என் ஆயுள் ரேகை நீயடி 21

Advertisement

Sagee Elumalai

Member
Member
Chapter 21
வேரோடு வெட்டி சாய்த்த பின்பும்
மண்ணை கவ்வி கொண்டே வரும்
மரத்தின் வேர்கள் போல..
உன்னை விட்டு விலகிய பின்பும்

என்னோடு ஒட்டு கொண்டே வருகிறது
உன் நினைவுகள்..


கல்யாணி பேசியது சுகுமாருக்கும் கூட கொஞ்சம் அதிர்ச்சி தான், அவருக்கு கோபம் இருந்தது, அவமானப்பட்டு விட்டோமே என்ற ஆதங்கம் இருந்தது. ஆனால் அருணாவை பிரியும் எண்ணம் இல்லை.

“அருணா பிள்ளையை தூக்கிட்டு வா போகலாம்” என்றார் சுகுமார்.

அருணா தயங்கி நிற்க, “என்ன மாப்பிள்ளை இது உங்ககிட்டே பேசி தானே கல்யாணம் செய்தோம். அவ பிறந்ததுலே இருந்து வசதியா வாழ்ந்தவ, இப்படி தனியா வந்து அங்கே என்ன செய்வா” என்று கேட்டார் வேணி.

அவர் கூறியது என்னவோ, ஆட்கள் சுற்றிலும் இருக்க சொந்தபந்தங்களோடு வாழ்ந்தவள் என்ற பொருளில் தான். ஆனால் அது சுகுமாருக்கு பண வசதியை பற்றி பேசியது போலத்தான் காட்டியது.

இயல்பிலேயே கொஞ்சம் அதிக சுயமரியாதையுடன் வளர்ந்த சுகுமாருக்கு இவர்கள் பேச்சும் நடத்திய விதமும் அதை சீண்டி பார்த்திருந்தது., “இங்கே பாரு அருணா இப்போ நீ என் கூட வர, அத்தோட இந்த வீட்டு மனுஷங்களோட உனக்கு இனி எந்த உறவும் கிடையாது. அண்ணன் அம்மா அப்பான்னு யாரும் எந்த சம்மந்தமும் சொல்லிக்கிட்டு உன்னை தேடி வர கூடாது. இது என்னோட பொண்ணு மேலே சத்தியம்” என்று அருணா கையை பற்றி எடுத்து மேகவியின் தலையில் வைத்து சொன்னார்.

அருணா பதறி விலகி கையை எடுத்துகொள்ள, பிள்ளையை தூக்கிக்கொண்டு வெளியேறி இருந்தார். பெற்ற பிள்ளை மீது தன்னுடைய அனுமதி இல்லாமல் சத்தியம் செய்த கணவனை என்னவென்று சொல்ல தெரியாமல் விழித்தவர், மகள் தன்னை பார்த்து கையை நீட்டி அழ துவங்கவும், வேகமாக கணவன் பின்னே ஓடி சென்றார்.

அன்று முதல் அருணா தன்னையறியாமல் செய்த சத்தியத்தை சொல்லி சொல்லியே அவர் குடும்பத்துடன் இருந்து பிரித்து வைத்திருந்தார் சுகுமார். அதற்கு அருணா மகள் மீது வைத்த பாசமும் ஒரு காரணமாகிற்று.

நடந்ததை வீரா ஒரு முறை சொல்லி இருக்க, “இது எல்லாம் ஒரு விஷயம்னு இந்த அம்மா ஏன் இவ்வளவு நாளா உங்களோட பேசாம இருக்கணும்” என்று கேட்டாள் மேகவி.

அவள் கன்னத்தை வருடி கொண்டிருந்தவனோ “உனக்கு எனக்கும் தான் இது சின்ன விஷயம், ஒரு அம்மாவா, தன்னோட பிள்ளையை வச்சு எந்த தாயும் ரிஸ்க் எடுக்க மாட்டாங்க. அது எவ்வளவு பெரிய மூடநம்பிக்கையா இருந்தாலும் கூட பிள்ளைக்காகன்னு, மண்சோறு சாப்பிடறது, முட்டி போட்டு கோவில் படி ஏர்றது, மடிப்பிச்சை எடுக்கிறதுன்னு வேண்டுதல் செய்யற அம்மாக்களை நாம இப்பவும் சமூகத்துல பார்த்து கிட்டு தானே இருக்கோம்” என்றான்.

