Skip to content
Post Views: 1,953

அகம் 10
போட்டோ ஷூட் என்றதும் நயந்தினி ஆர்வமாக ராகவியுடன் கிளம்பி வந்தவள், இங்கு வந்தும் சிறிதுநேரம் அதை ஆர்வமாக பார்த்தப்படியும் இருந்தாள். ஆனால் போக போக அவளுக்கு போர் அடிக்க ஆரம்பிக்கவும், அலைபேசியில் விக்கியுடன் குறுந்தகவல்கள் அனுப்பி பேச (chat) ஆரம்பித்துவிட்டாள்.
Advertisement
மூன்று நாட்களாக ராகவியுடனே சுற்றிக் கொண்டிருந்தது. இரவில் அன்னையும் தங்கைகளும் உடன் இருந்தது. அன்றைய சம்பவத்திற்குப் பிறகு, பால்கனியில் சென்றும் பேச முடியாத சூழல் அமைந்ததால் அவளால் விக்கியுடன் அலைபேசியில் பேச முடியவில்லை. ஆனால் ராகவியின் அருகில் இருந்தாலும் ராகவி மற்றவர்களுடன் பேசும் சமயம் அவளோ விக்கிக்கு குறுந்தகவல் அனுப்பி பேசிக் கொண்டு தான் இருந்தாள். விக்கியும் ஏன் அலைபேசியில் பேசவில்லை என்றெல்லாம் கோபித்துக் கொள்ளாமல் குறுந்தகவல் அனுப்பி பேசிக் கொண்டிருந்தது அவளுக்கே அதிசயமாக தான் இருந்தது.
Advertisement
அதிலும் இப்போது நிகர்வேலன் இவர்களுடன் வந்திருப்பதால், அங்கிருந்து கிளம்பும் போதே, காரின் ஓட்டுநர் இருக்கையில் அவனைப் பார்த்ததும், ‘இவன் கூட வருவான்னு தெரிஞ்சிருந்தா ராகவி அக்காவிடம் வரலன்னு சொல்லியிருக்கலாமே,’ என்று மனதில் நினைததுக் கொண்டவள், வேறுவழியில்லாமல் காரில் ஏறினாள். அதனால் இப்போது அவனை தவிர்க்க எண்ணியே, விக்கியுடன் குறுந்தகவல் அனுப்பி பேசிக் கொண்டிருக்க, அவளை சமாதானம் செய்யலாம் என்று வந்திருந்த நிகர்வேலனுக்கோ அவள் நடந்து கொள்வதைப் பார்த்து, கொஞ்சம் இல்லை அதிகமாகவே கோபம் வந்தது.
Advertisement
ஆனால் அதை கட்டுப்படுத்திக் கொண்டவன், அவள் அருகில் வந்து அமர்ந்து, “நயா, உன்னிடம் கொஞ்சம் பேசணும்,” என்று சொல்ல,
Advertisement
அதில் அவனை நிமிர்ந்து பார்த்தவள், “எனக்கு உங்களிடம் பேச வேண்டாம் புரிஞ்சுதா?” என்றாள்.
