Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 16 2

Advertisement

இவங்களை சேர்த்து வைக்க திரும்ப அனிதா தான் step எடுக்கனும்..
 
மீனா சென்று மகள் என்ன செய்கிறாள் எனப் பார்க்க... அவள் ஹாலில் குப்புற படுத்துக்கொண்டு படத்திற்கு வர்ணம் அடித்துக்கொண்டு இருந்தாள்.

“அம்மா வரேன்னு சொல்லி இருந்தாங்க. நீ ஏன் அவங்களை வர வேண்டாம்னு சொல்லிட்ட....” மீனா வைத்த தோசையைச் சாப்பிட்டுக் கொண்டே ஹரி கேட்க.....

“அவங்க வந்திட்டு உடனே கிளம்பனும்னு சொல்றாங்க. பாவம் அவங்களுக்கு வீணா எதுக்கு அலைச்சல்னு நினைச்சேன்.”

“நான் உன்னைச் சாக்கா வச்சு அம்மாவை பார்க்கலாம்னு நினைச்சேன்.”

“ஓ... அம்மா மேல ரொம்பப் பாசமா.... அப்புறம் ஏன் தனிக்குடித்தனம் போனீங்க.” மீனா அப்படிக் கேட்க வேண்டும் என்று நினைத்து கேட்கவில்லை... சட்டென்று அவள் வாயில் வந்துவிட்டது.

தன் தவறை உணர்ந்து அவள் நாக்கை கடிக்க.... “தனிக்குடித்தனம் போனா அம்மா மேல பாசம் இல்லைன்னு அர்த்தமா...” என்றான் ஹரி பதிலுக்கு....

ஒருவேளை பிருந்தா தனிக்குடித்தனம் போக வேண்டும் எனச் சொல்லி இருப்பாளோ.... என மீனா நினைக்க....

“நானோ பிருந்தவோ தனிக்குடித்தனம் போகணும்ன்னு சொல்லலை.... அவங்க தான் போகச் சொன்னாங்க.” என்றவன், கை கழுவ... அதைப் பார்த்து மீனா திடுகிட்டாள். அவன் இரண்டு தோசைகள் மட்டும் தான் சாப்பிட்டு இருந்தான். தான் பேசியதால் தான் பாதி உணவிலேயே எழுந்து கொண்டானோ என மீனாவுக்கு வருத்தமாகப் போய்விட்டது.

“சாரி... சாரி.... நான் அப்படிப் பேசி இருக்கக் கூடாது.” அவள் பதற்றத்துடன் சொல்ல....

“உன் மேல தப்பு இல்லை.... நீ என்னையும், பிருந்தாவைம் பத்தி மத்தவங்க சொல்றதை வச்சு அப்படிக் கேட்டிருப்ப.... ஆனா நாம பார்க்கிறது கேட்கிறது எல்லாம் எப்பவும் உண்மையா இருக்கிறது இல்லை மீனா...”

ஹரி சொல்வது ஒன்றும் மீனாவுக்குப் புரியவில்லை... ஆனால் மேலே எதுவும் கேட்க தயக்காமாக இருந்ததால் அமைதியாக இருந்தாள். ஆனால் ஒன்றும் மட்டும் புரிந்தது. அவனுக்குத் தான் பிருந்தாவை பற்றித் தவறாக நினைப்பது பிடிக்கவில்லை.

மீனா அடுப்பை அனைத்து விட்டு ஹாலில் வந்து உடகார்ந்து கொண்டாள். ஏன் இப்படி அவனிடம் பேசினோம் என அவளுக்கே புரியவில்லை....

அவனிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என நினைத்து விட்டு.... இப்போது தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என யோசித்தவளுக்கு, போன காய்ச்சல் திரும்பி வந்து விடும் போல் இருந்தது.

அவளையே கவனித்துக் கொண்டிருந்த ஹரி அவளின் அருகில் வந்து நெற்றியில் கை வைத்து பார்க்க சுடுவது போல் இருந்ததும்,

“சொன்னா கேட்டியா.... இப்ப திரும்ப ஜுரம் வர்ற மாதிரி இருக்கு. நீ இன்னும் மாத்திரை போடலை இல்லை...” என்றவன், மாத்திரை கொண்டு வந்து கொடுக்க... மீனா அதை விழுங்கி விட்டு ஹரியை பார்த்தவள் “சாரி...” என்றாள்.



