Skip to content
Post Views: 1,250
மைவிழி – 15(a)
வழமையான நேரத்திற்கெல்லாம் முழிப்பு வந்து விட்டது வாசனுக்கு.
Advertisement
சோம்பலான புன்னகையுடன் திரும்பிப் பார்க்க, இவன் பக்கம் ஒருக்களித்தபடி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் வேதவி.
மனைவியின் கண்,காது,மூக்கு என முகம் முழுக்க பார்வையை ஓட்டியவன் அவள் கழுத்திற்குப் பார்வையைக் கொண்டு வர,அங்கே இரவில் இவன் செய்து வைத்த வேலையால் காயமாகிருந்தது.
Advertisement
Advertisement
அதுவும் நேற்றிரவு இவனை அதிகம் இம்சித்த அவ்விரண்டு மச்சங்கள்! கழுதோரத்தில் சின்னதும் பெரிதுமாய் ஒன்றின் கீழ் ஒன்று அடுக்கியது போல் இருந்தது.
நேற்று போல் இப்போதும் அதை முத்தமிட வாய் துறுதுறுத்தாலும் தன்னை அடக்கிக் கொண்டவன்,அம் மச்சங்களை சுற்றிருந்த காயத்தை சுட்டு விரலால் வருடிக் கொடுக்க, அதில் விழித்திக் கொண்டாள் வேதவி.
Advertisement
“எ.. என்னங்க?”கரகரப்பாய் கேட்டவள் கழுத்தில் எதுவுமோ என தானும் தடவ, இதழ் பிரிய சிரித்தவன்,அவள் இடையில் கை கொடுத்து தனக்குள் இழுத்துக் கொண்டு ‘இச்’ வைத்தான் அம்மச்சத்தில்.
ஒரு நொடி திகைத்தவள், அவன் ஆட்கொள்கையில் அசையாதிருந்திட,
“இந்த மோல்ஸ் என்னை மோட்சமடைய வைக்குது வேதாஜி!” என சிரிப்புடன் சொன்னவன் மீண்டுமாய் அதரங்களை அழுத்தினான்.
அவள் அமைதியில்,கண் மூடி வாசம் பிடித்தவன், அவளிடையிலிருந்து கையை நகர்த்திக் கொண்டு வயிற்றுப் பகுதிக்கு வந்து,
“இந்த குட்டித் தொப்பையும் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிடிச்சு”என்று அதைப் பிடித்து அமுக்கினான்.
அவன் பிடியிலிருந்து விலக முயற்சித்து முடியாமல் போனதும் கணவனின் தாடியை பிடித்து வலிக்க இழுத்தாள் வேதவி. பழிக்குப் பழியாம்!
“ஸ்ஸ்ஸ் ஆஆ!”என்றவனிடம்,
“எழுந்திருங்க பாஸ்”என தள்ளி விட்டாள் அவள்.
சிரிப்புடன் எழுந்தமர்ந்தவன், தானும் எழ முயற்சித்தவளை படுக்கையில் வீழ்த்தி,
“கொஞ்ச நேரம் தூங்கு வேதா!” என்றான் கரிசனையாய்.
நேற்றிரவு தூங்க மூன்று மணிக்கு மேலாகியிருந்தது. இப்போதோ மணி ஐந்தரை! இருவருக்கும் தூக்கம் போதவில்லை தான்.
இவனுக்கு இதற்குப் பிறகு என்ன முயன்றாலும் தூக்கம் வரப் போவதில்லை என உணர்ந்தே மனைவியைத் தூங்கச் சொல்ல,
“வீட்ல எல்லாரும் எழுந்திருச்சிப்பாங்களே! எனக்கு தூங்க ஒரு மாதிரியா இருக்கு” என எழுந்து கொள்ளப் பார்க்க,
“ப்ச்,படுப்பா.அதெல்லாம் ஒண்ணுமில்ல. அப்டி யாராவது கேட்டா சொல்லிக்கிறேன்”
“ம்ஹூம்!”