“தப்பு தான், நான் அன்னைக்கு அப்படி பேசியிருக்கக் கூடாது தான், ஆனா நீ அவினாஷிடம் பேசிட்டு இருந்ததை பார்த்ததும் தான் கொஞ்சம் கடுப்பாகி அப்படி நடந்துக்கிட்டேன். அவினாஷ் எங்க ரிலேடிவா இருந்தாலும் அவன் பெண்கள் விஷயத்தில் ஒன்னும் அந்த அளவு நல்லவன் கிடையாது. ராகவியே அவனோட நின்னு பேச யோசிப்பா, அப்படி அவ பேசியிருந்தாலும், அவளிடமும் அப்படித்தான் கோபப்பட்டிருப்பேன். அவன் உன்னை பார்த்த விதமே சரியில்லை. அது தெரியாம நீ அவனோட பேசிட்டு இருக்க,” என்று அவன் கேட்கவும்,
“தெரியலன்னு யார் சொன்னா, தெரிஞ்சு தான் இருந்தது. ஆனாலும் ராகவி அக்காவோட ரிலேடிவ் என்பதால தான் தானா வந்து பேசினவரை அவாய்ட் செய்ய முடியல, ஏன் நீங்களும் வலிக்கிற அளவுக்கு கையை பிடிச்சு கோபமா பேசினீங்க, அதையும் யாரிடமும் சொல்லாததுக்கு காரணம் நீங்க ராகவி அக்கா ரிலேஷன் என்பதாலயும் நிகர் க்ரூப்ஸ் உரிமையாளர் என்பதாலயும் தான்,” என்றாள் கோபமாக,
அதைக்கேட்டவனோ, “நீ என்ன அவினாஷும் நானும் ஒன்னு என்பது போலவே பேசற,” என்று கோபப்படவும்,
“பின்ன வேற எப்படி சொல்வாங்க, உங்களையாவது முன்ன ஒருமுறை தான் பார்த்திருக்கேன். ஆனா அவினாஷை அடிக்கடி ராகவி அக்கா வீட்டில் பார்த்திருக்கேன். ஆனாலும் அவங்களா பேச வந்தபோது எனக்கு யாருன்னே தெரியல, அவங்க பார்வையும் எனக்கு பிடிக்கல, நீங்களோ ரோஹனோ வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். அப்போ தான் சின்ன பொண்ணு வந்து என்னை கூப்பிட்டா, எப்படியோ அங்க இருந்து வந்தா போதும்னு நினைச்சு தான் வந்தேன். ஆனா என்னோட சூழ்நிலை புரியாம, கோபமா கையைப் பிடிச்சு, ஏன் அவனோட பேசறேன்னு கேட்கறீங்க, அப்படி கேட்கும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தா?” என்று கேட்டாள்.
அவள் திரும்ப திரும்ப அந்த கேள்வியை கேட்பதை அவன் விரும்பவில்லென்றாலும், அடிக்கடி பார்த்தவனை கூட மறந்துவிட்டாள். ஆனால் ஒருமுறை பார்த்த தன்னை நினைவில் வைத்திருக்கிறாள். அந்த அளவுக்கு அவளை பாதித்திருக்கிறான் என்பதில் மகிழ்ச்சியானவன்,
“சாரி சாரி சாரி, நான் அப்படி கோபப்பட்டிருக்கக் கூடாது தான், அதுக்காக இன்னும் எத்தனைநாள் பேசாம இருக்கப் போற, ராகவி சொன்னமாதிரி நாமல்லாம் இங்க இருக்கப் போறது இன்னும் நாலஞ்சு நாள் தான், அதிலும் இப்படி கோபப்பட்டு பேசாம இருந்தா அது நல்லாவா இருக்கும், இனி உன்னை கஷ்டப்படுத்தறது போல நடந்துக்க மாட்டேன். என்னை இந்த ஒருமுறை மன்னிக்க கூடாதா?” என்று கெஞ்சினான்.
நிகர் குழுமத்தின் வாரிசு இவன், சேகரனுக்கு அடுத்து அதை நிர்வகிக்கப் போகிறவனும் இவனே, அப்படியானவன் தன்னிடம் மன்னிப்புக் கோரி கெஞ்சுகிறான் என்பதே நயந்தினிக்கு ஒருமாதிரி பெருமிதமாக இருந்தது. அதிலும் அவன் சொன்னதுபோல் இன்னும் சில நாட்கள் தான் இங்கு அனைவரும் இருக்கப் போகிறார்கள்.
ஆரம்பத்தில் இங்கு வர பிடிக்காமல் அன்னையிடம் வரமாட்டேன் என்று மறுத்தவள் தான், ஆனால் இப்போதோ இங்கிருந்து இன்னும் சிலநாட்களில் செல்லப்போவது அவளுக்கும் கஷ்டமாக இருக்கவே, “சரி, இந்த ஒருமுறை உங்களை மன்னிக்கிறேன். ஆனா திரும்ப ஏதாவது நீங்க இப்படி நடந்துக்கிட்டா அப்புறம் உங்களோட சுத்தமா பேச மாட்டேன். இங்க இருக்கவும் மாட்டேன்.” என்றாள் தீர்மானமாக,
“கண்டிப்பா நயா, நீ ஹர்ட் ஆகறது போல எதுவும் நடக்காது.” என்று அவனும் உறுதி அளித்தான்.
அதன்பின் அவளோ, “நீங்க சொன்னமாதிரி இன்னும் நாலஞ்சு நாள் தான் இங்க இருக்கப் போறோம் இல்ல, அதுக்குப்பிறகு உங்களை, ரோஹனை, ராகவி அக்காவை எல்லாம் பார்க்க முடியாது. கொஞ்சநாள் கஷ்டமாகவும் இருக்கும்,” என்றாள்.
