என் ஆயுள் ரேகை நீயடி 7

Advertisement

Sagee Elumalai

Member
Member
Chapter 7
நெருங்கி விட்டேன் என்று மகிழும்போது
விலகி போனாய்,
விலகிவிட்டேன் என்று நினைக்கும்போது
நெருங்குகிறாய்...
உன் கையில் விளையாட்டு பொம்மையாக
மாறி நிற்கிறேன்,
விளையாட்டு முடிந்ததும்
வீதியில் வீசி விடுவாயா

என்னை...

ஏழுகடல் ஏழுமலை தாண்டி நீண்ட தூரம் பயணித்தது போல இருந்த பயணத்தில் ஒரு வார்த்தை கூட அருகே இருந்தவனிடம் பேசவில்லை மேகவி. ஏன் அவன் பக்க கூட திரும்பவில்லை, நிலைத்த பார்வையாக நேர்பார்வை பார்த்து கொண்டு வந்தவளை அவனும் ஏதும் கண்டுகொள்ளவில்லை.

கொந்தளித்துக்கொண்டிருந்த அவள் மனநிலைக்கு, அவன் எது பேசினாலும் கூட அது தவறாகவே முடிந்து விடும் என்று நினைத்தானோ என்னவோ அவனும் இறுக்கமாகவே வந்தான்.

இடையில் உணவுக்காக நிறுத்தி விட்டு, “சாப்பிடலாம் இறங்கு” என்றவாறு அவன் கதவை திறந்து விட, வெடுக்கென அவன் கையில் இருந்து கதவை பிடுங்கி வேகமாக சாற்றியவள் இருந்த தோரணையிலேயே அமர்ந்து கொண்டாள். அதில் உன்னுடன் வர நான் தயாராக இல்லை என்ற அறிவிப்பு இருந்தது.

ஒரு நொடி அவளையே பார்த்தவன் உணவகத்தின் உள்ளே சென்று விட்டான். எதிர் திசையை வெறித்து கொண்டு அமர்ந்து இருந்தவளுக்கு கண்ணை கரித்து கொண்டு வந்தது.

அப்பாவின் முன்னே அவளுக்கு எத்தனை தலைகுனிவை ஏற்படுத்தி விட்டான். ஏதோ அவனை காதலித்து திருட்டு தனமாக மணந்து கொண்டதை போல அவன் செய்த செயலில் கூனி குறுகி அல்லவா போய்விட்டாள்.

என்னவோ அவள் தந்தை அவளை விளங்கி கொண்டார். இல்லை என்றால் இந்த பழிசொல்லுக்கு ஆளாகி அவள் உயிருடன் தான் இருந்திருப்பாளா. நினைக்க நினைக்க மனம் கொதித்தது.

இது எல்லாவற்றையும் விட இதற்கெல்லாம் அவளை பெற்றவளே துணை போனதை தான் அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

அவனாவது பரவாயில்லை எங்கிருந்தோ வந்தவன், ஆனால் பெற்ற தாய்க்கு பிள்ளை மேல் கொஞ்சம் கூட அக்கறை இல்லையே, இப்படியா ஊர் பேர் தெரியாத ஒருவனிடம் மாட்டி விடுவாள் என்று மனம் கசந்து போனது.

ஏன் தெரியாமல், அவருக்கு தான் தெரியுமே அவன் ஊர் பெயர் எல்லாம் தெரியுமே தந்தைக்கு ஆகாதவன் என்று தெரிந்தும் கூட தானே எல்லாம் நடந்தது. திட்டமிட்டு அவனை இங்கே வரவழைத்து அவனுடன் பழக வைத்து என்னவெல்லாம் நாடகம் நடத்தி இருக்கிறார்கள்.

மனதின் கொதிப்பை அடக்க முடியாமல் கதவை திறந்து கொண்டு இறங்கி சென்று விட்டாள்.

