என் ஆயுள் ரேகை நீயடி 8

Advertisement

Sagee Elumalai

Active member
Member
Chapter 8
உன் முகம் பார்க்க ஏங்கி கிடந்தேன்,
பார்த்து விடும் நாளும் வந்ததும்
ஆனாலும் ஏக்கத்தின் சுகத்தினை
இழந்து விட மனமில்லை எனக்கு

மீண்டும் அந்த நாளுக்காவே எங்க துவங்கி விட்டேன்...

“அண்ணி இந்தாங்க உங்களுக்கு டிரஸ்” என்று அவள் கொடுக்க, புருவம் சுருக்கி பார்த்தவள், “நான் அடுத்தவங்க டிரஸ் எல்லாம் போடறது இல்லை” என்றாள்.

“இல்லை அண்ணி இது புதுசு தான், அண்ணன் வாங்கி வைக்க சொன்னாருன்னு நான் தான் கடைக்கு போய் வாங்கிட்டு வந்தேன்” என்றாள் தயக்கமாக.

“நீயா.. ஆமா நீ என்ன படிக்கிற”

“இப்போதான் அண்ணி காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்”

“ஓஹ்”, அவள் கொடுத்த உடைகளை வாங்கிக்கொண்டே அறையை அளந்தபடி “இது உன்னோட ரூம்மா” என்றாள்.

“இல்லை அண்ணி அண்ணா ரூம்”

“சரி நீ போ நான் குளிச்சுட்டு வரேன்”

“பரவாயில்லை அண்ணி நான் இங்கேயே இருக்கேன்” என்றாள் தலையாட்டிக்கொண்டே.

“ஏன் நான் இப்படியே குதிச்சு ஓடிட போறேன்னு உங்க அண்ணன் கூடவே இருந்து கூட்டிட்டு வர சொன்னாரா”.

அவள் இப்படி சொன்னதும் அதிர்ந்து போனவளாக விழித்த அகல்யா, “அய்யோ இல்லை அண்ணி” என பதறினாள்.

“அப்புறம் எதுக்கு இங்கேயே இருக்க, கீழே வர எனக்கு வழி தெரியும் நீ போ” என்றவள் குளிக்க சென்றாள்.

அகல்யாவிற்கு முகத்தில் அடித்தது போல அவள் பேசியது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது, ஆனாலும் “உன் அண்ணி கொஞ்சம் கோபத்துல இருக்கா அதனால கோபமா ஏதாவது பேசினா கண்டுக்க கூடாது” என்று அண்ணன் சொன்னது நினைவுக்கு வந்தது. சரி என்று கீழே இறங்கி சென்று விட்டாள்.

அம்மாவை தேடி செல்ல, “என்னடி அவ வரலையா”

“இப்போதான்மா குளிக்க போனாங்க, வருவாங்க”

“ஏண்டி நம்ம ராகவி வர வேண்டிய இடத்திலே இவ இருக்காளே, உனக்கு வருத்தமா இல்லையா” என்றார் மகளை பார்த்து.

“அம்மா இவங்களும் நம்ம அத்தை பொண்ணு தானே. இதுல என்ன இருக்கு”

“அது சரி எனக்குன்னு வந்து சேர்ந்து இருக்கீங்க பாரு அண்ணனும் தங்கச்சியும், ஏண்டி அவளை நீ இப்போதானே பார்க்கிற, அவளும் நம்ம ராகவியும் ஒண்ணா”

“அப்படி இல்லம்மா, ஆனா அண்ணன் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்த பிறகு என்ன செய்ய முடியும். பிடிக்கலைன்னு துரத்தவா முடியும்”

“என்ன சொன்ன” கையில் இருந்த வேலையை விட்டு விட்டு திரும்பி கேட்டார் மீனா.

“நமக்கு பிடிக்கலைன்னு சொல்லி துரத்தவா முடியும்னு கேட்டேன்”.

“ஏண்டி அகல், அப்படி நடக்க வாய்ப்பு இருக்கா” என்றார் ஆர்வமாக

“அம்மா நான் ஏதோ வார்த்தைக்கு சொன்னேன், அண்ணனை பத்தி தான் உங்களுக்கு தெரியும்ல, ஒரு விஷயத்திலே இறங்கிட்டா அதுல இருந்து வெளியே வராது. பிடிவாதமா இருக்கும். இதெல்லாம் நடக்கிற விஷயமா அப்புறம் நீங்க தேவை இல்லாம மனசை போட்டு குழப்பிக்காம இருங்க” என்று அவள் சென்று விட்டாள்.

