வெந்து தணிந்தது காதல்! – Episode 1
வெந்து தணிந்தது காதல்!
அத்தியாயம் 1
அன்று தான் முதன்முதலாகப் புடவை அணிகிறாள் அவள். தன் வாழ் நாளுக்குமாய் அவள் சேர்த்து வைத்த தருணமது! ஆனால்.. இப்படி ஒரு தருணத்திற்காகத் தான் அவள் புடவை அணிவாள் என்று நிச்சயமாய் அவள் தனது கெட்ட கனவில் கூடக் கண்டிருக்க மாட்டாள் தான்.
அடர் மெரூன் நிற காட்டன் புடவையின் தலைப்பை எடுத்துத் தோளில் சாற்றியவளுக்குப் பின்னே அந்த ஆங்கிலப் பாடல் மெல்லியதாக ஒலித்துக் கொண்டிருந்தது.
Advertisement
In the dawn’s whisper, your name remains,
Love burned bright, now turned to flames.
We danced in shadows, said goodbye,
Advertisement
Vengeance and love, like stars in the sky.
Advertisement
Through winds of fate,
our love soared high,
Now revenge’s storm,
Advertisement
with tears we cry.
Yet in my heart, your touch is real,
A love so deep, no chains can steal.
Though paths may part, our hearts will rise,
In eternal flames, love never dies.
அவள் நவிரா சந்திரகீர்த்தி!
அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியாக இருந்தவள் அவள்.
ஆம்.. இருந்தவள்! முன்னொரு காலத்தில்.. முன் ஜென்மம் போலத் தோன்றிய அந்தப் பொற்காலத்தில்.. அவள் வானம்பாடியாய், தடைகளற்ற வான் வீதியில் பறந்து திரிந்த நாட்களது!
அவள் பாடிய பாடல் அது!
அந்தப் பாடலை அவள் இயற்றி, இசையமைத்து, பாடி சரியாக மூன்று வருடம், இரண்டு மாதங்கள் முடிவந்தடைந்திருந்தன. அவனைச் சந்தித்தும் அதே ஒரு வருடம் இரண்டு மாதங்கள் தான்!
இந்தப் பாடலின் முதல் கச்சேரியில் தான் அவனை அவள் பார்த்தது.. இல்லையில்லை.. அவளை அவன் பார்த்தது!
‘நான் உன்னைப் பார்க்கக் கூட இல்லையே? நீயே தான என் வாழ்க்கைல வந்த? நீயே தான என்னை உன் மேல காதல்வயப்பட வச்ச? நீயே தான உன்னைக் கல்யாணம் செய்துக்கக் கேட்ட?
கடைசியா.. நீயே ஏன் இப்படி ஒரு துரோகத்தை எனக்குச் செய்த?’ என்று உள்ளுக்குள் மருகியவள், மீண்டும் தன் மீது தானே கழிவிரக்கம் கொள்ளுவது பிடிக்காது, முட்டி நிற்கும் கண்ணீரை ஆத்திரமாய் உள்ளிழுத்தாள்.
அவள் முகத்தில், இடது கண்ணுக்கு மேலே, புருவத்தில் தென்பட்ட வெட்டுக் காயம், அவளது மொத்தக் கழிவிரக்கத்தையும், கண்ணீரையும் கண நேரத்தில் கொன்றொழித்தது!
தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்த மறுகணமே உள்ளெங்கும் பொங்கியது வன்மமும், வெஞ்சினமுமே!
திரும்பி அந்தப் பாடல் வந்த திசையைப் பார்த்தவள், அது எங்கிருந்து வருகிறது என்று அறிய அந்தப் பெரிய அரண்மனையில் நடை பயின்றாள்.
அந்த அரண்மனையின் பிரதான படுக்கையறைக்குள்ளிருந்து அந்தப் பாடல் ஒலிக்கவும், அவளது கண்களில் வெறியேறி, கழுத்து நரம்பு புடைத்துக் கொண்டது!
அறைக் கதவைத் தட்டாமலேயே கதவை ஒற்றைக் கையால் அடித்து அவள் திறக்க, படுக்கையில் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்தபடி, அருகிலிருக்கும் ஸ்பீக்கரில் வழிந்தோடும் அவளது தேன் குரலை ரசித்துக்கொண்டிருந்தான் பிரணவன் தயாளன்.
