Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 10

Advertisement

பகுதி - 10

மறுநாள் காலையே தேவ் அவன் மனைவி தீப்தியுடன் வந்துவிட்டான். திருமணத்தை எந்தக் கோவிலில் நடத்துவது என்று முடிவு செய்தவர்கள், அதற்கான ஏற்பாட்டைப் பார்க்க சென்றனர்.



தீப்தி மீனாவை பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்ததால்... விக்ரமும் ஹரிணியும் அவளை அழைத்துக்கொண்டு மீனாவை பார்க்க சென்றனர்.

இவர்கள் சென்ற போது மீனா வீட்டில் இல்லை.... அலுவலகத்தில் கணக்கை முடிக்கச் சென்று இருந்தாள். ஆனால் சிறிது நேரத்திலேயே வந்துவிட்டாள்.

ஜீன்ஸும் நீள டாப்பும் அணிந்து மேலே ஒரு கோட்டும் அணிந்திருந்தாள். சுடிதார் என்றால் சீக்கிரம் பழசாகி விடும் என்பதால்... இது போல் தான் அலுவலகத்திற்கு அணிந்து செல்வது. அதோடு இது தான் வசதியாகவும் இருக்கும்.

இவள் அனிதாவின் அம்மாவென்றால் தீப்தியால் நம்பவே முடியவில்லை... பார்க்க அவ்வளவு சின்னப் பெண்ணாக இருந்தாள். வைஷ்ணவி வரும் போதே அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி இருந்ததால்... அவர்கள் கேலியை கைவிட்டு பேச வேண்டியதை மட்டும் பேசினர்.

அவர்கள் மீனாவையும் கடைக்கு அழைக்க அவள் வரவில்லை என்று விட்டாள். ரதி மீனாவின் அளவு ரவிக்கையை எடுத்துக்கொண்டு சென்றாள்.

அவர்கள் சென்றதும் வைஷ்ணவியை அழைத்த மீனா “ஆன்டி அவங்ககிட்ட எனக்குச் சிம்பிளா எடுக்கச் சொல்லுங்க. நான் ரொம்பக் கிராண்டா எல்லாம் கட்ட மாட்டேன்.” என்றாள்.

“சரி சொல்லிடுறேன். ஆனா நீ என்னை அத்தைன்னு கூப்பிடு.” என்றதும், சரி என்று வைத்து விட்டாள்.

வைஷ்ணவியின் அருகில் இருந்த வெங்கட் என்னவென்று கேட்க, மீனா சொன்னதை அவர் சொல்ல... அவர் மெளனமாகத் தலையை மட்டும் அசைத்துக்கொண்டார்.

தேவ் திருமண வேலையாகச் சென்றிருக்க... காலியான அவர்கள் வீட்டை ஆட்கள் வைத்துப் பெயிண்ட் அடிக்கும் வேலையைப் பார்க்க ஹரி சென்றிருந்தான். அவனுக்கு வேறு எதையும் நினைக்க முடியாத அளவு வேலை இருந்தது.


அனிக்கென்று ஒரு அறையைத் தயார் செய்து கொண்டிருந்தான். பிங்க நிற வண்ணத்தில் சுவரில் வண்ண வண்ண சித்திரங்களோடு... அழகாக அறை தயாராகியது. அதைப் பார்க்கும் போது அவளுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தான்.

இரண்டு நாட்களும் வேகமாகச் சென்று விட... திருமண நாளும் அழகாக விடிந்தது. காலையில் பிரம்ம முஹுர்த்தத்தில் வீட்டில் கணபதி ஓமம் செய்து... பால் காய்ச்சி விட்டு, ஐந்தரை மணிக்கெல்லாம் ஷண்முகநாத சுவாமி கோவிலுக்குச் செல்ல கிளம்பினர்.

மீனா அவள் வீட்டினரோடு நேராகக் கோவிலுக்கு வருவதாக இருந்தது. இவர்கள் சென்ற போது.... மீனா வீட்டினர் ஏற்கனவே வந்து கீழே இருந்து விநாயகர் கோவிலில் அமர்ந்து இருந்தனர்.


பட்டு வேஷ்ட்டி சட்டையில் வந்த ஹரியை பார்த்ததும் “அப்பா...” என அனி துள்ளிக்கொண்டு செல்ல.... பட்டுப் பாவாடை சட்டையில் தேவதையாக வந்தவளை, ஹரியும் அள்ளி அனைத்துக் கொஞ்சினான்.

