Skip to content
Post Views: 2,691

அகம் 2
Advertisement
நயாஸ் பீச் ரெசார்ட் (Naya’s Beach Resort)
(நிகர் குழுமம்)
Advertisement
என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்த அந்த ரெசார்ட்டின் நுழைவு வாயிலில் கார் நுழைந்தது.
Advertisement
அந்த பெயரை பார்த்து, “அம்மா, அவங்களுக்கு சொந்தமான துணி கடைகளுக்கும் நகை கடைகளுக்கும் நிகர் என்ற பெயர் தானே இருக்கும், இப்போ என்ன இந்த ரெசார்ட்க்கு வேற பெயர் இருக்கு,” என்று தனக்கு தோன்றிய சந்தேகத்தை நன்மதி கேட்க,
Advertisement
“வெஸ்டர்ன் கலெக்ஷன்க்கு தனி ஷோரூம் வச்சு நயாஸ் பேஷன் அப்படின்னும், நகைக் கடையில் புது ட்ரண்டிங் கலெக்ஷனுக்கு நயாஸ் ட்ரண்ட்ஸ் அப்படின்னும் பேர் வச்சிருக்காங்களே தெரியாதா? அதே பேரை இதுக்கும் வச்சிருக்காங்க,” என்று நன்மொழி பதில் கூறினாள்.
“அட ஆமாமில்ல, நான் மறந்தே போயிட்டேன்.” என்ற நன்மதி,
“ஆமாம் இந்த பேருக்கு என்ன அர்த்தம்?” என்று கேட்க,
“நயா என்றால் இந்தியில் புதுசுன்னு அர்த்தம்,” என்று நன்மொழி பதில் கூறவும்,
“நயம் என்றால் தமிழில் அழகுன்னு அர்த்தம்.” என்று நளினி கூறினார்.
அதைக்கேட்டு, “ஓ அப்படியா?” என்ற நன்மதியோ,
“நம்ம அக்கா பேரை சுருக்கி கூப்பிட்டாலும் நயான்னு வருமில்ல,” என்றாள்.
அதுவரை அவர்கள் பேச்சுகளில் தலையிடாமல் அலைபேசியை பார்த்தப்படி வந்த நயந்தினியோ, “உதை விழும் உனக்கு, என் பேரை எதுக்கு வைக்கப் போறாங்க,” என்று கேட்டாள் தங்கையை பார்த்து,
“ஓ உனக்கு அந்த ஆசை வேற இருக்கா?” என்று நன்மொழி அவளை கேலி செய்ய,
“எனக்கு ஏன் அந்த ஆசை? பாருங்க ம்மா இவளை,” என்று நயந்தினி அன்னையிடம் குறை படித்தாள்.
“சும்மா விளையாட்றாங்க, அதை சீரியஸா எடுத்துப்பியா?” என்று நளினி மகளுக்கு சமாதானம் கூற,
“ஆமா எது சொன்னாலும் இப்படியே சொல்லுங்க, என்னைக்கு எனக்கு சார்பா பேசியிருக்கீங்க,” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கார் ரெசார்டின் அலுவலகம் அமைந்திருக்கும் மையப் பகுதியில் வந்து நின்றது.
அதனால் மேற்கொண்டு பேசாமல் காரை விட்டு இறங்கியவர்கள், தங்கள் உடமைகளை எடுத்து கொண்டிருந்த நேரம், சாகரியும் அவர் கணவர் கார்மேகனும் அங்கு வந்தவர்கள், அவர்கள் நால்வரையும் வரவேற்க, நளினிக்கு இன்னுமே மனதிற்கு திருப்தியாக இருந்தது.
திருமண பத்திரிக்கை வைக்கும்போதே நேரில் பார்த்து அதிகம் பேசியிருந்ததால், இப்போது சாதாரண நலம் விசாரிப்புகள் நடந்து கொண்டிருக்க, சாகரியின் மூத்த சகோதரர் சேகரன் அங்கு வந்தார். வேட்டி சட்டையில் எளிமையாக வந்து நின்றவர் தான் நிகர் குழுமத்தின் உரிமையாளரும் நிர்வாகியும் ஆவார்.