அவள் கதவைத் திறந்து கொண்டு வரும் சத்தத்தைக் கேட்டதும் அதிர்ந்து நிமிர்ந்து எழுந்தவன், கண் முன்னே காளி ரூபம் கொண்டு நிற்கும் தன் தமக்கையை திகைத்துப் பார்த்தான்.
அவன் மெல்லப் படுக்கையிலிருந்து மேலே எழவும், பிரணவை முறைத்துப் பார்த்தவள், சேலை மடிப்புனூடே இடுப்பில் சொருகியிருந்த அந்தக் கைத் துப்பாக்கியை எடுத்து அவனது ஸ்பீக்கரை சரமாரியாகச் சுட்டுத் தள்ளினாள்.
அதைக் கண்டு பயத்தில் தடுமாறி அப்படியே கீழே விழுந்த பிரணவை இறுகிய நடையுடன் எட்டு வைத்து நெருங்கியவள், அவன் புறமாய் குனிந்து..
“இனி ஒரு தரம் இந்த வீட்டுல என் பாட்டு ஒலிச்சுதுன்னா.. இப்போ அந்தப் பாட்டை ஒலிபரப்புன ஸ்பீக்கர் வெடிச்சுது. அடுத்து.. அந்தப் பாட்டைக் கேட்கறவங்க காது வெடிக்கும்!” என்று இறுகிய குரலில் கூறிவிட்டு நிமிர, அவளது துப்பாக்கியின் சத்தம் கேட்டு அவளின் அப்பாவும், அவரது மனைவியும் அங்கே பதறியபடி விரைந்தனர்.
கீழே தங்களது ஆசை மகன் பயத்தில் நடுங்கி விழுந்து கிடப்பதும், அவனை சந்திரகீர்த்தி துப்பாக்கியைக் காட்டி மிரட்டிக் கொண்டிருப்பதையும் காணவும், தாய் தந்தை இருவருக்குமே குலை நடுங்கிவிட்டது!
“ஏ.. ஏய்.. உ.. உனக்கு.. உனக்கு என்ன பைத்தியமா? அ.. அவனை எதுக்கு கொல்லப் பார்க்கற?” என்று எதற்குமே அதிராத.. அஞ்சா நெஞ்சம் படைத்த அவள் தந்தை, ஜீவானந்த தயாளன் கேட்கவும், அவரை நோக்கி ஆத்திரமாய் முறைத்தாள் பெண்!
“உங்க பையனை நான் ஒன்னும் செய்துட மாட்டேன். கவலைப்படாதீங்க.
ஆனா.. இன்னைக்கு சொல்லறேன் நல்லா கேட்டுக்கோங்க. இந்த வீட்டுக்குள்ள.. இல்ல இல்ல.. இனி என் காது பட நான் பாடின பாட்டு கேட்கக் கூடாது. அப்படி கேட்டுச்சுன்னா?” என்று ஆத்திரமாய் உரைத்தவள், திரும்பி அவளது துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கப்பட்ட அந்த ஸ்பீக்கரை உறுத்து விழிக்க, தயாளனுக்கோ தொண்டை அடைத்தது.
தயாளன்.. தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவர். முன்னாள் முதலமைச்சர்!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெகுசில இடங்களில் தோற்றதால் இப்பொழுது எதிர்கட்சித் தலைவராகியிருப்பவர்.
பாசம், பந்தம் என அனைத்தையும் துறந்த இரும்பு மனிதர் அவர். ஆனால் அப்படிப்பட்டவர் இப்படி அஞ்சுகிறார் என்றால், ஆபத்தில் இருப்பது அவரது சொந்த ரத்தம் அல்லவா?
அவனது உயிருக்கு ஏதேனும் ஆபத்தாகி விடுமோ என்ற அச்சத்தினாலேயே அவர் அமைதி காக்க, அவரிடம் சென்றவள்..
“உங்க பையனோட ரத்தத்துக்கு இவ்வளவு மதிப்பு இருக்கா? இத்தனை நாள் எனக்குத் தெரியாம போய்டுச்சே?” என்றபடி வன்மத்துடன் சிரித்தாள் அவள்.