ரோஹன் படிப்பிற்காக திரும்ப லண்டன் சென்றுவிடுவான். நிகர் தனது தொழிலில் மூழ்கிவிடுவான். ராகவிக்கு திருமணம் என்பதால் சொல்லவே வேண்டாம், நயந்தினியும் தான் படிப்பிற்காக விக்கியுடன் வெளிநாடு போகப் போகிறாள். அப்படி சென்றுவிட்டால் யாரையும் பார்க்க முடியாது. அதுவரைக்கும் இவர்களோடு இருந்த நேரங்களை நினைத்து தான் பொழுதை கழிக்க வேண்டுமென்று நினைத்து அவள் அப்படி சொல்ல,
‘இத்தனைநாள் உன்னோட படிப்பு, வயசு இதை மனசில் வச்சு தான் அமைதியா இருந்தேன். ஆனா இனி அப்படி பொறுமையா இருக்க முடியாது. இங்க இருந்து போறதுக்குள்ள என்னோட காதலை உனக்கு புரிய வச்சு உன்னை சீக்கிரம் எனக்கு சொந்தமாக்கிப்பேன் நயா,’ என்று நிகர்வேலன் மனதில் சொல்லிக் கொண்டான்.
இருவர் மனதிலும் வெவ்வேறு எண்ணங்கள் இருக்க, விதியோ அவர்களை இணைப்பதற்கு வேறுமாதிரியான விளையாட்டை தொடங்க ஆரம்பித்திருந்தது.
அன்று மாலை இருள் சூழ ஆரம்பித்த வேளை அனைவரும் ரெசார்ட்டின் திறந்தவெளியில் கூடியிருந்தனர். இன்று பெரிதாக எந்த விசேஷமும் இல்லை. அதனால் கூடி பேசி சிரித்து இருக்கலாம் என்று இந்த ஏற்பாட்டை செய்திருந்தனர்.
நிச்சயத்தின் போதே மாப்பிள்ளை வீட்டு சார்பாக ராகவிக்கு நகை கொடுப்பது அவர்கள் வழமை. அதற்காக பிரத்யேகமாக அவர்கள் நகை கடையிலேயே செய்ய சொல்லி மாப்பிள்ளை வீட்டில் சொல்லியிருந்தனர். ஆனால் அது தயாராகி வர தாமதமாகிவிட்டது. அதை இப்போது சபையினர் முன் ராகவிக்கு மாதேஷின் அன்னை அணிவித்துவிட்டார்.
பின் அதை கழட்டி ராகவி தன் அன்னை சாகரி கையில் கொடுக்கவும், “நளினி, இதை ரூமில் வச்சிடு,” என்று சாகரி தோழியிடம் கொடுக்க, அதை சாகரியின் அன்னை பேச்சியம்மாளும் விரும்பவில்லை. சாகரியின் நாத்தனார் நீலவேணியும் விரும்பவில்லை.
நளினி சென்றதும், “ஏன் சாகரி, அதை நீயே கொண்டு போய் கொடுத்தா என்ன? அதை அவளிடம் தான் கொடுக்க வேண்டுமா?” என்று பேச்சியம்மாள் மகளிடம் கேட்டார். அவர் எப்போதுமே ஆட்களை அவர்கள் வசதி வாய்ப்பை பார்த்து தான் பழகுவார். ஆனால் அவரின் கணவர் நாகராஜன் அப்படியில்லை. எளிமையாக இருப்பார். அனைவரிடமும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் பழகுவார். அவரது அந்த குணமே இரு பிள்ளைகளிடமும் இருந்தது.
இப்போதும், “ஏன் அந்த பிள்ளையிடம் கொடுத்தா என்ன? நாமளும் இந்த ரெண்டு நாளா பார்க்கிறோம் தானே, நம்ம சாகரியோட இருந்து எல்லா வேலையும் பொறுப்பா பார்த்துக்கிறா தானே அந்த பொண்ணு,” என்று நாகராஜன் மனைவியிடம் கூற,
“உண்மை தான் ப்பா, நளினி இல்லன்னா எனக்கு ரொம்ப கஷ்டமாகியிருந்திருக்கும்,” என்று சொன்ன சாகரி.
