Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அணலில் துளிர்த்த பூந்தளிரே 5

Advertisement

ரமா

Member
Member
அணலில் துளிர்த்த பூந்தளிரே 5

அன்று அவளை விட்டு சென்றவன் அதற்கு பின்பு அவளை தேடி வரவில்லை.. ஆனால் அவளின் நினைவு மட்டும் ஆடவனை கொல்லாமல் கொன்று குவித்தது.

அவன் வாழ்வில் எத்தனையோ பெண்களை கடந்து வந்திருக்கிறான்.. ஆனால் அவர்களை ஆடவன் திரும்பியும் பார்த்ததில்லை.. அவன் மனதில் அவனறியாமல் சிம்மாசனம் இட்டு அமர்ந்தது அவள் தான்.

தன் மனதின் நிலையை எண்ணி அவனே பலமுறை வியந்து போயிருக்கிறான்.. வெறுப்பு உள்ளவளின் மேல் விருப்பம் வருமா என்ன.. ஆனால் அவனுக்கு வந்ததே.

அன்றும் தன் அலுவலகத்தில் வேலையாய் அமர்ந்திருந்தவனின் முன்பு மூச்சு வாங்க அரவிந்தன் வந்து நின்றான்.

" என்னாச்சி அரவிந்த்.. எதுக்கு இப்படி ஒடியாறா.." என்றான் கணினியை பார்த்தபடியே.

"பாஸ் தாத்தா வராங்க.." என்றான் மூச்சுவாங்கியபடி.

"வாட் தாத்தா வராங்களா.. போய் கூட்டிட்டு வா இடியட்.." என்று அவனை கத்தி அனுப்பியபடி இவன் தன் கணினியை அணைத்தவன் தன் தாத்தாவை எதிர்பார்த்தபடி அமர்ந்தான்.

உடல்நிலை சரியானதில் இருந்து இப்பொழுது அதிகம் அவரை மாது எங்கேயும் அனுப்புவதில்லை.. அவளின் சொல்படி தான் அவரும் இருக்கிறார்.

"தாத்தா வாங்க.. உட்காருங்க.. காபி டீ சொல்லவா தாத்தா.." என்றான் கம்பீரமாய்.

தன் பேரனின் கம்பீரத்தை மனதில் ரசித்தவர் அவனின் கண்களில் இருந்த தேடல் ஏக்கம் அவரை அசைத்து பார்த்தது.

"சிபி நான் உன்கிட்ட பேச வந்துருக்கேன்.. மாதுவை பத்தி பேசலாமா.." என்றார் அவனின் வதனத்தை அளந்தபடி.

மாது என்ற பெயரை கேட்டதும் அவனின் முகத்தில் வந்து போன மின்னலை கண்டவருக்கு சற்று நெருடலாகத் தான் இருந்தது.

"சொல்லுங்க தாத்தா.." என்றான் பரவசமாய்.

"நம்ப மாதுக்கு கல்யாணம் செய்து வைக்கலாம்னு இருக்கேன் பா.. உனக்கு அவளை பிடிக்காது தான்.. ஆனா அவளுக்கு ஒரு வாழ்க்கையை கொடுத்துட்டா நாம கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம் இல்லை.. அது தான் பா.. மாப்பிள்ளையும் பாத்துட்டேன்.. நம்ப சங்கரன் மில்ஸ் ஓனர் பையன் தான் மாப்பிள்ளை.. நல்லா படிச்ச பையன்.. பையன் அவ்ளோ சைலண்ட்.. ரொம்ப மென்மையான பையன்.. நம்ம மாதுக்கும் கண்டிப்பா பிடிக்கும்.. அவங்களுக்கும் மாதுவை பிடிச்சி போச்சி.. அது தான் வர்ற இருபதாம் தேதி நிச்சயமும் அடுத்த மாசம் ஒன்பதாம் தேதி கல்யாணமும் வச்சிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன் பா.." என்றவர் பேசிக்கொண்டே சென்றவர் அறியவில்லை தன் பேரனின் தலையில் இறக்கிய அதிர்ச்சியை.

கண்கள் இரண்டும் கரித்து கொண்டு வர தன் உணர்வை முகத்தில் காட்ட முடியாமல் டேபிளின் முன் தன் முகத்தை திருப்பிக் கொண்டவன் கண்கள் இரண்டும் கலங்கி சிவந்திருந்தது.

