Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன்முகமே' அத்தியாயம் 13

Advertisement

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 13

அத்தியாயம்: 13

“நீ அவளைத் திருமணம் செஞ்சா வாழ்நாள் பூரா அந்தச் சிலுவையை சுமக்க வேண்டி வரும்!” இது கௌதமின் அம்மா கூறிய கூற்று! அதையே தாமரை கூறி அவன் கடந்த கால ஞாபகங்களை மேலும் கிளறிவிட்டாள்.

“நீ ஏம்மா அப்படி சொல்ற?” இது கௌதம் தன் அம்மாவிடம் கேட்ட கேள்வி. அதற்கு அம்மா இப்படி பதில் கூறினார்கள்!

“ஒரு ஆணோ பெண்ணோ காதலிப்பதில் தப்பே இல்லப்பா, நானும் உங்கப்பா விசுவும் காதலிச்சு கல்யாணம் பண்ணினவுங்கதான், ஆனால்,,,,”

“ஆனால்,,, என்னம்மா, உன் மனசில் பட்டதை பளிச்சுனு சொல்லுமா!” அத்துடன் அந்தப் புதிய ஞாபகங்கள் பாதியில் பறிக்கப்பட்டு அந்தரத்தில் தொங்கியது! அவனை அறியாமல் அவன் ரயிலில் கத்தத் தொடங்கினான்.

“நோ மா! உன் வாயால் அப்படிலாம் சொல்லாதம்மா, நோ! நோ மா, நோ மா!” கௌதம் தலையைக் குலுக்கிக் கொண்டே தன் தாயிடம் மன்றாட, பவி அப்பா! அப்பா! என்றழைக்க, தாமரை அவனைப் புளிய மரத்தை உலுக்குவது போல் உலுக்கத் தொடங்கினாள்

இன்னும் சில ஃபைல்கள் அவன் மூளைக்குள் கொட்டத் தொடங்கின, ஆனாலும் அவை இன்னும் முழுமை பெறவில்லை! கண்திறந்து தாமரையை வெறித்து நோக்கியவன்,

“நீ மறுபடியும் எனக்கு ஹெல்ப் பண்ணி இருக்க தாமரை! என் காதல் வாழ்க்கையைப் பத்தி, காதலி பத்தி என் அம்மாவிடம் பேசினதுனு இன்னும் பல விஷயங்கள் என் ஞாபகக் கிட்டங்கியில் சேரத்தொடங்கி இருக்கு! அந்த ஞாபகங்கள் அனைத்துமே என் பெற்றோரோடு சம்பந்தப்பட்டவையாகத்தான் இருக்கு! ஆனால் சிந்துவுடனான என் வாழ்க்கை இன்னும் கிடைக்கவில்லை!”

“எப்படி சார்? நான் உங்க ஞாபகங்களைத் தூண்டுற மாதிரி அப்படி என்ன சொன்னேன்!?” கேள்வியோடு அவனைப் பார்க்க,

உனக்காக உன் சிலுவையை சுமப்பவள் அவள்தான்!’ என்று உன் அக்கா பத்தி மாமாகிட்ட சொன்னியே!” அங்கதான் நீ ஸ்கோர் பண்ற!

“நான் என் காதலியைப் பத்தி அவளைத் திருமணம் முடிக்க நினைப்பது பத்தி அம்மாக்கிட்ட பேசும்போது அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா? ‘வாழ்நாள்பூரா நீ அந்தச் சிலுவையை சுமக்க வேண்டி வரும்னு’ சொன்னாங்க

எல்லா நினைவுகளையும் ஒண்ணா குமிச்சு வைங்க, நாம ஒவ்வொரு இதழாப் பிரிச்செடுப்போம், மறக்கத் தெரிஞ்ச மனசுக்கு கண்டிப்பா ஒரு நாள் நினைவுகளைத் திருப்பிக் கொண்டு வரவும் தெரியும்!

