Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஓவியப்பாவை 10....

Advertisement

அத்தியாயம் 10.



திட்டமிட்டபடியே காமாட்சியும் பிரசாந்தும் மாங்காடு போய் விட்டார்கள். ராகுல் அருணை அழைத்துக்கொண்டு சரியாகப் பத்து மணிக்கு வந்து விட்டான். குளித்து காலை உணவை செய்து கொடுத்து மதியத்துக்கும் தம்பிக்கும் அம்மாவுக்கும் சாப்பாடு கட்டிக்கொடுத்து அனுப்பி விட்டாள் ஸ்வேதா. அதிகாலையிலேயே குளித்து முடித்து விட்டு மற்றவர்கள் வரவுக்காகக் காத்திருந்தாள். ஓவியப்பாவையின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. அதைப் பார்த்தால் இத்தனை நாளும் முக பாவங்கள் மாறியது போன்றே தெரியவில்லை. ஸ்வேதாவுக்கே தன் கண்களை நம்ப முடியவில்லை. ஒரு வேளை எல்லாமே பிரமையாக இருக்குமோ? தான் தான் ஏதாவது கற்பனை செய்து கொள்கிறோமோ? என்று கூட எண்ணத் தோன்றியது. ஆனால் முந்தைய இரவு ரணதீரனைப் பற்றி நினைத்ததும் ஓவியப்பாவையின் முகம் கடூரமாக மாறியதும் வாளின் நுனியில் ரத்தம் சொட்டியதும் நினைவுக்கு வர உடல் சிலிர்த்தது அவளுக்கு. இது என்ன மாதிரியான அனுபவம்? எனக்கு ஏன் இப்படி நிகழ வேண்டும்? இவற்றை நான் ராகுலிடம் சொல்வதா வேண்டாம்? என்று எண்ணிக்குழம்பிக்கொண்டிருக்கையிலேயே அவர்கள் வந்து விட்டார்கள்.



"வாங்க ராகுல், வாங்க அருண் சார்!" என்று வரவேற்றாள்.



வந்த உடனேயே வேலையில் இறங்கினான் அருண்.



"நீங்க சொன்ன பெட்டி எங்கே இருக்கு?"



"வாங்க காட்டுறேன்" என்று இருவரையும் அழைத்துச் சென்றாள். சமையலறையின் ஒரு ஓரத்தில் மற்றொரு சிறிய அறை இருந்தது. அது தான் சாமி அறை. அதில் அழகாக ஷெல்ஃபில் சாமி படங்கள் மாட்டப்பட்டிருந்தன். அதன் கீழே மரச் சட்டத்தில் சற்றே பெரிதாக ஒரு பெட்டி இருந்தது. அதற்கு குங்குமப் பொட்டு வைக்கப்பட்டிருந்தது. அதற்கு மேலே தான் ஓவியப்பாவையின் படமும் இருந்தது. ஸ்வேதாவின் கண்கள் அவளையும் அறியாமல் ஓவியப்பாவையின் பக்கம் தாவின. கோபம் இல்லாமல் சாந்தமாக சற்றே சிரித்தபடி இருந்தாள் அந்தப் பாவை. அதுவே பெரும் ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு. அருண் அந்த ஓவியத்தைப் பார்த்தான். நெற்றி சுருங்கியது.



"இந்த ஓவியம் ...இதுல இருக்குற முகம் எங்கியோ பார்த்தா மாதிரியே இருக்கே?" என்றான் அருண். அவன் குரல் மிகவும் கிசுகிசுப்பாக இருந்தது. அப்போது தான் ராகுல் அந்தப் படத்தைப் பார்த்தான்.



"ஆமா! ஸ்வேதா! நீ கொஞ்சம் கொஞ்சம் இந்த ஓவியத்துல இருக்குற பொண்ணு மாதிரி தான் இருக்கே" என்றான்.



"இல்லை இல்லை! இது ஸ்வேதாவோட படம் இல்ல! இவங்க எனக்கு தெரிஞ்சா மாதிரியே இருக்காங்க. எனக்கு என்னவோ பண்ணுது ராகுல்! நெஞ்சை அடைக்குறா மாதிரி இருக்கு! தலையைச் சுத்துது" என்றான் அருண்.



இருவரும் அருணை ஏறிட்டார்கள். அவன் உடல் தொப்பமாக வியர்த்திருந்தது. முகம் வெளிறி மூச்சு விடவே சிரமப்படுபவன் போல இருந்தான். பயந்து போனான் ராகுல்.