கையில் தண்ணீர் போட்டில், சில பாக் செய்த உணவுகள் என்று வாங்கி கொண்டு வந்தவன் காரில் அவள் இல்லாததை கண்டு அப்படியே நின்று விட்டான்.

ஒரு நிமிடம் செயலற்று நின்றவன் அடுத்த நொடியே அங்கும் இங்கும் பார்வையை சூழலவிட்டு தேடிட, ரெஸ்ட்ரூமில் இருந்து முகத்தை துடைத்து கொண்டே வெளியே வந்தாள் அவன் மனைவி.

கண்ணை மூடி தன்னை நிதானித்து கொண்டவன் என்ன உணர்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை. நிதானமாக வந்து கார் கதவை திறந்து ஏறி அமர்ந்தவளை தீ பார்வை பார்த்தவன், கையில் இருந்ததை எல்லாம் பின் இருக்கையில் வீசிவிட்டு, முன் பக்கம் ஏறி அமர்ந்து கதவை டம் என்று சாற்றினான்.

அவள் கொஞ்சம் கூட அசரவே இல்லை, உன் கார் உடைப்பது என்றால் உடைத்து கொள் எனக்கென்ன என்ற ரீதியில் அமர்ந்து இருந்தாள்.

“எங்கேயாவது போறதுனா சொல்லிட்டு போகனும்னு உங்க அப்பா சொல்லி கொடுக்கலையா” என்றான் காரசாரமாக.

அப்பாவை பற்றி பேசியதும் வெடுக்கென கோபம் வந்தாலும் நிதானமாக அணிந்திருந்த சேலையை சரி செய்து கொண்டவள், “உங்க அத்தையும் சொல்லி கொடுக்கலை” என்றாள் பதிலடியாக.

“ஒரு அம்மாவா அதெல்லாம் சொல்லி கொடுக்க அவங்களை முதல்ல நீங்க அம்மாவா நினைச்சா தானே, ஏதோ சமையல் செய்யவும், வீட்டு வேலை செய்யவும் வீட்டோட இருக்கற சம்பளம் வாங்காத வேலைக்காரி மாதிரி தானே நடத்தினீங்க”.

இப்படி அவன் சொல்லவும் வெடுக்கென நிமிர்ந்தவள்,
“அப்படினு அவங்க சொன்னாங்களா” என்றாள்.

“குடும்ப பிரெச்சனையை வெளியே சொல்ற குடும்பத்துல அவங்க பிறக்கலை. அப்படி சொல்லி இருந்தா என்னைக்கோ எங்க வீட்டுக்கு திரும்ப வந்து ராணி மாதிரி வாழ்ந்திருப்பாங்க”.

“அப்போ நீங்க மை போட்டு பார்த்து தெறிஞ்சுக்கிட்டீங்களோ, வக்கீல் தொழிலை விட அதுல நல்ல வருமானம் போல இருக்கே” என போலியாக வியந்தாள். அவளின் சுவாரஸ்யமான பேச்சில் அவன் முகத்தில் இளநகை துலங்கியது,

“என்னோட வக்கீல் தொழில் நல்லா தான் போய்ட்டு இருக்கு, மை போட்டு ஒரு பொண்ணோட மனசை மயக்க முடியுமான்னு இனிமேல் தான் தெரிஞ்சுக்கனும்” என்றான் கண் சிமிட்டி.

“அதுக்கு நீங்க வேற ஆளை தான் பார்க்கனும்” என்றவள் வேறு பக்கம் திரும்பி கொள்ள, “இனி பார்க்க வேண்டிய தேவை இருக்காதுன்னு நினைக்கிறேன்” என்று முனகலாக சொல்லிவிட்டு வண்டியை எடுத்தான்.

மீண்டும் இருவருக்கும் இடையில் மௌனம் புகுந்து கொள்ள, பயணம் தொடர்ந்தது. சில மணி நேர பயணங்களில் கண்ணயர்ந்து இருந்தாள் மேகவினி.