“நீ என்ன? அந்தச் சினிமாப் பாட்டை உல்டாவா பாடுற?” எப்படி தாமரை இவ்வளவு அழகா என் மனசைப் படிக்கிற, சொல்லப் போனா, நான் என் குழந்தையைத் தூக்கிக்கிட்டு என் மனைவி இல்லாம டில்லியிலிருந்து சென்னை வரும் ஃப்ளைட் ஏறினப்போ நான் பாடின கடைசி பாட்டு இதுதான். மனமே! என் ஞாபகங்களைக் கொன்றுவிடு, நான் எல்லாத்தையுமே மறக்க நினைக்கிறேன்!” என்று வேண்டிக் கொண்டு,

“நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே உனக்குப் பிரியத் தெரியாதா?”


என்ற பாட்டைத்தான் மனசுக்குள்ள பாடினேன்! ஆனால் எதை மறக்க நினைச்சேன்? யாரைப் பிரிய நினைச்சேன்? ஏன் பிரிய நினைச்சேன்னு? எனக்கு இன்னும் தெரியலை! என் ஞாபகங்களைக் கொன்றுவிடுனு அந்த ஃப்ளைட் ஏறும்போது இறைவனிடம் வேண்டினேன் பாரு! அவர் என் வேண்டுதலுக்கு செவி சாய்த்து என் ஞாபகங்களைக் கொன்று விட்டார்னு நினைக்கிறேன்!”

“அது உங்களோட மெய் ஞானம் கூறுவது! ஆனால் விஞ்ஞானம் என்ன சொல்லுதுனா, “நீங்க சொன்னதை சரியா புரிஞ்சுகிட்டு உங்க மூளை அது தன் வேலையைப் பார்த்திருக்கு! நீங்க மறக்கணும்னு நினைச்ச நிகழ்வுகள் அனைத்தும் இப்ப உங்களுக்கு மறந்து போயிருக்கு! அது நல்ல நினைவுகளா இருந்தா கண்டிப்பா அது தூண்டப்பட்டிருக்கும்! சரியான தூண்டுகோலால் தூண்டப்படும்போது அந்த நினைவுகளும் வரும்,! நீங்க மறக்குறதுக்குள்ள வேறு என்ன எல்லாம் ஞாபகம் வந்ததோ அதைச் சொல்லுங்க!”

“என் கதை இருக்கட்டும்! நீங்க டில்லில எங்க? என்ன வேலை பார்க்கிறீங்க? என்ன படிச்சிருக்கீங்க தாமரை?”

“நான் உயிரிதொழில் நுட்பவியலில் மாஸ்டர் டிகிரி முடிச்சிட்டு டில்லி பக்கத்துல நொய்டாவில் ஒரு பெரிய விஞ்ஞான தொழில் நுட்பக்கம்பனியில விஞ்ஞான ஆராய்ச்சியாளரா வேலை பார்க்கிறேன். நான் என் அக்காவைப் பத்தி ஏற்கனவே சொல்லியிருக்கேன் இல்லையா? அதி புத்திசாலி, ஆனால் அதிகம் படிக்கலைனு அவளுக்கும் சேர்த்து நான் சந்தோஷமாப் படிச்சேன்.

நான் வளர, வளர என் அக்காவின் துன்பங்களும் சேர்ந்து வளர்ந்துச்சு, நொய்டாவில் முதலில் பயிற்சிக்காகத்தான் எங்க கம்பனி சார்பில் அனுப்பி வச்சாங்க, ஆனால் அப்பா, அம்மா, அக்கா மாமியார், அக்கா புருஷன் இவங்கக் கிட்ட என்னோட அக்கா படும்பாட்டைப் பார்க்க சகிக்காமத்தான் அங்கேயே செட்டில் ஆயிட்டேன்.

என்னை மாமாவுக்குக் கட்டிவைக்க எல்லாருமா சேர்ந்து போட்ட பிளானை ஒரு முடிவுக்கு கொண்டுவரணும்னுதான் அவங்க சொன்ன எல்லாத்துக்கும் தலை ஆட்டிக், கல்யாணம் வரைக்கும் போய் எல்லாருக்கும் நல்லா ஆப்பு அடிச்சிட்டு திரும்பி வந்துக்கிட்டிருக்கேன்! இனிமேல் அத்தான் ஜென்மத்துக்கும் வேறொரு பெண்ணைக் கட்ட நினைக்க மாட்டார்!” அதைக் கேட்ட கௌதம் விழுந்து விழுந்து சிரித்தான்.

