Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

''என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 32

Advertisement

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 32

அன்புத் தோழமைகளே, என் நாவலுக்குத் தொடர்ச்சியாக, லைக்சும், கமென்ட்சும் கொடுத்துவரும் உங்களுக்கு, என் மனமார்ந்த நன்றிகள். இன்னும் மூன்றே அத்தியாயங்கள். அதோடு இந்தக் கதை முடிந்துவிடும். படிக்காதவர்கள் படிக்கத் தொடங்குங்கள். வாசகர்கள் அனைவரையும் அழைக்கிறேன் (இதைப்படிக்கும் அன்பான ஆசிரியர்களையும்தான்) அனைவரும் உங்கள் மௌனம் கலைத்து அட்லீஸ்ட் ஒரு இரண்டு வரி விமர்சனம் கொடுங்கள். அதுதான் ஒரு எழுத்தாளருக்குக் கிடைக்கும் ஊக்க போனஸ். குட்டிக் குட்டியாய் விமர்சனம் எழுதும் என் அன்புத் தோழியர், கொஞ்சம் பெரிய விமர்சனம் கொடுங்கள். நான் இந்தக் கதை உலகிற்குப் புதியவள்தான். உங்கள் அனைவரின் அன்பையும் ஆசிரையும் விரும்பிக் கேட்கும் உங்கள் அன்புத் தோழி டெய்சி ஜோசப்ராஜ். வாருங்கள் கதைக்குள் செல்வோம்.

அத்தியாயம் 32

மருத்துவமனையிலிருந்து விடை பெற்ற தாரா கழுத்தை நெரிக்கும் சென்னை ட்ராஃபிக்கைத் தாண்டி ஓஎம்ஆர் சாலையைத் தொட்ட பொழுதே அவளுடைய ரத்தத்தில் கலந்த அட்ரீனாலின் அளவு கூடத் தொடங்கியது! என் மணாளனைப் பார்க்க வேண்டும்; அவனோடு மூச்சு முட்ட சண்டைபோட்டுப் பின்னர் கொஞ்ச வேண்டும்; என்றுமில்லாத பரபரப்பும் எதிர்பார்ப்பும் அவள் உடல் எங்கும் பரவ; தான் இப்படி மனித உருக் கொண்டதற்குப் பதிலாக ஒரு ரோபார்ட்டாய் இருந்திருக்கலாமோ?’ என்றுகூடத் தோன்றியது அவளுக்கு.

வீட்டை அடைந்தவள் இரண்டு நாட்களாக அதீதமான உடல், மன உளைச்சலுக்கு ஆளாகி, உடம்பிலிருந்த சார்ஜ் முழுவதையும் இழந்து தள்ளாடத் தொடங்கினாள். தள்ளாட்டத்துடன் வண்டியை நிறுத்தியவள், நூற்றுக்கணக்கான எண்ணங்களோடும், சிந்தனைகளொடும் வண்டியை விட்டிறங்க அவள் வீட்டிற்குள் எரிந்த விளக்கின் ஒளி ஜன்னல் வழியாக வெளியே கசிவதையும், வீட்டின் தலை வாசல் திறக்கப்பட்டு அங்கே ஒரு உருவம் நிற்பதையும் பார்த்தாள்.

மின்சாரம் போய் மின்சாரம் வரும்பொழுது, மிக அதிகமான லோடில் படக்கென்று ஷார்ட் சர்க்யூட்டாகி, ஃப்யூஸ் போய் மின்சாரம் முழுவதும் ஷட்டவுன் ஆவது போல, அவள் உடம்பிலும், மனதிலும் மீதமிருந்த அனைத்துச் சக்திகளும் அவளிடமிருந்து விடை பெறத் தொடங்க; கண்கள் இருண்டு; கால்கள் பின்னிக் கொண்டு, அவள் வேரற்ற மரமாய் சாய; அங்கிருந்த மரங்கள் சூடியிருந்த பூக்களைப் போல கௌதமின் கரங்களில் விழுந்து மலந்தாள் தாரா!