“நளினியை நம்பலாம் ம்மா,” என்று அன்னையிடமும் கூறினார்.
அதைக்கேட்டு அங்கிருந்த நீலவேணிக்கு கடுகடுத்தது. தன்னை மருந்துக்கும் மதிக்காமல் யாரோ ஒரு நளினிக்கு சாகரி கொடுக்கும் முக்கியத்துவம் பார்த்து எரிந்தது. அதை மனதில் வைத்து, “ஆனாலும் இவ்வளவு காஸ்ட்லியான நகையை அவங்க பார்த்திருப்பாங்களோ என்னவோ? அதைப் பார்த்து அவங்களுக்கு விபரீதமாதமான எண்ணம் தோன ஆரம்பிச்சிட்டா என்ன செய்றது?” என்று அவர் வேண்டுமென்றே கூற,
“நளினிக்கு எப்போதும் அப்படியெல்லாம் தோனாது அண்ணி. நளினிக்கு எங்க எந்தமாதிரி நடந்துக்கணும் எல்லாம் நல்லாவே தெரியும், அதுவும் இல்லாம நளினி கவர்மென்ட் வேலையில் இருக்கா, அவங்க நல்ல நிறைவான வாழ்க்கை தான் வாழறாங்க, இதெல்லாம் பார்த்து அவளோட மனசு சலனப்படாது.” என்று சாகரி நளினுக்கு சார்பாக பேசினார்.
“இருந்தாலும் 3 பொம்பளை பிள்ளைங்க வச்சிருக்காங்க, அவங்களுக்கு கல்யாணத்துக்கு நகை சேர்க்கணும் தானே, நியாயமான வழியில் சேர்க்காம குறுக்கு வழியில் போக நினைச்சுடப் போறாங்க,” என்று நீலவேணியும் விடாமல் நளினியை மட்டம் தட்டுவது போல் பேசவும்,
“ஏன் நீலவேணி, நளினியை பத்தி பேசறதுக்கு முதலில் நீ எந்த நிலைமையில் இருக்கன்னு யோசிச்சுப் பாரு, உன் பொண்ணுக்கே உன்னோட அண்ணன் மனசு வச்சு சீர் செய்ததால தான் கல்யாணம் நடந்தது. நீ அந்த பிள்ளையை பத்தி பேசற,” என்று நாகராஜன் கேட்கவும், நீலவேணிக்கு ஒருமாதிரி ஆகிவிட,
“ஏதோ அண்ணி ஏமாந்துடக் கூடாதே என்கிற நல்லெண்ணத்தில் சொன்னேன். அதுக்குப்பிறகு அவங்க விருப்பம்.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நழுவி விட்டார்.
அவர் சென்றதும், “ஏன் ப்பா இப்படி பேசினீங்க, அவங்க அப்படியே ராகவி அப்பாவிடம் போய் சொல்லுவாங்க, அவர் ஏதாவது நினைச்சுக்கப் போறார்.” என்று சாகரி கேட்கவும்,
“மாப்பிள்ளைக்கு என்னைப்பத்தியும் தெரியும், அவரோட தங்கையை பத்தியும் தெரியும், நான் நம்ம அளவுக்கு வசதி பார்த்தா உனக்கு கல்யாணம் செய்தேன். மாப்பிள்ளை நல்ல மாதிரின்னு தெரிஞ்சதால தானே கல்யாணம் செய்தேன். அதை மறந்து பேசக் கூடாதில்ல, நளினியாவது வேலைக்குப் போய் தன் உழைப்பில் 3 பிள்ளைங்களையும் வளர்க்குது. ஆனா அண்ணன் தயவில் எல்லாம் செய்துக்கலாம்னு நினைக்கிற ஆள் இன்னொருத்தரைப் பத்தி பேசலாமா?” என்று நாகராஜன் கேட்க,
“அவங்களைப்பத்தி தெரிஞ்சது தானே ப்பா, விடுங்க,” என்றார் சாகரி. இவர்கள் பேசியதை கேட்டிருந்தாலும், நளினிக்கு சாகரி அதிக இடம் கொடுத்திருப்பது போல் தான் பேச்சியம்மாளுக்கு தெரிந்தது.
இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருந்த நேரம், இளைஞர் பட்டாளம் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்காமல் ஏதாவது விளையாடலாம் என்று பேசிக் கொண்டவர்கள், அந்தாக்ஷரி விளையாடலாம் என்ற முடிவிற்கு வந்தனர்.
