Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 10

Advertisement

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 10

அத்தியாயம் 10 ஏமாற்றத்தில் தவிக்கும் தாரா

கௌதமை வீட்டில் தலைவலியோடு விட்டுவந்த டாக்டர் தாராவிற்கோ மருத்துவமனையில் ஒரு மிக முக்கியமான ஆப்பரேஷன் ஒன்று காத்திருந்தது! அதுவும் ஒரு ஆக்சிடென்ட் கேஸ்தான்.

தன்னுடைய பைக்கில் காதில் மாட்டிய ப்ளுடூத்தில் ஜாலியாகப் பாட்டுக் கேட்டுக் கொண்டே சென்ற ஒரு இளைஞன் அந்தப் பாடலில் லயித்திருக்க, சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு சிறிய வேன் சட்டென்று திரும்பி, பின் வேகமாய் தன்னை நோக்கி வருவதை கவனிக்காமல், ஒரு வினாடி ஏற்பட்டக் கவனச் சிதறலில் காரும் பைக்கும் ஒன்றின் மேல் ஒன்று மோதிக் கொள்ள, உயிரில்லாத வேனும், பைக்கும் சிறு காயங்களின்றி காப்பாற்றப்பட; உயிருள்ள அவன் அந்த சிறிய சாலையில் தூக்கி எறியப்பட்டான்.

அவனுடைய நல்ல நேரம், தலையும், இடதுபுறத் தோள்பட்டையும் மட்டும் அடிவாங்க உயிருக்குச் சேதமில்லாமல் பிழைத்துக் கொண்டுவிட்டான்.

தோள்பட்டையில் ஏற்பட்ட டிஸ்லொக்கேஷனுக்குக் கட்டுப் போட்டு பிரிந்து கிடந்த எலும்பை சரியான இடத்தில் இணைத்து விட்டார்கள், ஆனால் மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவால் இரத்தம் உறைந்து போயிருப்பது சீடி ஸ்கேனில் தெரிய வர, நினைவின்றி கிடந்த அவனுக்கு இன்று ஆப்பரேஷன்!

அவனை ஆப்பரேஷன் தியேட்டருக்குள் அழைத்துச் செல்வதற்கு முன்னால் அவனைப் பார்த்துப் பெற்றோரும், நண்பர்களும் கதறி அழுத காட்சியை அவளால் என்றும் மறக்க முடியாது! நல்ல வேளையாக அவனுக்கு உறவு என்று சொல்லிக் கொள்ள பலபேர் இருந்தார்கள்.

ஏன் இந்த இளமைப் பட்டாளம் தங்களுக்கான சவக் குழிகளைத் தாங்களே தோண்டிக் கொள்கிறார்கள்? என்ற அவள் மனதின் அழுகுரல் அவள் காதுகளுக்குள் பாய்ந்து வந்தது! அவற்றால் ஏற்பட்ட முழுபாதிப்புகளையும் தன் முதுகில் சுமந்தவளல்லவா அவள்? மதுவிற்கும், போதைப் பொருட்களுக்கும் அடிமையாதல், பெண்கள், செஃஸ், பாலியல் கொடுமைகள், ஜஸ்ட் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது, மனதை மயக்கும் வீடியோ கேம்ஸ், வீக் என்ட் பார்ட்டீஸ், தண்ணீராய் ஓடும் மது, கூத்து, கும்மாளம், ஜஸ்ட் ஃபார் ஃபன்’’ என்று எத்தனை எத்தனை ஷார்க் மீன்களிடமிருந்து இந்தப் பாவப்பட்ட ஜென்மங்களின் மூளைகளைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது? அவள் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது! இப்பொழுதெல்லாம் மூளை ஆப்பரேஷன் என்றாலே அவள் கண்கள் முழுவதையும் நிறைத்துக் கொண்டு கௌதம் தோன்றிவிடுகிறான்.

