இருளோடு தீபம் ஏற்றினாய் 9

Advertisement

ரமா

Active member
Member
அத்தியாயம் 9


மருத்துவமனையின் ஐசியூ முன்னே இருந்த இருக்கையில் அனைவரும் பதற்றத்துடன் அமர்ந்திருந்தனர்.

ருத்ராவிற்கு சுத்தமாய் ஒன்றும் புரியவில்லை. அவளை ஏன் கொலை செய்ய நினைக்க வேண்டும்? யார் அப்படி நினைத்தது என்று சுத்தமாய் புரியவில்லை.

அவனுடன் சேர்ந்து அங்கே நந்தினியும் பதற்றத்துடன் அமர்ந்திருந்தாள்.

சந்தோஷ் தான் அவளுக்குத் தேவையான மருந்துகளை வாங்கிக் கொடுத்து அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதே நேரம் அங்கே பதற்றத்துடன் வந்தார் தேவகி. அவரின் கண்களில் வழிந்த கண்ணீர் அவர் சிவாவின் மேல் வைத்திருந்த பாசத்தைப் பறைசாற்றியது.

"நந்து, என்னாச்சு சிவாவுக்கு?" என்றார் பதற்றத்துடன்.

"எனக்கும் தெரியலைம்மா... அவ மூச்சுப் பேச்சில்லாம இருக்கா... எனக்கு ரொம்ப பயமா இருக்கும்மா..." என்றாள் பயத்துடன்.

"இல்லைடா ஒன்னும் இல்லை... அவ நல்லாயிடுவாடா... நீ பயப்படாதே..." என்றார் ஆறுதலாய்.

அவர்கள் இருவரின் சம்பாஷனையைக் கேட்டவனுக்கு என்ன உணர்கிறோம் என்றே தெரியவில்லை.

'இவங்க தான் இவளோட அம்மாவா? ஆனா இவங்களை நான் எங்கேயோ பாத்திருக்கேனே... எங்கே பாத்தேன்...?' என்றவன் தேவகியின் வதனம் நினைவடுக்குகளில் தேடிச் சலித்துத் தான் போனான்.

சற்று நேரத்தில் உள்ளே இருந்து மருத்துவர் வெளியே வர அவரைக் கண்டவன் வேகமாய் எழுந்து அவரருகே சென்று,

"டாக்டர், அவங்க இப்போ எப்படி இருக்காங்க?" என்றான் அவளை உள்ளே பார்த்தபடி.

"சார், அவங்க இன்னும் மயக்கத்துல தான் சார் இருக்காங்க... அதுமட்டும் இல்லாம ரொம்ப நேரம் காத்துக் கூட இல்லாத இடத்துல இருந்ததுல பயத்தால அவங்களோட பல்ஸ் ரேட் இறங்கியிருக்கு. இப்போதைக்கு அவங்க தூங்குற மாறி தான் ஊசி போட்டுருக்கோம். மே பீ அவங்க ஒரு டூ ஹவர்ஸ்ல எழுந்துடுவாங்கன்னு நினைக்குறேன்" என்று அவனிடம் சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார்.

அவளின் உயிருக்கு ஆபத்து இல்லையென உணர்ந்தவன் அவளைக் கண்ணாடி வழியே ஒரு முறை பார்த்து விட்டு அங்கிருந்து சந்தோஷை அழைத்துக் கொண்டு சென்றான்.

இனி அவளின் குடும்பம் அவளைப் பார்த்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையில்.

நந்தினியும், தேவகியும் வெளியே அமர்ந்திருக்க அதே நேரத்தில் நந்தினியின் தாயும் அங்கே வந்து சேர்ந்தார்.

"நந்து என்னாச்சுடா சிவாவுக்கு?" என்றார் கோதை பதற்றமாக.

"அம்மா எனக்குப் பயமா இருக்கும்மா... இன்னும் சிவா கண்ணைத் திறக்கவே இல்லைம்மா..." என்றபடி தாயைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

"அந்த அங்காளம்மன் அப்படி எல்லாம் அந்தப் புள்ளையை எடுத்துக்கமாட்டா நந்து. முதல்ல நீ தைரியமா இரு. நிச்சயம் சிவா நம்மகிட்ட நல்லபடியா வருவா நந்து..." என்றார் தேறுதலாய்.

அவர்கள் மூவரும் சிவா கண்விழிக்கும் நொடிக்காகக் காத்திருந்தனர்.


***

"டேய் வாசு, உன் பொண்டாட்டி என்னடா நினைச்சிட்டு இருக்கா? அந்தத் தரித்திரம் போய் சேர்ந்தா தான் என்ன? இப்போ அவளுக்கு ஒன்னுன்னா உன் பொண்டாட்டி இப்படி ஓடறா... இங்கே வீட்ல ஒரு வேலை நடக்கலை. இப்போ பசங்களும் வந்துருவாங்க... அவங்களுக்கு சாயந்திரம் டிபன்லாம் யாரு பண்ணித் தருவா வாசு?" என்று வீட்டில் கத்தினார் சௌந்திரம்.