மகள் சொல்வது சரி தான், மகன் ஒரு முடிவெடுத்து அதில் இறங்கி விட்டால் அதை முடிக்காமல் பின் வாங்க மாட்டான். ஆனால் இது அவனுக்கு ஒண்ணும் பிடித்து நடந்த திருமணம் அல்லவே. அவன் தாத்தாவின் விருப்பத்திற்காக நடந்த திருமணம் தானே. அதனால் பெரிதாக ஈடுபாடு இருக்காது. இதில் எங்காவது கொஞ்சம் சறுக்கினாலும் கூட போதும் ராகவியை எப்படியாவது உள்ளே நுழைத்து விடலாம் என்று எண்ணிக்கொண்டிருக்க, “மீனா என்னம்மா செய்யற உள்ளே” என்று விசு அழைக்கவும் “இதோ வரேன்” என்று குரல் கொடுத்தவாரே சென்றார்.

அங்கே மேசையில் அமர்ந்து இருந்தாள் மேகவினி. அவள் பக்கத்தில் ஒருபுறம் மாமனார் வேதாச்சலாம் அவர் பக்கத்தில் கணவர், அதன் பிறகு அகல்யா என்று அமர்ந்து இருந்தனர்.

மருமகளின் முகத்தை ஆராய்ந்தார் மீனா, அதில் மருந்துக்கும் திருமணமான மலர்ச்சியோ, உறவுகளை கண்ட நெகிழ்ச்சியோ இல்லை. அவளும் என்ன செய்வாள் இது ஒன்றும் அவள் ஏற்று கொண்ட திருமணம் இல்லையே. மகன் அவளை தந்திரமாக தானே திருமணம் செய்து கொண்டு வந்திருக்கிறான்.

“தம்பி எங்கே” கேட்டபடியே உணவுகளை எடுத்து கொண்டு வந்தவர் மேசை மீது வைத்து விட்டு கேட்க, “அண்ணன் இப்போ தான்மா குளிக்க போனாரு” என்றாள் அகல்யா.

அவருடனேயே இன்னொரு பெண்ணும் உணவை எடுத்து வந்தவள் மேசை மீது வைத்து விட்டு சென்று விட, தட்டை எடுத்து வைத்துகொண்டு மீனாவும் அமர்ந்து கொண்டார்.

அவரவர்க்கு என்ன வேண்டுமோ எடுத்து வைத்து கொள்ள, “நீயும் எடுத்து வச்சு சாப்பிடும்மா” என்றார் விசு.

புதிதாக வந்திருக்கும் வீட்டில் எப்படி தானே எடுத்து வைத்து சாப்பிடுவது என்று அவள் யோசிக்க, “இங்கே யாரும் யாருக்கும் பரிமாறிக்கிட்டு இருக்கிற பழக்கம் எல்லாம் கிடையாது” என்றார் மீனா.

உடனே மாமனாரும் கணவரும் அவரை பார்க்க, “நம்ம வீட்டு வழக்கத்தை சொன்னேன் மாமா” என்றார் சமாளிப்பாக.

“அண்ணி நான் வேணும்னா எடுத்து வைக்கவா”, என அகல்யா வர,

“வேண்டாம் எனக்கும் கை இருக்கு” என்று நறுக்கு தெரித்தது போல சொன்னவள் தனக்கு எடுத்து வைத்து கொண்டாள்.

நேரம் இரவை தாண்டி இருந்ததில் இரவு உணவுக்கு ஏதுவாக சப்பாத்தி சென்னாவும், இட்லி சாம்பாரும் இருந்தது. அவள் வீட்டில் எப்போதும் மூன்று வித உணவாவது இருக்கும். சாதாரண சமையலாக இருந்தால் கூட அதற்கு மூன்று வித பதார்த்தங்கள் இருக்கும். இங்கே அப்படி இல்லாமல் போனதில் வீடு தான் பெருசு ஆனா என்று அவள் நினைக்கும் நேரமே.. கீழே இறங்கி வந்து கொண்டிருந்தான் வீரா.

“அண்ணா வாங்க” என அகல்யா அழைக்க குளித்து முடித்திருப்பான் போல இன்னும் சற்றே காயாத தலை முடியுடன் இலகுவாக ஒரு டிராக் டீஷர்ட் அணிந்து வந்தவனை இவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

இயல்பாக வந்து அவள் அருகே அமர்ந்தவன் தனக்கும் எடுத்து வைத்து கொண்டு உண்ண துவங்கினான்.

ஒரே ஒரு சப்பாத்தியுடன் இவள் எழுந்து கொள்ள போக, “என்னம்மா ருசி பிடிக்கலையா” என்று கேட்டார் பெரியவர்.