இன்று ஏனோ அவள் மனதை மிக அதிகமான பதஷ்டம், ஆக்கிரமித்துக் கொண்டது! இன்று காலை கௌதம் கண்களில் வித்தியாசமான ஒரு உணர்வை அவளால் படிக்க முடிந்தது!

‘பிளீஸ் என்னைவிட்டு விடு’ என்பது போலொரு கெஞ்சல் அதிலிருந்தது! அவள் கனவு கண்ட வாழ்க்கை முற்றிலுமாக அழியப் போகும் தறுவாயில் இருப்பதாகவே அவளுக்குத் தோன்றியது! அவளிடம் மீதமிருந்த ஒரே ஒரு புதையல்; அதையும் பறித்துக் கொன்டு விதி அவளை ஒன்றுமில்லாதவளாக ஒரு இருண்ட உலகத்திற்குள் தள்ளப் போகிறதா?’

'இன்று அவனிடம் மனம் திறந்து பேசவேண்டும், அவர்கள் இருவர் பற்றியதுமான முழுக் கதையையும் அவனிடம் கூறித், தனக்கான ஒரு சரியான தீர்வை அவனிடமிருந்து பெற வேண்டும்! கடந்த சில நாட்களாகவே அவனுக்குள் ஒரு தடுமாற்றம் இருப்பது அவளுக்குப் புரிந்தது. அவனுடைய பகிர்தல் பாதியில் நிற்பது போன்றதொரு தோற்றப் பிழை அவள் மனதைப் போட்டு வாட்டியது! அவன் தவறான எந்த முடிவும் எடுப்பதற்கு முன்னால், அவனுக்குத் தன்னைப் பற்றிய பல உண்மைகளையும்; அவனைப் பற்றி தனக்குத் தெரிந்த சில உண்மைகளையும் புரிய வைக்க வேண்டும்! இப்பொழுதே காலம் கடந்துவிட்டதோ???

இல்லை! இல்லை! இருக்காது! எந்த விஷயத்தையும் பிரித்துப் போட்டு ஆராய்ந்து நல்ல முடிவு எடுக்கக்கூடியவன்! ஆனாலும் அவள் சற்றும் எதிர்பாராத திருப்பம் ஒன்று நடக்கப் போவது உறுதி!!! ஓடு ஓடு! வீட்டிற்கு ஓடு! உன்னையும், அவனையும், குழந்தையையும் காப்பாற்றிக் கொள்! ஆனால் அவளை இறுக்கிக் கட்டிப் போட்டிருந்த அந்த மருத்துவமனை என்னும் சிறையிலிருந்தும் நோயாளிகளிடமிருந்தும் அவ்வளவு ஈசியா தப்பிச்சுப் போக முடியாது! பலரது உயிர்கள் அவள் கைகளில் அல்லவா ஊசலாடுது!?

அந்த இளைஞனுக்கான ஆப்பரேஷனை வெற்றிகரமாய் முடித்தவள் அவனுக்கு ஓர் நல்வாழ்விற்கான ஆதாரத்தை கொடுத்துவிட்டு, தன் எதிர்காலம் தொலைந்து போனது பற்றி அறியாதவளாய்த் தன் அறையில் அமர்ந்திருந்தாள்.

ஹவுஸ் ஸர்ஜனாக அவளிடம் பயிற்சியிலிருந்த இளவயது டாக்டர் ஜோ, தற்சமயமாய் அங்கே வர, தன்னை மறந்த நிலையில் அமர்ந்திருந்த தாராவைப் பார்த்து, “என்னாச்சு தாரா மேம்?!” என்று கேட்டவுடன் இரும்பு மனுஷியான தாராவிடமிருந்து பொல பொலவென்று கண்ணீர் கொட்டத் தொடங்கியதைப் பார்த்துப் பதறிப் போனான்.