“ச்சு, நான் தான் வேண்டாத வேலை பார்த்து உன்னை எழுப்பி விட்டேனோ?” என்றவனைப் பார்த்து சிரித்தவள்,
“நீங்க இப்படியே புலம்பிட்டிருங்க பாஸ்!நான் குளிக்கப் போறேன்”என தன்னுடைகளை எடுத்துக் கொண்டாள்.
“இரு, இரு!இப்படியே போகாதே” எனத் தடுத்தவனை இவள் என்னவெனப் பார்க்க,அசடு வழிந்தபடி தன் கழுத்தைச் சொரிந்து கொண்டவன், அவளை நகர்த்திக் கொண்டு கண்ணாடி முன் நிறுத்தி கழுத்துக் காயத்தைக் காட்டினான்.
“அடப்பாவி!”
“அடப்பாவி இல்ல!அப்பாவி” எனச் சிரித்தவனின் தாடி முடியை நொடியில் கையோடு இழுத்து விட்டாள்.
“ஸ்ஸ்ஸ்ஆ!”என தேய்த்துக் கொண்டவன் தன்னை முறைத்தவளை தானும் முறைக்க,
“கேடி வேலை பார்த்துட்டு அப்பாவின்னு ரியாக்ஷன் வேற!” என்றாள் கடுப்பாய்.
சிரித்தபடி அவளிடையைச் சுற்றிக் கையிட்டு தன்னை நோக்கி இழுத்தவன், நெற்றியோடு நெற்றி முட்டி நின்று,
“இந்த பொசிஷன் கூட நல்லாத்தான் இருக்கு!”என கண்ணடிக்க,பட்டென அவன் வாயில் அடி வைத்தாள் வேதவி.
“வாத்தியாருக்குப் பேச்சைப் பாரு!”என.
“உன் ஹைட்டை சொன்னேன்டி நான்!” என கன்னத்தில் முத்தம் வைத்தான்.
வேதவி நல்ல உயரம் என்பதால் சரியாக இவன் தோள் அளவுக்கு வருவாள்.
“பாரு,கன்னத்துல முத்தம் கொடுக்கணும்னா கூட நான் லைட்டா குனிஞ்சாப் போதும்” என்று மறு கன்னத்திலும் இதழ்களை அழுத்த,
“என்னவொரு கண்டு பிடிப்பு” என கணவன் வயிற்றில் குத்தினாள்.
இங்கு பலருக்கு குறையாகத் தெரிபவை தான் நம்மில் அன்பு வைத்த சிலருக்கு,குறைந்தது ஒருவருக்காயினும் நிறையாகத் தெரியும்.
அழகில்லை என தூக்கியெறியப்படுவது எங்கோ ஒரு மூலையில் ஒருவரால் ஆராதிக்கப்பட்டுத் தான் கொண்டிருக்கிறது!
இங்கு தன்னில் குறையாக சொல்லப்பட்டவையே இதோ தன்னை அணைத்தப்படி புன்னகை முகமாய் நின்றிருப்பவனுக்கு நிறையாகத் தெரிகிறதே!
ஆசையாய் கணவனின் கன்னம் வருடியவள்,எக்கி முத்தமிட்டு..கழுத்தில் டவலைப் போட்டு காயத்தை மறைத்தபடி வெளியேறப்போக,
“பெனிபிட்ஸ் ஆஃப் ஹேவிங் அ ஹைட் வைஃப்-னு புத்தகம் எழுதப் போறேன் வேதாஜி” என்றவனை,
திரும்பிப் பார்த்து முறைத்து,
“பேச்சைப் பாரு”என்று விட்டுச் சென்றாள் அவள்.
மேகலையும்,சௌந்தர்யாவும் சாமியறையில் இருப்பது தெரிய,அவசர அவசரமாகத் தலைக்குக் குளித்து அவர்களோடு இணைந்து கொண்டாள் வேதவி.