“ருசிச்சு சாப்பிட இங்கே என்ன இருக்கு. எங்க வீட்டுல குறைஞ்சது மூணு வகை சாப்பாடாவது இருக்கும். இதுல ஒண்ணுமே இல்லை” என்றாள் சலிப்பாக.

“இங்கே வேலைக்கு ஆள் இருக்கு ஆனா சமையல் வேலை எல்லாம் அம்மா மட்டும் தான் பார்ப்பாங்க. அதனால ஒரு நேரத்துக்கு ஒரு சமையல் தான் செய்ய முடியும்.
வகை வகையா செய்ய அவங்க ஒண்ணும் ஓட்டல்ல வேலை செய்யற சமையல் காரங்க இல்லை” என்றான் வீரா.

அதில் அவள் திகைத்து போய் நிற்க, “வீரா, பேராண்டி” என்று ஆண்கள் இருவருமே அழைத்தனர்.

“தாத்தா, இவங்க வீட்டுலே ஒரு வேலைக்கு அத்தை எத்தனை விதமா சமைக்கிறாங்க தெரியுமா. ஏதோ ஓட்டல்ல வேலை செய்யுற செப் மாதிரி அவங்க அத்தனை செய்யுறாங்க ஆனா அவங்க சாப்பிட்டாங்களான்னு கேட்க கூட அங்கே ஆள்” என்றான் ஆதங்கமாக.

“தம்பி விடுப்பா, அது சின்ன புள்ளை அதுக்கு என்ன தெரியும்” என்றார் விசு.

“சின்ன பிள்ளையா”, என்று அவன் ஏதோ கூற வர அவளை நிற்க வைத்து சுற்றி அனைவரும் பேசியதில் கண்ணை கரித்து கொண்டு வர வேகமாக அங்கிருந்து மாடிக்கு விரைந்து இருந்தாள் மேகவி.

“என்ன பேரா இது வீட்டுக்கு வந்த பொண்ணை முதல் நாளே இப்படி பேசினா மனசு வருத்தப்படும்ல” என்றார் தாத்தா.

அவன் அமைதியாகவே இருந்தான், அவனுக்கும் எல்லார் மத்தியிலும் வைத்து இப்படி பேச விருப்பமில்லை தான் ஆனால் ஏற்கனவே ஒரு பெண் அங்கே அடிமைபட்டு கிடக்கும்போது எப்படி இவளால் அதை கொஞ்சம் கூட உணராமல் பேச முடிகிறது என்று தோன்றியதில் வந்த கோபம் தான் அது.

அவன் உணவருந்தி விட்டு மேலே செல்ல, பேரா என்று அழைத்து நிறுத்தினார் வேதாசலம். நின்று அவன் திரும்பிட, “அய்யா உனக்கு பிடிக்காம இந்த கல்யாணத்தை நீ செஞ்சிருக்க மாட்ட அது எனக்கும் தெரியும். நீ எல்லாம் தெரிஞ்ச பிள்ளை நீ தான் கொஞ்சம் பொறுத்து போகணும்” என்றார்.
ஒரு நெடுமூச்சுடன் சரி என்று தலையாட்டினான் அவன்.

இன்று முழுக்க அவள் சரியாக உண்ணவே இல்லை, பிளாஸ்க்கில் பாலுடன் அறைக்கு செல்ல அங்கே அவள் இல்லை. ஒரு நிமிடம் நின்று பிறகு திரும்பி பார்க்க வராண்டா முடியும் இடத்தில் நின்று இருந்தாள் மேகவி.

அறைக்குள் பாலை வைத்து விட்டு அவள் அருகே சென்றவன் “மேகவி” என்று அழைத்தான்.
அவனை திரும்பி பாராமல் கைகளை மார்பின் குறுக்கே கட்டிகொண்டு அழுத்தமாக நின்று இருந்தாள் அவள்.

பொறுத்து பார்த்தவன், மேகவி என்று அவள் தோள் தொட்டு திருப்ப, சடாரென திரும்பியவள், “டோன்ட் டச் மீ” என்றாள் சீறலாக.

“ஓகே டச் பண்ணலை வா வந்து படு” என்றான் கைகளை மேலே தூக்கியபடி சாதாரணமாக.

“என்ன” அவள் கண்கள் சுருக்கி அவனை முறைத்து பார்க்க,

“என்னம்மா நீ எது சொன்னாலும் கோவிச்சுக்கிற, வந்து தூங்குன்னு தான் சொன்னேன்”

“நான் வரலை”

“ஏன்”

“எனக்கு வேற ரூம் வேணும்”

“ஏன்”

“உங்க கூட எல்லாம் என்னால படுக்க முடியாது” என்றவள் அவன் தலை சாய்த்து குறும்பாக பார்த்த விதத்தில், பல்லை கடித்தவள்

“உங்க ரூம்ல தூங்க முடியாது” என்றாள் தெளிவாக.