“ஓ மை காட், தாரா மேமின் கண்களில் கண்ணீரா?” என்று சில வினாடிகள் அதிர்ந்து போய் நின்றவன்,

“டாக்டர்! டாக்டர் மேம்! சீக்கிரமா கண்ணைத் தொடைங்க, யாராவது பார்த்தா நம்மைத் தப்பா நினைப்பாங்க, எனித்திங்க் ராங்க் வித் யூ மாம்!” என்று முற்றிலும் பதற்றமாய் அவன் கேட்க, பதில் கூற முடியாமல் விக்கித்துப் போய் அமர்ந்திருந்தாள் அவள்!

“இல்ல ஜோ, கண்ணுல ஏதோ துறும்பு விழுந்திருச்சுனு நினைக்கிறேன்!”

“ஓரு துறும்பு விழுந்தா ஒரு தூணே கண்ணுக்குள்ள விழுந்த மாதிரியா கண்ணீர் கொட்டும்!?,,, நான் ஒரு சின்னப்பையன்னு நினைச்சு என்னை ஏமாத்தாதீங்க டாக்டர்! நான் ஒரு வாரமா உங்களைப் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்! ‘ஒரு அம்மா நாய் பால்குடிகூட மறக்காத தன்னோட குட்டிகளைத் தொலைச்சிட்டுத் தேடி அலையிற மாதிரி நீங்க சுத்தி வர்றிங்க!”

தாரா அதிர்ந்து போய் தனக்குக் கீழே பயிற்சியாளனாய் சேர்ந்திருந்த அந்த இளவயது டாக்டரை ஆச்சரியத்துடன் பார்த்தாள். ‘என் சோகம் என் முகத்தில் அப்படியா வழியுது?’ என்று தன்னையே ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றவள்,

“ஐ! இந்த உவமானம் நல்லா இருக்கே! நீ அந்த நாயை எங்க பார்த்த?!” அவள் அவனிடம் தான் மிகவும் நார்மலாயிருப்பது போல் நடிக்க முயன்றாள்!

“வேண்டாம் டாக்டர் என்கிட்ட நடிக்காதீங்க! பார்த்தீங்களா எங்க வீட்டில் நான் வளர்க்கிற நாயைப் பத்தி உங்கக்கிட்ட எத்தனை கதை சொல்லி இருக்கேன், அதைக்கூட மறந்துட்டீங்க? எங்க வீட்டில் இருப்பது ஒரு ஆணும் பொண்ணுமா ரெண்டு பொமரேனியன் நாய் குட்டிகள்! அந்த அம்மா நாய், குட்டி போட்டவுடன் அதன் அப்பா நாயைக்கூடப் பக்கத்தில விடாது! அந்த அப்பா நாயும்,

‘ஐ என்னோட குட்டிகள்!’ என்ற மமதையோடு கையைக் கட்டிக்கிட்டு நின்னு ரசிக்கிற அப்பா மாதிரி, இதுவும் தூர இருந்தே தன் குட்டிகளைப் பார்த்து மகிழும்! குட்டி போட்ட நாய் யாரையுமே நம்பாது! யாராவது தன் குட்டியைத் தூக்கிட்டுப் போயிருவாங்களோனு சோறு தண்ணிகூட இல்லாம அதுங்க மேலயே கண்ணுங் கருத்துமா இருக்கும்!

“யாரு நம்ம பேஷன்ட் கௌதம் மாதிரியா?” என்றவளின் கேள்விக்கு,

“யாரு மேம் அது?” என்று அவன் பதில் கேள்வி கேட்க, அவன் கேள்வியில் சுதாரித்தவள், “உனக்கு அவரைத் தெரியாது, அவர் என்னோட பழைய பேஷண்ட் அவரும் ஒரு விபத்தில் மாட்டி வந்தவர்தான், “நவ் ஹீ இஸ் ஓகே!” என்று சமாளித்தவள்,

“வாசு நான் வீட்டுக்குக் கொஞ்சம் சீக்கிரம் போகணும், இந்த நோயாளி ஒரு காம்பிளிக்கேஷனும் இல்லாம கண் விழிச்சப்புறம் எனக்கு ‘ஆல் இஸ் வெல்னு’ ஒரு மெசேஜ் மட்டும் அனுப்புவியா? எனக்காக ப்ளீஸ்?”

