என் ஆயுள் ரேகை நீயடி 19

Advertisement

Sagee Elumalai

Member
Member
Chapter 19
என் காதலில் நான் குறை வைக்காதபோது,
என் காதல் ஒருதலையாக இருந்தால் தான் என்ன.
இருக்கட்டுமே
இருவருக்கும் சேர்த்து

நானே காதலித்து விட்டு போகிறேன்.

ஒரு வாரமாய் யாரினது முகத்தையும் ஏறிட்டு பார்க்காமல் அறைவாசம் இருந்தவளை பார்க்க வீராவுக்கு மனம் வலித்தது. எல்லாருடனும் கலந்து பேசவில்லை என்றாலும் கூட அவள் போக்கில் உலவி கொண்டிருப்பாள்.

ஆனால் ஏதோ சிறைக்குள் வைக்கப்பட்ட கைதி போல அவளிருப்பது அவனுக்கு பிடிக்கவில்லை. அமைதியாக எங்கோ பார்வை வெறித்து கொண்டு, சிந்தனை வயப்பட்டு இருந்தவளை அவன் விரும்பவில்லை. அவளது துடுக்கு தனமும், எதிர்த்து பேசும் குணமும் தானே அவனுக்கு பிடித்ததிருந்தது.

வார்த்தைக்கு வார்த்தை பேசி, நீயா நானா என்று மல்லுக்கு நிற்கும் மேகவியை மனகண்ணில் நிறுத்தி இப்போதிருப்பவளுக்கும் அவளுக்குமான வேறுபாட்டை மனம் கணக்கிட துவங்கியது. சண்டை கோழி போல சிலிர்த்து கொண்டு திரியும் அந்த மேகவியை காண மனம் ஏங்கியது.

“கவி எப்படி இருக்கா வீரா”

“நல்லா இருக்கா அத்தை”

“அவர் போனை எடுக்கலை போல, அவர் இங்கே குதிச்சிட்டு இருக்காரு. எப்பவும் அவங்க அப்பாக்கிட்டே பேசாம இருக்க மாட்டாளே. நாம ஏதோ சதி செய்யறோம்னு ஒரே பிரெச்சனை”

“அவங்க அப்பாக்கிட்டே பேசலையா, இது எனக்கு தெரியாது அத்தை. நான் உங்க போனை தான் எடுக்கலை நினைச்சிட்டு இருந்தேன்”

“இல்லை வீரா, இங்கே இருந்து போன பிறகே அவ, அவரோட பேசலை போல”

“நீங்க பேசினீங்களா அத்தை”

“அவர்கிட்டேயே பேசலை, என்கிட்டே எப்படி பேசுவா. அவளோட பெரிய எதிரியே நான் தானே” என்றார் அருணா லேசான புன்னகையுடன்.

“அத்தை உங்களுக்கு எதுவும் பிரெச்சனைன்னா சொல்லுங்க நான் அங்கே வரேன்”

“அதெல்லாம் இல்லை வீரா, இங்கே தான் எனக்கு என் புள்ளை இருக்கானே, நீ அவளை கொஞ்சம் கவனி வீரா” என்றார் தாயாக.

“சரி அத்தை” என்று வைத்து விட்டவன், மனைவியை கவனிக்க துவங்கினான். யாருடைய போனையும் அவள் எடுக்கவில்லை என்பது ஒலித்து கொண்டிருக்கும் போனை அவள் அவ்வப்போது இணைப்பை துண்டித்து வைப்பதிலேயே தெரிந்தது. இதற்கு முன்பும் அவளை கவனித்து வந்தான் தான், நடந்த பிரெச்சனையால் கொஞ்சம் அமைதியாக இருக்கிறாள் ஏதோ யோசித்து கொண்டிருக்கிறாள் என்று நினைத்து இருந்தான். ஆனால் அவள் தந்தையுடன் கூட பேசவில்லை என்பது அவனுக்கு இப்போது தான் தெரிந்தது.

