ஏழு ஸ்வரங்களும் மௌனம் 08

Advertisement

swarangal

New member
Member
அதிகாலையிலேயே செழியனின் வீடு ஆரவாரமாக இருந்தது..

"பிரகாசம், அந்த நாதஸ்வரம் வாசிக்கிறவனுக்கு ஃபோன் பண்ணிட்டியா?" என்று வெங்கடாஜலம் கேட்க..

"பண்ணிட்டேன்- ப்பா நேரத்துக்குள்ள வந்துடுவாங்க" என்றான் பிரகாசம்..

"சரி, இந்தா இந்த மாவிலையை வாசநிலவுக்கால்ல கட்டிடு!.. அப்படியே பூமாலை வேலை முடிஞ்சதான்னு பாத்துக்கோ நா தயாராகிட்டு வந்துடறேன்" எனக்கூறி மாவிலையை கொடுத்துவிட்டு நகர்ந்தார்..

பிரகாசம் வெளியே வர, மல்லிகா கோலம் போட்டு முடித்து அதற்கு வண்ணப்பொடியை தூவிக்கொண்டிருந்தாள்..

"இன்னுமா மல்லிகா, போட்ட வரைக்கும் போதும் போயி குளிச்சிட்டு வா" எனக்கூறியவாரே எக்கி, மாவிலை தோரணத்தை கட்டினான்..

"அப்பா வரேன்னு சொன்னாரு!.. பஸ் ஸ்டாண்டுலருந்து நடந்தே வரமுடியாது நீங்க ஒரெட்டு போயி கூட்டியாந்திரிங்களா?" என்று மல்லிகா கேட்க..

"எப்போ வருவாருன்னு கேட்டு சொல்லு!.. எனக்கு வேலையிருந்தாலும் ஆளுங்களை அனுப்பி வைக்கிறேன்" என்றான் பிரகாசம்..

சம்மதமாய் தலையசைத்து வேலையை முடித்துவிட்டு உள்ளேச்சென்றாள் மல்லிகா..

'இங்க மட்டும் தான் பூமாலை கட்டியிருக்காங்க?.. வீட்டுக்குள்ள இன்னும் எதும் பண்ணல, அதுக்குள்ள எங்க போயிட்டாங்க ஆளைக்கானம்' என அவர்களை காணாமல் ஃபோனை போட்டான் பிரகாசம்..

"அண்ணா, பக்கத்துல டீ குடிக்க வந்தோம்.. இதோ உடனே வந்துடரோம்!".

"சீக்கிரம் வாங்கப்பா! நேரம் போயிட்டுருக்கு" என்றுவிட்டு ஃபோனை வைத்தான் பிரகாசம்..

பட்டுப்புடவை சரசரக்க, கழுத்து நிறைய நகைகளை அணிந்து வந்தார் சின்னப்பொண்ணு..

"அம்மா எதுக்கு இம்புட்டு நகை, பாக்குறவங்க கண்ணுப்பட்டுறப்போவுது கழட்டி வை" என்றான் பிரகாசம்..

"வாங்கிறதே போடுறதுக்குத்தான் டா!.. பீரோவுல பூட்டிவைக்கவா அம்புட்டு காசைப்போட்டு எடுத்து வைக்கிறது"...

"அதுக்குன்னு எல்லாத்தையுமா மாட்டிக்குவாங்க!"

"பிரகா போயி பின்னாடி சமையக்காரங்க என்ன பண்ணுறான்னு பாரு!.. அப்படியே? மாடியில பந்திப்போடுறதுக்கு சவுரியமா அந்த பெஞ்சை சேர்த்து போட்டுட்டு வந்துடு" என்றார் சின்னப்பொண்ணு..

முனகியபடியே நடந்தான் பிரகாசம்..

ஆறரை மணிக்கெல்லாம் அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் என வரத்தொடங்கியிருந்தனர்..

வாசலில், சின்னப்பொண்ணு வெங்கடாஜலம் இருவரும் வந்தவர்களை வரவேற்றவாரு நின்றிருந்தனர்..

