Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ -10

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம்- 10

சம்யுவும் சிவரஞ்சனியும் சென்றது அரசு மருத்துவமனைக்கு!

குடும்ப வன்முறைக்கு ஆளாகி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணை பார்க்க சென்றனர்.

இளம் வயது தான் ...திருமணம் முடிந்து எட்டு மாதங்களே ஆகியிருக்க.. கணவன் குடிக்கு அடிமையானவன்!

தினமும் அப்பெண்ணை குடித்துவிட்டு வந்து அடிக்க ..இரு வீட்டு பெரியவர்களும் 'நீதான் அவனை திருத்தி நல்வழிப் படுத்தவேண்டும் என்று கூறி' கைவிரித்துவிட .. செய்வதறியாது அவனது கொடுமைகளை மௌனமாய் அனுபவித்துக் கொண்டிருந்தாள் அப்பெண்.

கடைசியில் ஒரு நாள் ஒரு பெரிய அலமாரியையே அவள் மீது தள்ளி விட பல இடங்களில் எலும்பு முறிவு .. மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை .. அதுவரை மூடி மறைத்த பெண்ணின் நிலை வெட்ட வெளிச்சமாகிவிட .. அப்பெண்ணும் கணவனை கண்டாலே பயந்து நடுங்கினாள்.

பெண்களுக்கான வன்கொடுமை வழக்குகளில் பானுமதி பெரும்பாலும் பணம் பெற்றுக் கொள்ள மாட்டார். இது குடும்ப பிரச்சனையாய் இருந்தாலும் கொலை முயற்சி என்ற அளவுக்கு இருந்ததால் அப்பெண்ணிற்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இருந்தும் அந்த கணவனின் உறவினர் சிலர் ..அந்த மருத்துவமனையை சுற்றிக் கொண்டிருக்க இவர்கள் அந்த பெண்ணை சந்தித்து பேசியதை உளவு பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்த பெண்ணிடமும் அவளது பெற்றோரிடமும் தேவையான விவரங்கள் சேகரித்து முடிக்க, மணி இரண்டிற்கு மேல் ஆகிவிட "சம்யு இனி ஆபிஸ் போய் சாப்பிட நேரம் ஆகும்.. இன்னொரு இடத்துக்கும் போக வேண்டியிருக்கு. இங்கேயே சாப்பிட்டிடலாம் " என்றாள் சிவா.

கொஞ்சம் சுமாராக தான் இருக்கும் உணவு ..ஆனாலும் வயிறு "சரிக்கா " என்று சொல்ல வைத்தது.

இவர்கள் மருத்துவமனையின் பின்புறம் உள்ள உணவகத்துக்கு செல்ல .. இவர்களை உளவு பார்த்தவர்களோடு அப்பெண்ணின் முக்கிய உறவினர்கள் சிலரும் இவர்களை பின் தொடர ..முதலில் இவர்கள் கவனிக்கவில்லை .

உணவுக்கு டோக்கன் வாங்கி ஒரு மேஜையில் சென்று அமர பெரும்பாலும் உணவகம் காலியாக இருந்தது.

பொது மருத்துவமனை என்பதால் கூட்டம் அதிகம் வரும் என்றாலும் உணவு அத்தனை நன்றாக இல்லை.

உடல் நிலை சரியில்லாத உறவினருடன் இருப்பவர்கள் தானே .. வெளியே செல்லமாட்டார்கள் ..உணவு எப்படி இருந்தாலும் இங்கே தான் உண்ண வேண்டும் என்ற மெத்தனத்தோடு உணவு தயாரிக்கப் பட்டிருந்தது.

பின்மதியம் என்பதால் கூட்டமில்லாமல் இருந்தது. அதனால் இவர்களை தொடர்ந்து ஒரு சிலர் உள்ளே நுழையவுமே அவர்களது உருவமும் தோரணையும் வித்தியாசமாய் தெரிய ..ஒருவனை ரொம்பவும் பரிச்சயம் போல் தோன்றியது சம்யுவிற்கு.. எங்கு பார்த்தோம் என்று மூளையை கசக்கி யோசிக்க ..நினைவு வரவில்லை."அக்கா இவங்கள எங்கேயோ பாத்த மாதிரி இல்லை ?” என்றாள் சிவாவிடம் .

அவர்களும் இவர்களையே பார்த்தபடி அமர்ந்திருந்தனர். இரண்டு மூன்று முறை நிமிர்ந்து பார்க்கையில் எல்லாம் இவர்களையே பார்த்துக் கொண்டிருக்க ..சட்டென்று சம்யுவின் மூளைக்குள் மின்னல் வெட்டியது.
"அக்கா ..அந்த பொண்ணோட மாமனாருக்கா இந்தாளு.. கல்யாண போட்டோ காட்டினால்ல அதுல பார்த்தேன்."

