Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் -08

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
*8*

உன் இதழ் ரேகையில் தேடுகிறேன்,

எனது ஆயுள்ரேகையை!!!

இரவு வெகு நேரம் சென்று உறங்கியதாலும், சேவல் கூவலில் கண்விழித்து பழக்கம் இல்லாததாலும் தாமதமாகவே எழுந்தாள் கோகிலா. அறையோடு கூடிய குளியறை இல்லாததால் சிறு எரிச்சல் எழும்ப, கலைந்திருந்த கூந்தலை அள்ளி கட்டிக்கொண்டு வெளியே வந்தாள். மாடிப்படி விளிம்பில் நின்று, “ம்மா!! ம்மாஆஆ” என அவள் கத்த, விரைந்து வந்த செல்லம், “எழுந்துட்டியா? டீயா? ராகி கஞ்சியா?” என அவள் எரிச்சல் புரியாமல் மெனு கேட்டார்.



“ம்மா!! மொதோ இது எங்க இருக்குன்னு சொல்லுமா?” சுண்டுவிரலை மட்டும் நீட்டி அவள் எரிச்சலை காட்டி கேட்க, “கீழ இருக்கு வா! கொல்லைல இருக்க பாத்ரூமுல குளிச்சுக்க!!” அதற்குமேல் பேச விடாமல் சிவகாமி, “செல்லம்” என அழைத்திருந்தார்.

“வரேன்மா” என நகர்ந்துவிட்டவரை ஒன்றும் சொல்ல முடியாமல் கடுப்பில் நின்றாள் கோகிலா. காலையில் எழுந்தால் தன் அறைக்குள்ளேயே குளித்து முடித்து நீட்டாகவே வெளியே வந்து பழக்கப்பட்டவளுக்கு துணியை கையில் எடுத்துக்கொண்டு பத்து பதினைந்து வேலையாட்களை தாண்டி வெளிப்பக்கம் சென்று குளித்து முடித்து மீண்டும் அவர்களை தாண்டி கொண்டு வர அவஸ்தையாய் தோன்றியது.



குளிக்காமல் கூட இருந்திடலாம், ஆனால் அவசரத்திற்கு என்ன செய்ய? என்று கடுப்பு கூட, அங்கே சிறுது நடந்தாள். அவஸ்தை கூட தான் செய்தது. வேறு வழியின்றி கீழே செல்ல துணிகளை எடுத்துக்கொண்டவள், முதலில் அவ்விடம் எப்படி இருக்கிறது என பார்க்கவேண்டி, மாடத்தில் சென்று நிற்க, மும்மரமாய் எல்லோரும் வேலை செய்வது தெரிந்தது.

“ப்ச்!! ஒரு அட்டாச் பாத்ரூம் கட்டினா தான் என்னவாம்!!?’ புலம்பலோடு திரும்பியவள் செவிகளில், “அண்ணே, இந்தாங்க!!” என்ற இன்பனின் கணீர் குரல் விழ, கடுப்பும் எரிச்சலும் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிட்டது. எதிர்ப்பார்ப்போடு திரும்பியவளை ஏமாற்றாமல், தலையில் கட்டியிருந்த துண்டை பிரித்து அதில் முகம் துடைத்துக்கொண்டு நின்றிருந்தான் இன்பன். முட்டி வரை மடித்து கட்டியிருந்த லுங்கி, கையில்லாத பனியன், அதிலும் அவன் உடல் வியர்வையில் குளித்து நனைந்திருந்தது. தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்ததால் கலைந்திருந்த அவன் கேசம், என பெரிதாய் ரசிக்கும்படி எதுவும் அவனிடம் இல்லை! ஆனாலும் கோகிலாவால் தன் கண்களை பிரிக்கவே இயலவில்லை. வேலையாள் எதுவோ சொல்ல, அவன் பதிலுக்கு சத்தமாய் தன் பற்வரிசை தெரிய சிரிக்கையில் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என தோன்றியது அவளுக்கு.



