அத்தியாயம் 17: நிழல்களில் ஒரு சந்திப்பு

Advertisement

Christus

Member
Member
சிவராமனின் மாளிகைக்கு வெளியே இசை முழங்கிக் கொண்டிருந்தது. பளபளக்கும் விளக்குகளின் வெளிச்சம் ஆகாயத்தைத் தொட்டது. ஆனால், தோட்டத்தின் அந்த அடர்ந்த மாமரங்களுக்கு அடியில் இருள் கனத்துக் கிடந்தது. அங்கிருந்த ஒரு பழைய கற்சுவரின் மறைவில் இளமாறன் நின்றிருந்தான். அவனது கண்கள் அந்த மாளிகையின் ஜன்னல்களை வேவு பார்த்துக் கொண்டிருந்தன.
“மாறா!” – ஒரு மெல்லிய விம்மலுடன் கூடிய குரல் அவனை அழைத்தது.
இளமாறன் திரும்பினான். நிலா ஓடி வந்தாள். அவளது பட்டுப் புடவையின் சரிகை அங்கிருந்த முட்செடிகளில் மாட்டி இழுத்தது, ஆனால் அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. அவளது முகம் வியர்வையாலும் கண்ணீராலும் நனைந்திருந்தது.
“மாறா!” – ஒரு மெல்லிய விம்மலுடன் கூடிய குரல் அவனை அழைத்தது.
இளமாறன் திரும்பினான். நிலா ஓடி வந்தாள். அவளது பட்டுப் புடவையின் சரிகை அங்கிருந்த முட்செடிகளில் மாட்டி இழுத்தது, ஆனால் அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. அவளது முகம் வியர்வையாலும் கண்ணீராலும் நனைந்திருந்தது.
“மாறா! இங்க ஏன் வந்த? உனக்கு அறிவு இருக்கா இல்லையா?” என்று அவனை நெருங்கியதும் அவனது சட்டையைப் பிடித்து உலுக்கினாள். “நேத்துதான் உன்னை அடிச்சுப் போட்டுட்டுப் போனாங்க. இன்னும் அந்த காயம் கூட ஆறலை. விக்ரம் இப்போ உன்னை இங்க பார்த்தான்னா, நிஜமாவே உன்னைக் கொன்னுடுவான். தயவுசெஞ்சு இப்போவே இங்கிருந்து கிளம்பு மாறா!”
இளமாறன் நிலாவின் நடுங்கும் கைகளை மெல்லப் பற்றினான். அவளது கரங்களின் குளிர்ச்சி அவனது ரத்தத்தின் சூட்டைத் தணிப்பது போல இருந்தது. “நிலா... நிதானமா இரு. நான் இங்க வந்தது உன்னைப் பார்க்க மட்டும் இல்ல. ஒரு வேலையா வந்திருக்கேன்,” என்றான் அமைதியான ஆனால் உறுதியான குரலில்.
“என்ன வேலை? இந்த ஆபத்தான நேரத்துல அப்படி என்ன வேலை வேண்டிக் கிடக்கு?” என்று நிலா வினவினாள்.
இளமாறன் அவளை இன்னும் நெருங்கி, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுத் தாழ்ந்த குரலில் பேசினான். “நிலா, உன் அப்பா சிவராமனோட ரகசிய லாக்கர்ல ஒரு நீல நிற ஃபைல் இருக்கு. அதுலதான் ‘மருதூர்’ நிலங்கள் எப்படி முறைகேடா வாங்கப்பட்டது, அரசாங்க அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சம் போயிருக்கு, எந்தெந்த போலி நிறுவனங்கள் வழியா பணம் கைமாறி இருக்குங்கிற எல்லா விவரமும் இருக்கு. அந்த ஒரு ஃபைல் மட்டும் கிடைச்சா, இந்த மொத்த ‘கிரீன் சிட்டி’ திட்டத்தையே தடுத்துடலாம். அந்தப் பாவப்பட்ட மக்களோட நிலத்தை அவங்களுக்கே திருப்பிக் கொடுத்துடலாம்.”
நிலா அதிர்ச்சியில் உறைந்து போனாள். அவளது கைகள் இளமாறனின் பிடியிலிருந்து நழுவின. “அப்பா... அப்பாவோட லாக்கரா? அங்க நான் எப்படி...?”
“உன்னால மட்டும்தான் முடியும் நிலா. விக்ரமும் உன் அப்பாவும் இப்போ விருந்துல பிஸியா இருக்காங்க. இதுதான் சரியான நேரம். அந்த ஃபைல் வெளிய வந்தா, தர்மலிங்கம் ஆடுற இந்த ஆட்டம் முடிவுக்கு வரும்,” என்றான் இளமாறன்.