ராகவி தலைமையில் ஒரு அணியும் மாதேஷ் தலைமையில் ஒரு அணியும் என்று பிரித்து விளையாட முடிவெடுத்தனர். “நான் ராகவி அக்கா டீம்,” என்று கூறிய நயந்தினி ராகவியின் அருகில் அமர்ந்து கொள்ள,
“நானும் ராகவி டீம் தான்,” என்ற நிகர்வேலனோ, யாருக்கும் சந்தேகம் வராததுபோல் இயல்பாக சென்று நயந்தினியின் அருகில் அமர்ந்து கொண்டான்.
“நான் நிகர் மாம்ஸ் டீம் தான்,” என்று ரோஹன் கூற, “எல்லாம் அந்த டீம்க்கே போயிட்டா என் கூட யார் இருப்பா?” என்று மாதேஷ் ரோஹனை தன்னுடன் வைத்துக் கொள்ள,
“நாங்களும் ரோஹன் அண்ணா டீம் தான்,” என்று மொழியும் மதியும் கூட அவர்களுடன் இருந்து கொண்டார்கள். இப்படியே இரு அணியாக அனைவரும் பிரிந்தவர்கள் பாட்டு பாடி விளையாட ஆரம்பிக்க, பெரியவர்களும் அவர்கள் விளையாடுவதை சுற்றி அமர்ந்து மகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
தன்னைப்பற்றி சாகரியின் அன்னையும், நீலவேணியும் பேசிக் கொண்டது அறியாமல் சாகரி கொடுத்த வேலையை முடித்துவிட்டு வந்த நளினி சாகரியுடன் நின்று கொண்டவர், சிறியவர்கள் விளையாடுவதை பார்த்திருந்தார். அதிலும் மொழியும் மதியும் உற்சாகமாக பாட்டு பாடி விளையாடுவதை பார்த்தவருக்கோ, இனி இதுபோல் பிள்ளைகளை வருடம் ஒருமுறை எங்கேயாவது அழைத்து செல்ல வேண்டுமென்று மனதில் நினைத்துக் கொண்டார்.
அடுத்து அவரின் பார்வை தன்னால் மூத்த மகள் எங்கே என்று பார்க்க, நயந்தினி ராகவியின் அருகில் அமர்ந்திருப்பது தெரிந்தது. கூடவே அவள் அருகில் நிகர்வேலனும் அமர்ந்திருக்க, இத்துடன் மூன்றாவது முறை அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்க்கிறார்.
அதிலும் அவர் பார்த்த நேரம், நயந்தினி விளையாட்டில் கவனம் வைக்காமல் அலைபேசியை பார்த்தப்படி இருக்க, “விளையாடும்போது அங்க கவனம் வைக்காம போனை எதுக்கு பார்த்துக்கிட்டு இருக்க,” என்று அவளிடமிருந்து நிகர் அலைபேசியை வாங்கவும், அவனுக்கு ஒழுங்கு காட்டிவிட்டு அவன் கையிலிருந்து அலைபேசியை வாங்கியவள், ஆனால் மீண்டும் அதை பார்க்காமல் விளையாட்டில் கவனம் வைத்தாள்.
அதைப்பார்த்து நளினிக்கே வியப்பு தான், வீட்டில் இப்படி எத்தனையோமுறை அவர் அப்படி அவளிடமிருந்து அலைபேசியை பிடுங்கியிருக்கிறார். அதற்கு ஒருநாள் முழுக்க கூட கோபித்துக் கொண்டு பேசாமல் இருப்பாள். வெளியிடத்தில் அப்படி செய்ய முடியாது என்றாலும், நீ சொல்வதை நான் ஏன் கேட்க வேண்டும் என்பதுபோல் இல்லாமல் நிகர்வேலன் சொன்னதும் கேட்கிறாளே என்ற வியப்பு தான்,
ஆனாலும் இருவரையும் இப்படி அடிக்கடி ஒன்றாக பார்ப்பதும் அவருக்கு நல்லதாக படவில்லை. அவருக்கு அது பெரிய விஷயமாக தெரியவில்லை தான், ஆனால் மற்றவர்கள் பார்த்தால் ஏதாவது நினைப்பார்களோ என்றிருந்தது. என்ன இருந்தாலும் நிகர்வேலன் குடும்பம் வசதியில் அவர்களைவிட பலமடங்கு பெரியவர்களாயிற்றே, அதனால் அவருக்கு அது கொஞ்சம் உறுத்தலாக தான் இருந்தது. மகளிடம் நிகரை விட்டு விலகியிருக்க சொல்லி சொல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டார்.
