நீள்மதியின் யௌவனமே 2

Advertisement

அத்தியாயம் 2

காவேரியின் புலம்பல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது.

முப்பத்தொன்று வயதாகியும் இன்னும் தன் மகனுக்குத் திருமணம் ஆகாமல் இருப்பது அவருக்கு பெரும் கவலையாக இருந்தது. அவனை விட வயதில் சிறிய சித்தப்பா, சித்தி, அத்தைப் பிள்ளைகள் எல்லோருக்கும் திருமணம் முடிந்து குழந்தைகள் கூட பிறந்துவிட்டனர். ஆனால் அந்த வீட்டின் ஒரே ஆண் வாரிசான கார்முகிலன் மட்டும் கல்யாணப் பேச்சு வந்தாலே விலகிப் போய்விடுவான்.

அந்த குடும்பத்தின் மூத்தவர் பெரியசாமி. அவரின் மனைவி முத்துபேச்சி.
அவர்களுக்கு நான்கு பிள்ளைகள்.
மூத்தவன் செல்வநாயகம்.
அடுத்தவன் சகாதேவன்.
பிறகு இரண்டு மகள்கள் — வள்ளி மற்றும் சங்கரி.

அந்த குடும்பத்தை உண்மையாக உயர்த்தியவர் செல்வநாயகம்தான். அவரின் உழைப்பாலும் நேர்மையாலும் தான் அந்த வீடு இன்று இவ்வளவு பெரிய நிலைக்கும் மரியாதைக்கும் உயர்ந்திருந்தது.
விவசாயம், தோட்டம், மாடு, நிலம் என எதிலும் அவர் கை வைத்தால் வளர்ச்சிதான். ஆனால் அவர் உயிரோடு இருந்த காலத்திலேயே சொத்து விஷயத்தில் சிறு சிறு சண்டைகள் ஆரம்பமாகிவிட்டன. அதனால் பெரியசாமி சொத்துகளைப் பிரித்துக் கொடுத்துவிட்டார்.

சகாதேவனுக்குக் கிடைத்த பங்கில் மட்டும் தான் அவர் விவசாயம் பார்த்தார். அதிலும் கூட வேறு முன்னேற்ற முயற்சிகள் எதையும் இதுவரை செய்யவில்லை. செல்வநாயகம்தான் அவருக்கும் சேர்த்து உதவி செய்து அவரின் குடும்பத்தை முன்னேற்றினார்.

மற்றொரு பக்கம், சகோதரிகளுக்குத் தனியாகச் சொத்து கொடுத்தாலும் அவர்களுக்கு அது போதவில்லை.

“எங்களுக்கு பெண் பிள்ளைதான்… அதனால எங்களுக்கு கொஞ்சம் கூடுதலா பிரிச்சுக் குடுங்க…” என்று வள்ளியும் சங்கரியும் அடிக்கடி பெரியசாமியிடம் பேசுவார்கள்.

சகாதேவனும் வெளியில் அமைதியாக இருந்தாலும், உள்ளுக்குள் அதே எண்ணம்தான்.

ஆனால் செல்வநாயகம் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.“நம்ம வீட்டு பொண்ணுங்கதானே…” என்ற நல்லெண்ணத்தோடு விட்டுவிடுவார்.

முத்துபேச்சிக்கு எல்லாம் நன்றாகப் புரிந்தது. “செல்வா… அளவுக்கு மீறி நீ நல்லவனா இருக்காத. நாளைக்கு இதுவே உன்னையும் உன் குடும்பத்தையும் காயப்படுத்தும்…” என்று பலமுறை எச்சரித்திருந்தார்.

அவர் சொன்னது இறுதியில் உண்மையாகிப் போனது.

செல்வநாயகம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பில் உயிரிழந்த பிறகு, அந்த வீட்டின் பொறுப்பு முழுவதும் கார்முகிலன் மீது திரும்பியது. ஏனெனில் அந்த குடும்பத்தின் ஒரே ஆண் வாரிசு அவன் மட்டும்தான்.

அதன் பிறகுதான் உறவினர்களின் மனதில் இருந்த ஆசையும் பேராசையும் வெளிப்பட ஆரம்பித்தது. ‘எப்படியாவது கார்முகிலனை நம்ம வீட்டுப் பையனா ஆக்கணும்…’அவர்களின் மனதில் இருந்த ஒரே எண்ணம் அதுதான். வெளியில் பாசமாக நடந்துகொண்டாலும், உள்ளுக்குள் அவர்களுக்குள் போட்டி அதிகமாகவே இருந்தது.