மருமகளின் மின்னிய முகத்தைப் பார்த்து என்ன கண்டாரோ அர்த்தமாகச் சிரித்தார் மேகலை.
பூஜையை முடித்ததும் அவரவர் வழமைக்கு திரும்பி விட,
“இன்னைக்கு மதியம் கீர்த்தியோட பெரிப்பா வீட்டுக்கு உங்களை விருந்துக்கு அழைச்சிருக்காங்க”என விபரம் சொன்னார் மேகலை.
கேட்டுக் கொண்ட வேதவி, குளித்து விட்டு வந்த கணவனிடமும் சொல்ல, அன்று மதியம் இருவரும் அங்கு சென்று வந்தனர்.அதன் பின் வந்த நாட்கள் முழுவதும் ஊர் விருந்து,உறவினர்கள் விருந்து என நேரம் பறக்க, இரவில் புது மணத் தாம்பதிகளுக்கான தனிமைகளும்,தேடல்களும் இனிமையாகச் சென்றது.
இடையில் யமுனா வேறு வேதவிக்கு அழைக்க, அழைப்பை ஏற்கவே இல்லை இவள்.
ஏன் என கேட்ட வாசனிடமும்,
“அவ நம்ம கல்யாணத்துக்கு கூட வரல.நான் கோவமா இருக்கேன்!என்னைப் பேசச் சொல்லாதீங்க” என்று விட்டாள்.
“அவளுக்கெதுவும் அர்ஜண்ட் இருந்துருக்கலாம்ல?இத்தனை தரம் கூப்பிடறாளே..!எடுத்துப் பேசேன்” என வாசன் சொல்லிப் பார்த்தும் அவள் கேட்பதாய் இல்லை.
மனைவியின் இந்த வீண் பிடிவாதமும்,கோபமும் இவனுக்கு பிடிக்காமல் தான் இருந்தது.ஆனாலும் ஒன்றும் சொல்லவில்லை வாசன்.
அடுத்த வாரம் ஆரம்பித்ததில் இருவரையுமே பள்ளி வேலைகள் இழுத்துக் கொண்டது.
அதிலும் வாசன் பன்னிரண்டாம் தரத்திற்கு பாடமெடுப்பதால் அதிக வேலைகள் இவனுக்குத் தான். முந்தைய ஒரு வாரமும் லீவ் எடுத்திருந்த காரணத்தினால் பாடசாலையிலே மேலதிக மாலை வகுப்புகள் போட்டு சிலபஸை கவர் செய்ய வேண்டியிருந்தது.
அதோடு வாசனின் மாணவிகளுக்கு தங்களது அழகான ஆசிரியர் திருமண செய்து விட்டதை எண்ணிக் கவலையே.
அவனது முதல் காதல் தோல்வி பற்றி பள்ளியில் உள்ளவர்களுக்குத் தெரியும். அதனாலேயே அவன் மேல் சாஃப்ட்கானர் இருந்தது.
திருமணத்திற்கு வாழ்த்துச் சொன்ன மாணவர்கள் வாழ்த்தட்டைகளும் கொடுத்திருக்க,கூடுதலாய் அதில் ஒரு மாணவி இவனுக்கு லவ் க்ரீட்டிங் கார்ட் கொடுத்ததை அறியவில்லை இவன்.
பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த கணவனிடமிருந்து அதையெல்லாம் பார்க்கும் ஆர்வத்தில் வாங்கிக் கொண்ட வேதவி,அக்கார்டை கண்டுவிட்டு அவனை முறைக்க,என்னவென்று தெரியாமல் முழித்தான் வாசன்.
“லவ் கார்ட் தந்துருக்காங்க உங்க ஸ்டுடென்ட்.. அதையும் வாங்கிட்டு வந்து எங்கிட்டயே கொடுக்கறீங்க. என்ன தைரியம் உங்களுக்கு!”என கடுகடுத்தாள்.