தமிழ்நாடு முழுக்க பல முக்கிய நகரங்களில் நிகர் என்ற பெயரில் துணி கடைகளும், நிகர் ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகை கடைகளும் இருக்கிறது. சென்னையிலும் திருநெல்வேலியிலும் 22 வருடங்களுக்கு முன்பு இரண்டு கடையாக ஆரம்பித்தது இப்போது பல கிளைகளாக வளர்ந்திருக்கிறது. ஆரம்பத்தில் சேகரன் தனி ஒருவராக பார்த்துக் கொண்டிருந்த தொழிலை சில வருடங்களாக தான் குடும்பம் மொத்தமாக சேர்ந்து கவனித்துக் கொண்டிருக்க,
வெறும் துணிக் கடைகளும் நகை கடைகளுமாக இருந்த தொழிலை, வீட்டுப் உபயோகப் பொருட்கள் பெண்களுக்கான மற்ற அழகு சாதனங்கள் இப்படி பலதும் ஒரே இடத்தில் அமைவது போல் ஆரம்பித்து இப்போது வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பவன், சேகரனின் ஒரே வாரிசு நிகர்வேலன். நம் கதையின் நாயகன். கல்லூரி படிப்பு முழுவதும் லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்தவன், தமிழ்நாடு முழுக்க பரவியிருந்த தொழிலை இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் விரிவடைய செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறான். அதுமட்டுமில்லாமல் இணையத்தின் மூலமாக அவர்கள் பொருட்கள் வீட்டிலேயே சென்றடைவதற்கான வேலைகளையும் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறான்.
நளினியை பார்த்து சிறிது காலங்கள் ஆகவே, “எப்படி ம்மா இருக்க?” என்று சேகரன் நலம் விசாரிக்க, உங்க புண்ணியத்தில் நல்லாவே இருக்கிறோம் அண்ணா,” என்று நளினி பதில் கூறினார்.
“நான் செஞ்சது சாதாரண உதவி, அதை எவ்வளவு காலத்துக்கு பேசுவ,” என்றவர், பிள்ளைகள் மூவரையும் கவனித்து,
“எல்லாம் நல்லா வளர்ந்துட்டாங்க,” என்றார்.
“ஆமாம், பெரியவ இஞ்சினியரிங் முடிச்சிட்டா, கடைக்குட்டிங்க 10 வது பரிட்சை எழுதியிருக்காங்க,” என்று நளினி பதில் கூறினார்.
“நல்லது, நல்லா படிங்க,” என்று சேகரன் கூற,
அவர் மனைவி இறந்து மூன்று வருடங்கள் ஆகிறது என்பதால், “உங்க மகன் நிகர்வேலன் எப்படி இருக்கான் ண்ணா,” என்று நளினி அவரது மகனை நலம் விசாரிக்க,
“நல்லா இருக்கான் ம்மா, இப்போ வேலை விஷயமா பெங்களூரில் இருக்கான்.” என்று சேகரன் அவருக்கு பதில் கூறவும்,
அன்னை அவனைப் பற்றி விசாரிக்கும் போது நயந்தினி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. சேகரன் அவன் பெங்களூரில் இருப்பதாக சொன்னதை கேட்டு, அப்போ இங்க வர மாட்டானா? என்று நினைத்து அவள் மனம் குதூகலம் அடைந்தது.
“பெங்களூர்ல புதுசா எங்க நிகர் க்ரூப்ஸோட இன்னொரு பிரான்ச் ஆரம்பிக்கிற வேலையா தான் நிகர் அங்கப் போயிருக்கான். டிரஸ், ஜுவல்ஸ், மத்த எல்லா திங்க்ஸும் ஒரே இடத்தில கிடைக்கிற மாதிரி ஒரு பெரிய ஷோ ரூமா அங்க ஆல்ரெடி கட்டி முடிச்சுட்டாங்க, சீக்கிரம் அதுக்கு திறப்பு விழா நடக்கிற வேலை நடந்துட்டு இருக்கு, அந்த ஷோரூமை முழுசா பொறுப்பேத்து பார்த்துக்கப் போறது ராகவியும் மாப்பிள்ளையும் தான், அவங்க கல்யாணத்துக்கு அந்த ஷோரூமை கிஃப்ட்டா கொடுக்கணும்னு தான் நிகர் இந்த வேலையில் தீவிரமா இருக்கான்.” என்று சாகரி பெருமையாக சொல்ல, நயந்தினி முகத்தில் மீண்டும் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“அப்புறம் மாப்பிள்ளை இந்த ஈவன்ட் அரேஞ்ச்மெண்ட் விஷயமா சிலரிடம் பேசணும்னு சொல்லி இருந்தேனே, நம்ம போய் அவங்களை பார்த்துட்டு வந்துடுவோமா?” என்று சேகரன் கார்மேகனிடம் கேட்க,
“ம்ம் போகலாம் மச்சான்.” என்று அவரும் பதில் கூறினார்.