"அம்மா, சிவாவுக்கு ஆபத்துன்னு தான் போயிருக்கா... என்கிட்ட சொல்லிட்டு தான் போனா... அவ போனா என்ன? அதுதான் இந்த வீட்டுக்கு மருமக வந்துட்டால்ல... நீங்க உங்களுக்கு என்ன வேணுமோ நிகிதாகிட்ட கேட்கலாமில்ல..." என்றபடி சோபாவில் அமர்ந்தார் வாசுதேவன்.

"அவளை எப்படிடா செய்யச் சொல்றது? அவ வந்து இன்னும் முழுசா ஒரு வாரம் ஆகலைல்ல... இன்னும் அந்த பொண்ணுக்கு எது எது எங்கே இருக்குன்னே தெரியாது. ஆனா நீ என்னவோ அவளைச் சமைக்கச் சொல்ற..." என்று அவர் சொல்லி முடியும் நேரம் அப்போது தான் தூங்கி எழுந்து தூக்கக் கலக்கத்துடன் அங்கே இருந்த சோபாவில் அமர்ந்த நிகிதாவோ சமையல் அறையைப் பார்த்து,

"அத்தை, ஒரு காபி கொடுங்க..." என்று குரல் கொடுத்தாள்.

அதைக் கேட்ட வாசுதேவனுக்கு கோபம் தாறுமாறாய் வந்தது. 'தன் மனைவி என்ன இந்த வீட்டு வேலைக்காரியா? இந்தப் பொண்ணு சாதாரணமா கேட்குறா...' என்ற கோபம் வர அங்கே அதற்கு மேலும் இருக்க முடியாமல் எழுந்து தன் அறைக்குச் சென்றுவிட்டார்.

முதல் காரணம் தன் மனைவியை வேலை வாங்கியது என்றாலும் இரண்டாவதாக அவள் அணிந்திருந்த உடை. அறையில் உடுத்தும் உடையை அறைக்கு வெளியே அணிந்து வந்திருந்தாள் நிகிதா.

"நிகிதாம்மா, உங்க அத்தை வீட்ல இல்லைடா. அவ வெளியே போயிருக்கா... இன்னைக்கு டீ நீதான்மா போடணும். நீ வா நான் போடச் சொல்லித் தரேன்" என்று சிரித்தபடி தன் பேரன் மனைவியை அழைத்தார் சௌந்திரம்.

"எது அத்தை வீட்ல இல்லையா? அய்யோ! பாட்டி எனக்கு சுடுத்தண்ணி கூட வைக்கத் தெரியாது. எங்க வீட்ல எல்லா வேலைக்கும் வேலைக்காரங்க தான் பேசாம இங்கேயும் வேலையாளை வச்சிட்டா என்ன பாட்டி?" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் நேரம் அங்கே அமுதன் வந்தான்.

"என்னாச்சு? எதுக்கு வேலையாளை வைக்கப் போற நிகிதா?" என்று கேட்டபடி அவளருகே வந்தமர்ந்தான்.

"அது ஒன்னும் இல்லை அமுதன், இங்கே வீட்ல வேலைக்காரங்க யாரும் இல்லைன்னு பாட்டி சொன்னாங்க, அதுதான் வேலைக்கு ஆளைப் போடலாம்னு சொன்னேன்" என்றாள் அவனை பார்த்தபடி.

"ஏன் இந்த வீட்ல வேலை செய்யத்தான் ஒருத்தி இருந்தாளே அவ எங்கே பாட்டி? ஆமா அம்மா எங்கே பாட்டி?" என்றான் வீட்டைக் கண்களால் தேடியபடி.

"அதை ஏன் கேட்கிற அமுதா? அந்தத் தரித்திரம் புடிச்சவ எங்கேயோ மயங்கி விழுந்துட்டாளாம். அவளை ஆஸ்பத்திரில சேர்த்துருக்காங்களாம். அதுதான் உன்னோட அம்மா அவளைப் பாக்க போயிருக்கா. சரி, நீங்க இருங்க நான் போய் நம்ம எல்லாருக்கும் டீ போட்டு எடுத்துட்டு வரேன்..." என்று அந்தத் தள்ளாத வயதிலும் பேரனுக்கும் பேரன் மனைவிக்கும் டீ வைக்க எழுந்தார் சௌந்திரம்.

"ஆமா அமுதன், அது யாரு அந்தப் பொண்ணு நேத்து சாயந்திரம் நமக்கு டீ ஸ்நாக்ஸ் கொண்டு வந்து கொடுத்தாளே?" என்றாள் நிகிதா.