“நான் இதை கவனிக்கவே இல்லையேடி!”என சொல்ல, மேலும் முறைத்தவளைக் கண்டு,வரப் பார்த்த சிரிப்பை அடக்கிக் கொண்டு,
“ஸீ வேதவி.அழகாப் பொறந்தது என் தப்பில்லையே!”என கை விரித்தவனிடம்,அவ் அட்டையாலேயே தலையில் அடி வைத்தாள்.
“அழகு தான் ஒத்துக்கறேன்! அதுக்குன்னு அடிக்கடி சொல்லிக்காட்டி என்னை வெறுப்பேத்தாதீங்க மிஸ்டர்.கீர்த்தி வாசன்!எனக்கு கடுப்பாகுதுலே.?!” என பற்களை நறநறக்க,
“அப்போ அடிக்கடி கடுப்பாக வருமே..!”என வம்பிழுத்தான்.
“எதே.!!!”
“அழகனுக்கு வாக்கப்பட்டா இதெல்லாம் அனுபவிக்கனும் என் அழகியே..!”என கன்னம் சுவைத்தவனை,தள்ளி விட்டவள்,
“இவ்ளோ தைரியமா கார்ட் தந்திருக்காங்க.நீங்க கண்டிக்கிறதில்லயா வாசன்?” என்றாள் தீவிரமாய்.
விளையாட்டைக் கை விட்டவன்,
“கண்டிக்கிறது தான் வேதவி. எவ்ளோ சொன்னாலும் குருட்டு தைரியத்துல இந்த மாதிரி செஞ்சு வெச்சுடறாங்க.!நான் நாளைக்கே இந்தப் பொண்ணுகிட்ட பேசறேன்” என்றான்.
“ம்ஹூம்..அடிக்கடி இப்படின்னா.. உங்க கண்டிப்பு வலுவா இல்லைன்னு அர்த்தம்! இதோட நல்லாவே கண்டிச்சு வைங்க” என்றவள்,
“இனிமே இப்படி கார்ட் வீடு வரைக்கும் வரட்டும், அப்பறம் உங்களை டிவோர்ஸ் தான்!” என விளையாட்டாய் சொல்ல,
அவனிடம் அத்தனை நேரமிருந்த இலகுத் தன்மை மறைந்து..உடல் இறுகியவன், அதன் பின்னான நாட்களில் மனைவியோடு பேச்சை சுருக்கித் தேவைக்கு மட்டுமே பேச்சு என்பதாக இருக்க, இரண்டு நாட்களாக மௌனமே உருவாய் வலம் வந்து கொண்டிருந்தவன் கோவத்தை அப்போது தான் கவனித்தாள் வேதவி.
எதற்கிந்த கோபம் எனப் புரியாது தவித்தவள்,தான் இறுதியாகப் பேசியதை எண்ணிப் பார்த்து தன்னையே நொந்து கொண்டாள்.
கணவனை மலையிறக்கம் செய்யும் மார்க்கமறியாது மண்டைப் பிடித்துக் கொண்டவள்,தன் தவறு உணர்ந்து மன்னிப்புக் கேட்கவும் செய்ய,
“டிவோர்ஸ்-ன்னது சின்ன வார்த்தை இல்ல வேதா. இப்போ ஈஸியா சொல்ல ஆரம்பிச்சது நாளைக்கு நமக்குள்ள அந்த எண்ணத்தை விதைக்கவும் வாய்ப்பிருக்கு”என்று ஓரளவாய் இறங்கி வந்தான்.
ஒன்றும் மட்டும் நன்றாகப் புரிய வந்தது இவளுக்கு. வார்த்தைகளில் கவனம் வைப்பதோடு கணவனுக்கு கோபம் என்றால் மௌனத்திலே தான் காட்டுவான் என.
இது ஒரு பக்கமெனின், பள்ளி சென்ற வேதவிக்கு.. யமுனா வேலையை விட்டு விட்டதாகத் தகவல் கிடைக்க,கோபத்தை தள்ளி வைத்து விட்டு தோழிக்கு அழைத்தாள்.