நயந்தினியோ விளையாட்டில் கவனம் வைத்தவள், பின் உற்சாகமாகி பாடல்களை சரியாக பாடி இவர்கள் அணிக்கு வெற்றி எண்ணிக்கையை கூட்டினாள். இப்படியே அந்தாக்ஷரி தொடர்ந்து கொண்டிருக்க, மாதேஷ் ராகவியை பார்த்து ஒரு காதல் பாடலை பாடவும்,
“அக்கா, இதுக்கு எதிர்பாட்டு நீங்க தான் பாடணும்,” என்று நயந்தினி கூற, “ஆமாம் ஆமாம்,” என்று மற்றவர்களும் அதை ஆமோதிக்க, ராகவியோ நாணத்துடன் பாட முடியாது என்பதுபோல் தலையசைக்கவும்,
“என்ன க்கா, இவ்வளவு நேரம் மாமாவோட சேர்ந்து போட்டோ ஷூட் செய்தப்போ வராத வெட்கம் இப்போ உங்களுக்கு வருதா?” என்று நயந்தினி பேச்சுவாக்கில் அவர்களது போட்டோ ஷூட் விஷயத்தை போட்டு உடைக்க, அவள் சொல்வாள் என எதிர்பார்க்காத ராகவி, மாதேஷ், நிகர் மூவரும் அதிர்ச்சியாகினர்.
நயந்தினி சொன்னது அனைவருக்கும் கேட்கவே, “ஹே எங்களைடம் சொல்லவே இல்லை. இன்னைக்கா போட்டோ ஷூட் நடந்துச்சு,” என்று அவள் தோழிகள் வேறு விஷயத்தை கேட்டு தொல்லை செய்ய, ராகவிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அதற்குள், “என்ன சொல்ற நயனி, போட்டோ ஷூட்டா?” என்று சாகரியும் அதிர்ச்சியாக கேட்டார்.
“ஆமாம் ஆன்ட்டி, இவங்க ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட், மதியம் அதுக்கு தானே நாங்க போனோம், உங்களுக்கு தெரியாதா?” என்று நயந்தினி சாகாரியிடம் கேட்க, ராகவி அன்னையை பார்த்து. விழிக்கவும், சாகரி அவளை முறைத்தவர்,
“என்ன நிகர் இது, நீ ஏதோ முக்கியமான விஷயம்னு தானே ராகவியையும் மாப்பிள்ளையையும் கூட்டிட்டு போறதா சொன்ன, இப்போ நயனி போட்டோ ஷூட்னு சொல்றா?” என்று அவனிடம் கேட்டார்.
பின் மகளிடம், “விஷயம் தெரிஞ்சு தான் நிகரோட போனீயா? ஏன் என்னிடம் சொல்லல நீ.” என்று கேட்கவும், ராகவி பதில் கூற முடியாமல் தலை குனிந்து கொண்டாள். மாதேஷுக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் அமர்ந்திருக்க, அப்போது தான் விஷயம் மற்றவர்களுக்கு தெரியாது என்பது நயந்தினிக்கு புரிந்தது.
“என்ன சாகரி இது, ஏதோ போட்டோ அது இதுன்னு பேசறீங்க, நம்ம வழக்கத்தில் கல்யாணத்துக்கு முன்ன பொண்ணும் மாப்பிள்ளையும் பார்த்துக்க கூட மாட்டாங்க, எல்லாம் நம்ம வழக்கமா செய்யலாம்னு சொன்னா பசங்க விரும்புறதா சொல்றாங்கன்னு என்னென்னவோ செய்றீங்க, சரின்னு விட்டா, என்ன எல்லாம் அளவுக்கு மீறி போகுதே,” என்று பேச்சியம்மாள் கோபமாக கேட்க,
“எனக்கே விஷயம் தெரியாது ம்மா, முன்னமே கேட்டதுக்கு இதெல்லாம் வேண்டாம்னு நான் சொன்னேன்.” என்று சாகரி அதற்கு பதில் கூறினார்.