அன்றும் சுகுமாரிடம் இருந்து ஃபோன் வந்தது, எடுத்து பார்த்தவள் சைலன்ட்டில் போட்டுவிட்டு மீண்டும் அமர்ந்து விட்டாள். இவனும் பார்த்து கொண்டு தான் இருந்தான். இரண்டு முறை மூன்று முறை என்று ஒலிக்கவும், அவள் அதே போல செய்யவும், எழுந்து வந்தவன் அதை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

என்னவென அவள் பார்க்க, “உன்னை யாரும் இங்கே ஃபோன் பேச வேண்டாம்னு கையை பிடிச்சு வைக்கலை மேகவி” என்றான் கோபமாக.

“நீங்க பிடிச்சு வச்சிருக்கீங்கன்னு நானும் சொல்லலையே” என்றாள் அவள் எங்கோ பார்த்து கொண்டு.

“அப்போ பேச வேண்டியது தானே”

“அது என்னோட விருப்பம்”

“உன்னோட விருப்பம் தான், ஆனா நீ பேசாம இருக்கிற பழி என் பேர்ல தானே வரும்”

“ஓஹ் உங்க மேலே பழி வந்திட கூடாது அவ்வளவு தானே, வேணும்னா சொல்லிடுங்க இங்கே இருந்து நான் எங்கேயாவது போய்டறேன். நிம்மதியா இருங்க. உங்க அத்தைக்காக என்னை கல்யாணம் செய்தவர் தானே நீங்க, நான் இங்கே இருந்தாலும் ஒண்ணு தான் இல்லைன்னாலும் ஒண்ணு தானே உங்களுக்கு” என்றாள்.

அவன் புரியாமல் புருவம் சுருங்க பார்க்க, “ஓஹ் எனக்கு இன்னும் உண்மை தெரியாதுன்னு நினைச்சீங்களா, எல்லாம் தெரியும். மிஸ்டர் சுகுமாரை பழிவாங்க நான் உங்களுக்கு ஒரு கருவி அவ்வளவு தானே” என்றாள் தோள் குலுக்கி.

சுருங்கிய புருவங்கள் விரிய அவன் அவளை ஆச்சரியமாக பார்க்க, “தாத்தா எல்லாமே சொன்னாரு, அப்பாவோட ஈகோ, அதனால அம்மாவை கட்டுபடுத்தி வச்சிருக்கிறது, பாட்டி இறப்புக்கு கூட அவங்களை இங்கே வர விடாம செய்தது. இந்த குடும்பத்தோட சம்மந்தமே இருக்க கூடாதுன்னு அவர் நினைச்சதை பொய்யாக்க நீங்க என்னை கல்யாணம் பண்ணி புது சம்மந்தத்தை உருவாக்கி இருக்கிறது எல்லாமே சொன்னார். ஆனாலும் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க, குடும்பத்துக்காக பிடிக்காத பொண்ணை கல்யாணம் பண்ணி, காதலிக்கிறேன்னு பொய் சொல்லி எவ்வளவு தியாகம் செஞ்சிருக்கீங்க” என்றாள் அதீத வியப்புடன்.

கையை கட்டிகொண்டு அவளை சிறு புன்னகையுடன் பார்த்தவன், “என்ன திடீர்னு என்னோட தாத்தாகிட்டே எல்லாம் பேசி இருக்க” என்றான் வேண்டுமென்றே.

“அவர் எனக்கும் தாத்தா தான், என்னோட அம்மாவை பெத்தவர், எனக்கும் அவர் மேலே உரிமை இருக்கு” என்றாள் வெடுக்கென்று.

“சரி சரி, உனக்கும் அவர் மேலே உரிமை இருக்கு தான். விட்டா சொத்தை பிரிச்சு கேட்ப போல” என்றான் போலி பாசாங்குடன்.

“ம்ச் யாருக்கு வேணும் உங்க சொத்து” என்று மடியில் இருந்த தலையணையை உதறி விட்டு எழுந்து பால்கனி சென்றாள், அவளை பின் தொடர்ந்து சென்றவன், “சரி சொத்து வேண்டாம், ஆனா அவர் பேரன் கூட வேண்டாமா என்ன” அவள் முகம் பார்த்தபடி பக்கவாட்டு கம்பியில் சாய்ந்து நின்று கேட்டான்.