சமைத்து வைத்திருந்த உணவுகளை மாடிக்கு எடுத்துச்செல்லும் வேலையாட்களுக்கு பிரகாசம் மல்லிகா, இருவரும் உதவிசெய்ய, ஆறு நாற்பதுக்கு குடும்பத்தார் அனைவரும் சபையில் கூடினர்..

தம்பதியர்கள் கிழக்கு பார்த்தவாறு அமர, பாயை விரித்து போட்டாள் மல்லிகா..

பூஜைக்கு தேவையான மஞ்சள் குங்குமம், பால், பழங்கள், வெற்றிலைப் பாக்கு என அனைத்தையும் தாம்பூலத்தில் வைத்து எடுத்துக்கொண்டு வந்தார் சின்னப்பொண்ணு..

அதை வாங்கி பாயில் ஒரு ஓரமாக வைத்தாள் மல்லிகா..

பச்சை நிறப்பட்டுப்புடவையில், நெற்றியில் பெரிய குங்கும பொட்டோடு புன்னகையுடன் இறங்கி வந்தாள் ராகவி..

"நேரமாச்சு இன்னும் என்ன பண்ணிட்டிருந்த வந்து உக்காரு" என்று சின்னப்பொண்ணு மெல்லிய குரலில் அரட்ட,

"ஆறு நாப்பத்தஞ்சிக்குதானே நேரம் குறிச்சிக்கொடுத்தாங்க!.. அப்படி என்ன உனக்கு தங்காதத்தனம்" என ஓரங்கத்தியிடம் எரிச்சலாக மொழிந்த ஜகதா மருமகளை அழைத்து வந்து தானே அமரவைத்தார்..

"அவங்க வூட்டுல விசேஷம் நடந்தாலும் அவங்கத்தான் முன்ன நின்னு பண்ணுவாங்க, என் வூட்டுல விசேஷம் நடந்தாலும் அவங்க தான் முன்ன நின்னு பண்ணனுமா? இதென்ன அநியாயம்! அந்த மனுஷன்- கிட்ட சொல்லுறதும் செவடன் காதுல சங்கை ஊதுரதும் ஒன்னு" என்று முனுமுனுத்துக்கொண்ட சின்னப்பொண்ணு எதிர்ப்புறமாக வந்த அலமேலுவைக்கண்டு வரவேற்றார்..

பட்டு வேஷ்டி சட்டையில் புது மாப்பிள்ளைக்கே உண்டான அழகிலும் கம்பீரத்திலும் ஜொலித்த செழியன் மனைவியினருகில் அமர்ந்துக்கொண்டான்..

அவனின் பிரத்யோக வாசனையை உணர்ந்த ராகவியின் கண்கள் லேசாக கலங்க, தவிப்புடன் அவனை ஏறிட்டு பார்த்தாள்..

அவள் தலையில் சூடியிருந்த மல்லிகைப்பூ மணம் காற்றில் கலந்து செழியனின் சுவாசத்தை சோதித்து உடலை உஸ்னமாக்கும் வேலையை சரியாக செய்தது..

உள்ளுக்குள்ளும், உடலிலும் அவனுக்கு பல வகையான உணர்வுகள் பீறிட்டு எழுந்தாலும் அவன் முகம் என்னவோ அத்தனை சாந்தமாக இருந்தது..

எந்தச்சலனமுமின்றி அவன் பார்க்கும் பார்வையைக்கண்ட ராகவியின் நிலையோ? அமைதியான குளத்தில் கல்லை எரிந்து குழப்பியது போலிருந்தது..

வயதான சுமங்கலிப்பெண்கள் சிலர் வந்து ராகவியின் கழுத்தில் மஞ்சள் கயிற்றை கட்டிவிட்டு செழியன் கட்டிய தாலியை கழட்டினர்..

பின்பு மஞ்சள் கயிற்றில், தாலி சில உருக்குகளை கோர்த்து கயிற்றின் இருபுறமும் ஜயினில் சேர்த்து கட்டி ராகவிக்கு அணிவிக்க, நாதஸ்வரம் ஒலித்தது..

மஞ்சள் குங்குமம் வைத்து பூத்தூவி ஆசிர்வாதம் செய்ய, அவர்கள் காலில் விழுந்து எழுந்தாள் ராகவி..

வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக சடங்கை செய்ய, "அத்தை நீங்களும் போங்க" என்று சின்னப்பொண்ணுவிடம் கூறினாள் மல்லிகா..

"குங்குமம் வச்சி முடிஞ்சவங்களை சாப்பிட கூட்டிட்டுப்போ மல்லிகா" எனக்கூறிவிட்டு வந்து மருமகளுக்கு குங்குமம் வைத்து ஆசிர்வதித்தார் சின்னப்பொண்ணு..

சடங்கு முடியும் தருவாயில் ஆண்கள் பந்தியை கவனிக்க மாடிக்கு சென்றுவிட்டனர்..

பிரச்சனை எப்போதும் நாம் அறிந்து வருவதல்ல!.. எதிர்பார்க்காமல் ஏதோ ஒரு பக்கமிருந்து நம்மை அழுத்திக்கொள்ள சிலரின் வாய்மூலம் வீடுதேடி வந்துவிடுகிறது..

விசேஷம் முடிந்த நிலையில், நெருங்கிய சொந்தங்கள் மட்டும் நடுவீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, "பொண்ணே!.. நல்லச்செய்தி எதாவது இருக்கா?" என்று மல்லிகாவை பார்த்தவாறே சின்னப்பொண்ணுவிடம் கேட்டார் அலமேலு..

சின்னப்பொண்ணுவின் முகம் சுருங்க, அதைக்கண்டு அந்தப்பேச்சை விடுத்த அலமேலு.. "நேத்தைக்கு இளவரசிக்கு கல்யாணம் முடிஞ்சது தெரியுமா" என்று கேட்க..

"ம்!.. பொண்ணும் மாப்பிள்ளையும் சாமிக்கும்பிட்டுட்டு இருந்தப்ப பாத்தேன், அண்ணன் தான் முகத்தை திருப்பிட்டு போவுதுன்னா? இளவரசி என்னை யாரோ மாறி பாக்குறா" என்று வருத்தத்துடன் கூறினார் சின்னப்பொண்ணு..

"அவக்கவலை அவளுக்கு!.. சரி, உன் சின்ன மருமக அஞ்சுப்பவுனு போட்டுட்டு வந்தாளாமே அது செழியன், தான் வருங்காலத்துக்குன்னு எடுத்து வச்சதாம்.. ராகவிக்கூட கண்ணாலப்பேச்சி எடுக்கவும் நகைப்போடாமயிருந்தா கவுரவமா இருக்காதுன்னு அவனே கொடுத்து போடச்சொன்னானாம் அப்படியா" என்று அலமேலு கேட்க..

"என்ன சொல்லுறீங்க? செழியன் போட்டானா!"

"அப்படித்தான் அங்க கல்யாண வீட்டுல பேசிக்கிட்டாங்க"..

"அங்க எப்படி செழியன் விசியம்"..

"அட உனக்கு செய்தி தெரியாதில்லை, உன் ஓரங்கத்தியோட முதப்பிள்ளை புருஷன், நம்ம இளவரசி புருஷனுக்கு சுத்தி வளைச்சு பாத்தா ஏதோ உறவுமுறைப்போல!.. அவத்தான் விசியத்தை சொல்லியிருக்கா? அது இளவரசிக்காதுக்கு வந்ததும் என்னை கூப்பிட்டு கேட்டா? எனக்கென்ன தெரியும் அதான் உன்னை கேட்டேன்" என்றார் அலமேலு..

சின்னப்பொண்ணுவின் முகம் கருத்துப்போக, "என்ன பொண்ணே உனக்கே விசியம் தெரியாதுப்போல!.. உன் மவன் செய்யக்கூடிய ஆளா அதும் உன்னை அறியாம" என்று அலமேலு கேட்க..

"செழியா" எனக்கத்தி அழைத்திருந்தார் சின்னப்பொண்ணு..

சுற்றியிருந்தவர்கள் அனைவரின் பார்வையும் சின்னப்பொண்ணுவிடம் திரும்ப, அலமேலு நடப்பதை ஆர்வமுடன் பார்க்க ஏதுவாக அமர்ந்தார்..

"என்ன சின்னா விசேஷ வூட்டுல குரலை உசத்திக்கிட்டு!.. சொந்தபந்தமெல்லாம் கூடியிருக்காங்க வாயடைக்கி பேசு" என்றார் வெங்கடாஜலம்..