அவளது குரலில் இருந்த வன்மம் தயாளனுக்கு முதுகுத்தண்டை சில்லிடச் செய்தாலும், என்ன தான் இருந்தாலும் அவள் ஒரு பெண். மென்மையே உருவானவள். உணர்வுகளால் கட்டுப்பட்டவள் என்று தவறாக எடை போட்டபடி..
“அவன் என் மகன் மட்டும் இல்லம்மா.. அவன் உனக்குத் தம்பியும் தானே? நீயே இப்படி எல்லாம் பேசலாமா?” என்றார் வராத சோகத்தைக் குரலில் தருவித்தபடி.
அதைக் கேட்டுச் சட்டென அவர்புறமாகத் திரும்பியவள்..
“அட.. அட.. அட.. என்ன ஒரு சோகம்?
இவன்?.. என் தம்பி?!” என்றாள் ஒவ்வொரு வார்த்தையிலும் அழுத்தம் கொடுத்து.
முன்பு பாசத்துக்கு கட்டுப்படுவாள் என்று தவறாக நினைத்துவிட்டோமோ? இப்பொழுது இந்தத் தம்பி என்ற வார்த்தையே அவளது வெஞ்சினத்தை கிளறிவிடுமோ என்று பயந்தவர்.. அவசரமாக..
“நீ.. நீ அவனைத் தம்பின்னு நினைக்காம போனாலும், அவன் உன்ன அக்காவா தான் நினைச்சுட்டு இருக்கான். இல்லடா?” என்று மகளைச் சமாதானப்படுத்த பேசியவர், இறுதி வாக்கியத்தை மகனிடம் கேட்க, அவனோ முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
அவனது செய்கையைக் கண்டுகொண்ட நவிராவோ, தயாளனைப் பார்த்து ஏளனமாய் பார்த்தபடி..
“இன்னொரு முறை தம்பி, தும்பின்னு வசனம் பேசினீங்க.. நடக்கறதே வேற..” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர, அவளது குரலில் தென்பட்ட வன்மம் உண்மையாகவே நெஞ்சுக்குள் அதிர்வலையைக் கிளப்பியது தயாளனுக்கு.
இருந்தாலும் தன்னை முயன்று சமாளித்தவர், அவளிடம் மறந்து போன ஒரு முக்கியமான விஷயத்தைப் பேசிவிட நினைத்தார்.
“பத்திரிக்கைல எல்லாம் உன் பேரை நவிரா தயாளன் போடக் கூடாதுனு சொல்லிட்டியாமே? ஏன் ம்மா?” என்றார் இப்பொழுதும் குரலில் சோகத்தை வழிந்தோட வைத்து.
அதையும் அந்த நொடியே கண்டுகொண்டவள், அதை அவரிடம் நேரடியாகக் காட்டிக் கொள்ளாது..
“பிறந்ததுல இருந்து அப்பன் பேர் தெரியாம வாழ்ந்துட்டு வந்தவ தானே? இனியும் அந்த அடையாளம் எனக்குத் தேவை இல்ல.” என்று சுருக்கெனக் கூறிவிட்டு அங்கிருந்து அகல, தயாளனின் முகமோ செங்குரங்காய் சிவந்து போனது.
அதைப் பார்த்த அவரது மனைவி யசோதாவுக்கோ உள்ளுக்குள் உதறல் எடுத்தது.
இதுநேரம் வரைக்கும் நவிரா கையில் துப்பாக்கி இருக்கும் போது கூட அவருக்குப் பயம் இருக்கவில்லை. அவரது மனதோரத்தில் நவிராவின் மீது சிறு பரிதாபம் இருந்ததோ என்னவோ!
ஆனால் இப்பொழுது கணவன் இப்படிக் கோபத்தில் சிவந்திருப்பதைக் காணவும் அவருக்கு அடிவயிறு கலங்கியது.
கணவனைப் பயத்துடன் ஓர் அவசரப்பார்வை பார்த்து வைத்தவர், பயந்திருந்த தன் மகனிடம் விரைந்தார்.
அதே சமயம் தனது அறைக்குள் வந்துவிட்டிருந்த நவிராவோ அன்றைய மீட்டிங்கில் அவள் பேச வேண்டிய விஷயங்களை எல்லாம் மனதோடு சரிபார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் மனதுக்குள் மீண்டும் மீண்டும் அந்தப் பாடலே ஒலித்துக் கொண்டிருந்தது.
