Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 26

Advertisement

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 26

அத்தியாயம் 26

சிந்துவின் நினைவுகள்தான் அவன் மூளைக்குள் இருந்து கொண்டு அவனுக்கு இடை விடாத மண்டைக் குடைசலைக் கொடுத்து, தலைவலியைத் தருகிறது என்பதை என்றோ தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தாள் அந்த மனோதத்துவ டாக்டரான தாரா!

டாஃஸி புக் பண்ணி ஸ்டேஷனுக்கு அருகிலேயே சுத்தம், சுகாதாரத்துடன், நிர்மாணிக்கப்பட்டிருந்த ஹோட்டலுக்குச் சென்றார்கள். அது ஓர் உயர்ந்த ரக ஆடம்பர ஹோட்டலாயிருந்தது. இரண்டு டபுள் பெட்ரூம் புக் பண்ணப்பட்டிருந்ததால், எப்படி ஜோடி பிரிவது என்ற தர்க்கம் தொடங்கியது!

“நானும், பவியும் ஒரு ரூமில் தங்கிக்கிறோம்! நீங்களும் கௌதமும் ஒரு அறையில் தங்குங்க அத்தை! நீங்க ரெண்டுபேரும் ரொம்பநாள் பிரிஞ்சிருந்தவுங்க, உங்களுக்குள் பேச நிறையக் கதைகள் இருக்கும்!”

“அப்படியே என் குழந்தை பவியைத் தூக்கிக்கிட்டு சொல்லாமக் கொள்ளாம ஓடிப் போயிறலாம்னு பார்த்தியா!” கௌதம் கோபத்தோடு குரல் உயர்த்திப் பேச,

“அது சட்சாத் கௌதம சித்தார்த்தன் செய்யும் கேடித்தனமான வேலை, அப்படி எல்லாம் டாக்டர் தாரா செய்யமாட்டா! அப்படி செய்யணும்னா முகத்துக்கு நேரா பேசிவிட்டுதான் செய்வா, இப்படிக் கோழைத்தனமா குழந்தையைத் தூக்கிக்கிட்டு நடுராத்திரியில மனதாரக்காதலித்தவளை உதறிவிட்டு ஓட மாட்டா” தாரா தன் பேச்சால் பட்டென்று அவன் இதயத்தில் அடித்தாள்.

“ஐய! இது என்ன கற்பகம்-விசு தம்பதியர் சண்டை போடுற மாதிரி சண்டை போடுறீங்க!” என்று சிரித்த கற்பகம், “பெரியவள் நான் சொல்வதுதான் இறுதித் தீர்ப்பு! என் மகன் வாழ்க்கை முழுவதும் எனக்குத் திறந்த புத்தகம், அவனோட மிச்சக் கதையை உன் மூலமா தெரிஞ்சுக்கிட்டேன், என் பையனைப் பார்க்க, பேச, என் பாசத்தைப் பொழிய நான் ஒரு வருஷமா காத்திருந்தேன், ஆனால் என் பேத்தியை முதன் முதலா இப்பத்தான் என் கைகளில் ஸ்பரிசிக்கிறேன், அந்தப் பாக்கியத்தை நீதான் எனக்குக் கொடுத்திருக்க, உங்களுக்குள்ள பேச ஆயிரம் கதைகள் இருக்கும், அடிச்சாலும் புடிச்சாலும் அவன் உன்கிட்ட மனம் திறந்து பேசியே ஆகணும், எனக்கு என் பேத்தியை கொஞ்ச நேரம் கொஞ்சணும்னு ஆசையாயிருக்கு! இந்த அம்மாவுக்காக கொஞ்சம் விட்டுத் தர மாட்டீங்களா?”