ஒற்றை விரலை அவளின் உதட்டின் மேல் வைத்து பேசாதே என்ற ஹரி அனியை காண்பிக்க... மீனா அமைதியாக இருந்தாள்.

“அனி மேடம் ஜெஸ் விளையாடுவோமா....” ஹரி அழைக்க.... “சரிப்பா...” என்றபடி அனி உடனே எழுந்து வந்தாள்.

அவர்கள் இருவரும் விளையாடுவதை மீனா பார்த்துக் கொண்டிருந்தாள்.

அனிக்குத் தூக்கம் வந்ததும் மூவரும் படுக்கச் சென்றனர். “மீனா கட்டில்ல படுத்துக்கோ....” ஹரி சொன்னதும் மீனா சரி என்று கட்டிலில் படுத்துக்கொண்டாள்.

அவன் கீழே படுத்துக்கொள்வான் என நினைத்துக்கொண்டாள். ஆனால் ஹரி அனியை நடுவில் விட்டு அவனும் கட்டிலில் தான் படுத்தான்.

மீனா எழுந்து கொள்வோமா என யோசிக்கும் போதே.... நடுவில் படுத்திருந்த அனி அவளின் இரு கரங்களால் பெற்றோரை ஆளுக்கு ஒரு பக்கம் அனைத்து “நாம ஹாப்பி ஹாப்பி ஃபாமிலி...” எனச் சந்தோஷமாகக் கொண்டாட... மகளின் சந்தோசம் மீனாவையும் கட்டி போட்டது. அவள் அமைதியாகப் படுத்திருந்தாள்.

அனி உறங்கியதும் ஹரியிடமும் அசைவு இல்லை.... மீனா அவனும் உறங்கி விட்டான் என நினைத்துக்கொண்டாள். மதியம் அதிக நேரம் உறங்கி எழுந்ததால் அவளுக்கு உறக்கமே வரவில்லை.... கொட்ட கொட்ட விழித்துக்கொண்டு இருந்தாள்.

அப்போது திடிரென்று ஒரு கை அவளது நெற்றியை தொட்டு பார்க்க.... முதலில் திடுகிட்டாலும், அது ஹரியை தவிர யாராக இருக்க முடியும்? அவன் தான்.

“இன்னும் தூங்கலையா மீனா...”

“இல்ல தூக்கம் வரலை....” மீனா சொன்னதும் எழுந்து கொண்ட ஹரி “வா வெளியே உட்கார்ந்து பேசிட்டு இருப்போம்.” என அழைத்தான்.

வெளியே வந்ததும் இருவரும் சோபாவில் எதிர் எதிரே அமர்ந்தனர். மீனாவுக்கு நன்றாகத் தெரியும் அவன் பிருந்தாவை பற்றி எதோ பேசப்போகிறான் என்று....

“இதை உனக்குக் கேட்க கஷ்ட்டமா இருக்கும். ஆனா எனக்குச் சொல்லணும் மீனா.... இந்த ஒரு தடவை கேட்டுக்கோ வேற வழி இல்லை ப்ளீஸ்....” என்ற போது... மீனா சம்மதமாகத் தலை அசைத்தாள்.



ஹரிணி M.sc., முடிச்சு அவளுக்கு வரன் அமையவே கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. அதனால அவளுக்குக் கல்யாணம் ஆன ஆறாவது மாசமே அம்மா எனக்குப் பொண்ணு பார்த்தாங்க.

நான் அப்ப நிறையக் கண்டிஷன் போட்டேன். எனக்கு ஏத்த மாதிரி பொண்ணு நல்ல கலரா இருக்கணும், உயரமா இருக்கணும், முடி நீளமா இருக்கணும் இப்படி நிறையச் சொன்னேன். அப்ப தான் பிருந்தாவோட ஜாதகம் வந்தது. ஜாதகம் பொருந்தி இருந்தது. ஆனா நான் கேட்ட மாதிரி பொண்ணு இல்லை அவ.....