"நீங்க முதல்ல வெளிய வாங்க அருண்! ஸ்வேதா மெல்ல இவரை வெளிய கூட்டிக்கிட்டுப் போயிடலாம். இந்த அறையில காத்தோட்டமே இல்லியா அதான் இவருக்கு ஒரு மாதிரி வந்திடுச்சு! என்று சொல்லியபடி அருணை கைத்தாங்கலாக இருவரும் மீண்டும் ஹாலுக்கு அழைத்து வந்தார்கள். அங்கிருந்த சாய்வு நாற்காலி ஒன்றில் அவனை அமர வைத்து இருவரும் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்கள்.



அருணின் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டிருந்தது. மூச்சும் கூட மிகுந்த கஷ்டப்பட்டு தான் வந்தது. கண்கள் மூடியபடியே இருந்தன. சற்று நேரம் சென்றதும் அவனே தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான். இமைகள் மெல்லத் துடித்தன. கண்களை மெல்லப் பிரித்தான்.



"அருண்! அருண்! உங்களுக்கு என்ன ஆச்சு? என்ன செய்யுது உடம்புக்கு? டாக்டர் கிட்டப் போகலாமா?" என்றான் ராகுல்.



மெதுவாக எழுந்து அமர்ந்தான் அருண்.



"எனக்கு ஒண்ணுமில்ல! என்னன்னு தெரியல்ல! அந்த ஓவியத்தைப் பார்த்ததும் எனக்கு என்னென்னவோ தோணிச்சு! எங்கியோ குதிரையில போகுறா மாதிரியும், யாரோ இவங்களைக் கத்தியால குத்துறா மாதிரியும் தோணுச்சி! அந்த ஓவியத்துல இருக்குறவங்க கூட நான் நெருங்கி பழகியிருக்கேன்னு ஏதோ சொல்லிச்சு. ஒரு மாதிரி மயக்கமா வந்தது" என்றான்.



ஸ்வேதாவை யோசனையாகப் பார்த்தான் ராகுல். ஸ்வேதாவோ வேறு சிந்தனையில் இருந்தாள். அவளுக்கு அருண் சொல்லியது ஆச்சரியமாக இல்லை. காரணம் அவளும் அந்த ஓவியத்தை பல வடிவங்களில் பார்த்திருக்கிறாளே! ஆனால் ராகுலுக்கு அது போன்ற அனுபவங்கள் எதுவும் இல்லாததால் அவனுக்கு அருண் சொன்னது பைத்தியக்காரத்தனமாகத் தோன்ரியது.



"கவலைப் படதீங்க அருண்! உங்களுக்கு ஒண்ணுமில்ல! அந்த அறையில ஆக்சிஜன் கொஞ்சம் கம்மியா இருந்திருக்கும். அதனால மூளைக்குப் போற ரத்த ஓட்டம் குறைஞ்சி இந்த மாதிரி மாயத் தோற்றங்கள் ஏற்படலாம். மூச்சை நல்லா இழுத்து விடுங்க சரியாயிரும்" என்றான்.



அருண் இப்போது எவ்வளவோ தெளிந்து விட்டான். எழுந்து அமர்ந்தான்.



"இல்ல ராகுல்! எனக்கென்னவோ இது மாயத் தோற்றம் மாதிரி தெரியல்ல! நான் எப்பவோ எங்கேயோ அந்த இளவரசியோட இருந்திருக்கேன். அவங்களைக் காப்பாத்தியிருக்கேன். அது மட்டும் நிச்சயமாத் தெரியுது எனக்கு" என்றான்.



"ஏன் ஸ்வேதா! அந்த ஓவியத்துல இருக்குறது இளவரசியா?" என்றான் ராகுல்.



திடுக்கிட்டாள் அவள். அந்த ஓவியப்பாவையை யார் என்றே அவளுக்குத் தெரியாதே! அவளுக்கு என்ன? அவள் தாய் தந்தைக்கே தெரியாதே? அப்படி இருக்க அருண் ஏன் அவளை இளவரசி என்றான். ஒருவேளை அது போல உடையணிந்து இருப்பதாலா? தனக்குள் குழம்பினாள்.



"சரி தான்! நீயும் மயக்கமாயிட்டியா? ஸ்வேதா" என்று உலுக்கினான். சட்டென விழித்துக்கொண்டாள்.



"என்ன? என்ன கேட்ட?"



