மனைவி 20

Advertisement

Nivi Ammu

Well-known member
Member
மனைவி - 20

அடுத்த சில நிமிடங்களில் அங்கே ஒரு டாட்டா ஏசி வண்டி வந்து நின்றது.

அவளுடைய பொருட்களை சொக்கனே தூக்கி வண்டியில் ஏற்றினார்.

"முன்னாடி உட்கார்ந்துக்கோ ராதா. டிரைவர் ரொம்ப நம்பிக்கையானவர், பத்திரமா உன்னை வீட்ல கொண்டு போய் விட்டுருவார். எந்த நேரத்தில் எந்த உதவி தேவைப்பட்டாலும் எனக்கு உடனே கால் பண்ணு.

இந்த மருதுபாண்டியோ, அவன் பொண்டாட்டியோ இல்லை உன் அம்மாவோ வந்து உனக்குத் தொல்லை கொடுத்தா சொல்லு... இவனுங்களை உள்ள தூக்கி வச்சிடுறேன்!" என்று அவர் கர்ஜிக்க, கண்கள் குளம் போல தேங்க, அந்த மகராசனை நோக்கிக் கைகூப்பி வணங்கி விட்டு, ஒரு புதிய வாழ்க்கையை நோக்கி ராதை அங்கிருந்து கிளம்பினாள்.

அவள் குடும்பமும் சரி, அவளுக்கு அமைந்த கணவனும் சரி... அவளுக்குச் சரியாக வாய்க்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அதற்காக உலகத்தில் உள்ள அத்தனை பேருமே தவறானவர்கள் என்று சொல்லிவிட முடியாது அல்லவா?

"உதவி செய்ய நல்ல உள்ளம் கொண்ட மக்கள் இன்னும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்" என்பதை ராதை மெல்ல மெல்லப் புரிந்து கொண்டாள்.

அந்தப் புரிதலே அவளுக்குள் ஒரு மெல்லிய நிம்மதியைத் தந்தது.

தன் தற்காலிகத் தேவைகளுக்கான பொருட்களை எடுத்துக்கொண்டு அவள் அந்த வீட்டை விட்டு மெல்லக் கிளம்பினாள். அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த சொக்கன், சட்டென மருதுபாண்டியின் பக்கம் திரும்பினார்.

அவர் கண்கள் கோபத்தில் சிவந்திருந்தன.
"ஏய் மருதுபாண்டி... நீயாவே ஒழுங்கு மரியாதையா அவளுக்குச் சேர வேண்டியப் பங்கை பிரிச்சுக் கொடுத்துட்டா உனக்கு நல்லது. நாங்க பஞ்சாயத்து ஆளுங்க எல்லாம் ஒண்ணா திரண்டு வீட்டுக்குள்ள வந்தோம்னு வையி... அப்புறம் இந்த ஊர்ல நீ தலைகாட்டி குடியிருக்க முடியாது, தெரிஞ்சுக்கோ! நீ என்னென்ன தில்லுமுல்லு வேலை பண்ணிட்டு இருக்கேன்னு எங்களுக்குத் தெரியாதுன்னு நினைக்காத...

அத்தனையும் ஊர் முன்னாடி சந்தி சிரிக்க வச்சிடுவோம். இன்னைக்கு நான் இங்க உன்னை மிரட்டுனதுக்காக, ராதா கிட்ட போய் ஏதாவது குடைச்சல் கொடுத்தேன்னு தெரிஞ்சது... அப்புறம் உன்னை தூக்கி உள்ளேயே உட்கார வச்சிடுவேன்! உள்ளே போய் கம்பிதான் எண்ணணும், பாத்துக்கோ. புள்ள குட்டிக்காரன், உனக்கும் ஒரு குடும்பம் இருக்கேன்னு பார்க்குறேன். இல்லைன்னா என்னைக்கோ உன்னை உள்ளே தூக்கி வச்சிருப்பேன்!" என்று ஆத்திரமும் அதிகாரமும் கலந்த குரலில் அவனை மிரட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

மருதுபாண்டி க்கு ஆத்திரம் தலைக்கேறியது. யாரிடமும் காட்ட முடியாத கோபத்தை அங்கிருந்த பொருட்களின் மீது காட்டினான்.

பொருட்களை எட்டி உதைத்து தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டவன், தன் தாயின் பக்கம் திரும்பினான்.