நிலாவின் கண்கள் நிலைகுத்தின. அவளது மனதில் ஆயிரம் மின்னல்கள் ஒரே நேரத்தில் வெட்டியது போல இருந்தது. “மாறா...” நிலாவின் குரல் உடைந்தது. “நீ என்ன கேக்குறன்னு உனக்குத் தெரியுதா? என் அப்பா சிவராமன்... அவர் எப்போதும் வறுமையில இருந்தவர் இல்லை. ஒரு சின்ன லெதர் ஃபேக்டரியை வச்சு ராப்பகலா கஷ்டப்பட்டு என்னை வளர்த்தவர். அந்தத் தோல் பதனிடுற வாசம் அவரோட உடம்புல ஒட்டியிருக்கு மாறா. அவர் செஞ்சது தப்பா இருக்கலாம், ஆனா அந்த ஃபைல் வெளிய வந்தா... அவர் சிறைக்குப் போவார். அவர் இத்தனை காலம் கௌரவமா வாழ்ந்த இந்த ஊர்ல, தலைகுனிஞ்சு நிக்கிறதைப் பார்க்குற சக்தி எனக்கு இல்லை மாறா. ஒரு மகளா நான் எப்படி அவரோட அழிவுக்குக் காரணமா இருப்பேன்?”
இளமாறன் அவளது தோள்களைப் பற்றினான். அவனது குரலில் இப்போது ஒரு தீர்க்கமான சோகம் கலந்திருந்தது. “நிலா, உன் அப்பா மேல உனக்கு இருக்குற பாசம் எனக்குப் புரியுது. ஆனா, அந்த லெதர் ஃபேக்டரியில கறை படிஞ்ச தோல்களைப் பதனிட்ட உன் அப்பா, இன்னைக்கு மருதூர் விவசாயிகளோட வாழ்க்கையையே பதனிட்டுச் சிதைக்கத் துணிஞ்சுட்டாரு. நீ அந்த ஃபைலை எடுக்குறது உன் அப்பாவைச் சிறைக்கு அனுப்புறதுக்காக இல்ல, அவர் இன்னும் ஒரு பெரிய கொலையாளி ஆகுறதுக்கு முன்னாடி அவரைத் தடுக்குறதுக்காகத்தான். ஒரு மகளா நீ செய்யுறது துரோகம் இல்லை நிலா, இது ஒரு மாபெரும் தர்மம். அவர் செஞ்ச பாவம் அவரோடயே போகட்டும், ஆனா அந்த மக்களோட நிலம் அவங்களுக்கு வேணும்.”
நிலா அந்த இருட்டில் அப்படியே திகைத்து நின்றாள். தூரத்தில் விக்ரம் தன்னைத் தேடும் குரல் மங்கலாகக் கேட்டது. “நிலா... நிலா எங்கே?”
“நிலா, முடிவெடுக்க வேண்டிய நேரம் இது,” இளமாறன் அவளது முகத்தை நிமிர்த்தினான். “விக்ரம் கிட்ட அந்த வைர மோதிரத்தை வாங்கிட்டு உன் அப்பாவோட அதிகார நிழல்ல வாழுறதா? இல்ல, உன் அப்பாவே தப்பு செஞ்சாலும் அதைச் சுட்டிக்காட்டுற அறத்தோட வாழுறதா? நீ எடுக்கப்போற அந்த ஒரு முடிவுதான் நம்ம ரெண்டு பேரோட காதலையும், அந்த மருதூர் மக்களோட வாழ்க்கையையும் தீர்மானிக்கப் போகுது. உன் அப்பாவை ஒரு குற்றவாளியா சாக விடுறதா, இல்ல அவரை ஒரு நேர்மையான மனுஷனா மாத்துறதாங்கிறது உன் கையிலதான் இருக்கு.”
நிலா இளமாறனின் கண்களில் தெரிந்த அந்தத் தார்மீகத் தீப்பொறியைப் பார்த்தாள். பின்னர் மாளிகையின் மேல்தளத்தில் உள்ள தனது தந்தையின் அறையைப் பார்த்தாள். அங்கே அந்த லாக்கரில் அந்தப் பயங்கரமான உண்மைகள் உறங்கிக் கொண்டிருந்தன.
“சரி மாறா...” நிலா தனது கண்ணீரைத் துடைத்துக்கொண்டு உறுதியுடன் சொன்னாள். “நான் அந்த ஃபைலை எடுக்குறேன். ஆனா, அதுக்குப் பிறகு நடக்கப்போற விளைவுகளைத் தாங்குற சக்தி எனக்கு இருக்கான்னு தெரியல. ஆனா நீ கேட்ட அந்த நியாயத்துக்காக, நான் என் தந்தையையே எதிர்க்கத் துணிஞ்சுட்டேன். என் அப்பா சிறைக்குப் போனாலும் பரவாயில்லை, அவர் செஞ்ச அநீதிக்கு அவர் பரிகாரம் தேடிக்கிட்டார்னு நான் நினைச்சுப்பேன்.”