“அவர் பேரனை அவரே வச்சுக்கட்டும், பாவம் என்னதான் குடும்பத்துக்காகன்னு இருந்தாலும் எவ்வளவு நாள் தான் பிடிக்காத பொண்ணோட பொய்யான வாழ்க்கை வாழ முடியும்” எங்கோ வெறித்தபடி அவள் சொல்ல,

“உன்னை பிடிக்காதுன்னு யாருடி சொன்னது” அவள் முகத்தருகே நெருக்கமாய் குனிந்து கேட்டான்.

ம்ஹூம் முகத்தை திருப்பி கொண்டு அவள் நகர போக, அவள் கை பற்றி தடுத்தவன் “பிடிக்காத பொண்ணைத்தான் உரசிக்கிட்டே திரிவாங்களா உங்க ஊர்ல” என்றான்.

அவள் அவனிடம் இருந்து விடுபட முயல, “சொல்லிட்டு போ” என்றான் பிடிவாதமாக.

“என்ன சொல்லனும், தாத்தாவுக்காகவும், உங்க அத்தைக்காகவும் இந்த கல்யாணம் நடக்கலைன்னு உங்க நெஞ்சை தொட்டு சொல்லுங்க பார்க்கலாம்” என்றாள் கோபத்துடன்.

ஒரு நெடுமூச்சுடன், மெதுவாக அவளை தன்னோடு சேர்த்தவன், அவள் முதுகும் தன் நெஞ்சும் உரசும் நிலையில் நிற்க வைத்து கொண்டு “அவங்களுக்காகன்னா கல்யாணம் தான் செய்யணும்னு அவசியம் இல்லை மேகவி. வேற எப்படியாவது கூட உங்களை எல்லாம் இங்கே கொண்டு வந்திருப்பேன். உங்க அப்பாவை வழிக்கு கொண்டு வரணும்னா என்கிட்டே வேற வழிகள் கூட இருக்கு. ஆனா உன்னை எனக்கு பிடிச்சிருந்தது” என்று அவன் கூறி முடிக்கும் முன் பொய் என்றாள் அவள்.

இடவலமாக தலையாட்டியவன், “என்னால நிரூபிக்க முடியும்டி” என்றான் கிசு கிசுப்பான குரலில்.

இப்போது அவள் புருவங்கள் சுருங்கிட அவனை திரும்பி பார்க்க, முனைய சட்டென அவளை கைகளில் ஏந்தி கொண்டான். அவள் திகைத்து விழிக்கும் முன்னே, அறைக்குள் தூக்கி வந்தவன், மெத்தையில் அவளை விட்டான்.

என்ன செய்கிறான் இவன் என்று நினைக்கையிலேயே அவன் சட்டையை கழட்ட போக, “என்ன செய்யறீங்க நீங்க” என்று பதறி போனாள் மேகவி.

“நீ தானே கேட்ட, என் காதலை நிரூபிக்க போறேன்” என்றான் அவன் சட்டையை கழட்டி கொண்டே, “அதுக்காக.. அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்” என பதறியவள் இரு கைகளாலும் கண்ணை மூடி கொள்ள, அவனிடம் இருந்து பலமான சிரிப்பு சட்டம் கேட்டது,

எதுக்கு இந்த ராட்சச சிரிப்பு என்று திட்டி கொண்டே அவள் மெதுவாக கையை விலக்கி பார்க்க, வெகு சமீபத்தில் அவள் பெயர் பச்சை வண்ணத்தில் அவன் நெஞ்சில் வரைந்து இருந்தது.

ஆச்சர்யத்தில் விழிகள் விரிய அதை பார்த்தவள், விரல் கொண்டு லேசாக வருட, சட்டையை மட்டும் கலைந்து இருந்தவன் குறும்பு பார்வையுடன் “ஏண்டி சட்டையை கழட்டினதுக்கே இப்படி கண்ணை மூடிக்கிட்டா, அப்புறம் நான் எப்படி என்னோட லவ்வை உனக்கு காட்டறது” என்றான் சீரியசாக.

அது நேரமும், ஒரு பிரமிப்புடன் அவன் நெஞ்சில் இருந்த தன் பெயரை பார்த்து கொண்டிருந்தவள் அவன் கூறிய கூற்றில் அவன் கண்ணை பார்த்து தாவி அவனை அணைத்து கொண்டாள்.