அவளை அப்படியே தன் கைகளில் அள்ளிக் கொண்டவன், விழி ஜன்னல்கள் மூடி, தன் விழிகளுக்குத் திரையிட்டு, அவளின் இமைநீண்ட இமைமுடிகள் கொண்டு அவன் இதயத்தில் முள்ளாய்க் குத்த; மாடப்புறா தன் ஜோடிப்புறாவின் மூக்கோடு மூக்கு உரசுவதுபோல், அவள் மூக்கோடு, மூக்குரசிக் கொண்டே அவள் கண்களில் முத்தமிட்டான். ஆனாலும் அவள் தன் இமை ஜன்னல்கள் திறந்து அவனைப் பார்க்கவில்லை! தன் கரங்களில் கிடந்தவளை அப்படியே அள்ளிக் கொண்டு வீட்டிற்குள் ஓடினான்.

கார் பார்க்கிங்கிற்கும், தலை வாசலுக்கும் சில அடி தூரங்களே இருக்கும். ஆனால் அதுவே அவனுக்கு ஏழு கடல், ஏழு மலைகளை கடந்து வந்தது போல மூச்சு வாங்கியது!

தாரா அவன் கரங்களில் மயங்கி விழுந்தது அவன் செய்த அதிர்ஷ்டம்! இல்லை என்றால் அந்தப் புயலின் கண் அவனைத் தாக்கி இருக்கும், புயல் கடந்த பூமி போல அவன் கலைத்துப் போடப்பட்டிருப்பான், நல்ல வேளையாக அந்தப் புயல் தென்றலாய் அவன் கரங்களில் மயங்கிக் கிடந்தாள். அவளைக் கீழேவிட மனமின்றி அவளாகவே கண் விழிக்கட்டும் என்று அவளைத் தன் கரங்களிலேயே வைத்துக் கொண்டு அப்படியே ஆடாமல் அசையாமல் சிறிது நேரம் நின்றவன், பின்னர் மென்குரலில் பாடத் தொடங்கினான்.

“நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் அது நெருப்பாய் சுடுகிறது
இந்த மலருக்கு என் மேல் என்னடி கோபம் அது முள்ளாய் மாறியது?”
------------
“குலுங்கும் முந்தானை சிரிப்பில் அத்தானை மயக்குவதேனடியோ
உந்தன் கொடியிடை இன்று படைகொண்டு வந்து கொல்வதும் ஏனடியோ?”


தன் வசியக் குரலில் பாடத் தொடங்கியவன், பாடிக் கொண்டே சோஃபாவில் அவளைக் கிடத்தி, அருகிலிருந்த சிறிய கூஜாவிலிருந்து சிறிது நீர் சரித்து அவள் முகத்தில் தெளிக்க, விசுக்கென்று கண் விழித்தவனின் முகத்தில் வடிந்த நீரைத் தன் கரம் கொண்டு துடைத்தவன். அவள் பாம்பாக மாறித் தன்னைக் கொத்துவதற்கு முன்பாக அவனே முந்திக் கொண்டான்,,,

“என் செல்லம்! நேத்துக் கட்டின முகூர்த்தப் புடவையை இன்னும் சேஞ்ச் பண்ணலையா? அப்படியேவா மருத்துவமனைக்குப் போன? என்னோட தாலிக் கொடி ஒண்ணும் பாம்பு மாதிரி உன் கழுத்தை சுத்தலைனு தோணுது; ஏன்னா அதைப் பாரு காற்றுக்காகத் தவிக்கும் உன் சுவாசத்தில், ஏறி இறங்கும் உன் மார்பின் மேலேறிப் எவ்வளவு ஜம்பமா படுத்துக் கிடக்குதுனு; அட நெற்றிப் பொட்டுக்கூட கலையலை அதுக்காக ஸ்பெஷல் குடை எதுவும் புடிச்சியா என்ன?!?”
‘உன் மையிட்ட கண்ணிகளிரண்டும் என்னை வா வான்னு கூப்பிடுது! உன்னுடைய ரோஸ் நிற சிப்பிக்குள் இருக்கும் வெள்ளை நிற முத்துக்கள் கூட என்னைப் பார்த்துக் கிச்சு, கிச்சு மூட்டிச் சிரிக்கப் பார்க்குது பாரு! ஏன் தாரா! என்மேல் அளவு கடந்த கோபம் மாதிரி உன் முள் முகத்தைக் காட்டி என்னைத் தவிக்க விடுற? நீ என்னோட ஆசைப் பொண்டாட்டியா அப்படியே முழுசா வேணும்டீ எனக்கு!”