“இப்போ காலம் ரொம்பவே மாறிடுச்சு, காலத்துக்கு ஏத்த மாதிரி புதுசு புதுசா செய்றாங்க, அதுபோல நாமளும் செய்யணும்னு பிள்ளைங்க ஆசைப்பட்டு செய்துட்டாங்க, இதில் எதுவும் தப்பில்ல ம்மா,” என்று நளினி அதற்கு கருத்து கூற,
“உங்களுக்கெல்லாம் வேணும்னா இது சாதாரணமா இருக்கலாம், ஆனா எங்க குடும்பத்தில் எப்போதும் வழக்கத்தை மாத்திக்க மாட்டோம்,” என்று பேச்சியம்மாள் முகத்தில் அடித்தால் போல் நளினிக்கு பதில் கூறவும், அதில் அவர் முகமே மாறிவிட்டது.
அதுவரை அமைதியாக இருந்த நிகர்வேலனோ, “ராகவியும் மாதேஷும் வெளிநாட்டில் போய் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் செய்யணும்னு விரும்பினாங்க, ஆனா அத்தை அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க, அது குறையா இருக்கக் கூடாது. இன்னும் 4 நாளில் கல்யாணம் நடக்கப் போகுதே, அதனால செய்யலாம்னு நினைச்சு நான்தான் அவங்களை கூட்டிட்டுப் போனேன்.” என்று விளக்கம் கொடுக்கவும்,
“தொழிலைப் பார்க்க ஆரம்பிச்சதும், எல்லாத்திலும் நீங்களா முடிவெடுக்க ஆரம்பிச்சிட்டீங்களோ, அப்போ பெரியவங்க நாங்க எதுக்கு இருக்கோம், நாங்க ஒன்னு சொன்னா, அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்னு உங்களால புரிஞ்சிக்க முடியாதா?” என்று நாகராஜன் கேட்க,
“நீங்க நல்லதுக்கு தான் சொல்வீங்க தாத்தா, ஆனா காலத்துக்கு ஏத்த மாதிரி நாமளும் சிலதை மாத்திக்கலாம் தப்பில்ல, அவங்க கல்யாணத்தை நாம தானே முடிவு செய்தோம், நம்ம சம்மத்ததோட தானே சிலதை அவங்க செய்ய நினைக்கிறாங்க, அதில் தப்பு என்ன இருக்கு?” என்று நிகர்வேலன் பதில் கேள்வி கேட்கவும்,
“அப்போ நீங்களா உங்க விருப்பத்துக்கு என்ன வேணும்னாலும் செய்ங்க, நாங்க பெரியவங்க எதுக்கு?” என்று நாகராஜன் கோபமாக கூறினார்.
அதுவரை அமைதியாக இருந்த சேகரனோ, “என்ன நிகர், தாத்தாவோட பதிலுக்கு பதில் பேசிட்டு இருக்க,” என்று மகனை கண்டித்தவர்,
“ஏதோ தெரியாம செய்துட்டாங்க விடுங்க ப்பா, நல்ல காரியம் நடக்கும்போது எதுக்கு இதை பெருசா ஆக்கிக்கிட்டு, இனி கவனமா இருப்பாங்க,” என்று தந்தையிடமும் சமாதானம் பேச,
“இப்படி ஏதாவது காரியத்தால நம்ம கௌரவம் பாதிக்காம இருந்தா சரிதான், ஜாக்கிரதையா இருக்க சொல்லு,” என்று சொல்லிவிட்டு நாகராஜன் அங்கிருந்து எழுந்து போய்விட்டார். உடன் பேச்சியம்மாளும் சென்றுவிட்டார்.
சற்று நேரத்தில் மகிழ்ச்சியான தருணம் அப்படியே மாறி போய்விட ஒவ்வொருவராக அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.
“இனியாவது கவனமா இருங்க,” என்று சாகரி ராகவியிடம் கூறிவிட்டு செல்ல, மாதேஷ் பெற்றோர்களும் அவனை கண்டித்தனர்.