"கெட்டுது போ! அந்த ஓவியத்துல இருக்குறது இளவரசியா? அவங்க பேர் விவரம் ஏதாவது உனக்குத் தெரியுமான்னு கேட்டேன்"



தலையை ஆட்டி மறுத்தாள் ஸ்வேதா!



"ரொம்ப வருஷமா இந்த ஓவியம் எங்க குடும்பத்துல இருக்கு. அவ்வளவு தான் எங்களுக்குத் தெரியும். ஆனா அவங்க யாரு? பேரு என்ன? எதுக்காக அவங்க ஓவியத்தை எங்க வீட்டு சாமி அறையில வெச்சிருக்கோம் இது எதுவும் எங்களுக்குத் தெரியாது"



"அப்ப கவலையை விடுங்க அருண்! இது பழைய காலத்தைச் சேர்ந்த ஏதோ ஒரு ஓவியர் தன் கற்பனையியல் உதிச்ச அழகான உருவத்தை ஓவியமா வரைஞ்சு வெச்சிருக்காரு. அவ்வளவு தான். இப்படி ஒரு பெண் உண்மையிலேயே இருந்திருக்கணும்ன்ற கட்டாயம் இல்ல! " என்றான்.



ஸ்வேதாவுக்கும் அருணுக்கும் ஒரு நொடி அது உண்மையாக இருக்குமோ எனத் தோன்றியது. அடுத்த கணம் சாமி அறையிலிருந்து தடாலென சத்தம் கேட்டது. தூக்கி வாரிப்போட்டது மூவருக்கும். மூவரும் ஓரே நேரத்தில் அந்த அறைக்கு ஓடினர். அங்கே அந்த மரப்பெட்டியின் மேல் ஒரு பெரிய வாள் ஒன்று விழுந்திருந்தது. அதைப்பார்த்ததும் திடுக்கிட்டு நின்றார்கள் மூவரும். அருண் தான் தைரியமாக அதை நெருங்கி அந்த வாளைத் தூக்கினான். ஓவியப்பாவையின் முகம் அவனுக்கு ஏதோ கட்டளையியோடுவது போலத் தோன்றியது. தன்னையும் அறியாமல் "அப்படியே செய்கிறேன் இளவரசி செண்பகவல்லி" என்றான். வாளைப் பிடுங்கி தள்ளி வைத்து விட்டு அவனை அழைத்துக்கொண்டு மீண்டும் ஹாலுக்கு வந்தானர் மற்ற இருவரும்.



"என்ன ஆச்சு அருண் உங்களுக்கு? ஏன் என்னவோ மாதிரிப் பேசுனீங்க?"



"நான் நானா? நான் என்ன சொன்னேன்?"



"அப்படியே செய்கிறேன் இளவரசின்னு ஏதோ பேரு வேற சொன்னீங்க? உங்களுக்கு என்ன ஆச்சு? நீங்க வீட்டுக்குக் கிளம்புங்க! நானும் ஸ்வேதாவும் பெட்டியைத் திறந்து பார்த்துட்டு என்ன இருந்ததுன்னு சொல்றோம்" என்றான். அவனுக்கு அருண் நல்லபடியாக வீட்டுக்குப் போனால் போதும் என்றாகி விட்டது.



"இல்ல ராகுல்! இதுல நான் சம்பந்தப்பட்டிருக்கேன். என் அறிவுக்குப் புலப்படாம ஏதேதோ நடக்குது. பார்த்தீங்க இல்ல? நாம பேசிக்கிட்டு இருக்கும் போதே பெட்டி மேல வாள் விழுந்தது. இதுல என்னவோ இருக்கு" என்றான்.



"பழைய பெட்டியில் என்ன இருக்க முடியும் அருண்! பாருங்க வெளியில காத்து நல்லா அடிக்குது. அந்தக் காத்துல வாள் கீழே விழுந்திருக்கலாம். ஒரு சாதாரண விஷயத்தை ஏன் இப்படி பெருசு பண்றீங்க?" என்றான்.



அது வரையில் மௌனமாக இருந்த ஸ்வேதா பேசினாள்.



"இல்ல ராகுல்! காத்து அடிச்சு அந்த வாள் விழல்ல! நல்லா யோசிச்சுப் பாருங்க! நாம முத தடவை உள்ளே போகும் போது நீங்க என்ன சொன்னீங்க? அந்த அறையில ஆக்சிஜன் கம்மியா இருக்கும். அதான் அருணுக்கு மயக்கமா வந்ததுன்னு சொன்னீங்க இல்ல? அப்படி காத்தே அடிக்க முடியாத எடத்துல வாள் காத்துல ஆடி எப்படி விழும்?" என்றாள்.