யமுனாவின் எண் பாவனையில் இல்லையென்று வர, குழம்பிப் போனவளாய் அவளது சித்தி வீட்டில் விசாரிக்க, சென்னை சென்று விட்டாள் எனத் தகவல் கூறினர்.
மேலும் விசாரிக்க விருப்பமில்லாது, இவள் திருமணத்தின் போது யமுனா அனுப்பியிருந்த வாட்சாப் மெசேஜைப் பார்க்க,‘அவளது தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என சென்னை செல்வதாகவும்,அங்கேயே இனி இருக்கப் போவதாகவும், திருமணத்திற்கு வராதத்திற்கு மன்னிப்புக் கேட்டும்’ குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள் அவள்.
கணவனிடம் இதைச் சொல்லி வேதவி புலம்ப,இவளைத் தான் கடிந்தான் வாசன்.
“அவ கால் பண்ணிருந்தப்ப அட்டென்ட் செய்யாம இருந்துட்டு.. இப்ப வந்து புலம்பினா சரியா? உன் வீண் பிடிவாதமும்,கோவமும் என்னத்துக்கு தான் ஆச்சு!” என குட்டு வைத்தவனை,
முறைத்தவள்,
“போன வாரம் தானே கால் செய்தா! இப்ப அந்த நம்பரே யூஸ்ல இல்லைன்னு வருதே?” என்றாள் சுணக்கமாய்.
“அதை சொல்லத் தான் லாஸ்ட்டா உனக்கு ஃபோன் பண்ணிருந்தாளோ என்னவோ?”என சரியாகக் கணித்தான் வாசன்.
வேதவி கேட்டுக் கொண்டாலும் நெருடல் இருக்கத் தான் செய்தது.
மனைவியின் கவலை முகம் பார்த்தவன்,தனக்குத் தெரிந்தவர்களிடம் யமுனா பற்றி விசாரிக்கச் சொல்வதாகக் கூற மறுத்து விட்டாள் அவள்.
தோழியே கூப்பிடட்டும் என இருந்து கொள்ள, வற்புறுத்தவில்லை வாசன்.
சனிக்கிழமை அன்று காலையிலே ஜெர்சியும்,ட்ராக் பேண்டும்,கையில் பேட்டுமாக நின்றவனை முறைத்தாள் வேதவி.
“எங்க போறீங்க?”
“மேட்ச் விளையாட வேதா! ஏன் கேக்குற?” எனவும்,மேலும் முறைத்தாள்.
“முறைச்சா என்ன அர்த்தம்?”
“ஹா.. போக வேணான்னு அர்த்தம்!” என்றாள் அவள்.
“ப்ச்,வேதா! இன்னைக்கு தான் நானே ஃப்ரீயா இருக்கேன். போகக்கூடாதுன்னா..?” சலித்துக் கொண்டான்.
“அதே தான் நானும் சொல்றேன்.. இன்னைக்கு தான் ரெண்டு பேருமே ஃப்ரீ! நீங்களும் ஸ்கூல்,ஸ்பெஷல் கிளாஸ்னு இருந்தீங்க.நானுமே பிஸி! ஃப்ரீ டே இன்னைக்காச்சும் உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ண நினைச்சா.. மேட்ச் போறேன்றீங்க”
“ப்ச், நாளைக்கு பார்த்துக்கலாம்.சாட்டர்டே ஃபுள்ளா பசங்க கூட மேட்ச்ல தான் இருப்பேன்”என வெளியேறப் போக,
“போங்களேன்..”என்று முகத்தை தூக்கி வைத்தவளிடம்,
“இப்படி இருந்தா போக மாட்டேனா! இதுல என்னை கண்ட்ரோல் செய்ய நினைக்காதே”என்று விட்டுச் சென்று விட்டான்.
மேட்ச் முடிந்து வீட்டுக்கு கிளம்பியவனிடம் நாளை விருந்திற்கு வருமாறு அழைத்தான் சிவா.