“நீ பலே கெட்டிக்காரி தாமரை ஒரே கல்லுல ஏழெட்டு மாங்காயை அடிச்சுப் போட்டுட்டு ஓடி வந்திருக்க?!”

“இப்ப நான் நொய்டாவுக்கு வேலைக்கு வந்து மூணு வருஷம் ஆச்சு! சரி உங்க கதைக்கு வருவோம் தோழரே உங்களோட கூடப் பிறந்தவுங்கன்னு யாருமே இல்லையா?!” ம்,,, அவன் யோசிக்கலானான்.

ஒருநாள் என் அம்மாவிடம் இதே கேள்வியைக் கேட்டேன்.

“ஏம்பா வம்பிழுத்துச் சண்டை போட எனக்கு ஒரு தங்கையோ தம்பியோ இல்லாமப் பண்ணிட்டீங்க!?”.

“வேலைக்கும் போய்க்கிட்டு, உன் ஒருவனை தாலாட்டி, சீராட்டி வளர்த்து எடுக்கிறதுக்குள்ளையே எங்களுக்கு நொக்குக் கழண்டு போச்சுடா! அப்பவெல்லாம் இப்ப மாதிரி முக்குக்கு முக்கு மழலையர் காப்பகங்களோ; குழந்தைகளுக்கான விளையாட்டுப் பள்ளிகளோ; இல்லை பால்வாடிகளோ இருந்ததில்லை!

பல நாட்கள் இரவு வேலை முடித்துக், களைத்துச் சோர்ந்து பகலில் வீட்டிற்கு வந்து நான் அயர்ந்து தூங்கும் பொழுது என் கை வளைக்குள்ள நீ தூங்கி இருக்கடா! உன் பிஞ்சுக் கரங்களைத்தான் எனக்குப் பாதுகாப்பா நான் போட்டுக்குவேன்! உன்னை நம்பி நான் அயர்ந்து தூங்கிப் போயிருவேன்! பல நாட்கள் ரெயில்வே ஸ்டேஷனோ, இல்லை உன் அம்மா வேலை பார்த்த தபால் நிலையமோதான் உன் விளையாட்டு மைதானமாய் இருந்திருக்கு!

“ஸோ நான் என் பெற்றோருக்கு ஒரே செல்ல மகன்! அதோடு நான் காதலித்து திருமணம் புரிந்து கொண்டவன் என்பதும் என் பெற்றோர் பற்றிய நினைவுகளிலிருந்துதான் எனக்குத் தெரிந்தது.

ஆனால் உங்க நினைவுகள் திரும்பத் தொடங்கியவுடன், “அன்று நடு இரவில் தன் மனைவியையும் குழந்தையையும் துறந்த சித்தார்த்தனைப் போல் சொல்லாமக் கொள்ளாமக் காதலியைத் துறந்து ஓடி வந்துட்டீங்க இல்லையா?” தாமரை கிண்டலாய் கேள்வி கேட்க,

“ஐயையோ தாமரைப் பெண்ணே! என்னை அந்த மஹானோடு ஒப்பிடுவது மகா பாவம்!” என்று அதட்டியவன், “கவிழ்ந்த படகிலிருந்து எப்படியோ ஒரு கரையை அடைந்து விட்டேன், ஆனால் இப்பொழுது திக்குதிசை புரியவில்லை! நடுக்கடலில் திசை காட்டும் கருவி எப்பொழுதும் வடக்கு திசையையே காட்டுவது போல முதலில் நான் வடக்குத் திசை நோக்கி என் மனைவியைத் தேடிப் பயணிக்கிறேன்.

தென் திசைக்கு பின்னர் போகலாம் என்று என்மனம் கூறுது. நான் இழந்த ஞாபகங்கள் துளித்துளியாய் சேர்ந்தாலும் இப்ப, அது ஒரு நீரோடையாகி, ஒரு ஆறாய் பெறுக்கெடுத்து பெரும் வெள்ளமாய்ப் பெருகி அதற்குள் நான் மூழ்கிக் கடலை அடைவதற்குள் நான் கரை ஏறிவிடவேண்டும்.”