“ஓகே மாம்! நீங்க ஏதோ ஒரு அவசரத்தில் இருக்கீங்க, நீங்க போங்க இன்னைக்கு ராத்திரி நான் இங்கயே தங்கி அந்தப் பையனைப் பார்த்துக்கிறேன்! ஒரு அவசரம்னா உங்களைக் கூப்பிடுறேன். அனாலும் இந்த மாதிரி வர்ற பசங்க மேல உங்களுக்கு எப்பவுமே ஒரு சாஃப்ட் கார்னர் மேம்!” என்று சொல்லி புன்னகையோடு அவளை அனுப்பி வைத்தான்.

ஏற்கனவே மணி எட்டைத் தாண்டிவிட்டது!. உடனே கிளம்பினாலும் அவள் சென்னையின் அனைத்துப் போக்குவரத்து நெரிசலையும் தாண்டி, தன் வீட்டை அடையும் பொழுது மணி ஒன்பதை நெருங்கிவிடும்.

போகும் வழியிலேயே, காருக்குள்ளேயே ஸ்பீக்கர் போட்டு கௌதமை மொபைலில் அழைத்துப் பார்த்தாள். அது முழுரிங்கும் சென்று கட்டானது! ‘நீங்கள் அழைக்கும் நபர் உங்கள் அழைப்பை ஏற்கவில்லை!’ என்று பதிவு செய்யப்பட்ட ஒரு பெண்ணின் குரல் அவளுக்குப் பதில் கூற, ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு மறுபடியும் அழைத்தாள்,

“டேய்! எடுடா, எடுடா, கௌதம்! ஃபோனை எடுடா!” என்று அவள் மனம் கூவியது ரயில் பயணத்திலிருந்த அவனுக்கே கேட்டிருக்கும்!” மறுபடியும் ‘நீங்கள் அழைக்கும் நபர் உங்கள் தொடர்பு எல்லைகளுக்கு அப்பாலிருக்கிறார்’ என்ற ஒரு பெண்ணின் செய்தியோடு மொபைல் அணைந்து போனது!

‘பாவம் காலையில் தலைவலியோடு படுத்திருந்தான், அது அவனாகவே இழுத்துக் கொண்ட தலைவலி என்று அவளுக்கு நன்றாகவே புரிந்தது! தன் வாழ்க்கையின் தொலைந்து போன பக்கங்களைத் தேடுவதில் அவனுக்கு அவ்வளவு அவசரம்! ஒரு வேளை சோர்ந்து போய்த் தூங்கி இருக்கலாம்’ என்று மனதைத் தேற்றிக் கொண்டவள்,

சிக்னல்கள்; ட்ராஃபிக் நெரிசல்கள்; முன்னால் சென்ற வண்டிகளின் சடன் ப்ரேக்ஸ்; பின்னால் வந்த வண்டிகளின் தொடர் கார் ஹாரன்; தன்னை முந்திக்கொண்டு செல்லும் கார், பைக் மற்றும் ஆட்டோக்களின்; ஓட்டப் பந்தயம், என அனைத்தையும் தாண்டி அவள் வீட்டிற்கு வந்து காரைப் பார்க் பண்ணிவிட்டு அழைப்பு மணியை பல மணித்துளிகள் அழுத்திய பின்னும் அவளுடைய உயிருக்குயிரானவன் வந்து கதவைத் திறக்கவில்லை!

எப்பொழுதும் அவள் மருத்துவமனையிலிருந்து வரும் வரை வாசலிலேயே குழந்தையோடு காத்திருப்பான். அவளைப் பார்த்தவுடன் தாயைப் பார்த்தக் கன்றுக் குட்டிபோல் கண்ணில் துள்ளும் மகிழ்ச்சியோடு அவளை அணைத்து, அவள் கை பிடித்து அழைத்துச் செல்வான்.

