இருளோடு தீபம் ஏற்றினாய் 3

Advertisement

ரமா

Active member
Member
அத்தியாயம் 3


ருத்ரயாழ் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலிடத்தில் இருக்கும் நிறுவனம். இந்த நிறுவனத்தின் கீழ் கல்விக் குழுமங்கள், மருத்துவமனைகள், ஐடி நிறுவனங்கள், துணிக்கடைகள் என இந்தியா முழுவதும் பரந்து விரிந்து கிடந்தது ருத்ரயாழ் நிறுவனம். இதன் சீ ஈ ஓ தான் ருத்ரதேவேஷ்.

சிறுவயதிலேயே தாய் தந்தை விபத்தில் இறந்துவிட அவனுக்கென்று இருக்கும் ஒரே சொந்தம் அவன் தங்கை யாழ்நிலா மட்டுமே!

அவளோ பள்ளிப் படிப்பில் இருக்க, ருத்ராவோ தங்கைக்குத் தாயுமானவனாய் இருந்தான்.

அவன் தந்தை இருக்கும்போது இத்தனை பெரிய நிறுவனம் அவர்களிடம் இல்லை. சிறு வயதிலேயே படிப்பின் உன்னதத்தையும், பணத்தின் அருமையையும் உணர்ந்த ருத்ரா வேலை செய்துகொண்டே படித்தான். தங்கை பெண் குழந்தையாகப் போக அவளையும் பாதுகாத்துக் கொண்டு படித்து வேலை பார்ப்பது அத்தனை எளிதாய் ஒன்றும் அமைந்துவிடவில்லை.

இந்தச் சமூகம் அதற்கு அத்தனை எளிதாய் வழிவிடவில்லை. வாழ்க்கையின் அத்தனை கஷ்டங்களையும் அனுபவித்தான். பெற்றவர்கள் இறந்த பின்பு ஒதுங்கிப் போன உறவுகளை அறவே வெறுத்தான்.

அவனின் உலகம் அவனின் தங்கை யாழ்நிலா மட்டுமே! உறவு, நட்பு என்று எதிலும் பற்று இல்லாதவன். யாரையும் தன்னுடன் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

சிறுவயதிலிருந்து பட்ட கஷ்டம் அவனை முரடனாக்கியது. அவன் வாழ்வில் முன்னேற்றமடைந்து வந்த பின்பு வந்த உறவுகளைத் தன் வீட்டு வாசலில்கூட நிற்க விட்டதில்லை.

அவனின் பணத்திற்காக அவனைக் காதலிப்பதாக சொல்லி வந்த பெண்களை அடித்து விரட்டாத குறையாக அவர்களே ஓடிவிடும்படி செய்தான்.

இப்படி உறவுகளையும், நட்பையும் வெறுத்தவனின் வாழ்வில் வெளிச்சப்புள்ளியாய் இருப்பது அவனின் தங்கை யாழ்நிலா தான்.

பௌர்ணமி வெளிச்சம் மின்னத் தன் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தியவன் இறங்கி உள்ளே போக அங்கே உணவு மேசையில் புத்தகத்தை வைத்துப் படித்தபடி இருந்தாள் யாழ்நிலா.

அவளைக் கண்டவனின் மனமும் வதனமும் மென்மையானது. வெளியே அரக்கனாய் இருப்பவன் வீட்டின் உள்ளே தங்கையின் பாசமிகு அண்ணனாய் தான் இருப்பான்.

"நிலா குட்டி என்ன பண்றீங்க?" என்று பாசத்துடன் கேட்டபடி வந்தான்.

தமையனைக் கண்ட நிலாவிற்கோ சந்தோஷம் வதனமெங்கும் சிந்திட,

"அண்ணா..." என்று மகிழ்ச்சியுடன் தன் தமையனைக் கட்டிக் கொண்டாள் மடந்தையவள்.

"ஹேய் நிலா குட்டி! சாப்பிட்டியாடா...?" என்று கேட்டபடி அவளை அணைத்துக் கொண்டவன் தன்னுடனே அழைத்துக் கொண்டு சாப்பாட்டு மேசைக்குச் சென்றான்.

"இல்லைங்க அண்ணா... உங்களுக்காகத் தான் காத்திருந்தேன். நீங்க வந்ததுக்கு அப்புறம் தான் சாப்பிடுவேன்னு உங்களுக்குத் தெரியும் இல்லை..." என்றபடி அண்ணனுடன் வந்து அமர்ந்தாள்.

