Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

Advertisement

parvathi

Active member
Member
Thanks to all readers for ur genuine support. Pls give ur feedbacks.

என் கதைகள் ஆடியோவில் கேட்க விருப்பப்பட்டால்@ BalaThiagarajanTamil Novels. utube. Com என்ற சேனலுக்கு வருகை தாருங்கள். Last BUT NOT THE LEAST PLS LIKE COMMENT SHARE N SUBSCRIB


அத்தியாயம் 29

.சுஜாதாவை அழவைத்துவிட்டு வீடு திரும்பிய நந்தகுமார் குழம்பிய மனநிலையில் இருந்தான். சுஜாதாவின் அழுகை அவனை சங்கடப்படுத்தியது. தானே அதற்கு காரணமாகி விட்டோம் என்ற நினைப்பு வேறு அவனை கொன்று தின்றது.



அவனுக்கு உடை எடுத்து வைப்பதில் தொடங்கி அறையை ஒழுங்குபடுத்துவது வரை அவன் தேவைகளை ஒரு மனைவியின் ஸ்தானத்தில் இருந்து கவனித்தவளுக்கு அவன் வேறொருத்தியை அது அவள் தோழியாகவே இருந்தாலும் விரும்புகிறான் என்று தெரிந்தால் அதிர்ந்து தானே போவாள்?

இது ஏன் அவனுக்கு புரியாமல் போனது?



சுஜாதா மூலமாக அம்மாவை சரிக்கட்ட நினைத்து அவன் போட்ட தப்புக்கணக்கு சுஜாதாவை காயப்படுத்தியிருக்க, தவிப்புடன் வீடு வந்து சேர்ந்தவனை தேவகி வேறு கதிகலங்க வைத்தாள்.



அலுப்புத் தீர குளித்து விட்டு வந்தவனிடம் சிற்றுண்டியும் காப்பியும் பரிமாறியவள் உற்சாகமாய் சொன்னாள்.



"கீழ் வீட்டுப் பெண் ராதாவிற்கு திருமணம் நிச்சயமாகும் போலிருக்கு தெரியுமோ?அவோ பாட்டி அவளை சதா துக்கிரினு தூத்திண்டேயிருப்பா.ஆனால் அந்தப் பொண்ணுக்கு வந்த அதிர்ஷ்டத்தைப் பாரேன்.நல்லபணக்கார இடத்திலிருந்து பெண் கேட்டு வந்திருக்காங்களாம்..சீர் வரதட்சணைனு எந்த டிமாண்டும் பண்ணலையாம். பொண்ணை கட்டிக்கொடுத்தால் போதும்னு சொல்றாங்களாம்.எதுவும் கேட்காத நல்ல மனுஷாளாயிருக்காளே மாப்பிள்ளைக்கு ஏதும் குறையிருக்குமோனு பாவம் காயத்ரி தான் கவலைப்படறா.அப்படியெல்லாம் ஒண்ணும் இருக்காது.ராதாவோட அழகுக்கும் குணத்துக்கும் தான் நல்ல இடமா அமைஞ்சிருக்கு.வலிய வர்ற ஸ்ரீதேவியை உதறிடாதிங்கனு நான் தான்

உபதேசம் பணணிட்டு வந்தேன் .என்ன முடிவு பண்ணுவாளோ தெரியல."



நீளமாய் பேசி அங்கலாய்த்தவள் மகன் காப்பி குடிக்காமல் பிரமை பிடித்தாற் போல் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அவன் தோள் பற்றி உலுக்கினாள்.



"என்னடா காப்பி குடிக்காமல் அப்படியென்ன யோசனை? ஆங்…இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்.இன்னிக்கு கார்த்தால ராஜசேகரன் வந்தார்.சுஜாவுக்கு படிப்பெல்லாம் முடிஞ்சுட்டதால கல்யாணத்துக்கு நாள் பார்த்துடலாமானு கேட்டார்.நான் உன்னை ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்றதா சொன்னேன். என்ன நந்து அவரையே முகூர்த்த நாள் குறிச்சுட சொல்லலாமா?"