அவள் பார்வையின் குறுகுறுப்பு அவனையும் தீண்டியதை போல நிமிர்ந்து மேலே பார்த்தான் இன்பன். கோகிலா உறைந்த புன்னகையோடு அவனையே பார்த்துக்கொண்டு நிற்க, அவன் கண்களும் அவளிடம் சிக்கிக்கொண்டன. அள்ளிமுடிந்திருந்த சிகையும், தூக்கம் கலையாத முகமும், இரவு உடையென அவள் அணிந்திருந்த டீஷர்ட்டும் அவன் பார்வை வட்டத்தில் விழுந்தது. அதில் பொட்டிலா அவள் நெற்றியும், மணியில்லா அவன் வெறும் கழுத்தும் அவனை என்னவோ செய்ய, பார்வை அவள் கழுத்திலேயே நின்றது.



இருவர் பார்வையும் மீளா சூழலில் சிக்கிக்கொள்ள, மீட்கவென வந்தார் சிவகாமி. “கறந்த பாலை உள்ள கொண்டாராம என்னடா பண்ணிட்டு இருக்கீங்க?” அவர் அதட்டலில் பட்டென திரும்பினான் இன்பன். உதவியாளிடம் இருந்து பாலை வாங்கிக்கொண்டவர், இன்பன் அங்கேயே நிற்பதை கண்டு, “என்ன இன்பா மசமசன்னு இருக்குற? குளிச்சுட்டு வா, சாப்பிட்டுட்டு கிளம்புவ” என்றார். அவரிடம் ‘ம்ம்ம்’ என தலையாட்டியவன் மீண்டும் மேலே பார்க்க இன்னமும் கோகிலா பார்வையை விட்டபாடில்லை.



“என்ன கொக்கிலா? சிலையா மாறிட்டியா?” பேச்சை அவனே ஆரம்பிக்க, அவன் கேலியை கூட கண்டுகொள்ளாது விட்டவளின் புன்னகை விரிந்தது.

“இன்னைக்கு என் தலைல என்னத்த போடலாம்ன்னு யோசிக்குறன்னு நினைக்குறேன்! அதுக்கு வாய்ப்பில்லை! துண்டு ஒருமுறை தான் தவறும்!!” என்ற இன்பனை கண்டு வாய்விட்டு சிரித்தாள் கோகிலா.



“என்ன மரகலண்ட மாறி ரொம்ப நேரமா சிரிக்குற?”

“உங்களை பார்த்தாலே சிரிப்பு தான் வருது மாமா!!”

“அடிபாவி! அவ்ளோ காமெடியாவா இருக்கேன்?” பாவமாய் தன்னையே குனிந்துபார்த்துக்கொண்ட இன்பனை கண்டு இன்னும் தான் சிரித்தாள் அவள்.

“நீ கெக்கபெக்கன்னே நில்லு! நான் கிளம்புறேன்” வீட்டிற்குள் புக போன இன்பனை, “மாமா, மாமா?” அவசரமாய் அழைத்தாள் கோகிலா.



“என்னம்ம்ம்மா?” கிண்டலாய் ராகம் போட்டு அவன் கேட்க, அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில், “மாமா நான் குளிக்கணும்!!” என்றாள்.

“குளி” என அவன் அசால்ட்டாய் சொல்ல, “ப்ச்! மாமா??? எனக்கு கம்போர்டபிளா இல்ல அங்க!” அவனுக்கு பின்னிருந்த குளியலறையை காட்டி அவள் சுருங்கிய முகத்தோடு சொல்ல, “அட இவ்ளோதானா? என் ரூம்ல போய் குளி! நான் வெளில குளிச்சுக்குறேன்” என்றான் இன்பன்.



குளியல் தொல்லை தீர்ந்ததில் குஷியானவள், “தேன்க் யூ மாமா!!” என்றுவிட்டு அவன் அறைக்கு ஓடினாள். அவளை போலவே, ‘தேன்க் யூ மாமா!!’ என சொல்லிப்பார்த்தவன், சிரித்தபடி தலைகுலுக்கிக்கொண்டு வீட்டிருக்குள் சென்றான்.



