என் ஆயுள் ரேகை நீயடி 23

Advertisement

Sagee Elumalai

Member
Member
Chapter 23
உன்னிடம் சொல்ல
ஓராயிரம் கதைகள் கொட்டி கிடக்கிறது,
நேரமுள்ளை பின்னிழுத்து நிறுத்தி வை..

என் ஆயிரத்து ஓரு இரவுகள் முடியட்டும்...

காலையில் தாத்தாவின் அறையில் அமர்ந்து இருந்தாள் மேகவினி, “என்னம்மா எல்லாம் பேசிட்டியா” என்றார் அவர்.

ஆம் என்பது போல தலையசைத்தாள்.

“உன் பாட்டி தான் உங்க யாரையும் பார்க்காம போய் சேர்ந்துட்டா. நானும் அப்படியே” என்றவரை இடையிட்டவள்,

“தாத்தா அப்படி எல்லாம் எதுவும் ஆகாது, சரியா. நிம்மதியா இருங்க, உங்க கண்ணு முன்னாடியே நம்ம குடும்பம் மொத்தமும் ஒண்ணா இருப்போம்” என்றாள் உறுதியாக.

அன்றொருநாள் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தவள், வெளியே வந்தாள். ஏனென்றே தெரியாமல் அவள் வெளியே வந்திருக்க, அறைக்குள் இருந்து இருமல் சத்தம் வந்தது. அதை கேட்டதும் ஓடி சென்று பார்த்தாள்.

வேதாசலம் உறக்கத்திலேயே இருமிக்கொண்டிருந்தார். அவர் அருகில் சென்றவள் ஒரு நொடி என்ன செய்வதென்று நிதானித்து, அருகில் இருந்த தண்ணீரை எடுத்து அவருக்கு கொடுத்தாள். அதன் பிறகு உறக்கம் கலைந்தவர் இவளை பார்த்து கண்கள் கலங்கினார்.

“உனக்கு எங்க மேலே எல்லாம் கோபம் தானேடா” என்று கேட்டார்.

இல்லை என்று தலையசைத்தவள், "இதெல்லாம் எதுக்கு நடக்குதுன்னு தெரியாம இருக்கிறது தான் கோபமா இருக்கு” என்றாள்.

இத்தனை நாட்கள் அறைக்குள்ளேயே இருந்ததா, இல்லை மனம் விட்டு யாரிடமும் பேசாத அவளின் சூழ்நிலையா என்னவென்று தெரியவில்லை, தாத்தாவிடம் அவளறியாமலே பேசிக்கொண்டிருந்தாள்.

“பேராண்டி உன்கிட்டே எதுவும் சொல்லலையா” என கேட்டார்.

இல்லை என்று தலையசைத்தாள்.

“நீ கேட்டியா” என்று கேட்டார்.

அதற்கும் இல்லை என்று தலையாட்டினாள்.

“பேசுடா, இங்கே யாரும் கெட்டவங்க இல்லை, பேசினா அடுத்தவங்க நிலையிலே இருந்து பார்க்க முடியும்” என்றார்.

சரி என்பது போல தலையசைத்து கொண்டு எழ போனவள், அப்படியே அமர்ந்து கொண்டு “நீங்க சொல்வீங்களா தாத்தா” என்று கேட்டாள்.

கனிவாக அவளை பார்த்தவர், கூறிய விவரங்கள் தான் அனைத்தும்.

இன்றும் பொதுவாக, அம்மா தம்பி என்று பேசிகொண்டிருந்தவள், கதவு படக்கென திறக்கவும் திரும்பி பார்த்தாள்.
இவளை அங்கே எதிர்பாராத அகல்யா திகைத்து திரும்பி செல்ல போக, “அகல் நில்லு” என்று அவளை நிறுத்தினாள்.

அவள் நின்றாலே தவிர திரும்பி பார்க்கவில்லை, எழுந்து அவளருகில் சென்றவள், "என்கிட்டே பேச மாட்டியா", என்று கேட்டாள்.

அவள் அமைதியாக இருக்கவும், “இந்த வீட்டுலே எனக்கு இருக்கிற ஒரே ஃப்ரெண்ட் நீ மட்டும் தான்” என்றாள் பாவமாக.

படக்கென திரும்பியவள், “அப்போ என்னோட சொந்தங்கள் எல்லாம் உங்களுக்கு எதிரி அப்படித்தானே” என்று கேட்டாள்.

“அப்படி இல்லை அகல்”, என்று அவள் சொல்லும்போதே, “அகல்மா கவி உன்னோட அண்ணி தானே இப்படியா பேசுவ” என்று மெதுவாக கேட்டார் வேதாசலம்.

"உங்களுக்கு தெரியாது தாத்தா, இவங்களுக்கு நம்ம யாரையும் பிடிக்கலை, எதிரி மாதிரி பார்க்கறாங்க. அதுவும் நம்ம அண்ணனை சுத்தமா பிடிக்கலை தெரியுமா” என்றாள் விசும்பலோடு.