வண்டி நின்று எவ்வளவு நேரம் ஆனது தெரியவில்லை, திடீரென விழித்து பார்க்க, அவள் அருகே நின்று இருந்தான் அவன்.

“இறங்கு” என்றான்.
இறங்கினாள் அவன் சொன்னதற்காக இறங்கியதில் கொஞ்சம் வருத்தம் தான் அதற்காக காரிலேயே இருக்க முடியாதே.
இறங்கி சுற்று புறத்தை அளந்தாள், பெரிய வீடு சுற்றிலும் தோட்டம் எல்லாம் வைத்து அந்த கால வீடு போல இருந்தது. வாசலிலேயே இரு பெண்கள் ஆரத்தி தட்டுடன் வந்து நின்றவர்களுக்கு ஆலம் சுற்றினார்கள்.

ஆமா இது ஒன்னு தான் குறை என்று அலட்சியமாக நின்று இருந்தாள் இவள்.
அவள் நெற்றியில் திலகமிட முனைய வந்தவளின் கையை தடுத்தவள் “எனக்கு இதெல்லாம் பிடிக்காது” என்றாள்.

அவர்கள் இருவரும் வீராவை பார்க்க, “பரவாயில்லை விடுங்க” என்று விட்டு வா என்பதாக உள்ளே சென்றான்.

அவன் பின்னோடு சென்றவள் வேண்டும் என்றே பார்வையை அலட்சியமாக வைத்துகொண்டு செல்ல, “தங்கம் வாடா கண்ணு” என்று அழைத்தார் ஒரு முதியவர்.
யார் இவர் என்று புருவங்கள் சுருங்கிட அவள் பார்க்க, சற்றே குனிந்து “நம்ம தாத்தா” என்றான் வீரா தணிந்த குரலில்.

அதற்குள் அருகே வந்தவர் அவளை தோளோடு அணைத்து கொண்டார். “இவளை என் கண்ணுல காட்ட இவ்வளவு காலம் கடத்திட்டியே பேராண்டி” என்றார் கண்கள் கலங்க.

அவரை சின்ன முறுவலுடன் பார்த்து இருந்தான் வீரா.
இவள் முகச்சுறுக்கத்துடன் தலையை பின்னுக்கு இழுத்துகொள்ள போக, “டேய் விசு, இங்கே வாடா, வந்து பாரு” என்று சத்தமாக அழைத்தார் அவர்.


“வந்துட்டேன் பா” என்று வேக நடையுடன் ஒருவர் வர, “எங்கப்பா உன்னோட தாய் மாமன்” என்றான் வீரா அதே மெதுவான குரலில்.

செல்லம் என்று அவரும் அவளை அணைத்து கொள்ள, என்னடா இது என்று பின்னோக்கி சென்றாள் மேகவி.

“ஆமா அம்மு எங்கே, அம்மு பாரு உங்க அண்ணி வந்துட்டா” என்று தாத்தா உள்ளே குரல் கொடுக்க, சுடிதார் அணிந்த பெண்ணொருத்தி வேகமாக வந்தாள். அவளும் வந்த வேகத்தில் இவளை அணைத்து கொள்ள, மேகவிக்கு சற்றே கோபம் கூட வந்தது.
‘அய்யோ விடறீங்களா என்னை’ என்று கத்த வேண்டும் போல இருந்தது. நான் என்ன செல்பி பொம்மையா ஆளாளுக்கு வந்து கட்டிபிடிச்சிக்கிறதுக்கு மனதுக்குள் முனுமுனுத்து கொண்டிருக்க "அம்மா எங்கே அகல்" என்று வீரா கேட்க, அம்மா அம்மா என்று அழைத்தாள் அந்த பெண்.

இன்னும் முடியலையா என்று தன்னை பற்றி இருந்தவள் கையை மெதுவாக விலக்கி விட்டு கொண்டே பார்க்க, நிதானமாக உள்ளிருந்து வந்த ஒரு பெண்மணி அவ்வளவு ஒன்றும் ஆர்வமாக அவளை எதிர்பார்க்கவில்லை என்பதை தனது உடல் மொழியிலேயே தெரிய படுத்தினார்.