ம்ம் என்ற ஆமோதிப்பாக சொன்னவள், “ஆனாலும் இந்த அப்பா இவ்வளவு கோபப்பட்டு இருக்க வேண்டாம். கொஞ்சம் உட்கார்ந்து பேசி இருந்தா எல்லாம் சரியாகி இருக்குமோ என்னவோ” என்றாள்.

“அது கோபம் மட்டும் இல்லைடி, ஒரு ஆணின் ஈகோ, ஒரு ஆணோட ஈகோ சீண்டப்படறது தான் இந்த உலகத்திலேயே மோசமான விளைவுகளை உருவாக்கும் செயல். ஒரு பொண்ணு எப்படி தன்னோட பிள்ளைகளுக்காக எந்த எல்லைக்கும் போவாங்களோ, அது போல ஒரு ஆண் தன்னோட ஈகோவுக்காக எந்த எல்லைக்கும் போவான். உலகத்திலே பல தலைவர்களும் தொழில் அதிபர்களும் முளைக்க காரணமே எப்போவோ எங்கேயோ அவங்களோட ஈகோ சீண்டப்பட்டதா தான் இருக்கும். நாளடைவிலே அதை அவங்க மறந்து கூட போய்ருப்பாங்க. ஆனா விதை அங்கே தான் விழுந்திருக்கும். அது அவனோட பிறப்பிலேயே வடிவமைக்கபட்ட ஒண்ணா நினைக்கிறான். அதை விட்டு கொடுத்துட்டு வாழறது அவனோட இறப்புக்கு சமம்னு நினைப்பான்” என்றான் விளக்கமாக.

அதை கேட்டு முகம் சுருக்கியவள் “ஏன் பொண்ணுங்களுக்கு ஈகோ இருக்காதா, இல்லை இருக்க கூடாதா” என்றாள்.

“நிச்சயமா இருக்கலாம், இருக்கணும் கூட. ஆனா பொண்ணுங்க அதை அவங்களோட ஆக்க சக்திக்கு தான் பயன்படுத்துவாங்க, பெண் பிறப்பின் இருப்பிடம்டி, அவளால அழிவை தாங்கிக்க முடியாது” என்றான் பெருமையாக.

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “நீங்க எப்படி இவ்வளவு பெமினிசம் பேசறீங்க” என கேட்டாள்.

“பெண்கள் பெண்ணியம் பேசறதுல என்ன இருக்கு சொல்லு, அவங்களுக்கு அவங்களே காலம் காலமா போராடிக்கிட்டு தான் இருக்காங்க. பாதிக்கப்பட்டவன் தனக்கு தானே போராடிக்கிட்டு இருக்கற வரைக்கும் அங்கே மாற்றம் பாதி தான் நடக்கும். ஆனா அவனுக்காக பாதிக்கவே படாத ஒருத்தன் இறங்கி போராடினா தான் முழுமையான நியாயம் பிறக்கும். அதே போல ஆண்கள் பெண்ணியம் பேசினா தான், பெண்களை அடக்கி வைக்க நினைக்கிற சக்திகள் அழியும்” என்றான்.

“ம்ம், அம்மா அதுக்கு பிறகு வரவே இல்லையா. நீங்களும் யாரும் வந்து பார்க்கலையா”

“ம்ம், அத்தையை பிடிச்சு தானே மாமா கல்யாணம் பண்ணிக்கிட்டார், அதனால கொஞ்சம் காலம் போனதும் சமாதானம் ஆகி வந்திடுவார்னு எல்லாரும் நினைச்சுட்டு இருந்திருக்காங்க. ஆனா அவர் ஈகோவோட உச்சியிலே இருந்திருக்கார். உன்னை வச்சி மிரட்டியே அத்தையை பாட்டியோட இறுதி காரியத்துக்கு கூட வர விடாம செஞ்சிருக்கார்”.

ஒரு முறை அப்பா எப்படியோ ரகசியமா வேறொருத்தர் மூலமா அத்தையை பத்தி விசாரிச்சு இருக்கார். அவர் சொன்னது அவ்வளவு நல்ல விஷயமா அப்பாவுக்கு தெரியலை. அத்தை அங்கே ரொம்ப கஷ்டப்படறதா சொல்லிறுக்கார். அப்பா அத்தைக்கிட்டே பேசினப்ப, என் பொண்ணு உயிரை வச்சி விளையாட நான் விரும்பலை, என்னை மறந்திடுங்கன்னு அத்தை சொல்லிறுக்காங்க”

“அப்போ நீங்க மட்டும் எப்படி வந்தீங்க”

“உங்கப்பா, அத்தையோட உறவு தானே கூடாதுன்னு சொன்னாரு. அதனால தான் உன் மூலமா உறவை ஏற்படுத்திக்கிட்டு அங்கே வந்தேன்”

“அதெப்படி அப்போ தான் உங்களை எனக்கு தெரியாதே”

“ஆனா எனக்கு உன்னை தெரியுமே”, என்றான் அவன் கண் சிமிட்டி.