இளமாறன் அவளது கரங்களை முத்தமிட்டான். “நீ செய்யுறது ஒரு வரலாற்றுத் துணிச்சல் நிலா. சீக்கிரம் போ... நான் இங்கேயே காத்திருப்பேன்.”
நிலா பின்னோடு திரும்பிப் பாராமல் மாளிகையை நோக்கி ஓடினாள். அவளது இதயம் கனமாக இருந்தது, ஆனால் அவளது இலக்கு தெளிவாக இருந்தது.
நிலா இருளுக்குள் மறைந்தாள். இளமாறன் அந்த நிழல்களில் நின்றுகொண்டு, அந்த மாளிகையின் பிரம்மாண்டமான விளக்குகளைப் பார்த்தான். அந்த விளக்குகளின் பிரகாசம் இன்னும் சில மணி நேரங்களில் அணையப்போகிறது என்பதை அவன் அறிந்திருந்தான்.
விருந்து முடிந்து மாளிகை மெல்ல நிசப்தத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தது. மதுவின் மயக்கத்திலும், அதிகாரப் போதையிலும் விருந்தினர்கள் கலைந்து சென்றனர். சிவராமன் கீழ் தளத்தில் தர்மலிங்கத்தை வழியனுப்பிக் கொண்டிருந்தார். இதுதான் தனக்குக் கிடைத்த ஒரே வாய்ப்பு என்பதை நிலா உணர்ந்தாள்.
அவளது கால்கள் நடுங்கின. பட்டுப் புடவையின் சரிகை எழுப்பிய மெல்லிய ஓசை கூட அவளுக்கு ஒரு பெரும் இரைச்சலாகக் கேட்டது. மெல்லப் பூனை நடை போட்டுத் தனது தந்தையின் தனிப்பட்ட அறைக்குள் நுழைந்தாள். அந்த அறையில் விலையுயர்ந்த வாசனைத் திரவியத்தின் மணமும், பழைய காகிதங்களின் மணமும் கலந்து வீசியது.
சுவரில் இருந்த ஒரு பெரிய ஓவியத்திற்குப் பின்னால் அந்த நவீன டிஜிட்டல் லாக்கர் இருப்பதை நிலா அறிவாள். ஒருமுறை தந்தை போனில் பேசிக்கொண்டே அதைத் திறந்தபோது, நிலா தற்செயலாகப் பார்த்த அந்த ஆறு இலக்க ரகசியக் குறியீடு (Password) இப்போதும் அவளது நினைவில் நிழலாடியது.
நிலா அந்த ஓவியத்தை மெல்ல நகர்த்தினாள். லாக்கரின் சிறிய விசைப்பலகை மங்கலான ஒளியில் மின்னியது. அவளது விரல்கள் வியர்த்திருந்தன. 9… 4… 1… 6… 2… 8…
‘டிக்’ என்ற மெல்லிய சத்தத்துடன் லாக்கர் திறந்தது. நிலாவின் இதயம் அப்போது தொண்டைக் குழிக்குள் வந்து துடிப்பது போல இருந்தது. உள்ளே பல ஆவணங்கள் இருந்தன. இளமாறன் சொன்ன அந்த நீல நிறக் கோப்பு (Blue File) அங்கே இருந்தது. அதை எடுத்தபோது, அதிலிருந்து சில புகைப்படங்கள் கீழே விழுந்தன. அவை மருதூர் விவசாயிகளின் நிலப் பத்திரங்கள் மற்றும் அவர்களுக்குத் தெரியாமலேயே போடப்பட்ட போலி ஒப்பந்தங்கள்.
நிலா அந்த ஆவணங்களை அவசரமாகத் தனது புடவைக்குள்ளே மறைத்துக் கொண்டாள். லாக்கரை மூடிவிட்டு, ஓவியத்தைச் சரிசெய்தாள்.
அறையிலிருந்து வெளியேறத் திரும்பியபோது, கதவோரம் ஒரு நிழல் அசைவதைக் கண்டு அவள் உறைந்து போனாள். கதவைத் திறந்து கொண்டு விக்ரம் உள்ளே வந்தான். அவனது கையில் ஒரு பாதி குடித்த மதுக் கோப்பை இருந்தது. கண்கள் சிவந்து, ஒரு வஞ்சகப் புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.
“நிலா! இந்த நள்ளிரவு நேரத்துல அங்கிள் ரூம்ல நீ என்ன செய்ற?” என்று கேட்டுக்கொண்டே அவளை நோக்கி முன்னேறினான்.
