வரம் 41

Advertisement

Writer girl

Well-known member
Member
நான் நாளைக்கு ஒரு நாள் மட்டும் லீவ் எடுத்துக்கிறேன் டியர்ஸ்! ஒரு முக்கியமான வேலை இருக்கு! அதை மட்டும் முடிச்சிட்டுத் திங்கட்கிழமை வந்துடுவேன்! முடிஞ்சா ஃபைனல் யூடியோட எபிலாக்கையும் கையோட முடிச்சிட்டு வந்துட்றேன்! சாரி டியர்ஸ் 🩵🙏

வரம் 41

“மகிழு!”என்றழைத்துக் கொண்டே பால்ராஜ்ஜூம், வண்ணமதியும் கண்களில் நீர்ப்பெருக்குடன் அவனது கட்டிலிற்கு அருகில் சென்றனர்.

அவர்களைத் தன் கண்களைச் சுருக்கிப் பார்த்து அடையாளம் கண்டு கொண்டதும்,”அப்பா! அக்கா!”என்று பலவீனமான குரலில் அழைத்தான் மகிழம்பூவன்.

தன்னுடைய மகனின் தலையை ஆதூரமாக வருடிக் கொடுத்துக் கொண்டே,”ரொம்ப வலிக்குதாப்பா?”என்று தவிப்புடன் கேட்டார் பால்ராஜ்.

“ரொம்ப எல்லாம் வலி இல்லப்பா”என்றுரைக்கவும்,

“ஏன் சொல்ல மாட்டே! விஷயத்தைக் கேள்விப்பட்டு நாங்க எல்லாரும் எப்படி துடிச்சுப் போயிட்டோம்ன்னுத் தெரியுமா? அதுவும் அழகியோட முகத்தைப் பார்க்கவே முடியலை! அவ அவ்வளவு உடைஞ்சுப் போயிட்டாள்”என்று தன்னுடைய ஆற்றாமையை வெளிப்படுத்தினாள் வண்ணமதி.

தன்னவளின் பெயரைக் கேட்டதுமே,”அழகியை எங்கே காணோம்?”என்றிருந்தான் மகிழம்பூவன்.

“அதை ஏன் கேட்கிற?”என்றவளோ,

அவனை மாடு முட்டிய செய்தியைக் கேட்டதில் இருந்து அவள் எப்படி இருந்தாள், எவ்வாறு நடந்து கொண்டாள் என்பதையெல்லாம் அவனிடம் ஒன்று விடாமல் ஒப்புவித்து முடித்திருந்தாள் வண்ணமதி.

அதைப் பொறுமையாக கேட்டு முடித்தவனுக்கோ உடலில் வலி இருந்த போதிலும் மனதில் இதம் பரவி விட்டதை உணர்ந்து தன்னவளை எண்ணி இதழ்களில் புன்னகைப் பூத்தான் மகிழம்பூவன்.

அவளைப் பார்த்துப், பேச வேண்டும் என்று ஆவல் எழுந்தாலும் அதை தனது தந்தை மற்றும் தமக்கையிடம் உரைக்கச் சங்கடமாக இருந்ததால் அவர்களிடம் வேறு பேச முயற்சிக்கவும், ஆனால் தன்னுடைய தம்பியின் எண்ணத்தைப் புரிந்து கொண்டவளாக,

“எங்க எல்லாரையும் முதல்ல உன்னை வந்துப் பார்க்கச் சொல்லிட்டு அழகி கடைசியாக வந்து உன்னைப் பார்க்கிறேன்னுச் சொல்லி இருக்காள்டா”என்று அவனிடம் தெரிவித்தாள் வண்ணமதி.

அதில் முகம் தெளிந்து,”சரிக்கா. அவ செஞ்சாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கும்”என்றவனோ, அவர்களிடம் தனது உடல்நலனைப் பற்றிப் பேச ஆரம்பித்து விட்டான் மகிழம்பூவன்.

“நாங்கப் போயிட்டு மாப்பிள்ளையையும், தங்கச்சியையும் அனுப்பி வைக்கிறோம்”என்று அவனிடம் கூறி விட்டுத் தன் மகளை அழைத்துக் கொண்டு வெளியே வந்து ரமணன் மற்றும் கஸ்தூரியை உள்ளே அனுப்பினார் பால்ராஜ்.

உடனே தாங்கள் இருவரும் உள்ளே சென்றதுமே மகிழம்பூவனைப் பார்த்துக் கண்ணீர் வடிக்கத் தொடங்கினர் இருவரும்.