அதைப் பார்த்த மீனாவின் இறுக்கம் கூடச் சற்றுத் தளர்ந்தது. வெங்கட் அப்போது தான் முதல் முறை மீனாவை பார்க்கிறார். எளிமையான பட்டு புடவையில் ஒன்றிரண்டு நகைகள் மட்டுமே அணிந்திருக்க அதிலேயே அழகாக இருந்தாள்.

வைஷ்ணவி அவளைத் தன் கணவருக்கு அறிமுகம் செய்ய.. அவரைப் பார்த்து வணக்கம் செய்தவள், அமைதியாகச் சென்று ரதியோடு நின்று கொண்டாள். அவள் யார் கவனத்தையும் கவர முற்படவே இல்லை.... வேறு யாருக்கோ திருமணம் என்பது போல் இருந்தாள்.

ஷண்முகநாத ஸ்வாமி கோவில் ஒரு சிறு குன்றில் இருக்கும் முருகன் கோவிலாகும். கீழே விநாயகரும், சற்று மேலே ஏறினால் சிவபெருமானும், மலையின் மீது முருகன் வள்ளி தேவானையுடன் அருள் தரும் கோவில் ஆகும்.

விநாயகர் கோவிலில் அர்ச்சனை முடித்து விட்டு, அடுத்து இருந்த சிவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு... மீதி இருந்த மலையை ஏறினர்.

ஹரிணி மெதுவாக ஏற... வைஷ்ணவி வேகமாக ஏறினார். அதைப் பார்த்த விக்ரம் “பாரு உங்க அம்மா இந்த வயசுலையும் எப்படிச் சுறுசுறுப்பா இருக்காங்க.” என்றதும், ஹரிணி வேகமாகத் தன் தாயோடு போட்டிப் போட்டுக் கொண்டு நடக்க...


மாப்பிள்ளை தன்னைப் புகழ்ந்த உற்சாகத்தில் வைஷ்ணவி இன்னும் வேகமாக நடந்தார். அதைப் பார்த்த மற்றவர்கள் சிரித்தனர். ஹரியும் மீனாவும் கூடத் தங்களை மறந்து சிரித்தனர்.

மேலே ஏறிய வைஷ்ணவிக்கு மூச்சு அதிகமாக வாங்க.... “வயசானா ஒத்துக்கணும் மா....” தேவ் அவரை வார.... “உங்களுக்கு இது தேவையா மா....” என்று ஹரி அவரைக் கேலி செய்தான்.

மேலே சென்று முருகனை வழிபட்டவர்கள், இன்னும் நல்ல நேரம் வரவில்லை என்பதால்.... நல்ல நேரம் வருவதற்காகக் காத்திருந்தனர். ஹரியை வேறு எதுவும் யோசிக்கவிடாமல்... அவனுடன் இருந்த அனி அவனைக் கேள்வி கேட்டுத் துளைத்துக்கொண்டு இருந்தாள்.

“இங்க எதுக்குப்பா வந்திருக்கோம்.?”

“சாமி கும்பிட டா....”

“ஏன் இவ்வளவு மேல இருக்கு கோவில்?”

“முருகருக்கு மலை மேல இருக்கத் தான் பிடிக்கும்.”

ஹரியும் அணியும் பேசிக்கொள்வதைப் பார்த்து வெங்கட்டுவுக்கே ஆச்சர்யமாக இருந்தது. அவர்கள் இருவரையும் பார்ப்பவர்கள் அப்பா மகள் என்றே சொல்வார்கள், மீனா தான் யாரோ போலத் தள்ளி நின்றிருந்தாள்.

முஹுர்த்த நேரம் வந்ததும், வைஷ்ணவி தங்க தாலி சரடை எடுத்துக் குருக்களிடம் கொடுக்க... அவர் அதை அட்சதையோடு இருந்த தேங்காய் மீது வைத்தவர், சாமி பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்ய.... ஹரியும் மீனாவும் அருகருகே நிற்க வைக்கப் பட்டனர்.

ஹரியிடம் இருந்து அனியை வாங்கிய வைஷ்ணவி அவர்களின் எதிரே சென்று நின்று கொண்டார். இதுவரை அமைதியாகக் காட்டிக்கொண்ட மீனாவுக்கு அதற்கு மேல் முடியவில்லை.... அவளின் முகம் ரத்த பசை இல்லாமல் சுண்ணாம்பாக வெளுத்து போய் இருந்தது. ஹரி இறுகி போய் நின்றிருந்தான்.