அதில் மிகவும் மோசமானவர்கள் சங்கரியும் அவளது மகள் இரத்தினமாலாவும்.இரத்தினமாலா பார்க்க அழகாக இருப்பாள். ஆனால் அவளது மனதில் இருந்தது பேராசை மட்டுமே.


சகாதேவனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் — கலைவாணி மற்றும் நளினி. இருவருக்கும் பக்கத்து ஊரிலேயே திருமணம் செய்து வைத்துவிட்டார்.

வள்ளிக்கும் இரண்டு மகள்கள் — வனிதா மற்றும் கவிதா. வனிதாவிற்கு திருமணம் முடிந்து ஒரு வயதில் மகள் இருக்கிறாள்.

கவிதாவைத்தான் கார்முகிலனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வள்ளி மனதில் நினைத்துக்கொண்டிருந்தார்.

சங்கரிக்கும் இரண்டு மகள்கள் — வைஜெயந்தி மாலா மற்றும் இரத்தினமாலா. வைஜெயந்தி மாலா ஒருகாலத்தில் கார்முகிலனை விரும்பினாள். ஆனால் சங்கரியின் குணம் நன்றாகத் தெரிந்திருந்ததால், “வேண்டாம்” என்று நேரடியாக மறுத்துவிட்டான் கார்முகிலன்.

வேறு வழியில்லாமல், அதே ஊரில் இருந்த நிரஞ்சனுக்கு வைஜெயந்தி மாலாவைத் திருமணம் செய்து வைத்தார் சங்கரி.

ஆனால் இரத்தினமாலாவிற்கு சங்கரியின் குணம் அப்படியே வந்திருந்தது. “கட்டினா கார்முகிலன்தான்…” என்று வைராக்கியம் பிடித்தவள் போல இன்னும் திருமணம் செய்யாமல் இருந்தாள்.


கார்முகிலனின் மனைவியாக அந்த வீட்டுக்குள் வந்துவிட்டால், அந்த குடும்பத்தின் அதிகாரமும் சொத்தும் தன் கையில் வந்துவிடும் என்று நினைத்தாள். அதனால்தான் எப்போதும் அவனைச் சுற்றியே திரிவாள்.

ஆனால் கார்முகிலன் அவளைப் பார்த்தாலே எரிச்சலடைவான். கார்முகிலனுக்கு தன் சொந்தங்களின் எண்ணம் நன்றாகவே தெரியும். வெளியில் பாசமாகப் பேசினாலும், உள்ளுக்குள் அவர்களது பார்வை முழுவதும் சொத்தும் அதிகாரமும் மீதுதான் இருந்தது.

அதனால்தான் சிறுவயதிலிருந்தே உறவினர்களிடம் அவன் அதிகமாக ஒட்டிப் பழகவில்லை. அதிலும் தந்தை செல்வநாயகத்தை இழந்த பிறகு, அந்த வெறுப்பு இன்னும் அதிகரித்துவிட்டது.

தந்தையின் மரணம் கார்முகிலனை உள்ளுக்குள் பெரிதாக உடைத்திருந்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு, குடும்பப் பொறுப்புகளை முழுமையாக கையில் எடுக்க அவனுக்கு சில மாதங்கள் பிடித்தது.

ஆனால் அந்த இடைவெளிக்குள், கணக்கு வழக்குகளில் பல முறைகேடுகள் நடந்திருந்தன. விவசாய வருமானம், தோட்ட கணக்கு, மாட்டு பண்ணை செலவு என எல்லாவற்றிலும் மெதுவாக பணம் கசிந்துவிட்டிருந்தது .

அதை எல்லாம் ஒன்றொன்றாக சரிபார்த்தபோதுதான், உறவுகளே அவர்களின் மேலிருந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி கொள்ளையடித்தது கார்முகிலனுக்குப் புரிந்தது.

அன்று கோபத்தில் நேராகச் சென்று விஷயம் கேட்க கிளம்பியவனை காவேரிதான் தடுத்தார். “போகட்டும் முகிலா… நடந்தது நடந்துட்டுச்சு. இனிமேல் யாரையும் முழுசா நம்பாம, எல்லாத்தையும் நீயே பார்த்துக்கோ. ஆனா இதுக்காக குடும்பத்துக்குள்ள பிரச்சனை வர வேண்டாம்…” என்று காவேரி உறுதியாக சொல்லிவிட்டார்.