“நான் நடுக்கடலில் ஒரு படகோடு காத்திருக்கேன் கௌதம், நீ வந்து அதுல ஏறிக்க! ரெண்டு பேரும் சேர்ந்து படகை வலிப்போம், நிச்சயம் உனக்கு ஒரு கரை தெரியும்! அங்க உன்னைப் பத்திரமா கரை இறக்கிவிடுறேன். நீ உன் வாழ்க்கையில் வந்த ஏதாவது ஒரு பெண்ணின் கரத்தோடு உன் கரத்தைப் பிணைத்துக் கொண்டு அந்த கடற்கரை பீச் மணலில் ஜாலியா நடந்து போ! அப்ப உன்னோட ஒரு கரத்தில் பவியும், மற்றொரு கரத்தில் உன்னை மனதார நேசிக்கும் பொண்ணும் இருப்பாங்க” இது என் ரயில் சினேகிதனுக்கு நான் கொடுக்கும் சத்திய வாக்கு கௌதம்!”

“நீ காணும் பகல் கனவுகளுக்கு நன்றி தாமரை!” என்றவன், “இப்பவே நீ என்னை என்னோட கோவை வீட்டுக்குப் போகச் சொன்னா, கண்ணைக் கட்டிக்கிட்டுக் கூடப் போயிட்டு வந்துருவேன். ஏன்னா நான் சிறு வயது முதல், வேலைக்கென்று டில்லி செல்லும் வரை, ஓடி ஆடி, களித்து, மனதில் ஆழமாய்ப் பதிந்து போன இடம் அது!

அந்த கோயம்பத்தூர் ரயில்வே சந்திப்பும், அந்தத் தலைமை தபால் நிலையமும் என்னுடைய இரண்டாவது தாய் மடி!’

ஆனால் டில்லி வீடோ, அதன் முகவரியோ எதுவுமே என் ஞாபகத்தில் இல்லை! சில காலம் நான் டில்லியில் சிந்துவோடு வாழ்ந்திருக்கேன்! ஒரு வார காலமா சில சமயம் டில்லி, நொய்டா என்ற ஊரின் பெயர்கள் என் மனதில் ஊர்வலம் போகுது! ஆனால் சிந்துவுடனான என் வாழ்க்கை சுத்தமா என் நினைவுப் பெட்டகத்திலிருந்து அழிக்கப்பட்டிருக்கு!”

“சரி கௌதம் சூரியன் உச்சிவானிலிருந்து சரியத் தொடங்கிருச்சு! நம்மக்கிட்டயிருக்க பகல் உணவை ஷேர் பண்ணிக்கிட்டு இப்ப கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம், உங்க பொண்ணும் கொஞ்சம் டயர்டா தெரியிறா, நீங்களும் பேசிக் களைச்சு சோர்ந்து போயீட்டிங்க. இன்னும் கொஞ்சம் பகலும் ஒரு இரவும் நம்மக்கிட்ட பாக்கி இருக்கு!!! நாம் நிறையப் பேசலாம்”

என்று உணவைப் பிரித்து முதலில் குழந்தைக்கு ஊட்டியவள். பின்னர் அவனுக்கும் கொடுத்துவிட்டு இவள் உண்ணத் தொடங்க, பவி அவள் மடியில் அமர்ந்து உணவுண்ணும் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது!

‘பாவம் அந்தக் குழந்தையின் மனதில் வெளிப்படுத்த முடியாத எவ்வளவு எண்ணங்களோ? நாம் நினப்பதை பேசுவதுபோல் குழந்தையால் பேச முடியாதே!’ என்று நினைத்தவன், தாராவிடம் போலவே தாமரையிடமும் தன் மகள் ஒட்டிக் கொண்டதைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனான்!

அவனுக்கும் சிறிது நேரம் கண்ணயர்ந்தால் நல்லது என்று தோன்றவே குழந்தையைத் தன் கைவளைவில் அணைத்துக் கொண்டு தூங்க நினைத்தான்! அவன் மூளை சோர்ந்து போய் தூங்க நினைக்க, அதை முற்றிலுமாக ஷட்டவுன் செய்யாமல் ஸ்லீப்பிங்க் மோடில் போட்டுவிட்டு, ஆட்டமேட்டிக் செர்ச் எஞ்சின்ஸ் ஆனிலிருக்க தன் குழந்தையின் காதில் பாட்டுப் பாடத் தொடங்கினான்.