“இன்னும் குளிக்காம என்னடா செய்யுற?” சிவகாமி உள்ளே வந்தவனை அதட்ட, “கோகிலா குளிக்குறா! அவ வந்ததும் தான் குளிக்கணும்!!” என்று கீழே அமர்ந்தான் இன்பன்.

செல்லம், “அவளை கீழ இருக்க பாத்ரூமுல குளிக்க சொன்னா, உன் ரூம்ல புகுந்துகிட்டாளா? வேலைக்கு போறவனை போய் லேட் பண்ணிட்டு இருக்காளே!! அவளை என்னன்னு கேக்குறேன்” ஆய்ந்துக்கொண்டிருந்த கீரையை அப்படியே வைத்துவிட்டு அவர் மாடியேற செல்ல, “அம்மாயி!! நான்தான் அவளை என் ரூம் யூஸ் பண்ணிக்க சொன்னேன்! யாரும் தேவையில்லாம என்மேல அக்கறை காட்ட வேண்டாம்!” நறுக்கு தெரித்தார் போல் விழுந்த அவன் வார்த்தைகளில் செல்லம் அமைதியாய் வந்து தன் வேலையை தொடர்ந்தார்.



ஹாலின் ஓரமாய் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்த ஷங்கர் நடப்பதை கண்டு, ‘உன்னை ஆறு வயசு வரை தூக்கிட்டு கடைகடையா சுத்துனவன் நான், எந்த எண்ணமும் இல்லாம நாங்க செஞ்ச தப்பை மட்டுமே பிடிச்சுகிட்டு இப்படி பாராமுகம் காட்டுறியேடா! வந்ததுல இருந்து நீ என்கிட்டே ஒரு வார்த்தை பேசிட மாட்டியான்னு ஏங்கிட்டு இருக்கேன், உனக்கு அது எப்போ புரியபோது இன்பா?’ மனதோடு அவனிடம் பேசிக்கொண்டிருந்தார்.



சத்தியராஜனை காலை முதலே வீட்டில் காணவில்லை. நேரமே எழுந்து வெளியே சென்றிருப்பார் போலும் என எண்ணிக்கொண்டான் இன்பன். காலை நடைப்பயிற்சி முடிந்து வீட்டிற்கு வந்த ஒண்டிவீரர் கவலை தோய்ந்த முகத்தோடு ஷங்கர் வாசலுக்கு நேரே அமர்ந்திருப்பதை கண்டு, தயங்கினாலும் அவரை தாண்டி உள்ளே செல்ல முயன்றார்.



ஆனாலும் மனம் கேளாமல், வந்தது முதல் இன்னமும் பேசாமலே இருக்கிறோமே என்ற உறுத்தலில், குரலை செருமியவர், “காபி குடிச்சாச்சா?” என்றார். கேள்வி தன்னிடம் தானா என நம்பாமல் திகைத்து எழுந்த ஷங்கர், அது தன்னிடம் கேட்ட கேள்விதான் என தெரிந்ததும், ஆச்சர்யமும் ஆவலுமாக, “ஆச்சுங்கையா” என்றார் ஒண்டிவீரர் முகம் பார்த்து.



இதே ‘ஷங்கர்’ தான்! பல வருடங்கள் முன்பு தன்னிடம் விசுவாசமாய் இருந்த அதே ‘ஷங்கர்’ தான் இது! இன்னமும் மாற்றமில்லை என எண்ணிகொண்டார் ஒண்டிவீரர். ஷங்கர் மீது கோவம் இருந்தாலும், அவர் செயலுக்கு முழு காரணம் தன் மகளாக மட்டுமே இருக்கும் என அவருக்கு நன்கு தெரியும். இத்தனை வருடங்கள் பின், மகளையே ஏற்றுக்கொண்டபின், பலியாட்டின் மீது கோவம் காட்டி என்ன புண்ணியம் என நினைத்தார்!