கொஞ்சம் உயரம் கம்மி, நிறமும் கம்மி ஆனா ரொம்பக் கலையான முகம், நல்ல அழகு. அவங்க குடுத்திருந்த போட்டோ பார்த்திட்டு மனசுக்கு அவ்வளவா இஷ்ட்டம் இல்லாம தான் பொண்ணு பார்க்க போனேன்.

ஏற்கனவே என்னோட சொந்தகாரங்க மூலமா என்னோட விருப்பத்தைத் தெரிஞ்சிருந்த பிருந்தா.... ரொம்பப் பதட்டமா இருந்தா.... அவளுக்கு என்னைப் போட்டோவுல பார்த்தே பிடிச்சிடுச்சு.

நான் பிடிக்கலைன்னு சொல்லிட போறேன்னு அவகிட்ட அப்படி ஒரு தவிப்பு. எனக்குப் பிருந்தாவை நேர்ல பார்த்ததும் நான் போட்ட கண்டிஷன் எல்லாம் மறந்து போச்சு.... நான் அவளைப் பிடிச்சிருக்குன்னு சொன்னதும், அவ முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.

எங்க கல்யாணத்தை அன்னைக்கே நிச்சயம் பண்ணாங்க. அதோட அடுத்த நாலு மாசத்திலேயே எங்களுக்குக் கல்யாணமும் ஆச்சு. நான் அவளுக்குக் கிடைக்க மாட்டேனோ அப்படின்னு பயத்துல இருந்த பிருந்தா... கல்யாணம் ஆனதும் என்னை அவளோட பொக்கிஷம் மாதிரி பார்த்துகிட்டா....”

“நான் ரொம்பச் சந்தோஷமா இருந்தேன். பிருந்தாவும் சந்தோஷமா இருந்தா... ஆனா நான் அவளை அவ்வளவா பிடிக்காம கல்யாணம் பண்ணிகிட்டேன்னு அவளுக்கு ஒரு நினைப்பு, அது அவ மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு... அதனால அடிக்கடி என்னை உங்களுக்குப் பிடிக்கும் தானேன்னு கேட்டுப்பா....”

“உனக்கு என்ன டா குறை.... அழகா லட்சணமா இருக்க....” இப்படியெல்லாம் நான் சொன்னாலும்.... முழுசா சமாதானம் ஆக மாட்டா....

“என்கிட்டே ரொம்ப அன்பா இருந்தா... அதே சமயம் வேற யாரும் என்கிட்டே ரொம்ப அன்பா இருந்தா அவளுக்குப் பிடிக்காது.

மத்தபடி அவகிட்ட எந்தக் குறையும் இல்லை... அம்மா அப்பாவே தான் தனிக்குடித்தனம் போகச் சொன்னாங்க. நானும் பிருந்தாவும் வேண்டாம்னு தான் சொன்னோம். அப்புறம் அவங்க ரொம்ப வற்புறுத்தி சொன்னதுனால தனியா போனோம்.”

“முதல் ரெண்டு வருஷம் நாங்களே குழந்தை இப்ப வேண்டாம்ன்னு இருந்தோம். பிறகு நாங்க விருப்பட்ட போது குழந்தை உண்டாகலை...”

“சொந்தகாரங்க எல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. என்ன இன்னும் குழந்தை இல்லைன்னு?”

“என்கிட்டே வந்து கேட்கிறவங்க ரொம்பக் கம்மி. அவ பக்க சொந்தகரங்களும் சரி, எங்க பக்க சொந்தகாரங்களும் சரி பிருந்தாகிட்ட தான் எப்ப குழந்தை பெத்துக்கப் போறேன்னு கேட்பாங்க.”

“பாவம் பிருந்தா.... மேல ஒருவருஷம் ஆனதும் குழந்தை உண்டாகலைன்னு ரொம்ப டென்ஷன் ஆகிட்டா... அவளைச் சமாளிக்கவே ரொம்பக் கஷ்ட்டமா இருந்தது.”