“அத்தை மடி மெத்தையடி ஆடிவிளையாடம்மா!
ஆடும்வரை ஆடிவிட்டு அள்ளிவிழி மூடம்மா!’


பாடும்பொழுதே அவனுடைய அத்தைமகள் தர்ஷி அவன் ஞாபகக் கதவுகளைத் தட்டினாள்.

‘தர்ஷி! தர்ஷி,,,! அவள் இவனைவிட ஐந்து வயது மூத்தவள். தன் தாயும் தந்தையும் காதல் கொள்ள அவர்கள் வாழ்வில் முதல் புள்ளி இட்டவள் அவள்தான்.

அவளுக்குப் பிறந்தநாள் பார்சல் அனுப்பத் தபாலாபிஸ் சென்ற இடத்தில்தான் கற்பகமும், விசுவும் முட்டிக் கொண்டார்கள்!

தர்ஷி இவனைவிட வயதில் மூத்தவள் என்றாலும் ‘போடா, போடி’ என்று மிகவும் உரிமையோடுதான் இருவரும் பேசிக் கொள்வார்கள்.

இவன் பொறியியல் கல்லூரியில் கடைசி வருடம் படிக்கும் பொழுதே அவளுக்குத் திருமணம் முடிந்துவிட்டது!

“போ மாமா! என் மச்சான் மட்டும் ஒரு நாலு வருஷம் முன்னாடி பிறந்திருந்தா, இந்த அழகு மன்மதனையே நான் கல்யாணம் பண்ணியிருப்பேன்” என்று புருஷனைக் கண் முன்னாடி வச்சுக்கிட்டே அவள் பலமுறை பேசுவதை அவன் கேட்டிருக்கான்!”

தர்ஷியின் புருஷனும் பெருந்தன்மையோடு,

“இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை தர்ஷி, அவனையும் வேணும்னா சின்ன வீடா வச்சுக்க!” என்று சொல்லிவிட்டு அவனைப் பார்த்துக் கண்ணடித்துவிட்டு சிரிப்பார். அவளுக்குப் பிறந்த ஆண் குழந்தையை அவன் தூக்கிக் கொஞ்சும் பொழுதுதான், அவள் இப்படிக் கூறினாள்.

“நீ ஒரு பொண்ணைப் பெத்து என் கையில் கொடுடா, அதை நான் என் மடியில் போட்டு, “அத்தைமடி மெத்தையடி ஆடிவிளையாடம்மா! ஆடும்வரை ஆடிவிட்டு அள்ளிவிழி மூடம்மா!’ ன்னு பாடணும் என்று சொல்லும்பொழுதே அன்று ஏனோ அவள் குரல் கரகரத்தது!

“ஏன்டி இப்ப இந்த சோக சீன்!” என்று அவன் கேட்க,

“மாமாவும் அத்தையும் சொன்னாங்க, நீ எல்லாரையும் விட்டுட்டு டில்லி போகப் போறியாம்! என்னோட மாமாவுக்கு யார் அழுதாலும் பிடிக்காது, ஆனால் இப்ப உன் பிரிவால அவர் அழுதுவிடுவாரோன்னு எனக்குப் பயமாயிருக்குடா! அதுதான் உனக்கு ஒரு கால்கட்டுப்போட்டு இந்த ஊரிலேயே அமுத்தி வச்சிருவமான்னு நாங்க எல்லோருமா சேர்ந்து சதித் திட்டம் தீட்டுறோம்!”

“ஏய் போடி! இன்னும் குறைஞ்சது அஞ்சு வருஷம், நான் ஒரு சுதந்திரப் பறவை! அதுவரை நோ கால்கட்டு, கைகட்டு அன்ட் பைகட்டு!”