“எடேர்னல் ஃபிளேம்!” என்ற தலைப்பில், காதலுக்காகவே அவளால் எழுதப்பட்ட பாடல் அது!
பகையும், வஞ்சமும் தீராக்காதலை தீர்த்தழிக்க நினைத்தாலும், மாறாக் காதலது பெருங்காட்டில் பற்றிக் கொண்ட சிறு தீயைப் போல எக்காலத்திலும் அழியாது என்பதை உணர்த்தும் பாடலது!
எத்தனை சந்தோசமான காலங்கள் அவை!
அமைதியாக ஓர் ஆனந்தப் பூவனத்தில், பூக்களிலிருக்கும் தேனை மட்டும் சுற்றி சுற்றி வந்து பருகிக் கொண்டு.. சுக மயக்கத்தில் திளைத்திருந்த சின்னஞ்சிறு வண்ணத்துப் பூச்சியை, துரோகம் என்ற தேள் கொடுக்கால் கொட்டிக் கொட்டி.. இப்பொழுது தொட்டதும் உயிர் பறிக்கும் நஞ்சு கக்கும் கருநாகமாய் மாற்றி விட்டிருந்தனர்.
அதற்கு முழுமுதற் காரணம் அவன்!
ஷிவ் சேயோன் மகிழன்!
ஆறடி ஆண்மகன். உடற்பயிற்சியால் உரமேறியவன்! அவனது ஒற்றைக் கை அழுத்தத்தில் எதிரியின் எலும்பை நொடியில் முறித்துவிடும் தீரமுடையவன்.
அப்படிப்பட்டவன் கண்களிலிருந்து அவனையும் அறியாது கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
பின்னணியில் நவிராவின் அதே பாடல்!
எந்தப் பாடலைக் கேட்டுத் தன் மனம் தொலைத்து.. தன் நிலை மறந்து.. மொத்தமாய்.. பித்தனாய்.. பெண்ணவளின் பாதம் பணிந்தானோ, அதே பாடல்!
அந்தப் பாடலில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையையும் ஷிவ்வின் மனம் தங்களது காதலுக்கென அர்த்தம் பிரித்தது!
அவர்களுக்கான காதல், தீயில் அழிந்தாலும்.. அது சாம்பலாகாது அதுவே தீயாகிப் போகும் என்று முன்னொரு பொழுதில் தோன்றியிருக்கிறது அவனுக்கு!
ஆனால் அந்தக் காதல் தீராத் தீயாகினாலும், அந்தத் தீ அவர்களையே எரித்துவிட்டது என்று நன்றாகவே உணர்ந்திருந்தான் அவன்.
“எட்டர்னல் ஃபிளேம் – நித்தியமான, ஆண்டாண்டு காலத்துக்கும் சாசுவதமான நெருப்பு, அவர்களது காதல் என்று எண்ணி எண்ணி நெஞ்சம் விம்மிக் கிடந்தவனுக்கு, நவிராவின் இந்தத் துரோகத்தை ஏற்கவே முடியவில்லை!
வாழ்வில் முதன்முறையாக அவனுக்கு ஏற்பட்ட துரோகம் அது!
தாய்க்கு ஒற்றை மகனாய்.. தனிக்காட்டு ராஜாவாய் இதயத்தின் மொழி கேட்காது, வாழ்க்கை போகும் போக்கில் வாழ்ந்தவனுக்கு, அதன் பொருளை உணர்த்தியவள் நவிரா!
ஆனால் அவனது இதயத்தின் தாளத்தை உணரச் செய்தவளே, அதை வேரோடு பிடுங்கி கொண்டு போனதை அவனால் மறக்கவே முடியவில்லை.
மீண்டும் மீண்டும் அந்தப் பாடலைக் கேட்டவனது விழிகள் நவிரா செய்த துரோகத்தைத் தாங்க முடியாது, அவளை முற்றும் முழுவதுமாக அழிக்க வேண்டும் என்று முடிவு கட்டியது.
“இந்தப் பாட்டை நான் என் வாழ்நாள் முழுக்க கேட்டுட்டே இருப்பேன்டி!