“அம்மாவும் அப்பாவும் அப்ப தான் ஊட்டி போய் இருந்த சமயம். ரெண்டு வீட்லயும் எங்க ரெண்டு போரையும் டாக்டர் கிட்ட போயிட்டு வர சொன்னாங்க. நாங்க ரெண்டு பேரும் போய் எல்லா டெஸ்டும் எடுத்தோம்.”

“எங்க ரெண்டு பேர் கிட்டயும் எந்தக் குறையும் இல்லை.... ஆனா சில நேரம் இப்படி உண்டாகத் தாமதம் ஆகும். அதுனால கவலைப்பட வேண்டாம், தொடர்ந்து முயற்சி பண்ணிட்டே இருங்க.... எதாவது ஒரு தடவை உண்டாகிடும் அப்படின்னு சொல்லி டாக்டர் அனுப்பி வச்சாங்க.”

“ஒவ்வொரு மாசமும் பிருந்தா பிரியட்ஸ் வந்ததும் குழந்தை உண்டாகலைன்னு உட்கார்ந்து அழுவா....எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும்.”

“நீ இவ்வளவு டென்ஷன் ஆகாத... இதனாலையே நமக்கு லேட் ஆகும். மனச ரிலாக்ஸ்டாக வச்சுக்கோ... அப்படின்னா கேட்கவே மாட்டா....”

“கணவன் மனைவிக்குள்ள ஆசையால் ஏற்படுற உறவுப்போய்... குழந்தை வேணுமேன்னு கட்டாயத்துக்காகச் சேர்றது..... சில நேரம் ரொம்பக் கொடுமையா இருக்கும்.” என்றவன்,

இதை மீனா எப்படி எடுத்துக்கொள்வாளோ என நினைத்து “சாரி மீனா இதெல்லாம் சொல்லக் கூடாது இல்ல... ஆனா நான் உன்னைத் தவிர வேற யார்கிட்டயும் சொல்ல முடியாது. உனக்குப் புரியுது தான....” எனத் தவிப்பாகக் கேட்ட போது.... மீனாவுக்கே அவனைப் பார்க்க பாவமாக இருந்தது.

“நீங்க சொல்லுங்க ஹரி...” அவள் சொன்னதும் அவன் தொடர்ந்தான்,

“குழந்தை இல்லாம ரொம்பக் கஷ்ட்டப்பட்டோம். முதல் ரெண்டு வருஷம் எங்க வாழ்க்கையில இருந்த சந்தோஷம் அதுக்குப் பிறகு இல்லை....”

“பிருந்தா குழந்தை குழந்தைன்னு டென்ஷன் ஆகிறதை பார்த்து, நான் ஒரு குழந்தை தத்து எடுத்துக்கலாம்னு சொன்னதுக்கு, அது நம்ம சொந்த குழந்தை போல ஆகாதுன்னு, அதுக்கும் அவ ஒத்துக்கலை... கடைசி மூன்னு வருஷம் வாழ்க்கை நரகமா தான் போச்சு....”

“நான் இதெல்லாம் அம்மாகிட்டயும் ஹரிணிகிட்டையும் சொன்னது இல்லை... வீணா அவங்க வேற கவலைப்படுவாங்க. அதனால சொல்லலை.... நாங்க அங்க போற நேரம் பிருந்தாவும் அவங்க கிட்ட எதவும் காமிச்சுக்க மாட்டா.... அதனால அவங்களுக்கு நாங்க இவ்வளவு கஷ்ட்டபட்டது தெரியாது.”

“ஹரிணி ரெண்டாவது குழந்தை உண்டான போது.... பிருந்தா ரொம்பவே மனசு ஒடிஞ்சு போயிட்டா....”

“அதுக்குப் பிறகு அவளே குழந்தையைப் பத்தி அதிகம் பேசுறது இல்லை.... ஹரிணிக்கு குழந்தை பிறக்க கொஞ்ச நாள் இருந்த போது.... பிருந்தா அவ அண்ணன் கல்யாணத்துக்காகக் கோயம்புத்துருக்கு அவ வீட்டுக்கு போனா....”

“நான், அம்மா, அப்பா எல்லோரும் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தோம். பிருந்தா மட்டும் என்னோட திரும்பி வரலை அங்கேயே கொஞ்ச நாள் இருந்திட்டு வரேன்னு சொன்னா.... நானும் சரின்னு விட்டுட்டு வந்தேன்.”