“சரி சாகரி, வந்தவங்களுக்கு அவங்களோட தங்கப் போற சூட்டை காட்டு, நானும் மாப்பிள்ளையும் கொஞ்ச நேரத்தில் வந்துட்றோம்,” என்று சகோதரியிடம் கூறிய சேகரன்,
நீங்க கல்யாணத்துக்கு வந்து கலந்துகிட்டதுல ரொம்ப சந்தோஷம் ம்மா, எல்லாம் போய் உங்களுக்கான சூட்ல குளிச்சிட்டு சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க, நாம அப்புறம் பார்க்கலாம்,” என்று நளினயிடமும் கூறிவிட்டு இருவரும் கிளம்பிவிட்டனர்.
அவர்கள் சென்றதும், “வாங்க உங்களுக்கான சூட் காட்றேன்.” என்று சாகரி அவர்களை விருந்தினர்களுக்கு ஏற்பாடு செய்த அறைகள் இருக்கும் பகுதிக்கு கூட்டிச் சென்றவர், அங்கு ஒரு அறையை திறந்து காட்டி, “உங்க 4 பேருக்காக இந்த ஃபேமிலி சூட் தான் ஒதுக்கியிருக்கேன். உங்களுக்கு இங்க எல்லாம் வசதியும் இருக்கு, இதுவே ஓகேவா, இல்லை வேற சூட் ஏற்பாடு செய்யவா?” என்று சாகரி கேட்க,
“எங்களுக்கு இதுவே போதும் சாகரி, ரொம்ப நல்லா இருக்கு,” என்று நளினி அதற்கு பதில் கூறவும்,
அதற்குள் அறை முழுக்க சுற்றி வந்த மதியும் மொழியும், “ஆமாம் ஆன்ட்டி, பால்கனியில் இருந்து பார்க்க பீச் தெரியுது. அதனால எங்களுக்கு இந்த சூட் போதும்,” என்றனர்.
ஆனால் நயந்தினிக்கோ அங்கே வீட்டில் அவளுக்கென்று தனி அறையில் இருந்தவளுக்கு, இங்கே நால்வரும் சேர்ந்து ஒன்றாக இருக்கப் போவது பிடிக்காததால் அமைதியாக நின்றிருந்தாள்.
அதை கவனித்த சாகரியோ, “என்ன நயனி, அமைதியா நின்னுட்டு இருக்க, உனக்கு இது பிடிக்கலையா?” என்று கேட்க,
“அவளுக்கு ஏன் பிடிக்காம போகப் போகுது? அவளுக்கும் பிடிக்கும்,” என்று நளினியே அதற்கு பதில் கூறியவர்,
“அப்படித்தானே நயனி,” என்று மகளிடம் கேட்டதற்கு,
“ம்ம் ஆமாம் ஆன்ட்டி,” என்று வேண்டா வெறுப்பாக பதில் கூறினாள்.
பின், “ராகவி அக்கா, ரோஹன் எல்லாம் இங்க ரெசார்ட்ல இருக்காங்களா? இல்லை வீட்டிலேயா?” என்று அவளே சாகரியிடம் கேட்க,
“எல்லாம் காலையிலேயே வந்துட்டோம், ரோஹன் அவனோட ரூம்ல இருக்கான். ராகவி ஃப்ரண்ட்ஸ் கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் வந்தாங்க, அவங்க எல்லாம் இங்க ரெசார்ட்ல இருக்க ஸ்பாக்கு போயிருக்காங்க,” என்று அவர் பதில் கூறவும்,
“ஹை இங்க ரெசார்ட்ல ஸ்பாலாம் இருக்கா ஆன்ட்டி?” என்று நன்மதி கேட்க,
“ஆமா ரெசார்ட் உள்ள ஸ்பா, விளையாட இண்டோர் கேம்ஸ் எல்லாம் இருக்கு,” என்று அவர் பதில் கூறவும்,
“ஹை ஜாலி,” என்று மொழி, மதி இருவரும் ஹைஃபை கொடுத்துக் கொண்டனர்.