"இவளுக்கு திடீருண்ணு என்ன கிறுக்கு புடிச்சிக்கிச்சின்னு இப்படி கத்துறா?" என்று அமலாவிடம் கேட்டார் ஜகதா..

செழியன் பிரகாசம் மல்லிகா மூவரும் மாடியிலிருந்து இறங்கி வர, செழியனின் பார்வை ராகவியிடம் மட்டுமே நிலைத்திருந்தது...

'இவ நிக்கிற பொசிஷனை பாத்தா இவளுக்கும் அம்மா கத்தினதுக்கும் சம்மந்தல் இல்லை' என நினைத்து நிம்மதிப்பெருமூச்சு விட்ட செழியன் 'எதுக்கு கத்தினாங்க என்னவா இருக்கும்' என்ற யோசனையுடன் வெங்கடாஜலத்தினருகில் வந்து நின்றான்..

"வாடா நல்லவனே உன்னைத்தான் எதிர்பார்த்தேன்" என்றார் சின்னப்பொண்ணு நக்கலாக..

"என்னம்மா" என்று முயன்று கோவத்தை உள்ளுக்குள் அடக்கிக்கொண்டு கேட்டான் செழியன், சுற்றியிருந்த அனைவரின் பார்வையும் தன்மீது படிவதைக்கண்டு..

"வாயடங்கு சின்னா!"

"நான் எதுக்குய்யா அடங்கனும்" என்று ஆவேசமாக கேட்ட சின்னப்பொண்ணு செழியனிடம் "என்மேல சத்தியம் பண்ணி சொல்லுடா, உன் பொண்டாட்டி போட்டுட்டு வந்த அஞ்சுப்பவுனு அவவூட்டுலருந்து தான் போட்டாங்கன்னு" எனக்கேட்டு அவன் கையை எடுத்து தன், தலையின் மீது வைத்துக்கொண்டார்..

ஜகதா அரண்டுபோனார்.. வெங்கடாஜலம் பதற்றமாக, "அம்மா" என்று சற்று கோவமாக அழைத்து சுற்றத்தை உணர்த்த முயற்ச்சி செய்தான் செழியன்..

"செழியா எனக்கு உண்மை தெரிஞ்சே ஆகனும்.. என் காதை எட்டின விசியம் நிசமா?.. நீதான் அந்த கோட்டிச்சிறிக்கிக்கு அஞ்சுப்பவுன் போட்டியா" என்று சின்னப்பொண்ணு கேட்க..

ஒன்றும் புரியாத நிலையில் குடும்பத்தாரை பார்த்துக்கொண்டிருந்தாள் ராகவி..

"அமுக்கனாட்டம் நிக்காத செழியா ஆமாவா இல்லையா?, ரெண்டுல ஒன்னைச்சொல்லு" என்று ஆத்திரமாக கேட்டார் சின்னப்பொண்ணு..

"ஆமாம்மா" என்றான் செழியன் சன்னமான குரலில்..

கணவனை பார்த்த சின்னப்பொண்ணு "உங்களுக்கு விசியம் முன்னமே தெரியுமா?" என்று கேட்க..

"அம்மா, அப்பாவுக்கு தெரியாது" என்று செழியன் பதில்க்கூற, "எது உங்கப்பனுக்கு தெரியாது அதை நான் நம்பணுமா?.. அண்ணன் வூட்டுல அண்டா குண்டா உடைஞ்சாக்கூட உங்கப்பன் காதை எட்டிடும்.. அஞ்சுப்பவுன் நீ தூக்கிக்கொடுத்தது உங்கப்பாவை இடையில இழுக்காமத்தான் பண்ணியாக்கும்" என்று சீற்றத்துடன் கேட்டார் சின்னப்பொண்ணு..