மேகவிக்கு என்னவோ போல ஆனது, “நாம தான் இவங்க எல்லாம் எப்போ இங்கே வருவாங்க, எல்லாரும் ஒண்ணா இருக்கலாம்னு ஆசையா ஏங்கிட்டு இருந்தோம். ஆனா இவங்களுக்கு நாம எல்லாம் இருக்கிறதே தெரியலை. தெரிஞ்ச பிறகும் நம்ம கூட இருக்க விரும்பலை” என்று கண்ணீர் சிந்தினாள்.

மேகவி சட்டென அவளை அணைத்து கொண்டாள், “இப்போ எதுக்கு இப்படி அழற, உன்னை பிடிக்காதுன்னு நான் சொன்னேனா” என்று செல்லமாக கடிந்தாள்.

“ஆனா எங்களை எல்லாம் விட்டுட்டு போகணும்னு நினைச்சவங்க தானே நீங்க” என்றாள் அவள் சிறுபிள்ளை போல.

“அது முதல்ல, இனி நாம எல்லாரும் ஒண்ணா தான் இருக்க போறோம்” என்று அவள் கூற, படக்கென நிமிர்ந்தவள் “பொய் சொல்லாதீங்க” என்றாள் கண்ணை துடைத்து கொண்டே.

“இல்லை நிஜமா தான் சொல்றேன்”

“இல்லை நம்ப மாட்டேன், நீங்க இன்னும் அண்ணன்கூட சமாதானம் ஆகலை”

அட யாருடி இவ, என நினைத்து கொண்டவள், “இப்போ என்ன உன் கண்ணு முன்னாடியே உங்கண்ணன்கிட்டே பேசறேன் போதுமா. அப்போ நம்புவியா இல்லை கட்டி பிடிச்சி முத்தம் கொடுத்தா தான் நம்புவியா” என்று இரண்டாவது கேள்வியை கொஞ்சம் ரகசியமாக அவள் காதருகே வந்து கேட்டாள்.

உடனே முகம் சிவந்தவள், “இல்லை இல்லை முதல்ல சொன்னதே ஓகே தான்” என்றாள் சிரிப்புடன்.

சரி வா, என்று அவள் கையை பற்றி கொண்டவள், "இதோ வந்திடறோம் தாத்தா" என்று வேதாசலத்திடம் கூறிகொண்டு சென்றனர்.

சிறியவர்கள் இருவரும் சிரித்தபடி செல்வதை பார்த்து கொண்டிருந்தவருக்கு இதே போல மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருப்பதை கண்டு விட வேண்டும் என்று தோன்றியது.

வேகமாக மாடி ஏறி சென்றவள், தங்கள் அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள், அவள் வருவதை பார்த்து விட்டு மீண்டும் லேப்டாப்பில் முகம் புதைத்து கொண்ட வீராவின் முன்னே வந்து நின்றாள்.

“மேகவி நான் இப்போ சண்டை போடற மூட்ல இல்லை கொஞ்சம் வேலை இருக்கு” என்றான் அவன் நிமிராமல்.

“சரிங்க, உங்களுக்கு இங்கேயே டிபன் கொண்டு வந்து தரட்டுமா” என்று கேட்டாள் அதீத அன்புடன்.

தன் காதினில் ஒலித்த வார்த்தைகள் சரியாகத்தான் கேட்டேனா என்று நிமிர்ந்து பார்த்தான் வீரா, அவனை நேருக்கு நேராக பார்த்தவள், பின்னால் கண்ணை காட்டினாள். அப்போது தான் வாசலில் அகல்யா நிற்பதை இவன் கவனித்தான்.

“ஓஹ், இப்போ வேண்டாம் மேகவி நானே கீழே வந்து சாப்பிட்டுகிறேன்” என்று கூறினான்.

“சரிங்க அப்போ நானும் அகல்யாவும் சாப்பிட போறோம்” என்று கூறிவிட்டு செல்ல, “ஹே நில்லுடி” என்று அவளை தடுத்தி நிறுத்தினான்.

அவளை நெருங்கி வந்தவன், அவள் இடை பற்றி தன் பக்கம் வளைக்க, “அச்சோ அகல்யா நிக்கிறா” என்று இவள் பதறி வாசலை பார்க்க, அங்கே அகல்யா இல்லவே இல்லை.

உடனே அவனை பார்க்க, அவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்தவன், “என்னடி ஓவரா முறுக்கிகிட்டு இருக்க” என்று அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.

“பின்ன நீங்க பண்ண வேலைக்கு உங்களை தூக்கி வச்சு கொஞ்சுவேன் பாருங்க” என்றாள் அவனை தள்ளி விட்டு கொண்டே.

அப்போது தான் இன்னும் இன்னும் அவளை அழுத்தி பிடித்தவன், “இப்போ என்னடி உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிருக்கணும்னு சொல்றியா” என்றான்.

