ஏழு ஸ்வரங்களும் மௌனம் 03

Advertisement

swarangal

New member
Member
கணவனிடம் சலங்கையில்லாமல் வார்த்தையால் ஆடிக்கொண்டிருந்தார் சின்னப்பொண்ணு..

"யோவ் எல்லாம் உன் வேலைத்தானே? தனித்தனியா பிரிஞ்சி இருந்தாலும் அண்ணன் சொல்லுறதுதான் ஆண்டவன் வாக்கா எடுத்துக்கிட்டு என் பிள்ளைக்கு ஒன்னுமில்லாதவளை பொண்டாட்டியா கூட்டிட்டு வந்து இங்க கூத்தடிக்க ஒன்னுமுன்னா சேர்ந்து எப்பருந்து கூடிக்கூடி பேசி செழியனை ஒத்துக்க வச்சீரு" என்று அடக்கப்பட்ட கோவத்துடன் கேட்டார் சின்னப்பொண்ணு..

"வூட்டுல பெரியவங்க இருந்தா அவங்கட்ட ஒருவார்த்தை கேட்கத்தான் செய்வாங்க சின்னா, இளவரசி இந்த வூட்டுக்கு மருமகளா வரவேண்டாம்னு நா சொல்லவே இல்லையே?.. பிரகாசத்துக்கு பொண்ணெடுக்கலாம்னு தானே பேசி வச்சிருந்தது.. நீயிம் அவள பெரியவன் பொண்டாட்டியாதானே பாத்த?.. பிரகாசம் நிலையில்லாத வேலைக்கு போவவும் உன் அண்ணன் அவனுக்கு பொண்ணை தரமாட்டன்னு சொன்னதுல இங்க பிரகாசத்தோட நிலமை எப்படியிருந்துச்சின்னு உன்னைவிட யாராலயும் அம்புட்டு ஆழமா கவனிச்சிருக்க முடியாது.. சின்னவன் கவர்மென்ட் உத்தியோகாத்துல இருக்கவும் அவனுக்கு இளவரசியைத்தரத்துக்கு உன் அண்ணன் முனையிரான்னா? பணத்துக்கும் இருக்குற இடத்துக்கும் தான் மதிப்பா சின்னா?.. நான் செழியனுட்ட அந்தப்பிள்ளையத்தான் நீ கட்டிக்கனும்னு கட்டன் ரைட்டாவா பேசினேன்.. கட்டிக்கிரியான்னு தானே கேட்டேன்"..

"இளவரசிக்கு விருப்பமில்லாத எப்படி பிரகாசத்தை கட்டிக்க தூண்டியிருக்க முடியும்.. பிள்ளை படிச்சிட்டு வேற இருந்தா" என்றார் சின்னப்பொண்ணு மெல்லிய குரலில்..

"படிப்பை விட்டுட்டு கட்டிவைன்னு கேட்கல சின்னா?.. அவங்களுக்கு இளவரசியை கொடுக்க விருப்பமில்ல அதுத்தான் நெசம்.. அதேபோல செழியனுக்கும் இப்போ இளவரசியை கட்டிக்க விருப்பம் இல்லை!.. அவன் தெளிவா சொல்லிட்டான்னே? அண்ணியா பாத்தவளை எப்படி கட்டிக்கனு.. அண்ணனு உள்ளுக்குளுந்து போவாத சின்னா? சொந்தபந்ததுட்டல்லாம் எட்ட நின்னுக்குறது தான் நல்லமுறை!".

"அதுக்கு? அந்த தையக்காரியை கட்டிவைக்கணுமா? உங்க அண்ணி, அவிங்க அண்ணன் புள்ளை நல்லா இருந்தா போதும்னு நினைச்சி இங்க தள்ளப்பாக்குறாங்க!"..

"என் அண்ணனுக்கு பசங்கருந்திருந்தா? அவனுங்க கலெக்டர் உத்தியோகமே பாத்துட்டுருந்தாலும் ராகவியை கட்டிவச்சிருப்பாங்க"..