அவளது அந்தக் கேள்வி ராகுல் வாயை மூடியது. ஸ்வேதா தொடர்ந்தாள்.



"அது மட்டுமில்ல ராகுல்! எனக்கே சில நம்ப முடியாத விளக்கம் கொடுக்க முடியாத சில நிகழ்ச்சிகள் நடந்துது."



"என்ன சொல்ற நீ? இது வரையில நீ சொன்னதே இல்லையே?"



"ஆமா! சொன்னா எனக்குப் பைத்தியம் பிடிச்சுட்டுதுன்னு நீங்க நினைக்கலாம். அதான் சொல்லல்ல! ஆனா என்னை மாதிரியே இவருக்கும் சில அனுபவங்கள் ஏற்படவே எனக்கு ஏற்பட்டது என்னோட மூளை பாதிப்பினால இல்லைன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு. அதான் சொல்றேன்"



"சொல்லு ஸ்வேதா! நான் உன்னைத் தப்பாவே நினைக்க மாட்டேன்" என்றான் ராகுல்.



முதல் முதலில் ஓவியப்பாவை சிரித்தது முதல் படியில் மயங்கி விழுந்தது தொடங்கி நேற்று ரணதீரன் பெயரைச் சொன்னதும் அவளது முகம் கடூரமாய் மாறியது வரையில் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள். அவள் சொல்லி முடித்ததும் அங்கே ஊசி விழுந்தால் கூடக் கேட்குமளவு மௌனம் நிலவியது. மூச்சு விடும் சத்தங்கள் கூடக் கேட்கும் அளவு மௌனம் நிலவியது அங்கு.



"என்னால நம்பவே முடியல்ல ஸ்வேதா! இந்த 21ஆம் நூற்றாண்டுல இப்படியும் சில சம்பவங்களா? இதுக்குப் பின்னால என்ன காரணம் இருக்க முடியும்? இல்லை யாராவது சதி பண்றாங்களா?"



பலமாக தலையசைத்தான் அருண்.



"நிச்சயமா சதி இல்ல ராகுல்! இது எல்லாத்துக்கும் விடை அந்த சாமியார் கிட்ட தான் இருக்கும். நல்லா யோசிச்சுப் பாருங்க! அவரு எதுக்காக என்னைத் தேர்ந்தெடுத்து ஸ்வேதாவைக் கல்யாணம் செஞ்சுக்க சொல்லணும்? இந்த உலகத்துல எத்தனையோ பேர் இருக்காங்க! அவங்களை விட்டுட்டு அவர் ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தாரு? அதுக்குக் காரணம் இல்லாமப் போகாது. அதை நாம தெரிஞ்சுக்கணும்"



"அப்ப! புலிப்பட்டிக்குப் போகணும்னு சொல்றீங்களா?"



"அது அப்புறம்! முதல்ல நாம அந்தப் பெட்டியைத் திறக்கணும். அதுல இருந்து நமக்கு ஏதாவது தெரிய வரலாம். இப்பவே அதைச் செய்யணும்" என்றான் அருண்.



"அதுக்குத்தானே நாம வந்தோம். இப்பவே செஞ்சாப் போச்சு" என்று சொன்ன ராகுல் சாமி அறையை நோக்கிச் சென்றான். அந்தப் பெட்டியை தொட்டுத் தூக்க முயன்ற போது ஏதோ ஷாக்கடித்தவன் போல தூக்கி எறியப்பட்டு மூலையில் போய் விழுந்தான். அவன் விழுந்த சத்தத்தைக் கேட்ட அருணும் ஸ்வேதாவும் பதறிப் போய் ஓடி வந்தனர். ராகுல் கை காட்ட இருவரும் பெட்டியைத் தூக்கும் போது அவர்களுக்கு எதுவும் நேரவில்லை. அவர்களுடன் சேர்ந்து ராகுலும் பெட்டியைத் தூக்கினான் அப்போது அவனுக்கும் எதுவும் நேரவில்லை. நல்ல வெளிச்சத்தில் கொண்டு வந்து அதனை வைத்தார்கள். இத்தனை ஆண்டுகளாக இருள் கவிந்த இடத்தில் இருந்ததால் அந்தப் பெட்டியின் அழகிய வேலைப்பாடுகள் தெரியவில்லை. நல்ல சந்தன மரத்தில் செய்யப்பட்ட பெட்டி அது. ஓவியப்பாவையை வணங்கி விட்டு அதன் கொக்கியை விடுவித்து மெல்லத் திறந்தனர். அவர்கள் இதயம் திக் திக் என அடித்துக்கொண்டது. ஆனால் எதுவும் நடக்கவில்லை.