"உன் பொண்ணு இதுக்குத்தானே புருஷன் கூட வாழ மாட்டேன்னு இங்க வந்தா? இப்ப என்னைத் தெருவுக்குக் கொண்டு வந்துட்டா... இப்பவாச்சும் உனக்கும் உன் பொண்ணுக்கும் சந்தோஷமா?" என்று கத்திக்கொண்டே தன் தாயை அடிக்கப் பாய்ந்தான்.

அவன் தாய் சளைக்காமல் சீறினாள். "வாயை மூடுடா! உன்னால்தான் என் பொண்ணு வாழ்க்கையே நாசமாப் போச்சு. எங்கிருந்து பிடிச்சுட்டு வந்தியோ இந்த மாப்பிள்ளையை... அந்த நாதாரிப் பயலோட ஒரு நாள் கூட என் பிள்ளை நிம்மதியா வாழல. சிரிப்பே மறந்து போச்சு என் பிள்ளைக்கு. உன்கிட்ட வந்து நாயா பேயா கஷ்டப்பட்டேன்... பெத்த பிள்ளைகளைக்கூடப் பிரிச்சு அவன்கிட்ட அனுப்பி வச்சேனே... அப்போதாவது ஒரு நாள் அந்த வீட்டுக்குத் தைரியமாப் போய் அங்க இருக்குற பொம்பளைங்களைக் கண்டிச்சிருப்பியா நீ? எத்தனை நாள் உன்கிட்ட கெஞ்சி இருப்பேன்... 'ராதாவை வாழ வை, ராதைக்கு ஒரு நல்லது பண்ணுடான்னு... அப்போதெல்லாம் உன் காதுல விழலையே? இப்போ எல்லாம் கைமீறிப் போனதுக்கு அப்புறம் என்கிட்ட வந்து எகிறி கொண்டு வரியா?" என்று தன் மகனை வெளுத்து வாங்கி விட்டு,
விறுவிறுவென வீட்டிற்குள் சென்றார்.

மகளின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற பயம் ஒரு கணம் இருளைப் போல அவரைச் சூழ்ந்தது. ஆனால், அதே சமயம் ராதையிடம் தெரிந்த அந்தத் தெளிவும் தைரியமும் அவருக்குள் ஒரு சின்ன நம்பிக்கையை விதைத்தது.

ராதை, அந்த விவாகரத்து பத்திரத்தை கையில் பிடித்தபடி சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.

கடந்த கால நினைவுகள் நெஞ்சை அடைக்க, கண்கள் கலங்க அந்தப் பத்திரத்தில் தன் கையெழுத்தைப் போட்டாள்.

பின்னர், கனத்த இதயத்தோடு பிரபாகரனை அழைத்தாள்.
மறுமுனையில் பிரபாகரன் பேசினான்,

"சொல்லு ராதா..."

"அண்ணா... அவர் விவாகரத்துப் பத்திரம் கொடுத்திருக்காரு."

"யோசிக்காத ராதா, கையெழுத்தைப் போட்டு அவனுக்கே அனுப்பி விடு."

"கையெழுத்துப் போட்டுட்டேன் அண்ணா..."

"நல்லது ராதா. இந்தக் கையெழுத்து உன் மொத்த வாழ்க்கையையுமே மாற்றப் போகுது. இதுவரைக்கும் உண்மை என்னன்னு தெரியாம ஆடிக்கிட்டு இருந்தவன், இனிமேல் எல்லாத்தையும் தெரிஞ்சுப்பான். ஆனா ஒண்ணு... நீ இனி அந்த வீட்டுக்குப் போகக் கூடாது. ஸ்ரீராமை நீ நேர்ல பார்க்கவே கூடாது. நீ அவனைப் பார்க்குற இடம் நீதிமன்றமா மட்டும் தான் இருக்கணும். புரியுதா நான் சொல்றது?"

"புரியுது அண்ணா... ஆனா அங்க போனா ஏதும் பிரச்சனை வந்துவிடாதுல்ல?" என்று தயக்கத்தோடு கேட்டாள்.

"பிரச்சனை இல்லாம உன் வாழ்க்கை இதுவரைக்கும் போனதே இல்லை ராதா. அங்க வரப்போற பிரச்சனை மட்டும் உன்னை என்ன பண்ணிடப் போகுது? எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம், உனக்குத் துணையா நான் இருக்கேன். அந்த நோட்டீஸைப் பத்திரமா வச்சிரு, சாயந்திரம் நானே வந்து வாங்கிக்கிறேன்."