அந்த நாளிலிருந்து கார்முகிலன் எல்லா கணக்கு வழக்குகளையும் தன் கையிலேயே எடுத்துக்கொண்டான். யாரையும் முழுமையாக நம்புவதையும் நிறுத்திவிட்டான்.

......................................................................
.....

அன்று காலையிலும் மாட்டுத்தொழுவம் அருகே நின்றுகொண்டு காவேரியின் புலம்பலைக் கேட்டுக்கொண்டிருந்தான் கார்முகிலன்.

“டேய்… நான் உயிரோட இருக்குறதுக்குள்ள உன் கல்யாணத்தைப் பார்க்க வச்சிடுவியா இல்லையா?” என்று காவேரி புலம்பிக்கொண்டே உள்ளே சென்றார்.

அவன் அருகில் நின்றிருந்த முத்துக்காளை உடனே,

“அதுசரி… இன்னும் எவ்வளவு நாளைக்குடா கல்யாணப் பேச்சைத் தள்ளிப் போட்டுட்டே இருப்ப? நீ சீக்கிரமா கல்யாணம் பண்ணாத்தான்டா நான் பண்ண முடியும். எங்க அப்பன் என்னமோ ‘முதல்ல முகிலன் கல்யாணம்… அப்புறம்தான் நீ’ன்னு சொல்லிட்டு போயிட்டார்.

என் மாமன் மவ வேற கிளியாட்டம் இருக்கா… எவனாச்சும் கொத்திட்டு போயிட்டா என்னடா பண்ணுறது நான்? இப்படி என்னோட சம்சார வாழ்க்கையில கரடியா நிக்குறியே நியாயமாடா?” என்று அழுகைக் குரலில் கேட்டான்.

அவனைப் பார்த்த கார்முகிலன் சிரிப்பை அடக்கிக்கொண்டு,

“அம்புட்டு ஆசை இருந்தா உன் மாமன் பொண்ணை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணு. ஆனா அதுக்கு முதல்ல அந்தப் புள்ள உன்னை நம்பி வரணுமே?” என்று கேலியாகக் கேட்டான்.

“அதுக்காகத்தான்டா என் அப்பன் போட்ட கண்டிஷனுக்கு சரின்னு சொல்லிட்டு இப்படி உன்னைக் கெஞ்சிட்டு நிக்குறேன்…” என சோகமாகச் சொன்னான் முத்துக்காளை.

“ஹுக்கும்… முதல்ல மாட்டைப் பிடிச்சுக் கட்டப் பழகு டா. பிறகு உனக்கு மூக்கணாங்கயிறு மாட்டச் சொல்லுறேன் உன் மாமன்கிட்ட. பேருல மட்டும் தான் காளை… ஒரு மாட்டையே பிடிச்சுக் கட்ட முடியல!” என்று கிண்டலடித்தான் கார்முகிலன்.

“நானா மாட்டேன்னு சொல்றேன்? அது என்னைப் பார்த்தாலே எதிரி மாதிரி பார்க்குது. ஆமா… மாட்டைப் பிடிச்சுக் கட்டுறதுக்கும் நான் கல்யாணம் கட்டுறதுக்கும் என்னடா சம்பந்தம்?” என்று குழப்பமாகக் கேட்டான்.

அங்கு நின்றிருந்த பெண்கள் எல்லோரும் “கொல்லேன்னு” சிரித்துவிட்டனர்.

“ஹுக்கும்… இதுவே தெரியல உனக்கு. அதுக்குள்ள கல்யாணத்துக்கு பொண்ணு கேட்குதா?” என்று கிண்டலடித்தனர்.

ஒன்றும் புரியாமல் முத்துக்காளை தன் நண்பன் கார்முகிலனைப் பார்த்தான்.

அவன் நமட்டுச் சிரிப்போடு நின்றிருந்தான்.

“என்னடா?” என்று கேட்டவனிடம், கார்முகிலன் அவன் காதருகில் சென்று மெதுவாக ஏதோ சொல்ல, அடுத்த நொடியே முத்துக்காளை அவன் தோளில் அடித்தான்.
“எப்பாடா டேய்! இப்படி இல்லாம பேசுவாங்களா? ஏதோ கொஞ்ச வருஷம் படிப்புக்காக மெட்ராஸ் போய்ட்டேன்… அதுக்காக எனக்கு ஒன்னுமே தெரியாதுன்னு நினைச்சிப்பீங்களாடா?” என்று ஆதங்கமாகக் கேட்டான்.