ஏன்னா.. இது என்னோட முட்டாள்த்தனத்தை எனக்கே மறுபடியும், மறுபடியும் சொல்லிக் காட்டுது. அப்போ தான் என் மனசுல உன் மேல இருக்கற வெறுப்பு என்னைக்கும் அழியாம.. அணையாம தகிச்சுட்டே இருக்கும்.
ஆமா.. உன்னை முழுசா பழிவாங்கற வரைக்கும் என் மனசுல எரியற தீ தீராது!
நம்ம காதல் தான் அந்த எட்டர்னல் ஃபிளேம்னு நினைச்சேன். ஆனா.. என் மனசுல இருக்கே இந்தப் பழிவெறி.. இது தான் அந்த எட்டர்னல் ஃபிளேம்!
நான் செத்து, என்னை அந்தச் சிதைல கொண்டு போய்ப் போட்டாலும், எனக்குள்ள இருக்கற அந்தப் பழிவெறின்ற நெருப்போட வெம்மை தணியாது!
நவிரா சந்திரகீர்த்தி.., நல்லா கேட்டுக்கோ! நான் இப்போ எடுத்துருக்கற இந்த அவதாரம் முழு முழுசா உனக்கே உனக்காகத் தான்.
என்னோட காதலை முழுசா அனுபவிச்சவளும் நீ தான்! இப்போ என்னோட வெறுப்பை முழுசா அனுபவிக்கறவளும் நீ தான்!” என்று எண்ணமிடும் பொழுதே அவனுக்கு மனம் வலித்தது.
“ச்சே.. இந்தக் காதலும்.. மண்ணாங்கட்டியும்..” என்று தன் பலவீனத்தை நினைத்துத் தானே சலித்துக் கொண்டவன் மனக்கண்ணுக்குள், நவிராவை முதன் முறையாக அவன் சந்தித்தக் காட்சி திரைப்படமாக ஓடியது!
வேண்டாத நினைவு தான்.. விரும்பாத கனவு தான்!..
ஆனால் தன் ரணத்தை அப்படியே ஆறவிட விரும்பாது, அதை மேலும் மேலும் கீறிக் கீறிப் புரையோடவிட நினைத்தவன், நெஞ்சை அழுத்தும் பாரத்துடன் அவளை முதன் முதலில் சந்தித்ததை நினைவு கூர்ந்தான்.
அது அவ்வளவு கடினமான விஷயமாகவும் அவனுக்கு இருக்கவில்லையே!
அது அமெரிக்காவில் அக்டொபர் மாதத்தின் ஒரு நாள். மெல்ல மெல்லக் குளிர் அப்பொழுது தான் எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தது.
வெளியே கிளம்பத் தயாராகி, வின்டர் ஜாக்கெட்டை மாட்டியபடி, தன் கார் சாவியைக் கையில் எடுத்துக் கொண்டு தனது ஒற்றைப் படுக்கையறை பிளாட்டை விட்டு வெளியேறினான் ஷிவ்!
அவன் வாசல் படியிறங்கும் நேரம் அவனது ஆப்பிளுக்கு அழைப்பு வந்தது.
அழைத்தது, அவன் தாய் வெனெஸ்ஸா!
“ஹாய் மாம்..” என்றவனிடம் வெனஸாவோ எப்பொழுது அவன் தன்னைப் பார்க்க வருகிறான் என்று கேட்க, ஷிவ்வோ சிரித்தான்.
“மாம்.. நீங்க தான் இந்த முறை என் வீட்டுக்கு வரதா சொல்லியிருந்தீங்க. இப்போ அப்படியே மாத்தி பேசறீங்களே?” என்று அவன் வாற, அவரோ வாய்விட்டு நகைத்தார்.
“எஸ் ஷிவ்.. ஆனா, இந்த வாரம் நான் வாலன்டியர் செய்யற ஸ்கூல்ல ஒரு மீட்டிங் வச்சிருக்காங்க. லாஸ்ட் மினிட் ஷெட்யூல்.. சாரிடா..” என்று கூற, அவரது வேலையைப் புரிந்துகொண்டவனாகப் பேசி போனை அணைத்தான்.
அன்று அவனது நண்பன் ஒருவனுக்குப் பிறந்தநாள். கூடவே வெள்ளிக்கிழமை மாலை – வார இறுதி நாள்.