“இது ஒரு அணிலால் குதறிப் போடப்பட்ட பழமா இருந்தாலும் பரவா இல்லையா! இந்த சமூகத்தால வெள்ளை உடை கொடுக்கப்பட்டு, கை வளையல்கள் நொறுக்கப்பட்டு; பூவும் பொட்டும் கலைக்கப்பட்ட நான் ஒரு அமங்கலி பெண், நான் ஒரு சுமங்கலி இல்லடா; அவளுக்கு இந்த சமுதாயத்தால் கொடுக்கப்படும் விதவைனு கூட ஒரு பேர் இருக்கு!”

டாக்டர் தாரா, ஒரு சாதரண மனுஷியாகி, அவன் தோள்களில் சாய்ந்து மனம் அமைதி அடையும் வரை ஏங்கி ஏங்கி அழத் தொடங்கினாள். அவள் அழுது முடித்தபின் கூட அவள் விசும்பல்கள் நிற்கவில்லை!

“இன்னொருவாட்டி அமங்கலி, பவங்கலி, விதவை, பூவும் பொட்டும் இழந்தவள்னு சொன்னா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது? இந்த டாக்டரம்மா எந்த நூற்றாண்டில் இருக்கீங்கனு நான் தெரிஞ்சுக்கலாமா?”

என்னடா பண்ணுவ? எந்த நூற்றாண்டா இருந்தா என்னடா? பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறைஞ்சிருக்கானு சொல்லு? பெரு நகரங்களிலில் இருந்துக்கிட்டு, முழு நாட்டையும் ஆராய்ச்சி செய்யாத, நம்மைச்சுற்றி உள்ள சிறிய ஊர்களையும் கிராமங்களையும் போய்ப்பாரு! பெரிய படிப்புப் படிச்சிருக்கேன்னு பீற்றிக் கொள்ளும் என் மனசையே அந்த செயல்கள் இவ்வளவு காயப்படுதும்னா, எப்படி மற்ற பெண்கள் காப்பாற்றப்படப் போறாங்கன்னு எனக்குத் தெரியலை! இதுதான் என் தலையில் எழுதப்பட்ட,,,வி,,,தி,,,” என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் இதழ்களை தன் இதழ்களால் பூட்டூப் போட்டு லாக் செய்தான் கௌதம்.

அப்படியே சிறிது நேரம் அந்தக் காதல் தந்த போதையில், மயக்கத்தில் கட்டுண்டு கிடந்தார்கள் இருவரும். எப்பொழுதும் இது போன்ற மயக்கங்களில் இருந்து எல்லாம் முதலில் கௌதம்தான் முழித்துக் கொள்வான். இந்த முறை அவனைத் தள்ளிவிட்டு அவள்தான் முதலில் அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு எழுந்தமர்ந்தாள்.

இன்னும் கூட அவள் விசும்பல்கள் நிற்கவில்லை. அவள் உதடுகள் கோணி சிறுபிள்ளை போல் மறுபடியும் அழுதுவிடுவாள் போல் தோன்றவே, அவளை மறுபடியும் தன் தோளில் சாய்த்து அவள் முதுகை வருடிக் கொடுத்தவன்,

“உனக்குள் ஏன்டா இவ்வளவு கண்ணீர்!? உனக்கு என் மேல் நம்பிகை இல்லையா!” அவன் குரலும் தளுதளுத்துக் கிடந்தது!

