என் ஆயுள் ரேகை நீயடி 22

Advertisement

Sagee Elumalai

Member
Member
Chapter 22
நிறைவேறா வாக்குறுதிகள்
பல இருந்தும், அடுத்தடுத்து
உனக்கே வெற்றி வாய்ப்பை கொடுக்கிறது

என் காதல் கொண்ட மனம்.

“ஆமாடி, அம்மாவுக்கு அவங்களோட உரிமைகள் பறிபோய்டுமோன்ற எண்ணம் தான் இருந்திருக்கு. அத்தை இப்படி எல்லாம் கஷ்டப்படனும்னு நினைச்சது இல்லை. அந்த பிரெச்சனை நடந்ததுக்கு பிறகு ரொம்பவே பீல் பண்ணிருக்காங்க”

சண்டை நடந்து அத்தையை, உங்கப்பா கூட்டிட்டு போனப்பிறகு, என்ன நடந்ததுன்னு புரியாமலே எல்லாரும் இருந்தாங்க. “என்னதான் நடந்தது, இப்படி என் பொண்ணு கண்ணீரும் கவலையுமா இந்த வீட்டை விட்டு போற அளவுக்கு என்ன நடந்துச்சு. நீயாவது சொல்லு மீனா” என்று அழுதார் வேணி.

அவருமே நடந்த விஷயத்தை எண்ணி திகைப்பில் தான் இருந்தார். “இப்படி எல்லாம் நடக்கும்னு நினைக்கவே இல்லை அத்தை. அருணா வீட்டுக்காரர் சாப்பிட்டுகிட்டு இருந்தாரு. அவருக்கு தண்ணீ எடுத்துட்டு வந்து கொடுத்தேன். அதை பார்த்து அவருக்கு நீ ஏன் வேலை செய்யறேன்னு அண்ணன் கேட்டுச்சி. அது அப்படியே பேச்சு நீண்டு.. ஆனா இப்படி எல்லாம் நடக்கும்னு நான் நினைக்கவே இல்லை அத்தை” என்றாள் கலக்கமாக.

அதை கேட்டு இது ஒரு பிரெச்சனையா என்று தான் இருந்தது பெரியவர்களுக்கு, “ஏன் தம்பி குரு, இது தான் உனக்கு பிரெச்சனையா. அப்படியே உனக்கு அது பிடிக்கலைன்னா கூட உன் தங்கச்சியை தனியா கூப்பிட்டு சொல்லி இருக்கலாம். இல்லை உன் மச்சான் இதோ இருக்கானே அவனை கூப்பிட்டு சொல்லிருக்கலாம். இப்படி ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கு பிரெச்சனை உண்டாக்கி என்னோட பொண்ணை வீட்டை விட்டே போற மாதிரி ஆகிடுச்சே” என்று கேட்டார் வேதாசலம்.

“மாமா, நான் அந்த மாதிரி நினைச்சு எதுவும் சொல்லலை, ஆனா வீட்டோட இருக்கிற உங்க வீட்டு மருமகனுக்கு என்னோட தங்கச்சி வேலை செய்யனுமான்னு தான் கேட்டேன். இதுல தப்பு ஒண்ணும் இல்லையே” என்றான் பரமகுரு.

“என்னது வீட்டோட இருக்கிற மாப்பிள்ளையா, அதை எப்படி குரு நீ சொல்லலாம், அப்படி பார்த்தா உன் தங்கச்சி கூடத்தான் வீட்டோட இருக்கா. பொண்ணுங்களுக்கு சம உரிமை எல்லாம் பேசறது ஆனா அதே ஒரு ஆம்பளை செய்தா தப்பா. பொண்ணுங்க கல்யாணம் ஆகி போனா மாமியார் வீட்டுல எவ்வளவு உரிமை இருக்கோ. அதை உரிமை தானே கல்யாணம் ஆகி வர மருமகனுக்கும் இருக்கும். இதை எப்படி நீங்க தப்பா பேசுவீங்க. ஒருத்தன் மாமியார் வீட்டோட இருந்தா உடனே அவனை அசிங்கமா பேசுவீங்களா. இப்போ சொல்றேன், என்னோட தங்கச்சி இந்த வீட்டுக்கு திரும்ப வரவரைக்கும் நீயும் உன்னோட தங்கச்சியை உன் வீட்டுக்கு கூட்டிட்டு போய் வச்சுக்கோ” என்றார் விசு.