“சரி எல்லாம் ஃப்ரஷ் ஆகிட்டு சாப்பிடுங்க, அங்க ரெஸ்ட்டாரன்ட் வந்து சாப்பிட்டாலும் ஓகே, இல்லை இங்க ரூம்க்கே வரவச்சாலும் ஓகே, என்று மற்ற தகவல்களை அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,
“ஹை கைஸ்,” என்றபடி ரோஹன் அங்கு வந்தான்.
அவர்கள் இரு குடும்பமும் அருகருகே வீட்டில் வசித்தது மட்டுமில்லாமல், அந்த பகுதியில் உள்ள பிரபல பள்ளியில் தான் ராகவி, ரோஹன், நயந்தினி அனைவரும் படித்தனர். இப்போது மொழி, மதியும் அங்கு தான் படிக்கின்றனர். அதிலும் ரோஹனுக்கும் நயந்தினிக்கும் ஒரே வயது. ஒரே வகுப்பு வேறு. ஆனால் பதினோறாம் வகுப்பில் அவன் வணிகத்தை பாடமாக எடுத்திருக்க, நயந்தினி கணினி அறிவியலை தேர்ந்தெடுத்திருந்தாள். ராகவியும் கணினி அறிவியல் படிப்பு படித்ததால் அவளுடன் சேர்ந்து படிக்கவென அடிக்கடி நயந்தினி அவர்கள் விட்டிற்கு போய்விடுவாள்.
சாகரியின் திருமணத்தின் போதே அவர் கணவர் கார்மேகன் வெளிநாட்டில் தான் வேலை செய்திருந்தார். அவர் சம்பாதியத்தில் வாங்கி கட்டிய வீடு தான் அது. சேகரன் தங்களுக்கு சொந்தமான நிலைத்தை விற்று தொழில் ஆரம்பித்ததால் தொழிலில் சாகரிக்கும் அப்போதே பங்கு பிரித்துவிட்டார். தொழிலில் முன்னேற்றம் காண ஆரம்பித்ததும் கார்மேகனையும் வெளிநாட்டில் வேலையை விட்டு இந்த தொழிலை பார்த்துக் கொள்ள சொல்லி அழைத்தபோது, அவரோ முதலில் தயக்கத்தில் அதை மறுத்தவர், பின் சில வருடங்களுக்கு முன்பு தான் ஒத்துக் கொண்டு இந்தியா திரும்பி வந்தார்.
சேகரன் சென்னை, திருநெல்வேலி இரண்டு ஊரிலும் தொழில் ஆரம்பித்ததால், திருநெல்வேலியில் அவர்களது சொந்த கிராமத்தில் தாய் தந்தையரோடு தான் வசிக்கிறார். ஆனாலும் சென்னையின் முக்கிய பகுதியிலும் பெரிய வீடு கட்டியிருந்தார். அதில் தங்கை குடும்பத்தை குடியேறும்படி சொல்லிக் கொண்டிருக்க, ரோஹனுக்கு பள்ளிப் படிப்பும் ராகவிக்கு கல்லூரி படிப்பும் முடியும்வரை அந்த வீட்டில் இருந்தவர்கள் அதன்பின் அந்த பெரிய வீட்டிற்கு குடியேறிவிட்டனர்.
ரோஹனும் நிகர்வேலனை போல் லண்டன் பல்கலைக்கழகத்தில் தன் கல்லூரி படிப்பை படிக்கிறான். இப்போது சகோதரியின் திருமணத்திற்காக விடுமுறையில் வந்திருக்கிறான். அதனால் அவர்கள் அந்த வீட்டிலிருந்து சென்றபிறகு ஏற்கனேவே அவனை ஒருமுறை தான் பார்த்திருக்கிறார்கள். அதற்குபிறகு இப்போது தான் அனைவரும் அவனை பார்க்கிறார்கள்.
“எப்படி இருக்கீங்க ஆன்ட்டி,” என்று ரோஹன் நளினியை விசாரிக்க,
“நான் நல்லா இருக்கேன் ரோஹன். நீ எப்படி இருக்க?” என்று அவர் பதிலுக்கு விசாரித்தார்.