“அவன் இறந்து பாடையில் போகும் பொழுதுகூட நான் ஒரு சொட்டு கண்ணீர் விடலை! திமிரு பிடித்தவள்; வேஷக்காரி; புருஷனை துரும்பா மதிக்கிறவ; கல்லுமனசு” என்றெல்லாம் என்னை அந்த ஊர் ஜனங்கள் வார்த்தைகளால் வசவு பாடி மிதிச்சப்பக் கூட நான் கண்ணீர் விடலை! என் கோலத்தை அலங்கோலப் படுத்தியப்பக் கூட அந்த வேதனைகளை எல்லாம் என்னால் மென்று முழுங்க முடிந்தது. ஏன்னா எனக்கு அவன் மேல் காதல் என்பது ஒரு அட்ச்சரம் கூட இல்லை! வெறும் அனுதாபம் மட்டுமே இருந்தது.

அவன் காம வெறியோடும், போதை தந்த திமிரோடும் என்னைக் கலைச்சுப் போட்டப்ப, அவன் தன் நிலை மறந்து தெரியாமல் செய்கிறான் என்று அவனை என்னால் மன்னிக்க முடிந்தது! அவன் என் உதிரத்தில் விட்டுச் சென்ற அந்த விலைமதிப்பில்லா பொக்கீஷத்தை என் கர்ப்பத்தில் சுமக்க முடிந்தது!

ஆனால் ஞாபகங்களை இழந்து என் மடியில் மகவாய் நீ கிடந்த பொழுது கருகிப் போனதாய் நான் நினைத்த என் இதயம் தளிர்விடத் தொடங்கியது! அந்தக் காதல்தான் என்னைச் சுக்கு நூறாய் உடைத்துப் போட்டது! அப்படி உடைந்த ஒவ்வொரு சில்லிலும் நான் உன் முகத்தைத்தான் பார்த்தேன். உன்னை என்னால் காதலிக்காமல் இருக்க முடியவில்லை. உன்னை என் மனதிலிருந்து தூக்கி எறிந்துவிட்டு உன்னோடு போலியாக என்னால் பழக முடியவில்லை.

எப்பொழுதும் என் இதயம் உன் இதயத்தோடு கை கோர்த்துக் கொண்டே திரிந்தது உனக்குத் தெரியுமா? நீ உன் நினைவுகள் திரும்பிய பின் எந்தத் திசையில் வேண்டுமென்றாலும் திரும்புவாய் என்று தெரிந்தும் உன்னிலிருந்து என் மனதை பிய்த்தெடுக்க என்னால் முடியவில்லை! ஆனாலும் என்னிடம் இருந்த ஒரே பற்றுக்கோல் உன் மனைவி உயிருடன் இல்லை என்பதுதான். ஸோ உன் கடந்த காலத்தை என்னால் யூகிக்க முடிந்தது!

இன்று உன்னைப் பிரிந்தால் நான் கதறி அழுவேன்!”

“ஏன் என் கண்ணம்மாவை விட்டு நான் பிரியணும்னு சொல்ற தாரா?”

“இல்லடா ஒவ்வொரு நாளும் நான் விடியலில் கண் விழிக்கும் பொழுது நான் முதலில் செக் பண்றது நீ இருக்கியானுதான். உன்னோடு என் வாழ்க்கை அப்படியே கனவா போயிருமோனு தினம் தினம் நான் தவிச்சுப் போயிருக்கேன்.

நடு ராத்திரியில் நீயும், குழந்தையும் பத்திரமா இருக்கீங்களானு வந்து பார்த்துவிட்டு வருவேன்.