"கிழிச்சிருப்பாங்க!.. இருக்குற பிள்ளைக்கு மஞ்சரைக்கவே உங்க அண்ணிக்கு பணத்துல பத்தாக்குறை!.. அத்தியாவசியத்துலக்கூட அண்ண மகன்னு அவளுக்கு பாத்து பாத்து தான் பிள்ளைக்கு ஒன்னும் சேர்க்காம நாமல்ல ஆளுக்கு அஞ்சு பவுணு போட்டு கட்டிக்கொடுத்தோம்.. அவங்க வக்கெத்து போயி கடந்தாலும் அண்ணன் குடும்பத்துக்கு வாய்ஜாலம் அடிக்கிறதுல உங்களுக்கு இணை யாருமில்ல"..

"தான் பிள்ளைக்கு பண்ணாம அண்ணன் மகளை படிக்க வச்சி அவளுக்கான அடிப்படை தேவையவாது அவங்க பூர்த்தி செஞ்சாங்களே சின்னா!.. அப்படியாப்பட்டவங்க? நம்ம செழியன் கெட்டுப்போயிடுவான்னு நினைப்பாங்களா?"

"இந்த இஸ்திரி நாயமெல்லாம் எனக்கு தேவையில்லாத ஆணி!.. எம்மகனுக்கு அந்த கோட்டிச்சிறுக்கியை கட்ட முடியாது.. உங்களால ஆனதைப்பாத்துக்கோங்க"..

"செழியனை கூப்பிடுறேன் உன் வாயாலயே அதைச்சொல்லிப்பிடு"..

"என்ன அவங்கிட்ட கோத்துவிட்டு ஏக்கலாகுண்டு அடிக்க பாக்குறிங்களா? உங்களுக்கு இந்த ஊருல வேற எந்தப்பொண்ணும் கிடைக்கலையா அந்தத்தையக்காரியை தவிர்த்து".

"அவளுக்கு என்ன குறைச்சல் சின்னா"..

"எல்லாமே கூடைக்குறைச்சல் தான்.. என்ன தகுதி அந்த அம்மணிக்கு இருக்கு என்மவனை கட்டிக்க?.. உங்க, அண்ணன் அண்ணி சொல்லிக்கொடுத்தாங்களோ? எப்படியெல்லாம் பேசணும்னு"..

"இப்போ நா வேண்டாத எதையாவது பேசினனா?"

"அப்ப நா வேண்டாத பேச்சி பேசுரன்னு சொல்லுறீரோ?"

"விதண்டாவாதம் பண்ணுற மாறியே பேசுற?"

"யாரு விதண்டாவாதம் பண்ணுறது.. ஒன்னுமில்லாத குடும்பத்துல பொண்ணெடுண்ணு அப்பனும் தானும் ஒன்னுக்கூடி முடிவு பண்ணுறது விதண்டாவாதம் இல்ல.. என் மவனுக்கு நல்லக்குடும்பத்துல நகைப்போட்டு சீர் சினத்தியோட பொண்ணெடுக்கணும்னு நா நினைக்கிறது விதண்டாவாதமா? நல்லா இருக்கே உங்க நாயம்!"..

"சீர் சினத்தியெல்லாம் வச்சிட்டு காலத்தை கலங்கமில்லாம ஓட்ட முடியும்னு நம்பிக்கையா சின்னா!.. சின்னஞ்சிருசுங்க கண்ணாலம் பண்ணிட்டு அதுப்போக்குல ஒண்ணா காலத்தை தள்ளிட்டு போகட்டுமே?"