“என்னைவிட்டா எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உங்க புள்ளையை அப்படியே அடிச்சு கொன்னுறுவேன் அத்தை. இப்பவும் எனக்குள் அவ்வளவு கோபம், ரௌத்திரம் தாண்டவமாடுது! அவனோட உடல் நிலையை புரிஞ்சுக்காம என்னை ரொம்பவே டென்ஷன் பண்ணிவிட்டான், நீங்க மட்டும் என் கூட இல்லாம இருந்திருந்தா இந்தப் படவாவை ரயில்வே ஸ்டேஷன்னு கூடப் பார்க்காம, அங்கயே நச்சுப் புழிஞ்சிருப்பேன்!” அவள் கோபத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டே பதில் கூறினாள் கற்பகம்.

“கோபப்படாதீங்க டாக்டரம்மா! நீங்க உங்க கோபத்தைக் குறைங்கன்னு நான் சொல்ல மாட்டேன், உங்க காதலைக் கொஞ்சம் குறைச்சுக்குங்கனுதான் நான் சொல்வேன், ஏன்னா இவ்வளவு கோபத்துக்கும் காரணம் அவன் மேல் உங்களுக்கிருக்கும் அந்த அதிதீமான காதல்தான்! என் புள்ளை அப்படி நடந்துக் கிட்டதுக்கும் ஒரு காரணம் இருக்கும், பேசித் தீர்த்துக்குங்க என்று அவர் குழந்தையைத் தூக்க, அது “அப்பா! தாராமா!” என்று குதிக்கத் தொடங்கியது!

இவர்கள் பேச்சில் இடை புகுந்த கௌதம் தன் கைகளில் குழந்தையை வாங்கிக் கொண்டு, “அம்மா, நான் ஒண்ணு சொன்னாக் கேப்பியாமா? உங்க மகனைப் பாருங்க, எப்படி அழுக்கு டப்பாவா இருக்கேன்னு உங்களுக்கே தெரியும். ரெண்டு நாள் ட்ராவல் பண்ணி, கசங்கி, நசுங்கி, நாறிப்போன உடம்போடும், உடையோடும், கசக்கிப் பிழியப்பட்ட மூளையோடும் வந்திருக்கேன். முதலில் நான் சுத்தமாகி, அதுக்கப்புறம் அடி வாங்கி இருக்கும் இந்த மூளையை வச்சு நான் நிறைய யோசிக்கணும்! எனக்குக் கொஞ்சம் தனிமை வேண்டும்! நான் இழந்தது, இழக்கப் போவது, என் எதிர்காலம், கடந்தகாலம், நிகழ்காலம் எல்லாமே கலைத்துப் போடப்பட்ட பஸில் மாதிரி இருக்கு. என்னை சுய பரிசோதனை செய்ய எனக்குக் கொஞ்ச நேரம் தனிமை வேணும் தருவீங்களா ப்ளீஸ்!

பிளீஸ் தாரா நீயும், அம்மாவும், எனக்குக் கொஞ்சம் தனிமை கொடுங்க! பவியையும் நீயே வச்சிரு தாரா, அவளுக்கு நீயோ நானோ யாராவது ஒரு ஆள் இருந்தாக்கூட போதும். அம்மா பேத்தியோடு இருக்க ரொம்ப ஆசைப்படுறாங்க அவளை அவங்களோட பழக்கிவிடு. அன்பு இருக்கும் இடத்தில் குழந்தை ஒட்டிக் கொள்ளும். நாம நிறைய பேசவேண்டி இருக்கு! இன்னும் நிறைய பேசுவோம்.