தட்டில் சாதத்தைப் போட்டு தன்னுடன் பேசியபடி இருந்த தங்கைக்குத் தன் கைகளாலேயே உணவை ஊட்டிவிட்டான்.

அவளும் அவனுடன் பேசியபடி சாப்பிட்டாள்.

தன்னுடன் மகிழ்ச்சியாகப் பேசியபடி இருந்த தங்கையின் வதனத்தைப் பார்த்தபடியே உணவை ஊட்டி முடிக்கும் சமயம் அங்கே வந்த சமையல்காரரால் அவனின் சந்தோஷம் தடைப்பட்டது.

"ஐயா! என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என்றார் மாதையன்.

அவரைப் பார்த்த ருத்ராவோ, "என்ன மாதையா பேசுறீங்க? என் தங்கச்சிக்கு நான் சாப்பாடு ஊட்டி விட்டுட்டு இருக்கேன். ஏன் உங்களுக்குத் தெரியாதா என்ன?" என்றான் கண்டிப்புடன்.

அவனின் பதிலில் கண்கள் கலங்கிய மாதையனுக்கு தன் முதலாளியிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் கண்களை மூடியவர் சற்று தன்னை சமாளித்து ருத்ராவை பார்த்து,

"தம்பி, உங்க முன்னாடி யாருமே இல்லைங்களே..." என்றார் கண்ணீர் வழிந்த கண்களுடன்.

"என்ன மாதையா பேசுற? இதோ என் முன்னாடி சிரித்தபடி என் தங்கச்சி இருக்குறது உங்களுக்குத் தெரியலையா என்ன? என்னைக் கோபப்படுத்தாம முதல்ல இங்கிருந்து போங்க மாதையா..." என்று அவரை முறைத்தவன் தன் கைகளில் எடுத்து உணவை ஊட்ட முயன்றவனின் கண்களில் அங்கே யாருமில்லாமல் இருக்க, அவனின் விழிகளோ அதிர்ச்சியில் நிலை குத்தி நின்றது ஒரு நொடி என்றால் அடுத்த நொடி அங்கேயே மயங்கிச் சரிந்து விழுந்தான் ருத்ரா.

அதைக் கண்ட மாதையன் மனம் வலிக்கத் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவர், வேகமாய் வந்து அவனைத் தாங்கி பிடித்து அவனின் அறையில் கொண்டு சென்று படுக்கையில் படுக்க வைத்தவர், அருகில் இருந்த மாத்திரையில் ஒரு மாத்திரையை எடுத்து அவனின் வாயில் போட்டு தண்ணீர் ஊற்ற மயக்கத்திலேயே அதை விழுங்கிவிட்டான் ருத்ரா. அவனைப் படுக்க வைத்துவிட்டு அங்கிருந்து வந்துவிட்டார்.

வெளியே வந்தவர் எதிரில் இருந்த சுவரைப் பார்க்க அங்கே மாலையிட்ட புகைப்படத்தின் நடுவே குழந்தை முகத்துடன் சிரித்தபடி இருந்தாள் யாழ்நிலா.


***

தன் முன்னே தன் அத்தையைப் பார்த்தவளைக் கண்ட தேவகியின் மனம் இளகித்தான் போனது.

"இந்நேரம் எங்க அண்ணனும் அண்ணியும் இருந்தா உனக்கும் நல்லபடியா ஒரு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி வச்சிருப்பாரு இல்லைடா சிவா? எனக்கும் இன்னைக்கு மனசு ரொம்பவே கஷ்டமா இருக்குடா... கூடிய சீக்கிரம் உனக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கணும்டா... நிச்சயம் ஏற்படுத்திக் கொடுப்பேன் சிவா..." என்றார் உறுதியாய்.

ஆனால், அது அத்தனை சுலபமானது இல்லை. அவருக்கு எமனே அவரின் ஆசை புதல்வன் என்பதை அவருக்கு யார் சொல்வது?