மீனா, திகைத்து நிற்க, தவறாக நடந்து கொண்டோமோ என்று பரமகுருவும் நினைத்தார்.

“ஏன் மீனா இதுவரைக்கும் இந்த வீட்டுல உனக்கு ஏதாவது குறை வச்சிருக்கோமா, இல்லை தானே அப்படி இருக்கும்போது நீயும் எப்படி என் தங்கச்சி புருஷனை தப்பா பேசுவ”

“இல்லைங்க நான் அந்த மாதிரி”, என பேசும்போதே தான் பேசியது நினைவிற்கு வந்தது. அதன் பிறகு மீனா எதுவும் பேசவில்லை. “கிளம்புங்க” என்றார் விசு கோபமாக.

உடனே வேதாசலமும் வேணியும் தடுத்தனர். “என்ன விசு நடந்த பிரெச்சனை போதாதா, இப்படி நீங்க எல்லாம் பிரிஞ்சு போகவா, நாங்க பார்த்து பார்த்து எல்லாம் செய்யறோம்” என்று கடிந்து கொண்டார்.

“அப்போ இவங்களால என்னோட தங்கச்சி இந்த வீட்டை விட்டு போனதை நினைச்சு நான் எப்படிப்பா நிம்மதியா இருப்பேன்”.

“விசு விடுடா, நடந்தது நடந்து போச்சு. அதுக்காக எல்லாரையும் வேதனை படுத்த வேண்டாம். எல்லாம் ஒரு நாள் சரியாகிடும்” என்றார் வேணி.

அத்தோடு பரமகுரு சென்றவர் தான், தங்கையை காண அந்த வீட்டிற்கு வரவில்லை.

“ஓஹ் அப்போ அவங்க அண்ணன் இங்கே வராம இருந்ததால தான் எங்கம்மா இங்கே இருக்கும்போதும் நிம்மதியா இருக்க விடலை, இப்பவும் நிம்மதியா இருக்க விடலைன்னு சொன்னாங்களா உங்க அம்மா” என்றாள் இடையிட்டு.

“அது உனக்கு எப்படி தெரியும்”, தானும் அன்னையும் பேசிக்கொண்டதை நினைத்து பார்த்தான்.

“நீங்களும் உங்க அம்மாவும் பேசினதை நான் கேட்டேன்” என அவள் சொல்லவும், இடவலமாக தலையசைத்தவன், “ஒட்டு கேட்பவர்கள் நல்லதை கேட்பதில்லை” என்றான் சிரித்து கொண்டே.

“பேச்சை மாத்தாதீங்க” என விரல் நீட்டி எச்சரித்தாள்.

அவள் சுட்டு விரலில் முத்தமிட்டவன் “நான் ஏண்டி மாத்த போறேன், அவங்க சொன்னது அந்த அர்த்தத்திலே இல்லைடி, அத்தை இங்கே இல்லாததை நினைச்சு நினைச்சு தான் பாட்டிக்கு உடம்புக்கு முடியாம போச்சு. தாத்தாவும் அடிக்கடி வருத்தப்பட்டு உடம்பை கெடுத்துப்பாங்க. பெரியவங்க இப்படி இருக்க நாமளும் ஒரு காரணமா ஆகிட்டோம்னு அம்மா குற்றவுணர்சசிலே ரொம்பவே வருத்தப்படுவாங்க. அதை தான் அப்படி சொல்லிருப்பாங்க. எங்கம்மாவுக்கு மனசில இருக்கிறதை எப்படி வெளிப்படுத்தணும்னு தெரியாது. பாசத்தை கோபமா காட்டுவாங்க, கோபத்தை அழுகையா காட்டுவாங்க. அந்த மாதிரி தான் ஆதங்கத்தை வெளி காட்ட தெரியாம சொல்றது தான். நீ பேசி பார்த்தா உனக்கு புரியும்”

“நம்ப முடியலையே, சரி இதெல்லாம் இருந்தாலும், என்னை நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தது உங்கம்மாவுக்கு பிடிக்கலை தானே” என்றாள்.