அதுக்கு முன்னால கிளர்ச்சியடைந்துள்ள என் மூளை இயல்பு நிலைக்குத் திரும்பணும் ‘வில் யூ ஹெல்ப் மீ தாரா?!” அவன் பேசியது அவளுக்குப் புரியவில்லை என்றாலும் அவன், மனம் குழம்பிப் போயிருப்பது அவளுக்கு நன்றாகப் புரிந்தது! “ஓகே கௌதம்! உனக்கு முழுசா ரெண்டு மணி நேரம் டைம். நல்லா குளி, தூங்கு, ரெஸ்ட் எடு! ஆட்டோ லாக்தான், கீ என்கிட்ட இருக்கட்டும்,

நான் ரெண்டு மணி நேரம் கழிச்சு வர்றேன்!” என்றவள், அவன் லக்கேஜை ஒரு அறையில் வைத்துவிட்டு,

“ஒரு அவசரம்னா என்னைக் கூப்பிடு, நாங்க பக்கத்து ரூம்லதான் இருப்போம்” என்று அவனைத் தனிமையில் விட்டவள் கதவை அடைத்துவிட்டு வெளியே வந்தாள்.

பவி, தாராவிடம் எந்தவித சிக்கலுமின்றி ஒட்டிக்கொண்டது! அவன் கூறியது போல குழந்தை மெல்ல மெல்ல கற்பகத்திடமும் சிரித்துப் பேசத் தொடங்கியது! குழந்தையின் உடைகள் சிலவற்றைத் தன் பெட்டியிலும் எடுத்து வந்திருந்தாள் தாரா. குழந்தையை சுத்தப்படுத்தி, அவளுக்கு உடை மாற்றித் தூங்க வைத்துவிட்டு, தானும், கற்பகத்துடன் சேர்ந்து தூங்கத் தொடங்கினாள்.

தன் அறைக்குள் நுழைந்த கௌதமசித்தார்த்தனை, வெள்ளை விரிப்போடு மலர்ந்திருந்த அந்த சுத்தமான மெத்தை வா வா வென்றழைக்க, அப்படியே கையைக் காலைப் பரப்பிக்கொண்டு அதன் மேல் கிடந்து; தன்னைக் கொன்று புதைக்கும் நினைவுகள் அனைத்தையும் மறந்துவிட்டு; தன் மூளையில் வேண்டாமென்று குவிந்திருக்கும் ஃபைல்கள் முழுவதையும் அழித்துவிட்டு அதை ஒரு சுத்தமான ஸ்லேட்டில் ரீரைட் செய்ய நினைத்தான்.

‘ஆனால் முடியாதே!’ மூளையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வரையப்படும் ஓவியங்கள் அனைத்தும் வெறும் பென்சில் கோடுகளா என்ன? அவற்றை ரப்பர் கொண்டு அழிப்பதற்கு!? இறந்த கால எச்சங்களோடுதான் அவன் நிகழ் காலத்தில் வாழ முடியும்.

அவன் நினைத்தது போலவே தாரா தன் தாயை அழைத்துக் கொண்டு தன்னைத் தேடி டில்லி வந்துவிட்டாள்! அவனுடையை வாழ்க்கை இப்பொழுது முழுவட்டம் சுற்றி, ஒரு வருடத்திற்கு முன்னால் தாராவில் தொடங்கி, இன்று தாராவோடு நின்று போயிருக்கிறது! அவன் யோசனைகளோடு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

அந்த அறை கைபடாத ரோஜாவின் சுகந்த மணத்தோடும்; ரோஜாவில் அழகாக அடுக்கப்பட்ட இதழ்கள் போன்ற அழகோடும்; தூசு தும்புகளின்றி, ஸ்பெக் அன்ட் ஸ்பான் என்று ஆங்கிலத்தில் சொல்லுவோமே அப்படி ஒரு கண்ணைப் பறிக்கும் தூய்மையோடும் இருந்தது;