கலங்கிய கண்களை துடைத்து கொண்டு தன் உணர்வை கொன்று குவித்தவன் தன் முகத்தை மாற்றி கொண்டு அவரின் புறம் திரும்பி,

"அதுக்கு நான் என்ன தாத்தா செய்யனும்.. அது தான் முடிவு பண்ணிட்டீங்களே பாருங்க தாத்தா.." என்றான் விரக்தியான குரலில்.

"அது தான் பா நீயும் நிச்சயத்துக்கு வரனும் இல்லை.. நான் வீட்ல போய் பாட்டிகிட்ட பேசிட்டு மாதுகிட்டேயும் பேசிட்டு சொல்றேன்.. இந்த கல்யாணம் எடுத்து செய்வாங்களே அந்த ஆட்களை அனுப்பி விடுப்பா.. சரிப்பா நான் வர்றேன்.. அப்புறம் நீயும் இனிமே அங்கேயே தங்கலாம்.. அது தான் அந்த பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு அனுப்பி வைக்க போறேமே.. நீயும் இனி அவளை பாத்து கோபப்பட வேண்டாம்.." என்றார்.

அவரின் சொல்லுக்கு சரியென்று தலையாட்டியவனின் விரக்தியான புன்னகை சொல்லியது அவனின் உள்ளுணர்வை.

அவர் வந்த வேலை முடிந்ததென்று அவர் சென்று விட இங்கே ஒருவனோ வலிகளின் வேள்வியாய் நின்றான்.

இத்தனை நாளாய் என்னவென்று அறியாத உணர்வுக்கு இன்று உயிர் கொடுத்து விட்டு சென்று விட்டார் வர்த்தன்.

"தளிர் மா இது தான் காதலா டி.. இத்தனை நாளா கொஞ்சமே தெரிஞ்ச உணர்வு இப்போ உன்னை விட்டு கொடுக்க முடியாம தவிக்குதே.. வேணாம் என்னை போல ஒருத்தன் உனக்கு வேணாம்.. நான் ஆத்திரக்காரன்.. கோபத்துல அறிவை இழந்து வார்த்தையை விடுவேன்.. என்னோட கோபத்தை தாங்குற சக்தி உனக்கு இல்லை ல.. வேண்டாம் டி நான் உனக்கு வேண்டாம்.. " என்று வாய்விட்டு சொல்லிவிட்டான் தான்.. ஆனால் அவளை மறந்து அவனால் வாழ முடியுமா என்றால் கேள்விக்குறி தான்.

இந்த காதலை உணர்ந்திருக்க கூடாதோ.. உயிர் வலிக்க செய்கிறதே..

ஆஆ என்று அலறியவன் தன் டேபிளில் இருந்த அனைத்தையும் தூக்கி போட்டு உடைத்தான்.. அறையில் இருந்த அனைத்து பொருட்களையும் தூக்கி போட்டு உடைக்கும் சத்தம் கேட்டு வேகமாய் அங்கே வந்த அரவிந்தனுக்கு சிபியின் கோபமும் ஆதங்கமும் புதிதாய் தெரிந்தது.

வேகமாய் சிபியின் அருகே வந்து அவனின் தோளை தொட்டவன்,

"பாஸ் என்னாச்சி உங்களுக்கு.. எதுக்காக இப்படி எல்லாம் உடைச்சிட்டு இருக்கீங்க.. பாஸ் சொல்றதை கேளுங்க.. " என்றான் அவனை தடுத்தபடி.. ஆனால் ஆடவனின் உடலில் இருந்த அந்த நடுக்கம் உண்மையான விசுவாசி உணராமல் இல்லை.

" பாஸ் கொஞ்சமே ரிலாக்ஸ் ஆகுங்க.. ஒன்னுமில்லை பாஸ்.." என்று மெதுவாய் அவனின் முதுகை தடவி கொடுத்தான்.

அதுவரை இருந்த ஆக்ரோஷம் சற்று குறைந்தது போல் உணர்ந்தான்.

ஒரு கட்டத்தில் தன்னை தேற்றிக் கொண்டவன் அரவிந்திடம் இருந்து விலகி,

"நான் கொஞ்சம் தனியா இருக்கனும் அரவிந்த்.." என்றவனின் குரலில் இருந்த தழுதழுப்பு அவனுக்கு எதையோ உணர்த்தியது.. ஆனால் எதுவும் கேட்காமல் அங்கிருந்து சென்றான்.