“சரி சரி… விடு. வா, மாட்டை எப்படி பிடிச்சு கட்டுறதுன்னு சொல்லித் தரேன்,” என்றான் கார்முகிலன் சிரித்தபடி.

முத்துக்காளை, சென்னையில் முதுகலைப் படிப்பாக தீவன உற்பத்தி மற்றும் பண்ணை மேலாண்மை படித்து முடித்தவன். படிப்பு முடிந்ததும் சொந்த ஊருக்கு வந்து பால் பண்ணை ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் அவனது ஆசை.

ஆனால் அவனது தந்தை,

“முதல்ல கார்முகிலன்கிட்ட கொஞ்ச நாள் பழகி தொழில் கத்துக்கிட்டு வா. அப்புறம் உனக்கே தனியா பண்ணை அமைச்சுத் தரேன். அதுக்கப்புறம் உன் மாமன் மகளோட கல்யாணமும் பண்ணி வைக்கிறேன்,” என்று சொல்லிவிட்டார்.

அதனால் தான் கடந்த சில மாதங்களாக கார்முகிலனின் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருந்தான் முத்துக்காளை.

கார்முகிலனுக்கு சொந்தமாக நூறு ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. அதோடு மாம்பழத் தோட்டம், தென்னைத் தோட்டம், வாழைத் தோட்டம் என்று ஏராளமான நிலங்கள்.பால் பண்ணை, கோழிப்பண்ணை, இறால் பண்ணை என்று பல தொழில்களையும் நடத்தி வந்தான். வெளிநாடுகளுக்கும் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு அவனது தொழில் வளர்ந்திருந்தது.

ஊரிலேயே மதிப்பும் மரியாதையும் பெற்ற பெரிய மனிதர் செல்வநாயகம். நேர்மை, உழைப்பு, சொல்லுக்கு நிக்குற குணம் — இதற்காகவே அனைவராலும் மதிக்கப்பட்டவர். அவர் இறந்த பிறகும், அவர் சேர்த்த சொத்துக்களை காக்க மட்டும் அல்லாமல், பன்மடங்கு பெருக்கிக் காட்டினான் கார்முகிலன். அதன் பிறகுதான் அவன் இன்னும் இறுக்கமான மனிதனாக மாறினான்.

ஊரில் பலருக்கு அவன் மீது மரியாதையோடு சேர்ந்து ஒரு பயமும் இருந்தது. ஏனெனில் கார்முகிலன் கோபப்பட்டால் அதிகம் பேச மாட்டான். ஆனால் அவன் அமைதியும் பார்வையும் போதுமானது — எதிரில் இருப்பவரை அடக்கிவிடும்.


யாரிடமும் அதிகமாக ஒட்டிப் பழகாத கார்முகிலன், முத்துக்காளையிடம் மட்டும் கொஞ்சம் இயல்பாக இருப்பான். அவனின் கிண்டலும் பேச்சும்தான் சில நேரங்களில் கார்முகிலனின் இறுக்கத்தைக் குறைக்கும்.

இப்படி இறுக்கமாகிப் போன அவனின் வாழ்க்கைக்குள்,
அந்த இறுக்கத்தை மெதுவாகக் கலைத்து… அவன் மறந்துபோன சிரிப்பையும், மனத்தின் இளக்கத்தையும் மீண்டும் கொண்டு வர போகிறாள் ஒருத்தி என்பதைக் கார்முகிலன் அப்போது அறிந்திருக்கவில்லை.


தொடரும்...
 
Last edited:
அருமையான பதிவு 🤩 🤩
உறவுகள் வேண்டும் என்று நினைப்பவர்களை தான்.... அந்த உறவுகள் ரொம்பவே நோகடித்து விடுகிறார்கள் 😰😰😰☹️☹️☹️

செல்வநாயகம்.... The Great Soul ☺️☺️
 
அருமையான பதிவு 🤩 🤩
உறவுகள் வேண்டும் என்று நினைப்பவர்களை தான்.... அந்த உறவுகள் ரொம்பவே நோகடித்து விடுகிறார்கள் 😰😰😰☹️☹️☹️

செல்வநாயகம்.... The Great Soul ☺️☺️
மிக்க நன்றி சிஸ் 😍 ஆமாம் சில உறவுகள் இப்படி தான் இருக்கிறார்கள். 😔
 

Advertisement

Advertisement

Back
Top