வெங்கடாஜலம் பதில் பேசமுடியாமல் நிற்க, "வூட்டுல பெரிய மனுஷனான நீயும், உன் சின்ன மவனுமா சேர்ந்து என்னை ஏமாத்திட்டிங்கல்ல? அந்தத்தையக்காரிக்கு நீ அஞ்சுப்பவுன் கொடுக்குற அளவுக்கு உனக்கு சம்பாத்தியம் வருது அப்போ? பொண்ணுக்கொடுக்குற குடும்பம் வக்கெத்து போயிருந்தாலும் என் அண்ணி போடுவாங்கன்னு வாய் நிறைய சொன்னீரே? அப்பவே நா சுதாரிச்சிருக்கணும்.. தான் பிள்ளைக்கே நகைப்போட நாதியில்லாதவங்க தான் ஊராவூட்டுப்பிள்ளைக்கு போட்டு அனுப்பியிருப்பாங்களான்னு!.. இன்னும் என்னென்ன அப்பனும் மவனும் எனக்கு தெரியாம செஞ்சிங்க இந்த தையக்காரியை இங்க கூட்டிட்டு வரதுக்கு" என்று வார்த்தைகளை கடித்து துப்பி கேள்விகளைக்கேட்க..

ஜகதாவுக்கு கண்ணில் நீர்க்கோர்த்தது...

சொந்தங்கள் முன்னிலையில் தந்தைப்பெயரை இழுத்து, அவமானப்படுத்தப்பட்டதை கேட்ட ராகவிக்கு கோபத்திலும் இயலாமையிலும் முகம் சிவந்து போனது...

ஜகதாவின் முகத்தை பார்த்தே செழியனிடம் தான் வாங்கியிருக்கிறார் என்பதை கணித்தவளுக்கு உள்ளம் இயலாமையில் இறுகிப்போனது..

"சீராவது தான் காசுல செஞ்சாங்களா? இல்லை! அதுக்கும் நீங்கதான் இங்கருக்குறதை தூக்கிக்கொடுத்து விமர்சையாக பண்ணுங்கனு சொன்னீங்களா?" என்று கேட்ட சின்னப்பொண்ணு விடுவதாக இல்லை..

"சின்னா!"..

"வாயை மூடுய்யா!.. அவன்தான் சின்னப்பையன் ஏதோ கிறுக்கு பிடிச்சுப்போயி நகையை தூக்கிக்கொடுத்துருக்கான்னா? நீயி என்கிட்ட ஒருவார்த்தை என்ன ஏதுன்னு கேட்காம அவனுக்கு ஒத்து ஊதியிருக்க? அப்ப இங்க எனக்கென்ன மரியாதை?" என்று ஆத்திரத்துடன் கேட்டார் சின்னப்பொண்ணு..

விஷேச வீடு, சின்னப்பொண்ணுவின் விஷ வார்த்தைகளால் விதிர்விதித்து போனது.. வந்திருந்த சொந்தங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை பார்த்துக்கொள்ள, அலமேலு மட்டும் சண்டை உண்டாக்கிய திருப்தியில் நாடியை தடவிக்கொண்டார்..

உறவினர்களின் முன்னிலையில் குடும்ப மானம் கப்பலெருவதில் உண்டான அதிருப்தியில் அயர்ச்சியாக மனைவியை பார்த்த வெங்கடாஜலம்.. "அறிவுருக்கா இல்லையா சின்னா? விசேஷத்துக்கு வந்தவங்க இன்னும் வாசலைத்தாண்டல, அதுக்குள்ள நடுவூட்டுல நின்னுட்டு கூப்பாடு போடுற? எதுவா இருந்தாலும் பிறவு பேசிக்கலாம் உள்ளப்போ" என்றார் அதட்டலாக..

"நான் எதுக்குய்யா உள்ளப்போகனும்!.. தப்பு பண்ணின நீங்க அமுக்கமா நிப்பிங்க? நா உள்ள ஓடி ஒளியனுமா?" என்று பல்லைக்கடித்தபடி கேட்டவர் ராகவியை பார்த்தார்..

அழுகையை அடக்கிக்கொண்டு கலங்கிய விழியுடன் தலைகுனிந்து நின்றிருந்தாள் ராகவி..
 
எபிசோட் கொஞ்சம் பெருசா இருந்துருக்கலாம்...!!???

அலமேலு 😡😡😠😠 வந்த வேலை நல்லபடியாக முடிஞ்சதா 😤😤
 

Advertisement

Advertisement

Back
Top