தன் அத்தை கூறியதைக் கேட்டவள் அவரின் கையை அழுத்தமாய் பிடித்துக் கொண்டு,

"இல்லை அத்தை, எனக்கு அந்த மாதிரி ஆசை எல்லாம் இல்லை. நான் நல்லா படிச்சு முடிச்சு ஒரு பெரிய வேலைக்குப் போகணும் அத்தை. என்னை வளர்த்த உங்களுக்கு ஆசையா ஏதாவது பண்ணனும் அத்தை. என்னோட பெரிய ஆசை அதுதான் அத்தை..." என்றாள் ஆசையாக.

"ரொம்பவே சந்தோஷமா இருக்குடா தங்கம்... நீ உன் ஆசைப்படியே பெரிய ஆளா வரணும்டா... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா... சரி வா, உள்ளார போலாம்..." என்று அழைத்தாள்.

"இல்லைங்க அத்தை, நீங்கப் போய் பாருங்க... இந்த நேரத்துல நான் அங்கே வந்தேன்னா பாட்டி பேசுவாங்க... நீங்கப் போய் வேலையைப் பாருங்க... நான் இங்கே உட்கார்ந்து நாளைக்கு புராஜெக்டுக்கு ரெடி பண்றேன் அத்தை. நீங்கப் போங்க..." என்றாள் சிரித்தபடி.

ஏனோ அவளுக்கு உள்ளே சென்று அமுதனைப் பார்க்கச் சுத்தமாய் பிடிக்கவில்லை.

அவனின் உண்மையான குணம் தெரிந்த பின்பு அவனின்மேல் உள்ள மரியாதை பாசம் சுத்தமாய் போனது.

அவனின் அரக்க குணம் அவளின் மென்மனதை அடித்துத் துவைத்தது.

ஆனால், அதற்கெல்லாம் அசந்தால் அவள் இந்நேரம் இறந்த இடம் மண்மூடி இருக்குமே!

மெல்ல அவனின் நினைவிலிருந்து வெளிவந்தவள் எழுந்து தனக்கென கொடுக்கப்பட்ட அறைக்குள் சென்று தன்னை அடைத்துக் கொண்டாள்.

அதுதான் அவளின் சொர்க்கம்! அதுதான் அவளின் சந்தோஷம் கண்ட இடம்! அவளின் அழுகையும் கண்ட இடம் அந்தச் சிறிய இடம் தான்!

அவளுக்கென தனியே கொடுக்கப்பட்ட அறையை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்தார் சௌந்திரம். ஆனால் வாசுதேவனே ஒரு பெண் பிள்ளையைக் கூடத்தில் படுக்க வைப்பது பிடிக்கவில்லை என்பதில் உறுதியாக இருக்க, அதற்கு மேலும் மகனுடன் போராட முடியாமல் இந்த சிறு ஸ்டோர் அறையை ஒதுங்க வைத்து சிவாவிற்கு கொடுக்க ஒப்புதல் அளித்தார்.

அதற்குப் பின்பு அவளின் சந்தோஷம், துக்கம் என அனைத்தும் அந்த அறையாய் மாறிப்போனது சிவாவிற்கு.


***

இங்கே முதலிரவு அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான் அமுதன்.

அவனுக்கு சிவாவின் மேல் அத்தனை கோபம் இருந்தது. எத்தனை துணிச்சல் இருந்தால் என்னிடமே அவள் முறைத்து விட்டுப் போவாள்.

'இல்லை, இப்போ நாம அவகிட்ட எதுவும் பேசக்கூடாது. இதெல்லாம் நிகிதாவுக்கு தெரிஞ்சா அவ தப்பா நினைச்சிடுவா... இந்தச் சிவா எங்கே போயிட போறா? என்னைக்கா இருந்தாலும் என் காலடியில் விழுந்து தானே ஆகணும். நிச்சயம் உன்னை நிம்மதியா வாழ விடமாட்டேன்டி... உன்னோட அழிவு என்னோட கையில் தான். இப்போதைக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குறேயோ இருந்துக்கோ... கூடிய சீக்கிரமே உன்னோட சந்தோஷத்தை நான் அழிப்பேன் சிவா...' என்றான் ஆத்திரமாய்.

அதே நேரம் அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் நிகிதா.

அவள் உள்ளே வந்த நொடி அவளின் பேரழகில் சிவாவை நொடியில் மறந்து போனான் அமுதன்.