நிலா தனது கைகளை மார்போடு அணைத்தபடி, புடவைக்குள் இருக்கும் கோப்பு(file) தெரியாமல் மறைக்க முயன்றாள். “அது... அப்பாவுக்குத் தலைவலி மாத்திரை கொடுக்க வந்தேன் விக்ரம். அவர் ரூம்ல இல்லையான்னு பார்க்க வந்தேன்,” என்றாள் குரலில் நடுக்கம் தெரியாமல் இருக்கப் போராடியபடி.
விக்ரம் அவளை நெருங்கி நின்றான். அவனது மூச்சுக்காற்றில் இருந்த மதுவின் மணம் நிலாவிற்கு அருவருப்பைத் தந்தது. “மாத்திரை கொடுக்க வந்தவ ஏன் இவ்வளவு பதற்றமா இருக்க? உன் முகம் ஏன் இவ்வளவு வேர்க்குது?” என்று சொல்லிவிட்டு, அவளது கையைப் பிடிக்க முயன்றான்.
“விக்ரம், நான் தூங்கப் போறேன். வழி விடு,” என்று நிலா கடுமையாகச் சொன்னாள்.
“இரு நிலா... நீ எதையோ மறைக்கிறேன்னு எனக்குத் தோணுது,” என்ற விக்ரம், நிலாவின் பின்னால் இருந்த அந்த ஓவியத்தைச் சற்று உற்றுப் பார்த்தான். அது வழக்கமாக இருக்கும் நிலையிலிருந்து ஒரு நூலிழை சாய்ந்திருந்தது. விக்ரமின் கண்கள் சுருங்கின.
அவன் நிலாவைத் தள்ளிவிட்டு ஓவியத்தின் பக்கம் செல்ல முயன்றபோது, கீழே இருந்து அவன் தந்தை தர்மலிங்கத்தின் குரல் கேட்டது. “விக்ரம்! நீ இன்னும் கிளம்பலையா? உனக்காகத்தான் காத்துட்டு இருக்கேன்.”
விக்ரம் நின்றான். நிலாவைப் ஒரு தீர்க்கமான பார்வை பார்த்தான். “தப்பிச்சுட்ட நிலா... ஆனா உன்னோட இந்த ‘அப்பா மேல இருக்குற பாசம்’ நிஜமானதுதானான்னு எனக்குச் சந்தேகம் வருது. பார்க்கலாம்,” என்று கூறிவிட்டுத் திரும்பினான்.
விக்ரம் சென்றதும் நிலா அப்படியே சுவரில் சாய்ந்து மூச்சு வாங்கினாள். மயிரிழையில் உயிர் தப்பியது போல உணர்ந்தாள். அவள் ஜன்னல் வழியாகக் கீழே பார்த்தாள். இருட்டில் இளமாறன் அவளுக்காகக் காத்திருந்தான். நிலா ஒரு சிறு சிக்னல் கொடுத்தாள்.
அந்த நீல நிறக் கோப்பு இப்போது நிலாவின் கைகளில் இருந்தது. அது வெறும் காகிதங்கள் அல்ல; சிவராமனின் கௌரவத்தையும், விக்ரமின் சாம்ராஜ்யத்தையும் சுட்டெரிக்கப் போகும் நெருப்பு என்பதை அவள் அறிந்திருந்தாள்.
மாளிகையின் ஒளிவெள்ளம் - நிலா
மனதிற்குள் இருள்வெள்ளம்!
முட்செடி கிழித்த பட்டுச் சேலை - அவள்
முன்னே நின்றான் மாறன் வேளையில்லை!
"தந்தை செய்த பாவக் கறை - இந்த
நீல நிறக் கோப்பில் உண்டு!
விவசாயியின் கண்ணீர் துடைக்க - அந்த
விலைமதிப்பற்ற ஆதாரம் கொண்டு!"
பெற்றவர் கௌரவம் ஒருபுறம் - மக்கள்
அற்றவர் வாழ்வு மறுபுறம்!
ஊசலாடிய இதயம் உறதி கொண்டது - அறம்
பாசத்தின் விலங்கை இன்று உடைத்தது!
ரகசிய லாக்கர் திறந்தது - அங்கே
அநீதியின் சாட்சியம் தெரிந்தது!
மறைத்து வைத்தாள் மார்போடு - ஒரு
மலைப்பாவைக் கொண்ட சீற்றத்தோடு!
மரணத் தூதனாய் வந்தான் விக்ரம் - அவள்
மயிரிழையில் தப்பினாள் அச்சம்!
தந்தையை வீழ்த்தும் ஆயுதம் - இன்று
தனயனின் கையில் காவியம்!
இருளில் மறைந்தாள் நிலாவெனும் கோதை
- இனி
எரியப்போகுது அநீதியின் கோட்டை!
காதல் கொடுத்த துணிச்சலில் - ஒரு
காவியம் பிறக்குது மருதூர் மண்ணில்!
 

Advertisement

Advertisement

Back
Top