வரம் 37

Advertisement

Writer girl

Well-known member
Member
அதற்குப் பிறகான நாட்கள் யாவும் மகிழம்பூவன் மற்றும் சஹஸ்ராவின் நிச்சயத்தார்த்த வேலைகள் மிகவும் ஜரூராக நடைபெறத் தொடங்கி விட்டிருந்தது.

தங்கள் குல தெய்வக் கோயிலுக்குச் சென்று வந்த அடுத்த நாளே மண்டபம் மற்றும் சமையல் ஆட்களிடம் பேசி விட்டு அவற்றிற்கானத் தவணைப் பணத்தையும் கொடுத்து விட்டு வந்தார்கள் பால்ராஜ், ரமணன், ஆறுமுகம் மற்றும் பூபாலன்.

அதை மற்றக் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்து விட்டு,”நாம பெரியவங்க மட்டும் உறவுக்காரங்க வீட்டுக்குப் போய் அழைச்சிட்டு வருவோம்”என்ற ஆறுமுகமோ,

“அதுவரைக்கும், பாலனும், மதியும் மாப்பிள்ளைப் பொண்ணுக் கூடத் தங்கிக்கட்டும்”என்றிருக்க,

அதற்கு அனைவரும் தங்களது சம்மதத்தை தெரிவித்து விட்டிருந்தார்கள்.

இவற்றிற்கு இடையில் தனது அலுவலகத்தின் வேலைகளையும் எந்தவித இடையூறுகளும் இன்றிச் செய்து கொண்டிருந்தாள் சஹஸ்ரா.

காதலும், திருமணமும் ஒருவரது வேலையையும், பொறுப்பையும் கட்டிப் போட்டு விடாது! அப்படி செய்தால் அது காதல் இல்லை என்று அர்த்தம்!

ஏனென்றால், உண்மையாக காதலிக்கும் இருவரும் எந்நேரமும் தங்களது இணைகளுடன் பேசிச், சிரித்து நேரத்தைப் போக்கிக் கொண்டு இருக்கவே மாட்டார்கள்! அவர்கள் தங்களது எதிர்கால வாழ்க்கைக்கான அஸ்திவாரங்களை எழுப்பிக் கொண்டு இருப்பர்!

அந்தச் சமயத்தில் தங்களது காதல் உணர்வுகளை மனதிற்குள் அடக்கி வைத்துக் கொண்டுத் தாங்கள் ஒருவரையொருவர் மீதான நேசத்தையும், அக்கறையையும் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது மட்டுமே வெளிப்படுத்திக் கொள்வர்!

அதேபோல் தங்களது வேலை நேரத்தில் ஒருவருக்கொருவர் அழைத்துப் பேசவே மாட்டார்கள் எனலாம்.

ஒருவர் மற்றொருவரின் தனிப்பட்ட நேரத்தை மதித்து நடப்பர்.

அதையே தான், தற்போதைய நாட்களில் பின்பற்றிக் கொண்டு இருக்கிறார்கள் மகிழம்பூவனும், சஹஸ்ராவும்.

தன்னவளைப் போலவே தானும் தனது மாட்டுப் பண்ணை மற்றும் பால் பண்ணையில் வேலைகளில் மூழ்கி விட்டான் மகிழம்பூவன்.

தனது பருத்தி ஆலைக்குச் செல்வதைக் குறைத்துக் கொண்டு அங்கே அனைத்தையும் பார்ப்பதற்கு நம்பகமான ஆட்களை வேலையில் இருத்தி விட்டு இவனுடன் நிழல் போல் திரிந்தான் பூபாலன்.

ஏனெனில் நிச்சயமாகப் போகும் ஆண்மகனை எங்கேயும் தனியாக அனுப்பி வைக்க வேண்டாம் என்றும், ஊர்க் கண் முழுவதும் நிச்சயமாகப் போகும் ஜோடிகளின் மீது தான் இருக்கும் என்றும் எண்ணித் இவ்வாறான ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள் பெரியவர்கள்.

மகிழம்பூவனுடன் எப்படி பூபாலனைத் துணைக்கு வைத்துள்ளார்களோ, அதைப் போலவே, சஹஸ்ராவின் துணைக்காக வண்ணமதியை நியமித்து இருந்தனர்.

அவளும் தனது மகனுடன் சஹஸ்ராவின் அறையிலேயே தான் அதிக நேரங்கள் தங்குகிறாள்.