மலர் ஜாடியில் அன்றலர்ந்த மலர்கள் அடுக்கப்பட்டிருக்க; அன்றுதான் வண்ணம் பூசப்பட்டது போன்ற சுவர்களோடும்; மேல் கூரையோடும்; அலங்காரமான வேலைப்பாடுகளுடன் கூடிய தேக்கு மரக்கட்டிலில், புதிய மெத்தை ஒன்று விரிந்து கிடக்க; அந்த மெத்தையோ தன் மேல் புதிய வெள்ளை விரிப்புகளைப் போர்த்திக் கொண்டிருந்தது, அதற்கும் மேல் குளிருக்கு இதமான புதிய டுவெட் மடக்கி விடப்பட்டிருக்க! மேல்கூரையிலிருந்து தொங்கிய டூம் லைட்டிலிருந்து வழிந்த எமரால்ட் ஒளி அந்த அறையை நிறைத்திருக்க, அந்த அறை முதலிரவன்று அலங்கரிக்கப்பட்டுத் தன் மணமகனுக்காகக் காத்திருக்கும் மணமகள் போல் பந்தாவாக அலங்கரிக்கப்பட்டு அவனுக்காகக் காத்திருந்தது.

அங்கு வரும் பயனாளிகள் அனைவருக்கும் தெரியும் அந்த அறையும் புதியதில்லை, அதில் உபயோகப்படும் பொருட்களும் புதியதில்லை என்று,,, ஆனாலும் அனைத்துமே புத்தம் புதியது போன்றதொரு ஒரு போலியான வடிவம் அவர்கள் மனதில் ஜோடிக்கப்படுகிறது! தினம் உபயோகத்திலிருக்கும் இந்த ஓட்டல் அறைகள் எப்படி புதியவையாக இருக்க முடியும்?

அதுபோல்தானே மனிதர்களும். கௌதம் தன் வாழ்க்கையில் இருபத்தொன்பது வருடங்களைக் கடந்துவிட்டான், தாரா மூன்று நான்கு மாதங்கள் கம்மியாக இருக்கலாம். அப்படி என்றால் இருவரும் கைபடாத ரோஜாப்பூக்களாய், இறந்த காலங்கள் இல்லாத மனிதர்களாய் எப்படி இருக்க முடியும்.

இவனுக்கு ஒரு இறந்த காலம் இருப்பது போல, அவளுக்கும் ஒரு இறந்த காலம் இருக்க வேண்டும். அவன் கையிலிருக்கும் குழந்தை பவி அவன் குழந்தை இல்லை என்று அவன் மனம் அடித்துக் கூறுகிறது! அப்படி என்றால் இந்தக் குழந்தை யார்! தாராவின் குழந்தையா? அவளுடைய குழந்தை என்றால் அந்தக் குழந்தையின் தந்தை எங்கே?!’

தாராவிற்கு தன் மேல் உள்ள அன்பைப் பற்றியோ, பாசத்தைப் பற்றியோ காதலைப் பற்றியோ அவனுக்கு எந்த சநேகமும் இல்லை! அவனுக்குத்தான் ஞாபகம் மறதி, அவனுடைய இறந்த காலம் கடந்த ஒரு வருடமாக அவன் மூளையில் இறந்து போயிருந்தது! ஆனால் தாராவின் மூளையில் ஒரு குறையுமில்லையே! அப்புறம் ஏன் அவள் தன் கடந்த காலத்தை தன்னுடன் ஷேர் பண்ணவில்லை!

“குளி! குளி! உடனே குளிக்க ஓடு! வழிச்செடுத்தா ஒன்றரை டன் அழுக்கிருக்கும்!” என்று அவன் மூளை நரம்பிலிருந்து ஒரு உயிர்செல் கத்த,

ஒரு, சுத்தமான் உடை எடுத்துக் கொண்டு குளிக்க ஓடினான் கௌதம். குளித்து முடித்து அந்த தூய்மையான மெத்தையில் விழுந்ததுதான் அவனுக்குத் தெரியும். அவன் நிச்சலனமற்ற ஒரு ஆழ்ந்த தூக்கத்திற்குள் சென்றான். தாரா கூறியது போல் இரண்டு மணி நேர இடைவெளியில் கௌதமைப் பார்க்கக் கிளம்பினாள். கௌதமின் தாயும், பவியும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, வெளிர் நிற உடை உடுத்தி மிகவும் மிதமான மேக்கப்போடு தன் காதலனைச் சந்திக்க கிளம்பினாள்!