காலையில் கண் விழிச்சதும் ஒரு கனவு மாதிரி நீ கலைஞ்சு போயிருவியோனு பயந்து பயந்து வாழ்றதுக்குப் பதிலா, என்னைப் பற்றிய உண்மைகளை உன்னிடம் கூறிவிட்டு உன்னிடம் காதல் பிச்சை கேட்கணும்னு நினைச்ச நாள், நீ என் கண்களிலிருந்தும் காட்சிகளிலிருந்தும் மறைஞ்சு போயிட்ட! இப்பச் சொல்லுடா உன்னை நான் எப்படி நம்புறதுனு!” அவள் பலம் கொட்ட மட்டும் அவன் நெஞ்சில் மறுபடியும் மறுபடியும் குத்த அவள் மணிக்கட்டை இறுக்கிப் பிடித்தவன்,

“உனக்கு என்மேல் நம்பிக்கை வரணும்னுதான் உன் விருப்பத்தைக் கூடக் கேட்காமல் உன் கழுத்தில் தாலி கட்டினேன். இப்பொழுது அவனின் பார்வையைத் தாங்க முடியாமல் அவள் தலை கவிழ்ந்தது!

“நீ எப்படி என்னுடைய கடந்த காலத்தைப் பற்றி எந்தவிதமான மனம் வருத்தமுமின்றி என்னை ஏற்றுக் கொண்டாயோ, அதே மாதிரி உன் கடந்த காலம் எதுவாயிருந்தாலும் உன்னை ஏற்றுக் கோள்வேன்னு என் மனசுக்குள் சத்தியப் பிரமாணம் செஞ்சிருக்கேன் தாரா டியர்! நீ என்னோடச் செல்லக் கண்ணமாடி,

நான் அன்று உன்னைப் பிரிந்து சென்றது, ஒரு பெண்ணின் மனதை உடைத்து விடுவேனோ என்ற பயத்தில்தான். அந்தப் பயம் கூட உன் மேல் எனக்கேற்பட்ட அதீதமான காதலில் வந்ததுதான்!

எனக்கு மறு ஜென்மம் கொடுத்த உன்னை நான் வெறும் இறைவனா கும்பிட்டுக்கிட்டிருந்தா உன்னோட நான் குடும்பம் நடத்த முடியாது! உன்னை ஒரு டாக்டரா இனிமேல் என்னால் பார்க்க முடியாது! எல்லா உணர்வுகளும் நிரம்பப் பெற்ற மனுஷியாத்தான் என்னால் பார்க்க முடியும்.

என்னோடு உரிமையாச் சண்டை போடு, அழு, சிரி, கோபம் வரும் போது எட்டி உதை! ஆனால் இப்படி எட்ட நின்னு நான் அதற்குத் தகுதி இல்லாதவள், அது இதுனு கண்ணாம்பாள் கால வசனம் பேசி என்னைச் சித்திரவதை செய்யாத! எனக்கு ஞாபகங்கள் இல்லைனாலும், என் மூளைக்குத் தெரிந்திருக்கும், சிந்து இனி என் வாழ்வில் இல்லை என்ற பேருண்மை! அதனால்தான் என்னால் உன்னோடு நெருங்கிக் காதலோடு பழக முடிஞ்சிருக்கு.

நீ சொன்ன கதைச் சுருக்கத்திலேயே உன் கதை முழுசா எனக்குப் புரிஞ்சிருச்சு! என்ன உன் கழுத்தில் தாலி கட்டியவன் செத்துப் போயிட்டான் நீ ஒரு விதவைன்றது உன் ஆழ்மனசுல ரொம்ப ஆழமா வேர்விட்டு இறங்கிருச்சு! அப்ப நான் எந்தக் கணக்கில் சேர்த்தி??? கணவனை இழந்தவள் கைம்பெண் அமங்கலினா, மனைவியை இழந்த நான் என்னை எப்படி அழைத்துக் கொள்வது?!

கைமாண், அமங்கலன்னு சொல்வோமா! ஆணுக்கொரு ஞாயம் பெண்ணுக்கொரு ஞாயம்மெல்லாம் இருக்க முடியாதுனு முழுசா நம்புறவன் நான்! உன்னால் என்னை ஏற்றுக் கொள்ள முடியுமென்றால் என்னாலும் உன்னை எந்தவிதமான மனத் தடங்கல்களுமின்றி ஏற்றுக் கோள்ள முடியும்

“நீ எப்படி கௌதம் இவ்வளவு தெளிவாயிருக்க!?”