அதில் எந்தக் கோபமும், வெறுப்பும் காட்டாமல் அவளுடன் நட்பாக, இயல்பாகப் பழகுவாள் சஹஸ்ரா.

அதைக் கண்டு வண்ணமதிக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.

அவள் எப்படி இவ்வாறு மாறினாள் என்றெண்ணிப் பார்த்து விட்டு, அவளும் மனிதி தானே? அவளுக்கும் தன்னை மாற்றிக் கொள்ளத் தோன்றுவதில் தவறில்லையே? என்றும், இதுவும் நல்லது தான் என்றும் நினைத்துக் கொண்டுச் சஹஸ்ராவுடன் பழைய பேதங்கள் எதுவும் இன்றிப் பழகத் துவங்கினாள் வண்ணமதி.

“நீ எம். பி. ஏ படிச்சிருக்கிற, உனக்கு எப்படி உங்கப்பாவோட கம்பெனியை எடுத்து நடத்தனும்னு தோணுச்சு?”என்று அவளிடம் வினவ,

அதில் தனது மடிக்கணினியில் இருந்து தனது கவனத்தை அவள் புறம் திருப்பிக் கொண்டு,”அதுவா? நாம ஸ்கூல் படிக்கும் போதெல்லாம், நான் எல்லார் கிட்டேயும் அப்பாவோட கம்பெனியைப் பத்திப் பேசிட்டு இருப்பேன்ல? அப்போ, ஒரு பாட்டி, என்ன தான், உங்கப்பா பெரியக் கம்பேனி வச்சு இருந்தாலும் கூட அது உனக்கு உதவாது! அதில் இருந்து வர்றப் பணம் எல்லாம் உன்னைக் கட்டிக்கப் போறவன் தான் அனுபவிப்பான்டி! நீ அவனுக்குச் சோறாக்கித் தான் போட்டுட்டு இருப்பே! அப்படின்னுச் சொன்னாங்க! அந்த வயசுல எனக்கு அதைப் பத்தின புரிதல் இல்லை! ஆனால் வளர, வளரத் தான் அவங்கப் பேசினதைப் பத்தி எனக்குப் புரிஞ்சது! அதனால் தான், எம். பி. ஏ படிச்சக் கையோட அப்பாவோட கம்பெனியை எடுத்து நடத்துறதுக்கு என்னப் படிக்கனும்னுத் தேடிக் கண்டுபிடிச்சு, அதைப் படிச்சு, எங்கக் கம்பெனியை முறையாக எடுத்து நடத்திட்டு இருக்கேன் மதி”என்று அவளுக்கு விளக்கம் அளித்தாள் சஹஸ்ரா.

அதைக் கேட்டதும், அதற்கு என்ன மறுமொழி கூறுவது என்றே தெரியவில்லை வண்ணமதிக்கு!

ஆனால், அவளே மேலும் தொடர்ந்து,”என்னை எங்கப்பாவோட பேர், புகழ், பணம் எல்லாமே ஈர்த்துச்சு! அதே மாதிரி அவருக்குக் கிடைச்ச அந்த மரியாதை, பயம் எல்லாம் பொண்ணான எனக்கும் கிடைக்கனும்னு ஆசை வந்துச்சு! அதுக்கு நான் சம்பாதிக்கனும், என்னோட சொந்தப் பணம் இருந்தால் மட்டும் தான் அதெல்லாம் சாத்தியம், இல்லைன்னா இதெல்லாம் உங்கப்பாவோட பணத்தால் தான் வந்துச்சுன்னும் பேசுவாங்கன்னு நினைச்சு வெளியே பால் பொருட்களை வாங்கி ஸ்வீட், மத்தது எல்லாம் செஞ்சி விற்கிறதுக்கு நாமளே பால் பொருட்களைத் தயாரிக்கிற ஃபேக்டரியைத் திறக்கலாம்ன்னு யோசிச்சு அப்பாகிட்டே என்னோட அந்த ஐடியாவையும், விருப்பத்தையும் சொன்னேன். அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்! அதே மாதிரி என்னோட வேலைகளை ரொம்ப மாசமாக நல்லா மானிட்டர் செஞ்சதுக்கு அப்பறம் தான் எங்கிட்ட ஆஃபீஸோட முழுப் பொறுப்பையும் தந்தார்! அந்த ஃபேக்டரியைத் திறந்ததுக்கு அப்பறம் தான் அம்மாவும் என் மேல் நம்பிக்கை வச்சாங்க! எனக்குச் சின்ன வயசுல இருந்தே எங்கப்பான்னா ரொம்ப பிடிக்கும்! அவர் மேலே ஒரு பொஸஸிவ்னஸ் இருக்கு! அவர் நான் கேட்கிற எல்லாத்துக்கும் சரின்னுத் தான் சொல்லுவார்! ஆனால் நான் உங்க கூடவும், பூவன் கூடவும் சண்டை போட்டால் மட்டும் தான் அவர் என்னைத் திட்டுவார், அதட்டுவார் அது என்னை ரொம்பவே ட்ரிக்கர் பண்ணும்! அதனால் தான் எனக்கு உங்களைப் பிடிக்காமல் போச்சு! உங்களை வேணும்ன்னே வம்பிழுப்பேன்! அதையெல்லாம் இப்போ நினைச்சா நான் எவ்வளவு கேவலமாக நடந்து இருக்கேன்னு எனக்கு ரொம்பவே குற்ற உணர்ச்சியாக இருக்கு. என்னை மன்னிச்சிருங்க மதி”என அவளிடம் நெகிழ்ச்சியுடன் சொல்லி முடித்திருந்தாள் சஹஸ்ரா.