தன் கையிலிருந்த சாவியின் உதவியால் ஆட்டோ லாக்கைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவள் மறவாமல் கதவைத்தாழிட்டு, அவன் படுத்திருந்த படுக்கையின் அருகில் வந்து ஒரு குழந்தை போல் துங்கிக் கொண்டிருந்தவனை தலை முதல் கால் வரை ரசிக்கத் தொடங்கினாள்.

என் ஆதியும் அந்தமும் ஆனவன் நீதானே; நான் காதலித்த முதலும், முடிவுமானவன் நீதானே; இந்த ஜென்மத்தில் நீ என்னோடு இணையவில்லை என்றால் உனக்காக என் மறுஜென்மம் வரை காத்திருப்பேன்; என்றென்றும் என் கண்களில் காண்பது உன் முகம்தான்! அவள் மனம் கவித்துவமாகப் புலம்பத் தொடங்கியது!

‘காதல் கொண்ட மனம் எப்பொழுதும் கவிதைகளில்தான் பேசும்’ என்று ஒரு முறை அவனே அவளிடம் கூறியுள்ளான். அவனருகில் அமர்ந்து அவனுடைய தூக்கம் கலையா வண்ணம் அவனைத் தன் மடியில் கிடத்தியவள், அலுச்சாட்டியமாய் தன் இதயத்தில் ஏறி நின்று நர்த்தனமாடும் அந்த மன்மதனைத் தன் கண்களால் பருகினாள். திருத்தமான முகத்துடனும், வலிமையான தோள்களுடனும், வாட்டசாட்டமாய் என்னை உன் கைகளுக்குள் அள்ளிக் கொள் என்று விரிந்த கிடந்த அவனுக்குள் சங்கமிக்க அவள் இதயம் துடிக்க, அவன் இதழோடு இதழ் சேர அவள் இதழ்கள் துடித்தன!

‘இன்னும் உன் மூளை அந்த வழுவழு இளநீர் போலதான் இருக்கு! நான் உன் மூளையைப் பத்திரமாப் பாதுகாக்கிறேன், நீ என்னை நம்பி என்னோடு கை கோர்த்துக் கொள், நாம் இந்த வாழ்க்கை சமுத்திரத்தை ஒரே படகிலேறி கடந்து விடலாம். என்னை நீ என் நிறை குறைகளோடு ஏற்றுக்கொள்வாயா கௌதம சித்தார்த்தா?’ அவள் சப்தமின்றி ரகசியமாய் அவன் காதுக்குள் பேசிக் கொண்டே,

அவன் மார்பில் ஒரு கரத்தை வைத்து அழுத்திக் கொண்டு மறுகரத்தால் “வலிக்குதாடா?,,,!” என்று அவன் நெற்றியை நீவி விட அந்த மென் சப்தத்திலும், அவளின் குளிர் ஸ்பரிசத்திலும் கண்விழித்தான் கௌதம்.

அதன் பின் அவனுக்குப் பிரக்ஞை வர; அவனுடைய உணர்வுகள் விழித்துக் கொள்ளத் தொடங்கின! ஒரு வெள்ளைத் தாமரை மலர் போலிருந்தவள் அவனருகில் அமர்ந்து அவன் தலையை தன் மடியில் தாங்கி இருப்பதைப் பார்த்து அதிர்ந்தவன்,

‘இது என்ன கனவா? நனவா?’ என்று தெரியாமல் இருட்டில் பாதை தெரியாத ஒரு முட்டுச்சந்தில் நிற்பது போல் சில நிமிடங்கள் தவித்துப் போனான்!