ஷங்கரின் தோளில் தட்டி, “வீட்டுக்குள்ளேயே இருக்காத, நம்ம இடத்துக்கெல்லாம் போய் பாரு! எவ்ளோ மாறிருக்கு, இன்னும் என்ன செஞ்சா நல்லா இருக்கும் எல்லாம் பார்த்து சொல்லு!!” என்று உரிமை கொடுக்க, அகமகிழ்ந்து போனார் ஷங்கர். வார்த்தை கூட வரவில்லை.



சிவகாமி ராகி கஞ்சியோடு வந்து, “இந்தாங்க” என்று தன் கணவரிடம் நீட்டினார். வாங்கிக்கொண்டவர், “உன் சின்ன பேரன் போதை தெளிஞ்சுதா?” என கேட்க, “அட ஆமா! அதை மறந்தே போயிட்டேனே?” என்ற சிவகாமி பேரனை தேடி வாசலுக்கு போக, “அவன் திண்ணையில இல்ல” என்றார் ஒண்டிவீரர்.



“இல்லையா? நீங்க ராத்திரி முழுக்க அங்கதானே இருக்க சொன்னீங்க அவனை?”

“நான் சொல்றதை எவன் கேக்குறான்?” என்றவர் இன்பனை பார்த்துக்கொண்டே நகர்ந்துவிட்டார். சன்ன சிரிப்போடு சமையலுக்கு வேண்டி தேங்காயை கீற்று போட்டுக்கொண்டிருந்த இன்பனை நெருங்கிய சிவகாமி ரகசியமாய், “எங்கடா அவன்?” என்றார்.



“ரூம்ல!!”

“நீதான் கொண்டு போய் விட்டியா?”

“ம்ம்..ராத்திரியே!!” என்றவனின் தாடை பிடித்து கொஞ்சியவர், “பாசக்காரன்டா!!” பூரிப்போடு அவனிடம் இருந்து தேங்காயை வாங்கிக்கொண்டு சென்றார்.

காலை உணவுவேலைகள் துரிதமாய் நடக்க, வீட்டிற்கு வந்த சத்தியராஜன் யாரிடமும் பேசாமல் தன் வேலைகளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தார். ஷங்கரிடம் மெல்ல மெல்ல பேச்சு கொடுத்த ஒண்டிவீரர், இப்போது அவரை தன் முகம் பார்த்து பதில் சொல்லும் அளவுக்கு சகஜமாக்கியிருந்தார்.

செல்லத்துக்கு ஷங்கரை தன் தந்தை ஆதரித்துக்கொண்டது பலத்த நிறைவை கொடுத்தது. ஷங்கர் அவ்வப்போது தொழில் முறையாய் கேட்கும் சில சில கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்துக்கொண்டிருந்தார் சத்தியராஜன்.



குளித்து கிளம்பி வந்த இன்பன், உணவறையில் எல்லோரும் அமர்ந்திருப்பதை கண்டு, “காண்டீபன் எங்கே?” என துணுக்குற்றான். யாரிடம் கேட்பது? என தயங்கி அவன் தன் போக்கில் வந்து அமர்ந்துக்கொள்ள, “எப்பவும் வேட்டி தான் கட்டுவீங்களா மாமா?” என்ற கோகிலாவின் குரல் காதருகே கேட்டது.



‘நம்ம இவ பக்கத்துல உட்காந்தோமா? இல்ல இவ என்பக்கத்துல உட்காந்தாலா?’ என அதிமுக்கிய சந்தேகம் அவனுக்கு கிளம்ப, அதை தன்னுள்ளே மறைத்துக்கொண்டு, “நைட்ல லுங்கி கூட கட்டுவேன்!!” என இடக்காய் மொழிந்தான்.

‘ப்ச்!!!’ சலிப்பாய் அவள் உச்சுகொட்டுவது தெரிந்தாலும் அவன் அவள் பக்கம் திரும்பவில்லை. மேலும் அவள் பேசும்முன், “வீடெல்லாம் புடிச்சுருக்கா கண்ணு?” என்றார் ஒண்டிவீரர் தன் பேத்தியிடம்.