அவர் சாதாரணமாக வந்து நின்றது இவளுக்கு நல்லதாக போனது. இவங்களும் வந்து என்னை கட்டி பிடிக்கலை என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள்.

“என்ன மீனா இது வந்த புள்ளைங்களை வாசல் வரைக்கும் வந்து வரவேற்காம உள்ளே என்ன பண்ணிக்கிட்டு இருந்த” என்று பெரியவர் கேட்க, “கொஞ்சம் வேலையா இருந்தேன் மாமா” என்று அவருக்கு பதிலளித்தவர் முகம் கொஞ்சமும் அவள் வந்ததில் விருப்பமில்லை என்பதையே காட்டியது.

“அது சரி இந்தம்மாக்கு நம்ம இங்கே வந்தது பிடிக்கலை போல இருக்கே” என்று உள்ளே கொஞ்சம் உற்சாகம் குமிழிட்டது மேகவினிக்கு.
ஆனாலும் “வாம்மா” என்று சம்பிரதாயமாக வரவேற்றார்.

“மாடிக்கு போய் குளிச்சுட்டு வாங்க சாப்பிடலாம்” என்றார் கடமையே என்று.

“அண்ணி வாங்க என்று அந்த அகல்யா இவள் கை பற்றி கொள்ள, விடுங்க நானே வரேன்” என்று நாசூக்காக கையை விலக்கி கொண்டாள் மேகவினி.

அவள் ஒன்றும் கணவன் முகம் பார்த்து அவன் பதிலுக்காக காத்திருக்க வில்லை என்றாலும், “நீ போ நான் வரேன்” என்று கூறினான் வீரா.

ஆமா இவரை இப்போ கேட்டேன் பாரு என்று நினைத்தபடியே முன்னே சென்ற அகல்யாவின் பின்னே சென்றாள்.

அவள் மேலே சென்றதும், “என் பொண்ணு எப்படிப்பா இருக்கா” என்று பெரியவர் கேட்க, "ஒண்ணும் பிரெச்சனை இல்லை தாத்தா அத்தை நல்லாவே இருக்காங்க” என்றான் அவன்.

“எப்படிப்பா இந்த பிரெச்சனைக்கு அப்புறம் அவ அங்கே நிம்மதியா இருக்க முடியும், எப்படியாவது என்னோட பொண்ணையும் என் கூட சேர்த்து வச்சிரு கண்ணா” என்றார் அவனிடம் மன்றாடலாக.

“தாத்தா நான் உங்களுக்கு வாக்கு கொடுத்திருக்கேன் நிச்சயம் அதை நிறைவேத்துவேன்”, என்றவன் தன் தாயை தேடினான். அங்கே அவரில்லை, என்றதும் “இதோ வந்திடறேன்” என்று அவசரமாக சென்றான்.

அங்கே சமையல் அறைக்கு பின் புறம் இருந்த இடத்தில் அமர்ந்து இருந்தார் மீனாட்சி. நேராக அவரிடம் சென்றவன் “என்னம்மா இங்கே உட்கார்ந்து இருக்கீங்க” என்று அவர் தோளில் கை வைத்தான்.

அவன் கையை மெதுவாக விலக்கி விட்டவர், “உனக்கு இந்த அம்மா நினைப்பு கூட இருக்கா வீரா” என்றார் எங்கோ பார்த்து கொண்டு.

“அம்மா ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க”

“உங்க தாத்தா சொன்னதும் என்ன ஏதுன்னு இல்லாம கிளம்பி போய் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிக்கிற, அப்போ இந்த அம்மாவை பத்தி கொஞ்சம் கூட நீ யோசிக்கலை தானே. இந்த வீட்டையும் உன்னையும் பொருத்தவரைக்கும் என்னோட விருப்பம் முக்கியமில்லை அப்படித்தானே” என்றார் தொண்டை அடைக்கும் குரலில்.