இனியும் தாமதிப்பதில் அர்த்தமில்லை.சுஜாதாவின் ஆசையை முளையிலேயே கிள்ளிவிடாமல், அம்மாவிடமும் அவன் காதலை சொல்லாததால் தான் இத்தனை விபரீதம்.அம்மாவிடம் அவன் மனதிலிருக்கும் காதலைசொல்லி விடவேண்டும்.அதுவும் உடனே சொல்லிவிடவேண்டும்.என்ன மிஞ்சிமிஞ்சிப் போனால் அம்மா கோபப்படுவாள்.ஆனால் அவள் கோபத்திற்கு பயந்து சொல்லாமலிருந்தால் நான் என்ன ஆண்பிள்ளை?



இப்படியொரு எண்ணம் மனதில் வந்தவுடன் தேவகியை நந்தகுமார் நிமிர்ந்து நிதானமாகப் பார்த்தான்.



"அம்மா நீ என்னை சரியா புரிஞ்சுக்கனும்.நான் சொல்லப் போற விஷயம் கேட்டு கோபப்படக்கூடாது. என்னம்மா?"



மகனின் பீடிகையில் தேவகி கவலை கொண்டவளாக அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.



"நான் கோபப்படல.நீ விஷயம் என்னனு சொல்லு "



தேவகியின் வார்த்தைகளில் இருந்த இதம் அவள் குரலில் இல்லை.நந்தகுமார் தாயின் கைபற்றி கன்னத்தில் வைத்துக் கொண்டான்.



"கோபப்படலன்னு சொல்றதுக்கே இப்படி கோபப்பட்டா எப்படிம்மா? ம்…"



"இப்போ நீ விஷயம் என்னனு சொல்லப் போறியா இல்லையா? நான் கோபப்படறா மாதிரி இன்னும் பூடகமாவே தான் பேசிண்டிருக்கே? "



நந்தகுமார் தன் காதலை சொல்லத் தொடங்கினான். தேவகி அதைக் கேட்டு அதிர்ந்து தான் போனாள்.மகனின் காதலை அவள் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.அதுவும் சுஜாதாவை விட்டு அவன் ராதாவை காதலிப்பதாகச் சொல்வதை அவளால் சத்தியமாக ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.



'ராதாவைக் காதலிக்கிறானாம்…போடா நீயும் உன் காதலும்….புடலங்காய்…'

என்று கத்த வேண்டும் போல் கோபம் வந்தது.



அட! காதலித்தது தான் காதலித்தான்.அவனையே சுற்றி வந்த சுஜாதாவை காதலித்திருக்க கூடாதா? போயும் போயும் அந்த துக்கிரிப் பொண்ணு ராதாவையா காதலித்து தொலைக்க வேண்டும் என்று ஆத்திரம் வந்தது.



ஆனால் எடுத்தவுடனேயே எதிர்மறையாகப் பேசினால் மகன் மேலும் எகிறிக் கொள்வானோ என்ற பயத்தில் தேவகி பக்குவமாகவே பேசினாள்.



"நந்து! நீ அடிக்கடி சொல்வியே.உன்னையும் என்னையும் பிரிக்க நினைக்காத நல்ல

பொண்ணு கிடைக்கறவரை எனக்கு கல்யாணத்துக்கு அவசரமில்லைனு சொல்வாய் தானே? ஆனால் இப்போ உன்னை எங்கிட்டருந்து நிரந்தரமா பிரிக்கக்கூடிய ஒரு துக்கிரியை எனக்கு மருமகளாக்க நினைக்கறியே.

இது நியாயமா?"



தேவகி அழவே ஆரம்பித்தாள்.



"அ…அம்மா!! என்னம்மா சொல்ற நீ?"