வீடு வந்தவன்,முறுக்கிக் கொண்டு திரிந்த மனைவியிடம் இதைச் சொல்ல, வேண்டுமென்றே வர முடியாது என்றாள்.
“டே, வேதா! என் மேல இருக்கிற கோபத்துக்கு ரெண்டு அடி வேணா அடிச்சுக்க. மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதப்பா”என சொல்ல, இது தான் சந்தர்ப்பம் என சொன்னதை விட இரட்டிப்பு மடங்கில் அவன் முதுகில் அடித்தவளைக் கண்டு அலறி விட்டான் வாசன்.
“என்னடி.. ஒரு பேச்சுக்கு சொன்னா பொசுக்குன்னு அடிச்சுட்ட!? எத்தன நாள் கோபம்டி..? இந்த பொழ பொழக்குற”என முதுகைத் தேய்த்து விட்டுக் கொண்டான்.
அடித்தவளே அவன் முதுகை வருடிக் கொடுத்தபடி,
“கண்ட்ரோல் பண்றேன்னு இனிமே சொல்வீங்க?”எனக் கேட்டே தாடி முடிகளை கையோடு எடுக்க,
“ஆஆவுச்..!!தாடிய எடுக்க வேணாம்னு சொல்லும் போதே உஷாராகிருக்கணுமோ..!சொன்னது இதுக்குத் தானா.? நீயே எல்லாம் முடியையும் புடுங்கி எடுத்துருவ போலருக்கு”என சொல்லி, மேலும் தாக்க முயன்றவளை முறியடித்து,முத்தத்தால் அர்ச்சித்து,மொத்தமாய் எடுத்துக் கொண்டே விட்டான் வாசன்.
ஒருவாறு அவளைக் கெஞ்சிக் கொஞ்சி சமாதானம் செய்திருந்தான் இவன். அவளும் பெரிய மனதாக வருவதாய் ஒத்துக் கொண்டாள்.
இப்படியாய் சிறு சிறு சண்டைகளும், சமாதானங்களும், கெஞ்சல்களும் கொஞ்சல்களுமாய் அன்றைய நாள் கழிய, மறுநாள் நண்பனின் வீட்டிற்கு மனைவியோடு சென்றான் வாசன்.
அவர்கள் வீட்டிற்குச் செல்வதற்கு இலகுவான வழி இருக்க,அதை தவிர்த்து வேறு வழியாகப் பாதை மாற்றிச் சென்ற கணவனைக் வேதவி கவனித்தாலும் ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை.
இடையில் நின்று,சிவாவின் மகளுக்குத் தான் அதிகமாய் பொருட்கள் வாங்கிக் கொண்டான்.
வந்தவர்களை அன்போடு வரவேற்றாள் பார்கவி.
வாசனுக்கு பிடித்தவைகளை சமைத்து வைத்திருக்க,
“எங்கம்மா தான் மகளை மறந்து மருமகனை கவனிக்கிறாங்கன்னா.. நீங்களும் என்ன பார்கவி, இப்படி அநியாயம் பண்றீங்க.?” என கிண்டல் செய்தாள் வேதவி.
“என்ன இருந்தாலும் கீர்த்தி அண்ணன தெரிஞ்சதுனால தானே வேதவியும் வந்தாங்க.! இன்னைக்கு எங்க அண்ணன் ஸ்பெஷல் தான் வேதா!”என பார்கவியும் சொல்ல,
“அதெல்லாம் சரி வராதுங்க பார்கவி. என்ர பொஞ்சாதிக்கு புடிச்சது ஆக்காத வீட்ல நான் இருக்க மாட்டேனுங்”என வாசன் கொங்குத் தமிழில் கேலி பேசினான்.
“நீங்க வேணாப் போங்க. அம்மணி இருக்கட்டும்!அடுத்த முறை வரும் போது உங்க ஸ்பெஷல் செய்திடலாம் வேதா” பார்கவி அவனை வாரிவிட, ஹைஃபை அடித்துக் கொண்டனர் பெண்கள் இருவரும்.