“அத்தைக்கும் மாமாவுக்கும் ரொம்ப வருஷம் கழிச்சு தான் ராகவி பிறந்தா. அவ பிறந்து கொஞ்சம் வருஷத்துலயே மாமா இறந்துட்டார். அதுவரைக்குமே அவர் இந்த வீட்டுக்கு வரவே இல்லை. அப்பாவும் கூட அவர்க்கிட்டே பேசலை. ஆனா அவர் இறக்கர நேரம், ராகவியை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு அம்மாகிட்டே சாத்தியம் வாங்கிக்கிட்டாராம். அதனால தான் அம்மா ராகவியை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இருந்தாங்க”

“அப்போ நீங்களும் ராகவியை கல்யாணம் பண்ணிக்க ரெடியா தான் இருந்தீங்க அப்படித்தானே” என்று முறைத்தாள்.

அவள் கன்னத்தை கைகளில் தாங்கி கொண்டவன், “மேகவி, எனக்கு அப்போ எல்லாம் அது பத்தின எந்த ஆர்வமும் இல்லைடி, அம்மாவும், அத்தையும் ஏதாவது பேசினா கூட இப்போ ஏன் இதெல்லாம் பேசறீங்கன்னு சொல்லிட்டு கடந்து பொய்டுவேன். ஆனா உன்னை அப்படி என்னால கடந்து போக முடியலைடி. அதனால தான் தாத்தா மேலே பழியை போட்டு அவரோட ஆசைக்காகன்னு சொல்லி உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். உறவுகளுக்குள்ள இந்த மாதிரி காம்ப்ரமைஸ் எல்லாம் தேவைப்படுதே” என்றான் பாவம் போல முகத்தை வைத்து கொண்டு.

“கேடி வேலை எல்லாம் செய்துட்டு, அப்பாவி மாதிரியா பேசறீங்க” என சீண்டினாள்.

“என்ன பண்றது இந்த கில்லிங் லேடியை கல்யாணம் பண்ண போய் நான் கேடி வேலை எல்லாம் செய்ய வேண்டியதா போச்சு” என்றான்.

“எல்லாத்துக்கும் என் மேலேயே பழி போடாதீங்க” என அவன் கையை தட்டி விட்டாள்.

அவளையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தவன், “நீ எவ்வளவு ஸ்வீட் தெரியுமா”, என்றான் திடீரென்று.

அவள் புரியாமல் பார்க்க, “என்னை பிடிக்காதுன்னு எவ்வளவு பிடிவாதம் செஞ்ச, ஆனா இப்போ பாரு என்னை விட உனக்கு தான் என்னை அதிகமா பிடிக்கும்னு காட்டிட்ட” என்றான் காதலாக.

“அப்படி ஒண்ணும் நான் சொல்லலையே” என்றாள் இவள் புருவம் சுருக்கி

“சொல்லனுமா என்ன, உன்னோட கண்ணீர்தான் சொல்லாம சொல்லிடுச்சே” என்றான் அவன் கண் சிமிட்டி.

அவள் லேசாக சிரிக்க, “என் மேல மட்டுமில்லை, உனக்கு பிடிச்சவங்களுக்காக எந்த எல்லைக்கு வேணும்னாலும் போகும் உன்னோட அன்பு, அதையும் உன்னோட அப்பா மேல நீ வச்சிருக்க பாசத்திலே காட்டிட்ட” என்றான்.

“என்ன இருந்தாலும் அது தப்பு தானே” என்றாள் இவள் சங்கடமாக.

“இல்லவே இல்லைடி, அன்பு வைக்கிறதுல பாரபட்சம் இருக்க கூடாது, அவங்க நல்லவங்களா தப்பானவங்களா எல்லாம் பார்க்க கூடாது, கண்மூடித்தனமா ஒருத்தர் மேலே அன்பு வைக்கிறோம்ல அது தான் உண்மையான அன்பு. அந்த விதத்திலே உங்க அப்பா குடுத்து வச்சவர். எப்போவாவது நீ அந்த அளவுக்கு என்னை நேசிப்பியான்னு யோசிச்சி இருக்கேன், ஏங்கி கூட இருக்கேன் தெரியுமா” என்றான் அவன்.

அவனை காதலாக பார்த்தவள், “அதுக்கென்ன அதை விட அதிகமான அன்பை, என்னோட வாழ்நாள் முழுக்க உங்களுக்கு கொடுப்பேன்” என்றாள் அவன் நெட்டி முட்டி.