நந்தகுமார் தவித்துப் போனான்.



"ராதாவையா துக்கிரின்றே? சித்த முன்னால கூட ராதா அதிர்ஷடக்காரி அதான் அவளைத் தேடி பெரிய இடத்து சம்பந்தம் வந்திருக்குனு சொன்னியே."



"ஆமாம்டா சொன்னேன். யாரோ ஒரு மூன்றாம் மனுஷர் வீட்டுக்கு மருமகளா போறவ அங்கே அவ விளக்கேத்தி வைக்கிறாளோ இல்ல எரியற விளக்கை தான் அணைக்கிறாளோ அதனால பாதிக்கப்படப்போறது என் பிள்ளையில்லன்ற தைரியத்துல அப்படி சொன்னேன். ஆனால் இப்போ நீயே அவளைத் தான் என் மருமகளா ஏத்துக்கனும்னு சொன்னா நான் நிச்சயமா சம்மதிக்க மாட்டேன். அவ பொறந்த நேரம் சரியில்லனு அவ பாட்டியே அவளை சதா கரிச்சு கொட்டறா. மூல நட்சத்திரத்துல பொறந்து அவ தாத்தாவை முழுங்கிட்டதா ஊரே பேசுது. அப்படிப்பட்டவளை நான் எப்படிடா என் மருமகளா ஏத்துப்பேன்?"



"போதும்மா. ப்ளீஸ்….."



ஆயாசத்துடன் இடைமறித்தான் நந்தகுமார்.



"ஹாஸ்பிட்டலுக்கு சிகிச்சைக்காக வர்றவங்க கிட்ட உங்க விதி முடிஞ்சு போச்சு. வைத்தியம் பார்த்தாலும் ஒரு பயனுமில்லனு நான் ஒரு டாக்டர் சொன்னா அது எவ்வளவு அபத்தமோ அதே அளவுக்கு அர்த்தமில்லாமல் இருக்கு இப்போ நீ பேசிய பேச்சு.மனுசங்க வாழ்வதற்கும் சாவதற்கும் அவங்கவங்க ஜாதகராசியும் ஜென்மநட்சத்திரமும் தான் காரணம்னா, அப்போ டாக்டர்னு நாங்கல்லாம் எதற்காகம்மா இருக்கோம்?

டாக்டருக்கான படிப்பை பல வருஷங்கள் மெனக்கெட்டு படிச்சுட்டு ஒரு வெள்ளை கோட்டையும் மாட்டிண்டு நாங்க ஹாஸ்பிட்டல் போறதும் வர்றதும் வர்ற நோயாளிகளோட ஜாதகத்தையும் ஜென்மராசியையும் வெச்சு அவங்களுக்கு வாழ்வா சாவானு முடிவு பண்ணவா?

டாமிட்!! படிச்சவா மாதிரியாம்மா நீ பேசறே?

ராதாவோட பாட்டி தான் பத்தாமபசலித்தனமா ஏதோ பேத்திண்டிருக்கான்னா, அதை நீயும் நம்பறியேம்மா.சே!! ராதாவோட தாத்தா மாரடைப்பில செத்துப் போனதுக்கு ராதா எப்படிம்மா பொறுப்பாவா? ஹைலி இடியாட்டிக்!! அப்படியே அவ ராசி மூலமாகவே இருந்தாலும் எனக்கு அதைப் பற்றி கவலையில்ல.நீ என் ஆசையை முடக்கிப் போட்டேன்னாத் தான் நான் மனம் முறிஞ்சு போவேன்."



அசாத்திய கோபத்துடன் நந்தகுமார் பேசவும் விக்கித்துப் போய் நின்றாள் தேவகி. அன்னையின் திகைப்பை லட்சியமே செய்யாமல் மேலும் தொடர்ந்து பேசினான் அவன்.