அர்ச்சனை செய்த தாலியை ஆசீர்வாதம் செய்ய அங்கிருந்த அனைவரிடமும் குருக்கள் கொடுக்க... எல்லோரும் தட்டில் இருந்த தாலியை தொட்டு கும்பிட்டு விட்டுக் கையில் அட்சதையை எடுத்துக்கொண்டனர்.

“இது என்ன? எதுக்கு?” அனி வைஷ்ணவியிடம் கேட்க....


“உங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கல்யாணம் நடக்கப் போகுது. இந்தத் தாலி செயின் உங்க அம்மா கழுத்தில போட்டா தான். நீ ஹரியை அப்பான்னு கூப்பிடலாம்.” என்றதும், அனி புரிந்தும் புரியாமலும் தலையாட்டி வைத்தாள்.

அனிக்கு இதெல்லாம் பிற்காலத்தில் நியாபகம் இருக்குமா என்று வைஷ்ணவிக்குத் தெரியாது. ஆனால் அவள் மனதில் தவறான எதுவும் பதிந்து விடக் கூடாது என்றே உண்மையைச் சொன்னார்.
தாலியை எடுத்த ஹரியின் கைகள் நடுங்கியது. “நல்லவேளை தங்க சரடு இல்லைன்னா.... உங்க அண்ணன் பதட்டத்தில தாலியை அய்யர் கழுத்தில தான் கட்டுவான்.” என விக்ரம் கேலி செய்ய.... ஹரிணி அவனை முறைத்தாள்.

கெட்டிமேளம் ஒலிக்க ஆரம்பித்ததும், ஹரியை பார்த்து அய்யர் “மாங்கல்ய தானம் செய்யுங்கோ....” என்றதும், எப்படா முடியும் என்பது போல் நின்றிருந்த ஹரி, சட்டென்று தாலியை மீனாவின் கழுத்தில் போட்டு விட... எல்லோரும் அட்சதையைத் தூவ... அனி சந்தோஷமாக அவர்கள் இருவரின் மீதும் அட்சதையைத் தூவினாள்.

ஹப்பாடா.... கல்யாணம் முடிஞ்சது. இப்படித்தான் எல்லோரின் மன நிலையம் இருந்தது. விஷ்வமும், வைஷ்ணவியும் அழுதே விட்டனர். “அவங்களுக்குக் குங்குமம் வச்சு விடுங்கோ...” அய்யர் சொல்ல... சிறிது குங்குமத்தை எடுத்து மீனாவின் நெற்றில் வைக்கச் சென்ற ஹரியின் கை இன்னும் நடுங்கி கொண்டு தான் இருந்தது.

“உங்க அண்ணன் குங்குமத்தை மீனா மூக்கு மேல தான் வைப்பான்.” விக்ரம் சொல்ல....

“இல்லை புருவத்தில வைப்பான்.” என்றான் தேவ்.

அவர்கள் இருவரையும் முறைத்த ஹரிணி “நீங்க ரெண்டு பேரும் அடங்குங்க.” என்றதும்,

“ஆமாம் எதாவது கிண்டல் பண்றேன்னு....ஆரம்பிக்காதீங்க. ஹரி அப்புறம் முறுக்கிப்பான்.” தீப்தியும் சொல்ல....

“போதும் ரெண்டு பேரும் நிறுத்துங்க. புதுசா கல்யாணம் ஆணவங்களை நாங்க கிண்டல் பண்ணத் தான் செய்வோம். அது எங்க உரிமை...இல்ல தேவ்.” விக்ரம் சொல்ல...


“ஆமாம். அது தான் கல்யாணம் ஆகிடுச்சு இல்ல... இனி மேல என்ன?” தேவ்வும் அவனோடு சேர்ந்து கொண்டு பேச....

“என்னவோ பண்ணுங்க... சொன்னா கேட்கவா போறீங்க.” என்றாள் தீப்தி. அதற்குள் குருக்களை மனதிற்குள் திட்டியபடி மீனாவின் நெற்றி, வகுடு, தாலி என்று அவர் சொன்ன இடத்தில் எல்லாம் ஹரி குங்குமம் வைத்திருந்தான்.