“சின்ன வயசுல நடந்த விஷயம் அதனால லேசா ஏதோ புரிஞ்சும் புரியாமலும் இருந்தது. அதுக்கு அப்புறம் கொஞ்சம் வளர்ந்தப்ப தாத்தா உங்களை பத்தி எல்லாம் சொல்லி வருத்தப்பட்டார். எனக்கும் கொஞ்சம் கோவம் வந்தது. இவ்வளவு வளர்ந்த பொண்ணு இருந்தும் கூடவா, அம்மாவை அப்பா நடத்துற விதம் இவளுக்கு தெரியாம இருக்கும்னு உன் மேலே கோவமா வந்தது. அதனால உன்னை பத்தி விசாரிச்சு உன்கிட்டே பேசலாம்னு தான் முதல்ல உன்னை காலேஜ்க்கு தேடி வந்தேன்”

“காலேஜ்க்கா எப்போ” படக்கென அவன் மடியில் இருந்து எழுந்து கொண்டவள் ஆச்சரியமாக கேட்டாள்.

“ம்ம் நீ செகண்ட் இயர் படிக்கும்போது” என்று மீண்டும் அவளை இழுத்து மடி மீது அமர்த்தி கொண்டான்.
“என்கிட்டே பேசினீங்களா”

“எங்கே, உன்னை பார்த்த அந்த நிமிஷமே பிளாட் ஆகிட்டேன், இதுல பேச்சு எங்கே வரும்” என்றான்.

“நிஜமாவா வீரா”

“ஏண்டி உன் மேலே உனக்கே நம்பிக்கை இல்லையா, நீ வொர்த் தாண்டி” என்றான் அவன் குறும்பாக.

“ச்சீ அதெல்லாம் நான் வொர்த் தான்னு எனக்கு தெரியும், ஆனா லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் அதுவும் இந்த ஸ்ட்ரைட் ஃபார்வார்டு ஆசாமிக்கான்னு தான் கொஞ்சம் ஆச்சர்யமா இருக்கு”

“ஏய் என்னை என்ன ஆன்டி ஹீரோ ரேஞ்சுக்கு பில்ட்அப் பண்ற, நான் பீல் குட் ஹீரோ தான்மா” என்றான் அவன் அப்பாவியாக.

“சரி சரி இருந்துட்டு போங்க, அப்புறம் என்னாச்சு சொல்லுங்க”

“உன்னை பார்த்ததும் இவ தான் நமக்கு பொண்டாட்டின்னு பிக்ஸ் பண்ணிட்டேன், சோ என்னோட பொண்டாட்டியோட அம்மாவை பார்க்க உங்க வீட்டுக்கு வந்தேன்”

“அப்போ இப்போ தான் வந்தீங்களா”

“இல்லை, உன்னை பார்த்ததும், உன்னை சுத்தி இருக்கிற எல்லாரையும் பத்தி டீடெயில்ஸ் கலெக்ட் பண்னினேன். யார் எப்போ என்ன செய்வீங்கன்னு எல்லா விஷயமும் தெரிஞ்சுகிட்டேன். அதன்படி உங்கப்பா வீட்டுலே இல்லாத நேரத்திலே போய் அத்தைக்கிட்டே பேசினேன். முதல்ல பேச முடியாதுன்னு சொல்லிட்டாங்க. ஆனா நான் உங்க அண்ணன் மகனா வரலை உங்க பொண்ணோட வருங்கால புருஷனா வந்திருக்கேன்னு சொன்னேன். முதல்ல கொஞ்சம் யோசிச்சாங்க அப்புறம் பேசினாங்க”

“உண்மையிலே அத்தை ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க, அது நாள் வரைக்கும் யார்க்கிட்டேயும் சொல்லாம உள்ளேயே வச்சுகிட்டு இருந்ததை எல்லாம் ஒரேயடியா கொட்டினாங்க. உங்கப்பாவுக்கு அவர் பட்ட அவமானம், ஈகோ எல்லாத்தையும் இத்தனை வருஷம் ஆகியும் கொஞ்சம் கூட குறையாம அத்தைக்கிட்டே காட்டிக்கிட்டே இருந்திருக்கார்”.