இன்னும் ரயிலில் இருக்கிறோமா? இல்லை தரைக்கு வந்துவிட்டோமா என்று கூட அவனுக்குத் தெரியவில்லை. இரயிலின் ஆட்டமும், அதன் பிரத்யேக சப்தங்களும் கேட்கிறதா என்று தன் இரு காதுகளைக் கொண்டும் கூர்ந்து கேட்டவன், இரண்டு உயிர்களின் மூச்சுக் காற்றுகளைத் தவிர; ஏறி இறங்கும் அவளின் மெத்துமெத்தென்ற மார்பகங்களின் அருகாமை தவிர; தன் இதழ்களுக்கருகே சப்தமின்றி துடிக்கும் அவளின் இதழ்களைத் தவிர, வேறு எந்த சப்தங்களுமின்றி அந்த அறை ஒரு ஆழ்ந்த நிசப்தத்தில் இருப்பதை புரிந்து கொண்டான்.

இரண்டு நாட்கள் ரயிலில் பயணம் செய்து, சிக்குப் புக்கு,,, சிக்குப் புக்கு,,, என்று நடனமாடிக் கொண்டே வந்ததால் அவன் உடம்பில் இன்னும் அந்த ஆட்டமும், அதிர்வுகளும் பாக்கி இருந்தது!

அப்படி என்றால் அவனுடைய படுக்கையில் அவனுக்கருகில் அமர்ந்து தன் தலையை மடியில் கிடத்தி உணர்ச்சிகளின் குவியலாய் அமர்ந்திருக்கும் இந்த வெள்ளையுடை வனதேவதை தாராதான். இது கனவு இல்லை, நிஜம்தான். அவன் அப்படியே அவள் மடியில் படுத்துக் கொண்டே, அவள் முகத்தை தன் முகத்திற்கு நேராக இழுத்தவன்,

“இது ஒண்ணும் கனவு இல்லையே?” என்று மென் குரலில் கேட்டுக் கொண்டே, அவள் தலையைத் தன்கரத்தில் தாங்கிக் கொண்டு அவள் மடியிலிருந்து எழுந்தவன், அவளருகில் அமர்ந்து, ஒன்றும் பேசாமல் அவளுடைய பறக்கத் துடிக்கும் விழிகளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“ம்,,,கூம்,,,“ என்று கனைத்தவள், “என்ன? சின்னக் குழந்தை மிட்டாய் கடையை, ஜொல்லுவடியப் பார்க்கிற மாதிரி இப்படிப் பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்க!” என்று அவன் கன்னத்தைக் கிள்ள,

“ஆ,,,என்று சப்தம் எழுப்பியவன், Ssssssss என்று அவன் விரலை எடுத்து, தன் இதழ்களின் மேல் வைத்து சப்தம் எழுப்பியவன், அந்த விரல்களை ஒவ்வொன்றாய் ஒடித்துக் கொண்டே,

“ஏய் ரௌடிப் பெண்ணே, என் செல்லத்துக்கு, என் மேலிருந்த கோபம் குறைஞ்சிருச்சாடா? என்று கேட்டவன், “நான் செய்த பாவத்துக்கு என்ன தண்டனைடா கொடுக்கப் போற?” என்று பௌயமாய் கேட்க,

“உனக்குக் கண்டிப்பாத் தண்டனை இருக்குடா, ஆனால் அதைப் பத்தி அப்புறம் பேசலாம், முதல்ல இதுக்குப் பதில் சொல்லு! உன்னோட ஈஷிக்கிட்டே வந்த அந்தப் பொண்ணு யாருடா?,, என்னமோ பல யுகங்களா உன்னோட பழகினவ மாதிரி அவ்வளவு உரிமையோடு உன்கிட்டப் பேசிக்கிட்டிருந்தா?”

“அப்பாடி! நீயும் உன்னோட சந்தேக கேள்வி-பதில் செஷனை ஆரம்பிச்சிட்டியா?”