“ரெண்டு பேரும் போய்க் கோவில் சுத்திட்டு வாங்கோ....” என்றதும், அவர்களோடு மற்றவர்களும் சேர்ந்து கொள்ள.... தன்னிடம் வந்த அனியை ஹரி தூக்கிக்கொண்டான்.
மீனாவுக்கு இருந்த பதட்டமெல்லாம் வடிந்து.... இனி இது தான் தன் வாழ்க்கை என்ற எண்ணம் வந்திருந்தது. அதனால் அவள் அமைதியாகக் கோவில் பிரகாரத்தில் இருந்த முருகனின் பல்வேறு அவதாரங்களைப் பார்த்தபடி மெதுவாக நடக்க.... ஹரி அதற்குள் சுற்றி முடித்துச் சன்னதியில் சென்று நிற்க.... குருக்கள் அவனை ஒருமாதிரி பார்த்தார்.

மீனா வந்ததும் அவர்கள் இருவரையும் பார்த்த குருக்கள் “நான் என்ன சொன்னேன்? நீங்க என்ன செய்றீங்க? தம்பதியா சேர்ந்து சுத்தணும். இப்படித் தனித்தனியா இல்லை....”

“போங்க ரெண்டு பேரும் சேர்ந்து போய் இன்னொரு முறை சுத்திட்டு வாங்க.” என்றவர், மற்றவர்களைப் பார்த்து “அவங்க மட்டும் போகட்டும் போதும்.” என்றார்.

ஹரி நகராமல் அப்படியே நிற்க... அவனைப் பார்த்தவர் “அவங்க கை பிடிச்சு அழைச்சிட்டு போங்கோ...” என்றதும்,

“டேய் அவர் இன்னும் வேற எதுவும் சொல்லறதுக்குள்ள சீக்கிரம் போடா...” தேவ் அவன் காதில் கடிக்க.... ஹரி மீனாவின் கையை வெடுக்கென்று பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான்.

அவர்கள் சென்றதும் அருகே இருந்த ரதியிடம் “அவர் குழந்தையா அது.... குழந்தைக்காக இன்னொரு கல்யாணம் பண்ண சம்மதிச்சாரா.... பாவம் இந்தப் பொண்ணு...” என்றதும்,

“இல்லை குழந்தை அவளோடது....” என்று ரதி சொன்னதும், குருக்களுக்கு ஹரி மீது நல்ல எண்ணம் தோன்ற....



“ரெண்டு பேரும் அமோகமா இருப்பாங்க.” என்று அவர் வாயில் இருந்தே வந்தது.

மற்றவர்களின் கண் பார்வையில் இருந்து மறைந்ததும், மீனா அவளின் கையை அவன் பிடியில் இருந்து இழுக்க.... ஹரி அவளை இப்ப என்ன என்பது போல் பார்க்க.... அவன் அழுத்தி பிடித்திருந்ததால்... அவளுக்கு வலித்தது.

“வலிக்குது.....” அவள் சொன்னதும், பட்டென்று அவள் கையை விட்டுவிட்டான்.

“சாரி....” அவன் சொல்ல... மீனா அவள் கையைத் தடவிக்கொண்டே அமைதியாக நடந்து வந்தாள்.

மீண்டும் மற்றவர்களின் பார்வைக்கு வரும் முன் ஹரி அவளின் கையைப் பிடித்துக்கொள்ள.... இதை அவர்களின் பின்னே சற்று தள்ளி வந்த விக்ரமும், தேவ்வும் பார்த்து சிரித்துக்கொண்டவர்கள்,



“இந்த அய்யருக்கு தான் ஹரி பயப்படுறான்.”


“பேசாம போகும் போது இவரையும் கடத்திட்டு போய்டுவோமா....” எனப் பேசி சிரித்தபடி வந்தனர்.

அவர்கள் சுற்றி முடித்து வந்ததும், இருவரையும் சாமியின் முன்பு விழுந்து கும்பிட சொன்னவர், இருவருக்கும் பிரசாதம் கொடுத்தார். சிறிது நேரம் சந்நிதியிலேயே அமர்ந்து இருந்தனர்.

பிறகு எழுந்து வெளியே வந்தனர். அங்கே சூடான சக்கரை பொங்கல் அனைவருக்கும் வழங்கப்பட.... வெளி பிரகாரத்தில் அமர்ந்து சாப்பிட்டனர்.