அவர்களிடம்,”இப்போ தான் அப்பாவும், அக்காவும் அழுதுட்டுப் போனாங்க! இப்போ நீங்களும் அழுகுறீங்களே? எனக்கு ட்ரீட்மென்ட் நல்லபடியாக முடிஞ்சு நான் நல்லா இருக்கேன் தானே? அத்தை! மாமா! முதல்ல அழுகுறதை நிறுத்துங்க!”என்று அவர்களை உரிமையாக அதட்டி அழுகையை நிறுத்த வைத்தான் மகிழம்பூவன்.

“என்னப்பா இப்படி ஆகிடுச்சு? கேர்ஃபுல் ஆக இருக்க வேண்டாமா?”என்று அவனிடம் தழுதழுத்தக் குரலில் வினவினார் ரமணன்.

“மாமா! அதான் எனக்கு ஒன்னும் ஆகலைல? எனக்குத் தைரியம் சொல்லாமல் நீங்க ரெண்டு பேரும் இப்படி ஃபீல் பண்ணினால் என்ன அர்த்தம்?”என்று அவரிடம் குறைபட்டுக் கொள்ளவும்,

“உனக்கு இப்படி ஆகிடுச்சுன்றதைக் கேட்டதுமே எங்க ஈரக்குலையே நடுங்கிப் போச்சுப்பா! உனக்கு செக்கப், ட்ரீட்மென்ட் முடியுற வரைக்கும் நாங்க, நாங்களாகவே இல்லை. தெரியுமா? அதுவும் இல்லாமல் என் பொண்ணுப் பித்துப் பிடிச்சா மாதிரி ஆகிட்டாள்”என்று ஆதங்கத்துடன் கூறினார் கஸ்தூரி.

“நான் அவளைப் பார்க்கனுமே?”என்று அவ்விருவரிடமும் தவிப்புடன் வினவினான் மகிழம்பூவன்.

“ம்க்கும்! அவளைப் பத்தித் தான் உனக்குத் தெரியுமே? அழுத்தக்காரி! எல்லாருக்கு அப்பறம் கடைசியாகத் தான் உன்னைப் பார்க்க வருவேன்னுச் சபதம் போட்டு இருக்கிறாள்!”என்று தங்களது மகளை எண்ணிச் சலித்துக் கொண்டவரைப் புன்னகையுடன் பார்த்து விட்டு,

“சரி. விடுங்க. அவளாக வந்து பார்க்கும் போது பார்க்கட்டும்”என்று கூறி விடவும்,

அதற்குப் பிறகு அரை மணி நேரம் அவனிடம் பேசி முடித்து விட்ட ரமணனும், கஸ்தூரியும் வெளியேறி விட்டுத் தங்களுக்கு அடுத்ததாகப் பூபாலனைப் பெற்றோரை உள்ளே அனுப்பி வைத்தார்கள்.

அறைக்குள் வந்ததுமே மகிழம்பூவனின் வயிற்றில் இருந்தக் கட்டைப் பார்த்து விட்டு,”எம்மாம் பெரியக் கட்டுப் பாரு! அந்த மாடு இப்படி முட்டி வச்சிருக்கே? இன்னும் கொஞ்ச நாளில் நிச்சயம் வைக்கப் போறோம் இவங்களை எங்கேயும் அனுப்ப வேண்டாம்னு நான் எல்லார் கிட்டேயும் அப்போவே சொன்னேன்! என் பேச்சைக் கேட்டு இருந்தால் இதோ இப்படி குத்துப்பட்டுப் படுத்துக் கிடந்து இருப்பியா?”என ஆற்றாமையுடன் மொழிந்தார் முல்லைக்கொடி.

“ஆமாம்ப்பா! அதே மாதிரி உனக்கு இப்படி ஆனதைக் கேட்டு அந்த அழகிப் பொண்ணோட முகத்தில் அருளே இல்லை சாமி! எங்களுக்கு அந்தப் பெண்ணைப், பார்க்கப், பார்க்க மனசே ஆறலை! எவ்வளவு தகிரியமான, ஆளுமையானப் பொண்ணு? உனக்கு இப்படி ஆனதைக் கேட்டதுமே நொடிஞ்சுத், தளர்ந்துப் போயிட்டாள்!”என்று அவனிடம் தானும் தன்னுடைய பங்கிற்குச் சஹஸ்ரா பட்டத் துன்பங்களைப் பட்டியலிட்டுக் கூறி விட்டிருந்தார் ஆறுமுகம்.

தன்னவளைப் பற்றிக் கேட்கக், கேட்கத் தன்னுடைய நிலையை எண்ணி அவள் எப்படியெல்லாம் துடித்துப் போயிருக்கிறாள் என்பதை உணர்ந்து தானும் அவளை எண்ணித் தவித்துப் போனான் மகிழம்பூவன்.