“அம்மா என்ன பேச்சு இது” என கொஞ்சம் அதிர்ந்தான் வீரா.

“ஆமா உன்னோட அத்தைக்காரிக்கு அங்கே பிரெச்சனை போன, அதை சரி பண்ணிட்டு வர வேண்டியது தானே. இங்கே என்ன நிலைமை எல்லாமே தெரிஞ்சும் கூட அவ மகளை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்திருக்க. அப்போ ராகவிக்கு என்ன பதில் சொல்ல போற, சாகும்போது எங்கண்ணணுக்கு நான் கொடுத்த வாக்குக்கு நான் என்ன பதில் சொல்லட்டும். உன் அத்தை மட்டும் தான் உனக்கு உறவா, அப்பா இல்லாத ராகவி மேலே உனக்கு எந்த அக்கறையும் இல்லையா. இல்லை இந்த அம்மாவோட வாக்கு மேலே உனக்கு பொறுப்பில்லையா” என்றார் வேக மூச்சுடன்.

“அம்மா கொஞ்சம் அமைதியா இருங்க எதுக்காக இப்படி பதட்டப்படறீங்க. தாத்தாவோட ஆசைம்மா இது, அதை எப்படி என்னால நிராகரிக்க முடியும்”

“அப்போ ராகவிக்கு என்ன பதில் சொல்ல போற”

“அவகிட்டே நான் பேசிக்கிறேன்” என்றான் முடிவாக.

“எப்படி அவ மனசுல இருக்கிற ஆசை எல்லாம் எடுத்து எறிஞ்சுட்டு நீ சொல்றதை கேட்டுப்பாளா”

“அம்மா நடந்ததை மாத்த முடியாது இன்னும் ஒரு வருஷம் தான் எனக்கிருக்க அவகாசம் அதுக்குள்ள நான் எல்லாத்தையும் சரி பண்ணனும். நீங்களே புரிஞ்சுக்காம பேசினா எப்படி” என்றான் தன்னிலையை விலக்கிடும் வேகத்துடன்.

“ஆமாடா உன்னோட நிலைமை, உன் அத்தையோட நிலைமை, உன் தாத்தாவோட நிலைமை எல்லாரை பத்தியும் நான் புரிஞ்சு வச்சிக்கனும். ஆனா என்னை பத்தி என்னோட ஆசையை பத்தி எல்லாம் இங்கே யாருக்குமே அக்கறை கிடையாது. எங்கே உங்கப்பாவுக்கே என் மேலே அக்கறை இல்லையே அப்புறம் தானே பெத்த புள்ளைக்கிட்டே அதை எல்லாம் எதிர் பார்க்க முடியும். ஆனா நீ இப்படி என்னை ஏமாத்துவேன்னு நான் நினைக்கவே இல்லைடா” என்றான் கண்ணீரை துடைத்து கொண்டே.

“அம்மா பிளீஸ் மா”, என்று அவரை சமாதானம் செய்தான் அவன். வெளியே மிடுக்காய் இருந்த ஒருவன் அன்னை என்று வருகையில் அவர் கண்ணீரை காணுக்கையில் வெயிலில் வைத்த நெய் போல உருகித்தான் போனான்.

“இத்தனைக்கும் அவ என்ன உன்னை பிடிச்சா கல்யாணம் பண்ணிக்கிட்டா இல்லையே, அவங்க அப்பனை காப்பாத்த தானே உன் கூட வந்திருக்கா. ஆனா ராகவி உன்னையே நினைச்சுட்டு சரியா சாப்பிடாம தூங்காம இருக்கா. அவ நிலைமையை யோசிச்சியா. சின்ன வயசுல இருந்தே உன்னை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு ஆசை ஆசையா இந்த வீட்டையே சுத்தி வந்தவ. இந்த விஷயம் கேள்வி பட்டதுல இருந்து இந்த பக்கமே வரலை, எங்க அண்ணி ஏதோ என்னை ஏமாத்துக்காரி மாதிரி பார்க்கிறாங்க. எங்கண்ணன் நான் செத்ததும் என்னோடவே எனக்கு செய்து கொடுத்த சத்தியத்தையும் சேர்த்து புதைச்சுட்டியான்னு கேட்கிற மாதிரி இருக்கு. நிம்மதி இல்லாம அல்லாடிக்கிட்டு இருக்கேன்” என்றார் கண்ணீரை துடைத்து கொண்டு.