“அம்மா, ரோஹன் அண்ணா ஃபாரின்க்கு போய் இன்னும் ஹாண்ட்சம் ஆகிட்டாங்க,” என்று நன்மொழி கூற,
“ஹே அப்படியா சொல்ற, அவ்வளவு ஹாண்ட்சமாவா இருக்கேன்.” என்று அவன் நம்பமுடியாமல் கேட்கவும்,
“ஆமாம் ண்ணா, முன்ன விட ஸ்டைலிஷா, ஸ்லிம்மா ஆகிட்டீங்க,” என்று நன்மதியும் கூறினாள்.
“பார்த்தீங்களா ம்மா, இவங்க ரெண்டுப்பேரும் சொன்னதை கேட்டீங்களா? நீங்களும் தான் இருக்கீங்களே, என்னைப் பார்த்ததும், என்ன கண்ணா இப்படி இளைச்சு போய் வந்திருக்கன்னு எப்போதும் கவலைப்பட்றதே வேலை.” எனறு ரோஹன் தன் அன்னையை பார்த்துக் கூற,
“எல்லா அம்மாவும் இப்படித்தான் ரோஹன், அதான் பாசம்,” என்று நளினி அதற்கு பதில் கூறினார்.
“நல்லா சொல்லு நளினி,” என்ற சாகரி,
“நீ பேசிட்டு பொறுமையா வா, நான் மத்தவங்களை போய் கவனிக்கிறேன்.” என்று மகனிடம் கூறிய சாகரி,
“ராகவி வந்ததும் அனுப்பிவிட்றேன் நளினி,” என்று அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
நயந்தினி அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்தப்படி நின்றிருக்கவே, “ஹே என்ன நயனி, கண்டுக்கவே மாட்டேங்குற,” என்று ரோஹன் அவளிடம் பேச்சுக் கொடுக்க,
“நீதான் என்னை கண்டுக்கவே இல்லை,” என்று அவள் பதில் கூறியவள்,
“ஆமாம் ஸ்டடீஸ் எப்படி போகுது?” என்று கேட்டாள்.
“அது ஒருபக்கம் போகுது. நான் ஒருபக்கம் போறேன்.” என்று அவன் விளையாட்டாக பதில் கூற,
“ஹே நீதான் படிப்ஸ் ஆச்சே, அப்புறம் என்னடா?” என்று நயந்தினி கேட்டாள்.
“ஆனாலும் நிகர் மாம்ஸ் யூனிவர்சிட்டி டாப் தெரியுமா? அதையே எல்லோரும் என்னிடமும் எதிர்பார்ப்பாங்க,” என்று அவன் பதில் கூற,
‘ம்ம் இது வேறயா? அவனை பார்க்காம இருந்தாலும் அவனைப்பத்தியே எல்லாம் பேசிட்டு இருக்காங்களே,’ என்று நினைத்துக் கொண்டவள்,
“கையில் ஐந்து விரலும் ஒரே மாதிரியா இருக்கு ரோஹன். அவங்களை போல நீயும் வரணும்னு உங்க வீட்டில் எதிர்பார்ப்பதே தவறு, நீ கண்டிப்பா உன்னோட பெஸ்ட்டை கொடுப்ப ரோஹன்.” என்று தோழியாக அவனை ஊக்கப்படுத்தினாள்.
அதைப்பார்த்திருந்த நளினிக்கோ, மகளை இங்கு அழைத்து வரவேண்டுமென்ற தனது யோசனை இப்போது நூற்றுக்கு நூறு சரியாகத் தான் பட்டது. தங்கள் மூவரிடத்தில் தான் ஒதுக்கம் காட்டுகிறாள். ஆனால் இங்கு ரோஹனை பார்த்ததும் சகஜமாக பேச ஆரம்பித்துவிட்டாள். இப்படியாவது அவளிடம் மாற்றம் வருகிறதா என்று பார்ப்போம் என்று நினைத்தப்படி கொண்டு வந்த பொருட்களை அங்கிருந்த அலமாரியில் அடுக்கிக் கொண்டிருந்தார். மதியும் மொழியும் பால்கனியில் நின்று கடற்கரையை வேடிக்கை பார்த்திருந்தார்கள்.