“எங்கே, இவ்வளவு நேரம் ஆச்சு, இன்னும் கொஞ்சம் கூட ரொமான்ஸ் நடக்கலை. வெறும் பேச்சோட மட்டும் தான் நிக்குது. அப்புறம் எங்கே உன்னோட அன்பை நான் தெரிஞ்சுக்கிறது” என்றான் அப்பாவியாக.

“என்ன” முதலில் புரியாமல் விழித்தவள், பிறகு புரிந்து முறைக்க, “நான் ஏற்கனவே சொன்னேன் நீ சிரிச்சா கூட நான் சும்மா இருப்பேன், ஆனா நீ முறைச்சா நான் காலிடி” என்றவன் அவளை கீழே தள்ளி மேலே படர்ந்தான்.
அவள் சுதாரித்து எழ விடாமல் செய்தவன், கழுத்தடியில் முகம் புதைத்தான். மீசையால் குறுகுறுப்பூட்டி கொண்டே “டெம்ப்ட் பண்றடி” என்றான் மெல்லிய குரலில். அவன் இதழ்கள் செய்த மாய வேலையில் மேக மெத்தையில் மிதப்பது போல கண்கள் மூடி கிடந்தாள் மேகவினி.

கழுத்தில் ஊர்ந்த இதழ்கள், அங்கும் இங்கும் அலைமோதி தனது இணையை தேடி கண்டு பிடித்து கொண்டது, ஒரு இடையூறும் இல்லாத நீண்ட முத்தம். நின்று நிதானமாக ரசித்து ரசித்து சுவைத்தார்கள். வெகு நேரம் சென்று இருவருமே ஓய்ந்து போய் விலகிட, புருவம் சுருக்கி இருந்தவன் “என்ன இருந்தாலும் அன்னைக்கு கொடுத்தியே அது போல வரலை” என்றான் தீவிரமாக.

ஏற்கனவே முகமெல்லாம் சிவந்து இருந்தவள், என்னைக்கு என்று கேட்டாள்.

“அன்னைக்கு நறுக்குனு கடிச்சு கொடுத்தியே ஒரு” அவன் சொல்ல வருவதற்குள் தாவி அவன் வாயை மூடியவள், வேண்டாம் என்று தலையசைக்க, அவள் கையை மெதுவாக எடுத்து விட்டவன், “அதெப்படி விட முடியும், ரெண்டு நாளா சும்மா மந்திரிச்சு விட்ட மாதிரியே இருந்தேன். என்னாச்சு என்னாச்சுன்னு கேட்டே எல்லாரும் ஒரு வழி பண்ணிட்டாங்க. எல்லாருக்கும் ஒவ்வொரு மாதிரி பதில் சொல்றதுக்குள்ள, ஸ்ஸ்ப்பா ஆனாலும் செம்ம கிக்கா தான் இருந்தது” என்றான் விழிகள் மூடி கிறங்குவது போல செய்து.

“ச்ச அது ஏதோ நான் கோவத்துல” அவ சொல்ல வருவதற்குள் “ஏண்டி கோவத்திலே இப்படித்தான் முத்தம் கொடுப்பியா, அப்படின்னா அதுக்காகவே உன்னை காலம் முழுக்க கோபப்படுத்தி பார்க்கலாம் போல இருக்கே” என்று சீண்டினான்.

“அது ஏதோ சாதாரண கோவம் அதான் உதட்டுல கடிச்சு வச்சுட்டேன், ஏடாகூடமா ஏதாவது செய்தீங்க எங்கே எல்லாம் கடிப்பேன்னு எனக்கே தெரியாது” என்று அவள் மிரட்ட, கையால் தான் வய் மூடி விழிகளை விரித்தான் வீரபத்ரன்.

அவன் பார்வையும், அது சொன்ன விஷம செய்தியும் பின்பே உரைக்க, “இங்கே பாருங்க நான் அது போல எல்லாம் எதுவும் பேசலை”, என்று சமாளிக்க முயன்றாள்.

ஆனால் அவனோ பாவமாக முகத்தை வைத்து கொண்டு “மேகவி கல்யாணம் வரைக்கும் கொஞ்சம் விட்டு வைடி, அதுக்கு அப்புறம் ஐ ஆம் ஆல் யவுர்ஸ். நீ என்ன வேணும்ணா பண்ணிக்கோ” என்றான்.

