்தையோடு பேசி கொண்டே இருப்பான். எப்படி வாழ வேண்டும் என்பதை பற்றி கிளாஸ் நடக்கும். அவர்கள் படிப்பு, பண்புகள் என ஒவ்வொன்றை பற்றியும் அழகாய் சொல்லி கொடுப்பான். அபிக்கு தூக்கம் வந்து தூங்கி விட்டாலும் இவன் கரம் தன் மழலைகளை தாங்கியே இருக்கும். பூவுக்கும் வலிக்காமல் மென்மையாக வருடி பார்ப்பான். கருவில் வளரும் தன் உயிர் பெண்களுக்கு தாயும் தந்தையுமாக அவன் கூறிய வரிகளில் சில
அசோக வன சீதை கூட
இராவணன் சிறையில்
களங்கமற்று இருந்தாள்!
இன்றோ இராமனுமில்லை!
கை தொடா இராவணனுமில்லை!
அயோக்கியர் கூடாரத்தில்
பெற்ற மகளை கூட
சிறை வைத்து தான்
வளர்க்கும் நிலை?
சுதந்திரம் பெற்றும்
சுதந்திரமின்றி மறுகுகின்றோம்
என் செய்வேன் யான்?
மண்ணை பார்த்து பேசாதே என் கண்ணே!
நீ மண்ணை பார்த்தால்
அவன் உன்னை பார்ப்பான்
கண்ணை பார்த்து பேசு
கயமையை அறி
கரங்களை ஆயுதமாக்கு
நகங்களை கத்தியாக்கு
சிலம்பம் கற்று
சிதைக்க நினைப்பவனை அடி
கராத்தே கற்று கொள்
மைவிழியல்ல நான்
உன் கள்ளத்தனத்தை கொள்ள வந்த
எமன் என எதிர்த்து நில்
உன் விழிகளின் சூடு கண்டு
பொறுக்கியும் எரிந்திட
தொடும் முன்பே வெட்டி விடு
புதுமை பெண்ணாய் இருப்பதை விட
புரட்சி பெண்ணாய் வாழ்
தீக்குளிக்க நீ சீதையல்ல
அக்கினி ஜுவாலையென்று காட்டு
தைரியத்தில் தன்னம்பிக்கை கொண்டு
உயர்ந்து நில் !
எவனும் ! எமனும் !
உன் காலடியில்…, !



error: Content is protected !!