“பிருந்தாவுக்கு அந்த மாசம் நாள் தள்ளி போய் இருக்கு... ஆனா எப்பவும் இப்படித் தள்ளி போறதும், பிறகு அடுத்த வாரமே பிரியட்ஸ் வர்றதும் சகஜம். அதனால பிருந்தா அலட்சியமா இருந்திட்டா.... அவ யார்கிட்டயும் சொல்லலை....”

அம்பது நாள் ஆகியும் பிரியட்ஸ் வரலைன்னதும், அவளுக்குச் சந்தேகம் வந்து, வீட்லயே செக் பண்ணி பார்த்திட்டு குழந்தை உண்டாகி இருக்கிறது தெரிஞ்சு, எனக்குத் தான் முதல்ல கால் பண்ணி சொன்னா.....

“இவ்வளவு நாள் விட்ட கண்ணீருக்கு கடவுள் நம்மைக் கைவிடலைன்னு ரொம்பச் சந்தோஷ பட்டோம். இனி பிருந்தா அழாம... சந்தோஷமா, நிம்மதியா இருப்பாளே... நான் அதுக்காகவே ரொம்பச் சந்தோஷப்பட்டேன்.”

“ஆனா அந்தச் சந்தோஷம் அன்னைக்குச் சாயங்காலம் வரை தான் இருந்தது. ஏற்கனவே ரொம்ப நாள் பார்க்காம விட்டதுனால பிருந்தாவை அன்னைக்கே டாக்டர்கிட்ட அவங்க வீட்ல கூடிட்டு போய் இருக்காங்க.”

“அம்பது நாள் ஆனதுனால ஸ்கேன் பண்ணி பார்த்தப்போ.... குழந்தை கர்ப்பபையில இல்லை.... ட்யுப்ல வளர்ந்தது தெரிஞ்சு உடனே ஆபரேஷன் பண்ணனும், இல்லைனா... பிருந்தாவோட உயிருக்கு ஆபத்துன்னு சொல்லவும், அவங்க வீட்ல உடனே ஆபரேஷன் பண்ண சொல்ல....”

“அந்த டாக்டருக்கு அவ்வளவு அனுபவம் இல்லை... எதோ செய்யத் தெரியாம செஞ்சு.... குழந்தையோட பிருந்தாவும் இல்லாம போயிட்டா.....”

“நான் பிருந்தாவை பார்க்க அன்னைக்கு நைட் ஊருக்கு கிளம்பிட்டு இருந்தேன். எதுக்கோ போன் வருதுன்னு நினைச்சு எடுத்தா.... என் தலையில இடியை போட்டாங்க.”

“எனக்கு எப்படி இருந்திருக்கும் சொல்லு மீனா.... நான் யாரை பார்க்க ஆசையா கிளம்பிட்டு இருந்தேனோ... அவ இந்த உலகத்திலேயே இல்லைங்கிறது எனக்கு எப்படி இருந்திருக்கும்.”

ஹரி மேலே பேச முடியாமல் கண்ணீர் சிந்த.... மீனா அதற்கு மேல் அவன் சொன்னதைக் கேட்க முடியாமல்..... அங்கிருந்து எழுந்து அறைக்குள் சென்றவள், தானும் கதறி தீர்த்தாள்.

உண்மையில் பார்த்தால் மீனா தான் ஹரியை சமாதானம் செய்ய வேண்டும். ஆனால் ஹரி மீனாவை சமாதானம் செய்யும்படி ஆனது. ஹரி தன்னைச் சமாளித்துக்கொண்டு எழுந்து வந்து பார்த்த போது... மீனா ரொம்பவே அழுது கொண்டு இருந்தாள்.

“சாரி மீனா உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லி உன்னைக் கஷ்ட்டபடுத்திட்டேன். அழாத விடு...”