ஹரி இனிப்பு சாப்பிட மாட்டான் என்பதால் அவனுடையதையும் சேர்த்து அனிக்கு ஊட்டி விட.... “இன்னைக்கும் என்னடா... சாப்பிடேன்.” வைஷ்ணவி சொல்ல.... ஹரி அமைதியாக இருந்தான்.

வைஷ்ணவி சொன்னதை மீனாவும் பார்த்துக்கொண்டு தான் இருந்தாள். பிறந்தநாள் அன்று கூட அவன் அனி கொடுத்த சாக்லேட்டை சாப்பிடவில்லை என்பது நினைவுக்கு வந்தது. என்ன காரணமா இருக்கும், அவள் யோசித்துக் கொண்டிருந்த போதே.... அனி எடுத்து ஊட்டி விட... ஹரி வாங்கிக் கொண்டான்.

மகன் சாப்பிடாத இனிப்பு அவர் தொண்டையில் மட்டும் இறங்குமா என்ன? அவன் சாப்பிடாத வருத்தத்தில் இருந்தவர், அனி கொடுத்ததும், அவன் இனிப்பு சாப்பிடுவதை வைஷ்ணவி ஆசையாகப் பார்க்க....

அதைக் கவனித்த மீனா தன்னைப் பார்த்த அனியிடம் இன்னும் கொடு என்பது போல்... கண் ஜாடையில் சொல்ல... அதைப் புரிந்து கொண்ட அனியும் அவனுக்கு மேலும் ஊட்டி விட்டாள்.

ஹரியும் எதையும் கவனிக்காமல் அனிக்கு ஊட்டிவிட்டவன், அவள் கொடுத்ததையும் வாங்கிக் கொண்டான். நாலைந்து வாய் கொடுத்து விட்டு போதுமா... என்பது போல் அனி மீனாவை பார்க்க.... அதைக் கவனித்த ஹரியும் சட்டேன்று திரும்பி அவளைப் பார்த்தான்.

மீனாவுக்குச் சர்வமும் நடுங்கி விட்டது. அவள் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொள்ள.... அந்நேரம் அவள் பக்கத்தில் இருந்த வைஷ்ணவி அனியை பார்த்து “சமத்து...” என்றதும், ஹரி அவர் தான் அனியிடம் எதோ சொல்லி இருக்கிறார் என நினைத்துக் கொண்டான்.

உனக்கு என்ன வந்தது? அவன் சாப்பிட்டா என்ன? சாப்பிடலைன்னா என்ன? எனத் தன்னையே மீனா திட்டிக்கொண்டாள்.

இனி தனக்கு என்னவென்று எல்லாம் அவளால் இருக்க முடியாது என்று அவளுக்கு அப்போது தெரியவில்லை.... யாருக்காகச் செய்த போதிலும் திருமணம் திருமணம் தான்.

நம் நாட்டில் நடக்கும் திருமணத்தின் மகிமையே அது தான். யாரென்று தெரியாதவரை திருமணம் செய்துகொண்டாலும். திருமணம் முடிந்த நொடி... ஒருவருக்கு ஒருவர் எல்லாமுமாக மாறி இருப்பர்.

திரும்பி மலையில் இருந்து இறங்கும் போது... வெய்யில் வந்துவிட்டதால்.... எல்லோரும் அவரவர் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு குடும்பச் சகிதமாகச் செல்ல.... ஹரி வேகமாக நடந்ததால்... மீனா மட்டும் மெதுவாகப் பின்னால் வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்து வந்தாள்.

மற்றவர்களைக் கவனித்த அனி திரும்பி தன் தாயை தேடியவள் “அப்பா, அம்மா வரட்டும் பா....பாருங்க எல்லோரும் சேர்ந்து சேர்ந்து போறாங்க. நாம மட்டும் தான் தனித்தனியா போறோம்.” என்றதும், ஹரி நின்று மீனா வந்ததும் நடக்க ஆரம்பித்தான்.

ஹரி மீனாவோடு ஒட்டாமல் இருந்து விடுவானோ என்ற கவலை வைஷ்ணவிக்கு இருந்து கொண்டே இருந்தது. அவன் எப்படி இருந்தாலும் அனியும் மீனாவும் அவனை மாற்றி விடுவார்கள் என்று இப்போது நம்பிக்கை வந்தது. அவர் நம்பிக்கை ஜெயிக்குமா....
Nice epi
 
Top