அதில் தனக்கு அவள் மீதிருந்த எதிர்மறையான அத்தனை எண்ணங்களும் சுக்குநூறாகி விட்டதை உணர்ந்தாள் வண்ணமதி.

ஒருவரின் தோற்றத்தையும், அவரது ஒரு சில எதிர்மறையான குணங்களையும் வைத்து அவர் எப்பொழுதும் மாறவே மாட்டார் என்பதை முடிவு செய்து விடக் கூடாது என்பதை இப்போது உறுதியாக நம்பினாள்.

“நானும் நீ என்னையும், என் தம்பியையும் வம்பிழுத்துக்கிட்டு இருக்கும் போதெல்லாம் அதென்ன நம்மக் கூட வளர்ந்தப் பொண்ணு நம்மளை இப்படி மோசமாக, எங்களைப் பிடிக்காத மாதிரி, வெறுத்துப் பேசுறாளே! அப்படின்றக் கோபத்திலேயும், எரிச்சலிலும், ஏமாற்றத்திலேயும் தான் உங்கூட சரிக்குச் சமமாகச் சண்டைக் கோழியாகச் சண்டைக்கு நிற்பேன்! ஆனால் அப்பவும் கூட மகிழு என்னைத் தனியாக கூட்டிட்டுப் போய் உனக்காகப் பரிஞ்சுப் பேசி எனக்கு அறிவுரை சொல்லுவான்! அப்போ கொஞ்ச நேரத்துக்கு நான் சரி ஆகிடுவேன்! உன் பக்கமே வர மாட்டேன்! ஆனால் அதுக்கப்புறம் நீயா எங்களை வம்பிழுத்தா நான் மறுபடியும் உன் கூடச் சண்டைப் போட ஆரம்பிச்சுடுவேன்! அப்போ உனக்கு எங்கப்பா சப்போர்ட் பண்ணுவார்! எனக்கு உங்கப்பா சப்போர்ட் பண்ணுவார்! அதுவும் எனக்கு ஒரு அல்ப சந்தோஷத்தைக் கொடுக்கும்! அதனாலேயே நானும் உன் கூடச் சின்னச், சின்னச் சண்டைகளைப் போட ஆரம்பிச்சு இப்போ நிறைய தடவை உன்னை ரொம்பவே மனசுக் கஷ்டப்பட்ற மாதிரிப் பேசிட்டேன்! என்னை மன்னிச்சிரு சஹா!”எனத் தானும் அவளைப் போலவே அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள் வண்ணமதி.

“ஹேய்! பரவாயில்லை! நாம ரெண்டு பேரும் இனிமேல் சண்டையே போடக் கூடாது! சரியா?”என்று அவளிடம் சிநேகமாகக் கேட்டாள் சஹஸ்ரா.

“அதெப்படி முடியும்? இன்னும் கொஞ்ச மாசத்துல நீ என் தம்பியைக் கட்டிக்கிட்டு, அவனுக்குப் பொண்டாட்டி, என் புருஷனுக்குத் தங்கச்சியாக ஆகிருவியே? அப்படின்னா நீ என்னோட நாத்தனார் ஆச்சே? அப்போ நான் உன் கூடச் சண்டைப் போட்டுத் தானே ஆகனும்?”என்று குறும்புடன் கூறிப் புன்னகைத்தவளைத் திருதிருவென்று விழித்துப் பார்க்க,

அதைப் பார்த்துப் பக்கென்று சிரித்து விட்டு,”நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் சஹா! நான் அப்படியெல்லாம் உன் கூடச் சண்டைப் போட மாட்டேன்! சரியா?”என்று அவளுக்கு வாக்களித்தாள் வண்ணமதி.