ஒரு கட்டத்தில் அவர் பேசுவதை கேட்க முடியவில்லை அவனால், “அம்மா போதும் ஏற்கனவே இதை பத்தி நாம பேசிட்டோம். நடந்ததை மாத்த முடியாது, வேற என்ன செய்யலாம்னு தான் யோசிக்கனும். திரும்ப திரும்ப அதையே பேசி பேசி உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்காதீங்க. வாங்க” என்று அவரை பிடிவாதமாக அழைத்து கொண்டு சென்றான்.

அதற்கு மேல் அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்ன என்று மேகவிக்கு கேட்கவில்லை, ஆனால் கேட்டவரைக்கும் இங்கே அவள் வந்தது நிஜமாகவே அந்த வீராவின் அன்னைக்கு பிடித்தமில்லை. அதுவும் அவன் ஏற்கனவே ராகவி என்ற பெண்ணை மணக்க இருந்திருக்கிறான். அதை மறைத்து அவளை மணந்து கொண்டிருக்கிறான். இது போதாதா ஒரு வருட அவகாசம் தேவையே இல்லையே. அவளுக்கு சரியான ஆதாரம் ஒன்று கிடைத்தால் போதும் அவனுக்கும் அந்த ராகவிக்கும் தொடர்பு இருப்பதை உறுதி செய்வது போல ஏதாவது கிடைத்து விட்டால் அதை வைத்து அவனை பிரிந்து தந்தையிடம் சென்று விடலாம் என்று அவள் வக்கீல் மூளை விவகாரமாக வேலை செய்தது.

அகல்யாவுடன் மாடி அறைக்கு சென்றவள், அவள் இவளுக்கான உடைகளை எடுத்து வருகிறேன் என்று கீழே சென்று விட, ஜன்னல் வழியாக வெளிப்புறத்தை பார்த்து கொண்டிருந்தாள். நல்ல பெரிய வீடு, அதற்காக ஜமீன் அரண்மனை என்று எல்லாம் சொல்ல முடியவில்லை, பழைய வீட்டை இப்போதைக்கு ஏற்றது போல மாற்றி அமைத்து இருந்தார்கள்.
வீட்டை சுற்றிலும் கூட நிறைய இடம் இருந்தது, யாரோ ஒருவர் தோட்டகாரர் போல அங்கே செடிகளை நடுவது போன்ற வேலையை செய்து கொண்டிருந்தார். வீட்டிற்குள் வரும்போது இருந்த இரு பெண்களில் ஒருத்தி வீட்டின் பின் பக்கம் துணிகளை உலர்த்தி கொண்டிருந்தாள். வாசலிலேயே இவன் காரை தவிர்த்து இன்னொரு காரும் ஒரு பைக், ஒரு ஸ்கூட்டி இருந்தது. அலட்சிய போக்காய் காட்டிக்கொண்டாலும் இவை எல்லாம் அவள் பார்வையில் படத்தான் செய்தது.

அப்போது தான் தாயும் மகனும் பேசிக்கொண்டது காற்றில் கசிந்து வந்து அவள் காதுகளில் விழுந்தது.
தன்னையும் தன் தந்தையையும் மன உலைச்சலுக்கு ஆளாக்கியவர்களை கொஞ்சம் ஆட்டி படைக்க இது ஒரு சிறந்த வழி தான் என்று தனக்கான வியூகத்தை வகுத்து கொண்டாள் மேகவினி.
 

Advertisement

Advertisement

Back
Top