“ஹான்! ரொம்ப பிடிச்சுருக்கு தாத்தா!! ஆனா வீட்டுக்குள்ளயே இருக்க போர் அடிக்குது!!” கோகிலா உண்மையிலேயே சொல்ல, “ஒரே நாள்ல வீடு போர் அடிக்குதா?” என்றார் சிவகாமி. கோகிலாவுக்கு பதில், “எப்பவும் ஆபிஸ்ல சுறுசுறுப்பா வேலை பார்த்துகிட்டு இருக்க பொண்ணுங்க அத்தே! அதான் வீட்ல சும்மா இருக்க பிடிக்காம இருக்கும்!!” என்ற ஷங்கர், “என்னடா?” என்றார் தன மகளிடம் சரிதானே என்று!!



ஒண்டிவீரர், “அதுகென்ன! நம்ம துணிக்கடை, நகைக்கடை, வயலு, மில்லுன்னு தினம் ஒரு இடத்துக்கு போயிட்டு வரட்டும், நேரம் போறதே தெரியாது!!” என்றிட, அவளும் மகிழ்வாய், “அப்போ சாப்பிட்டுட்டு கிளம்பவா?” என்றாள் ஆர்வம் மேலிட!



செல்லம், “இன்னைக்கேவா? அதெல்லாம் வேண்டாம்!!” என்றுவிட, “வீட்ல நான் என்ன செய்ய போறேன்? எனக்குன்னு கம்பெனிக்கு யாருமே இல்ல!!” முகம் சுருக்கினாள்.



“அது சொல்றதும் சரிதானே? போயிட்டு வரட்டும்!!” ஒப்புதல் அளித்தார் ஒண்டிவீரர். ‘ஹையா!!’ என சிரித்தவள் தட்டில் இருந்ததை நாலே முறையில் வாயில் தள்ளிக்கொண்டே தன் கைப்பையை எடுக்க அறைக்கு விரைந்தாள். அதற்குள் இன்பனும் உண்டு முடித்து எழுந்திருக்க, அவனிடம் மதிய உணவை கொடுத்தார் தங்கம். வாங்கிக்கொண்டு அவன் செல்கையில் தயங்கி தயங்கி தரை பார்த்தபடி வெளியே வந்தான் காண்டீபன்.



அவனை கண்டதும், “சாவி!!?” தன் கையில் இருந்த மில்லின் ஆபிஸ் சாவியை எடுத்து கொடுத்தான் இன்பன். பொழுது விடிந்ததுமே சோளகாட்டிற்கு சென்று மறவாமல் சாவியை எடுத்து வந்திருந்தான்.

மௌனமாய் அவன் முகம் கூட காணாது பெற்றுக்கொண்ட காண்டீபன், முனுமுனுப்பாய், “சாரி!!” என்றிட, ‘எதற்கு’ என இன்பனும் கேட்கவில்லை, காண்டீபனும் சொல்லவில்லை.



குடியின் போதை காலை கண் விழித்ததுமே தெளிய தொடங்கியது. இரவு நடந்தவை எல்லாம் நிழல்படமாய் அவன் கண்முன்னே வந்திட, ‘போச்சு!!’ என தலையில் அடித்துக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டான். இனி எப்படி எல்லோர் முகத்திலும் விழிப்பேன்? என்ற கவலையே அவனை வெகுவாய் தாக்கியிருந்தது.



இதற்குமேல் உள்ளே இருக்க முடியாது என குளித்து கிளம்பி வெளியே வந்தவனிடம் தான் சாவியை கொடுத்திருந்தான் இன்பன். ஒண்டிவீரர் அவனை தான் பார்த்துக்கொண்டிருந்தார். அவனது தயக்கமும் சங்கடமும் புரிய மேற்கொண்டு யாரையும் பேசவிட கூடாதென, “சிவகாமி? காண்டீபனுக்கும் சாப்பாடு கட்டிகுடு! அவன் மில்லுக்கு போய் உண்டுகட்டும்!!” என்றுவிட்டார்.