தானும் அவளை இறுக அணைத்து கொண்டவன், அப்படியே மோன நிலையில் இருக்க, மெல்ல அவளிடம் இருந்து விசும்பல் ஒலி வந்தது.

சட்டென அவள் முகம் நிமிர்த்தி, “ஏய் அழறியா, என்னோட மேகவிக்கு இது செட்டே ஆகாதே” என்று பெரு விரல் இரண்டால் அவள் விழிகளை துடைத்து விட்டான்.

அப்போது தான் இன்னும் இன்னும் வீரியம் கொண்டு அழுதவள், அவனை தன்னால் முடிந்த மட்டும் இறுக அணைத்து கொள்ள தவறவில்லை. ஆறுதலாக அவள் தலையையும் முதுகையும் வருடி கொடுத்தவன் தானும் அப்படியே இருந்தான். அவளாக அழுகை குறைந்து வரட்டும் என்று விட்டுவிட்டவன், அவள் அழுகை குறைந்து தேம்பலில் நிற்கவும், அவளை மெதுவாக தன்னில் இருந்து பிரித்து, “எதுக்கு இந்த அழுகை” என்றான்.

அவனை தீயாக முறைத்தவள், “எல்லாம் உங்களால தான், என்கிட்டே முன்னாடியே இதெல்லாம் சொல்லி இருந்தா, நான்.. நீங்க.. இவ்வளவு கஷ்டம் எல்லாம் பட்டிருக்க வேண்டாமே” என்றாள் தேம்பலுக்கு இடையில் வார்த்தைகள் துண்டித்து துண்டித்து வந்தது.

“அப்படி முதல்லயே சொல்லிட்டா, அப்புறம் இந்த சண்டை கோழியை கட்டிக்கிட்டு வாழறதுல என்ன சுவாரஸ்யம் இருக்கு” என்றான் அவன் குறும்பு மாறாமல்.

ஆச்சரியமும் கோபமுமாக, அவள் அவனை முறைக்க, “பாரு நீ சாதாரணமா பார்த்தா கூட நான் சும்மா இருப்பேன், ஆனா இப்படி முறைச்சு பார்த்த நான் அப்படியே பிளாட் ஆகிடுவேன்” என்றான் மயங்கி விழுவது போல செய்து.

அதை கேட்டு பக்கென சிரித்தவள், மூக்கை உறிஞ்சி கொண்டே, ஆமா அப்படியே பிளாட் ஆகிட்டாலும்” என அவன் நெஞ்சில் அடித்தாள்.

“ஹே என்னடி அடிக்கிற” என்றான் அவன் வியப்புடன்.

“சுவாரஸ்யமான லைப்ல இதெல்லாம் வேணும் லாயர் சார்” என்றாள் அவள் சளைக்காமல்.

“ம்ம் அதுவும் சரிதான், ஆனா அடிக்கும்போது கொஞ்சம் பார்த்து அடி எக்கு தப்பா எங்கேயாவது பட்டா, அப்புறம் நம்ம குலம் தழைக்க நீ தான் கஷ்டப்பட வேண்டி வரும்” என்றான்.

“ச்சீ, என்ன இப்படி எல்லாம் பேசறீங்க” என்று அவள் விலக போக, அவள் கையை சுண்டி இழுத்து மீண்டும் தன்னருகே கொண்டு வந்தவன், “பேச்சு மட்டும் இல்லை இந்த மாதிரி ச்சீ சொல்ல வைக்கிற செயல் கூட என்கிட்டே நிறைய இருக்கு” என்றான் கண்ணடித்து.

அவள் கண்ணை விரித்து அதிர்ந்து பார்க்க, “என்னடி அப்படியே ஷாக் ஆகிட்ட, அதெல்லாம் பொறுமையா செஞ்சு காட்டறேன், இப்போதைக்கு என்னோட கைக்குள்ள இருக்கிற என் பொண்டாட்டியை” என்றவன் கட்டி அணைத்து கொண்டான்.