அவள் கேட்டதும் முதலில் அதிர்ந்தவன் அடுத்த நொடியே,

"அது வேற யாரும் இல்லை நிகி, அவ இந்த வீட்டு வேலைக்காரி. அவ பிறந்ததுல இருந்து இங்கே தான் இருக்கா. அதுதான் அம்மாவுக்கு அவ மேல ரொம்பவே பாசம்" என்றான் தன் மாமன் மகளை.

"வாட்! ஒரு வேலைக்காரிக்கு ஆன்ட்டி எதுக்கு இவ்வளவு இம்பார்ட்டன்ஸ் கொடுக்குறாங்க? எனக்கு இதெல்லாம் கொஞ்சமும் பிடிக்கவே இல்லை அமுதன். வேலைக்காரங்களை எங்கே நிறுத்தணுமோ அங்கேயே நிறுத்தணும் அதுதான் நம்மளை மாதிரி ஹைலெவல் ஆளுங்களுக்கு நல்லது. அவங்க அளவுக்குலாம் இறங்கிப் போகக் கூடாது அமுதன். முதல்ல இதை அத்தைக்குப் புரிய வைங்க... எங்கே அவங்களே இந்த வீட்ல ஒரு வேலைக்காரி மாறி தானே இருக்காங்க!" என்றபடி எழுந்து தங்களின் அறைக்குச் சென்றுவிட்டாள்.

அவள் தன் தாயை வேலைக்காரி என்றதே அவனின் மூளைக்குச் சென்று விழவில்லையோ என்னவோ? ஆனால், இதெல்லாம் அப்போது தான் மருத்துவமனையில் இருந்த வந்த தேவகியின் காதுகளில் விழுந்துவிட்டது.

ஆனால், அதற்காகப் பெரிதாய் அவர் வருந்தவில்லை. அவருக்குத் தான் நேற்றே தெரிந்து போனதே மருமகளின் குணத்தை!

மெதுவாக ஒரு புன்சிரிப்பைச் சிந்தியவர் யாரிடமும் எதுவும் பேசாமல் தங்களின் அறைக்குச் சென்றுவிட்டார்.

இவரைக் கண்ட வாசுதேவன், "தேவி, அந்தப் பொண்ணுக்கு என்னாச்சும்மா? எப்படி இதுபோல ஆச்சாம்? இப்போ அவளோட யாரு இருக்காங்க?" என்றார் பதற்றத்துடன்.

"இப்போ பரவாயில்லைங்க... அவளோட நந்துவை விட்டுட்டு வந்துருக்கேன். இன்னும் ரெண்டு நாள் ஹாஸ்பிடல்ல இருந்து தான் ஆகணுமாம். அதுதான் அவளுக்குத் தேவையான பொருள் எடுத்துட்டுப் போலாம்னு வந்தேன்..." என்றவரின் புன்னகையில் அத்தனை வலி இருந்தது.

தன் மனைவியின் கையை இறுக்கமாய் பிடித்துக் கொண்டவர்,

"என்னை மன்னிச்சிரு தேவி! அந்தப் பொண்ணு பாவம்டி..." என்றார் குரலில் வலியுடன்.

"பரவாயில்லைங்க, நான் பாத்துக்குறேன். நான் திரும்பவும் ஹாஸ்பிடல் போகணும்ங்க... இங்கே வீட்ல பிரச்சனை வரும் போல... நம்ம மருமக பிரச்சனை பண்ணுவா போல..." என்றவருக்கு மேற்கொண்டு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

"பரவாயில்லை தேவி, நானே உன்னைக் ஹாஸ்பிடல்ல கொண்டு வந்து விடறேன். நீ போய் கிளம்பும்மா..." என்று மனைவியை அனுப்பி வைத்தவருக்கு இன்னமும் இரவு தேவகி சொன்னதை நம்பத்தான் முடியவில்லை.

ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் தன் மனைவி பொய் சொல்லமாட்டாள் என்பதை அறிந்தவரின் மனம் மிகவும் வலித்தது.

எத்தனை சொத்து வைத்து எத்தனை பெரிய ஆளாக இருந்தால் தான் என்ன? மனநிம்மதி இல்லாமல் இருந்தால் அவர்களின் வாழ்வு அந்தரத்தில் தொங்கும் பட்டமாய் அல்லவா மாறிவிடும்.

இங்கு சிவாவின் வாழ்வும் அப்படித்தானே ஆனது. அவளின் பெற்றோர் இருந்தால் அந்தச் சிறு பெண் இப்படிக் கஷ்டப்படத் தேவையில்லையே?

"கடவுளே! இனியாவது அந்த பொண்ணுக்கு ஒரு நல்லது நடந்தால் சரி..." என்று கடவுளை வேண்டியவருக்குத் தெரியவில்லை அவள் இன்னும் எத்தனையோ கடுமையான பாதையில் கடந்து வர வேண்டும் என்பது!