"அம்மாடியோ?.. முப்பத்தி அஞ்சு வருஷம் முன்னக்க உன் அம்மையாருட்ட இதே வார்த்தையை சொல்லியிருந்தா இந்த பேச்சி பேசினதுக்கு இப்போ பதிலைச்சொல்லாம பொத்திட்டு போயிருப்பனே?.. உன் அண்ணியை விட ரெண்டு பவுனு குறைச்சி போட்டுட்டு வந்துட்டன்னு உன் ஆத்தாக்காரி பாக்குறப்பலாம் கரிச்சி கொட்டி வார்த்தையை கடிச்சி துப்புமே?.. அப்போ எதனா பொஞ்சாதிக்கு போர் கொடி தூக்கிட்டு வந்தீரோ?.. இப்போ என்ன வராத மருமவளுக்கு மணக்க மணக்க பேசுறீங்க?"

"என்னதான் சொல்ல வர சின்னா?"

"இளவரசியை அவன் வேண்டாம்னு சொல்லிட்டான்.. சரி உங்க வழிக்கே நானும் வரன்!.. நீரூ யாரை இந்த வூட்டுக்கு மருமவளா கூட்டியாந்தாலும் சரி வரவ, மல்லிகாவுக்கு இணையாவாவது சீர் சினத்தி கொண்டு வரணும் இல்ல முடியாதுன்னா நா கைக்காட்டுறவ கழுத்துல அவன் தாலியைக்கட்டணும் சொல்லிடுங்க" என்றுவிட்டு நகர்ந்தார் சின்னப்பொண்ணு..

மாடியிலிருந்து எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தான் செழியன்..

ஒருமுடிவுடன் அறைக்குள் நுழைந்து தன்னை சுத்தம் செய்துக்கொண்டு வேறு ஆடைக்கு மாறி கண்ணாடி முன்பு நின்று தலையை சீவிக்கொண்டிருக்க, "செழியா" என்று கதவருகில் நின்றழைத்தார் வெங்கடாஜலம்..

"வாங்கப்பா!"

"செழியா உன் அம்மாக்காரி" எனக்கூறியவாரே அவர் உள்ளே நுழைய, "எல்லாம் கேட்டேன்- ப்பா!.. உங்களுக்கு விசியம் தெரியுமா? பெரியம்மா சொல்லிட்டாங்களா" என்று கேட்டான் செழியன்..

"ஆமா! பிரகாசம் கல்யாணத்துல தான் சொன்னாங்க, இப்போ என்ன பண்ணலாம் செழியா? உன் ஆத்தாக்காரி எதுலவேணும்னாலும் மனசிரங்கி ஒத்துழைப்பா? இந்த கவுரவம் மானம்னு அதுல மட்டும் மலையிரங்க அந்த அரட்டு அரட்டுவா!"..

"பெரியம்மா- கிட்ட பேசிப்பாக்கலாம் அப்பா" என்றான் செழியன்..

"என்னன்னு போயி பேசுவ? அவங்க நிலை தெரிஞ்சும் போயி உன் அம்மாக்காரி சொன்னதை சொன்னா காரி மூஞ்சிமேல துப்புறமாரியில்ல பாப்பாங்க"

"என்கிட்ட மூனுப்பவுன் நகை இருக்குப்பா!"

"என்னது" எனக்கேட்ட வெங்கடாஜலம் வேகமாக சென்று கதவை அடைத்துவிட்டு மகனிடம் வந்தவர் "இப்போ சொல்லு!.. பொருமையாவே பேசு, இங்க சுத்துற ஃபேனுலருந்து சுவரு வரைக்கும் உன் அம்மாக்காதை வச்சிருப்பா" என்றார்..

"நா மூனுப்பவுன் எடுத்து வச்சிருக்கேன் ப்பா என் வருங்காலத்துக்குன்னு!.. சம்பளத்தை அம்மாக்கிட்ட குறைவாத்தான் சொன்னேன், அதனால மாசம் இவ்வளவுன்னு என்னால எடுத்து வைக்க முடிஞ்சது.. மல்லிகா அண்ணி வீட்டுல எத்தனை பவுனு போட்டாங்க" என்று செழியன் கேட்க..