“அய்யோ உங்ககிட்டே போய் பேசினேன் பாருங்க, நீங்க சரியான கிரிமினல் வக்கீலா இருக்கீங்க, நான் போறேன்” என்று எழுந்து கொண்டவளை, “ஏய் நில்லு எங்க போற”, என்றவன் முடிக்கும் முன் தானே நின்று திரும்பியவள், “கல்யாணம் வரைக்கும்னா” என்றாள் கேள்வியாக.

“அதை பத்தியும் பேசணும்னு நினைச்சேன். வா ஒரேயடியா பேசிடலாம்” என்றான்.
...............

“எல்லாருமா சேர்ந்து ஏற்கனவே என் பையன்கிட்டே இருந்து என்னை பிரிச்சுட்டீங்க, இப்போ என் பொண்ணையும் என்கிட்டே இருந்து பிரிச்சுட்டீங்கள்ள, இப்போ உனக்கு சந்தோஷமாடி” என்று கத்தினார் சுகுமார்.

அமைதியாக காய்கறிகளை நறுக்கி கொண்டிருந்த அருணா, அவரை நிமிர்ந்து பார்க்காமலே, “ஏன் நீங்களும் என் குடும்பத்துகிட்டே இருந்து என்னை பிரிச்சு தானே கூட்டிட்டு வந்தீங்க”, என்று கேட்டாள்.

“ஆமாடி, என்னை அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தின வீட்டுலே என்னோட பொண்டாட்டியும் புள்ளையும் இருக்க கூடாதுன்னு பிரிச்சு கூட்டிட்டு வந்தேன். இதுல என்ன தப்பு”

“அதுக்காக என்னோட அம்மா சாவுக்கு கூட நீங்க என்னை அங்கே அனுப்பலை” அவருக்கு நினைவூட்டுவது போல சொன்னாள்.

“அதுக்காக இப்போ நான் செத்தா கூட என் பொண்ணுக்கு என் முகத்தை காட்ட விட மாட்டீங்க அதானே”

“உங்க பொண்ணை யாரும் கட்டாயப்படுத்தி அங்கே வச்சிருக்கலை, அவளுக்கு பிடிச்சு தான் அங்கே இருக்கா”

“யாரு என்னோட பொண்ணா, இருக்கவே இருக்காது. அவனோட மிரட்டலுக்காகத்தான் அங்கே இருக்கா. இப்போ கூட நான் சொன்னா இங்கே ஓடி வந்திருவா” என்றார் கர்வமாக.

“நீ என்ன நினைச்சுட்டு இருக்க, அவளை அங்கேயே பிடிச்சி வைக்கலாம்னா, அது நடக்காது இதோ பார்த்தியா, இது என்னன்னு தெரியுமா உனக்கு, உன் அண்ணன் மகன் அவனுக்கும் என் பொண்ணுக்கும் கல்யாணம் ஆகிட்டதா சொல்லி மிரட்டினானே அந்த கல்யாண ரிஜிஸ்டர் சர்டிபிகேட். இது சுத்தமான போலி, என்னையும் என் பொண்ணையும் ஏமாத்தி இருக்கான். இதுக்காகவே அவன் மேலே கேஸ் போட்டு அவனை நடு தெருவுக்கு இழுத்துட்டு வர போறேன். என் பொண்ணை ராணி மாதிரி அங்கே இருந்து கூட்டிட்டு வர போறேன்” என்று மார்தட்டி கொண்டார்.

இப்போதும் எந்த சலனமும் இல்லாமல் தான் இருந்தார் அருணா. ஒரு நொடி அவரை கூர்ந்து பார்த்த சுகுமார், “அப்போ உனக்கு இது எல்லாம் முன்னாடியே தெரிஞ்சு இருக்கு. ஆனாலும் வேணும்னு என்னையும் என்னோட பொண்ணையும் பிரிக்க அவன் கூட சேர்ந்து சதி செய்திருக்க. அப்படித்தானே” என்று கேட்டார்.

“ஆமாம்”

அருணாவின் அமைதியில் அவரின் கோவம் விசிறி விடப்பட்டது, “என்ன திமிர் இருந்தா இது போல செய்வ, பெத்த பொண்ணு, கட்டின புருஷன்னு எல்லாரையும் ஏமாத்தி இருக்கியே நீயும் ஒரு பொம்பளையா” என்றார் இகழ்ச்சியாக.