தனிமையில் அமர்ந்தவனின் நினைவெங்கும் வஞ்சியவளின் வதனமே தோன்றியது.

என்னவென்று சரியாக புரியாத போதே அவளை பிரிவது நரக வேதனையை தந்தது.. ஆனால் இன்று ஒரு வார்த்தையில் தன் காதலை உணர்ந்து அதற்கு கல்லறையும் கட்டியாகிவிட்டது.

இனி என்ன தான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் நடப்பதை தடுக்க முடியாது என்று புரியத்தான் செய்தது.. ஆனாலும் ஏற்றுக் கொள்ளத்தான் முடியவில்லை.

இத்தனை நாளாக கம்பீரமாக வளைய வந்தது போல் இப்போது இருக்க முடியவில்லை.

அவளின் மேல் எத்தனை கோபம் வந்தது.. அத்தனையும் சூரியனை கண்ட பனித்துளியை போன்றது தானோ.. அந்த கோபத்தின் பின்னால் அவளின் மேல் இருந்த காதல் தான் இப்படி செய்ததா..? ஒன்றும் புரியவில்லை ஆடவனுக்கு.

அவனின் வாழ்நாளில் ஒரு நாளும் இதுபோல் இருந்ததில்லை.. ஆனால் இன்று இப்படி பைத்தியக்காரனாய் தன்னை மாற்றியவளின் மேல் ஆத்திரம் தான் வந்தது.

இரண்டு கைகளிலும் உதிரம் வழிய சிலையாய் அமர்ந்திருந்தான் ஆடவன்.. அவனை ஆற்றுவாரும் தேற்றுவாரும் இல்லை.. எந்த உறவும் தன் அருகில் இல்லாமல் தன் அருகில் நெருங்க விடாமல் இருந்தவனுக்கு இன்று தனிமை பரிசாய் கிடைத்தது.

ஒரு மணிநேரம் கழித்து உள்ளே வந்து பார்த்த அரவிந்தனுக்கு தன்னுடைய முதலாளியின் இந்த தோற்றம் மனதை வலிக்க செய்தது.

கைகளில் செங்குறுதி காய்ந்து இருக்க ஆடவனின் பார்வையோ எங்கோ சுவற்றில் நிலைத்து நின்றது.

" பாஸ்.." என்றபடி அவனருகில் சென்றான் ஆரவிந்தன்.

அவனின் வருகையோ குரலோ என எதுவும் அறியாதவன் அமைதியாய் அப்படியே அமர்ந்திருந்தான்.

"பாஸ் வாங்க ஹாஸ்பிட்டல் போகலாம்.." என்றபடி அவனை அழைத்துக் கொண்டு சென்றான்.

அவனோடு பொம்மையாய் அவனின் இழுவைக்கு சென்றான்.

யாரையும் திமிருடன் பார்க்கும் பார்வை இன்று உணர்வின்றி இருந்தது.

காதல் ஒரு மனிதனை இந்தளவிற்கு பலவீனமாக்குமா என்ன..?

இதோ எதற்கும் யாருக்கும் கவலைப்படாத வாழ்க்கையை தன் போக்கில் இயந்திர கதியில் சென்று கொண்டிருந்தவனை இன்று உயிரிருந்தும் வெற்று கூடாக்கியது இயற்கையின் நியதியோ..? இல்லை காதல் தோல்வியின் பரிதாபநிலையோ..?

காரை ஓட்டிக் கொண்டு தன் அருகில் உயிரில்லாத கூடாய் தன் அருகில் அமர்ந்திருந்தவனை அவ்வப்பொழுது கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டான்.

பார்வையில் உயிர்ப்பில்லாமல் யாரையும் திரும்பி பாராமல் நடக்கும் எதையும் உணராமல் உயிர் வெறுத்து அமர்ந்திருந்தான் ஆடவன்.

"பாஸ்.." என்றான் மெதுவாய்.

"அரவிந்த் எதாவது பார்க்கு காரை விடு.." என்றவனின் குரலில் இருந்த வித்தியாசம் அரவிந்தனுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

சிபிக்கு சுத்தமாய் குடி பழக்கம் இருந்ததில்லை இதுவரை.. ஆனால் இன்று அவனின் குரலில் இருந்த வந்த வார்த்தை சிபியா இது என்றிருந்தது.