"நான் இவ்வளவு தூரம் எடுத்தைச் சொல்லியும் நீ கன்வின்ஸ் ஆகலேன்னா, கடைசியா ஒண்ணு சொல்ல விரும்பறேன்.எனக்கும் ராதாவுக்கும் மனப்பொருத்தம் மட்டுமில்ல உன் சென்டிமென்ட்படி பார்த்தால் ஜாதகப்பொருத்தமும் இருக்கும்மா. ராதாவோட பொறந்தநேரமும் ராசியும் தான் அவ தாத்தாவை சாகடிச்சுடுச்சுனு நீ நம்பினால், என் பொறந்த நேரமும் ராசியும் தான் எங்கப்பாவை சாகடிச்சதா நீ நம்பியே ஆகனும்…."



"நந்து!!,,,,"



நந்தகுமார் மேலே ஏதும் சொல்லும முன், அவன் கன்னத்தை தேவகியின் விரல்கள் பதம் பார்த்து விட்டன. அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தவனை சொல்லொண்ணா வேதனையுடன் பார்த்தவள் தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.



மகனின் பேச்சில் இருந்த உண்மையும் நியாயமும் அவள் புத்திக்கு எட்டவில்லை.

அவன் மனம் படும் பாடு அவள் கண்களுக்கு புலப்படவில்லை. மாறாக ஒரு துக்கிரிப் பெண்ணை மனைவியாக்கிக் கொள்ள தானும் அவளைப் போல தான் என்று சாதிக்கிறானே என்று ஆத்திரம் வந்தது.



'பாவிப்பெண்!! எப்படி வசியம் பண்ணினாளோ? என்ன சொக்குப்பொடி போட்டாளோ? இப்படி ஒரேயடியா மயங்கிட்டானே என் பிள்ளை..'



மடிந்து உட்கார்ந்து அழுதவண்ணம் ராதாவைத் திட்டத் தான் முடிந்தது அவளால் மகனின் மனதை மாற்ற முடியவில்லை.



'ஐயோ!! பகவானே!!! நான் என்ன செய்வேன்? சொன்ன வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாத என் பிள்ளை இப்போ வழக்கத்துக்கு மாறாக தான் பிடித்த

பிடியிலேயே இருக்கிறானென்றால் , நான் என்ன சொல்லி எப்படி விளக்கி அவன் மனதை மாற்றப் போகிறேன்? ஒண்ணும் புரியலையே…'



நாட்கள் தான் நகர்ந்தனவே தவிர நந்தகுமார் தன் நினைப்பை மாற்றவில்லை. மேலும் அன்றைய நிகழ்விற்குப்பின் தாயிடம் பாராமுகமாக வேறு அவன் நடந்து கொள்ளவும், தேவகி உண்மையிலேயே தவித்துப் போனாள். அவனுடைய பாராமுகத்தையும் விட்டேற்றியான ஸ்பாவத்தையும் தாங்கிக் கொள்ள முடியாமல் அவன் கைபற்றி அழுதாள்.



"ஏண்டா கண்ணா!! அந்த ராதா மேலயிருக்கற ப்ரியம் பெத்து வளர்த்த இந்த அம்மா மேல உனக்கில்லையா?

யாரோ ஒரு மூன்றாம் மனுஷி அவளுக்கு பரிஞ்சுண்டு பெத்தவளை அந்நியமாக்கிட்டியே. இது நியாயமா? உனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்பட்ட நானே உன் கல்யாணத்துக்கு தடையா இருப்பேனா? கொஞ்சமானும் யோசனை பண்ணுடா.