மெத்தையில் அவன் மடியில் அமர்ந்தபடியே கணவன் இதயத்தின் ஓசையை கேட்டபடியே கண்ணை மூடி இருந்தாள் பெண். எங்கே இந்த வாழ்வு கை நழுவி சென்று விடுமோ என்று இந்த கொஞ்சம் நாட்களாக அவள் பயந்தது அவளுக்கு தானே தெரியும். அந்த அளவுக்கா அவள் வீராவை நேசிக்கிறாள் என்று அவளே அவளை சுய பரிசோதனை செய்து கொண்ட நாட்கள் அவை.

விவாகரத்து தருகிறேன் என்று அவன் வாயால் கூற கேட்டதில் இருந்து அவள் அடைந்த வேதனை கொஞ்சம் நஞ்சமல்ல. இரவெல்லாம் உறங்காது அவனை விட்டு அவள் பிரிந்து போக நேரிடும் தருணத்தை எண்ணி பயந்து கொண்டே இருந்தாள். எப்போதும் அப்படிபட்ட ஒரு நிலை வந்து விட கூடாது என்று வேண்டி கொள்ளும் தகுதி கூட அவளுக்கு இல்லாததை நினைத்து தன்னிடமே கோபம் கொண்டிருந்தாள்.

தன்னுடைய இந்த மாற்றங்கள் எல்லாம் ஒரே நாளில் வந்து விட்டதா என்றால் நிச்சயம் இல்லை, ஆரம்பம் முதலே வீரா மீது அவளுக்கு இருந்த ஈர்ப்பும், அதை தொடர்ந்த காதலும் திருமண பந்தத்தின் பிணைப்பும் அவனை அவளுள் பிரிக்க முடியாத உறவாக மாற்றி இருந்தது.

இன்னும் உடலால் இணையவில்லை தான், ஆனால் மனதளவில் அவளை தன்னிடம் ஈர்த்து இணைத்து இருந்தானே கணவன். இதோ இந்த சண்டை கோழியை கூட சமாதானம் புறாவாக மாற்றி அவன் நெஞ்சில் தஞ்சம் அடைய வைத்திருக்கிறானே கள்வன்.

இதமாய் அவன் நெஞ்சின் மீது சாய்ந்து விழி மூடி கிடந்தவளின் தலையை அவன் விரல்கள் மெல்ல கோதி விட்டன.

“ஏண்டி என்கிட்டே கேட்கலை”
....
“நீ மட்டும் ஏன் இதெல்லாம்னு ஒரு வார்த்தை கேட்டு இருந்தா இவ்வளவு தூரம் வந்திருக்காதே”
….
அவள் அமைதியாகவே இருக்க, அவள் முகத்தை நிமிர்த்தி என்னடி என்றான் கேள்வியாக.

“என்ன சொல்ல சொல்றீங்க, என்னோட ஈகோ தான் காரணம். என்னை ஏமாத்தி கல்யாணம் செய்துகிட்டு எங்க அப்பாவையும் அவமானப்படுத்திட்டீங்களேன்ற கோபம். எங்கப்பா தப்பு செய்திருக்க மாட்டார்னு நான் அவர் மேலே வச்சிருந்த நம்பிக்கை தான் காரணம். ஒரு தகப்பனா சரியா இருக்கறவர், ஒரு கணவனா தன்னுடைய இடத்திலே சரியா தான் இருப்பாருன்னு நானே நினைச்சுக்கிட்டது தான் காரணம்” என்றாள்.

“இப்பவும் அதே நினைப்பு தான் உனக்கு இருக்கா”

“இல்லை, ஆனா நீங்க ஏன் இதை வேற மாதிரி சரி செய்ய நினைக்கலை. எல்லாம் சரியான பிறகு நம்ம கல்யாணம் நடந்திருக்கலாமே. அந்த கேள்வி தான் இருக்கு”

“செய்திருக்கலாம், ஆனா எனக்கு உன்னை பிடிச்சது தான் எல்லாத்துக்கும் காரணம்” என்றான் அவன்.

“ஆமா இதையே சொல்லாதீங்க”

“நிஜமாதாண்டி சொல்றேன், உன்னை பிடிச்சதுக்காகவே காத்திருந்து கல்யாணம் செய்தேன். மத்த விஷயம் எல்லாம் ரெண்டாம்பட்சம் தான்”

“காத்திருந்தீங்களா எவ்வளவு நாளா”

“உனக்கு இருபத்து ஒரு வயசு வர வரைக்கும்” அவள் மூக்கை பிடித்து ஆட்டி அவன் சொல்ல, “ம்ச் சும்மா சொல்லாதீங்க” என்றாள் அவன் கையை தட்டி விட்டு.