“இவ்வளவு நாளும் கலங்கியிருந்த மனசு இப்பத்தான் தெளிவடைஞ்சிருக்கு தாரா! என் நினைவுகள் திரும்பாம நான் உன்னைத் திருமணம் செஞ்சிருந்தாக் கூட நமக்குள் பிணக்குகள் நிறைய இருந்திருக்கும்! அதோட என் உதிரத்தில் உதித்த என் மகள் இறந்ததுக்கப்புறம் உன் உதிரத்தில் உதித்தவளை எனக்கு மகளாக் கொடுத்து என்னைக் காப்பாத்தி இருக்க, இந்தப் பெருந்தன்மை எத்தனை பேருக்கு வரும் சொல்லு!?”

“உனக்காவது நான் என் மகளைத்தான் தாரை வார்த்துக் கொடுத்தேன் சித்தார்த்தா! ஆனால் அவன் உயிரைக் காப்பாற்ற, அவனுடைய கடைசி ஆசைகளை நிறைவேற்ற நினைத்த என்னையே அழித்துவிட்டான் அவன்!”

“தாரா இங்க வாடா, குட்டிகளை சுமக்கும் நாய்குட்டி, அந்தக் குட்டிகளை ஈன்றெடுக்க, காடு மேடு, மலை, பள்ளம், பொந்து என்று எல்லா இடமும் தேடித் திரியும். அது மாதிரி உன் மனதில் குமிழியிடும் நினைவுகளை இறக்கி வைக்க ஒரு மடி தேடுகிறாய். வா என் மடிக்கு வா, என் மனைவியா உரிமையோடு வா! உன் வாழ்க்கையில் நீ கடந்து வந்த பாதைகளை என் மடியில் இறக்கி வை, நானும் உன்னிடம் அனைத்தையும் ஷேர் பண்ண நினைக்கிறேன்.

அதுக்கும் முன்னாடி ஒரே ஒரு விஷயம் தாரா! நான் என்னோட வேலையை கோவை அலுவலகத்துக்கு மாத்தித் தரச் சொல்லிக் கேட்டு வாங்கி இருக்கேன். ஏன் தெரியுமா? என்னோட அம்மா, நானும் இல்லாம, அப்பாவும் இல்லாம, ரொம்ப நொந்து இப்ப ரெண்டு வருஷமா ஒரு அனாதை மாதிரி வாழ்ந்திருக்காங்க. எனக்குப் பிறப்பிடமா, நான் கோவையை நேசிக்கிற மாதிரி உன்னோட பிறப்பிடமா சென்னையை நீ எவ்வளவு தூரம் நேசிக்கிறேனு எனக்குத் தெரியும்.

நான் கேட்டிருந்தா எனக்குச் சென்னையிலேயே போஸ்டிங்க் கிடைச்சிருக்கும்! ஆனால் என் அம்மாவுக்காகக் கொஞ்ச காலம் அங்க இருக்கலாம்னு தோணுது! டாக்டரம்மா எங்க போனாலும் உங்க தொழிலைப் பார்க்கலாம்தானே! மெல்ல அம்மா மனசுமாறும்! நமக்காக இல்லாட்டியும் அவங்க பேத்திக்காகச் சென்னைக்கு நம்மளோட வந்திருவாங்க! நீ என்னடா சொல்ற எனக்காகக் கொஞ்ச நாள் பிளீஸ்,,,?” அவன் கெஞ்சலோடு அவளைப் பார்க்க, மெல்ல நடந்து வந்து அவன் மடியில் அமர்ந்து கொண்டவள்,