இரவு நடந்ததை குத்தி கிளறாமல் அப்படியே விட்டது அவன் மனதுக்கு ஆறுதல் கொடுத்தது. இருப்பினும், “பசங்ககிட்ட குடுத்துடுங்க, நான் கிளம்புறேன்!” என அங்கே நிற்காமல் ஓட பார்த்தான் அவன். செல்பவனை “நில்லு காண்டீபா!!” என ஒண்டிவீரர் குரல் கொடுத்ததும், வியர்த்து கொட்டியது அவனுக்கு.



இடக்கையால் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டான். மாடியிறங்கி ஓடி வந்த கோகிலாவை காட்டி, “இது உன் அத்தை மக கோகிலா! தெரியும்தானே?” என்றார்.



‘ஹப்பா!’ மூச்சை இழுத்துவிட்டான் அவன்.



“தெ.. தெரியும் தாத்தா!” இன்னமும் அவர் முகம் பார்க்கவில்லை.

“கோகிலா கண்ணு, இவன் உன் சின்ன மாமன், காண்டீபன்! பேசிக்கிட்டீங்களான்னு கூட தெரியல!!” என்று தாத்தா சொல்ல, “ஹாய் மாமா!” இன்முகமாய் கரம் நீட்டினாள் கோகிலா. அதை பட்டும் படாமல் பிடித்தவன், ‘ம்ம்ம்’ என்றான் உறுமலாய், இதழ் கொஞ்சமும் சிரிப்பென்ற பெயரில் கோணாமல்.



அவனை வினோத ஜந்துவென பார்த்தவள், ‘இந்த சப்ஜெக்டுக்கு ஏதோ மர்மநோய் தாக்கிருக்குன்னு நினைக்குறேன்!’ என்று உள்ளுக்குள் உச்சுக்கொட்டிகொண்டே, அவனை மேலும் கீழும் பார்வையால் ஸ்கேன் செய்தாள்!!

அதற்குள் அவள் ஆராய்ச்சியை தடை செய்த ஒண்டிவீரர், “புள்ளைக்கு நம்ம கடை, வயலு எல்லாத்தையும் சுத்தி காட்டு! அப்டியே வேலையிலயும் கூட வச்சுக்கோ!!”



‘உப்ப்.. இவ்ளோதானா?’ அவன் மனம் அமைதியடைந்தது. வேறொரு நாளாக இருந்திருந்தால், ‘இவளுக்கு நான் என்ன டூரிஸ்ட் கைடா?’ என கத்தியிருப்பான்! இன்று அவன் குற்றம் சபைக்கு வராமல் தடுக்க, உடனே ‘ம்ம்ம்’ என்றுவிட்டான்.

ஆனால், மறுப்பு மறுப்பக்கம் இருந்து வந்தது.



“தாத்தா நானே போய்க்குறேன்!! இவர் எதுக்கு?” என்ற கோகிலாவின் மனது, ‘இவனே பேட்டரி லோவான சிட்டி ரோபோ மாறி நிக்குறான்! இவன்கூட நம்ம போனா, இவன் வியாதி நமக்கும் ஒட்டிக்கும்! வேணாம்டா சாமி’ என அலறியது.



“நீயா எப்படிம்மா போவ? ஊருக்கு புதுசு வேற! தனியா எப்படி அனுப்ப முடியும்!?”

“நான் தனியா போகல தாத்தா! இன்பா மாமா கூட போறேன்!” உடனே வந்த கோகிலாவின் பதிலில், சத்தியராஜனின் கையில் இருந்த செய்தித்தாள் கசங்கியது. காண்டீபனோ, ‘நானே கூட்டிட்டு போக ஒத்துக்குறேன்! இவளுக்கு கொழுப்ப பாரு!!’ என்று கண்களில் அனலுடன் அவளை பொசுக்கிகொண்டிருந்தான்.