குழந்தை பவியோ அவளைப் பார்த்தவுடன், “மம்,,,,மீ” என்று கத்திக்கொண்டு அவளிடம் தாவி வரும்! அந்தக் குழந்தையைக் கையில் அணைத்துக் கொண்டு, இவள் அவனுடைய கதகதப்பான அணைப்பில் வீட்டிற்குள் செல்வாள். அந்த அணைப்பில் அன்று முழுவதும் அவள் உடம்பில் ஏற்பட்ட களைப்பும் சோர்வும் ஒரே நொடியில் ‘போயே போச்’ என்று பறந்துவிடும்

அவள் தன்னிடமிருந்த சாவியை வைத்து அந்த ஆட்டோ லாக்கைத் திறந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தவள், துரதிஷ்டசாலி போல் இருண்டு கிடந்த விட்டிற்குள், ஒலி ஒளி அனைத்தும் கொல்லப்பட்டு வெறும் இருட்டு மட்டுமே வீட்டை நிறைத்திருப்பதைப் பார்த்து அவள் மனம் இருண்டு போனது!

“என்னைத் தவிக்கவிட்டுட்டு, குழந்தையை மட்டும் தூக்கிட்டுப் போயிட்டியாடா?” அவள் குரலெடுத்துக் கத்தவில்லை என்றாலும், அவள் மனம் வீல் என்று அலற! அவள் ஓடிச்சென்று ஸ்விட்சைப் போட்டவுடன் வெறுமையான ஒளி வெள்ளம் ஹாலை நிறைத்தது.

‘கடவுளே அவன் அறைக்குள் குழந்தையோடு தூங்கிக் கொண்டிருக்க வேண்டும்’ என்ற ஆயிரம் வேண்டுதல்களோடு அவன் அறைக்கு ஓடினாள் தாரா!

ஆனால் இறைவன் அவளுடைய பிரார்த்தனைக் கேட்கும் மூடில் இல்லை போலும், இல்லையென்றால் வேறு யாராவது தங்களுடைய பிரார்த்தனையைக் கேட்க வேண்டுமென்று இறைவனைக் கடத்திச் சென்றுவிட்டார்களோ என்னவோ? அந்த அறையும் ஆள் அரவமின்றி காலியாக இருந்தது.

எப்பொழுதும் பெட்டில் கிடக்கும், மடிக்கணினி, கைபேசி, குழந்தையின் ஒன்றிரண்டு விளையாட்டுப் பொருட்கள், அவன் படிக்கும் ஆங்கில நாவல்கள் என்று எதுவுமேயின்றி படுக்கை விரிப்பில் சின்னச் சுருக்கம் கூட இல்லாமல் விரிந்து கிடக்க, காலியான அந்தப் படுக்கை அவள் மனதைச் சுருட்டிப் போட்டது! ‘என்னைத் தனியா தவிக்கவிட்டுட்டு எங்கடா போன? ஏன்டா போன? உனக்கு இன்னும் முழு ஞாபகங்களும் திரும்பலையே! நீ இப்ப இருப்பது அரைவேக்காட்டில் உள்ள முட்டையின் நிலைதானே! கூமுட்டை! கூமுட்டை!’ என்று திட்டியவள்,

‘உனக்கு இந்த நிலையில் இந்தத் தாராவைத் தவிர வேறு யாரையுமே தெரியாதே, உன்னை நான் எங்கேனு தேடுவேன், பிளீஸ் என் முன்னாடி ஒரு தேவகுமாரன் மாதிரி வந்து குதிச்சிருடா!

நாளைக்கே நான் உன்னை உன் அம்மாக்கிட்டக் கூட்டிட்டுப் போறேன்!’ புத்தி புலம்ப, கண்களில் எட்டிப் பார்த்த நீரை அப்படியே அவள் தொண்டையில் விழுங்க அது ஒரு அழுகைக்குறிய கேவலாய்த் தெறித்து வந்து வெளியே விழுந்தது! அவள் தன் கண்களைச் சுழற்றி அந்த அறையை பகுப்பாய்வு செய்ய முயன்றாள்.