“டேய் போடா ஃப்ராடு மாமா! உனக்குள்ள இருக்க ரொமான்டிக் ஹீரோவை எனக்கு நல்லாத் தெரியும்டா! நீ டில்லில போயி உன் பெட்டியை உருட்டிக்கிட்டு இறங்கும் போதே உன் ஆசைநாயகி காத்திருப்பாடா!”

“ஏய்! போடி!” என்று அவள் தலையில் குட்டிவிட்டு, அந்தக்குழந்தை ஆதித்யாவின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளிவிட்டு, அவன் ஓட நினைக்க,

“நீ வேணா பாரு கௌதம் இந்த ஆத்தா வாக்குப் பலிக்கிதா இல்லையானு பாரு! ஒரு நாள் உன் மகளோட வந்து என் வீட்டு வாசலில் நிப்ப, அப்ப, நீ என்ன வசனம் பேசுவேன்னு கூட எனக்குத் தெரியும்,,,

“சாரிடி, நீ சொன்ன மாதிரியே அவசரத்தில் கல்யாணங்கட்டி, வெளி நாட்டுக்குப் போன இடத்தில அவசரமா பொண்ணு பொறந்திட்டாடினு” தலையை சொறிஞ்சிக்கிட்டே என் முன்னாடி வந்து நிப்ப பாரு!”

அவன் கோபத்தில் அன்று “தர்ஷி!!!” என்று கத்தினான். இன்றும் அதே கோபம் அவனுக்குள் குமுழியிட்டுக் கொண்டிருந்தது. ஆனால் தர்ஷி மேலில்லாமல் அவன் மேலேயே அவனுக்குக் கோபமாய் வந்தது!

“ஏன்டா கத்துற நாயே! அதைத்தானே இப்ப இருக்க இளவட்டங்கள் எல்லாம் செய்றீங்க? பெற்ற தாய், தகப்பனைத் தனியா தவிக்கவிட்டு,,, கண்ணீரில் குளிக்கவிட்டு,,, எனக்குப் பயமா இருக்கு கௌதம், நீ அப்படிப் பட்டவன் இல்லை, ஆனாலும் உன் பெற்றோரைத் தாங்கி நிற்க வேண்டிய விழுதை வெட்டிப் போட்டுவிட்டு அந்த வேர்களைத் தனியா காஞ்சு போக விட்றாதடா!”

“தாங்க்ஸ் தர்ஷி, இந்த பெரிய மனுஷியோட அறிவுரையை நான் என்னைக்கும் மறக்க மாட்டேன்!”

ஆனால் அவன் கொடுத்த வாக்கின் ஒவ்வொரு எழுத்தும் ஈரம் காய்வதற்குள்ளேயே காற்றில் பறந்துவிட்டது, சிந்தூஊஊஊஊ,,,,,

அந்த சிந்துநதி சொட்டுச் சொட்டாய் அவன் மூளைக்குள் நிறம்பத் தொடங்கினாள். அந்தக் கமாவோடு தன் நினைவுகளுக்கு ஒரு ஆச்சரியக் குறியிட்டவன் தன் மூளை புதிதாகப் புரட்டிப் போட்ட அந்த ஞாபகப் புத்தகத்தை மறுபடியும் ஆராயத் தொடங்கினான்!

மேகங்களைக் கிழித்துக் கொண்டு வெளிர் மஞ்சளாய் சூரியனிலிருந்து சிதறும் ஒளியைப் போல, ஒரு சில ஒளிக்கீற்றுகள் அவன் கண்களுக்குப் புலப்படத் தொடங்கின! அதிலிருந்து விரித்துப் போட்ட கூந்தலோடு, முகத்தை மூடிக்கொண்ட ஒரு மஞ்சள்வண்ண மலரைப் போல் ஒரு ஓவியமாய் வானிலிருந்து இறங்கி வந்தாள் சிந்து! கண்டு கொண்டேன்! நான் என் சிந்துவைக் கொண்டேன்! கௌதமின் மனம் துள்ளிக் குதித்து ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்க,,,

தன் வீட்டில் கௌதமை ஒரு பகலுக்குள் தொலைத்துவிட்டோமே என்ற ஆராத் துயரில் ஆழ்ந்திருந்தாள் தாரா. அழுதழுது முகம் சிவந்து போன ஒரு ஸ்காட்டிஷ் பெண்ணைப்போல் முகம் சிவந்து போனவள் இரவெல்லாம் துக்கத்திலும், தூக்கத்திலும் முழிப்பிலுமாய் புரண்டு கொண்டிருந்தவள், விடியலில் இமை கணக்க தூக்கத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டாள்.