ஆனால் அந்த அழுத்தக்காரியின் மனநிலைக்கு மதிப்புக் கொடுத்து அவளது வரவிற்காக காத்திருக்க முடிவெடுத்தவனோ, ஆறுமுகம் மற்றும் முல்லைக்கொடி விடைபெற்றுச் சென்றதும் அறைக்குள் நுழைந்த பூபாலனோ,

தான் குற்ற உணர்வில் ஆட்பட்டுக் கொண்டு இருப்பதை மறைக்காமல் அதை அப்படியே தன்னுடைய முகத்தில் வெளிப்படுத்தி இருந்தப் பூபாலனைக் கண்டதும் கண்களில் கனிவுப் பிறக்க,

“நீங்க என்ன மாமா இப்படி முகத்தை வச்சிருக்கீய? இங்கே வந்து உட்காருங்க”என்று அவனைத் அருகில் வந்து அமரச் சொன்னான் மகிழம்பூவன்.

அதில் மறு பேச்சின்றி அவனுக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டவனிடம்,

“ஏன் மாமா இப்படி இருக்கீங்க? உங்களை யாராவது, ஏதாவது சொன்னாங்களா?”என்று அவனிடம் அக்கறையாக விசாரிக்கவும்,

அதில் தன் கண்களில் நீர் பனிக்க,”இல்லை மாப்பிள்ளை. அப்படி என்னை யாராவது, ஏதாவது சொல்லி இருந்தால் கூடப் பரவாயில்லைன்னுத் தோணுது! ஏன்னா, என்னை நம்பித் தானே உன்னை வெளியில் அனுப்பினாங்க! நான் உன்னைச் சரியாகப் பார்த்துட்டு இருந்திருந்தால் இதெல்லாம் நடந்து இருக்குமா? என்னை மன்னிச்சிரு மாப்பிள்ளை!”என்று இவனிடம் கூனிக் குறுகிப் போய் மன்னிப்பு வேண்டினான் பூபாலன்.

அதில் கோபம் துளிர்க்க,”நீங்கப் பேசுறீங்கன்னுப் புரிஞ்சுத் தான் பேசுறீங்களா மாமா? முதல்ல கண்ணைத் துடைங்க! நான் கொழுப்பெடுத்துப் போய் மாட்டைக் கட்டித் தானே வச்சிருக்காங்கன்னு அது பக்கத்தில் போனதால் தான் அது என்னைக் குத்துச்சு! அப்பவும் நீங்க முதல்ல இருந்தே எனக்கு அறிவுரை சொல்லி அதைச் செய்யாமல் நிறுத்தப் பார்த்தீங்க! அப்படி இருக்கும் போது இதில் உங்கத் தப்பு ஒன்னுமே இல்லை! இது எல்லாமே முழுக்க, முழுக்க என்னோட அலட்சியத்தாலேயும், கவனக்குறைவாலேயும் மட்டும் தான் நடந்து இருக்கு! அதை விட்டுட்டு நீங்க என்னடான்னா இப்படி குற்ற உணர்வில் குறுகிப் போய் இருக்கீங்களே! இதனால் இப்போ எனக்குத் தான் சங்கட்டமாக இருக்கு மாமா!”என்று தனது அக்காவின் கணவனின் தொய்ந்து போன முகத்தைக் கண்டு மிகுந்த மன வருத்தம் அடைந்தான் மகிழம்பூவன்.

அவனது சமாதான வார்த்தைகளைக் கேட்டுச் சற்றே தெளிந்தவனோ,”நீ நல்லா குணமானால் போதும் மாப்பிள்ளை! உன்னைப் பத்திக் கவலைப்பட்டு என் தங்கச்சி ரொம்ப உருக்குலைஞ்சுப் போயிட்டாள்!”என்று அவனும் சஹஸ்ராவின் புராணத்தைப் பாடத் தொடங்கவும்,

“ஆமாம்! எல்லாரும் வந்து அவளைப் பத்திப் பேசுங்க! ஆனால் அவ மட்டும் என்னைக் கடைசியாகத் தான் வந்து பார்ப்பாளாம்! போங்க மாமா”என்று தன்னிடம் சலிப்புடன் கூறியவனிடம்,

“இதோ நான் வெளியே போகத் தான் போறேன் மாப்பிள்ளை. அப்போ தானே உன் வருங்கால பொண்டாட்டி உன்னைப் பார்க்க வர முடியும்? நீங்க ரெண்டு பேரும் கண்ணாமூச்சி ஆடுனது போதும்! நான் போயிட்டு அழகியை அனுப்பி வைக்கிறேன் மாப்பிள்ளை!”என்றுரைத்துப் புன்னகைத்து விட்டு அறையிலிருந்து வெளியே வந்து,

“அழகிம்மா! நாங்க எல்லாரும் பார்த்துட்டு வந்தாச்சு! இப்போதாவது நீ உள்ளே போவியா?”என்று சஹஸ்ராவிடம் கேட்டான் பூபாலன்.