ஏற்கனவே திருமணத்தின் போது பார்கவி அறிமுகமாகிருக்க, இப்போது அவளோடு இன்னும் நன்றாகவே ஒத்துப் போனது வேதவிக்கு.
அதிலும் குட்டிப் பெண் வர்ஷினி கீர்த்தி வாசனின் மடியை விட்டு இறங்கவில்லை.
“கீக்கி மாமா!” என அவனைக் கட்டிக் கொண்டு மடியிலிருந்து குதிப்பதும்,வாசனோடு சேர்ந்து சிவாவை வெறுப்பேற்றுவதுமாக ஒரே ஆட்டம் தான் இருவரும்.
வர்ஷினியைக் கட்டிக் கொண்டு கொஞ்சியவனை முகம் முழுவதும் புன்னகையுடன் பார்த்திருந்தாள் வேதவி.
“உனக்கும் ஒரு பொண்ணு பொறக்கும்லடா.!நானும் இதே மாதிரியே உன் பொண்ணோட சேர்ந்து உன்னைப் பழிவாங்கிக் காட்றேன்”என சிவா கடுப்படிக்க,
“முடிஞ்சா அப்ப பார்த்துக்கோடா என் வென்று” என சவாலாகச் சொன்னான் வாசன்.
நண்பர்கள் ஒருத்தரை ஒருத்தர் வாரிக் கொண்டிருக்க.. பேச்சு வாக்கில்,
“என்னடா பொண்ணு பொறந்தா உன் முன்னால் காதலி பேர் வைப்ப தானே?தங்கச்சிம்மா நீதான் பார்த்துக்கணும்” என்றிருந்தான் சிவா.
வேதவிக்கு அந்தப் பேச்சு ரசிக்கவில்லை.சட்டென அவள் முகம் இறுக்கமாகி விட, வாசன் மனைவியைக் கண்களால் கெஞ்சவுமே இளகினாள்.
“ஸாரிம்மா வேதா!”என சிவா சொல்ல,தலையை மட்டும் அசைத்துக் கொண்டாளே தவிர பேச்சுக்கு கூட ‘பரவாயில்லை’ என்று சொல்லவில்லை.
அதன் பின் நிலைமை சீராகினாலும் வேதவியிடம் அந்த பேச்சின் தாக்கம் இருக்கவே செய்தது.
“ஜோக்குன்னாலும் இப்படியா பேசுவீங்க!”பார்கவி தான் கணவனைக் கடிந்தாள்.
பின் சிவா வீட்டிலிருந்து புறப்பட்டவர்கள்,நேரே திண்டல் மலை முருகன் கோவிலுக்குத் தான் வந்தனர்.
முந்தய நாளே இங்கு வர அவள் கேட்டிருக்க,இப்போது மனைவி முகம் பார்த்து விட்டு இங்கழைத்து வந்து விட்டான்.
வரும் வழி நெடுகிலும் ஒரு வார்த்தை பேசவில்லை வேதவி.
பெருமூச்சுடன் அவளை இறக்கி விட்டவன்,
“நீ உள்ள போ!நான் வண்டியை பார்க் பண்ணிட்டு வரேன் வேதா”
மௌனமாய்த் தலையசைத்துச் செல்பவளைக் கண்டு நண்பனை மனதுக்கு அர்ச்சித்துக் கொண்டே.. வண்டியை நிறுத்தி விட்டு, மனைவியிடம் விரைந்தான்.
அங்கோ,வேதவி யாருக்கோ உதவி செய்து கொண்டிருக்க,
“என்னாச்சு வேதா?”என்றபடி அவள் கைபிடித்த வாசன், முன்னிருந்தவர்களைப் பார்க்க,
அங்கிருந்ததோ சஞ்சனாவின் பெற்றோர்.இவனைக் கண்டதும் அவர்களது முகம் இளக்காரச் சிரிப்புடன் வளைந்தது.
error: Content is protected !!