அதில் தனது முகத்தைத் தெளிவாக வைத்துக் கொண்டு,”சரிங்க மதி. நான் உங்க கிட்ட இன்னொரு விஷயத்தைக் கேட்டுக்கிறேன். நீங்க இனிமேல் என்னை அழகின்னே கூப்பிடலாம்! அதுக்கு நான் எந்தக் கண்டனமும் தெரிவிக்க மாட்டேன்!”என்று அவளுக்கு அனுமதி அளித்து விட்டிருந்தாள் சஹஸ்ரா.

“ம்ஹ்ம். சரி அழகி!”என்றதும்,

தாங்கள் இருவரும்,'ஹைஃபை’ அடித்துக் கொண்டுத் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள்.

அவர்களுடன் சேர்ந்து தானும் தனது குட்டிக் கையை அவர்களிடம் நீட்டினான் செந்தில்.

உடனே அவனது கரத்தில் தாங்களும் தங்களது கரங்களை மெல்ல அடித்து அவனை மகிழ்ச்சிப்படுத்தினர் வண்ணமதி மற்றும் சஹஸ்ரா.

அதற்குப் பிறகு அவர்களது அந்த நேரங்கள் இனிமையாக கழிந்தது எனலாம்.

அதே நேரத்தில்,”உங்க வேலையை விட்டுட்டு வந்து என் கூடச் சுத்திட்டு இருக்கீங்களே மாமா! இதெல்லாம் தேவை தானா?”எனப் பூபாலனிடம் அக்கறையுடன் வினவினான் மகிழம்பூவன்.

அதற்கு அவனோ,“அதெல்லாம் எனக்கு எந்தச் சிரமமும் இல்லை மாப்பிள்ளை! பருத்தி ஆலையில் நான் நம்பிக்கையான ஆளுங்களைப் போட்டுட்டுத் தான் வந்திருக்கேன்! அப்பப்போ போய்ப் பார்த்துக்கிட்டாலே போதும்! அதுவும் இல்லாமல் எனக்கும், உங்க அக்காவுக்கும் கல்யாணம் நடந்தப்போ நீ தானே என் கூட எப்பவுமே சுத்திட்டு இருந்தே? அதை மறந்துட்டியா என்ன?”என்று அவனிடம் ஆதூரமாக உரைத்தான்.

உடனே அந்தப் பசுமையான நினைவுகளை ஞாபகப்படுத்திப் பார்த்துப் புன்னகைப் புரிந்து கொண்டான் மகிழம்பூவன்.

“ம்ஹ்ம். நீ இப்படி சிரிச்சா தான் பார்க்கிறதுக்கு இன்னும் ஸ்மார்ட் ஆக, அழகாக இருக்கிற! அதனால் இதையே பின்பற்று!”என்று அவனுக்கு அறிவுறுத்தினான் பூபாலன்.

“சரிங்க மாமா. நாம இப்போ மாட்டுப் பண்ணைக்குப் போகலாமா?”என்க,

“ம்ம். போகலாம் மாப்பிள்ளை”என்று கூறி அவனைத் தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அவனது மாட்டுப் பண்ணைக்கு அழைத்துச் செல்ல,

அங்கே பசு மாடுகள் மட்டுமின்றிக் காளை மாடுகளும் இருந்தன.

அதில் ஒன்றிரண்டு மாடுகள் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதை அவ்வப்போது அங்கே வேலை செய்யும் பணியாளர்கள் மகிழம்பூவனிடம் தெரிவித்து இருந்தார்கள்.

அந்த மாடுகளைத் தான் இப்போது மேற்பார்வையிட வந்திருந்தான்.

- தொடரும்
 
nice 💞💞💞 mathi, azhaki yum orutharai tharuthar nalla understand panitanga ini no prbm🤔 ana ipo ethuku write ji 🐂 pannithi end pannirukanga🤔🤔🤔🧐🧐🧐🧐
அடுத்த யூடியில் சொல்லிட்டேன் டியர் 😶‍🌫 ஆனால் அதைப் படிச்சிட்டு என்னை அடிக்க வரக் கூடாது!!! தாங்க்ஸ் டியர்🤩
 

Advertisement

Advertisement

Back
Top