அவள் தூங்கினாலும், அவள் நினைவுகள் விழித்துக் கொண்டேதான் இருந்தது! ‘நீ குழந்தையோட எங்க போயிருந்தாலும் விடியிறதுக்குள்ள வந்து கதவைத் தட்டிருடா, வா கௌதம், வந்திரு, எப்பவும் என் மடியை உன் தாய்மடின்னு சொல்வியேடா, அந்தத் தாயை இப்படிக் கதற வைக்கலாமா கௌதம்? நான் என்ன தப்புடா செஞ்சேன், யார்கிட்டயும் காட்டாத பாசத்தையும் அன்பையும் காதலையும் உன்கிட்ட மட்டும்தானே காட்டினேன்? அது ஒரு தப்பா! அது என் நெஞ்சுக் கூட்டை உடைச்சுக்கிட்டு தானாய் வந்த காதல்டா!’

‘சே! சே! இது என்ன சேக்ஷ்பியரின் ட்ராஜிக் நாவல்களில் வர்றது போல தனியா நின்னு புலம்பப் போறியா? நீ ஒரு மன நல மருத்துவர், அவன் ஒரு மன நோயாளி, அவனைக் குணப்படுத்தும் வேள்வியில் நீ மன நோயாளியாகப் போறியா? உன்னுடைய தன்னிரக்க நாடகத்திலிருந்து வெளிய வா!’ அவளுடைய உள்மனம் ஈவிரக்கமின்றி அவளைத் திட்டியது!

“முடியலையே! நான் எங்க போனாலும் அவனோட காலடி ஓசை இந்த வீடு முழுவதும் கேட்குதே! அவனுடைய பார்வை என்னையே சுத்திச் சுத்தி வர்ற மாதிரி இருக்கே! குழந்தை பவியின் மழலை என் மனசுக்குள்ள இன்னிசையா கேட்குதே! அந்தக் குழந்தை தன் கொலுசு கொண்டு சினுங்கும் பாதங்களால் என் நெஞ்சில் ஏறி மிதிக்கிறாளே!? அவ என்னைத் தேடுவாளே? நான் என்ன செய்யப் போறேன்?

என் கண்களின் ஒவ்வொரு சிமிட்டலிலும் அவன் முகம்தானே எனக்குத் தெரியுது! சூரியன் வெளியில் வந்து கண் சிமிட்டிய அதே நேரம், தாரா வீட்டின் அழைப்பு மணி அடிக்கப்பட, அந்த அழைப்பு மணியிலிருந்த குருவி வெளியே வந்து யாரோ வந்திருப்பதாக அவளுக்கு வரவேற்புரை வாசித்துவிட்டுச் சென்றது!

‘இந்த அழைப்பு மணியின் ஓசைக்காகத்தானே காத்திருந்தாள்! இந்த அதிகாலையில் அவனைத் தவிர வேறு யாரும் அவளைக் காண வந்திருக்க முடியாது! என் கௌதம சித்தார்த்தன் திரும்பி வந்திருக்க வேண்டும், என் பவிக் குட்டி, பவி! பவி!’ என்று படுக்கையிலிருந்து வாரிச் சுருட்டி எழுந்து, அவிழ்ந்து கிடந்த கூந்தலை அள்ளி உச்சியில் ஒரு கொண்டை இட்டவள், தான் அணிந்திருந்த இரவு உடையை இழுத்துவிட்டுக் கொண்டே!

“பவிமா, பவிமா வந்துட்டியாடா கண்ணு” என்று கூறிக் கொண்டே வாசல் கதவைத் திறந்தவள், பேரதிர்ச்சிக்கு உண்டான பூமி போல் தன் நடையில் குலுங்கி, இதயம் அதிர கதவோடு கதவாய் ஓர் சிலையாகிப் போனாள். தொடரும்
 
Top