“ஆஹா வக்கீல்னு நிரூபிக்காதீங்க, கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்னதே தப்பு, இதுல ஆகாத கல்யாணத்தை ஆகிடுச்சுன்னு சொன்னது அதை விட தப்பு” என்றாள் அவள்.

“இல்லைடி என்ன இருந்தாலும் ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை ஏமாத்தி கல்யாணம் பண்றது எல்லாம்... எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கா, அவளை யாராவது இந்த மாதிரி ஏமாத்தினா நான் சும்மா விடுவேன், அந்த மாதிரி தானே எல்லா பொண்ணுங்களும்” என்றான்.

அவள் அவனையே பார்த்து கொண்டிருக்க “என்னடி” என்றான்.

“யாருய்யா நீ” என்றாள் போலி ஆச்சரியத்துடன்.

“ஏய் பொண்டாட்டி கலாய்க்கிற பார்த்தியா", என்றான் பாவமாக முகத்தை வைத்து கொண்டு.

“ஹலோ பொண்டாட்டி கிண்டாட்டி சொன்னீங்க கொன்னுடுவேன் உங்களை, என்ன நினைச்சி இதெல்லாம் செய்தீங்க”

“அது உன்னை விடவும் மனசில்லை, அதுக்காக வலிய ஏமாத்தி கல்யாணம் பண்ணவும் மனசில்லை அதான் ஒரு பொய் சொல்லியாவது உன்னை கரெக்ட் பண்ணலாம்னு”

“ஒரு பொய்யா, ஒரே ஒரு பொய் தான் சொன்னீங்களா, வாயை திறந்தா பொய். வக்கீலா இருந்துகிட்டு பொய் சொல்லலாமா என்றாள்.

“ஹே பொய் சொன்னது உன்னை காதலிக்கும் காதலன் வீரபத்ரன். வக்கீல் தொழில்ல நான் ரொம்ப சுத்தம்மா” என்றான் காலரை தூக்கி விட்டு கொண்டு.

“அப்படியா” என்று போலியாக கேட்டவள் அவனை தோள்பட்டை, முதுகு மார்பில் எல்லாம் அடிக்க, அய்யோ அம்மா என்று போலியாக கத்தி நடித்தான் அவன்.

“சும்மாவே கத்தாதீங்க”, என்று அவள் கூறிகொண்டிருக்க, “அண்ணி என்ன செய்யறீங்க, அண்ணனை போய் அடிக்கறீங்க” என்று ஓடி வந்து தடுத்தாள் அகல்யா.

கீழே சென்றவள் மேகவி வராதது கண்டு மீண்டும் அவளை அழைக்க வந்திருந்தாள். அப்போது வீரா போட்ட போலி சத்தத்தில் பயந்து போனவள் அண்ணனை காக்க ஓடியும் வந்திருந்தாள்.

அவர்கள் இருவரையும் பிரித்து விட்டவள், மேகவி மூச்சு வாங்க நிற்பதை கண்டு, “நீங்க சும்மா என்னை ஏமாத்தி இருக்கீங்க. எங்க அண்ணனை உங்களுக்கு பிடிக்கலைதானே” என்று அவள் வேறு அழ துவங்கினாள்.

“அட இவ வேற எதுக்கெடுத்தாலும் அழ ஆரம்பிச்சுடுவா”, என்று சலித்து கொண்டவள், “அகல்யா இது புருஷன் பொண்டாட்டிக்குள்ள செல்ல சண்டை, நீ நினைக்கிற மாதிரி இல்லை” என்றாள்.

அப்போதும் அவள் நம்பாமல் அண்ணனை பார்க்க, அவன் அப்போது தான் என்னவோ அவார்ட் வாங்க போகும் ரேஞ்ச்க்கு நடித்து கொண்டிருந்தான்.
“அண்ணி நீங்க உண்மையா தான் சொல்றீங்களா, நீங்க ரெண்டு பேரும் சமாதானமா தான் இருக்கீங்களா” என்று நம்பாமல் கேட்டாள்.

இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என்று நினைத்தவள், அகல்யா முன்பே கணவனின் முகத்தை பற்றி இழுத்து நெற்றியில் முத்தம் வைத்தாள்.

விழிகள் விரிய, அகல்யா அவளை பார்க்க, “போதுமா, இல்லை” என்று இழுத்து கேட்க,

“ச்சீ போங்க அண்ணி” என்று அவள் ஓடி விட்டாள்.

“நான் தானே முத்தம் கொடுத்தேன் இவ ஏன் வெட்கப்படறா” என்றபடியே திரும்பி பார்த்தவள் அங்கே ஒருவன் பார்வை மாற நின்று இருந்ததை கண்டு “அய்யோ நான் போறேன்” என்று அவளும் ஓடி இருந்தாள்.

அவளை பார்த்து புன்னகைத்து கொண்டே நின்றான் அவன்.
 

Advertisement

Advertisement

Back
Top