“வேற எங்கே தூங்க போற”

“இந்த வீட்டுல சாப்பாடு தான் குறைன்னு பார்த்தா வேற ரூம் கூடவா இல்லை” என்றாள் சலிப்பாக.

“அதெல்லாம் நம்ம தாத்தா நிறைய கட்டி தான் வச்சிருக்காரு. ஆனா என்ன பண்றது புருஷன் பொண்டாட்டிக்கு ஒரே ஒரு ரூம் தான்னு கண்டிஷன் போட்டிருக்காரு” என்றான் மீண்டும் குறும்பாக.

“யார் புருஷன் பொண்டாட்டி நம்மளா” என்றாள் நக்கலாக.

“சந்தேகமா கண்மணி” என்றான் அவன் அவளை விட நக்கலாக.

“இங்கே பாருங்க எங்கப்பாவுக்காகத்தான் இங்கே வந்தேன், உங்களை பிடிச்சி எல்லாம் இல்லை. அதனால அட்வாண்டேஜ் எடுத்துக்காதீங்க” என்றாள் விரலை உயர்த்தி.

சட்டென அவள் முதுகில் கை வைத்து தன்னை நோக்கி தள்ளியவன், அவள் தன்னில் மோதி நின்றதும், குனிந்து அவள் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தான்.

அவள் கண்கள் அணலாய் தகிக்க “நீ மட்டும் இல்லை நானும் ஒரு காரணத்துக்காகத்தான் இந்த கல்யாணத்தை பண்ணிக்கிட்டேன். அதுக்காக தள்ளி நிக்க வேண்டிய அவசியம் எல்லாம் எனக்கு இல்லை. ஆனா.. இப்போதைக்கு தூங்குறதை தவிர வேற எந்த ஐடியாவும் எனக்கு இல்லை. அதனால தைரியமா வந்து படுத்து தூங்கு” என்றவன் பட்டென அவளை விட்டிருந்தான்.

அவனிடம் இருந்து பிரிந்து விட முயன்று கொண்டிருந்தவள் அவன் பட்டென விட்டு விடவும் தன்னிலை தடுமாறி பிறகு நிலைத்து நின்று கொண்டு அவனை முறைத்தாள்.

இன்னும் என்ன என்பதாக அவன் பார்த்து நிற்க, அப்போதும் முறைப்பு குறையாமல் அறைக்கு நடந்து சென்றவளை பார்த்தபடியே தானும் பின் தொடர்ந்தான்.

அறைக்குள் சென்றதும், அவள் கட்டில் மேல் ஏறி ஒரு ஓரமாக படுத்து விட, இவனும் விளக்கை அணைத்து விட்டு சென்று படுத்து விட்டான்.

பக்கவாட்டில் திரும்பி பார்த்தான், உடலை குறுக்கி படுத்திருந்தாள். “அங்கே பிளாஸ்க்குல பால் இருக்கு வேணும்ணா எடுத்து குடி” என்றான். அவளிடம் பதில் இல்லை.

காலையில் சேலையில் பார்த்த தோற்றம் மாறி இப்போது சுடிதார் அணிந்திருந்தாள். அளவான உடல் தான் ஏற்புடைய உயரம் தான். அவன் வளர்த்தியான தோற்றத்திற்கு அவள் சரியாக இருந்தாள்.

அவளுக்கும் அவனுக்கும் சரியான உடல் பொருத்தம் இருந்தது.
இதுவே சாதாரண திருமணமாக இருந்திருந்தால் இந்நேரம் இப்படியா தனித்து படுத்திருப்பார்கள்.

அவன் ஒன்றும் எடுத்ததும் அவள் மீது பாய்ந்திட போவது இல்லை. ஆனாலும் அவள் உடல் குறுக்கி படுத்திருந்ததை பார்த்தால் சிரிப்பு வந்தது அவனுக்கு.

என்னவோ சர்வ ஜாக்கிரதையாக அவனிடம் இருந்து தன்னை காத்து கொள்பவள் போல படுத்திருந்தவளை பார்த்து உதட்டை மடக்கி சிரித்தபடியே அவனும் உறங்க துவங்கினான்.

இருவருக்கும் இடையில் இருந்த மெத்தையின் இடைவெளியில் எத்தனை தூரம் இருந்ததோ, ஆனால் இருவரின் மனங்களுக்கு இடையில் அதிகமான அளவு தூரம் இருந்தது.
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top