வாரம் முழுக்க வேலை வேலை என்று அலைந்து கொண்டிருக்கும் இளவட்டங்களுக்கு வார இறுதி தானே அவர்களுக்காக அவர்கள் செலவழிக்கும் நேரம்.
இப்பொழுது நண்பனின் பிறந்தநாளும் சேர்ந்து கொள்ள, எல்லாரும் சேர்ந்து ஒரு பெரிய ஐந்து நட்சத்திர உணவகத்துக்குச் சென்று இரவு உணவைச் சாப்பிட எண்ணியிருந்தார்.
அந்த ஐந்து நட்சத்திர விடுதி, கடற்கரையோரமாக அமைக்கப்பட்ட புகழ்பெற்ற ஒன்று. அதன் கட்டமைப்பே கனவுலகம் போலக் காட்சியளிக்கும்.
அன்று அங்கு அமெரிக்காவின் புகழ்பெற்ற பாடகியின் கான்செர்ட் நடைபெறுவதாக இருந்தது.
ஷிவ், இதுவரையிலும் அவளது கான்செர்ட்டை நேரில் பார்த்ததில்லை. அவ்வப்பொழுது அவளது பாடல்களை போனிலும், ரேடியோவிலுமாகக் கேட்டிருக்கிறான்.
ஆனால் ஷிவ்வின் நண்பன் அந்தப் பாடகியின் மிகப்பெரும் ரசிகன். அதனாலேயே நண்பர்களை வலிந்து அங்கே அழைத்து வந்திருந்தான் அவன்.
ஷிவ்வுடன் சேர்த்து அவர்கள் மொத்தம் நான்கு பேர். ரெஸ்டாரண்டினுள் சென்று அவர்களுக்காக முன் பதிவு செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர்.
மயங்கிய மாலை நேரத்தில், கடற்காற்று மெல்ல தேகம் தழுவிச் சிகை கலைக்க, சுற்றிலும் சின்னஞ்சிறிய விளக்குகள் மின்மினியாய் ஒளிர, தூரத்தில் வான் நிலவும் பால் பொழிய, அந்த இடமே தேவலோகம் போலக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.
பின்னணியில் மெல்லியதாய் பியானோ இசைத்துக் கொண்டிருக்க, சுற்றி இருக்கும் இருளுக்கு இணை சேர்வதாய் தோளிலிருந்து கால் வரை நீண்ட கருநிற உடையில் தேவதையாய் வந்து நின்றாள் அவள் – நவிரா சந்திரகீர்த்தி!
எத்தனையோ முறை நவிராவை வீடியோக்களில் பார்த்திருக்கிறான் ஷிவ்.
ஆனால், நேரில் காணும்போது அவளது ஒட்டுமொத்த எழிலும், ஆண் அவனை வாரிச் சுருட்டிக் கொள்ள, மூச்செடுக்கவும் மறந்து அப்படியே அவளைப் பார்த்திருந்தான் அவன்.
அவனையும் அறியாது அவன் இதயத்தின் தாளம் ஏகத்துக்கும் எகிற, தன் முன்னிருக்கும் கூட்டத்தைப் பார்த்த நவிராவின் விழிகள், எதேச்சையாக ஷிவ்வின் விழிகளையும் தழுவிச் சென்றது.
ஒற்றைப் பார்வை காந்தமாகுமோ?
காந்தப் பார்வையில் உயிர் போகுமோ?
கரு கரு விழிகளால் ஆடவனின் உயிரைத் தின்று தீர்த்தவள், இன்னும் மிச்சம் மீதியின்றி அவனை மயக்கித் தனக்குள் கட்டிக் கொள்ள நினைத்தாளோ என்னவோ.. தன் மெல்லிதழ்களை விரித்து வெண் பட்டின் மென்மை தரித்து பாடத் துவங்கினாள் அவள்!
In the dawn’s whisper, your name remains,
Love burned bright, now turned to flames..
அவ்வளவு தான்.. அவள் குரலைக் கேட்ட அந்தக் கணமே அவன் உடலிலிருக்கும் உயிர் பறந்தோடிச் சென்று பெண்ணவளின் பாதம் பணிந்தது!