இவர்கள் கவனித்து விட்டதை பார்த்தவன் நேராக இவர்களிடம் வந்து இவர்கள் எதிரே அமர, உள்ளுக்குள் வேர்த்தாலும் காட்டிக் கொள்ளவில்லை .."ஏய் பொண்ணுங்களா .. தேவையில்லாமல் அவளுக்காக வாதாடினீங்க ..உங்கள சும்மா விட மாட்டேன். என்னை யாருன்னு நினைச்சே? " என்று தன் ஏரியா பெயரைச் சொன்னவன் "அங்க போய் கேட்டுப்பாரு என்னை பத்தி. இனிமே இந்த பக்கமே உங்கள பாக்க கூடாது.புரிஞ்சிதா ? " என்றவன் தன் கூட்டாளிகளை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

"ஆமாங்க்கா .. இவன் அப்படியே காந்தி மகான் ..இவனை பத்தி கேட்டு தெரிஞ்சிக்கணுமாம். பாத்தாலே தெரியுது சரியான 420 ன்னு " என்று நொடித்து கொண்டாள்
இதெல்லாம் இவர்கள் தொழிலில் சகஜம் என்பதால் இருவரும் அதை பெரிதாக எடுக்கவில்லை.

இவர்கள் உண்டு முடித்து கிளம்பும் நேரம் இவளது அலைபேசியில் அழைப்பு வந்தது. தனுஜா தான்.

" சீக்கிரம் வீட்டிற்கு வா சம்யு . ஷாப்பிங் போக வேண்டியிருக்கு . நிச்சயத்துக்கு ஒரு வாரம் தான் இருக்கு." என்று அழைக்க நேரமே வீட்டிற்கு வந்தவளுக்கு அதன் பிறகு மூச்சு விட கூட நேரமில்லை.

பகலில் வேலை மாலை நேரம் ஷாப்பிங், நிச்சயத்துக்கான ஏற்பாடுகள் ,அம்ருவோடு கடைகளுக்கும் பார்லருக்குமாக அலைவது என்று நேரம் ரெக்கை கட்டி பறந்தது.


நிச்சயதார்த்தத்திற்கு நகரத்திலேயே பெரும் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பெயரை கூறி அங்கே அரங்கம் ,விருந்தினர் தங்கும் அறைகள், மற்றும் உணவுக்கான ஏற்பாடு செய்யும்படி சத்யபாமா கூற .. அந்த விடுதியின் பெயரை கேட்கையிலேயே தனுஜாவிற்கு மயக்கம் வரும் போல் இருந்தது.

" வேண்டாம் மோஹி .. நம்மளால அங்கெல்லாம் பண்ண முடியாதுன்னு சொல்லிடுவோம். வேற ஹால் பாக்கலாம்.." என்று கூற ..சம்யுக்தாவும் ஆமோதித்தாள்.

"ஆமாம்பா .. அவங்களுக்கு தெரியும் நாம் மிடில் க்ளாஸ் தான்னு. ஆனாலும் இப்படி சொல்றாங்கன்னா ..வேணும்னே பண்ற மாதிரி தெரியுது.ஆரம்பத்திலேயே இதுதான் முடியும் முடியாதுன்னு தெளிவா சொல்லிடறது நல்லது."

அம்மாவும் தங்கையும் இப்படி சொன்னதும் அம்ருவின் முகம் விழுந்துவிட்டது .

அதைக் கண்ட மோகனுக்கு மனம் தாளவில்லை."இருக்கட்டும் தனு. நம்ம பொண்ணுக்கு இப்போ செய்யாம எப்போ செய்றது? ரொம்ப கணக்கு பாக்க வேண்டாம்மா. " என்று கூற தனுஜாவுக்கோ மனம் சம்மதிக்கவில்லை.

"இதுக்கே இப்படின்னா ..கல்யாணத்துக்கு என்னங்க பண்றது?"

"அதுதான் அவங்களும் ஷேர் பண்ணிக்கிறேன்னு சொன்னாங்களேம்மா. அப்பறமும் ஏன் இப்படி யோசிக்கிறீங்க ? "அம்ருவின் குரல் கோபமாக ஓங்கி ஒலிக்க..