"சரிங்கண்ணா... கையெழுத்துப் போட்டு செல்ப் ல வச்சிருக்கேன்."

"பிள்ளைங்க ஸ்கூலுக்குப் போயிட்டாங்களா?"

"போயிட்டாங்கண்ணா. நான் இப்போதுதான் அந்த வீட்டுக்குப் போய் பிள்ளைங்களோட பொருள் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்தேன்."

பிரபாகரன் பதறினான். "எதுக்கு அங்க தனியா போன? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நான் துணைக்கு வந்திருப்பேன்ல?"

"எப்ப பார்த்தாலும் எல்லாரையும் நான் எதிர்பார்த்துட்டு இருக்க முடியாது அண்ணா. எனக்காகவும் என் பொண்ணுங்களுக்காகவும் நான் தைரியமா வாழணும். அங்க போய் நான் என்ன பண்ணிடப் போறேன்?" என்று கூறிவிட்டு, அங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் விரிவாகச் சொன்னாள்.

"ஊர் தலைவர் சொன்னது சரிதான் ராதா. உனக்காகச் சொத்து வேணாம்னு நீ சொல்லலாம், ஆனா உன் பொண்ணுங்க எதிர்காலத்துக்கு அது வேணும். நீ ஒன்னும் அவன் கஷ்டப்பட்டுச் சம்பாதிச்ச பணத்தைக் கேட்கல. வர்ற சொத்தை வேணாம்னு சொல்லாத. பிள்ளைங்க பேர்ல எழுதி வை, அவங்களுக்கு உதவும்."

"நானும் அவங்க கொடுத்தா சம்மதம்னு சொல்லிட்டு வந்துட்டேன் அண்ணா."

"நல்லது... எனக்குத் தெரிஞ்சவங்க மூலமா நானும் கொஞ்சம் அழுத்தம் கொடுக்கிறேன். எல்லாம் நல்லபடியாகவே நடக்கும், நீ எதையும் நினைச்சி குழப்பிக்காத நிம்மதியா இரு."

"அண்ணா... எனக்கு வேலை?" என்று மெதுவானக் குரலில் தயக்கத்தோடு கேட்டாள்.

"வேலைக்குச் சொல்லியிருக்கேன் ராதா. இன்னைக்கு சாயந்திரத்துக்குள்ள எனக்குப் பதில் வந்துடும். ஒரு நல்ல வேலையா கிடைச்சதும் நானே உனக்குச் சொல்றேன். நீயா அவசரப்பட்டு எதிலயும் போய் மாட்டிக்காத." பிரபாகரன் மிகுந்த அக்கறையோடு சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

ராதை எதைப் பற்றியும் அதிகமாக யோசிக்கவில்லை. "இனி நடப்பது நடக்கட்டும், எதையும் எதிர்கொள்ளலாம்" என்ற ஒரு துணிச்சல் அவளுக்குள் பிறந்தது.

சில நல்ல மனிதர்களை சந்தித்ததால் வந்த நம்பிக்கையா அது என்று அவளுக்கே புரியவில்லை.

அவள் கொண்டு வந்த மூட்டைகளை ஒவ்வொன்றாகப் பிரித்து அடுக்கத் தொடங்கினாள். மகள்களின் பழைய பொருட்களைக் கண்டதும் அவள் கண்கள் குளமானது.

கிழிந்து போன, தையல் பிரிந்த பழைய துணிகள்... பிஞ்சுப் போன பள்ளிப் பை... ஒரு பென்சில் கூடச் சுண்டு விரல் அளவு கூட இல்லை. பெண் குழந்தைகளுக்கு என்று அடையாளமாகச் சொல்லிக்கொள்ள ஒரு சின்ன வளையலோ, பொட்டோ கூட அவர்களிடம் இல்லை.

அந்த வறுமையும் கொடுமையும் அவளைப் பிழிந்தெடுத்தது.

கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, தான் பத்திரமாகக் கொண்டு வந்திருந்த அந்த பழைய டிரங்க் பெட்டியைத் திறந்தாள். அதில் அவள் கல்லூரி காலத்தில் தோழிகள் அன்பளிப்பாகக் கொடுத்த பொருட்கள் இருந்தன.