பாம்புன்னு தெரிஞ்ச பின்னாலும் அது நம்ம காலை சுத்திக்க விடலாமா? ராதா நல்ல பொண்ணாவே இருந்தாலும் அவளை மருமகளா ஏத்துகிட்டு நான் ரிஸ்க் எடுக்க விரும்பல. என்னோட சென்டிமென்ட் உனக்கு வேணா அபத்தமா படலாம்.ஆனால் நான் அதை நம்பறேன் .ஏண்டா கண்ணா! ஏதோ விதி ஆம்படையானைத் தான் அல்பாயுசுல இழந்துட்டு நிக்கறேன். பிள்ளையாவது பெண்டாட்டி பிள்ளைங்களோட அமோகமா வாழணும்னு நான் ஆசைப்படறதில் தப்பிருக்கா சொல்லு. எனக்கும் உன்னை விட்டா வேற யார் இருக்கா சொல்லு…"



நந்தகுமார் நெகிழ்ந்து போனான்.

ஏற்கெனவே தாயை வருந்த வைத்துவிட்டதாக குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தவன் இப்பொழுது அன்னையின் அழுகையில் சுத்தமாய் கரைந்து போனான்.அம்மாவின் கை பற்றி அழுத்தியவன் கண்கள் கலங்கின.



"சாரிம்மா!! உன்னை வேதனைப்பட வைத்ததற்காக என்னை மன்னித்து விடும்மா ப்ளீஸ்!! இதோட இந்த விஷயத்தை மறந்துடுவோம்.ஆனால் உனக்கு ராதாவை மருமகளா ஏத்துக்க மனசில்லன்னா நான் கடைசி வரை உனக்கு மட்டும் பிள்ளையா இருந்துட்டுப் போறேன்மா.வேறொரு பெண்ணுக்கு கணவனாக இருக்க என் மனசு சம்மதிக்காது.."



படபடவென சொல்லிவிட்டு ஹாஸ்பிட்டல் கிளம்ப கையில் மெடிகல் கிட்டுடன் வாசலுக்கு விரைந்த பொழுது, மாடிப்படி வளைவில் ராதா நின்று கொண்டிருந்தாள்.

அவள் கைகளில் ஈரத் துணிகள்.கண்களில் ஈரக்கசிவு.



மொட்டைமாடியில் ஈரத்துணிகளை உலர்த்த வந்தவள் அவனும் அம்மாவும் பேசியதை கேட்டிருப்பாளோ?

நந்தகுமார் அவள் விழிகளை நேருக்கு நேராக பார்க்கும் துணிவின்றி மாடிப்படிகளை வேகமாக கடந்தான்



அடுப்பில் ஏற்றி வைத்திருந்த பாத்திரத்தில் பால் பொங்கி வருவது கூட கவனிக்காமல் ராதா கலக்கத்துடன் நின்றிருந்தாள். அடுக்களைக்குள் தற்செயலாக வந்த சந்தியா மட்டும் குரல் கொடுத்திருக்காவிடில் அத்தனை பாலும் வீணே பொங்கி வடிந்திருக்கும்.



அவசரமாய் பால்பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்குவதற்குள், துளி பால் பொங்கி அடுப்பில் கோலம் போட்டு விட, சந்தியா பதட்டத்துடன் அருகில் வந்தாள்.



"என்னக்கா ஆச்சு உனக்கு? அடுப்பில் பானல் பொங்கறது கூட தெரியாமல் அப்படியென்ன யோசனை? நல்லவேளை நான் வந்ததனால கொஞ்சம் பாலோட போச்சு. இல்லன்னா மொத்த பாலுமில்ல வீணாப் போயிருக்கும்.பாட்டி வேற இதைப் பார்த்தால் கத்துவா.சிந்திய பாலை சட்டுனு பாட்டி வர்றதுக்குள்ளே துடைச்சிருக்கா.."



சந்தியா பயந்தது போலவே

"அடுக்களையில் நின்னுன்டு என்னடி வம்பளக்கறிங்க? "

என்று அதட்டியபடி வந்த பாட்டி சிந்தியிருந்த பாலைக் கண்டவுடன் தன் வசைபுராணத்தை ஆரம்பித்துவிட்டாள்



"ஏழு கழுதை வயசாறது.இன்னும் துளி கூட பொறுப்பு இல்ல. அடுப்பில் பால்பாத்திரத்தை வெச்சுட்டு பால் பொங்கறது கூட தெரியாமல் அப்படியென்ன பேச்சு? மூதேவி!! ஒரு காரியம் கூட ஒழுங்கா பண்ண துப்பில்ல."