"ஷேர் பண்ணா கூட நம்மளால முடியற மாதிரி தான் பண்ணனும் அம்ரு .. அப்போதான் குடும்பம் பிரச்சனை இல்லாமல் நடத்த முடியும் . கல்யாணம் ஆன பின்னால உன் குடும்பத்தை நீ சரியா நடத்த வேண்டாமா ? இதெல்லாம் தெரிஞ்சிக்கோ " என்று மேலும் அவளை சமாதான படுத்த பார்க்க .. அவளுக்கோ ரஞ்சித் வீட்டிலேயே அவனுக்காக இவ்வளவு விட்டு கொடுத்து நடக்கிறார்கள் .நம் அம்மா இப்படி யோசிக்கிறார்கள் என்று ஆதங்கம் தான் வந்தது.

தாயின் சொல்லில் இருந்த நிதர்சனம் புரியவில்லை .

"உங்களுக்கு இப்போ பணம் தானே பிரச்னை ? எல்லாத்தையும் எனக்கே செலவு பண்ணிட்டா சம்யுக்கு என்ன பண்றதுன்னு தானே யோசிக்கிறீங்க ..பணம் நான் தரேன் " என்றாள்.

அதுவரை அம்ருவின் சம்பள பணம் இவர்கள் எடுத்ததில்லை ..அவளுக்கான செலவுகளுக்கும் மோகன் பணம் தந்துவிடுவார். அவளாக ஏதாவது செலவு செய்தால் தான் உண்டு . அதனால் அவள் கணக்கிலேயே பல லட்சங்கள் இருந்தன . ஆனாலும் இப்போதும் அதை எடுக்கும் எண்ணம் இல்லை பெற்றோர் இருவருக்கும் அவளுக்கு பின்னாளில் தேவைப்படும் போது எடுத்து கொள்ளட்டும் என்றே நினைத்திருந்தனர் .

"உங்களுக்கு வேணுன்னா என் அகௌண்ட்ல இருக்க பணம் எல்லாத்தையும் தரேன் மா. அவங்க சொல்ற மாதிரி செய்யுங்க " என்று அடித்து சொல்லிவிட தனுஜாவால் மேலே பேசமுடியவில்லை.

தான் பணத்துக்காக பார்க்கவில்லை என்பது இவளுக்கு புரியவேயில்லையே என்று ஆயாசமாக இருந்தது.


நகரின் மிக பெரிய துணிக்கடை அது! பர்ஸ் நிறைய பணம் இருப்பவர்கள் மட்டுமே அங்கு ஷாப்பிங் செய்ய முடியும்.
நிச்சய புடவை வாங்க இந்த கடையை முடிவு செய்திருந்தார் சத்யா . அதுவும் அதிக அவகாசம் இல்லாததால்!

திருமணத்திற்கு ஆடை வடிவமைக்க புகழ்பெற்ற டிசைனர்களை புக் செய்திருந்தனர்.


பிரம்மாண்டமான அந்த கடை வாசலில் நின்று கொண்டிருந்தனர் மோகன் குடும்பத்தினர்.
தங்கள் சிறு காரில் அங்கு வந்து இறஙகியவர்களுக்கு மலைப்பாக இருந்தது. பார்க்கிங்கில் நின்றிருந்த கார்களே.. பல கோடி விலை இருப்பவை.

சம்பந்தார் குடும்பத்துக்கு தங்களால் ஈடு கொடுக்க முடியுமா என்ற கவலை முதன் முதலாக மோகனின் உள்ளத்தில் ஏற்பட்டது. தனுஜாவின் முகமும் அதையே பிரதிபலிக்க ... அவளது கையை பிடித்து லேசாக அழுத்தினார்.

அம்ரிதாவை கையிலேயே பிடிக்க முடியவில்லை. அவள் மனமோ மனம் கவர்ந்தவனையும் அவனோடு சேர்ந்து புடவை தேர்ந்தெடுக்கும் கணத்தையும் எதிர்பார்த்து இருக்க , மணப்பெண்ணுக்கே உரிய ஆவல் அவளிடம்.

அவர்கள் உள்ளே போக தயங்கி வாயிலிலேயே காத்திருக்க ..சம்யுவின் பொறுமை மெல்ல போய் கொண்டிருந்தது.

"என்னம்மா இது? இவ்வளவு நேரம் ஆகுது ? பத்து மணின்னு தான சொன்னாங்க ? இன்னும் காணோம்?"

"ஏய் சம்யு. அவங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும் .கொஞ்சம் லேட்டானா என்ன ? இன்னிக்கு தான் உனக்கு கோர்ட் இல்லைல .அமைதியாய் நில்லு " என்றாள் அம்ரு.

"அக்கா ..அவங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கலாம். அதுக்காக மத்தவங்கள காக்க வைக்கிறது தப்புதான். எல்லாரோட நேரமும் பொன்னானதுதான். அட்லீஸ்ட் வர லேட்டாகும்னு ஒரு மெசேஜ் அனுப்பலாம்ல "

"கெளம்பிட்டோம்னு ரஞ்சி மெசஜ் பண்ணான் சம்யு. வந்துடுவாங்க" என்று இவளை அமைதிப்படுத்த ... நேரத்தை குறித்த பேச்சு தான் நவநீ குடும்பத்திலும் நடந்து கொண்டிருந்தது.