மேலும், அவள் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த சிறுசேமிப்பு பணமும் இருந்தது. வீட்டிற்குத் தெரியாமல் அவள் நகைச்சீட்டு போட்டுச் சேர்த்த நான்கு கிராம் தங்க நகையும் அதில் பத்திரமாக இருந்தது.

அந்த நகையைப் பார்த்து ஒரு நிமிடம் நெகிழ்ந்தவள், அதில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு விறுவிறுவெனக் கடைத்தெருவிற்கு சென்றாள்.

மகள்களுக்குப் புதிய பள்ளிப் பை, லஞ்ச் பேக், டிபன் பாக்ஸ், செருப்பு மற்றும் புதிய சீருடைகளை ஆசை ஆசையாக வாங்கினாள். கூடவே கொஞ்சம் பழங்களையும் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். பொருட்களை எல்லாம் நேர்த்தியாக அடுக்கி வைத்துவிட்டு மணியைப் பார்த்தாள். நான்கு மணி ஆகியிருந்தது.

நான்கரை மணிக்கு பிள்ளைகளுக்குப் பள்ளி முடிந்துவிடும். "நேரத்துக்கே போய் அவங்களை அழைச்சிட்டு வரலாம்" என்று வேகமாகச் செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பினாள்.

பள்ளிவாசலில் அவள் காத்திருக்க, சீதாவும் மகாவும் கைகோர்த்துக் கொண்டு வெளியே வந்தார்கள். அங்கே நின்றிருந்த தாயைக் கண்டதும் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

"அம்மா!" என்று ஓடி வந்து இருவரும் அவளைக் கட்டிக் கொண்டார்கள்.

முன்பு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இதேபோல் பள்ளி வாசலில் தன் மகள்களை அணைத்துக்கொண்ட அந்தப் பழைய நினைவுகள் அவள் மனக்கண் முன் நிழலாடி மறைந்தது.

"நாங்களே வீட்டுக்கு வந்திருப்போம்மா... நீங்க எதுக்காக இங்க வந்து வெயிட் பண்றீங்க?" என்று பிள்ளைகள் அக்கறையாகக் கேட்டார்கள்.

பயமும் வலியும் தூரத்தில் இருக்கும் வரைதான் தெரியாது. அருகில் வந்த பிறகுதான் பெண் பிள்ளைகளை எப்படித் தனியாக வரவிடுவது என்ற அந்தத் தாயுள்ளத்தின் தவிப்பு அவளுக்குப் புரிந்தது.

"நான் வீட்ல சும்மா தானே இருக்கேன் செல்லங்களா... அதான் வந்தேன், வாங்க போகலாம்" என்று இருவரின் கைகளையும் இறுகப் பற்றிக் கொண்டாள்.

"அம்மா... நான் இன்னைக்கு கலர் ட்ரெஸ் போட்டுட்டுப் போனேனா... என் பிரண்ட்ஸ் எல்லாரும் எனக்குப் பிறந்தநாள்னு நினைச்சுக்கிட்டாங்க. எனக்கு இன்னைக்கு பிறந்தநாள் இல்லைன்னு அவங்களுக்குப் புரிய வைக்கிறதுக்குள்ள எனக்கு மூச்சே நின்னு போச்சுமா!" என்று சீதா மிக உற்சாகமாகச் சொன்னாள்.

"என்கிட்ட அப்படி யாரும் கேட்கவே இல்லையே அக்கா?" என்று மகா கொஞ்சம் வருத்தமாகக் கேட்க,

"தெரியலையே..." என்று சீதா உதட்டைப் பிதுக்கினாள்.
"உங்களுக்குச் சாப்பிட என்ன வேணும்?" என்று பக்கத்தில் இருந்த தேநீர்க் கடையில் பஜ்ஜியும் வடையையும் காட்டி ராதை கேட்டாள்.

தாயிடம் இருக்கும் பணக்கஷ்டம் அந்தப் பிஞ்சுகளுக்கு தெரிந்திருந்தது.

தொடரும்...
.
 
ராதை இனி அவ புருஷன கோர்ட்டில் வச்சு பிள்ளைகள யாருனு சபை முன்னாடி கேட்கனும். அவன் பதில் தெரியாம முழிக்கறதைப் பார்த்து ஊரே காரித்துப்பனும்.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top