“நான் இன்னைக்கு காலையில என்னோட சீஃப்கிட்ட சென்னை மருத்துவமனையிலிருந்து ரிசைன் பண்றதா ரிசிக்னேஷன் லெட்டர் கொடுத்தேன், ஆனால் அவர் அதை ஏத்துக்கலை! எவ்வளவு நாள் வேணாலும் லீவ் எடுத்துகுங்க! உங்களுக்கு எப்ப இந்த மருத்துவமனையில் ஜாயின் பண்ணனும்னு தோணூதோ அப்ப வாங்க உங்களுக்காக இந்த மருத்துவமனையின் கதவுகள் எப்பவும் திறந்தே இருக்கும்னு, நான் பற்றிக் கொள்ள ஒரு நீளமான கயிற்றை எனக்குக் கொடுத்திருக்கார்” என்று அவள் கூறியவுடன்

“இதுதான் என் பொண்டாட்டி தாரா! நான் புள்ளி வைக்கும் போதே அவ கோலம் போட்ருவா!” என்று அவளை மென்மையாய் அணைத்தவன்,

“என் பொண்டாட்டியா இப்பச் சொல்லு உன் கதையை கேட்போம், ஆனால் அது என்ன கதையாயிருந்தாலும், நம் உறவில் எந்த மாற்றமும் இல்லை!” என்று அவள் தலையில் அடித்து சத்தியம் பண்ணியவன் அவள் கதையைக் கேட்கத் தயாராக. ‘இது ஒரு துன்பியல் கதை’ என்ற முன்னுரையோடு ஆரம்பித்தாள் தாரா.

இந்தக் கதையின் ரிஷி மூலம் நதி மூலம்னு தேடினால் அது மனிதனைப் போதை ஏற்றும் வஸ்த்துக்களின் மீதுதான் கொண்டு சேர்க்கும். குடியினாலும், போதை மாத்திரைகளாலும் தன்னையே அழித்துக் கொண்ட; என்னுடைய வயதிலேயே, தனக்கான கல்லரையைத் தோண்டத் தொடங்கிய, ஒரு இளவயது வாலிபனின் கதை இது! அவன் வாழ்க்கையோடு என் வாழ்க்கையையும் சேர்ந்து அழிந்ததுதான் இதில் மிகக் கொடுமையான விஷயம்.

அவனுடைய சொந்த ஊர் மாயவரம் பக்கத்தில் ஒரு பெரிய கிராமம். மிகப் பெரிய செல்வந்தர் வீட்டின் ஒரே வாரிசு! காலுக்கும் தலைக்குமாகக் கொட்டிக் கிடக்கும் செல்வம். அதோடு கூட ஊர் முழுவதும் அவர்களுக்குத் தான் சொந்தம் என்பது போன்றதொரு நாட்டாமைக் குடும்பமது. செல்வம் கொட்டிக்கிடக்கும் இடத்தில் தானே பதவியும் செல்வாக்கும் கொட்டிக் கிடக்கும். ஊருக்கெல்லாம் அந்தப் பையனின் அப்பாதான் நாட்டாமை. மிகப் பெரிய நிலச்சுவான்தார்.

சுலபமாச் சொல்லணும்னா பண்ணையார்னு சொல்லலாம். நன்றாக கள்ளையும் பீரையும் குடித்துக் குடித்து ஊதிப் போன மனிதர் அவர்! அவருடைய தர்ம பத்தினியோ அந்த ஊரின் மகளீரணித் தலைவி ஜாடிக்கேத்த மூடியாக வாழ்ந்தவர்! ரெண்டு பேரும் சேர்ந்து போட்ட ஆட்டத்தில் தங்களின் ஒரே செல்ல மகன் சந்தோஷை மறந்து போனார்கள். அவனுடைய பேர் மட்டும்தான் சந்தோஷ்! மற்றபடி அவன் வாழ்க்கையில் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்கவில்லை. அம்மாவின் பாசமும் கிடைக்கவில்லை, அப்பாவின் அறிவுரைகளும் கிடைக்கவில்லை. தனிமை! தனிமை! நண்பர்கள் இல்லை, உறவுகள் இல்லை!