“இல்ல கௌதம், அந்தப் பெண்ணோட கண்ணுல ஒரு உண்மை இருந்தது, அவ பேச்சில் ஒரு நேர்மை இருந்தது, கூடவே ஒரு அலஞ்சான் குழஞ்சானாட்டம் ஒருபையன் வேற அவளோட மூஞ்சியவே ஒரு ப்ரேமையோடு பார்த்துக்கிட்டு இருந்தான்! ம்,,,” என்று அவள் விழி உயர்த்த, அந்த உய்ர்ந்த விழிகளைத் தன் இதழ் கொண்டு மூடியவன், அந்த இன்பத்தில் அவள் திளைத்திருக்க,

“அது ரொம்பப் பெரியகதை தாரா! அந்தப் பொண்ணு என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ரயில் ஸ்நேகிதி! என்னோடு சென்னையில் ரயில் ஏறியவள், டில்லியில் வந்து இறங்கும் வரை என் உயிருக்கு அவள்தான் பாதுகாவலா இருந்தா! அதுமட்டுமில்லை; பவியும் அவளோடு ஒட்டிக்கிட்டா! அவள் பேர் தாமரை!” அதைக் கேட்டவள் அதிர்ச்சியோடு அவன் முகத்தைப் பார்க்க,

“அந்தப் பையன் அவளுடைய காதலன்…அஷ்வின், தாமரை டில்லியை விட்டு கிளம்பிய பொழுது கோபத்தில் அவள்கிட்ட பிரேக் அப் சொன்னவன், அவள் சென்னையிலிருந்து திரும்பி வரும் பொழுது டில்லிக்கு 6 கிலோமீட்டர் தொலைவு இருக்கும் பொழுது, ஹஸ்ரத் நிசாமுதின் ஸ்டேஷனில் எங்களோடு சேர்ந்துகொண்டு அவளோடு ராசியாகிவிட்டான். அவனுடைய கோபம் அவ்வளவு தான், இந்நேரம் ரெண்டு பேரும் நூறு சண்டை போட்டு இருநூறு முறை முத்தம் கொடுத்து சேர்ந்திருப்பார்கள்!”

“அவங்க நம்மைவிடக் கேடிங்க போல இருக்கு!” என்று கேட்டவள், “அப்பாடி அவகூட உன்னோட இன்னொரு காதலியோனு நினைச்சுப் பயந்து போய்விட்டேன்!” என்றவளின் முகத்தில் உண்மையான நிம்மதி ஏறி அமர்ந்து கொண்டது!,

“இந்தக் காதலர்கள் எல்லாம் ஒரே கேடிங்க ரகம்தான், மனசுபுல்லா காதலை சுமந்து கொண்டு; முகத்தில் வெறுப்பையும்; வார்த்தைகளில் முள்ளையும் புதைத்து வைத்திருப்பார்கள். எல்லா ரொமான்டிக் நாவல்சையும் படிச்சுப் பாரு! எல்லாமே இதே பின்புலத்தில்தான் எழுதப்பட்டிருக்கும்!” அவன் பதிலைக் கேட்டு தன்னை மறந்து சிரித்தவள்,

“அப்ப அந்த பொண்ணுக்கு, அதுதான் தாமரைக்கு, நம்ம கதை எல்லாம் தெரியுமா?” என்று கேட்டு வெட்கத்தில் தன் முகத்தை தாரா மூடிக் கொள்ள. முகத்திலிருந்து அவள் விரல் ஒவ்வொன்றையும் செம்பருத்திபூவின் இதழ்போல் பிரித்தெடுத்தவன், ஒவ்வொரு விரலாய் முத்தமிட்டுக் கொண்டே வர, அவள் மனமோ மேலும் மேலும் உணர்ச்சிகளின் கடலுக்குள் புதைந்து கொண்டிருந்தது.

“நீ அன்னைக்கு வீட்டுக்கு வந்தவுடன், இந்தப் பஞ்சப் பரதேசியைக் காணுமேனு தேடுனியாடா?”