“பாட்டி சொன்னாங்கள்ல, அவ வசதியா உறவுகளோட வாழ்ந்தவ, அங்கே வந்து எப்படி இருப்பான்னு அதை பிடிச்சுக்கிட்டு அத்தையை உங்ககிட்டே இருந்தும் அக்கம் பக்கம் உறவுகள்னு எல்லார்கிட்டே இருந்தும் தனிமை படுத்தி இருந்திருக்கார். கொஞ்சம் கொஞ்சமா எங்களோட வசதியை குத்தி காட்டி பேசிக்கிட்டே இருந்ததுல அத்தையே அவங்களோட வசதியை எல்லாம் குறைச்சுக்கிட்டு இருந்திருக்காங்க. இதை எல்லாம் நீங்க யாருமே கண்டுக்கலையே ஏன்” என்று கேட்டான்.

“நான் அந்த மாதிரி யோசிக்கவே இல்லை வீரா, அம்மா எப்பவும் அமைதியா இருப்பாங்க, நாங்க அப்பாக்கிட்டே தான் எல்லாத்தையும் கேட்போம். எது கேட்டாலுமே அப்பாக்கிட்டே கேளுங்கன்னு தான் அம்மாவும் சொல்வாங்க, எங்கேயாவது வெளியே போக கூப்பிட்டாலும் வர மாட்டாங்க. நாங்க எது வாங்கிட்டு வந்தாலும் கூட போட்டுக்க மாட்டாங்க. அதனால அம்மா அப்படித்தான்னு அப்பா சொன்னதை நாங்களும் அப்படியே விட்டுடோம். அம்மா இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காங்கன்னு தெரியாமலே போச்சு” என்றாள் வருத்தமாக.

"இது எல்லாமே உங்க அப்பாவோட வற்புறுத்தல் தான் மேகவி, அவங்களை மனசலவுள பலவீனமாக்கி இருக்கார். அவர் சொல்றதை தான் கேட்கனும்னு வற்புறுத்தி இருக்கார். இதுக்கு அத்தையோட குணமும் ஒரு காரணம். பொதுவா அத்தை கொஞ்சம் மென்மையான மனநிலை கொண்டவங்க, பெருசா எதிர்ப்பு காட்டி பேசி எல்லாம் பழக்கம் இல்லாதவங்க. அவங்களை தூக்கி வச்சே கொண்டாடி வளர்த்த குடும்பத்தை மட்டுமே அறிஞ்சவங்க. அதனால அவங்களுக்கு உங்கப்பாவை மீற தைரியம் இல்லாம இருந்திருக்கலாம். அத்தோட பிள்ளைகள் மேலே கொண்ட பாசம் அவங்களை அங்கேயே தேங்கி நிற்க வச்சிருக்கு. இது தானே இன்னைக்கு நாட்டுல பெரும்பாலும் பெண்களோட நிலை.

“புருஷன் எவ்வளவு கொடுமை படுத்தினாலும் கூட பிள்ளைகளுக்காக அவங்களோட எதிர்காலம் பாழாகிட கூடாதுன்னு, எல்லாத்தையும் பொறுத்துகிட்டு வாழ்றது தானே பெண்களோட வாழ்க்கையா இருக்கு. ஒருவேளை அப்படியே யாராவது என்னோட வாழ்க்கை என்னோட எதிர்காலம்னு வெளியே வந்தா, அவ கெட்டவ, சுயநலவாதி, திமிர் பிடிச்சவ, அம்மாவா இருக்கவே தகுதி இல்லாதவ இந்த மாதிரி பட்டங்கள் தான் கிடைக்கும். எல்லா பொண்ணுங்களும் அடிமையா இருக்காங்கன்னு சொல்லலை, ஆனா பெரும்பாலும் எல்லாரும் சூழ்நிலை கைதிகளா தான் இருக்காங்க” என்றான் நெடுமூச்சுடன்.

ஆமோதிப்பாக தலையாட்டுவதை தவிர, மேகவினிக்கு வேறு வழி இருக்கவில்லை. அவன் சொன்னதில் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை தானே. ஒரு பெண்ணாக அவளே தன்னுடைய தாயை பற்றி யோசித்திருக்காத போது, அவன் இவ்வளவு யோசித்திருக்கிறானே. தான் எப்படி இதை எல்லாம் கவனிக்காது இருந்தேன் என்று அவள் அலசிக்கொண்டிருக்கும் போது, அவள் எண்ணவோட்டத்தை அறிந்தவன் போல, "இதுல உன்னை நீயே குத்தம் சொல்லிக்க வேண்டிய அவசியம் இல்லை மேகவி, ஏன்னு கேட்டா, உங்க அளவில அவர் ஒரு நல்ல அப்பாவா, நல்லா குடும்பஸ்தனா தான் இருந்திருக்கார். எதையுமே உங்க கண்களுக்கு காட்ட கூடாதுன்றதுல கவனமா இருந்திருக்கார். எல்லா பிள்ளைகளுக்கும் பெத்தவங்க என்ன காட்டாறாங்களோ அது தானே உலகம். முதல்ல அவங்க கண் வழியா தானே நாம உலகத்தை பார்க்கிறோம்” என்றான்.