வகை வகையான சாப்பாடு, லிக்கர் இது மட்டும் தான் அவனுக்குத் தாராளாமாகக் கிடைத்தது! அவன் முன்னாலேயே லிக்கரோடு ஆட்டம் போட்ட குடும்பம் அவனுடையது!

பள்ளியில் பெரிய ஜமீன்தார் வீட்டுப் பிள்ளையென்று அவனோடு யாரும் சேரமாட்டார்கள். வீட்டிலோ அவனோடு பேசவோ விளையாடவோ பொழுது போக்கவோ யாரும் இல்லை. அவன் பெற்றோருக்கு அவன் படிப்பைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. காசு குடுத்தா எந்த டிகிரையையும் சேர்த்துப் போட்டுக் கொள்ளும் உரிமை பெற்றவர்கள். சந்தோஷ் அவன் பெற்றோரின் அலட்சியத்தால், தனக்குள் ஏற்பட்ட தனிமை உணர்வால் அவன் தன் டீனேஜைத் தொடுவதற்கு முன்பே, மதுவும் போதையும் அவனுக்குப் பழக்கமானது!

அவனுடைய சிறுவயதிலேயே கொக்காயின், ஹெராயின், மரிஜுவனா, பீர், விஸ்கி என்று அனைத்துப் போதைப் பொருட்களையும் அவன் மூளை ஊறுகாய் போல தொட்டுக் கொள்ளத் தொடங்கியது! எப்படியோ தட்டுத் தடுமாறி, பத்து, +2 வெல்லாம் முடித்து, பணம் பாதாளம்வரை பாய்ந்ததில் சென்னை மருத்துவக் கல்லூரியில் அவன் காலடி எடுத்து வைத்த போது அவனுக்கு வயது 17+. ஆனால் அதற்குள் பதினெட்டு வகையான போதை வஸ்த்துகளைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தான். அந்தக் கல்லூரியில்தான் விதி என்னையும் சந்தோஷையும் சந்திக்க வைத்தது!

அவன் பார்ப்பதற்கு வாட்ட சாட்டமாய், நல்ல நிறத்தோடு ஆண்மையின் லட்சணங்களோடு கூடிய ஆணழகன்தான்; எந்தப் பெண்ணையும் சுண்டி இழுக்கும் பேரழகன் தான், ஆனால் ஒரு தனிமை விரும்பி, எந்தப் பெண்ணோடும் முகம் கொடுத்துப் பேசமாட்டான். அப்பப்ப போதையில் வகுப்பிற்கு வருவான். அந்த போதையில் தள்ளாடிக் கொண்டே மாணவர்களுக்கான ஹாஸ்டலுக்குப் போவான். அவனால் யாருக்கும் ஒரு தொந்தரவும் இல்லை என்றாலும் அவனோடு சேர்ந்து பல இள இரத்தங்கள் கெட்டுப் போவதற்கான சாத்தியகூறுகள் நிறையவே இருந்தது!

ஏனென்றால் அவனிடம் பணமும் பவுசும், போதைவஸ்துக்களும் நிறையவே இருந்தது! நானும் அவன் வகுப்புத்தான், போதையில் திரியும் ஒரு இளம் வாலிபனைப் பார்க்க எனக்கு மனது வலித்தது! அவனை இந்த நிலைக்கு ஆளாக்கிய அவன் பெற்றோரை நினைத்து என் ரத்தம் கொதித்தது.

யாருமே நெருங்க முடியாத அவனிடம் நான் மெல்ல நெருங்கினேன். மெல்லப் பேச்சுக் கொடுத்து அவனே விலங்கிட்டுக் கொண்ட அவன் தனிமையிலிருந்தும் , அவனை சாவின் வாசலுக்கு இழுத்துச் சென்று கொண்டிருந்த போதையிலிருந்தும் அவனை விடுவிக்கப் போராடினேன். தொடரும்Photo_EKKUM 0015.png

 
Top