“இன்பா கூடவா....?” தாத்தா தயங்க, “ஆமா தாத்தா, நான் போறேன், மாமா வெளில இருப்பாங்க!!” இந்த சம்பாஷனை அறியாத இன்பன், தன் சுசுக்கியிடம் போராடிக்கொண்டிருக்க, துள்ளிக்கொண்டு ஓடினாள் கோகிலா.



அவன் பின்னால் ஏறி அமர்ந்தவளை கண்டு திடுக்கிட்டு, “ஏய், என்ன செய்யுற நீ?” என்று அதிர்ந்தான் இன்பன்.



“தாத்தா எனக்கு நம்ம கடை வயல் எல்லாம் சுத்தி காட்ட சொன்னாங்க!!”

“என்கிட்டே எதுவுமே சொல்லியே? நீ முதல்ல கீழ இறங்கு” அவளை இறக்கி விடுவதிலேயே குறியாய் இருந்தான் அவன்.

“ஆங்... மாட்டேன்.. மாட்டேன்...” அவள் பிடிவாதம் தொடங்கியது.



“நீ இறங்குன்னு சொல்றேன்ல” அவன் கத்துவதும், “முடியாதுன்னு சொல்றேன்ல” என அவள் திமிறுவதும் உள்ளே இருந்தவர்களுக்கு நன்கு கேட்க, “தொந்தரவு கொடுக்காத கோகிலா” என கண்டித்தார் ஷங்கர்.

“நான் மாமாக்கூட போறதுன்னா போறேன், இல்லன்னா எங்கயும் போகல, வீட்டுக்குள்ளயே கிடக்குறேன்!!” வண்டியில் இருந்து இறங்கியவள் தூக்கி வைத்துக்கொண்ட முகத்தோடு வீட்டிற்க்குள் செல்ல, அவளை கையோடு அழைத்துக்கொண்டு வந்தார் சிவகாமி.



“எடேய், கூட்டிட்டு போடா!” இன்பனுக்கு உத்தரவிட,

“அம்மாயி! வேலை கடக்கு மில்லுல! ஊற சுத்தி காட்டவெல்லாம் எனக்கு பொறுமையில்ல” காட்டமாக அவன் சொல்ல, “இன்னைக்கே எல்லாத்தையும் காட்ட வேணாம் அம்மாயி, தினம் தினம் கொஞ்சகொஞ்சமா பாத்துக்குறேன்!” என்றாள் கோகிலா.



இருவர் பதிலையும் கேட்டவர், பேரனிடமே, “கூட்டிட்டு தான் போயேன்டா!” என்றார் வேண்டுதலாய். அவர் விருப்பத்தை தாண்டி அவன் என்ன செய்வான்!? “வர சொல்லுங்க” கோவத்தை கிக்கரில் காட்டி உதைக்க, நல்லபிள்ளையாய் கிளம்பியது வண்டி.



சந்தோசமாய் அவன் பின்னே இருபக்கம் கால் போட்டு ஏறி அமர்ந்த கோகிலா பாட்டிக்கு ‘பாய்’ சொல்ல, சட்டென வண்டி கிளம்பிய வேகத்தில் பின்னுக்கு சாய்ந்து அதன் பின்னே கம்பியை இறுக்கிபிடித்து சமமாய் அமர்ந்தாள்.

இன்பனின் உர்ரென்ற முகத்துடன் சுசுக்கி சீறி பாய்ந்தது சாலையில். சிறுது நேரம் பொறுமையாய் இருந்த கோகிலாவால் அவனின் அமைதியை சகிக்க முடியவில்லை.



“இதுக்கு நான் அந்த ரோபோ கூடவே போயிருப்பேன்!” தலையும் இன்றி வாலும் இன்றி அவள் சொன்னதில் “என்ன?” என்றான் இன்பன் குறையாத கடுப்புடன்.



“இப்படி உர்ருன்னு பேசாம வரதுக்கு உங்க தம்பி கூடவே வந்துருப்பேன்னு சொன்னேன்” அவனுக்கு கேட்க வேண்டி சற்று நெருங்கி அவன் காதோரம் இவள் கத்த, “இறக்கி விடுறேன், போய்க்குறியா?” கடுப்படித்தான்.