"அஞ்சு போட்டாங்க! அதுமில்லாம பண்டம் பாத்திரமெல்லாம் வச்சாங்க செழியா, அவங்க தகுதிக்கு மீறி சீர் செஞ்சாங்க.. அங்க ஆளுருக்கவும் கடனைவுடனையாவது வாங்கி பண்ணினாங்க! ஆனா இங்க?"..

"நகைய நான் கொடுத்துடுறேன்- ப்பா!.. நீங்க நைசா பெரியம்மாக்கிட்ட பேசிடுங்க, பெரியம்மா செஞ்ச மாறியிருக்கட்டும்.. எப்படியும் அக்காங்க ஏன் அவளுக்கு பண்ணின்னு சண்டைக்கட்ட போறதில்ல.. அம்மாவும் என்னஏதுன்னு அம்புட்டு ஆழமா போவாது"..

"சீர்சினத்திக்கே நாளு பக்கம் வேணும் செழியா உன் அம்மா கேட்கிறதை பாத்தா"..

"நாளு லட்சம் கூட கடன் வாங்கி கட்டிக்கொடுக்க மாட்டாங்களாமாம்!.. கவர்மென்ட் உத்தியோகம் பண்ணுறவனைத்தான் அவளுக்கு கட்டிவைப்பன்னு பெரியம்மா அப்படி பேசுச்சில்ல, அப்ப அந்த உத்தியோகத்துல இருக்குறவன் என்ன எதிர்பாப்பான்னு தெரியட்டும்" என்றான் செழியன்..

"சடைச்சிக்கிற நேரமா செழியா"

"அந்த கட்டச்சிக்கு நா இம்புட்டு பண்ணுறதே அவளை ஆசைப்பட்டுட்டன்னு தான்.. அவளைத்தாண்டி வேற ஒருத்தியை மண்டைக்குள்ளக்கூட யோசிக்க முடியலை!.. சும்மா பாத்து பாத்து என் மனசு மொத்தத்தையும் ஆக்ரமிச்சிட்டா அடச்சி" என்று சடைத்தான் செழியன்..

"யாரு முன்னாடி நிக்கன்னு உரைக்கிதா செழியா"..

"அவமேல கிறுக்கு பிடிச்சிட்டு ஆட்டினதுலருந்து எதிர்க்க நிக்கிறது யாரு எவருன்னுலாம் பாக்குறதில்லப்பா!"

"பாத்துப்பு உன் ஆத்தாக்காரி முன்னாடி வாயை வுட்டுப்புடாத! காறியமே கெட்டுப்போயிடும்" என்றார் வெங்கடாஜலம்..

"அந்தளவுக்கு இன்னும் முத்தலப்பா!.. அவளைக்கண்டாவே நா நானாருக்க மாட்டேன்னு தான் அவ இருக்குற திசைப்பக்கம் காலைவைக்கல!"..

"நா போயி என்ன ஏதுன்னு பேசிட்டு வரன் செழியா!.. உன்னை, என்னைவிட? என்ன சொல்லுவாங்க ஏதுன்னு உன் அம்மாதான் காத்துக்கிடப்பா" என்றார்..

"பெரியம்மா கடனை வாங்கியாவது அவளை என்கிட்ட தள்ளிவிடாம ஓயமாட்டாங்க, போயி பேசிட்டு வாங்கப்பா" என்றான்..

வெங்கடாஜலம் பேசிவிட்டு வந்து சபையில் வைத்தே விசியத்தைக்கூறினார்..

"நீக்கேட்டதை மாயவேல் போடலன்னாலும் அண்ணிப்போட்டு முறையா அனுப்பி வைக்கிரண்ணு வாக்கு கொடுத்துருக்காங்க சின்னா" என்றார்..

"அப்பறம் என்னம்மா? அவனும் தான் ராகவியை கட்டிக்கிறன்னு சொல்லுறானே!.. வயசு முப்பதை தான்டிடுச்சி, இனி வெளிய யாரையும் பாக்க வேனா!.. ராகவிக்கூட நம்ம வூட்டுப்பொண்ணு தான் அனுசரிச்சி போயிடுவா கண்ணால வேலையை ஆரம்பிச்சிடலாம்" என்றான் பிரகாசம்..