அப்பொழுதுதான் பார்த்தாள் தலையணை அருகில் ஒரு பேப்பர் ஆடிக் கொண்டே அவளை வா வா வென்றழைப்பதை! ஐம்பது மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவள் போல, அந்த பேப்பரிடம் தலைதெறிக்க ஓடினாள். அவள் அந்த பேப்பரை பிடுங்கி எடுத்த வேகத்தில் அதன் தலை துண்டாய்க்கிழிய, மீதமிருந்த பேப்பர்த் துண்டில் தன் கண்களை ஓட விட்டாள். எந்த எழுத்துக்களின் கோர்வை அங்கே இருக்கக் கூடாதென்று நினைத்தாளோ அது மட்டுமே இருந்தது!

‘அன்புள்ள தாரா, எனக்கு உயிர்கொடுத்த என் அன்பிற்கினியவளே! நான் வருகிறேன், நீ கொடுத்த உயிரை மட்டும் சுமந்து கொண்டு நான் செல்கிறேன்! இறைவன் சித்தமிருந்தால் மீண்டும் சந்திப்போம்! என்னை மன்னிப்பாயா???’

“ஆமாண்டா நான் கொடுத்த உயிர்களை மட்டும்தான் நீ சுமந்து செல்கிறாய்!” என்று கதறியவள், அந்த பேப்பரோடு அப்படியே மடிந்து உட்கார்ந்து ஒரு குழந்தை போலக் கேவிக் கேவி அழத் தொடங்கினாள்! ‘கௌதம், என்னைப் பிரிந்து செல்வதில் உனக்கு ஏன் இவ்வளவு அவசரம்? நீ எங்க போயிருந்தாலும் உன்னைத் தேடிக் கண்டுபுடிச்சு உன் குடுமியைப் பிடுச்சு இழுத்துக்கிட்டு வராமவிடமாட்டேன்!

பவியையும் சேர்த்து என்கிட்ட இருந்து பிரிச்சிட்ட இல்ல, நீ என்னைவிட்டு எங்க போயிற முடியும். உனக்குத் தெரிந்தது இரண்டே இடங்கள்தான்! ஒன்று கோவை! இன்னொன்று டில்லி! உன் ஞாபகத்தில் முதலில் வந்தது கோவை! உன் பெற்றோருடன் நீ வாழ்ந்த வாழ்க்கை. உன் அம்மா கோவையில் போஸ்ட் ஆஃபிசில் வேலை பார்ப்பது, உன் அப்பா அருகிலிருந்த கோவை ரெயில்வே சந்திப்பில் ஸ்டேஷன் மாஸ்டராய் இருந்தது. உனக்கு ஞாபகங்கள் வரத் தொடங்கியவுடன் இது நீயே என்னிடம் பகிர்ந்து கொண்ட உண்மைகள்!

‘முதலில் நீ உன் அம்மாவைத்தான் சந்திக்கப் போயிருப்ப! உன் மனைவியைத் தேடி டில்லி செல்லும் அளவுக்கு உனக்குப் பக்குவம் பத்தாது! இனி எனக்கு வாழ்க்கையில் ஒரே லட்சியம்தான், உன்னைத் தேடிக் கண்டுபிடிப்பது! அந்த நிமிடமே சீஃப் டாக்டருக்கு, ‘கால வரையரையற்ற விடுப்பு’’ என்று ஒரு மெயில் அனுப்பிவிட்டு, மறுநாள் எந்தக் கொந்தளிப்பும் இல்லாமல் மெல்ல எழுந்து ஊருக்குக் கிளம்பும் ஆயத்த வேலைகளைச் செய்ய வேண்டுமென்று கட்டிலில் விழுந்தவள், உடல் சோர்வும் மனச் சோர்வும் சேர்ந்து கொள்ள அப்படியே உறங்கிப் போனாள். தாமரையோ கௌதமிடம் கதை கேட்கத் தயாரானாள். தொடரும்
 
Top