மீனாவுக்கு மனமே ஆறவில்லை... எதுக்கு இப்படிக் கொடுக்கிற மாதிரி குடுத்திட்டு ரெண்டு உயிரை பறிக்கனும். இதுக்குக் கொடுக்காமலே இருந்திருக்கலாமே.... பிருந்தாவாவது உயிரோடு இருந்திருப்பாளே..... பாவம் ஹரி அந்த நேரம் எப்படித் துடித்திருப்பான்.

நமக்கு நினைத்து பார்க்கும் போதே வலிக்கிறதே.... அனுபவித்தவனுக்கு எப்படி இருந்திருக்கும்.

“உங்களுக்கு நான் என்ன சொல்றதுன்னே தெரியலை.... நீங்க எப்படி ஹரி இதைத் தாங்கினீங்க ?” மீனா விசும்பலுக்கு இடையே கேட்க...

“நான் கேட்டதும் அதிர்ச்சியாகி அப்படியே உட்கார்ந்துட்டேன். எனக்கு அந்த நிமிஷம் நான் என்ன செஞ்சேன்? நினைச்சேன்னு கூட இப்ப வரை தெரியாது.”

“நான் அப்படியே இருந்தேன். அம்மா தேவ்கிட்ட சொல்லி அவன் வந்து என்னைப் பிருந்தா ஊருக்கு கூடிட்டுப் போனான். ஹரிணி இந்த விஷயம் கேட்டதும் மயக்கம் போட்டு விழுந்து அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தாங்க.... அப்படியும் விக்ரம் பிருந்தாவை பார்க்க வந்தார்.”

“எப்படியோ எல்லாம் முடிஞ்சது. நான் அவங்க வீட்ல பிருந்தாவை நல்ல ஆஸ்பத்ரிக்கு கூடிட்டு போகலைன்னு சண்டை போட்டேன். பிருந்தா என்னோட இருந்திருந்தா அவளுக்கு இந்த நிலைமை வந்திருக்காதுன்னு தோனுச்சு....நான் இப்ப வரை அவங்களோட பேசுறது இல்லை....”

“பிருந்தா சந்தோஷமா இருந்து தான் எல்லோரும் பார்த்திருக்காங்க. ஆனா அவ உள்ளுக்குள்ள எவ்வளவு அழுதான்னு எனக்கு மட்டும் தான் தெரியும். ஒரு குழந்தைக்காக அவள் எவ்வளவு ஏங்கினா.... கடைசியில குழந்தை வந்தும், அவ உயிர் போனது தான் மிச்சம்.”

அன்று தேவ் வீட்டில் இருந்து திரும்பி வந்த போது... ஹரி ஏன் அப்படி நடந்து கொண்டான்? என இப்போது மீனாவுக்குப் புரிந்தது. அதோடு அனியின் மீது ஏன் இவ்வளவு பாசம் வந்தது? என்பதும் புரிந்தது.

அவன் பிருந்தாவுடன் தனது காதல் கதையைச் சொல்லப்போகிறான் என்று தான் முதலில் மீனா நினைத்தாள். இதை வேறு கேட்க வேண்டுமோ என விருப்பமில்லாமல் தான் அமர்ந்து இருந்தாள். இப்படி ஒன்றை சத்தியமாக அவள் எதிபார்க்கவில்லை....

ஹரி அவன் மனைவியோடு சந்தோஷமாக வாழ்ந்திருப்பான் எனத் தான் மீனா நினைத்துக்கொண்டு இருந்தாள்.

அவள் யோசனையில் இருந்த போதே ஹரி மீண்டும் பேச ஆரம்பித்தான் “என்னால பிருந்தாவை சந்தோஷமா வாழ வைக்க முடியலை.... ஆனா நான் மட்டும் மனைவி, குழந்தைன்னு சந்தோஷமா இருக்கிறது... ரொம்ப உறுத்தலா இருக்கு மீனா....”

அவன் சொல்வது சரி தானே... மீனாவுக்கு இப்போது அவனின் நிலையை நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அவனுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தான் தெரியவில்லை.... அவள் கண்ணீரோடு அமர்ந்து இருந்தாள். காலம் தான் அவனின் மன காயத்தை ஆற்ற முடியும்.
Naanum அழுதேன் பா, பிருந்தா வுக்காக, very touching very sensitive epi
 
Top