தோழி பேசியதை கேட்டு, “நீ சொல்றது போல கண்டிப்பா என்னோட பெஸ்ட்டை கொடுப்பேன் நயனி,” என்ற ரோஹன்,
“ஆமாம் உனக்கு காலேஜ் முடிஞ்சிடுச்சுல்ல, மேல என்ன செய்யலாம்னு இருக்க, ப்ளேஸ்மெண்ட்ல ஏதாச்சும் நல்ல ஜாப் ஆஃபர் வந்துச்சா?” என்று அவளிடம் கேள்விகளை கேட்கவும்,
“இப்போதைக்கு ஜாப் போகற ஐடியா இல்லை ரோஹன். மேல படிக்கலாம்னு இருக்கேன். எம்.எஸ் க்கு அப்ளை செய்யலாம்னு இருக்கேன்.” என்று கூறியவள், அன்னை அதை கவனிக்கிறார்களா? என்று ஓரப்பார்வை பார்த்தாள்.
இதுவரை அவள் அன்னையிடம் இதைப்பற்றி சொல்லியிருக்கவில்லை. “பிளேஸ்மென்ட் என்னாச்சு?” என்று அவர் கேட்டபோது,
“மேல படிக்கலாம்னு இருக்கேன்.” என்று மட்டுமே பதில் கூறியிருந்தாள். மற்ற எந்த தகவல்களையும் அப்போதே அவரிடம் அவளுக்கு சொல்ல தயக்கம், அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு அதன்பின் அன்னையிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தவள், இப்போது அன்னையை அருகில் இருக்கும்போதே தோழன் கேட்கவே சொல்ல வேண்டியதாக ஆயிற்று,
தோழி சொன்னதை கேட்டு, “ஹே சூப்பர் நயனி, எங்க யூனிவர்சிட்டியில் வந்து படியேன்.” என்று அவன் கூற,
“இல்லை ரோஹன், யூ. எஸ் இல்லை ஆஸ்திரேலியா தான் மைண்ட்ல வச்சிருக்கேன். அங்கேயே நல்ல ஜாப் கிடைக்கற மாதிரி பார்த்து எது பெஸ்ட்ன்னு யோசிச்சு தான் அப்ளை செய்யணும்,” என்று நயந்தினி பதில் கூறியவள். மீண்டும் அன்னையை பார்த்தாள். தான் வெளிநாட்டில் படிக்கப்போவது தெரிந்தால் அதற்கு தடைப் போடுவாரோ? என்று அவளுக்கு கொஞ்சம் அச்சமாகவும் இருந்தது.
“ம்ம் உனக்கு எங்க விருப்பமோ அங்க படி,” என்று ரோஹன் அவளிடம் கூற, அவளும் தலையசைத்துக் கொண்டாள்.
அவர்கள் பேசியதை நளினியும் கேட்டுக் கொண்டுதானிருந்தார். மகள் இப்படி ஒரு திட்டம் வைத்திருக்கிறாள் என்பது அவருக்கு கொஞ்சம் அதிர்ச்சி தான், மகள் படிக்க விரும்பும் மேல் படிப்பிற்கு அவர் எதுவும் தடை சொல்லப் போவதில்லை. பெண்களுக்கு கல்வி எத்தனை அவசியமென்பது அவருக்கு தெரியாததா?
பட்டப்படிப்பும் கையில் நல்ல வேலையும் இருப்பதால் தானே இப்போது சொந்தக்காலில் அவரால் நின்று மகள்களை வளர்க்க முடிகிறது. அனைவரும் பெண்களின் திருமணத்திற்காக சேமித்து வைப்பார்கள். ஆனால் அவரோ மகள்களின் படிப்பு செலவிற்காக பணம் சேமித்துக் கொண்டிருக்கிறார். நயந்தினிக்கு வெளிநாட்டில் சென்று அவளுக்கு விருப்பமான படிப்பை படிக்க அவர் எத்தனை இலட்சம் வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருக்கிறார்.
ஆனால் மகள் படிக்க மட்டும் வெளிநாடு செல்லவில்லை. மொத்தமாக இவர்களை ஒதுக்கிவிட்டு செல்ல நினைக்கிறாள். கண்டிப்பாக இதற்கு முழுக்க முழுக்க விக்கி மட்டுமே காரணமாக இருக்கும், மகள் விக்கியின் தூண்டுதலில் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறாள் என்பது அவருக்கு நன்றாகவே புரிகிறது. இதை கண்டும் காணாமல் விட முடியாது. ஏதாவது செய்தாக வேண்டும், கண்டிப்பாக செய்தாக வேண்டும், விக்கியின் ஆசையை நிறைவேற விடக் கூடாது என்பதில் நளினி உறுதியாக இருந்தார்.
அகம் சேர்வான்..
error: Content is protected !!