வழக்கம் போல் ஸ்ரீஜா கிளம்ப நேரமாகியிருக்க ..தாயின் முன்னிலையில் ஏதும் சொல்ல முடியாமல் ரஞ்சித் நிற்க .. ப்ரித்வி கடிந்துகொண்டான் .

” ஸ்ரீ நேரத்துக்கு கிளம்ப மாட்டியா? பாரு நமக்காக காத்துக்கிட்டு இருக்காங்க ..அவங்க வந்து அரை மணி நேரமாச்சாம் "

"ஏன் காத்துக்கிட்டு நின்னா என்ன தப்பு ? நாம தான மாப்பிள்ளை வீடு நமக்காக நிக்கலாம் " என்ற எகத்தாளமான பதிலே வந்தது தாயிடமிருந்து .

"யாராயிருந்தாலும் காக்க வைக்கறது தப்புதான் சத்யா.." எப்போதும் போல் தன்மையாய் கூறினார் நவநீ.

"காத்துக்கிட்டிருந்தா என்னப்பா ? இந்த அரை மணி நேரத்தில கோடி கோடியா சம்பாதிச்சிட போறாங்களோ.. அஞ்சுக்கும் பத்துக்கும் சம்பளத்துக்கு வேலை பாக்கிறவங்க தானே .." சத்யாவை முந்திக் கொண்டு ஒலித்தது ஸ்ரீயின் குரல்.

"ஸ்ரீகுட்டி ..அப்படியெல்லாம் பேசக் கூடாதும்மா .. உங்க அண்ணன்கள் ரெண்டு பேரும் கூட சம்பளத்துக்கு வேலை பாக்கிறவங்க தான் ..ஏன்? நானுமே ஒருங்காலத்தில சம்பளத்துக்கு வேலை பாத்தவன் தான் .அதில கேவலமா நினைக்குறதுக்கு எதுவும் இல்லை ..உழைக்குறது என்னைக்கும் கேவலம் இல்லைம்மா ." பொறுமையாகவே வந்தது அவரது பதில்.

"உழைச்சுக்கிட்டே தான் இருந்துருப்பீங்க ..எங்கப்பா தன்னோட கம்பெனியை குடுத்ததால தான் முதலாளியா இருக்கீங்க" என்று சத்யா நொடித்துக் கொள்ள .. தான் இன்னும் அந்த கம்பெனியில் ஒரு நிர்வாகியாக மட்டுமே இருப்பதையும் தன் சொந்த உழைப்பில் தொடங்கிய நிறுவனத்தில் மட்டுமே முதலாளியாக இருப்பதையும் நூறாவது முறையாக சொன்னாலும் தாய் மகள் இருவருமே அதனை புரிந்துக் கொள்ள போவதில்லை என்பதை அறிந்தவராய்.. அந்த நேரத்தில் வீண் வாக்குவாதம் வேண்டாம் என்று நினைத்தவராய் அமைதியாகிவிட்டார் .

அதே நினைவுடன் மகன்கள் இருவரும் அமைதி காக்க ரஞ்சித்தின் மனமோ தன்னவளை கண்டதும் மற்றதை மறந்து காதல் கீதம் இசைக்க தொடங்கியது .
சம்யுவை பார்த்ததும் 'வசமா சிக்கினா இன்னிக்கு. ஒரு வழி பண்றேன் பாரு ' என்று நம்பியாராகி கைகளை தேய்த்தது ப்ரித்வியின் மனம்!
 
அம்ரு தன்னோட சுய நலத்தை மட்டும் பார்க்குறா 🥶🥶🥶🥶 வீட்டோட நிலைய பத்தி கவலையே இல்லை 😡 😡 😡 😡 😡 😡

ப்ரித்வி சம்யுக்தா சண்டை 🤣🤣🤣🤣🤣💃💃💃💃💃💃💃 இப்போ என்ன கலாட்டா எல்லாம் செய்ய போறாங்களோ😝😝😝😝😝😝😝😝😝😃

அம்மா தங்கச்சி இரண்டு பேரையும் கன்ட்ரோல் பண்ண தெரியல ரஞ்சித்துக்கு 🤭🤭🤭🤭🤭

அம்ரு கல்யாணத்துக்கு பிறகு மாமியார் கூட சேர்ந்து மாறிடுவா என்று நினைக்கிறேன் 🧐🧐🧐🧐🧐

 
Top