அதற்குள்ளாகவே தேவகி கிளம்பி வர, அவரை அழைத்துக் கொண்டு மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றார் வாசுதேவன்.


***

அங்கே வாடிய கொடியாய் படுத்திருந்த சிவாவை கண்டவருக்கு மனம் மிகவும் வலித்தது.

'எப்படி எல்லாம் வாழ வேண்டிய பெண்! இன்று இத்தனை சித்திரவதைகளுக்கு இடையில் வாழும் வாழ்வை இவளுக்குக் கொடுத்து விட்டாயே இறைவா...' என்று இறைவனை நிந்திக்கத் தான் தோன்றியது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் சிவா கண்விழித்துவிட்டாள்.

தன் முன் இருந்த தன் அத்தை, மாமன், தன் தோழி, அவளின் தாயைப் பார்த்தவளுக்கு அந்த நிலையிலும் புன்னகை வந்து போனது இதழில்.

"சிவா, எப்படிம்மா இருக்கே?" என்று பாசமுடன் அவளின் தலையை வருடிக் கொடுத்தார் தேவகி.

அவரின் பாசத்தை அனுபவித்தபடி, "ம்ம்... நான் நல்லாருக்கேன் அத்தை..." என்றாள் வலியுடன் கூடிய புன்னகையுடன்.

"சிவா, கொஞ்ச நேரத்துல ரொம்பவே பயந்துட்டோம்டி..." என்று நந்தினியும் அவளின் கரத்தைப் பற்றிக் கொள்ள அதில் தெளிந்து சிரித்தவளின் காதுகளில் அடுத்து தேவகி சொன்ன வார்த்தையைக் கேட்டதும், கண்களில் கண்ணீர் வழிய வெறுமையான முகத்துடன் அவரை பார்த்தாள் சிவா.


***

"சார் என்னாச்சு, என்ன யோசனையில் இருக்கீங்க?" என்றான் சந்தோஷ்.

"இல்லை சந்தோஷ், அந்தப் பொண்ணு எப்படி அங்கே போயிருப்பா? நாம போகும் போது அவளோட கையையும் காலையும் கட்டிப் போட்டு அவ கத்தாத மாதிரி வாயில பிளாஸ்டர் போட்டு ஒட்டியிருந்தாங்க... ஆனா யார் இந்த வேலையைப் பாத்துருப்பான்னு தான் யோசிக்குறேன்..." என்றான் கணினியின் திரையைப் பார்த்தபடி.

அதில், அவளை ஒருவன் உள்ளே தூக்கிப் போகும் காணொளிப் பதிவு ஓடிக் கொண்டிருந்தது.

அதைப் பார்த்து கொண்டிருந்தவனின் கண்களில் சற்று நேரத்தில் ஓர் ஒளி வந்தது.

"எஸ் ஐ காட் இட்!" என்று மேசையைத் தட்டியபடி கத்தினான் ருத்ரா.



அப்படி அவன் எதைக் கண்டுபிடித்தான்? அவளிடம் தேவகி அப்படி என்ன சொல்லியிருப்பார்?

அடுத்த பாகத்தில் பார்க்கலாம் செல்லம்ஸ்.

தீபம் ஏற்றும்...
✍️
 
Siva va kapathinathuku thanks. Hey Rudra andha mollamari ( amuthanathan irupan) Avan pondati munnadi adichu iluthutu va. Appothan Sivakumar niyayama kidaikum
 
இந்த கேடுகெட்டவனுக்கு அவனோட அம்மாவையே தன் பொண்டாட்டி வேலைக்காரின்னு சொன்னதுகூட மண்டைல ஏறல... 😠
சிவாகிட்ட இவன் நடந்துக்கிட்ட விதம் தெரிஞ்சு ருத்ரா இவனை ஏதாவது செஞ்சா ரொம்ப சந்தோசமா இருக்கும் 😍

ருத்ராவுக்கு யாருன்னு தெரிஞ்சிடுச்சா? 🧐🤔

பார்ப்போம் 🤩
 
இந்த கேடுகெட்டவனுக்கு அவனோட அம்மாவையே தன் பொண்டாட்டி வேலைக்காரின்னு சொன்னதுகூட மண்டைல ஏறல... 😠
சிவாகிட்ட இவன் நடந்துக்கிட்ட விதம் தெரிஞ்சு ருத்ரா இவனை ஏதாவது செஞ்சா ரொம்ப சந்தோசமா இருக்கும் 😍

ருத்ராவுக்கு யாருன்னு தெரிஞ்சிடுச்சா? 🧐🤔

பார்ப்போம் 🤩
thanks akka
 

Advertisement

Advertisement

Back
Top