“இல்லை என் குழந்தையைக் காணாமேன்னு தேடினேன், பெரியநாய் குட்டிநாய், ரெண்டையும் காணோம்னு தெரிஞ்சப்புறம், என் கண்கள் கலங்கியது!”

“ஸாரிடா! நான் செஞ்சது மகாப்பாவம்னு கிளம்பி வந்தப்புறம்தான் புரிஞ்சது! குழந்தையும் உன்னைத் தேடி தவியா தவிச்சுப் போயிட்டா! ஆமா அது என்ன என் குழந்தை என் குழந்தைனு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்ற?” அவ இந்தக் கௌதமோட குழந்தை; இல்லைனா பொதுவா நம்ம குழந்தைனு சொல்லு!”

“இல்லை பவி என் குழந்தைதான்! நான் பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தைதான்” அவள் குரல் சற்றே உயரத் தொடங்கியது! அதைக்கேட்ட கௌதம் “ஈஸ்வரா!” என்று அவள் விரல்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.

“உனக்கு இந்நேரம் உன்னோட ஞாபகங்கள் முழுசா வந்திருக்கும்னு எனக்குத் தெரியும்!” கௌதம் என்றவள்,

“இல்லனா இந்நேரம் இவ்வளவு லவ்விங்கா என் மடியில படுத்துப் பேசிக்கிட்டிருக்க மாட்ட!”

“சரி நீ சொல்றதை சரின்னே வச்சுக்குவோம், என் ஞாபகங்கள் மீட்டெடுக்கப்பட்டிருக்குனே வச்சுக்கலாம், ஆனால் அதுக்கும் இந்தக் குழந்தை உன்னோடதுனு சொல்றதுக்கும் என்ன கனக்ஷ்ன் இருக்க முடியும்!” அந்தக் கேள்வியைக் கொண்டு அவளை சிறை செய்தான் அவன்!

“உன்னோட கேள்விக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாதுடா? பவி என் குழந்தைதான்! யார்? என்ன? எப்படி? எப்பனு? இப்படி நூறூ கேள்விகள் கேட்டு என்னை அழ வச்சிராத!” அவ்வளவு நேரமும் அவனோடு காதல் கலந்த ஊடலில் இருந்தவளின் வாய் கோண அவனுடைய வெண் புறா எந்த நேரமும் தான் முக்காடிட்டு மறைத்து வைத்திருக்கும், கண்களின் திரைகளை விலக்கி கண்ணீரை மழை போல் கொட்டலாம் என்று அவனுக்கு பயமாயிருந்தது! அவன் பொருட்டு அவள் அழுவதை அவனால் தாங்க முடியாது! அப்படியே அவளைத் தன் தோள் மேல் சாய்த்து அவளின் முதுகை ஆறுதலாய் வருடிக் கொடுத்தவன்,

“பிளீஸ் இப்ப நீ அழுதுராத தாரா! பவி உன் குழந்தை, என் குழந்தை என்றில்லாமல் நம் குழந்தையாவே இருந்துவிட்டுப் போகட்டும், எனக்குத் தெரியும் உனக்குள் என்னிடம் சொல்லமுடியாத கதை ஒண்ணு உன் மனசுக்குள்ள புரளுதுனு! பரவாயில்லை உனக்கு எப்ப விருப்பமோ அப்ப நீ ஷேர் பண்ணிக்கலாம். அந்தக் கதையை நான் தெரிஞ்சிக்கிட்டாலும் இல்லைனாலும் எனக்கு உன்மேல் உள்ள அன்பு இம்மியளவு கூடக் குறையாது!”

படக்கென்று விழி உயர்த்தியவள், இறந்து போன உன் சிந்துவை எப்பப் பார்க்கப்போற? அவள் கேள்வியில் முற்றிலும் அதிர்ந்து போனான் கௌதம்Photo_EKKUM 23641.png
 
Top