“ப்ச்! ஏன் மாமா கோவப்படுறீங்க?”

“எனக்கு பிடிவாதம் பிடிச்சா பிடிக்காது!!” பட்டென வந்து விழுந்தது அவன் பதில்.

“சாரி!” என அவள் முனுமுனுக்க, அதில் அவன் கோவம் குறைய ஆரம்பித்தது.

“அவன்கூட கார்ல வர வேண்டியது தானே? எதுக்கு என்கூட இப்படி வெயில்ல காயுற?” அவன் குரல் சற்று இயல்புக்கு வந்துவிட,

அவள் தோள்பட்டை அருகே முகத்தை கொண்டு சென்றவள், அவன் முகம் காண முயன்றபடி, “எனக்கு உங்ககூட இருக்க தானே பிடிச்சுருக்கு!!” என சொல்ல, இன்பனிடம் பேச்சின்றி போனது. அவனும் சற்றே இடப்பக்கம் திரும்பி அவள் முகத்தை கண்டான். அவள் பார்வையில் என்ன இருந்தது என அவனும் அறியான்! அவளும் அறியாள்!



ஆனால் அறிய கூடாதவளுக்கு அல்வா போல அக்காட்சி கண்ணில் பட்டுவிட, அவள் உடன் இருந்த தோழிகளோ, “அது யாருடி!? பேன்ட்டு சட்டை போட்டுக்கிட்டு முடியை விரிச்சு விட்டுகிட்டு சினிமா ஹிரோயின் மாறி இருக்கா?”



“அதை விடுங்கடி! பேரின்பன் முதுகுல அவ ஓட்டிகிட்டு போறத பார்த்தீங்களா? ஏதோ உரிமைக்காறியாட்டம்?”



“அதானே!! ரோட்டை கூட பார்க்காம அந்த புள்ள மூஞ்சிய பார்த்துல்ல அண்ணன் வண்டி ஓட்டுது!!”



“இனி சுசீலாக்கு பெப்பே தான்!! ஹாஹா” கூட்டமான அவர்களின் நகையொளி செவி அடைத்தது. பேருந்திற்காக காத்திருந்த சுசீலாவின் கண்களில் இவர்கள் பட்டதை போலவே அருகே இருந்த அவள் தோழிகளின் கண்ணிலும் பட்டுவிட, ஏற்கனவே அவள் மீது பொறாமையில் காந்திக்கொண்டிருந்தவர்களுக்கு இது முத்தாய்ப்பாய் அமைந்தது.

கண்ணை விட்டு மறைந்தபோதும், அவர்கள் சென்ற திக்கை ஆத்திரத்துடன் வெறித்துக்கொண்டு நின்றாள் சுசீலா!!!

-தொடரும்...

இனி மங்களகரமான வெள்ளியன்று சந்திப்போம்!!!
 
என்னம்மா இது பேரின்பனுக்கு
வந்த கிராக்கி?
இங்கேயே இருக்கிற கொங்கு
நாட்டுத் தங்கம்
கோபிச்செட்டிபாளையம் குமாரி
சுசீலாதான் இன்பன் மாமா மேல
இன்பமா இஷ்டப்படுறாள்ன்னு
பார்த்தால் கோடம்பாக்கம்
பக்கத்துலே இருந்து வந்திருக்கிற
பட்டணத்து கோமளவள்ளி
கோகிலாவும் இன்பா மாமன்
கூடத்தான் வெளியே போவேன்னு
அடம் பிடிக்கிறாளே
 
Last edited:
இன்பா அந்த கொக்கி மூக்கி நிச்சயதார்த்தம் முடிஞ்ச பிள்ளை.. அது பாட்டுக்கு ஆரம்பிச்சுவிட்டு அவங்க அம்மா மாதிரியே செய்ய போகுது.. பார்த்துக்கோ...
 

Advertisement

Top