இப்படி நொடிக்கு நொடி தன்னையே மாற்றிக் கொண்டு போகும் பச்சோந்தியின் நிறத்தினைக் கொண்டவனையா பேதைப் பெண் காதலித்தாள் என்றால் அவளுக்கே வெளிச்சம்.

உள்ளே வந்தவள் பால் சொம்பை மேசையில் வைத்து விட்டு கட்டிலில் அமர்ந்த நிகிதா அவனைப் பார்த்து,

"ஹாய் அமுதன்! ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா? இதெல்லாம் ரொம்ப ஓல்ட் ஃபார்மாலிட்டிஸ் இல்லை... ஆமா இன்னைக்கு என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் ரொம்பவே பேசிட்டாங்க... சோ எனக்கு ரொம்பவே டயர்ட்டா இருக்கு. சோ நான் இன்னைக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கவா? இல்லை இன்னைக்கே எல்லாமும் நடக்கணுமா? எனக்கு எதுன்னாலும் ஓகே தான்..." என்றாள் வெளிப்படையாய்.

அவள் இப்படி வெளிப்படையாய் பேசுவாள் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை அமுதன் என்பதை அவனின் அதிர்ந்த முகமே காட்டிக் கொடுத்தது.

அவளோ அவனின் பார்வையை உணராமல்,

"என்ன அமுதன் அப்படி பாக்குறீங்க?" என்றாள் கேள்வியாய்.

அதில் தெளிந்தவன், "ம்ம்... ஒன்னும் இல்லை நிகி நீ டையர்டா இருந்தா படுத்துக்கோ... மீதியை நாளைக்கு பாத்துக்கலாம்..." என்றான்.

எப்போது இதைச் சொல்லுவான் என்று எதிர்பார்த்திருப்பாள் போல அடுத்த நொடியே கட்டிலில் இருந்த பூக்களைக் கீழே தள்ளிவிட்டுப் படுத்துவிட்டாள்.

அவனோ அவளின் முதுகைப் பார்த்துவிட்டு ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு படுத்துவிட்டான்.


***

இங்கே தன் அறையில் நீண்ட நேரம் படித்துக் கொண்டிருந்தவள் எப்போது உறங்கினாள் என்றே தெரியாமல் அப்படியே தூங்கிப் போனாள் பெண்ணவள்.

ஆதவனின் ஒளிக்கற்றைகள் பூமியில் ஒளிர்ந்து ஒளி வீசிடும் காலை நேரமதில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சிவாவின் நினைவில் 'அம்மா...' என்ற குரல் ஒன்று அழைக்க அதில் விதிர் விதிர்த்துப் போய் எழுந்தவள் தன்னைச் சுற்றியும் பார்க்க ஒளிர்ந்த ஒளிவீசிடும் ஆதவனைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள் பெண்ணவள்.

வழக்கம்போல எப்போதும் தோன்றும் கனவில் அழைத்த குரல் யார் என்று தெரியாது போனாலும் அந்தக் குரலில் இருந்த வலியைக் கண்டு பெண்ணவளின் உள்ளம் வலித்தது.

அதே நேரம் தன் அறையில் மாத்திரையின் வீரியத்தில் உறங்கிக் கொண்டிருந்தவனும் நிலா என்ற கதறலுடன் என்று எழுந்தமர்ந்தான்.


இவனின் மனதில் வலியை விட்டுச் சென்ற இவனின் தங்கை எங்கே?

இவளின் மனதில் வலியைத் தந்துவிட்ட பெண் யார்?

அடுத்தடுத்த பாகங்களில் பார்க்கலாம் செல்லம்ஸ்.


தீபம் ஏற்றும்...
✍️
 
அருமையான பதிவு 🤩🤩🤩
கதை சுவாரஸ்யமான த்ரில்லராக இருக்கு 😧😧😧

கதையை பாதியில் நிறுத்திடாதீங்க....ஜூன் 30 குள்ள நிறைவாக முடிச்சுடுங்க 😍😍😍
 
அருமையான பதிவு 🤩🤩🤩
கதை சுவாரஸ்யமான த்ரில்லராக இருக்கு 😧😧😧

கதையை பாதியில் நிறுத்திடாதீங்க....ஜூன் 30 குள்ள நிறைவாக முடிச்சுடுங்க 😍😍😍
kandippa sis.. ungaloda suport irutha kandippa mudippen sis.. thank you sis
 

Advertisement

Advertisement

Back
Top