"பாட்டீ!!! "கோபத்துடன் கத்தியே விட்டாள் சந்தியா.



"அக்காவை இனிமேல் மூதேவினு சொன்னா எனக்கு கெட்ட கோபம் வரும் சொல்லிட்டேன்…"



"ஓ!! அக்காவுக்கு தங்கை வக்காலத்தா? என்னடி புதுசா அவளுக்காக பரிஞ்சுண்டு வர்றே.."



பாட்டி இடக்காக கேட்டாள்.



"ஏன்னா அவ இன்னொரு ஆத்துக்கு மாட்டுப் பொண்ணா போகப் போறா. கல்யாணமாகி இன்னும கொஞ்ச நாளில் ஆம்படையானோட குடித்தனம் பண்ணப் போறவளை வயசுல பெரியவளா லட்சணமா ஆசிர்வாதம் பண்ணினா அது நியாயம். அதை விட்டு மூதேவினு சபிச்சா நன்னாவா இருக்கு? இதுவரை நீ அப்படி கூப்பிட்டதை கண்டுக்காமல் இருந்தது தப்பு தான்.ஆனால் இனியும் அந்த தப்பை நான் செய்றதாயில்லை."



'என்னிக்குமில்லாமல் இன்னிக்கென்ன இந்த குட்டி இந்தப் பேச்சு பேசறா? கிரகசாரம்!! பொட்டு பொடிசு கிட்ட எல்லாம் பேச்சு வாங்கனும்னு பகவான் என் தலையில எழுதி வெச்சுட்டானே .நா என்ன பண்ணுவேன்?'



பாட்டி புலம்பிக் கொண்டே வெளியேற, ராதா பதட்டத்துடன் தங்கையிடம் திரும்பினாள்.



"சந்தியா!! என்ன இது அசட்டுத்தனம்? பாட்டி கிட்ட ஏன் அப்படி பேசினே?"



"நீ சும்மாயிருக்கா. நீ குனிய குனியத் தான் பாட்டி குட்டிண்டேயிருக்கா.எல்லாத்துக்கும் ஒரு எல்லையுண்டு, அன்ட திஸ் இஸ் இட்."



:"நீயே சொல்லு. மெடிகல் என்ட்ரன்ஸ் நீட் தேர்வுக்காக எனக்கு ப்ரத்யேகமாய் புரபஸர் வெங்கட்ராமன் கோச்சிங் கொடுத்ததால தான் நான் இன்னிக்கு தேர்வில் வெற்றி பெற்று மெடிசின் படிக்கப்போறேன்.ஏன் நம்ம பாலு அண்ணாவையே எடுத்துக்கோ. பி இ படிச்சிருந்தாலும் கேம்பஸ்ல நல்ல ப்ளேஸ்மெண்ட் கிடைக்காமல் ஒரு சாதாரண வேலையிலிருந்தவரை தன் செல்வாக்கை பயன்படுத்தி புரொபஸர் பெரிய கம்பெனியில் நல்ல போஸ்டில் லட்சரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கிக் கொடுத்திருக்கார்னா இதெல்லாம் நடந்தது யாரால? உன்னாலதான்க்கா. உன்னால நம்ம குடும்பத்துல இவ்வளவு நல்லது நடந்திருக்கறப்போ உன்னைப்போய் பாட்டி மூதேவினு சொன்னால் என்னால எப்படி அதை கேட்டுட்டு சும்மாயிருக்க முடியும்.?"



நாத்தழுதழுக்க, விழிகளில் நீர் ததும்ப பேசிய சந்தியாவை மார்போடு சேர்த்தணைத்துக் கொண்டாள் ராதா.
 
Top