" பாஸ் வேணாம் எதனாலும் பேசலாம் பாஸ்.. தயவு செஞ்சி நீங்க இப்படி இருக்காதீங்க பாஸ்.." என்றான் படபடப்பாய்.

"எதைடா பேச சொல்ற.. சொல்லு பாக்கலாம்.. பேச எதுவும் இல்லை அரவிந்த்.. எல்லாமே முடிஞ்சிருச்சி.. என் வாழ்க்கையில இதுவரைக்கும் நான் எதையும் ஆசைப்பட்டதில்லை.. ஆனா இன்னைக்கு நான் நேசிச்ச ஒரு விஷயம் என்னை விட்டு போயிடுச்சி.. வேணாம் அரவிந்த் இந்த தனிமை மட்டும் தான் எனக்கு நிரந்தரம்..

ஒரு வேளை எங்க அம்மா இருந்திருந்தா என்னை புரிஞ்சிருப்பாங்களா டா.. அவளுக்கு என்னை பிடிக்காது இல்லை.. அதுக்கு அவங்க என்ன செய்வாங்க.. அவளோட விருப்பத்தை தானே பார்ப்பாங்க.. போதும் அரவிந்த்.. நான் இங்கேயிருந்து போறேன் நீ பாத்துக்கோ.. நான் லண்டன் கிளம்புறேன்.. அங்கேயிருக்க பிஸ்னஸ் பாத்துட்டு மன்த்லி ஒன்ஸ் வரேன்.. இப்போ பாருக்கு விடு.." என்றபடி கண்களை மூடி சீட்டில் சாய்ந்து கொண்டான்.

ஆனால் அவன் கூறிய வார்த்தையிலிருந்து புரிந்து கொண்ட விஷயம் தான் அரவிந்தனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

எது பாஸ் லவ் பன்றாரா யாரை என்று நினைத்தவனுக்கு எதுவும் புரியத்தான் இல்லை.

தன்னால் ஒருவன் உயிர் வெறுத்து உடல் கூடாக இருக்கிறான் என்பதை அறியாமல் இங்கே சிட்டுக்குருவியாய் பறந்தவளிடம் ஒரு புகைப்படத்தை காட்டி திருமணம் பேசிக் கொண்டிருந்தார்கள் வர்த்தான் தம்பதியர்கள்.

" அம்மாடி மாது இந்த பையனை உனக்கு பிடிச்சிருக்கா டா.. நாங்க உனக்காக பாத்துருக்குற மாப்பிள்ளை.. உனக்கு ஓகே வா மா.. இந்த தாத்தா மேல நம்பிக்கை இருக்கு இல்லை.. தாத்தா உனக்கு எல்லாமே பெஸ்டா தான்டா குடுப்பேன்.. நல்ல பையன் நல்ல குடும்பம்.. உனக்கு ஓகே வா மா.." என்றார் அவளின் முகத்தை ஆர்வமாய் பார்த்தபடி வர்த்தன்.

தன் கையில் இருந்த புகைப்படத்தை வாங்கி பார்த்தவளுக்கு ஏனென்று தெரியாமல் சிபியின் முகம் வந்து போக ஒரு நொடி அதிர்ந்தவள் சட்டென தெளிந்து அந்த புகைப்படத்தை பார்க்காமலே,

"எனக்கு சம்மதம் தாத்தா.. ஆனா உங்களை விட்டு பிரிஞ்சி போக மாட்டேன் நான்.. அதை மட்டும் பார்த்துக்கோங்க.." என்றாள் புன்னகை முகமாய்.

அதைக் கேட்ட தாட்சாயினி சிரிப்புடன்,

"அடியே ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகிட்டா அவ புகுந்த வீட்டுக்கு தாண்டி போகனும்.. நீ என்ன புது ரூல்ஸ் சொல்றே.. லூசு பொண்ணே யாருடி இந்த காலத்துல அப்படி பையன் இருக்காங்க.." என்றார் அவளின் தலையை கலைத்தபடி.

"அதெல்லாம் எனக்கு தெரியாது.. என்னால உங்களை பிரிஞ்சி இருக்க முடியாது பாட்டி.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க.." என்றாள் சினுங்கியபடி.

காதல் ஒரு மனிதனின் நாடித்துடிப்பு..
காதல் இரு மனதின் சங்கமம்..
காதல் மென்மையின் பரிபூரணம்..

இதனை இந்த பெண்மை உணர்ந்து கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை.. சற்று பொறுப்பேமே..
 
Top