"அம்மாவுக்காகத்தானே இந்த கல்யாணம்” அவள் மேற்கொண்டு பேச விழைய விரல் வைத்து அவள் இதழ் மூடியவன், இல்லை என்றான் மறுப்பாக.

"இந்த ஒரு முறை முழுசா சொல்லிடறேன், அதுக்கு பிறகும், அத்தைக்கா, தாத்தாவுக்காக தான் கல்யாணம் செய்தீங்கன்னு சொல்ல கூடாது சரியா" என்றான் செல்ல மிரட்டலோடு.

அவள் சரி என்பதாக தலையசைக்க, அவன் சொல்ல துவங்கினான்.

வேதாசலம், வேணி தம்பதிக்கு, விசுவநாதன், அருணா இரு பிள்ளைகள். அருணா விசுவை விட மிகவுமே சிறியவள், நீண்ட நாட்கள் கழித்து பிறந்த பெண் பிள்ளை என்பதால் வீட்டில் அனைவருக்குமே செல்லம். அதற்காக சுட்டி தனமாக வீட்டை சுற்றி வந்து வீணாய் பொழுதை கழிக்கும் பெண் அல்ல அருணா. மிகவுமே பொருமையும், பொறுப்பும் கொண்ட பெண். பெற்றவர்கள் சொல் கேட்டு நடப்பவள். மற்றவர் மனம் நோக கூடாது, பெண் வீட்டின் விடிவெள்ளியாக இருக்க வேண்டும், மற்றவரிடம் கெட்ட பெயர் எடுத்து விட கூடாது என்று வேணியால் சொல்லி சொல்லி வளர்க்கபட்டவள். அதன்படிதான் அருணாவும் வளர்ந்தாள்.

முதலில் நம் வீட்டிற்கு ஒரு மகாலட்சுமியை கொண்டு வருவோம் பிறகு நம் வீட்டு லட்சுமியை இன்னொரு வீட்டுக்கு அனுப்புவோம் என்று வேணி கூறியதால் விசுவுக்கு திருமணம் செய்ய நினைத்தார்கள் பெரியவர்கள்.

அவர்கள் சொந்தத்திலேயே, இருந்த மீனாட்சியை தன் மகனுக்காக தேர்ந்தெடுத்தார் வேணி.

மீனாட்சிக்கு அண்ணன் மட்டும் தான், அம்மா அப்பா சிறு வயதிலேயே தவறி இருந்தனர். எல்லாம் சரியாய் அமைந்து போக மீனாட்சியை விஸ்வநாதனுக்கு திருமணம் செய்து வைத்தார்.
எல்லாம் சரியாகத்தான் இருந்தது.
நில புலன்கள் அதிகம் கொண்ட வேதாசலத்தின் குத்தகைதாரர் ஒருவர், குத்தகை முடிந்த பிறகும் நிலத்தை ஒப்படைக்காமல் இழுத்தடிக்க, அந்த கேஸ் போலீஸ் கோர்ட் என்று போனது.

வேதாசலம், வேண்டாம் விட்டு விடு என்று மறுத்த பிறகும், “அதெப்படி நம்ம சொத்து” என்று வக்கீல் வைத்து வாதிட நினைத்தார் விசு.

அப்படி கோர்ட் கேஸ் என்று அலையும்போது தான் சுகுமார் அவருக்கு அறிமுகம் ஆனார். சின்ன வயதிலேயே நல்ல திறமையான குணமும், சாமர்த்தியமும் கொண்ட சுகுமாரை விசுக்கு பிடித்து போனது. அமைதியான குணம் கொண்ட தன் தங்கைக்கு இது போல கொஞ்சம் அடாவடி குணம் கொண்ட கணவன் கிடைத்தால் தான், அவள் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும் என நினைத்தார்.

ஆனால் அவர் அருணாவின் நிலையில் இருந்து பார்க்க தவறி விட்டிருந்தார்.
 

Advertisement

Advertisement

Back
Top