விலுக்கென நிமிர்ந்தார் அருணா, “ஆமா பொம்பளை இல்லை தான், நான் செய்யாத சத்தியத்துக்காக இத்தனை நாள் இந்த வீட்டை விட்டு போகாம இருக்கேனே, நான் பொம்பளை இல்லை தான். என்னை நீங்க அவமானப்படுத்தும் போதெல்லாம் பொறுத்துகிட்டு பேசாம இருந்தேனே நான் பொம்பளை இல்லை தான். பெத்த அம்மா சாவுக்கு கூட போக விடாம தடுத்தப்ப ஏன்னு கேள்வி கேட்காம இருந்தேனே நான் பொம்பளை இல்லை தான். நான் பெத்த பிள்ளைங்க பக்கத்திலேயே இருந்தும் ஏதோ மூணாவது மனுஷி போல விலகியே வாழ்ந்தேனே நான் பொம்பளை இல்லை தான். மூணு மாசத்துக்கு ஒரு முறை அஞ்சு மாசத்துக்கு ஒரு முறை பத்து நாள் எங்கே போறீங்க என்ன செய்யறீங்கன்னு வாய் விட்டு கேட்காம இருந்தேனே நான் பொம்பளை இல்லை தான். எல்லாத்துக்கும் மேலே குட்ட குட்ட குனிய கூடாதுன்னு தெரியாம குனிஞ்சு குனிஞ்சு இன்னைக்கு மண்ணோட மட்டமா நிக்கிறேனே நான் எல்லாம் எப்படி பொம்பளையா இருப்பேன்” என்றார் சற்றே உயர்ந்த குரலுடன்.

அமைதியாக தான் எது சொன்னாலும் மறு பேச்சு பேசாமல் கேட்டுக்கொண்டிருந்த அருணாவை இது போல ஆங்காரமாக பார்த்த சுகுமாருக்கு உள்ளுக்குள் கொஞ்சம் உதறல் எடுத்தது. ஆனாலும் அதை காட்டிக்கொள்ளாதவர், “என்னடி பழியை என் மேலே போட பார்க்கறியா, வேலை விஷயமா ஆம்பளை அங்கே இங்கே போவாங்க தான் அதை எல்லாம் உன்கிட்டே சொல்லிட்டு இருக்க முடியுமா. அதுக்கு என்னவோ நான் தப்பு செஞ்சவன் மாதிரி பேசிட்டு இருக்க” என்றார்.

“தப்பு செய்யலைன்னா சொல்லிட்டு போக வேண்டியது தானே, இல்லை போன பிறகாவது இங்கே வந்திருக்கேன் இந்த வேலைன்னு சொல்ல வேண்டியது தானே. ஏன் சொல்லலை, தப்பு செய்றவங்க தான் ஃபோன் பண்ணா எடுக்காம இருப்பாங்க” என்றார் அவர் அதிரடியாக.

“அது.. ஏதோ முக்கிய வேலையா இருந்திருப்பேன்”

“ஒவ்வொரு முறையும் அப்படி என்ன முக்கிய வேலை” வக்கீல் மனைவி வக்கீலை மடக்கினாள்.

“அது அது.. என்று தடுமாற,

“இதே போல நான் செய்தா சும்மா இருப்பீங்களா” என்றும் கேட்டிருந்தாள்.

“நீ பேச்சை மாத்தாத, இப்போவே நான் போய் என் பொண்ணை கூட்டிட்டு வரேன்” என்று கிளம்பினார்.

“போங்க ஆனா அவ வர மாட்டா”

“ஏண்டி நான் போக மாட்டேன்ற திமிருல பேசறியா, ஆனா என் பொண்ணுக்கு இது தெரிஞ்ச உடனே என்னை தேடி ஓடி வந்திருவா”

“அப்படியா சரி” என்று எழுந்து சென்று விட்டார்.

“இவளுக்கு எப்படி இவ்வளவு திமிர் வந்தது, என்னை நம்ப மாட்டாளா இவள். இவளை தவிர, இன்னொருத்தியை என்னோட வாழ்நாள்ல நினைச்சி இருப்பேனா நான் என்று பொறுமியவர், இந்த பிரெச்சனையை பிறகு பார்த்து கொள்ளலாம். முதலில் மகளிடம் இந்த போலி கல்யாண சர்டிபிகேட் விஷயத்தை சொல்ல வேண்டும் என்று மேகவினிக்கு போன் செய்தார்.
 

Advertisement

Advertisement

Back
Top