இப்போதும் அவள் அமைதியாகவே இருக்க, அவனே தொடர்ந்தான். மேகவி முதல்ல உன்னை கூட்டிட்டு வந்து, நாம நேசிக்கிறவங்களை பிரிஞ்சு இருக்கிற வலியை அவருக்கு கொடுக்கணும்னு தான் நினைச்சேன். ஆனா அவர் செய்ததையே நானும் செய்தா அப்புறம் அவருக்கும் உனக்கும் என்ன வித்யாசம் இருக்குன்னு எங்கம்மா சொன்னாங்க. எனக்கு அது சரி தான்னு தோணுச்சி, நமக்கு தேவை குடும்பம் எல்லாம் ஒண்ணா சேரனும் அதானே. அதுக்காக ஒருத்தரை பழி வாங்கி தான் அவங்களுக்கு பாடம் கத்துகொடுக்கனும்னு அவசியம் இல்லையே. அவங்களோட தவறை அவங்க உணர்ந்தாலே போதுமேன்னு நினைச்சேன். அதனால தான் உன்னை எதுக்குமே தடுக்கலை, இப்போ கூட அத்தையை இங்கே கூட்டிட்டு வரதை யாராலயும் தடுக்க முடியாது, அதை என்னால செய்ய முடியும். ஆனா அத்தை இத்தனை நாளும் வைராக்கியமா இருந்ததை பாழ் படுத்த விரும்பலை. அவங்க பிறந்த வீட்டுக்கு அவங்க வர தடையா இருந்தது உன் மேலே வச்சிருந்த பாசம் தானே. அதே பாசத்தோட உன்னோட புகுந்த வீட்டுக்கு உன்னோட அம்மாவை நீ கூட்டிட்டு வரதை யாராலயும் அத்தையால கூட தடுக்க முடியாது. நீ கூப்பிடு மேகவி அத்தை வருவாங்க” என்றான்.

சரி என்பது போல தலையாட்டியவள், “ஆமா உங்க அம்மாவா அப்படி சொன்னாங்க” என்று கேட்டாள் திடீரென்று.

எப்படி என்று ஒரு நொடி யோசித்தவன், பிறகு புரிந்து ஆமாம் என்று தலையாட்டினான்.

“அதெப்படி அவங்களுக்கு தான் எங்க அம்மாவை பிடிக்காதே”

அவள் இப்படி சொன்னதும் லேசாக சிரித்தான் வீரா, “ஹேலோ என்ன சிரிப்பு அதான உண்மை, அவங்களால தானே சண்டை வந்தது” என்றாள் இவள் கோபமாக.

“மேகவி ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோ, எல்லாருக்குமே அவங்க அவங்க உரிமையையும், உறவையும் நிலை நாட்டிக்கனும்னு ஒரு எண்ணம் உள்ளுக்குள்ள இருக்கும். அது ஏதாவது ஒரு விஷத்துல கொஞ்சம் அதிகமா கூட இருக்கும். அப்படி ஒரு உரிமை போராட்டம் தான் அம்மாவோடது. அம்மா கெட்டவங்க இல்லை மேகவி, சொல்ல போனா இங்கே யாருமே கெட்டவங்க கிடையாது. உங்கப்பா, எங்கம்மா, ராகவியோட அப்பா, அம்மா உங்க அத்தை இப்படி யாருமே கெட்டவங்க கிடையாது. அவங்க அவங்க நிலையிலே அவங்க முடிவு தான் சரியா இருக்கும்னு நினைக்கிறாங்க. அது மட்டும் தான் அவங்க செய்யற தப்பு. அடுத்தவங்க நிலையிலே இருந்து யாரும் யோசிக்கிறது இல்லை. அப்படி யோசிச்சாலே குடும்ப உறவுகள் மட்டுமில்லை நாட்டுக்குள்ள கூட குழப்பம் வராது தெரியுமா” என்றான்.

இவள் அவனை முறைத்து பார்க்க, தொடர்ந்து பேசினான் வீரபத்ரன்.
 

Advertisement

Advertisement

Back
Top