"இப்பவும் சொல்லுறேன் அவங்க பக்கம் பண்ணுறதுல எனக்கு திருப்தியா இல்லைன்னா அவளை திரும்ப அங்க துரத்தி விடவும் தயங்க மாட்டேன்" என்ற சின்னப்பொண்ணு மகனிடம் "செழியா!.. எனக்கு சத்தியம் பண்ணு, பண்டம் பாத்திரம் சீர்வரிசை நகையில நீ உள்ளவந்து இடைத்தரகர் வேலை பண்ண மாட்டேன்னு" என்று கையை நீட்டியபடி..

சத்தியம் செய்துக்கொடுத்தான் செழியன்.. அதன்பின்பு திருமணவேலையெல்லாம் வேகவேகமாகத்தான் நடந்தது ராகவிக்கு தெரியாமலே!.. இடையில் வேகத்தடையை போட்டது என்னவோ ராகவியின் வேண்டாத வேலைதான்.. அதில் முற்றிலும் உடைந்து போனான் செழியன்..

அந்த ஒரு விசியம் அவன் மனதை ஆழமாய் அரிக்க, அவளிடமே விசியத்தைக்கேட்டு தெளிவுப்படுத்திக்கொள்ளத்தான் அவளை அழைத்ததே!..

"ராகவி என்னை கல்யாணம் கட்டிக்கிறதுல உனக்கு விருப்பமா" என்று செழியன் கேட்டதும் அவனை புரியாப்பார்வை பார்த்தாள்..

"கண்ணாலத்தை விரல் விட்டு எண்ணுற நாள்ல வச்சிக்கிட்டு இப்போ வந்து கேனப்பையன் கணக்கா கேட்குறானேன்னு நினைக்காத!.. என் விருப்பத்தை மட்டுமே முன்னிருத்தி எல்லாம் நடக்குறமாறி எண்ணம் அதான் ஒருவார்த்தை உன்கிட்ட கேட்குறேன்.. உள்ளதை சொல்லிட்டா பின்னாடி பிரச்சனை இல்லைப்பாரு" என்றான் செழியன்..

"எனக்கு விருப்பம் தான் மாமா!"

"யாரையாவது விரும்புறியா ராகவி"..

"இல்.இல்லை மாமா!"

"உண்மையா?"

"இல்ல மாமா, யாரையும் விரும்பல எனக்கு இந்தக்கல்யாணத்துல சம்மந்தம் தான்" என்றாள் ராகவி..

"என்னோட தான் இனி உன் வாழ்க்கை ராகவி!.. யோசிச்சி பதில் சொல்லு பட்டு பட்டுனு பதில் சொல்லனும்னு அவசியம் இல்ல"..

"வீட்டுல முடிவுப்பண்ணினதுக்கு நா மறுப்பு சொல்லவே இல்ல மாமா!.. அத்தை சொல்லி நா எதையும் வேண்டாம்னு ஒதுக்கினதில்ல!" என்றாள் ராகவி..

"நீ ஒதுக்கினதில்ல, ஒடுங்கி தனியா போயிடாத, பத்திரம் நா போயிட்டு வரன் பாக்கலாம்" என்றுவிட்டு சென்றுவிட்டான் செழியன்..

ராகவி சில நிமிடம் அப்படியே நின்றாள்!.. பின் கால் கரண்ட் ஷாக்கடிப்பது போல இறுக்கவும், தன்னை நிலைப்படுத்திக்கொண்டு தையல்க்கடையை நோக்கி நடந்தாள்..

அன்று முழுவதும் அவளைத்தான், அவளரியாமல் பின்தொடர்ந்தான் செழியன்.. அன்றிரவு கோவிலில் அவள் பேசியதைக்கேட்டு மொத்தமாய் இறுக்கமாகி கடைசியில் உயிருள்ள ஜடமாகிப்போனான்..
 

Advertisement

Advertisement

Back
Top