உடனே,”ம்ஹ்ம். நான் இப்போ உள்ளே போறேன் அண்ணா”என்று அவனிடம் மொழிந்து விட்டுத் தனது முகத்தைச் சுடிதார் துப்பாட்டாவால் அழுந்தத் துடைத்துக் கொண்டுத் தனது கையிலிருந்த தன்னவனின் ஐம்பொன் காப்பை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு மகிழம்பூவனை அனுமதித்து இருக்கும் அறையின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள் சஹஸ்ரா.

அவனோ அவளது வருகையை அறிந்து கொண்டதும், அவளுக்குப் போக்குக் காட்டும் விதமாகத் தன் விழிகளை மூடித் துயில் கொண்டிருப்பதைப் போன்றதொரு நிலையில் இருந்தான்.

ஆனால் பெண்ணவளோ முதலில் ஆராய்ந்தது என்னவோ அவனது வயிற்றுக் காயத்தை தான்!

நல்லக் கெட்டியான வெள்ளைத் துண்டால் அவனது வயிற்றுப் பகுதியைக் கட்டுப் போட்டிருந்ததைப் பார்த்ததுமே இவ்வளவு நேரமாக கட்டிக் காத்து வைத்திருந்த அவளது மன உறுதிக் குலைந்து அவளின் கண்களில் கண்ணீர் ஊற்றெடுக்க ஆரம்பித்து விட்டது.

இன்னும் தன்னவள் தன்னிடம் வந்து சேரவில்லை என்பதை அறிந்ததும் தனது விழிகளைப் பட்டெனத் திறந்து அவளைப் பார்த்தான் மகிழம்பூவன்.

ஆனால் தனது கண்களில் இருந்து வழியும் கண்ணீரைப் பொருட்படுத்தாமல் அவனது காயத்தையே பார்த்து அழுது வடிந்து கொண்டுக் கதவின் அருகிலேயே நின்றிருந்தாள் சஹஸ்ரா.

அதைக் கண்டதும் தனக்குள் எழுந்த உணர்வுப் பிரவாகத்தை அடக்க முடியாமல் அவளை அணைத்து ஆறுதல்படுத்த மனமும், உடலும் பரபரக்கவும்,

“இங்கே வா!”என்று அவளைத் தன்னிடம் வருமாறு அழைப்பு விடுத்தான் மகிழம்பூவன்.

உடனே வில்லில் இருந்து வேகமாகச் செல்லும் அம்பைப் போன்றுத் தனது கால்களால் வேக எட்டுக்களை வைத்து அவனிடம் சென்று சேர்ந்திருந்தாள் சஹஸ்ரா.

அவளது கரத்தில் இருந்த தனது காப்பைக் கண்டுப் பூரிப்பு அடைந்தவனோ, தனது இதழ்களை விரித்துப் புன்னகையை உதிர்க்க,

“நீங்க என்னை ரொம்ப பயமுறுத்திட்டீங்க! அழுக வச்சிட்டீங்க! இவ்வளவு நேரமாக நான், நானாகவே இல்லை!”என்று அவனது வென்ஃப்ளேன் மாட்டியிராத கையைப் பிடித்துக் கொண்டு அதில் தனது முகத்தைப் பதித்துக் கதறத் தொடங்கி விட்டவளின் தலையைக் கோதிக் கொடுத்துக் கொண்டே,

“உன்னை இந்த அளவுக்குத் தவிக்க விட்டதுக்காக என்னை மன்னிச்சிரு அழகிம்மா!”என்று அவளிடம் மன்னிப்பு வேண்டினான் மகிழம்பூவன்.

“ஊஹூம்! நான் உங்களை மன்னிக்கவே மாட்டேன்!”என்று அடம் பிடித்தவளைக் கண்டு ரசனையாகச் சிரித்தவனைத் தனது தலையை உயர்த்தி முறைத்துப் பார்த்து விட்டு,

“என்னை இப்படி கதற வச்சிட்டு நீங்க சிரிக்கிறீங்களா? போங்க பூவன்!”என அவனிடம் கோபத்தில் சினுங்கினாள் சஹஸ்ரா.


- தொடரும்
 

Advertisement

Advertisement

Back
Top