பெட்டியின் உள்ளே பெரிய தோலினால் செய்யப்பட்டு சேர்த்து தைக்கப்பட்ட டைரி போல ஒன்று இருந்தது. அதை வெளியில் எடுத்தான் அருண். அதன் கீழே ஒரு ஓலைச் சுவடிகளின் கட்டு. அவை அழகான பட்டுத்துணியில் பொதிந்து வைக்கப்பட்டிருந்தன. அதை வெளியில் எடுத்தாள் ஸ்வேதா. அதன் கீழே சுருட்டப்பட்ட நிலையில் ஒரு பொருள் இருந்தது. பார்த்தால் பழைய காலத்துத் தோல்பொருள் போலத் தோன்றியது. அதை எடுத்து அவிழ்த்துப் பார்த்தான் அருண். அதில் அழகான சில ஓவியங்கள் இருந்தன. ஒன்றில் ஓவியப்பாவை மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும் அவளுக்கு வாலிபன் ஒருவன் நீர் கொண்டு கொடுப்பது போலவும் எழுதப்பட்டிருந்தது. அடுத்த ஓவியத்தில் ஓவியப்பாவை ரத்த வெள்ளத்தில் இருக்க இளைஞனும் மற்றொரு பெண்ணும் ஓடுவது போலவும் ஓடுவது போலவும் புனையப் பட்டிருந்தது. கடைசியாக இருந்த ஓவியத்தில் அந்தப் பெண்ணும் இளைஞனும் ஏதோ ஒரு பொருளை கிணற்றில் போடுவது போல இருந்தது.



இதன் அர்த்தம் புரியாமல் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தனர். எதுவும் பேசாமல் அந்த டைரியை எடுத்துப் பிரித்தாள் ஸ்வேதா. அதன் முதல் பக்கத்தில் சற்றே கடினமான தமிழில் எழுதப்பட்டிருந்ததைப் படித்தாள்.



"செண்பக ராமன் என்னும் அடியேன் எழுதும் சாசனம் இது. பல ஆண்டுகளாக புதைப்பட்டிருந்த இளவரசி செண்பகவல்லியின் கதை இது. அவளது ஆணைக்கிணங்க ஓலைச் சுவடிகளில் உள்ளதை அப்படியே எழுதுகிறேன். இந்தப் பெட்டியில் புலிப்பட்டி அரண்மனையின் சாசனமும் அடங்கியுள்ளது. இதனை இளவரசி செண்பகவல்லியின் வழி வந்த பெண் ஒருத்தியும், மார்த்தாண்டத் தேவனின் வழி வந்த ஆண் ஒருவனும் இணைந்து இதனை திறக்கும் போது மட்டுமே இப்பெட்டி திறக்ககும். நான் மார்த்தாண்டத் தேவனின் பத்தாம் தலைமுறை அடிமை. அதனால் தான் என்னால் இதனைத் திறக்க முடிந்தது. இதனைத் திறக்கும் ஆணும் பெண்ணும் இதில் கொடுக்கப்பட்டிருக்கும் கடமையை நிறைவேற்ற வேண்டும். அவர்கள் இதைப் படிக்கும் நேரம் ரணதீரன் மீண்டும் பிறந்திருப்பான். அவனை அழிக்க வசந்த மாலையின் வழி வந்தவளாலும் மார்த்தாண்டத் தேவனின் வழி வந்தவனாலும் தான் முடியும். இதைத் திறந்த அடுத்த மூன்று மாதத்துக்குள் ரணதீரன் பலியாக வேண்டும் இல்லையெனில் அவன் பலம் பல மடங்கு பெரிதாகும். அவனை அழிக்கவே முடியாது. அப்படி அவனை அழிக்க முடியாத பட்சத்தில் இதைத் திறப்பவர்கள் இந்தக் கதையை அப்போது வழக்கத்திலிருக்கும் சரள மொழியில் எழுதி வைக்க வேண்டும் என்றும் இந்தப் பெட்டியை பத்திரப்படுத்தி விட்டு பிறகே ரணதீரனைத் தேடிச் செல்ல வேண்டும் என்று உத்தரவிடுகிறாள் இளவரசி செண்பகவல்லி.



பய பக்தியோடு அந்த தோல் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தாள் ஸ்வேதா.
Nice ep
 
Top