“சாரி மாதேஷ், மெதுவா சொல்லி சமாளிச்சிக்கலாம்னு தான் நினைச்சோம், இப்படியாகும்னு எதிர்பார்க்கல,” என்று நிகர்வேலன் மாதேஷிடம் மன்னிப்பு கேட்க,
“எங்க விருப்பத்துக்காக தானே செய்தீங்க, பரவாயில்லை விடுங்க,” என்று சொல்லிய மாதேஷ், இப்போது ராகவியிடம் நேராக பேசினால் அதுவும் பிரச்சனையாகலாம் என்பதால்,
“நான் நைட் ராகவியிடம் போன்ல பேசறேன்னு சொல்லிடுங்க,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
இத்தனை பிரச்சனைக்கும் தான் தான் காரணம் என்ற குற்ற உணர்வில் இருந்த நயந்தினியோ, “சாரி ராகவி க்கா, விஷயம் பெரியவங்களுக்கு தெரியாது என்கிற விஷயம் எனக்கு தெரியாது. தெரிஞ்சிருந்தா கண்டிப்பா சொல்லியிருக்க மாட்டேன்.” என்று மன்னிப்பு கேட்க,
“பரவாயில்லை நயனி, நான் உன்னிடம் முன்னமே சொல்லியிருக்கணும், சொல்லாம விட்டது என்னோட தப்பு தான்,” என்றாள்.
அதற்குள் அவர்கள் அருகில் வந்த நிகர்வேலனோ, “எங்களுக்கும் பெரியவங்களிடம் மறைக்கணும்னு எண்ணம் இல்லை. கல்யாணம் முடிஞ்சதும் சொல்லலாம்னு இருந்தோம், அப்போ சொன்னா இதைவிட கொஞ்சம் குறைவா திட்டு கிடைச்சிருக்கும் அவ்வளவுதான், இப்போ தெரிஞ்சதுமே நல்லது தான், அதுக்காக நீ வருத்தப்படாத நயா,” என்று அவளுக்கு சமாதானம் கூறியவன்,
“தெரிஞ்சா இப்படி நடக்கும்னு தெரிஞ்சு தானே செய்தோம், நீ ஃபீல் செய்தா, இதுக்கு நான்தான் காரணம்னு எனக்கும் ஃபீல் ஆகும், தாத்தா, பாட்டி பத்தி நமக்கு தெரியாததா? வருத்தப்படாத ராகவி, மாதேஷ் அப்புறம் போன் செய்றதா சொல்லியிருக்கார். அப்போ கொஞ்சம் சந்தோஷமா பேசு, அப்போ தான் அவருக்கும் நிம்மதியா இருக்கும்,” என்று நிகர்வேலன் சொன்னதை ராகவியும் கேட்டுக் கொண்டாள்.
சாகரியோ நளினியை தேடி வந்தவர், “சாரி நளினி, அம்மா வெடுக்குன்னு பேசிட்டாங்க, அதுக்கு நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டுக்கிறேன். நான்தான் முன்னமே சொன்னேனே அவங்க பழமையில் ஊறிப் போனவங்கன்னு, அதான் அப்படி பேசிட்டாங்க, நீ அவங்களை தப்பா நினைக்காத,” என்று சமாதானம் பேசவும்,
“என்ன சாகரி, அவங்க எனக்கும் அம்மா மாதிரி தான், நான் எதுவும் தப்பா எடுத்துக்கல,” என்று நளினி கூற, சாகரி புன்னகைத்து கொண்டவர்,
“இன்னைக்கு நடந்த விஷயத்தால கல்யாணத்தில் ஏதாவது பிரச்சனை வந்துடுமோன்னு பயந்துட்டேன்.” என்று சொல்ல,
“அதெல்லாம் நல்லப்படியா கல்யாணம் நடந்து முடியும், கவலைப்படாத,” என்று நளினி அவரை தேற்றினார்.
பின் சாகரி சென்றதும் நளினியோ பேச்சியம்மாள் பேசியதை நினைவு கூர்ந்தார். அவர் இன்று மட்டுமில்லை. இந்த இரண்டு நாளாகவே தன்னிடம் ஒருமாதிரி பேசுவதாக தான் அவருக்கு தோன்றியது. என்ன இருந்தாலும் அவர்கள் அந்தஸ்திற்கு கீழ் என்ற எண்ணம் போல் என்று நினைத்தவர், இனி திருமணம் முடியும்வரை ஒதுங்கி இருந்து கொள்ள வேண்டுமென்று நினைத்தார்.
ஆனால் எல்லா நேரமும் அப்படி இருக்க முடியாதே, இன்று ஒதுங்கி இருக்க நினைத்த நளினி, ஏன் அப்படி போக வேண்டுமென்று நினைக்கும் நேரமும் வரும்,
அகம் சேர்வான்…
error: Content is protected !!